26 January 2012

ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் 1



நண்பன் திரைப்படம் பற்றி பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் இவ்வேளையில் என் பங்குக்கு நானும் அதைப் பற்றி கொஞ்சம் எழுத ஆசை வந்துவிட்டது. இது படத்தைப் பற்றியது அல்ல. படத்தில் சொல்லப்படும் சில கருத்துகள் பற்றிய என் பார்வையும் இந்தியக் கல்வி முறையையும் ஆஸ்திரேலியக் கல்வி முறையையும் ஒப்பிட்டு அலசும் என் பிள்ளைகளின் கருத்துக்களுமே இப்பதிவு 

திரைப்படத்தில் ஒரு காட்சி! ஆண்டு இறுதித்தேர்வுக்குப் பின் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு புகைப்படம் எடுக்கப்படும். முதல் மாணவனான விஜய் கல்லூரி முதல்வர் சத்யராஜின் அருகில் அமர்ந்திருப்பார். அவரது நண்பர்கள் கடைசி மாணவர்களாகத் தேறியதால் கடைசி வரிசையில் நிற்கவைக்கப்பட்டிருப்பார்கள். மனம் பொறுக்காமல் விஜய் கல்லூரி முதல்வரிடம் கேட்பார் 

இப்படி ஒரு ஏற்பாடு தேவைதானா? அதனால் அந்த மாணவர்கள் மனம் பாதிக்கப்படாதா? உங்களுக்கு எய்ட்ஸ் இருக்கிறதென்றால் டாக்டர் உங்களிடம் மட்டும் அதைச் சொல்வாரா அல்லது ஊரையேக் கூட்டிச் சொல்வாரா? அதுபோல மாணவர்களுக்குப் படிப்பில் குறையிருந்தால் அதை அவனுக்கு மட்டும் சொல்லாமல் இப்படி எல்லார் முன்னிலையிலும் காட்டி அவமானப்படுத்தத்தான் வேண்டுமா?” 

அதற்கு முதல்வர் கோபத்துடன் என்னை ஒவ்வொருத்தன் காதிலும் போய் நீ இந்த மதிப்பெண் வாங்கியிருக்கிறாய் என்று சொல்லச்சொல்கிறாயா?” என்பார். 

அப்படிதான் ஒவ்வொரு மாணவர் காதிலும் சொல்கிறது ஆஸ்திரேலியக் கல்வித்திட்டம். கடந்த நான்கு வருடங்களாக என் பிள்ளைகள் ஆஸ்திரேலியப் பள்ளியில் படிக்கின்றனர். அதற்குமுன் இந்தியாவில் இந்தியக் கல்விமுறையில் பயின்றவர்கள். அங்கும் இங்கும் பல வித்தியாசங்களை உணர்கின்றனர். முக்கியமாய் அழுத்தமில்லாக் கல்விமுறை 

ஆரம்பப்பள்ளியிலிருந்தே பிள்ளைகளுக்கு கல்வியை ஒரு சுமையாக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப புகட்டுகிறது. இங்கு தகுதி என்பது குழந்தைகளின் ஆர்வம், புரிந்துகொள்ளும் திறன், நினைவாற்றல், குடும்பச்சூழல், உடற்கோளாறு போன்ற இன்னும் பல காரணிகளை உள்ளடக்கியது 

பொதுவாகவே பள்ளிகள், குறிப்பாக ஆரம்பப்பள்ளிகள் ( முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை)) பாடப்புத்தகங்களை வீட்டுக்கும் பள்ளிக்கும் தினமும் சுமக்கத் தடைபோடுகின்றன. பாடப்புத்தகங்களை பள்ளிகளில் அவரவர்க்கு ஒதுக்கப்பட்டிருக்கும் லாக்கர்களில் வைத்துவிட்டு வீடு வரும் பிள்ளைகள் அடுத்த நாள் காலையில் அங்கிருந்து எடுத்துக்கொண்டு வகுப்புக்குச் செல்கிறார்கள். வீட்டிலிருந்து குழந்தைகள் பையில் எடுத்துச் செல்வது உணவும் தண்ணீர் பாட்டிலும் மட்டும்தான். உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாத்திரமே தேவைப்படும் புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டுவந்து படிக்கின்றனர் 

