14 August 2014
13 August 2014
கவிதைக் கைமாற்று
அன்றொருநாள்
அவசரநிமித்தம்
கவிதையொன்றைக்
கைமாற்றாய்க்கேட்டு
கையேந்தி
நின்றிருந்தாய் என் வாயிலில்.
உன் கையறுநிலையைக்
காணச்சகியாது
என் கவிதைத்தாள்களின்
கதறல்களை மீறி
பிய்த்துக்கொடுத்தேன்
என் கவிச்சிதறல்களை.
காயமுற்ற என் கவிதைப்புத்தகம்
நேயமற்ற
என்னோடு வாழ மறுத்ததால்
சுயமிழந்து
தவிக்கிறேன் நான்.
விரைவில் திருப்புவதாய்க் கையடித்தபோது
என் விரல்
ரேகைகளுக்கு மத்தியில் படிந்த
தூசு படிந்த
உன் சத்தியங்கள் காலாவதியாகி
கனகாலமாகிவிட்டதை
உணராது
விடுபடும்
நாளை எதிர்பார்த்திருக்கின்றன
விம்மலும்
விசும்பலுமாய்!
உன்
கையொப்பத்துக்காக முண்டியடித்த
கூட்டத்தின்
நடுவில் நேற்றுன்னைக் காண நேர்ந்தது.
பைத்தியங்குளியைப்
போன்ற தோற்றத்திலும்
என்னை
நீ அடையாளங்கண்டுகொண்டாய் என்பதை
விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்துணர்த்தினாய்.
இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லி
கரைந்துகொண்டிருக்கின்றன
காக்கைகள்!
கையுதிர்க்கவிருக்கும்
சத்தியத்தின் காத்திருப்போடு நான்!
கவிதைப்புத்தகத்தின்
வெற்றுப்பக்கங்களை
படபடப்போடு
புரட்டிக்கொண்டிருக்கிறது காற்று.
***************
(படம்: நன்றி இணையம்)
2 August 2014
மகிழ்வும் நெகிழ்வும் 1
அங்கீகாரங்களை விரும்பாத படைப்பாளிகள் யார்? நாமும் களத்தில் இருக்கிறோம் என்பதையும் பலராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்துபவை அங்கீகாரங்கள். வெறும் முகத்துதியாக அல்லாமல் சரியான விதத்தில் சரியான விகிதத்தில் அது வந்துசேரும்போது படைப்பாளியின் திறன் பன்மடங்கு அதிகமாகிறது. எழுத்தின் மீதான பொறுப்பை அதிகரித்து தொடர்ந்து படைக்கும் வல்லமையை வழங்குகிறது. அந்த வகையில் சமீபத்தில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.
அங்கீகாரம் 1
குங்குமம் தோழியில் நட்பு சிறப்பிதழாய் மலர்ந்திருக்கும் (1-15 ஆக. 14)
இதழில் என் ஜன்னல் பகுதியில் கீதமஞ்சரி வலைப்பூ பற்றிய
கவிஞர் உமா மோகன் அவர்களின் அறிமுக உரை கண்டு மகிழ்வில்
நிறைகிறது மனம். எத்தனையோ அருமையான வலைப்பூக்களுக்கு
மத்தியில் கீதமஞ்சரி அவரது மனத்தில் இடம்பிடித்தமை ஒரு
சிறப்பான அங்கீகாரமல்லாது வேறென்ன?
தோழி உமா மோகன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த
அன்பும் நன்றியும்.
அங்கீகாரம் 2
என் கட்டுரை குறித்து நடுவர் முனைவர் திரு. வ.வே.சு ஐயா அவர்களின் கருத்து இதோ.
"இலக்கியத் தரம் வாய்ந்த இனிய கட்டுரை.” இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?” என ஒரு களம் அமைத்துக் கொண்டு சங்க காலம் தொடங்கி பல அழகிய இலக்கிய வரிகளை கவிஞரின் வரிகளோடு ஒப்பிட்டிருக்கிறார். “இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே.” என்று தனது எழுத்து அனுபவத்திற்கான பின்னணியையும் கொடுத்துள்ளார். முதல் தரமான இந்தக் கட்டுரையும் இடநெருக்கடியால்தான் மூன்றாவதாக உள்ளது.
அங்கீகாரம் 3
கட்டுரை குறித்து கவிஞர் காவிரிமைந்தன் ஐயா அவர்களது கருத்து
இலக்கியங்களில் உள்ளம்புகுந்து இனியபல செய்யுள்களை மேற்கோள்காட்டி.. அட.. இதோ பாருங்கள் நம்ம கண்ணதாசன் பாடல் என்று சொல்லியிருக்கும் நேர்த்தி வாசகரை உங்கள் ரசிகராக்கிவிடும்!
