7 January 2012

என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்



இந்தக் கோடை விடுமுறைக்குப் புதிய இடம் எங்காவது செல்ல வேண்டுமென்ற குழந்தைகளின் நச்சரிப்பையும் ஆர்வத்தையும் பார்த்து யோசித்ததில், வெகு நாட்களாய் என் மாமனும், மாமியும் என்னை வரச்சொல்லி அழைத்துக் கொண்டிருந்த, என் அம்மாச்சி வாழ்ந்த கிராமத்திற்குச் செல்வதென்று முடிவாயிற்று.

சிறுபிள்ளைப் பிராயத்தில் வருடந்தோறும் எனது கோடை விடுமுறையைக் கழித்த, அந்தக் கிராமத்தை நினைக்கும்போதே ஆங்காங்கே மின்னுகின்றன, சில ஞாபக மின்னல்கள்.

நினைவு தெரிந்த நாளாய் நானறிந்த ஓர் உற்சாக ஊற்று, என் அம்மாச்சி! அம்மாச்சிக்குத் திருமணமாகும்போது, அவருக்கு வயது பதினைந்தாம்; நான் அறிந்திராத தாத்தாவோ, அவரைவிட பதினைந்து வயது மூத்தவராம்! இல்லற வாழ்வின் இலக்கணமாய், ஈன்ற பிள்ளைகள் பதினால்வர் ஆயினும், வாழ்க்கைப் போராட்டத்தில் வென்றவர் எழுவரே! அவர்களில் பெண் வயிற்றுப் பேத்தி நான் ஒருத்தியே என்பதில் மிகப் பெருமை அவருக்கு.

என் அம்மாச்சியை நினைத்தாலே நெஞ்சம் நிறைவது, வெற்றிலைச் சிவப்பேறிய பற்கள் தெரிய வாய் விட்டும் மனம் விட்டும் அவர் சிரிக்கும் சிரிப்புதான். இப்படியும் ஒரு பெண்மணியா என வியக்க வைக்கும் அவரது வாழ்க்கை. பிள்ளைகள் தலையெடுக்கு முன்னேயே, கணவனையிழந்து கைம்பெண்ணாய் நின்றபோதும், மன உறுதியை இழக்காது போராடி தன் மக்களைத் தடம் மாறாமல் வளர்த்து, தரணியில் தலை நிமிர்ந்து வாழச் செய்தவர் அவர்.

தளர்ந்த வயதிலும், தளராத நையாண்டியும், நயமான சாதுர்யப் பேச்சும் எவர்க்கும் எளிதில் கைவராத கலை, அது என் அம்மாச்சிக்கு இறுதி வரை இருந்தது என்பதே ஒரு மலைப்பான உண்மை!

அவரோடு நான் கழித்த தருணங்கள் அத்தனையும் என் மனதில் பசுமரத்தாணிகள். என் இரண்டங்குலக் கூந்தலோடு, இடுமயிர் வைத்துப் பின்னலிட்டு, இறுதியில் குஞ்சலங்கட்டி அழகு பார்த்தவர் என் அம்மாச்சி. குஞ்சலம் ஆட வேண்டுமென்று, நான் ஆட்டி, ஆட்டி நடந்த நடையில், கொத்துக் கதம்பத்தோடு இடுமயிர்ப் பின்னலும் எங்கோ அவிழ்ந்து விழ, அதைக் கூட உணராமல் நான் விளையாடிக் கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் இதழ்க் கோடியில் எழுகிறது, ஒரு புன்னகை!

யார் யாரிடமோ சொல்லி வைத்து, தாழம்பூ கொணர்வித்து, எனக்குப் பூத்தைத்து விட்ட அழகென்ன! பூ எதுவும் கிடைக்காத பொழுதுகளில், இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அரசாங்க மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு பெரிய மகிழமரத்தின் அடியில் கொட்டிக் கிடக்கும் பூக்களைப் பொறுக்கி எடுத்து வந்து, மண் துடைத்து ஊசி நூல் கொண்டு சரம் சரமாய்க் கோர்த்து, எனக்குச் சூட்டி அழகு பார்த்த அன்பென்ன!

அம்மாச்சியைப் பார்க்கும்போதெல்லாம் ஒளவையார்தான் என் ஞாபகத்துக்கு வருவார். எனக்குத் தெரிந்து, ஒளவையாராய் என் மனதில் உருவகப்படுத்தியிருந்த கே.பி. சுந்தராம்பாளைத் தோற்றத்தில் சற்று ஒத்திருந்தார். அம்மாச்சியின் உடற்கட்டும், புடவைக்கட்டும், திருநீற்றுப்பூச்சும், அவரையே ஒத்திருக்க, பஞ்சு மிட்டாய் போன்ற நரைத்த, அடர்த்தியான, நெளிமயிரில் மட்டும் வித்தியாசப்படுவார்.

