"டேய்...சண்முகம்....!டே....டேய்...சண்முகம்....!"
சட்டென்று மிதிவண்டியை விட்டிறங்கினேன். கூப்பிட்டவர் யாரென்று அறிய சுற்றுமுற்றும் தேடினேன்.
அந்த நெடிய சாலை ஆளரவமற்று வெறிச்சென்றிருந்தது. உயிர் உருக்கும் உச்சிவெயிலில் உயிரினங்கள் யாவும் உலவப்பயந்து ஆங்காங்கு நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தன.
பிரமையோ? நன்றாகக் காதில் விழுந்ததே! 'டேய், சண்முகம்' என்று உரிமையுடன் அழைத்த நபர் யாராக இருக்கும்?
அப்போதுதான் என் கண்களில் தட்டுப்பட்டான், அவன். சாலையோர வேப்பமரத்தில் முதுகைச் சாய்த்து அமர்ந்திருந்தான்.
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வேறு எவரும் இல்லை. அப்படியென்றால் இவன் தான் அழைத்தானா?
புரியாமல் அவனை ஏறிட்டேன். அவன் இப்போது எழுந்து நின்றான். பரந்த செம்பட்டைத் தலைமயிர், முகத்தை முக்கால் பாகம் ஆக்கிரமித்த கருப்புவெள்ளை தாடி, காவியேறிய பற்கள், எச்சில் ஒழுகும் வாய், பலநாள் அழுக்குப் படிந்த சட்டை, முழங்காலுக்குக் கீழே நார் நாராகக் கிழிந்து தொங்கும் கால்சட்டை யாவும் பார்த்தவுடனே பறைசாற்றின, அவனது பிறழ்ந்த மனநிலையை!
இவன் யார்? ஏன் என்னை அழைத்தான்? என் பெயர் இவனுக்கு எப்படித் தெரியும்? பலவித யோசனையுடன் அவனையே பார்த்தேன்.
அவன் என்னைப் பார்த்து சிநேகமாக்ச் சிரித்தான். அவனுடைய கண்கள் எனக்குப் பழக்கமானவை போல் தோன்றின. பழகிய சாயல் அவனது சிரிப்பிலும் வெளிப்பட்டது.
எங்கோ பார்த்திருக்கிறேன்; பழகியிருக்கிறேன். ஆனபோதும் அவன் யாரென்று எனக்குப் புலப்படவில்லை.
அருகில் சென்று பார்க்கலாமா என்று யோசித்தேன். சற்று பயமாக இருந்தது. பிச்சைக்காரனாயிருந்தால் கூட தயக்கமின்றி அவனிடம் சென்று யாரென்று வினவியிருப்பேன். இவனோ மனநிலை தவறியவன்! எப்போது என்ன செய்வானென்று யாருக்கும் தெரியாது.
பேசாமல் சென்றுவிடலாம் என்றெண்ணித் திரும்பியபோது, அவன் மீண்டும் அழைத்தான்.
"டே.....சண்முகம்.....!''
இவ்வளவு உரிமையுடன் என்னை அழைக்கும் ஒருவன் பைத்தியக்காரனாக இருப்பதை எண்ணி வேதனையுற்றேன். அவன் பரிதாபத் தோற்றத்துடன், தன் இருகைகளாலும் வயிற்றைத் தடவிக்கொண்டே, "டே.....பசிக்குதடா....டே...சண்முகம்..." என்று என்னை நெருங்கினான்.
அய்யோ! என் அடிவயிற்றில் ஒரு பிரளயமே நிகழ்ந்தது. சற்றுமுன் உண்ட உணவு மேலேறித் தொண்டையை அடைத்தது.
என்னை அறிந்தவன் உரிமையோடு என் பெயர் சொல்லி அழைத்து, 'பசி' என்கிறான்; நானோ, அவன் யாரென்று அடையாளங்காண இயலாத நிலையில் இருக்கிறேன்! மூளையை எவ்வளவு கசக்கியும் பலனில்லை.