ஆரம்பக் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு பள்ளிகளில் படிக்கும் படிப்பே போதுமானது என்கிறது கல்வி நிர்வாகம்.. பெற்றோர் வீட்டில் அப்பிள்ளைகளைப் படிக்கவைக்க விரும்பினால் அரைமணி நேரம் மட்டுமே படிக்கவைக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது. மற்ற நேரத்தில் அப்பா அம்மாவுக்கு சிறு சிறு வேலைகளில் உதவவும், வெளியில் ஓடியாடிவிளையாடவும், மிதிவண்டிப் பயிற்சி செய்யவும் பள்ளி பரிந்துரைக்கிறது 

மூன்றாம் வகுப்பு முதல் வாரம் ஒருமுறை வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. அதுவும் ஒரு அரைமணிநேரத்தில் முடித்துவிடக்கூடியதாக உள்ளது. ஆனால் அதற்கு கொடுக்கப்படும் அவகாசம் ஐந்து நாட்கள். தினமும் நூலகத்திலிருந்து தனக்குப் பிடித்தப் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிக்கவும் பெற்றோர் அதை ஊக்குவிக்கவும் முக்கியமாக அறிவுறுத்துகிறது.

சரி. தேர்வு எப்படி என்கிறீர்களா? மூச்! ஆறாம் வகுப்பு வரை தேர்வென்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லாமே அஸைன்மெண்ட் தான்.

ஒவ்வொரு கல்வியாண்டும் நான்கு காலாண்டுகளாய்ப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு தலைப்பு அந்தந்த வகுப்புக்கேற்றபடி கொடுக்கப்பட்டு  அதன் அடிப்படையிலேயே பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு அரையாண்டுக்கும் பின்னர் அந்த அஸைண்மெண்ட் பற்றிய மாணவர்களின் பார்வை, பங்களிப்பு, புரிதல், செயல்முறை, திருத்தம் போன்ற பலவற்றையும் அலசி ஒரு தனிப்பட்ட ரிப்போர்ட் ஆசிரியரால் தயாரிக்கப்பட்டுக் கொடுக்கப்படுகிறது.

எப்படி? எல்லோர் முன்னிலையிலுமா? ம்ஹூம்….

 ஒரு பெரிய கவருக்குள் போடப்பட்டு தபாலில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறது. நம் குழந்தையின் படிப்பு எந்த நிலையில் இருக்கிறது, எதில் இன்னும் சிரத்தை எடுக்கவேண்டும், பள்ளியில் அவன் ஒழுக்கம் எப்படி, மற்ற மாணவர்களுடன் அவன் பழகும் திறன் எப்படி என்பதையெல்லாம் நாம் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இதனால் படிப்பில் மந்தமாயுள்ள பிள்ளைகள் மற்றப் பிள்ளைகள் முன் தலைகுனியவேண்டிய அவசியமில்லை. இது ஆரம்பப்பள்ளி நிலையில்!

 அடுத்து உயர்நிலைப்பள்ளிகளைப் பற்றி! அங்குதான் மாணவர்களுக்கு தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது.  அதுவும் எப்படி? இன்று படித்தது நாளைக்குத் தேர்வு என்றில்லாமல் தேர்வு எந்தெந்த பாடத்தில் என்பதையும் எப்போது என்பதையும் இரண்டு வாரங்களுக்கு முன்பே வகுப்பு ஆசிரியர் எழுத்துபூர்வமாக (நோட்டீஸ்) மாணவர்களிடம் வழங்கியிருக்க வேண்டும். இது சாதாரண வகுப்புத் தேர்வுகளுக்கும் பொருந்தும் என்பதுதான் வியப்புக்குரியது.


என் மகள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு இன்றுவரை சக மாணவிகளின் மதிப்பெண் என்னவென்று தெரியாது. மாணவ மாணவிகள் தாமாய் முன்வந்து தங்கள் மதிப்பெண்ணை வெளியில் சொல்லாதவரை எவருக்கும் எவர் மதிப்பெண்ணும் தெரிய வாய்ப்பே இல்லை. முதல் மாணவிக்கு பாராட்டு விழாவும் இல்லை. கடைநிலை மாணவிக்கு கடுமையான அர்ச்சனையும் இல்லை. முதல் வகுப்பு பெற்ற மாணவர் யாரென்பதையும் பெற்ற மதிப்பெண் என்ன என்பதையும் பிற மாணவர்கள் அறிய விரும்பும் பட்சத்தில் அவர் அனுமதி பெற்றே வெளியில் சொல்லப்படுகிறது. ஒருவேளை, அவர் மறுத்துவிட்டால் அந்த விவரம் சொல்லப்படாது.