கண்ணதாசனை.. என் நெஞ்சத்துடிப்போடு வைத்து
நடைபோடும் என்னால் உங்கள் தனித்திறனை பாராட்டாமல் இருக்க முடியாது! எளிமையான உங்கள் எழுத்தோட்டம்.. ம்..ம்..
அப்புறம் என்று உடனோடி வரச் சொல்கிறது..
கட்டுரையின் முகப்பிலேயே சொல்லிவிடுகிறீர்கள் இலக்கியங்களிலிருந்து
எடுக்கப்பட்ட விஷயங்கள் என்பதற்கும் சரியான உவமையோடு!
எதார்த்தமாக.. இன்றைய காலக்கட்டத்தில்
எவருமே வாசித்திருக்க வாய்ப்பில்லாத.. அல்லது தங்கள் வாழ்வில் அப்பகுதிகளை
காணவோ.. கேட்கவோ.. முடியாத சராசரி உள்ளங்களுக்கு கண்ணதாசன் பாட்டுவரிகள்
நிச்சயமாக இலக்கியத்தின் சாரத்தை எளிமையாக.. இனிமையாக.. இனிவரும் சந்ததிகளுக்கும்
கொடுத்துக் கொண்டே இருக்கும்! உங்களின் கட்டுரை இந்த வகையில் போற்றுதலுக்குரிய
சேவையைச் செய்திருக்கிறது! தடம் பார்த்து நடந்திருக்கிற பெண்போல.. இலக்கியங்களின் வழிநின்று அவற்றை எடுத்தியம்ப கண்ணதாசன்
போல் இன்றைக்கு யார் இருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை!
சீரோடும் சிறப்போடும் உங்கள் எழுத்துப்பணி மேம்படட்டும்.. அதற்கு கவியரசர் ஆத்மா ஆசி வழங்கட்டும்!
சீரோடும் சிறப்போடும் உங்கள் எழுத்துப்பணி மேம்படட்டும்.. அதற்கு கவியரசர் ஆத்மா ஆசி வழங்கட்டும்!
போட்டியின் நடுவர் பொறுப்பை ஏற்றுத் திறம்பட முடிவுகளை அறிவித்துள்ள கவிஞர்
திரு. வ.வே.சு. ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இப்படியொரு போட்டியை அறிவித்து
எண்ணத்தில் இருப்பவற்றை எழுத்தாய் வடிக்கத் தூண்டிய கவிஞர் திரு. காவிரி மைந்தன் ஐயா அவர்களுக்கும் வல்லமை ஆசிரியருக்கும் குழுவினருக்கும் அன்பார்ந்த நன்றி.
மனங்கனிவான இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை பதிவுலகில் இல்லாத வகையில் புதுமையாக
சிறுகதைகளுக்கென்று விமர்சனப் போட்டியைத் துவங்கி தொய்வின்றி
சிறுகதைகளுக்கென்று விமர்சனப் போட்டியைத் துவங்கி தொய்வின்றி
வெற்றிகரமாய்த் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் கோபு சார்
அவர்களுடைய இன்றைய பதிவு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. போட்டியில்
கலந்துகொண்டு பரிசுபெறும் ஒவ்வொருவருக்கும் தனித்ததொரு
அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கிக்கொண்டிருப்பவை
அவருடைய போட்டிகள் என்றால் மிகையில்லை. அவ்வகையில்
எனக்கென்று ஒரு இடம் வாசகர் மத்தியில் உருவாகக் காரணமான
கோபு சார் அவர்களுக்கு என் அன்பான நன்றி.
பரிசு அறிவிப்போடு எனக்கு மணநாள் வாழ்த்தையும்
தெரிவித்து அவர் இட்டிருக்கும் பதிவு மனம் நெகிழ்த்துகிறது.
நெகிழும் மனத்தோடு மீண்டும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்து
மகிழ்கிறேன்.