சட்டைப்பையைத் தொட்டுப் பார்த்தேன். கொஞ்சம் பணம் இருந்தது. பத்து ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினேன்.
அவன் வாங்கவில்லை. அதையே உற்றுப்பார்த்தவன், என்னிடம், ''பசிக்குதுன்னு சொல்றேன்...பணம் தர்றீயேடா... சாப்பாடு தாடா...!" என்றான்.
அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவன் எங்கள் இருவரையும் விநோதமாகப் பார்த்துக் கொண்டே சென்றான்.
என்னிடம் பணத்தைத் தவிர வேறில்லை. கடைத்தெருவில் அச்சகம் ஒன்றை சொந்தமாக நடத்திக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வந்து மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் அச்சகம் செல்லும் வழியில்தான் இவனைப் பார்க்கிறேன்.
நான் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி இரண்டு. அச்சகத்தில் நிறைய வேலை இருக்கிறது. இருந்தாலும் அவனை பசியோடு விட மனமில்லை.
"சரி, இங்கேயே இரு! நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்!'' என்று கூறிக் கிளம்ப எத்தனித்தபோது, அவன் திடும்மென்று என்னை வழிமறித்தான்.
"டேய், சண்முகம்! பாலனும் சாமுவேலும் ஏமாத்தின மாதிரி நீயும் என்னை ஏமாத்தப் பார்க்கிறீயாடா?" என்றான்.
சம்மட்டியால் யாரோ என் தலையில் ஓங்கியடித்தாற்போல் இருந்தது. பாலனையும், சாமுவேலையும், என்னையும் அறிந்தவன். அப்படியென்றால் பத்தாம் வகுப்பு வரை எங்களுடன் படித்தவனாயிருக்க வேண்டும்.
"உன் பெயர் என்ன?" என்றேன் திகிலோடு. அவன் பதில் எதுவும் கூறாமல் ஈயென்று இளித்தான். அவனது அந்தச் செய்கை, 'என்னை யாரென்று கண்டுபிடி, பார்ப்போம்' என்று சவால் விடுவது போலிருந்தது.
யாரடா நீ? என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லையே! என் சகமாணவனுக்கா.... இப்படி...?
நானோ பத்தாவதுடன் படிப்பை நிறுத்தியவன். அப்பா திடீரென்று காலமானதும், அச்சகப்பொறுப்பு என் தலையில் சுமத்தப்பட்டுவிட்டது.
என்னுடன் படித்தவன் என்றால்.... கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கடந்தபின்னும் என்னை நினைவு வைத்திருக்கிறானா? சுயபுத்தி இழந்த ஒருவனால் இவ்வளவு காலம் நினைவில் வைத்திருக்க இயலுமா? இவன் உண்மையிலேயே பைத்தியம்தானா? அல்லது நான் தான் அவ்வாறு இவனை எடைபோடுகிறேனா?
அவனுடைய முகம் இப்போது சற்றுக் கடுமையாக, பார்க்கப் பயந்தரும் வகையில் தென்பட்டது. அவன் மிகுந்த பசியுடன் இருப்பதை அது உணர்த்தியது.
அசட்டுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, "சாப்பாடு தர்றேன், என்னுடன் வா!" என்று அவனை அழைத்துவிட்டு, மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு முன்னே நடந்தேன். சில அடிகள் சென்று திரும்பிப் பார்த்தபோது, அவன் தயக்கத்துடன் என்னைப் பின்தொடர்வது தெரிந்தது. வேகத்தைக் கூட்டி விரைவாக வீட்டை நோக்கி நடந்தேன்.