அவ்வளவு பரந்த தலைமயிரைக் கொண்டையிட்டு, கொண்டையூசி கொண்டு கட்டுக்குள் அவர் கொண்டு வருவதைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான செயல்களில் ஒன்று. அப்போதெல்லாம் எனக்கு, இறுக்கிப் பிடித்தால், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் பஞ்சு மிட்டாயின் நினைவுதான் வரும். அவரிடம் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம், அவர் வெற்றிலை போடும் அழகுதான். அதனினும் அழகு, அந்த வெற்றிலை வாசத்தோடு என் கன்னத்தில் அவரிடும் சில முத்தங்கள்! ஒவ்வொரு முறையும் அவர் முத்தமிட்ட பின்னால் மறைவாகச் சென்று வெற்றிலை எச்சில் பட்ட கன்னங்களைத் துடைத்துக் கொள்வேன்.

வெற்றிலைப் பெட்டி இல்லாமல் அவரைக் காண்பதே அரிது. அவரது வெள்ளி நிற வெற்றிலைப் பெட்டி பல அறைகளைக் கொண்டது. ஒவ்வொரு அறையிலும் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு, கொட்டைப் பாக்கு, புகையிலை, பாக்குவெட்டி என்று தத்தம் இடத்தில் அழகாய் அமர்ந்திருக்கும். அந்த வெற்றிலைப் பெட்டியைப் பார்த்த மாத்திரத்தில், அம்மாச்சியும் இதற்குச் சமீபமாக இங்குதான் எங்கோ இருக்கிறார் என்ற நம்பிக்கை எழும்.

என்னை அலங்காரம் செய்து அழகு பார்த்த அவரே என்னைச் சில சமயங்களில் அழவும் வைத்திருக்கிறார். ஒரு நாள் தெருவில் முந்திரிப் பழங்கள் விற்கக் கண்டேன். அவற்றின் வடிவிலும், பொன்னிறத்திலும் மயங்கி, வாயில் நீரூற, அம்மாச்சியிடம் அவற்றை வாங்கித் தருமாறு கேட்டேன். அவரோ, 'வேண்டாமம்மா, சாப்பிட்டால் தொண்டை கட்டிக் கொள்ளும்' என்று எவ்வளவோ மறுத்தும், நான் விடாப்பிடியாய்க் கெஞ்சிக் கூத்தாடி, அதில் வெற்றியும் பெற்று, இரண்டு பழங்கள் உண்டிருப்பேன். அதன் பிறகு என் குரல் போன இடம் தெரியவில்லை. வீட்டுக்கு வருவோரிடமெல்லாம், இந்தக் கதையைச் சொல்லிச் சிரித்தால், எனக்கு அழுகை வராதா என்ன!

ஆட்டுக்குத் தழையொடிக்கச் சென்ற அவரை, நானும் பின் தொடர்ந்ததில், கருவேலமுள் காலில் குத்திக் கடுகடுத்ததால் அழுத என்னைத் தன் மடியில் இருத்தி, என் காலை விறகடுப்புச் சூட்டில் ஒத்தியெடுத்து, என் வேதனையைத் தணித்ததும் அவரே;  கீழே விழுந்து அடிபட்டு ஆறாமலிருந்த காயங்களுக்கு, கற்றாழைச் சோற்றைத் தணலில் வாட்டியெடுத்து, ஓடி ஓடி ஒளிந்த என்னைத் தேடிப் பிடித்துப் பற்றுப்போட்டு, என்னை அழ வைத்தவரும் அவரே!

எனக்குத் திருமணமான மறுவருடம் அம்மாச்சி காலமானார். அதன் பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, இப்போதுதான் அந்த மண்ணை மிதிக்கிறேன். இத்தனை வருடங்களில் ஊர் மிகவும் மாறிவிட்டிருந்தது. பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டுக்கு வர முன்பெல்லாம் மாட்டு வண்டியைத்தான் நம்பியிருந்தோம்.  இப்போது, தடுக்கி விழுந்தால் ஆட்டோ கிடைக்கிறது. கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும் அரிதாய்க் காணப்பட, மாடி வீடுகள் பெருகி, அவற்றின் மேலே டிஷ் ஆன்டெனாக்கள் முளைத்திருந்தன.

ஆடு, மாடு, கோழி போன்ற ஜீவன்களும் அரிதாகக் கண்ணில் பட, கிட்டத்தட்ட எல்லோரது வீட்டிலும் அல்சேஷன், டாபர்மென், பாமெரெனியன் போன்ற செல்ல நாய்கள் தென்பட்டன. அம்மாச்சியின் வீடு கூட இப்போது மாமாவின் வீடாகி விட்டது. கூரையும், சாணி மெழுகிய தரையும் காணாமற் போயிருந்தன; நவ நாகரிக வேலைப்பாடுடன் கூடிய பிரமாதமான வீடாக அது இருந்தது.

அம்மாச்சியின் புகைப்படம் ஒன்று சாமியறையில் எப்போதும் எரியும் விளக்குடன் காணப்பட்டது. மற்றபடி, அம்மாச்சி வாழ்ந்ததற்கான சுவடு வேறெங்கும் தென்படவில்லை. கொல்லைப்புறம் சென்று பார்த்தபோது, என் அம்மாச்சி எனக்காக ஊஞ்சல் கட்டிக் கொடுத்த புளியமரத்தைக் காணாமல் பகீரென்றது. அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டிருந்தது. அம்மாச்சியின் வெற்றிலைப் பெட்டி பற்றிக் கேட்டேன்; யாருக்கோ தானமாகத் தந்து விட்டதாக மாமி சொன்னார்.