Labels:
அனுபவம்,
கட்டுரை,
குங்குமம் தோழி,
மகிழ்வும் நெகிழ்வும்,
வல்லமை,
விருதுகள்
28 July 2014
என் பார்வையில் கண்ணதாசன் - கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடம்
திரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் என்றாலும் திரைப்பாடலாசிரியர் என்பதைத் தவிரவும் எண்ணற்ற பன்முகங்களைக் கொண்ட அவர் என் பார்வையில் ஆகச்சிறந்ததொரு இலக்கியவாதியாகத்தான் புலப்படுகிறார். இலக்கியங்களிலிருந்து வரிகளையும் கருத்துக்களையும் தான் எடுத்தாள்வதைக் கவிஞரே நேர்மையாக ஒப்புக்கொண்டபடியால், இலக்கியங்களைக் களவாடி கவிதைகளில் புகுத்துகிறார் என்பவர்களின் குற்றச்சாட்டை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. பந்தியில் பரிமாறப்படும் உணவுக்கான பாராட்டு பரிசாரகரிடம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அது தனக்கானதில்லை என்பதை அவரும் அறிவார்; நாமும் அறிவோம்.
தமிழிலக்கியம் என்பது பாமர மக்களில் சிலருக்கு எட்டிக்காய், சிலருக்கோ எட்டாக்கனி. புலவர்களும் தமிழறிஞர்களும் ஆய்வறிஞர்களுமே இலக்கியங்களின் நயத்தையும் இன்பத்தையும் மாந்தி மகிழும் பேறு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆர்வமிருக்கும் பலருக்கு அதற்கான வாய்ப்பு அமைவதில்லை. வாய்ப்பு அமைந்த பலரும் பிறருக்கு அவற்றை அறியத்தரும் முயற்சியில் இறங்குவதில்லை. அதனால் நம்மில் பலர் வாழ்நாளில் தமிழின் இலக்கிய இன்பங்களை நுகரும் வாய்ப்பு கிட்டாமலேயே வாழ்ந்து மறைந்துபோகிறோம்.
இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?
நம்மில் எத்தனை பேர் கம்பராமாயணத்தையும் கலித்தொகையையும் கலிங்கத்துப்பரணியையும் நளவெண்பாவையும் படித்திருக்கிறோம்? அந்தப் பெயர்களையாவது கேள்விப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் திருக்குறளின் அத்தனை அதிகாரங்களையும் வாசித்து அர்த்தம் புரிந்து பரவசப்பட்டிருக்கிறோம்? பள்ளியில் படித்திருக்கும் ஒரு சில குறள்கள் தவிர பிறவற்றை நாம் அறிய முனைந்ததே இல்லை.
பள்ளியிலும் கூட முப்பாலில் மூன்றாம் பாலான இன்பத்தை ஒதுக்கிவிட்டு அறமும் பொருளும்தான் போதிக்கப்படும். காமத்துப்பாலில் காதலின் அத்தனைப் பரிமாணத்தையும் அழகாக அலசியிருக்கும் வள்ளுவரின் திறனை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம். திருக்குறள்மட்டுமல்ல, கடலென விரிந்துகிடக்கும் சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பலவற்றுள் இருக்கும் இலக்கியச்சுவை இன்னதென அறியாமலிருக்கிறோம்.
நம்மைப் போன்ற இலக்கியம் அறியாதோருக்காக, பல கவிஞர்களும் தங்கள் பாடல்களில் இலக்கியங்களை நயமாகப் புகுத்தி இலக்கிய நயத்தை நாம் அனுபவிக்கத் தந்திருக்கிறார்கள். ஆனால் அனைவரிடத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பங்கு அலாதியானது. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை, பாரதியார் முதல் பட்டினத்தார் வரை யாதொரு தெளிவுரை, பதவுரையின் தேவைகளின்றி எளிதில் எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இனிய தமிழ் வார்த்தைகளால் திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பகிர்கிறார் இந்த இன்சுவைக் கவிஞர்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
என்ற குறுந்தொகைப் பாடலை அறியாதோர் அநேகருண்டு. ஆனால் கண்ணதாசனின் இப்பாடலை அறியாதோர் யாவர்?
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
இதே பாடலில் காமத்துப்பாலில் குறிப்பறிதல் அதிகாரத்திலிருந்து ஒரு குறளையும் நமக்குச் சுட்டியுள்ளார்.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
நம் கவிஞர் என்ன சொல்கிறார்?
உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே
இதோ இன்னொரு குறள் அதே குறிப்பறிதலில் இருந்து…
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
‘கலையே உன் எழில் மேனி கனியாவதேன்’ பாடலில் கவி சமைத்த எளிய வரிகள்…
இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்
பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே
எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே
தமிழிலக்கியம் கற்க எனக்கு ஆர்வமிருந்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதை தமிழறிஞரான என் மாமனாரிடம் ஆதங்கத்தோடு வெளியிடுவதுண்டு. அவர்களும் அவ்வப்போது இலக்கியங்களிலிருந்து சில பாடல்களை எடுத்து நான் அறியத் தருவார்கள்.
