29 October 2020

பெரிய விடமே சேரும் பித்தர் முடியேறும்

 தோட்டத்துப் பிரதாபம் - 19




பெரியவிட மேசேரும் பித்தர்முடி யேறும்
அரியுண்ணு முப்புமே லாடும்-எரிகு ணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில் 
பாம்புமெலு மிச்சம் பழம்

இது கவி காளமேகப்புலவரின் சிலேடைப் பாடல். தேன்பொழியும் சோலைகளை உடைய திருமலைராயன் மலையில் பாம்பும் எலுமிச்சம்பழம் என்கிறார்.

பாம்பு – மிகுந்த விஷத்தை உடையதாயிருக்கும்; பித்தனாகிய சிவனின் முடிமேல் இருக்கும்; காற்றைப் புசிக்கும்; உடல் பருக்கும்; மேலெழுந்து படமெடுத்து ஆடும்; சினமுடையதாகும்.

எலுமிச்சம்பழம் – பெரியவர்களிடத்து மரியாதை நிமித்தம் கொடுக்கப்பட்டு கை சேரும்; பித்தர்கள் தலையில் தேய்க்கப்படும்; (ஊறுகாய்க்காக) அரியப்படும்; உப்பு அதன் மேல் தூவப்படும்; அதன் சாறு பட்டால் எரிச்சல் உண்டாகும்.

எவ்வளவு அழகான சிலேடைப்பாடல்! இரண்டுமே நம் தோட்டத்தில் உண்டு என்றாலும் இரண்டாவதைப் பற்றியதுதான் இன்றைய என் பிரதாபம்.

 

மெயர் எலுமிச்சைகள்

படத்தில் இருப்பவை எங்கள் தோட்டத்தின் முதல் ஈட்டு எலுமிச்சம்பழங்கள். பத்துப் பழங்களும் மொத்தமாய் இரண்டு கிலோ இருந்தன. படத்தில் ஒன்பதுதானே இருக்கிறது, இன்னொன்று எங்கே? என்று தேடாதீர்கள். முதல் பழம் சாம்பிள் பார்ப்பதற்காக முதலிலேயே பறித்தாகிவிட்டது. பழத்தின் அளவைப் பார்த்தவுடன் இதென்ன எலுமிச்சம்பழமா? ஆரஞ்சுப்பழமா? என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றும். தவறில்லை. ஏனெனில் இவை மெயர் எலுமிச்சை (Meyer lemon) வகையைச் சேர்ந்தவை. நார்த்தைக்கும் மேண்டரின் ஆரஞ்சுக்கும் (citron and mandarin) பிறந்த பிள்ளையாம். இதன் தாயகம் சீனா. புளிப்பும் இனிப்புமான இதன் சுவை சாதா எலுமிச்சையின் சுவையை விடவும் சற்று வித்தியாசமானது. ஊறுகாயை விடவும் பழரசத்துக்கு மிகவும் ஏற்றது. 

எலுமிச்சை மரம்

எலுமிச்சைதான் என்று உறுதி செய்தாலும் அடுத்த சந்தேகம் வரும், இவ்வளவு சின்ன மரத்தில் இவ்வளவு பெரிய சத்தான சாறு நிறைந்த பழங்கள் எப்படி? இரசாயன உரம் காரணமோ? இல்லவே இல்லை. என் தோட்டத்துக்கு அன்றும் இன்றும் என்றும் உரமென்றால் இயற்கை உரம் மட்டுமே. காய்கறிக்கழிவுகள், இரண்டு மாதங்களுக்கொரு முறை தொழு உரம், மாதமொரு முறை மீன் அமிலம் அவ்வளவுதான். ஒருவேளை பூச்சிகளே அண்டவில்லையோ? அதனால்தான் இவ்வளவு செழிப்பான காய்களோ என்று நினைப்பீர்கள். அதுவுமில்லை. சிட்ரஸ் மரங்களை அண்டாத பூச்சிகளே இல்லை. வழக்கமாய் சிட்ரஸ் வகைகளைத் தாக்கும் எல்லா பூச்சிகளும் எல்லா நோய்களும் எங்கள் தோட்டத்து எலுமிச்சை, ஆரஞ்சு மரங்களைத் தாக்கியிருக்கின்றன. ஆனால் அவை அத்தனையும் சமாளித்து, அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வந்திருக்கின்றன என்பதே அவற்றின்பால் எனக்கு அதீதமான பிரியத்தைக் கொடுக்கிறது.