என் கணவர் நாளேட்டில் மூழ்கியிருக்க, என் பிள்ளைகளும், மாமாவின் மகன்களும் தொலைக்காட்சியில் ஐக்கியமாகியிருக்க, நான் மட்டும் எதையோ இழந்ததுபோல் தவித்துக் கொண்டிருந்தேன். அது, அம்மாச்சியின் வீடாகவோ, ஊராகவோ எனக்குத் தோன்றவில்லை. கடந்த காலத்தின் நினைவுகளிலிருந்து மீளவும் இயலாமல், நிகழ்காலத்தின் நிஜங்களை ஏற்கவும் இயலாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது மனது.

மாமாவிடம் வேலை பார்க்கும் வேணுவுக்கு, வயிற்று வலியென்று அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு ஆள் வந்து சொல்ல, பார்த்து வருகிறேன் என்று மாமா கிளம்பினார். "நானும் உடன் வருகிறேன், எனக்கு ஊரைப் பார்க்க வேண்டும்" என்றேன்.

ஆச்சரியமாகப் பார்த்தாலும், மறுக்காது என்னை அழைத்துச் சென்றார். நான் சிறுமியாய் இருந்தபோது, இதே ஊ¡ரில் என்னை சைக்கிளின் பின்புறம் வைத்துக்கொண்டு எத்தனை முறை வலம் வந்திருக்கிறார்! அந்த ஞாபகம் எனக்கு இப்போது வந்திருக்கும் என்று நினைத்திருக்கலாம்.

மாமாவுடன் ஸ்கூட்டரில் சென்று, மருத்துவமனை வாசலில் இறங்கினேன். மாமாவிடம், "நான் இங்கேயே இருக்கிறேன், நீங்கள் போய்ப் பார்த்து வாருங்கள்" என்றேன். சற்று யோசித்தவர், "சரி, பத்திரமாய் இரும்மா, உடனே வந்து விடுகிறேன்" என்று கூறி உள்ளே செல்ல, நான் அந்த மகிழ மரத்தைத் தேடினேன்.

அந்த வளாகமே, நான் அறிந்த, அறியாத பல்வேறு மரங்களால் சூழப்பட்டு, சோலைவனம் போல் கட்சியளித்தது. சூர்யகிரணங்களை உள்ளே வரவிடாமல் தடுப்பதைப் போன்று, ஒன்றுடன் ஒன்று கிளைகளால் கை கோர்த்து அந்த இடத்தையே நிழலால் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. காகங்களின் கரையலும், மற்ற பறவைகளின் கீச்சொலியும் மனதிற்கு இதம் கூட்ட, மகிழம்பூவின் வாசம் என்னை வழி நடத்திச் செல்ல, அந்தப் பெரிய மரத்தைக் கண்டுபிடித்தேன்.

எத்தனை வருட மரமோ! அடி பெருத்து, கிளை பரப்பி, எங்கணும் பூக்களை உதிர்த்து அமைதியாய் நின்று கொண்டிருந்தது. 'நீயாவது இருக்கிறாயே என் அம்மாச்சியின் நினைவோடு பின்னப்பட்ட ஞாபகச் சின்னமாக!' என மனம் நெகிழ்ந்து மண்டியிட்டு அதன் பூக்களைச் சேகரிக்கத் துவங்கினேன்.

அந்தப் பக்கம் வருவோர் போவோர் யாரும் அந்த மரத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவரவர்க்கு அவரவர் பிரச்சினை. உட்புற நோயாளிகளுக்கு உதவிக்கு வந்தவர்களில் யாராவது பெண்கள் மட்டும் போகிற போக்கில் ஒன்றிரண்டு பூக்களை எடுத்து, கொண்டைக்குள் அல்லது பின்னலுக்குள் செருகிக் கொண்டு சென்றனர்.

சீண்டுவாரின்றி சிதறிக் கிடக்கும் பூக்களைப் பார்க்கும்போது, என்னென்னவோ கற்பனைகள் மனதில் விரிந்தன. அமாவாசையன்று, இரவு வானத்தில் ஆதிக்கம் செலுத்தும் நட்சத்திரக் கூட்டங்களைப் போன்று ஒரு கணம் தோன்றியது. மறுகணம், மரங்கள் யாவும் சாமரம் வீச, மலர்ப் படுக்கையொன்று மிக வேகமாக யாருக்கோ தயாராகிக் கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது.

காற்று வீசும் ஒவ்வொரு முறையும், மரத்திலிருந்து சில மலர்கள் கீழே விழுவதையும், ஏற்கெனவே விழுந்து கிடந்தவற்றுள் சில உருண்டு வேறிடம் நோக்கி ஓடுவதையும் பார்க்கும்போது, வாழ்க்கையின் நிலையாமை பற்றிய நினைவு உள்ளே எழுந்தது.