 இப்படியிருந்தால் பிள்ளைகளுக்கு எப்படி தன் முன்னேற்றம் தெரிய வரும் என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது? மொத்த வகுப்பின் தரப்பட்டியலில் தான் எந்த இடம் என்பதை தனிப்பட்ட மாணவரே அறியும் வண்ணம் அவர்களிடம் மட்டுமே தரப்படுகிறது.

 இந்த முறை பற்றிதான் அந்தப் படத்திலும் சொல்லப்படுகிறது. அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலெதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பெற்றோரின் கனவுகள் திணிக்கப்பட்டு விட்டேத்தியாக படிப்பவர்கள் உள்ளனர். எவ்வளவு படித்தாலும் மனத்தில் பதிய வைக்க முடியாத மாணவர்கள் உள்ளனர். பரிட்சை நேரப் பதட்டத்தில் படித்த அத்தனையையும் மறந்து போகும் மாணவர்கள் உள்ளனர். எந்த வகையிலும் தவறு செய்யாத இவர்களைப் போன்றோரை தண்டித்தல் எந்த வகையில் நியாயம்? ராகிங் போன்றதுதான் இதுவும்.

 எல்லாம் இருந்தும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தெனாவெட்டாக சிலர் திரியலாம். அவர்களைப் பற்றிய கவலையை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள் எதையும் தாங்கும் மனநிலைக்கு  எப்போதோ தள்ளப்பட்டிருப்பார்கள்.


தோல்வியால் மனம் உடைந்து தற்கொலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் பிரச்சனைகளை சந்திக்கப் பயப்படும் பூஞ்சை மனதுக்காரர்களே.

 வகுப்பில் சகமாணவர்கள் முன் தொடர்ந்து மட்டம் தட்டப்படும் பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். ஒப்பீடே எப்போதும் காழ்ப்புணர்வையும் சுய கழிவிரக்கத்தையும் தூண்டும் தூண்டுகோல். பள்ளியில் மட்டுமல்ல, வீட்டிலும் பிள்ளைகளுக்குள் ஒப்பீடு தவிர்க்கப்பட வேண்டியது. நம்மூரில் சில வீடுகளில் பிள்ளைகளை மற்றப் பிள்ளையுடன் ஒப்பிட்டு, ‘அவன் மூத்திரத்தைக் குடி! அப்பவாவது உனக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்என்னும் கடுமையான வார்த்தைகளை வீசி அவர்களை மன அதிர்வுக்குள்ளாக்குவதையும் நான் கண்டிருக்கிறேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நம் பிள்ளையின் தன்மானத்தைத் தகர்த்து, அதன்மூலம் நாம் அடைய நினைக்கும் பெருமை ஒருவகையில் அருவருக்கத்தக்கதும் கூட 

ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு திறமை உண்டு. அதைக் கண்டறிந்து மேம்படுத்துவதன் மூலம் எந்தப் பிள்ளையின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்க பெற்றோராலும் ஆசிரியர்களாலும் முடியும் 

பிள்ளைகளிடம் இருக்கும் தனித்திறமையைக் கண்டறிய, ஆஸ்திரேலியக் கல்விமுறைக் கையாளும் ஒரு வித்தியாசமான முறையை அடுத்தப் பதிவில் விளக்குகிறேன்.

ஆஸ்திரேலியாவில் இருப்பதால் நான் அக்கல்விமுறையைத் தலையில் வைத்துக் கொண்டாடி இந்தியக் கல்விமுறையைக் கேவலப்படுத்துவதாக எவரும் எண்ணுவீர்களாயின் அதற்காக நான் வருந்துகிறேன். நல்லவை எங்கு இருந்தாலும் பாராட்டுவோம். தவறு எங்கிருந்தாலும் சுட்டிக்காட்டுவோம் என்னும் தார்மீக மனப்பான்மையும் நம் கல்விமுறையிலும் இது போன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டால் பல மாணவர்களின் மனக்குமைவும் மயானப்பயணமும் தவிர்க்கப்படலாமே என்னும் ஆதங்கமும்தான் அடிப்படை. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.