வாசலில் நின்று அழைப்புமணியை அழுத்த, வாசுகி அரைத்தூக்கத்தில் எழுந்துவந்து, கதவு திறந்து என்னைக் குழப்பமாகப் பார்த்தாள். எதையோ மறந்துவைத்துவிட்டு, மீண்டும் எடுக்க வந்திருப்பதாக எண்ணினாள் போலும். ஒரு பைத்தியக்காரனுடன் எனக்கிருக்கும் சகவாசத்தை அறிந்தால் அவள் ஏதேனும் பிரச்சனை உண்டாக்கக் கூடும் என்பதால் அவளை மறுபடியும் தூக்கத்தைத் தொடரச் சொல்லிவிட்டு தண்ணீர் குடிக்கும் பாவனையில் சமையலறைக்குச் சென்றேன். சத்தமின்றி ஒரு தட்டில் சோறும் குழம்பும் போட்டுப் பிசைந்து எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தேன்.
அவன் தெருமுனையிலேயே நின்றுவிட்டிருந்தான். அவனை வரச்சொல்லி கையசைத்தேன். என் கையிலிருந்த தட்டைப் பார்த்ததும் வேகமாக நடந்து மூச்சிரைக்க அருகில் வந்து நின்றான். உணவைப் பார்த்ததும் அவனது முகத்தில் தெரிந்த மலர்ச்சி என்னை மேலும் அவன்பால் கழிவிரக்கம் கொள்ளவைத்தது.
வாசலில் இருந்த புங்கை மர நிழலில் அமர்ந்தவன், அவசர அவசரமாக சோற்றுப் பருக்கைகளை அள்ளி வாயில் பாதியும், வெளியில் மீதியும் இறைத்துக் கொண்டான். அவனருகில் வந்துநின்ற தெரு நாயை நான் கல்லெடுத்து விரட்டினேன். அவன் எதையும் லட்சியம் செய்யாமல் சாப்பிட்டு முடித்தான். பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர்க்குவளையை எடுத்து, மளமளவென்று குடித்தவன், மீந்ததை சடக்கென்று தலையில் கவிழ்த்துக் கொண்டான்.
நான் திடுக்கிட்டுப் பின் வாங்கினேன்.
அதுவரை அமைதியாய் இருந்தவன், "டே...சண்முகம்! நல்ல பையன்டா நீ...!" என்று கூறிச் சிரித்தான். என் தயவால் இன்றைய பொழுது, அவனுக்குப் பசியடங்கி பாதிக் குளியலும் முடிந்துவிட்டது. அவன் சிரித்துக் கொண்டேயிருந்தான்.
என் பள்ளி நண்பர்களின் பட்டியலை மனத்திரையில் ஓடவிட்டு, ஒவ்வொருவராக அவனுள் பொருத்திப் பார்த்தேன். அவன் எவருடனும் பொருந்தாதவனாக இருந்தான். ஆயினும், நன்றாகப் பழகியவன் என்பது சற்று நேரப் பழக்கத்தில் மீண்டும் உறுதியானது. அவன் யாராயிருக்கக்கூடும்? மண்டைக்குள் வண்டு துளைப்பதுபோல் இந்தக் கேள்வியே என்னைத் துளைத்துக் கொண்டிருந்தது.
அவனிடம் "உன் பேர் என்னடா?" என்றேன் சற்றே உரிமையுடன். இப்போது அவனிடம் எனக்கிருந்த பயம் தொலைந்தது போல் தோன்றியது.
அவன் அங்கேயே அமர்ந்து கால்களை நீட்டி, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி நெளிவெடுத்துக் கொண்டான். பிறகு மெல்ல என்னைப் பார்த்து, "ஏண்டா, இப்படிதான் வாத்தியாரை டே போட்டுப் பேசுறதா....? படிச்சவன் தானடா, நீ....?" என்றான்...ர்...
என்னது! வாத்தியாரா? அப்படியென்றால்.... நான் படித்தப் பள்ளிக்கூடத்து ஆசிரியர்களுள் ஒருவரா?
எனக்குத் தலையே வெடித்துவிடும் போல் உள்ளதே! எனக்குக் கற்பித்த குருவுக்கா இந்நிலை? இவர் யார்? ....யார்....யார்....?