இப்படி ஏதேதோ எண்ணங்கள் தோன்றிய வேளை, அருகினில் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து நோக்க, இடுப்பைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் ஒரு மூதாட்டி. முன்பே பரிச்சயமானவர் போல் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவர், "மேலுக்கு சுகமில்லம்மா, மூட்டுக்கு மூட்டு வலிக்குது. இங்க வந்தா, ஒண்ணுமில்ல, வயசாயிட்டுதுன்னு சொல்லி ஏதோ களிம்பு கொடுத்தாங்க" என்றார். பேசும்போதே மூச்சிரைத்தது. பேசியவர், அங்கேயே அமர்ந்து, பூக்களைப் பொறுக்கித் தன் சேலைத் தலைப்பில் சேகரிக்கத் தொடங்கினார்.

எனக்குதான் உதவுகிறாரோ என்று ஐயப்பட்டு, "உடம்பு முடியாதபோது, ஏன் பூ எடுத்துக் கொண்டிருக்கிறீங்க?" என்றேன்.

"வீட்டுல என் பேத்தியிருக்கு, பூவுன்னா அவ்வளவு இஷ்டம் அதுக்கு, இது நல்ல வாசமா இருக்கில்ல. அதுக்கு ரொம்பப் பிடிக்கும்" என்றார்.

எனக்குக் கண்ணில் நீர் முட்டியது. துக்கம் தொண்டையை அடைக்க, கைக்குட்டையில் சேகரித்து வைத்திருந்த பூக்களை அம்மூதாட்டியின் சேலைத் தலைப்பில் கொட்டினேன்.

"ஏனம்மா, உனக்கு வேணாமா?" என்றார். "உங்க பேத்திக்குக் கொடுங்க, அவளும் ஒரு நாள் என்னைப் போல இங்கே வந்து பூ எடுப்பாள்" என்றேன். என் பேச்சின் அர்த்தம் புரியாமல், கண்களால் நன்றி தெரிவித்துச் சென்றாள்.

அந்த மகிழமரத்தை நிமிர்ந்து நோக்கினேன். 'சில வருடங்கள் கழித்து, அந்தப் பேத்தி நிச்சயம் உன்னைப் பார்க்க வருவாள். அதன்பின் வேறொரு பாட்டியின் நினைவாக, வேறொரு பேத்தி வருவாள். காலங்காலமாகப் பாட்டிகளுக்கும், பேத்திகளுக்கும் உள்ள உறவின் அடையாளச் சின்னமாக நீ என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்' என்று மனதார வாழ்த்தி நின்றேன்.

காற்றடித்து, சில மகிழம்பூக்கள் என்மேல் விழுந்தன. என் அம்மாச்சியே மலர்தூவி என்னை ஆசிர்வதிப்பதுபோல் உணர்ந்தேன்.

************************************************************************************************

(கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் எழுதியது. சொல்லப்போனால் இதுவே என் இரண்டாவது இன்னிங்ஸின் பிள்ளையார் சுழி. நிலாச்சாரல் இணையதளத்திலும் வெளிவந்தது.  இதிலிருக்கும் என் அம்மாச்சியைப் பற்றிய பகிர்வுகள் யாவும் உண்மை.)  படம் உதவி: இணையம்

48 comments:

  1. Anonymous9/1/12 12:06

    கீதா ,
    எனது இந்த புத்தம்புது நாள் வசந்தமாகி விட்டது
    உங்கள் அம்மாச்சி கதையைப் படித்து .
    நினைவுமின்னலும் வர்ணனையும் முடிவும் மிக அருமை.
    சமீபத்தில் மறைந்த என் 'அம்மாச்சியை '
    எனக்கு நினைவூட்டியதால் நெகிழ்ந்து போனேன்.
    இடுமயிர் 'இன்று ஒரு புது வார்த்தை ' எனக்கு.
    தரம் தாரக மந்திரம் உங்கள் வலைப்பூவில்.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  2. ஆஹா எத்தனை அழகாக எழுதிப் போகிறீர்கள்
    அந்த அம்மாச்சியின் மடியில் பூவைக்கொட்டி நீங்கள்
    சொல்லிப் போகும் வார்த்தைகளில் நான
    அப்படியே மயங்கிப் போனேன்
    இப்படித்தான் வாழ்வில் இழந்த சில நிஜங்களை இப்படி சில
    நிகழ்வுகளில் நம்மை நாமே இணைத்துக் கொண்டு
    ஆறுதல் சொல்லிக் கொள்ளவேண்டியுள்ளது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    த.ம 1

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  4. ஆகா..ஒரு அற்புதமான இறந்தகாலத் தேடல்..அவற்றை நினைத்துப் பார்க்கும் வேளை நாம் சொர்கத்தில் இருந்தாலும் நினைத்துப் பார்க்கும் இறந்தகாலங்கள்தான் உண்மையான சொர்கமாயிருக்கும்..அம்மாச்சி வாழ்ந்த அனுபவத்தைச் சொல்லி என்னையும்கூட கடந்த காலத்திற்கு கொஞ்சம் நகர்த்தி சென்றுவிட்டீர்கள்..அம்மாச்சியின் நினைவுகளினூடே மிச்ச வாழ்க்கையையும் கழிக்க வேண்டியதுதான்..வேறென்ன செய்ய..அருமையான பதிவு..வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. மிகவும் லயித்துப்படித்து மகிழ்ந்தேன். பல வரிகளில் உங்களின் அழகான உணர்வுகள் எனக்குப்புரிந்து கொள்ள முடிந்தது. இது போல எனக்கும் பல அனுபவங்கள் உண்டு. அதை நீங்கள் எவ்வளவு அழகாக எழுத்தில் செதுக்கியுள்ளீர்கள் என்று வியந்து போனேன். மிகவும் பிடித்த ஒரு சில இடங்கள்:

    //என் கணவர் நாளேட்டில் மூழ்கியிருக்க, என் பிள்ளைகளும், மாமாவின் மகன்களும் தொலைக்காட்சியில் ஐக்கியமாகியிருக்க, நான் மட்டும் எதையோ இழந்ததுபோல் தவித்துக் கொண்டிருந்தேன். அது, அம்மாச்சியின் வீடாகவோ, ஊராகவோ எனக்குத் தோன்றவில்லை. கடந்த காலத்தின் நினைவுகளிலிருந்து மீளவும் இயலாமல், நிகழ்காலத்தின் நிஜங்களை ஏற்கவும் இயலாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது மனது.//

    எனக்குக் கண்ணில் நீர் முட்டியது. துக்கம் தொண்டையை அடைக்க, கைக்குட்டையில் சேகரித்து வைத்திருந்த பூக்களை அம்மூதாட்டியின் சேலைத் தலைப்பில் கொட்டினேன்.

    "ஏனம்மா, உனக்கு வேணாமா?" என்றார். "உங்க பேத்திக்குக் கொடுங்க, அவளும் ஒரு நாள் என்னைப் போல இங்கே வந்து பூ எடுப்பாள்" என்றேன். என் பேச்சின் அர்த்தம் புரியாமல், கண்களால் நன்றி தெரிவித்துச் சென்றாள்.

    அந்த மகிழமரத்தை நிமிர்ந்து நோக்கினேன். 'சில வருடங்கள் கழித்து, அந்தப் பேத்தி நிச்சயம் உன்னைப் பார்க்க வருவாள். அதன்பின் வேறொரு பாட்டியின் நினைவாக, வேறொரு பேத்தி வருவாள். காலங்காலமாகப் பாட்டிகளுக்கும், பேத்திகளுக்கும் உள்ள உறவின் அடையாளச் சின்னமாக நீ என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்' என்று மனதார வாழ்த்தி நின்றேன்.

    காற்றடித்து, சில மகிழம்பூக்கள் என்மேல் விழுந்தன. என் அம்மாச்சியே மலர்தூவி என்னை ஆசிர்வதிப்பதுபோல் உணர்ந்தேன்.//

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கும்
    மின்னஞ்சல் மூலம் எனக்குத் தகவல் கொடுத்ததற்கும் என் நன்றிகள்.

    தொடர்ந்து இதுப்போல எழுதிக்கொண்டே இருங்கள்!
    தமிழ்மணம்: 4
    அன்புடன் vgk

    ReplyDelete
  6. உங்கள் நினைவுகளை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.அம்மாச்சி ஊரை சஸ்பென்சாக்கிட்டீங்களே,

    ReplyDelete
  7. இதை படித்ததும் ஏக்கத்தினால் கண்கள் ஈரமாகிவிட்டது கீதா. எனக்கு கடைசி வரை பாட்டியின் பாசம் கிட்டவே இல்லை.

    ReplyDelete
  8. ரொம்ப ரசிச்சேன்....எனக்கு என் பாட்டியும் என் ஊரும் நினைவுக்கு வந்தது.............

    "பாட்டி என்றாலும் நீயும் என் தாய்
    பூவே பூச்சூடவா"

    எல்லா பாட்டிக்கும் பேத்திக்கும் அற்பணம்.

    வரிக்கு வரி............. உணர்ந்தேன்.....வாழ்ந்தேன்.....

    ReplyDelete
  9. உங்கள் உணர்வுகளின் கைப்பிடித்து என்னால் பயணிக்க முடிந்தது. என்ன அழகான வார்த்தைகள்ல சொல்லியிருக்கீங்க கீதா. படிக்கும்போது என் மனசுல ஓடின பாட்டு வரிகளைச் சொல்ல வந்தா... தோழி ஷக்தி முந்திக்கிட்டாங்க... பாட்டி என்ற உறவைக் கண்ணாலும் பார்த்திராத எனக்கு... உங்களின் இந்த உணர்வுகள் மனதை விட்டு நீங்காது.

    ReplyDelete
  10. மனம் கனக்கிறது கீதா.என் அம்மா...அம்மம்மா...அத்தை என முகங்கள் வந்து போகிறது.உறவுகளைத் தொலைத்த எங்களோடு நினைவுகள் மட்டும்தான்.எழுதுகிறேனே தவிர மனம் அழுகிறது.சிலரது கடைசியாக முகங்களைக்கூடக் காணக்கிடைக்காத அநாதையான அகதி !

    ReplyDelete
  11. கீதா நீங்கள் அம்மாச்சி பற்றி கூறியது என் ஆயாவை கண்களில் தேக்கிவிட்டது
    ஆரம்பம் முதலே இது கதையல்ல என்ற எண்ணத்தோடே வாசித்தேன்
    அது உண்மையானதும் இன்னும் கனத்தது.
    -இயற்கைசிவம்

    ReplyDelete
  12. Sago. Geetha!

    Ithu arputhamaana oru oviyam. Nadai romba azhagu. Naalaikku Tamil il meendum varugiren inku.