34 comments:

  1. நல்ல முறை!

    ReplyDelete
  2. அன்புள்ள கீதா அவர்களுக்கு...

    சரியான விஷயத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். இன்றைய காலக்கட்டத்திற்கு அவசியத்தேவை. இன்றைய இந்திய கல்விச்சூழலில் தகுதியும் திறமையும் தரமும் வெகு கேவலமாக எண்ணப்படும் நிலை அதிகரித்து வருகிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதைவேண்டுமானாலும் கொடுக்கலாம் பணத்தை வாங்கிக்கெர்ண்டு என்று கல்வியைக் கொண்டு கல்லா கட்டுகிற கூட்டம் பெருக்கெடுத்தோடுகிறது. கல்வியால் உயர்ந்த தேசம் உலக அரங்கில் உயரும். கல்வியும் அரசியலாக்கப்பட்டு அவிக்கப்படுவதுதான் வேதனையான உண்மை. நல்ல கல்வி கொடுக்கலாம் என்பதைவிட விளைகின்ற வயலின் இதயத்தை அறுத்து அதில் கட்டிடங்களைக் கட்டிவிட்டு ஒரு விளம்பரப்பலகை வைத்துவிட்டால் அது போதும். கல்விக்கூடம்தான். கல்லா நிறைப்பதுதான்.

    எழுதுங்கள். சிறு பதிவாக அல்ல. விரிவான பதிவாக. இந்தச் சமூகம் மேனமையுற்ட்டும். சாதியற்ற..தகுதியற்ற...முறையற்ற..தரமற்ற..ஒழுங்கற்ற கேடுகள் மண்ணோடு மண்ணாகிப் புதிய கல்வி இந்திய தேசத்தைக் காக்கட்டும். இந்த குடியரசுநாளில் இதனை உறுதியாகக் கொள்வோம். நன்றிகள்.

    ReplyDelete
  3. மிக‌ மிக‌ அரிய‌, அருமையான‌, இந்திய‌ரான‌ நாம் அறிய‌ வேண்டிய‌ த‌க‌வ‌ல்க‌ள் த‌ந்திருக்கிறீர்க‌ள்! இங்கிருக்கும் ஆட்சியாள‌ர்க‌ளுக்கு, கோடிக‌ளைப் ப‌துக்குவ‌தே குறி! 'அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ள்' என்ற‌ அக்க‌றை துளியும‌ற்ற‌வ‌ர்க‌ள். பெற்றோரும் அக்க‌ம்ப‌க்க‌ம் பார்த்தும், ஆட‌ம்ப‌ர‌ வாழ்வுக்குமாக‌ பிள்ளைக‌ளை ப‌டிக்கும் இய‌ந்திர‌மாக‌வும், ப‌ண‌ம்காய்ச்சி ம‌ர‌மாக‌வும் செய்ய‌ முய‌ல்கின்ற‌ன‌ர். வ‌ள‌ரும் ச‌ந்த‌திக‌ளை ச‌ரியான‌ப‌டி வ‌ழிமுறைப்ப‌டுத்தினால் தானே நாடும் வ‌ள‌ப்ப‌டும்!

    எங்க‌ள் குழ‌ந்தைக‌ள் இழ‌ந்த‌ வாய்ப்பை பேர‌க் குழ‌ந்தைக‌ளாவ‌து அடைய‌ட்டும்... ஆஸ்திரேலியாவிலாவ‌து!

    ReplyDelete
  4. நானும் ஒரு ஆசிரியர்தான். எனக்கும் இந்த மனக்குறை உண்டு. சில நல்ல விசயங்களை நாமும் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மாறங்களாக வரலாம்.நீங்கள் மேலும் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டால் அங்குள்ள கல்வி முறையை அறிந்து கொள்ள எனக்கு உபயோகமானதாக இருக்கும்.