ஒருநாள் கலித்தொகையில் புலவர் பெருங்கடுங்கோ பாடிய ஒரு பாடலை சிலாகித்து விளக்கினார்கள். தனக்குப் பிடித்தவனுடன் பெண் ஊரைவிட்டுப் போகும் பழக்கத்தை அன்று ‘உடன்போக்கு’ என்பார்களாம். இன்றைய வழக்கத்தில் ‘ஓடிப்போதல்’ என்போம். அப்படி உடன்போக்கு போன பெண்ணை அவளுடைய வளர்ப்புத்தாய் தேடிக்கொண்டு போகிறாள். வழியில் எதிர்ப்படுபவர்களைப் பார்த்து ‘இந்த வழியே என் மகள் ஒரு ஆடவனோடு போனதைப் பார்த்தீர்களா?’ என்று அழுதுகொண்டே கேட்கிறாள். அவ்வழியே வந்த பெரியவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி அவளுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
பலஉறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
“மலையிலுள்ள காட்டிலிருந்து பெறப்படும் சந்தனத்தால் அதைப் பூசுவாருக்கு அல்லாமல் மலைக்கு என்ன பயன்? கடலிலிருந்து கிடைக்கும் முத்தால் அதை அணிபவர்க்கு அல்லாமல் கடலுக்கு என்ன பயன்? யாழிலிருந்து கிடைக்கும் இனிய இசை, அதைக் காதால் கேட்பவர்க்கு அல்லாமல் அந்தக் கருவிக்கு என்ன பயனைத் தரும்? அதுபோல் உன் மகளும் உரிய காலத்தில் தலைவனைச் சேர்தலே முறை. அவ்வாறின்றி அவளை உன்னோடு தக்கவைப்பதால் உனக்கென்ன பயன்?” என்று கூறி அவளை சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்பினர்.
ஆஹா.. என்னவொரு அற்புதமான வாழ்வியல் தத்துவம். என் மாமனார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஏதோ குறுகுறுத்தது. இதை.. எங்கோ கேட்டிருக்கிறேன்.. எங்கே..? ஆங்…. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னும் பாடலில் இந்த வரிகளைக் கவியரசர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ...
இப்படித் தொடர்கிறது அப்பாடல். கலித்தொகைப் பாடலைப் புரிந்துகொள்ள எனக்கொரு தமிழறிஞரின் உதவி தேவைப்பட்டது. ஆனால் கண்ணதாசனின் பாடலை எவர் உதவியுமின்றி அழகாக ரசித்து மகிழமுடிகிறதே..
மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.
புகழேந்திப் புலவர் பாடிய இந்த நளவெண்பா பாடலை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்? இந்த உவமையின் ஒரு பாதி கையாளப்பட்டத் திரைப்பாடல் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்கவேண்டுமே... ஆம், அதேதான்.
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...
கவியரசரின் இந்தப் பாடல் மூலம் நளவெண்பாவின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.
புலவர் செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல். போர் முடிந்து நெடுநாள் கழித்து வீடு திரும்பிய கணவர்களிடம் ஊடல் கொண்டு வாயிற்கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரின் ஊடல் தீர்க்க புலவர் பாடுவது….
வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ.
இந்த வரிகளின் நயத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வெளிப்படுத்திய திரைப்பாடல் வரிகள்…
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
கவிஞரை ஈர்த்த கலிங்கத்துப்பரணியின் மற்றுமொரு பாடல்,
கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினோ
கவிஞர் நமக்கு வழங்கும் எளிய வரிகள்….
ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது வழக்கம்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
- -- - இது திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பதிகம்
அன்றொருநாள் அவனுடைய பேரைக்கேட்டேன்
அடுத்தநாள் அவனிருக்கும் ஊரைக்கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன் - அவன்
என்னைத்தேடி வரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
- ---- இது பதிகத்தைப் பாமரர்க்குக் கவியரசர் கொண்டு சென்ற வ(ழி)ரி..
இலக்கியச் சான்றுகளை ஆங்காங்கே தொட்டுக்காட்டி “உள்ளே வாருங்கள், இன்னும் இன்னும் அனுபவிக்கலாம்” என்று ஈர்க்கிறார் தமிழின் சுவையறியத் துடிக்கும் உள்ளங்களை.
