26 March 2011

இங்கிதம் அறியாதவன்




இத்தனை வயது ஆனபின்னும்
தலைக்கு மேலே பறக்கும்
ஆகாயவிமானம் பார்க்க
தன்னிச்சையாய் உயரும் தலையைத்
தவிர்க்க முடியவில்லை;

கடந்து செல்லும் ரயிலுக்கு
கைகாட்டும் பழக்கத்தை
கைவிடவும் இயலவில்லை;

கடற்கரையோரம்
காலாற நடக்கும்போது
கடலைப்பொட்டலத்தை
நாடும் மனதுக்குக்
கடிவாளமிடத் தெரியவில்லை;

கடல்மணலில் கால்புதைத்து
காற்றாடிவிடும்
சிறுவர்கள் கையிலிருந்து
இரவலாய் ஒருகணம்
நூல்பிடிக்க எங்கும் உள்ளத்துக்கு
மூக்கணாங்கயிறிட்டு
முடக்க முடியவில்லை;

பேரப்பிள்ளைகளை அழைத்துப்போய்
ஊர்சுற்றி வந்தபிறகு
பெற்றோரிடம் சொல்கின்றனர்,
'இந்தத் தாத்தாவுக்கு
இங்கிதமே தெரியவில்லை!' என்று.

கேட்டுவிட்டு ஆரவாரமாய்ச்
சிரித்துக்கொள்கிறார், 
அப்போதும் இங்கிதமற்று!

14 comments:

  1. அழுத்தமான பதிவு..
    ரசித்தேன்...

    நிறைய தொடருங்கள்.

    ReplyDelete
  2. பின்னூட்டத்திலிருக்கும் சொல் சரிபார்ப்பை நீக்கினால் வாசகர்களுக்கு பின்னூட்டமிடுதல் எளிதாக இருக்கும்.

    ReplyDelete
  3. வணக்கம் கீதா.மனதை அள்ளி எடுத்து எழுத்தாக்கி வைத்திருக்கும் 4 கவிதைகளையும் பார்த்தேன்.
    தாமதித்த தருணங்களின் தோல்வி மனதைத் தொட்டது தோழி.சந்தோஷம் சந்திப்போம் !

    ReplyDelete
  4. முதல் நண்பராய் இணைந்து ஊக்குவித்த உங்களுக்கு என் நன்றிங்க லோகு. வலையுலகம் எனக்குப் புதிது. அதனால் கொஞ்சம் தடுமாறுகிறேன். நீங்கள் சொன்னதுபோல் சொல் சரிபார்ப்பை நீக்கிவிட்டேன்.

    மிகவும் நன்றி ஹேமா. உங்கள் எழுத்துகளும் என்னுள் பாதிப்பை உண்டாக்குகின்றன. இனி அடிக்கடி சந்திப்போம்.

    ReplyDelete
  5. வலைப்பூ உலகில் அரும்பியிருக்கும் இந்தக் கீதமஞ்சரி எனும் புத்தம் புது பூ, மெல்ல மெல்ல இதழ் விரித்து மலர்ந்து பாரெங்கும் மணம் வீச வாழ்த்துகிறேன்!
    கலையரசி.

    ReplyDelete
  6. உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி அக்கா. உங்களின் நல்லாசிகள் என் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.

    ReplyDelete
  7. >>'இந்தத் தாத்தாவுக்கு
    இங்கிதமே தெரியவில்லை!' என்று.

    கேட்டுவிட்டு ஆரவாரமாய்ச்
    சிரித்துக்கொள்கிறார்,
    அப்போதும் இங்கிதமற்று!

    வெல்டன்

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் said...
    >>'இந்தத் தாத்தாவுக்கு
    இங்கிதமே தெரியவில்லை!' என்று.

    கேட்டுவிட்டு ஆரவாரமாய்ச்
    சிரித்துக்கொள்கிறார்,
    அப்போதும் இங்கிதமற்று!

    //வெல்டன்//

    கருத்துக்கு நன்றி செந்தில்குமார்.

    ReplyDelete
  9. நல்ல பதிவு! மனதில் பதிந்தது!
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சேஷாத்ரி.

      Delete
  10. தாத்தாவுக்கு வயதாகிவிட்டதால் இங்கிதம் தெரியவில்லை என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. அவர் இயல்பாய் இருக்கிறார்... அது இங்கிதமில்லாமையென மற்றவர் பார்வையில் உணரப்படுகிறது. அவ்வளவே.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர் வலிப்போக்கன்.

      Delete
  11. இங்கிதமற்று குழந்தை போல் நடக்கும் மனது வேண்டும்போல் உள்ளதும்மா

    ReplyDelete
    Replies
    1. மற்றவர்களுக்காக நம்முடைய வாழ்க்கைமுறையை வலிந்து மாற்றிக்கொள்ளும்போது, இங்கிதம், நாசுக்கு, நாகரிகம் என்ற போர்வைகளில் நம்முடைய இயல்பை பல சமயங்களில் தொலைத்துவிட நேர்ந்துவிடுகிறதே தோழி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.