    ReplyDelete
  13. பதிவு என்னை பட்டாம்பூச்சியாய்
    மாற்றிவிட்டது சகோதரி...
    வண்ணவண்ண சிறகுகளுடன்
    எண்ணத்தின் நினைவுகளுடன்
    ஒரு ஊர்வலமே சென்று வந்துவிட்டேன்...

    சுகமும் துக்கமும் கலந்துகட்டி
    என்னை மூழ்கடித்து சென்றன
    அந்த நினைவலைகள்.

    அற்புதமான படைப்பு சகோதரி.

    ReplyDelete
  14. கண்களைக்குளமாக்குகிறது உங்கள் கதை . அல்ல !! கவிதை.

    இது வரை ஒரு பத்து தடவை படித்துவிட்டேன்.
    இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒரு
    இலக்கியம்.

    ஈடில்லா அன்பின் உணர்வு மிகு உதாரணம்.

    இங்கு அடிக்கடி இனி வருவேன்.

    மீனாட்சி பாட்டி.
    http://mymaamiyaarsongs.blogspot.com

    ReplyDelete
  15. அழகான நடையில் மிக நெகிழ்வான கதை. வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. மகிழம் பூவின் மணத்தை விட தங்கள் கட்டுரை
    மணக்கிறது!

    இராமாநுசம்

    ReplyDelete
  17. பாசத்தின் அடர்த்தியும் இயற்கையின் அழகும் கைகோர்த்து நடக்கும் நடை. நீங்கள் ஏன் பெரிய எழுத்தாளராக வரவில்லை என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. எத்தனை வருட மரமோ! அடி பெருத்து, கிளை பரப்பி, எங்கணும் பூக்களை உதிர்த்து அமைதியாய் நின்று கொண்டிருந்தது. 'நீயாவது இருக்கிறாயே என் அம்மாச்சியின் நினைவோடு பின்னப்பட்ட ஞாபகச் சின்னமாக!' என மனம் நெகிழ்ந்து மண்டியிட்டு அதன் பூக்களைச் சேகரிக்கத் துவங்கினேன்.//

    அந்த மகிழமரத்தை நிமிர்ந்து நோக்கினேன். 'சில வருடங்கள் கழித்து, அந்தப் பேத்தி நிச்சயம் உன்னைப் பார்க்க வருவாள். அதன்பின் வேறொரு பாட்டியின் நினைவாக, வேறொரு பேத்தி வருவாள். காலங்காலமாகப் பாட்டிகளுக்கும், பேத்திகளுக்கும் உள்ள உறவின் அடையாளச் சின்னமாக நீ என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்' என்று மனதார வாழ்த்தி நின்றேன்.//

    அம்மாச்சியின் நினைவும், மறுபடி அதே மாதிரி அம்மாச்சியைப் பார்ப்பதும் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது கீதா.


    அந்த மகிழமரத்தை நிமிர்ந்து நோக்கினேன். 'சில வருடங்கள் கழித்து, அந்தப் பேத்தி நிச்சயம் உன்னைப் பார்க்க வருவாள். அதன்பின் வேறொரு பாட்டியின் நினைவாக, வேறொரு பேத்தி வருவாள். காலங்காலமாகப் பாட்டிகளுக்கும், பேத்திகளுக்கும் உள்ள உறவின் அடையாளச் சின்னமாக நீ என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்' என்று மனதார வாழ்த்தி நின்றேன்.//

    உங்கள் வாழ்த்து பலிக்கட்டும். அன்பின் வேர்களை பலமாய் ஊன்றி வாழ்ந்து இருக்க வேண்டும் தலைமுறைகளை தாண்டி மகிழமரம்.
    வாழ்த்துக்கள் !
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  19. உணர்ச்சி பூர்வமான நினவு கூரல்!மகிழ் போல் மணக்கிறது,

    ReplyDelete
  20. @ ஸ்ரவாணி,
    உங்கள் அன்புக்கும் நெகிழ்வான வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி தோழி.

    @ Ramani
    தங்கள் வரவுக்கும் மனம் நெகிழ்த்தும் கருத்துக்கும், தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

    @ Rathnavel
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.

    @ மதுமதி,
    தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும். தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  21. @ வை.கோபாலகிருஷ்ணன்
    தங்கள் வருகைக்கும் லயித்துப் படித்ததோடு கவர்ந்த இடங்களை பின்னூட்டத்தில் குறிப்பிட்டமைக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி வை.கோ. சார்.

    @ thirumathi bs sridhar
    அம்மாச்சி பேரும் என்பேரும் கூட சொல்லலையே… கவனிக்கலையா? வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நிகழ்வுகளில் இருத்தி ரசிக்கும் நிலையைக் கெடுக்க விரும்பாததே காரணம் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. உண்மையில் யாவும் தற்செயலாய் அமைந்ததுதான். அம்மாச்சியின் ஊர் மன்னார்குடி. இவ்வளவு நுட்பமாக கவனித்து ரசித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது ஆச்சி. வருகைக்கு மிகவும் நன்றி.

