5 January 2012

உயிர்ப்பதும் மரிப்பதுமாய்....



உயிர்ப்பதும் மரிப்பதுமாய்
தினம் தினம் போராட்டம்
இரவுக்கும் பகலுக்குமிடையே!
இரண்டுக்குமான சமரசம்
இன்னமும் உடன்பாடாகவில்லை.

தீராப்பகையின் தீவிரத்தால் தூண்டப்பெற்று,
ஆழ் உறக்கத்திலிருக்கும் இரவின்  அடிவயிற்றை
அதிரடியாய்க் குத்திக் கிழிக்கின்றன
அநேக ஒளிக்கதிரம்புகள்!

செங்குருதி சொட்டும் கிரணங்களைக்
கடலிற் கழுவிப் பரிசுத்தமாக்கி
பவனிவருகின்றது பகற்பொழுது!

பார்வைக்கு அடங்காத பளபளப்போடும்
பலம் வாய்ந்த பெருந்திமிரோடும்
நாளெல்லாம்  உலாவருகிறது.

குற்றுயிராய்க் காலடியில் கிடக்கும்
கருங்குவியலின் குறுநகையைக்
கவனிக்கத் தவறிய  அது,
கர்வத்தின் பாத்திரத்தைக் கவிழ்த்துப் பருகியபடியே
உச்சந்தலையில் ஏறிய  வெஞ்சூட்டு போதையுடன்
தள்ளாடிக்கொண்டிருக்கிறது  உச்சிப் பொழுதில்!

சாயுங்காலத் தருணம் பார்த்திருந்த இரவு
சத்தமின்றி அதைச் சாய்த்துக் கிடத்தி
தாளாத வேகத்துடன் அதன் மென்னியைக் குதற
பீறிட்டுத் தெறிக்கிறது செங்குருதிச் சாயம்!
வீறிட்டலறுகிறது வானம்!
விருட்டென்று பதுங்குகின்றன  யாவும்!

மங்கிய இருள் மறைத்திருக்கும் பேராபத்துகளோடு
எங்கும் வியாபித்துக் கிடக்கும் இரவானது,
வெற்றியின் களிப்பில் மெய்மறந்து,
முற்றிய அசட்டையில் மனந்திளைத்தபடி
மென்துயில் கொள்ளத் தொடங்குகிறது,
தன்னைத் தானே மெல்ல உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும்
பகற்பொழுதைப் பற்றிய பிரக்ஞையற்று!

36 comments:

  1. Anonymous5/1/12 13:11

    உண்மை தான் கீதா ..
    இப்படி உயிர்ப்பதும் மரிப்பதுமாய் இருந்தால் எப்படி ?
    எதிரியை வேரோடு அல்லவா வெட்டிச் சாய்க்க வேண்டும் ?
    கள் உண்ட போதை போல் தற்காலிக வெற்றிக் களிப்பில் மிதக்கலாகுமா ?
    உருவகமும் உட்பொருளும் நன்று.

    ReplyDelete
  2. அருமையான பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. குற்றுயிராய்க் காலடியில் கிடக்கும்
    கருங்குவியலின் குறுநகையைக்
    கவனிக்கத் தவறிய அது,
    மிகவும் அருமை

    ReplyDelete
  4. தினமும் மிதித்துச் செல்லும் பாறையே
    கைதேர்ந்த சிற்பியின் கண்பட அழகிய வணங்கத் தக்க
    சிற்பமாய் வெளிப்படுதல் போல்
    நாம் அன்றாடம்பார்த்துச் சலிக்கிற பகலிரவே
    தங்கள் பார்வைபட அழகிய காவியமாகி இருக்கிறது
    புதிய பார்வை
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  5. கற்பனையும் அதைத் தீட்டும் ஓவியமாய் வார்த்தைகள் வந்து விழுந்ததும் அருமை. கவிதை ஒரு வரம். உங்களுக்கு அழகாக கைவருகிறது.

    //செங்குருதி சொட்டும் கிரணங்களைக்
    கடலிற் கழுவிப் பரிசுத்தமாக்கி
    பவனிவருகின்றது பகற்பொழுது!
    //

    //முற்றிய அசட்டையில் மனந்திளைத்தபடி
    மென்துயில் கொள்ளத் தொடங்குகிறது,
    தன்னைத் தானே மெல்ல உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும்
    பகற்பொழுதைப் பற்றிய பிரக்ஞையற்று!
    //

    ரசித்தேன்.

    ReplyDelete
  6. ஒவ்வொரு நாளும் பொழுதுகள் பிறப்பதும் மறைவதும் வாழ்வானாலும் அவற்றை அவைகளே கொல்வதும் விரட்டுவதுமான கற்பனை அற்புதம் கீதா !

    ReplyDelete
  7. இதுபோன்ற தீர்க்கப்படாத பஞ்சாயத்துக்கள்
    ஆயிரம் ஆயிரம் உண்டு நம் வாழ்வில்.
    தீர்க்கப்படவில்லை என்றபோதும்.. தீர்வுகளை தேடிக்கொண்டே தான்
    இருக்கிறோம் நாமும் சோர்ந்துவிடுவதில்லை....
    உவமைக்குவியல்கள் அழகாக கோர்க்கப்பட்ட நிதர்சனக் கவிதை.