திடுக் திடுக்கென்று இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு யோசிக்க...யோசிக்க…….
ம்....இப்போது நினைவுக்கு வந்துவிட்டது.
இவர்...எங்கள் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர். அவருக்கா இந்தக் கோலம்! மிடுக்குடன் அவர் நடந்து வரும் நடையே அலாதி ஆயிற்றே!
கணபதி வாத்தியார் என்றாலே கண்டிப்பு, கருணை இரண்டின் கலவைதானே! தாய் குழந்தைக்கு நிலவைக் காட்டி சோறூட்டுவதுபோல் எத்தனை நயமாக கணக்குச் சொல்லித்தருவார்.
கணக்குப் பாடத்தில் மட்டும் பாரதியை முன்னுதாரணமாகக் கொண்டு, 'கணக்கு, பிணக்கு, மணக்கு, ஆமணக்கு' என்று பிதற்றிக் கொண்டிருந்த என் போன்ற சில மாணவர்களை பள்ளிநேரம் முடிந்தபின்னும், வலுக்கட்டாயமாக வகுப்பில் வைத்துக்கொண்டு இலவசப் பயிற்சி அளித்து, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நன்முறையில் தேறச் செய்தவர். அவர் கற்றுக் கொடுத்தப் பாடம் தானே இன்று சுயதொழிலை லாபகரமாகச் செய்யவைத்து வாழ்க்கைக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.
நான் பள்ளியை விட்டு விலகிய பின்னும் நண்பர்களின் தொடர்பு இருந்துகொண்டிருந்தது. எந்நேரமும் வெற்றிலை குதப்பிக்கொண்டு தமிழ் சொல்லித்தந்த சோலைமலை வாத்தியார் இறந்த விவரத்தையும், கணபதி வாத்தியாருக்குத் திருமணமான செய்தியையும் பழனி மூலம் அறிந்தேன். அதன் பிறகு நண்பர்கள் பலருக்கும் வேலைக்காகவோ, மேற்படிப்புக்காகவோ வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது தொடர்பும் விட்டுப் போனது. நானும் கூட அச்சகம் சென்றுவர வசதியாக, வீட்டை கடைத்தெருவிற்குப் பக்கமாக மாற்றிக்கொண்டு வந்துவிட்டேன்.
சில வருடங்களுக்கு முன் ஒருநாள் தனசேகர் தன் திருமண அழைப்பிதழ் அச்சடிக்க, அச்சகத்துக்கு வந்திருந்தான். அவன் ஆசிரியப் பயிற்சி முடித்து எங்கள் பள்ளியிலேயே கணித ஆசிரியராகப் பணிபுரிவதாகச் சொன்னான். கணபதி வாத்தியாரைப் பற்றிக் கேட்டபோது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் துயரமானது என்றும், அவருடைய மனைவியின் ஒழுக்கக்கேட்டால் பெருத்தத் தலைக்குனிவு ஏற்பட்டு வேலையை விட்டுவிட்டதாகவும், அதன்பின் எங்கு போனாரென்று தெரியவில்லையென்றும் கூறினான். அவன் சொன்னதைக் கேட்டு அவர் மேல் பரிதாபம் எழுந்தது.
ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு, அவரை இந்நிலையில் காண்பேனென்று கனவிலும் நினைக்கவில்லை. தும்பைப்பூவாய் மலர்ந்த சிரிப்புடன் கம்பீரத்துடன் அவர் நடந்து வரும் அழகு என் மனக்கண்முன் தோன்றி மறைந்தது. நெஞ்சு தாளாத துயரம் என்னை அழுத்தியது. என் கண்கள் என்னையறியாமலேயே நீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
ஒரு ஆசிரியர், தன் மாணவர்களை நாளடைவில் மறந்துபோகலாம். ஒரு மாணவன் தனக்குக் கற்பித்தக் குருவை மறக்கலாமா? நான் மறந்துவிட்டேனே! இருபது வருடங்களுக்கு முன் தன்னிடம் படித்த மாணவர்களை, சுயபுத்தி தவறிய நிலையிலும், அடையாளம் கண்டுகொண்டதுமின்றி, அவர்களது பெயர்களையும் நினைவில் வைத்து அழைக்கும் அவ்வாசிரியரின் அற்புத நினைவாற்றல், தகிக்கும் பாலையில் பெய்த மழை நீராய் வீணாகப் போவதை எண்ணி வேதனையுற்றேன்.