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
ஊர் உறங்கிவிட்டது, உலகம் உறங்கிவிட்டது. உரியவன் அருகில் இன்மையால் நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கிடக்கிறேனே என்ற பொருள்படும் குறுந்தொகைப்பாடலின் சாரத்தை எடுத்துக்கொண்டார் கவிஞர். தலைவியின் கூடவே நிலவும் உறங்காமல் விழித்திருப்பதாக கற்பனை கூட்டி எளிய வரிகளால் நமக்களிக்கிறார்.
பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை....
கண்ணதாசன் அவர்களின் மகன் காந்தி கண்ணதாசன் ஒருமுறை தந்தையாரிடம் சென்று, “நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன் அப்பா” என்றாராம். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழிலக்கியம் எல்லாவற்றையும் படிக்கவேண்டும். பிறகு அனுபவங்களுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்று தந்தை பதிலளித்தாராம். பாட்டு எழுதுவது வெகுசுலபம் என்பது போல் சொன்னாலும் தமிழிலக்கியத்தை நன்கு கற்றுணர்ந்திருக்கவேண்டும் என்ற அவரது வார்த்தையில் எவ்வளவு அழுத்தம்! கவியரசரின் பாடல்களில் பலவற்றுள் கம்பராமாயணத்தின் ஈர்ப்பிருப்பதைக் காணமுடியும்.
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.
இந்த வரிகள் கண்ணதாசனின் எண்ணத்தில்
நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா?
என்று அழகிய பாடலாய் விரியும்.
கண்ணில் தெரியும் பொருளினைக்
கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,
அதுநம் வசப்பட லாகாதோ?
என்னும் பாரதியின் வரிகள் கவிஞரின் கவிவண்ணத்தில் மிளிர்கிறது இப்படி!
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ?
என் சொந்தக் கருத்துக்களோடு இணையத்திலிருந்து பெறப்பட்ட பல தகவல்கள் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச் சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே. சங்கப் பாடல்களின் பொருளுணர்ந்து அவற்றுள் என்னால் சங்கமிக்க இயல்வதற்கும், நளவெண்பாவையும் கலிங்கத்துப் பரணியையும் கம்ப ராமாயணத்தையும் வாசித்து வாசித்து இன்புற்றுக் களிப்பதற்கும் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையை எளிய தமிழில் புதுக்கவிதை பாணியில் எழுதும் துணிவைப் பெற்றமைக்கும் முக்கியக் காரணம் இலக்கியம் சார்ந்த கவியரசரின் இனிய பாடல்களே என்றால் அது கிஞ்சித்தும் மிகையில்லை.
***************************************************************
(வல்லமை இணைய இதழில் நடைபெற்ற 'என் பார்வையில் கண்ணதாசன்' போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற என் கட்டுரை. இக்கட்டுரை குறித்த நடுவர் அவர்களின் கருத்து, இப்பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில்...)
20 July 2014
அசோகவனத்து ராமனாட்டம்
ஆதிகாலக் கனவுகளின் வண்ணங்களைக்
குழைத்தென் அன்பின் வார்ப்பில்
பிரத்தியேகமாய் வார்க்கப்பட்டவன் நீ!
மேனி போர்த்த வண்ணங்களில்
பிரதிபலித்துக்கிடக்குமென்
பிரேமைக்கும்
பேராரவாரப் பெரும்புயலென
உன்னுள் புகும் தருணமெதிர்பார்த்து
என்னிதழ்க்கடையில் குந்திக்கிடக்கும்
அமுதவீச்சுக்குமாய்
அந்தரங்கத் தனிமையில் காத்திருக்கிறாய்
அசோகவனத்து ராமனாட்டம்!
உன் உயிர்ப்பின் மந்திரத்தை
ஒளித்துவைத்த
கவிதையின் முகவரியைத் தொலைத்தலையும்
இப்பிச்சிக்காய் இன்னும் சில காலம்
காத்திரு…
வந்துவிடுவேன் என்றேனும் ஒருநாள்…
ஏதேனும் ஒரு சென்மத்தில்!
*******
(கல்கி வார இதழின் தலைமை துணையாசிரியர் திரு.அமிர்தம் சூர்யா அவர்கள் சென்ற மாதம் முகநூலில் மேலே உள்ள ஓவியத்தைக் கொடுத்து அதற்கொரு கவிதை எழுதும்படி ஒரு ஜாலி போட்டி வைத்திருந்தார். அவற்றுள் அவரது ரசனை சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கவிதைகளுள் என்னுடைய இந்தக் கவிதையும் ஒன்று என்பதில் எனக்கு மிகவும் மகிழ்வும் பெருமையும். அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.)