    ReplyDelete
  8. தன்னைத் தானே மெல்ல உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும்
    பகற்பொழுதைப்

    super.....

    ReplyDelete
  9. தொடங்குவது முடியும் முடிவது தொடங்கும்.....

    ReplyDelete
  10. உயிர்ப்பதும் மரிப்பதுமாய்
    தினம் தினம் போராட்டம்
    >>
    வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கனும். போர்க்களம் மாறலாம். போர்கள்தான் மாறுமா?

    ReplyDelete
  11. உயிர்ப்பதும் மரிப்பதுமாய்
    தினம் தினம் போராட்டம்
    >>
    வாழ்க்கையே போர்க்களம். போர்க்களம் மாறலாம். போர்கள்தான் மாறுமா?

    ReplyDelete
  12. @ ஸ்ரவாணி,
    தங்கள் வருகைக்கும் அழகான ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரவாணி.

    ReplyDelete
  13. @ dhanasekaran .S
    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தனசேகரன்.

    ReplyDelete
  14. @ sasikala

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகலா.

    ReplyDelete
  15. @ Ramani

    தங்கள் அழகிய பின்னூட்டத்தால் இக்கவிதை மேலும் மெருகுபெறுகிறது. நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  16. @ Shakthiprabha

    தங்கள் மனந்திறந்த பாராட்டு என்னை மேன்மேலும் ஊக்குவிக்கிறது. மனமாரந்த நன்றி ஷக்திபிரபா.

    ReplyDelete
  17. @ ஹேமா,

    வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஹேமா.

    ReplyDelete
  18. @ மகேந்திரன்

    தங்கள் வருகைக்கும் அழகான விமர்சனக் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  19. @ அக்கப்போரு

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  20. @ சி.பி.செந்தில்குமார்

    ஆம். சுழல்களில்தானே அடங்கியிருக்கிறது வாழ்க்கை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில் குமார்.

    ReplyDelete
  21. @ ராஜி

    வாங்க ராஜி, வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  22. ஒவ்வொரு சொற்களும் அருமை. சொற்களின் பாவனயில்தான் இருக்கிறது கருத்தின் ஆழம். அது உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது...வாழ்த்துக்கள். எங்களை போன்றவர்களுக்கு உங்கள் கருத்தாளம் கொண்ட கவிதைகள் வழிகாட்டி,

    ReplyDelete
  23. மாறி மாறி வரும் பகல்,இரவு இவற்றை ஒரு கவிஞரின் கோணத்தில் பார்த்து,அருமையான கவிதையாகி விட்டீர்கள்.மிக நன்று.

    ReplyDelete
  24. அருமை கீதா! வார்த்தைகளின் பிரயோகம் அற்புதம். மனம் கவர்ந்த பதிவு. தொடருங்கள்.

    ReplyDelete
  25. அட !
    இரவு பகலின் புது வித தரிசனம்
    ஆக்ரோஷத்தின் பின்னணியில்
    அசத்திட்டிங்க கீதா...
    வாழ்த்துக்கள்................

    ReplyDelete
  26. வருகைக்கும் உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் நன்றி இடிமுழக்கம். தொடர்ந்து வாங்க.

    ReplyDelete
  27. தங்கள் முதல் வருகைக்கும் மனந்திறந்த பாராட்டுக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் நன்றி சென்னைப்பித்தன் ஐயா.

    ReplyDelete
  28. @ துரைடேனியல்

    தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துப் பதிவுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  29. @ இயற்கைசிவம்

    தங்கள் வருகைக்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி இயற்கைசிவம்.

    ReplyDelete
  30. உங்கள் கற்பனை, வார்த்தை கையாடலில் இந்தப் பதிவிலும் வியந்துபோனேன்.இந்தக் கவிதை முழுவதையும் சி.பி.செந்தில் குமார் அவர்கள் சற்று ஒரே வரியில் சொல்லிவிட்டது போலவும் தோன்றுகிறது.

    ReplyDelete
  31. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆச்சி. நீங்கள் சொல்வது சரிதான். மனித வாழ்வில் மாறி மாறி வரும் ஏற்றத்தாழ்வுகளையும் இவற்றோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  32. அருமையான கவிதை..

    ReplyDelete
  33. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரியாஸ்.

    ReplyDelete
  34. //செங்குருதி சொட்டும் கிரணங்களைக்
    கடலிற் கழுவிப் பரிசுத்தமாக்கி
    பவனிவருகின்றது பகற்பொழுது!

    பார்வைக்கு அடங்காத பளபளப்போடும்
    பலம் வாய்ந்த பெருந்திமிரோடும்
    நாளெல்லாம் உலாவருகிறது.


    குற்றுயிராய்க் காலடியில் கிடக்கும்
    கருங்குவியலின் குறுநகையைக்
    கவனிக்கத் தவறிய அது,
    கர்வத்தின் பாத்திரத்தைக் கவிழ்த்துப் பருகியபடியே
    உச்சந்தலையில் ஏறிய வெஞ்சூட்டு போதையுடன்
    தள்ளாடிக்கொண்டிருக்கிறது உச்சிப் பொழுதில்!
    //
    அருமை
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.