அவருக்கு எப்படியாவது உதவ வேண்டுமென்று நெஞ்சு துடித்தது. என்ன செய்வது என்று சற்று நேரம் சிந்தித்தேன். ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்த்து, அவரைப் பராமரிக்கும் செலவை ஏற்றுக்கொள்வது என்ற முடிவுக்கு வந்தேன். ஆம்! அதுவே என்னால் அவருக்குத் தர முடிந்த குருகாணிக்கை! மனத்தெளிவு பெற்றவனாக அவரை நோக்கினேன்.
அவரது நெற்றிச் சுருக்கங்கள், அவர் எதையோ தீவிரமாக யோசிப்பதை உணர்த்தின. அவரது கைகள், இல்லாத கரும்பலகையில் எழுதுவது போலவும், எழுதியவற்றை அழிப்பது போலவும் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன.
வாழ்க்கைக் கணக்கைத் திருத்தியெழுத முனைகிறாரோ? 'ஐயா, உங்களுக்கு இனி அந்தக் கவலை வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று அவரிடம் ஆறுதல் கூறத் தோன்றியது.
நைந்து, கிழிந்து தொங்கிய கந்தலாடை என் கண்களை உறுத்த, உள்ளே சென்று என்னுடைய சட்டை மற்றும் கால்சட்டையை எடுத்துவந்தேன்.
வாசலில், தட்டும், தண்ணீர்க்குவளையும் இருக்க, கணபதி வாத்தியாரைக் காணவில்லை. தெருமுனை வரை ஓடினேன். காலணியற்றக் கால்களை தார்ச்சாலை பதம் பார்த்தது. கூர்ந்து நோக்க முடியாமல் கண்ணீர் வேறு திரையிட்டு பார்வையை மறைத்தது. எங்கும் அவரைக் காணவில்லை. சோர்ந்துபோய், கனத்த மனத்துடன் வீடு திரும்பினேன்.
இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் கண்களையும், காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டுதான் செல்கிறேன். எந்தத் திக்கிலிருந்தேனும், "டேய், சண்முகம்..!" என்ற குரல் வரும் என்று ஏங்கித்தவித்துக் காத்திருக்கிறேன். காணிக்கையைக் கையில் வைத்துக் கொண்டு, தொலைந்துபோன என் குருவை இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
நானும் முதலில் உடன் படித்த மாணவனாகத்தான் இருக்கும் என எண்ணினேன். ஆனால் திருப்பமாக குருவுக்கே இந்த கதி.குரு காணிக்கை ஒரு சம்பவத்தை கண்முன்னாடி கொண்டு வந்து விட்டீர்கள்.
ReplyDelete””ஒரு ஆசிரியர், தன் மாணவர்களை நாளடைவில் மறந்துபோகலாம். ஒரு மாணவன் தனக்குக் கற்பித்தக் குருவை மறக்கலாமா? நான் மறந்துவிட்டேனே! இருபது வருடங்களுக்கு முன் தன்னிடம் படித்த மாணவர்களை, சுயபுத்தி தவறிய நிலையிலும், அடையாளம் கண்டுகொண்டதுமின்றி, அவர்களது பெயர்களையும் நினைவில் வைத்து அழைக்கும் அவ்வாசிரியரின் அற்புத நினைவாற்றல், தகிக்கும் பாலையில் பெய்த மழை நீராய் வீணாகப் போவதை எண்ணி வேதனையுற்றேன்”””
ReplyDeleteஅருமை அருமையான வரிகள் மனதை கணக்கச் செய்தது.