    @ ராஜி,
    உங்கள் பின்னூட்டம் கண்டு மனம் வருந்துகிறேன் ராஜி. இப்போதெல்லாம் தாத்தா பாட்டிகள் இருந்தும் அவர்களைப் பற்றி குழந்தைகளுக்கு கடைசிவரை தெரியாமலேயே போய்விடுகிறது. வருகைக்கு மிகவும் நன்றி ராஜி.

    @ Shakthiprabha
    எல்லா பாட்டிக்கும் பேத்திக்கும் அர்ப்பணம் என்று மிக அழகாகச் சொல்லி மனம் நிறைத்துவிட்டீர்கள். மிகவும் நன்றி ஷக்திபிரபா.

    ReplyDelete
  22. @ கணேஷ்
    தங்கள் வருகையும் மனம் திறந்த தங்கள் பின்னூட்டமும் என்னை உற்சாகத்துடன் எழுத வைக்கும். மிகவும் நன்றி கணேஷ் சார்.

    @ ஹேமா,
    உங்கள் பின்னூட்டம் கண்டு கண்கள் கசிகிறது ஹேமா. வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு வாழும் உங்கள் மனத்துணிவு போற்றுதற்குரியது. வருகைக்கு மிகவும் நன்றி ஹேமா.

    @ இயற்கைசிவம்,
    தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி இயற்கைசிவம்.

    ReplyDelete
  23. @ துரை டேனியல்,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பரே..

    @ மகேந்திரன்.
    தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி மகேந்திரன்.

    @ sury
    தங்கள் முதல் வருகையும் அழகானப் பின்னூட்டமும் கண்டு எனக்கு மட்டில்லாத மகிழ்ச்சி அம்மா. தங்கள் தளத்துக்கு வந்தேன். பாடல்களை ரசித்தேன். (ரசிக்க மட்டுமே தெரியும். ராகம் பற்றிய அறிவு அறவே இல்லை) தங்கள் மாமியார் மேல் தாங்கள் வைத்துள்ள மரியாதையும் பாசமும் கண்டு கண்கள் பனித்தேன்.

    @ ராமலக்ஷ்மி,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.

    @ புலவர் சா இராமாநுசம்,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  24. @ Amudhavan
    தங்களைப் போன்ற பெரும் எழுத்தாளரிடமிருந்து கிடைத்திருக்கும் பாராட்டு வார்த்தைகள் பெரும் உற்சாகம் அளித்து மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்.

    @ கோமதி அரசு,
    தங்கள் வரவும் நெகிழ்வான பின்னூட்டமும் கண்டு மிகவும் மகிழ்ச்சியோடு நன்றி கூறுகிறேன். தங்கள் ஆசிக்கு அளவிலா நன்றி.. தொடர்ந்து வாங்க

    @ சென்னை பித்தன்,
    தங்கள் வருகையும் இப்பக்கத்தில் இனிதே மணக்கிறது. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  25. காலங்காலமாகப் பாட்டிகளுக்கும், பேத்திகளுக்கும் உள்ள உறவின் அடையாளச் சின்னமாக நீ என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்' என்று மனதார வாழ்த்தி நின்றேன்.

    மகிழம்பூக்களின் வாசம் மனதில் சுழன்று சுழன்று வீசி வசீகரிககிறது..

    அருமையான அனுபவம்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  26. யார் யாரிடமோ சொல்லி வைத்து, தாழம்பூ கொணர்வித்து, எனக்குப் பூத்தைத்து விட்ட அழகென்ன! பூ எதுவும் கிடைக்காத பொழுதுகளில், இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அரசாங்க மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு பெரிய மகிழமரத்தின் அடியில் கொட்டிக் கிடக்கும் பூக்களைப் பொறுக்கி எடுத்து வந்து, மண் துடைத்து ஊசி நூல் கொண்டு சரம் சரமாய்க் கோர்த்து, எனக்குச் சூட்டி அழகு பார்த்த அன்பென்ன!

    என் மலரும் நினைவுகளை
    மலரசெய்த பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  27. அம்மாச்சியின் வெற்றிலைப் பெட்டி பற்றிக் கேட்டேன்; யாருக்கோ தானமாகத் தந்து விட்டதாக மாமி சொன்னார்./

    நானும் போய் என் தாத்தாவின் அருமையான புத்தக தொகுப்பைத் தேடினேன்..

    படிப்பறிவில்லாத அத்தை அவை எல்லாம் நன்றாக அடுப்பெரிக்க உதவியதாக குதூகலத்துடன் சொன்னார்..
    தாங்கவே இயலவில்லை..

    ReplyDelete
  28. மகிழம்பூவாய் என்னிக்கும் மணக்கும் இந்த பாட்டி பேத்தி பாசம்..

    ReplyDelete
  29. @ இராஜராஜேஸ்வரி,

    தங்கள் மலரும் நினைவுகளை மீண்டும் மலரச் செய்தமைக்காக மிகவும் மகிழ்கிறேன். தங்கள் இனிய வரவுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  30. @ அமைதிச்சாரல்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  31. @ இராஜராஜேஸ்வரி

    \\அம்மாச்சியின் வெற்றிலைப் பெட்டி பற்றிக் கேட்டேன்; யாருக்கோ தானமாகத் தந்து விட்டதாக மாமி சொன்னார்.\\

    \\நானும் போய் என் தாத்தாவின் அருமையான புத்தக தொகுப்பைத் தேடினேன்..