(படம்: நன்றி இணையம்)
8 July 2014
ஆசிரியர் செய்த பிழை - ஆஸ்திரேலிய காடுறை கதை 7
![]() |
| திரு. ஹென்றி லாசன் |
பில் என்று அழைக்கப்படும் வில்லியம்
ஸ்பென்சர், ஒரு கோடை நாளில் பள்ளிக்குப்
போகாமல் குளத்தில் நீச்சலடிக்கச் சென்றுவிட்டான்.
ஆசிரியர் அவன் பள்ளிக்கு வராததைப் பற்றி அவன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி
அதை வில்லியத்தின் தம்பியான ஜோ என்று அழைக்கப்படும் ஜோசப்பிடம்
அவன் வீட்டுக்குச் செல்லும்போது கொடுத்துச் சொன்னார்.
“ஜோசப், இதை இன்றிரவு உன் அப்பாவிடம்
கொடுக்கவேண்டும்.”
“சரி ஐயா.”
ஜோ பள்ளிவிட்டு வரும்வரை ஒரு சந்தில்
காத்திருந்த பில் அவன் வந்ததும் அவனுடன் இணைந்துகொண்டான்.
“நீ அப்பாவிடம் கொடுக்க ஒரு கடிதம் வைத்திருக்கிறாய் என்று நினைக்கிறேன்.”
“ஆமாம்.” ஜோ சொன்னான்.
“அதில்
என்ன இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?”
“ம்..தெரியும். நீ ஏன் இன்று பள்ளிக்கு
வரவில்லை, பில்?”
“அதை அப்பாவிடம்
கொடுக்குமளவுக்கு நீ ஒன்றும் மோசமானவன் இல்லைதானே, ஜோ?”
“நான்
கட்டாயம் கொடுக்கவேண்டும்.
கொடுப்பேன். நான் ஆசிரியரிடம் உறுதியளித்திருக்கிறேன்.”
“நீ கொடுக்காதது
ஒருநாளும் அவருக்குத் தெரியவராது.”
“இல்லை. அவர் தெரிந்துகொள்வார். அவர் நம் வீட்டுக்கு சனிக்கிழமை வருவார். மேலும் நாளை
என்னிடம் கேட்பார்.”
சற்று
நேர மௌனம்.
“இங்கே பார், ஜோ. அடிவாங்கிக்கொண்டு,
இன்றிரவு பட்டினி கிடக்க நான் விரும்பவில்லை. ஜானி
நோலெட்டுடன் போஸம் வேட்டையாட வருவதாய் உறுதியளித்திருக்கிறேன். அவன் அவனுடைய துப்பாக்கியை எனக்கு சுடத் தருவதாக சொல்லியிருக்கிறான்.
விரும்பினால் நீயும் என்னுடன் வரலாம். நான் அந்த
வாய்ப்பைத் தவறவிட விரும்பவில்லை. இல்லையானால்… முன்பு போல் நான்
மீண்டும் வீட்டை விட்டு ஓடிப்போய்விடுவேன்.”
பில் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டான். ஜோ குழப்பத்தோடு அமைதியாக வந்தான்.
பில் மறுபடியும்
முயன்றான். பயமுறுத்தியும்,
வாதிட்டும், கெஞ்சியும் பார்த்தான். ஆனாலும் ஜோ மிகவும் பிடிவாதமாக இருந்தான்.
“ஆசிரியர் என்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார், பில்!”
“ஜோ.. நான் உன்னைத் தர விடமாட்டேன்.”
ஜோ சங்கடத்தில்
ஆழ்ந்தான்.
“நான் உன்னைத் தரவிடமாட்டேன், ஜோ.”
சென்ற
வாரம் பில் தன்னிடம் எப்படி சண்டையிட்டான் என்பதை ஜோ நினைத்துப் பார்த்தான்.
“என்னால்
அந்தக் கடிதத்தை சுக்குநூறாகக் கிழிக்கமுடியும். என்னால் நூறு பொய்கள் சொல்லமுடியும்.
ஒரு டஜன் பிரம்படி கூட என்னால் வாங்கிக்கொள்ளமுடியும். ஜோ, என்னால் முடியும்.”
ஜோ என்ன
செய்வதென்று தெரியாமல் தவித்தான்.
அவனுடைய இதயம் வேகமாகத் துடித்தது. அவன் கண்களிலிருந்து
கண்ணீர் வழிந்தது.
“என்னால்
அதைவிடவும் அதிகமாக செய்யமுடியும்.