    ReplyDelete
  5. "ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு திறமை உண்டு. அதைக் கண்டறிந்து மேம்படுத்துவதன் மூலம் எந்தப் பிள்ளையின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்க முடியும்" என்பதை நன்கு விளக்குகிறது இப்பதிவு.

    ஆஸ்திரேலியாவில் இருப்பதால் அக்கல்வி முறையையும் , இந்தியக் கல்விமுறையையும் ஒப்பிட்டு எழுதும் வாய்ப்பு உங்களுக்கு இருப்பதால் இதை எழுதுகிறீர்கள் இதில் குறை சொல்லவோ குற்றம் கண்டுபிடிக்கவோ என்ன இருக்கிறது. இது போன்ற செய்திகள் பலருக்குத் தெரிந்திருந்தும் எழுத முன்வருவதில்லையே !

    ReplyDelete
  6. நலமிகு பதிவு!
    இம்முறை இங்கும் வருமானால்
    மாணவர் திறமை வளரும் அரசு மட்டுமல்ல
    பொற்றோரும் இதனைப் அறிந்து நடை முறைப்
    படித்தின் சிறப்பாக இருக்கும். செய்வார்களா...?

    சா இராமாநுசம்

    ReplyDelete
  7. விவாதிக்கப் பட வேண்டிய முக்கிய விஷயம் இது.நம் நாட்டில் வேலை வாய்ப்புக்காக கல்வி என்பதால் தேர்வும் ஒப்பீடுகளும் தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது.கல்வி முறை பற்றி ஆய்வே செய்ய வேண்டிய தருணம் இது. மிக நல்ல பதிவு.

    ReplyDelete
  8. நலமிகு பதிவு!...... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்... www.rishvan.com

    ReplyDelete
  9. ஆஸ்திரேலியக் கல்வி முறை பற்றித் தெளிவாயும் விரிவாயும் வெளிப்படுத்தியமை பாராட்டுக்குரியது . என் மாநிலமாகிய புதுச்சேரியில் வேள்ளையர் ஆட்சியில் தொடக்கப்பள்ளிகளில் வீட்டு வேலை ( Home Work ) எதுவும் தரப்பட்டதில்லை . உயர் நிலைப் பள்ளியில் மதிப்பெண் பட்டியல் அவரவர் இல்லத்துக்கு , பெற்றோருக்கு , அஞ்சலில் அனுப்பப்பட்டது .

    ReplyDelete
  10. மிக நல்ல பதிவு,அதற்கு முதலில் சிறதாழ்ந்த எனது வணக்கங்கள்.படிப்பு என்பது தைரமையை வைத்து மட்டும்தானா,மனோரீதியாக அதை செயபடுத்தவேண்டுமா என்ப்பதையும் உள்ளடக்கிய பார்வையும்,படித்ததை அப்படியே வாந்தி எடுக்க வைக்கிற முறைகளை கலைந்து பிள்ள்ளைகளின் மனதில் பட்டாம் பூச்சி பறக்க ச்செய்கிற வரை இப்படித்தான் தூரத்து நிலவை பார்த்து ரசிக்கிறவர்களாக நாம்/

    ReplyDelete
  11. @ நிலவன்பன்,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  12. அன்பு ஹரணி சார்,

    தங்கள் ஆதங்கமிகு கனவு ஒருநாள் நனவாகும். ஆஸ்திரேலியக் கல்வித்திட்டம் பற்றி நான் அறிந்தவரை எழுத முயல்கிறேன். தங்கள் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி சார்.

    ReplyDelete
  13. @ நிலாமகள்,

    தங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி நிலாமகள். வளரும் தலைமுறையை உருவாக்குவதில் பெற்றோரின் பங்கு என்ன என்பதைப் பற்றி உங்கள் பதிவுகள் பலவும் பறைசாற்றுமே.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. @ விச்சு,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி விச்சு. நம் கல்வித்திட்டத்தில் மாற்றம் விரும்பும் தாங்கள் ஓர் ஆசிரியர் என்பதை அறிந்து மகிழ்கிறேன். நன்றி.

    ReplyDelete
  16. @ avainaayagan

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி சார். தொடர்ந்து வருக.