    படிப்பறிவில்லாத அத்தை அவை எல்லாம் நன்றாக அடுப்பெரிக்க உதவியதாக குதூகலத்துடன் சொன்னார்..
    தாங்கவே இயலவில்லை..\\


    மனம் கனத்துப் போனது. திரும்பிப் பெற இயலாத செல்வங்கள் அல்லவா அவை?

    ReplyDelete
  32. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. @ Kanchana Radhakrishnan

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  34. வணக்கம்,
    தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. I would compare with Autograph (Tamil)movie oh no no its better than that.... After reading this i felt like i was in a yoga class for 10 hrs continuosly... that much refreshment... i forwarded it to all my friends.... Keep up the good work madam...

    Saravanakumar

    ReplyDelete
  36. Saravanakumar said...

    \\I would compare with Autograph (Tamil)movie oh no no its better than that.... After reading this i felt like i was in a yoga class for 10 hrs continuosly... that much refreshment... i forwarded it to all my friends.... Keep up the good work madam...\\

    Wlcome, Saravakumar. I'm impressed very much by your appreciation. Thank you for your comment.

    ReplyDelete
  37. ஆஹா! என்ன அருமையான பதிவு!!

    நெஞ்சில் ஒட்டிக் கொண்டது மகிழம்பூ வாசத்தோடு இந்தப்பதிவும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாசித்து மகிழ்ததற்கும் என் நன்றிகள் பல மணிமேகலா.

      Delete
  38. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  39. Anonymous9/3/12 14:15

    நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  40. Anonymous9/3/12 14:17

    நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  41. அன்புள்ள கீதமஞ்சரி அவர்களுக்கு,

    உங்களுடைய இந்த பதிவை, இன்றைய வலைசரத்தில் பரிந்து கொண்டுள்ளேன்.

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html

    எழுத்துக்களில் சித்திரம் வடிக்கும் உங்களைப் பற்றி அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி!

    நன்றி!

    ரஞ்ஜனி


    ranjaninarayanan.wordpress.com

    ReplyDelete
  42. கொஞ்சம் திக்குமுக்காடிப் போனேன்.
    வலிகளை எழுத்தில் வடிப்பது எளிதான கலையல்ல. நீங்கள் இந்தக் கலை காலடியில் கட்டி வைத்திருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளை அடிக்கடி வந்து படிக்காத முட்டாள்தனத்தை எண்ணி வருந்துகிறேன்.

    அம்மாச்சி (பாட்டி?) பற்றிய வர்ணணைகள் அற்புதம்(வெற்றிலை வாசனை முத்தம், முந்திரிப்பழம் - brilliant). நீங்கள் மகிழமரம் தேடிப்போவதை ஏனோ முன்கூட்டியே கணிக்க முடிந்தது. ஆனால் இன்னொரு பேத்தியின் மகிழமரத் தேடலுக்கான விதையை வழங்குவதை எதிர்பார்க்கவில்லை.

    மனமார்ந்த பாராட்டுக்கள். இந்தப் பதிவு கொஞ்ச நாள் என்னை அசைத்துக் கொண்டிருக்கும்.

    ReplyDelete
  43. அன்பின் கீதா - அருமையான மலரும் நினைவுகள் - அசை போட்டு ஆனந்தித்து ஒரு நீண்ட பதிவிட்டமை நன்று. ஒவ்வொரு அக்கால நிகழ்வினையும் - இன்றைய நிலையினையும் எழுதிய விதம் நன்று.

    //கடந்த காலத்தின் நினைவுகளிலிருந்து மீளவும் இயலாமல், நிகழ்காலத்தின் நிஜங்களை ஏற்கவும் இயலாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது மனது.//

    உண்மை நிலை இதுதான் - என்ன செய்வது.

    நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  44. பால்ய நினைவுகள் மீள செய்யும் உங்கள் எழுத்துக்கு நன்றி தோழி நானும் என் ஊரு அன் அம்மாச்சி என்று சென்று வந்தது போல இருந்தது

    ReplyDelete
  45. // "உங்க பேத்திக்குக் கொடுங்க, அவளும் ஒரு நாள் என்னைப் போல இங்கே வந்து பூ எடுப்பாள்" என்றேன்.// கண்ணில் நீர் முட்டியது எனக்கு. அம்மாச்சியின் நினைவுகளை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். அந்த மகிழம் மரம் என்றும் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  46. @Geetha6
    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.

    @Ranjani Narayanan
    தங்கள் வருகைக்கும் வலைச்சர அறிமுகத்துக்கும் மனம் நிறைந்த நன்றி மேடம்.

    @அப்பாதுரை
    தங்கள் வருகையும் உற்சாகம் தரும் கருத்துரைக்கும் நெகிழ்வான நன்றி சார்.

    @cheena (சீனா)
    தங்கள் வருகைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.

    @கோவை மு சரளா
    வருகைக்கும் கதையை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி சரளா.

    @கிரேஸ்
    வருகைக்கும் நெகிழ்வானப் பின்னூட்டத்துக்கும் மனம் நிறைந்த நன்றி கிரேஸ்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.