அது உனக்கும் தெரியும், ஜோ.” ஜோவுக்குத் தெரியும்.
அவர்கள்
அப்போது ஒரு பழைய சுரங்கநிலப்பகுதியைக் கடந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடைய பாதையை ஒட்டி
முப்பது அல்லது நாற்பது அடி ஆழ சுரங்கப்பள்ளமொன்று இருந்தது. ஏற்றங்கால் சட்டங்கள் உடைந்து புனல் வடிவில் சுரங்கப்பள்ளத்தின் உள்நோக்கி விழுந்துகிடந்தன.
பழைய மரச்சட்டங்கள் சில ஐந்தடி ஆழத்தில் பள்ளத்துள் தாறுமாறாக சிக்கிக்கிடந்தன.
ஜோ சட்டென்று
தன் சட்டைப்பைக்குள் கைவிட்டு கடிதத்தை எடுத்து அந்தப் பள்ளத்துள் வீசியெறிந்தான். அது படபடத்துப்போய் ஒரு
பழைய மரச்சட்டத்தின் மீது நிலைகொண்டுவிட்டது. பில் அதைப்பார்த்தான்.
எதுவும் சொல்லவில்லை. தொலைவில் அவர்களுடைய தந்தை
வேலைவிட்டு வருவதைப்பார்த்த இருவரும் அவசரமாக அகன்றனர்.
ஜோ மிகுந்த
கவலையில் ஆழ்ந்தான். பில் அவனைத் தேற்றி உற்சாகப்படுத்த முனைந்தான். ஆனாலும்
பலனில்லை. பில், தான் இனிமேல் ஒருபோதும்
பள்ளிக்குச் செல்லாமல் வெளியில் சுற்றமாட்டேன் என்றும் ஒருபோதும் சண்டைபோட மாட்டேன்
என்றும் திருடமாட்டேன், பொய்சொல்லமாட்டேன் என்றும் பலவாறாக
உறுதியளித்தான். ஆனால் ஜோ முதன்முறையாக,
தான் ஒரு நம்பிக்கைத் துரோகத்தை செய்துவிட்டதை
எண்ணி எண்ணி மருகினான். அவனால் அவ்வளவு எளிதில் சமாதானமடைய
இயலவில்லை.
பில்லுக்கு இரவில் விழிப்பு வந்து
பார்த்தபோது, ஜோ அவனுடைய படுக்கையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தான்.
“ஏன், என்ன விஷயம், ஜோ?”
“நான் இதுபோன்ற ஒரு மோசமான செயலை இதுவரை செய்ததே இல்லை. அந்தக் கடிதத்துடன் சேர்ந்து நானும் அந்தக் குழிக்குள் குதித்திருக்கவேண்டும்.
ஆசிரியர் என்னை மிகவும் நம்பியிருந்தார், பில். நாளை அவர் கேட்கும்போது நான் பொய்
சொல்லவேண்டும்.” விசும்பியபடியே ஜோ சொன்னான்.
“அப்படியானால்
உண்மையைச் சொல், ஜோ. சொல்லிவிட்டு அடி வாங்கிக்கொள். எல்லாம் சீக்கிரம் முடிந்துவிடும். இரண்டே இரண்டு பிரம்படிகள்!
பிறகு எல்லாம் முடிந்துவிடும்.”
“இல்லை, என்னால் முடியாது.
அவர் என்னை ஒருபோதும் இனி நம்பவே மாட்டார். நான்
இதுவரை பள்ளியில் பிரம்படி வாங்கியதே இல்லை, பில். அப்படி நான் அடிவாங்க நேர்ந்தால் அதன்பின் பள்ளிக்குப் போகவே மாட்டேன்.
நீ ஏன் வீட்டை விட்டு ஓடிப்போகிறாய்? விஷம விளையாட்டுகளில்
ஈடுபடுகிறாய்? திருடுகிறாய்? எங்கள் எல்லோருக்கும்
பிரச்சனை உண்டாக்குகிறாய்? அம்மா இதையெல்லாம் எப்படி சகித்துக்கொள்கிறார்கள்
என்றோ அப்பாவை இது எவ்வளவு வேதனைப்படுத்துகிறது என்றோ உனக்குத் தெரியாது. இன்று உன்னால் ஆசிரியர், அம்மா, அப்பா அனைவருக்கும் நான் துரோகமிழைத்துவிட்டேன்.
எல்லாம் உன்னால்தான்... நீ இப்படி நடக்கும் காரணத்தால்தான்.
நீ ஒரு சுயநலமி!” சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்ட
ஜோ அழுதபடியே உறங்கிப்போனான்.