ஐயோ!!!!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஅருமை வாழ்த்துகள்.
ReplyDelete"வாழ்க்கைக் கணக்கைத் திருத்தியெழுத முனைகிறாரோ?"
ReplyDeleteநெஞ்சைத் தொட்ட வரிகள் !
காணிக்கை என்றாவது ஒரு நாள் சேரும் என்ற நம்பிக்கையுடன் ..
சண்முகத்தைப் போல நானும் !
மிகவும் அருமையான வரிகள் நானும் என் தோழியாய் தேடிக்கொண்டிருக்கிறேன் . செல்லும் பாதை எல்லாம் காதலி கூர்மையாக்கிக்கொண்டு .
ReplyDeleteவீண்டு வீழ்ந்தாலும்
ReplyDeleteமாண்டு போனாலும்
மண்ணுலகாம் இதில் உனை
மாண்புமிகுவாய் மாற்றிய
அந்த அறிவோனை
படிப்பறிவித்த பகலவனை
மறப்போமோ????
அருமையான கதை சகோதரி.
படித்து முடிக்கையில் நெஞ்சம் கனத்து இருந்தது.
இப்படி ஒரு நிலைமை எந்த ஒரு மனிதனுக்கும் வரக்கூடாது.
இதிலும் நம்மை மனிதனாக்கியவர்
இப்படி நிலை குழைந்து நிற்க நம்மால் காண முடியுமோ????
கதை ஏதோ செய்துவிட்டது என் மனதை.
Unarvugal varudum arputha kathai. Kuru nichayam varuvaar.
ReplyDeleteவாசித்து முடிக்க மனம் கனத்துப்போனது கீதா.சொல்ல ஏதும் வரவில்லை !
ReplyDeleteதொடக்கமுதல் இறுதி வரை மனதை வலிக்க செய்த கதை .
ReplyDeleteநானும் முதலில் கூட படித்த மாணவன் என்றே நினைச்சேன் .
வரிகள் மனதை கனக்கச் செய்தன...அருமையான கதை சகோதரி...வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாணிக்கையைக் கையில் வைத்துக் கொண்டு, தொலைந்துபோன என் குருவை இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ReplyDelete>>
உங்கள் காணிக்கையை நிங்கள் சீக்கிரம் செலுத்தனும்ன்னு இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சகோ
காணிக்கை கையில் இருந்தும்
ReplyDeleteகொடுக்க மனமிருந்தும்
செலுத்த வாய்ப்பில்லாமல் போகும் சோகம்
உண்மையில் பெருத்த சோகமே
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
Tha.ma 6
ReplyDelete//”ஒரு ஆசிரியர், தன் மாணவர்களை நாளடைவில் மறந்துபோகலாம். ஒரு மாணவன் தனக்குக் கற்பித்தக் குருவை மறக்கலாமா? நான் மறந்துவிட்டேனே! //
ReplyDeleteமுள்ளை மிதித்தது போன்ற உணர்வு இந்த வரிகளை வாசிக்கும் போது. அருமை..
இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் கண்களையும், காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டுதான் செல்கிறேன். எந்தத் திக்கிலிருந்தேனும், "டேய், சண்முகம்..!" என்ற குரல் வரும் என்று ஏங்கித்தவித்துக் காத்திருக்கிறேன். காணிக்கையைக் கையில் வைத்துக் கொண்டு, தொலைந்துபோன என் குருவை இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன்
ReplyDeleteசகோதரி!
இவ் வரிகள் என் நெஞ்சை நெகிழ
வைத்துவிட்டன சிறுகதைக் காவியமாக இக் கதை
விளங்குகிறது எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற
உணர்வை அம் மாணவன் உணர்த்தி விட்டான்!