    ReplyDelete
  17. @ புலவர் சா இராமாநுசம்

    தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஐயா. மாணவர்களின் திறனறிய ஆஸ்திரேலியப் பள்ளிகள் கையாளும் முறை பற்றி அடுத்தப்பிரிவில் விளக்குகிறேன். தங்கள் கருத்தை எதிர்நோக்குகிறேன்.

    ReplyDelete
  18. அடுத்த பதிவை சீக்கிரம் போடவும்.தமிழக கல்வித்துறையைச் சேர்ந்த நான் அதை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  19. @ T.N.MURALIDHARAN

    தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய தங்கள் பார்வைக்கும் மிகவும் நன்றி. தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

    ReplyDelete
  20. @ Rishvan

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் தளத்துக்கு வந்தேன். நன்றாக உள்ளது.

    ReplyDelete
  21. @ சொ.ஞானசம்பந்தன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. மேலைநாட்டுக் கல்விமுறையின் ஒத்த செயல்பாடுகள் பற்றித் தங்களால் அறிந்தேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  22. @ விமலன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமலன். அரசு,கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் அனைவரும் ஒத்துழைத்தால் நம் கல்விமுறையிலும் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழக்கூடும்.

    ReplyDelete
  23. @ T.N.MURALIDHARAN

    தங்கள் ஆர்வத்துக்கு தலைவணங்குகிறேன். இதோ அடுத்தப் பதிவு.

    ReplyDelete
  24. இப்படியெல்லாம் இருக்கிறதா என வாய் விளக்கும் நிலையில்
    சராசரி மனிதர்கள் இருந்தால் தேவலாம்
    கல்வியாளர்களே இருக்கிறார்கள்
    தங்களைப் போல பொது நல நோக்கும்
    எழுத்துத் திறனும் உள்ள சிலர் மூலம் மட்டுமே
    கிணற்றுத் தவளையாக இருக்கிற நாங்க்கள் பல விஷயங்களைப்
    தெரிந்து கொள்ள முடிகிறது
    தயவு செய்து அனைத்து நிலைகளிலும் அங்கும் இங்கும் உள்ள
    நிலைகளை விரிவாக விளக்கிப் போவீர்கள் ஆயின் பெரும் மகிழ்ச்சி கொள்வோம்
    பயனும் கொள்வோம்
    அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. Anonymous2/2/12 14:57

    நிறைய நிறைய புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன் .
    கட்டாயம் இங்கு நம் கல்விமுறையில் மாற்றங்கள் வரத்தான் வேண்டும்.
    அந்த நாள் என்றோ என்று தங்கள் பதிவு ஏங்க வைத்து விட்டது.

    ReplyDelete
  26. தங்கள் ஆர்வமிகுப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ரமணி சார். என்னால் இயன்றவரை இந்நாட்டுக் கல்விமுறைப் பற்றி விரிவாக எழுதுகிறேன். தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  27. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரவாணி. தங்கள் ஏக்கம் நியாயமானதே. கொஞ்சம் கொஞ்சமாக அந்நிலை உருவாகும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  28. உலகம் முழுவதும் இந்த முறை பின்பற்றபட்டால் நன்றாக இருக்கும்.நம் மக்கள் உணவு,உடைகளில் மட்டும் அந்நிய கலாச்சாரங்களை தாமே முன்வந்து ஏற்பார்கள்.கல்வி எனில் இதற்கு அரசு ஆதரவும் தேவையே.

    ReplyDelete
  29. if this system had been introduced here some 30 years ago india would have achieved a lot with youth

    ReplyDelete
  30. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி.

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருள்.

    ReplyDelete
  31. தங்கள் பரிந்துரைக்கு மிகவும் நன்றி விச்சு. விரைவில் வருகிறேன்.

    ReplyDelete
  32. இங்கும் அதே முறை என்பதால் தகவல்கள் எனக்குப் புதிதாக இல்லை.
    எழுதிய விதம் கருத்தைக் கவருவதாக இருக்கிறது.

    ReplyDelete
  33. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

    வலைச்சர தள இணைப்பு : அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)

    ReplyDelete
  34. Thanks so much D.D :)

    ஆஸ்திரேலிய பள்ளிகளை பற்றி வலைசரத்தில் கூறியுள்ளேன் ::)நேரம் கிடைச்சா வாங்க

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.