பில் உறங்காமல்
யோசித்தபடியே விடியும்வரை விழித்திருந்தான். பிறகு சத்தமில்லாமல் எழுந்து உடைகளை
அணிந்துகொண்டு வீட்டை விட்டு எவரும் அறியாமல் வெளியே வந்தான். அவன் போஸம் வேட்டைக்குப் போவதாக நினைத்து, நாய் அவனைத்
தொடர்ந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறும்வரையிலாவது நாய் அமைதியாக
இருக்கவேண்டுமே என்று பில் நினைத்தான். அவன் அந்த சுரங்கப் பள்ளமிருந்த
இடத்துக்குப் போனான். மிகவும் எச்சரிக்கையாக மரச்சட்டங்களில்
காலை வைத்து உள்ளே இறங்கினான்.
கோடைக்கால அதிகாலையின் வெளிச்சத்தில், மங்கிய வெண்ணிறத்தில் தென்பட்ட அந்தக் கடிதத்தைக் குனிந்து கையிலெடுத்தான்.
அந்த
உளுத்துப்போன மரச்சட்டம் எவ்வித முன்னறிவிப்புமின்றி சட்டென முறிந்து உள்வாங்கியதில், அவன் பிடிநழுவிப் பள்ளத்தில் வீழ்ந்தான்.
வீட்டினர்
அவனை காலை ஒன்பது மணிவாக்கில்தான் கண்டுபிடித்தார்கள். பழைய சுரங்கப்பள்ளங்களைக்
கிளறித்தோண்டி ஆதாயம் தேடுபவன் ஒருவன் அந்தப்பக்கமாய் வர,
நாய் குரைத்து அவன் கவனத்தைக் கவர்ந்து பில்லின் இருப்பைக் காட்டியது.
பில்லை அவர்கள் மேலே கொண்டுவந்தபோது அவனுடைய வலக்கைக்குள் கடிதத்தை இறுகப்பிடித்து மறைத்திருந்தான். அவர்கள் அவனை வீட்டுக்குக்
கொண்டுசென்றார்கள். தந்தை மருத்துவரை அழைத்துவரச் சென்றார்.
பில் இயல்புநிலைக்கு வந்தபோது தாயிடம் சொன்னான், “அம்மா, நான் வீட்டை விட்டு ஓடிப்போகவில்லை. நான் தரையில் அமர்ந்திருந்த ஒரு போஸத்தைப் பிடிக்கத்தான் முயன்றேன் என்று அப்பாவிடம்
சொல்லுங்கள். ஜோ எங்கே? ஜோவை நான் பார்க்கவேண்டும்.
அம்மா நீங்கள் ஒருநிமிடம் வெளியே போய் ஜோவை அனுப்புங்கள்.”
“பில், நான் இங்குதான் இருக்கிறேன்.”
ஜோ பயத்தில் தொண்டை அடைக்கச் சொன்னான்.
“ஆசிரியர் வந்துவிட்டாரா?”
“இல்லை.”
“கொஞ்சம்
குனி, ஜோ.
நான் அந்த கடிதத்தை எடுக்கத்தான் போனேன். எல்லோரும் எழுவதற்கு முன்னால்
வீட்டுக்குத் திரும்பிவிட எண்ணியிருந்தேன். ஆனால் அந்தக் கட்டைகள் முறிந்ததால் உள்ளே
விழுந்துவிட்டேன். கடிதத்தை படுக்கைக்குப் பக்கமாக கீழே போட்டிருக்கிறேன். நீயாகப் பார்த்து எடுப்பது போல் எடுத்துக்கொள். நேற்றிரவு
அப்பாவிடம் அதைத் தர மறந்துவிட்டதாக சொல் அல்லது நீ அதைத் தரவிரும்பவில்லையென்று
சொல். அது பொய்யாகாது. ஆசிரியரிடம் நான்
மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக சொல். இனிமேல் எந்தக் கடிதமும்
கொடுத்தனுப்பவேண்டாமென்று சொல், பெண்களிடமிருந்து வரும் கடிதங்களைத்
தவிர. அவ்வளவுதான். அம்மா! என் போர்வைகளை அகற்றிவிடுங்கள். எனக்கு மூச்சு முட்டுகிறது.”
*********
(ஆஸ்திரேலியாவின் பிரபல கவிஞரும்
கதாசிரியருமான ஹென்றி லாசன் (1867-1922) எழுதிய ‘The Master’s Mistake’ என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம்)
Subscribe to:
Posts (Atom)











.jpg)