சா இராமாநுசம்
மிக உருக்கமான கதை கீதா! தெளிவான, விறுவிறுப்பான நடையில் படிப்பவர்கள் மனதில் ஒரு தேடலையும் தொடர்ந்து வரவழைத்து விட்டீர்கள். இனிய பாராட்டுக்கள் உங்களுக்கு!
ReplyDeleteஎனக்கும் கிட்டத்தட்ட இதே அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. வலிப்புடன் துடித்துக்கொண்டிருந்தவருக்கு உதவி செய்த அனுபவம்.
விதி... எத்தனை கொடூரமாக இருக்கிறது.
ReplyDeleteவாத்தியாரை இனி நாங்களும் தேடுகிறோம்.
உதவி செய்த பின் உடனே சண்முகத்துக்கு தெரியப்படுத்துகிறோம்.
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி விச்சு.
ReplyDeleteஎன் அப்பாவின் உடன்படித்த மாணவர் ஒருவர் மனநிலை பிறழ்ந்த நிலையில் இருபது வருடங்களுக்குப் பின் அப்பாவைப் பெயர் சொல்லி அழைத்து பசி என்று கேட்டாராம். மனவருத்தத்துடன் அப்பா எங்களிடம் சொன்னார். எவருக்கும் கட்டுப்படமாட்டாராம். மூர்க்கம் நிறைந்த அவரை நெருங்குதல் கடினமாம்.ஆனால் அந்நிலையிலும் பள்ளிக்கூட மாணவர்கள் வேடிக்கையாக அவரிடம் வீட்டுக்கணக்கைத் தந்து கேட்டால் அழகாக எழுதி விடை கண்டுபிடிப்பாராம். அவருடைய நிலையில் ஒரு ஆசிரியரை வைத்துப் பார்த்தேன். எனக்கும் மனம் கனத்தது. அதன் வெளிப்பாடே இக்கதை.
ReplyDelete@ A.R.ராஜகோபாலன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
மனதைத் தொட்ட கதை.. அருமை கீதா
ReplyDelete@ துளசி கோபால்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
@ Kanchana Radhakrishnan
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காஞ்சனா.
@ dhanasekaran .S
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனசேகரன்.
@ ஸ்ரவாணி
தங்கள் வருகைக்கும் தளராத நம்பிக்கைக்கும் நன்றி ஸ்ரவாணி.
@ sasikala
தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி சசிகலா.
@ மகேந்திரன்,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் நன்றி மகேந்திரன்.
@ துரைடேனியல்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை.
@ ஹேமா,
வாங்க ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ angelin
வாங்க ஏஞ்சலின், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ ரெவெரி,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரெவெரி
@ ராஜி,
ReplyDeleteவருகைக்கும் மனமார்ந்த வேண்டுதலுக்கும் நன்றி ராஜி.
@ Ramani
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.
@ அக்கப்போரு
தங்கள் வருகைக்கும் உணர்வுபூர்வ கருத்துக்கும் நன்றி அக்கப்போரு.
@ புலவர் சா இராமாநுசம்,
தங்கள் வருகைக்கும் நெகிழ்த்தும் பின்னூட்ட வரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா.
@ மனோ சாமிநாதன்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் ஒத்த அனுபவப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி மேடம்.
@ Shakthiprabha
தங்கள் வரவுக்கும் நெகிழ்வானக் கருத்துரைக்கும் நன்றி ஷக்திபிரபா.
@ தேனம்மை லெக்ஷ்மணன்
தங்கள் முதல் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்.
அற்புதம். வருத்தமான முடிவு என்றாலும், வித்தியாசமாய் இருந்தது. மிகவும் நெகிழ வைத்தது.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.
ReplyDeleteமனதை நெகிழவைக்கும் அருமையான கதை..!
ReplyDeleteமனது கனத்து வலிக்கிறது
ReplyDelete