 

மெயர் லெமன், வேலன்சியா ஆரஞ்சு, மாண்டரின் ஆரஞ்சு – இரண்டு வருட மரங்களாக மூன்றையும் வாங்கி ஒரே நேரத்தில்தான் தோட்டத்தில் நட்டுவைத்தோம். ஏனோ எலுமிச்சையும் மாண்டரினும் வேர் பிடித்துக்கொண்ட அளவுக்கு வேலன்சியா ஆரஞ்சு வேர் பிடிக்கவில்லை. வைத்த நாளிலிருந்து அப்படியே இருந்த அது கொஞ்சம் கொஞ்சமாய் இலைகளையும் உதிர்த்துவிட்டு குச்சியாய் நின்றது. 'இது அவ்வளவுதான்' என்றார் கணவர். எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றேன் நான். என் நம்பிக்கை வீண் போகவில்லை. நானே ஆச்சர்யப்படும் விதமாய் அடுத்த ஒரு மாதத்திலேயே துளிர் வைத்து தான் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபித்தது. அதற்குப் பிறகும் கொப்பும் கிளையுமாகத் தழைத்து வளரவில்லை என்றாலும் பசுமையாய்த் தன்னிருப்பைக் காட்டிக்கொண்டே இருந்தது. இதோ, இப்போது முதன்முறையாக கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கிறது.


ஆரஞ்சு பூக்கள்

காரணம் என்னவாக இருக்கும்? நான் அதன்மேல் வைத்த நம்பிக்கையா? சில வாரங்கள் முன்பு gall wasp முட்டையிட்டிருந்த கிளைகளை கவனித்து  வெட்டி எறிந்த அக்கறையா? ஃப்ரிட்ஜில் வைத்து, சமைக்க மறந்து, காலாவதியாகிப்போன கோழிக்கறியை குப்பையில் தூக்கிவீசாமல் இந்த ஆரஞ்சு மரத்துக்கடியில் குழிதோண்டி புதைத்த ரகசியமா? எப்படியோ, என் ஆரஞ்சு மரம் தன் வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்குப் பயணிக்கத் தயாராகிவிட்டது. பூத்திருக்கும் அத்தனையும் காயானால் நிச்சயமாய் கிளை தாங்காது, மரம் தாங்காது. எனினும் சோகையானாலும் சூல்கொண்ட மகளைப் பார்த்துப் பூரிக்கும் தாய்போல நானும் பூரித்து நிற்கிறேன். இனி போதுமான சவரட்சணைகள் செய்து அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

மாண்டரின் குறுமரம்

மாண்டரின் குள்ள வகை. இன்னும் காய்க்கத் துவங்கவில்லை என்றாலும் கிளைவிட்டு இலைவிட்டு செழிப்பாக இருக்கிறது. இந்த வருடம் அதுவும் பூத்திருக்கிறது என்பதே ஆனந்தம். தோட்டத்துக்குள் நுழைந்தாலே மூக்கைத் துளைக்கும் எலுமிச்சை, ஆரஞ்சு பூவாசம். தேனீக்களுக்கோ பெரும் கொண்டாட்டம். 

எலுமிச்சைப்பூவில் தேனீ



இந்த வருட மழை இன்னொரு கொண்டாட்டம். கடந்த மூன்று வருடங்களாக மழை இல்லாமல் காய்ந்து கிடந்த பூமிக்கு இவ்வருட மழை புத்துயிரூட்டியுள்ளது. தோட்டத்துச்செடிகளும் மரங்களும் உற்சாகத்தோடு துளிர்விட, உன்னை வளரவிடுவேனா பார் என்று படையெடுத்து வந்திறங்குகின்றன பற்பல பூச்சிகள். அவை என்னென்ன, அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன என்பது பற்றி அடுத்தடுத்தப் பதிவுகளில் பார்ப்போம். 


(பிரதாபங்கள் தொடரும்)

13 October 2020

வா வா வசந்தமே

தோட்டத்துப் பிரதாபம் - 18


Pic 1

Pic 2

Pic 3

Pic 4

Pic 5

Pic 6

Pic 7

Pic 8

Pic 9

Pic 10

Pic 11

Pic 12

Pic 13

Pic 14

Pic 15

Pic 16
 
Pic 17

Pic 18

Pic 19

Pic - 20

30 September 2020

புகைவண்டிப் பயணம் - சிறார் பாடல்

 புகைவண்டிப்பயணம்





புகைவண்டி தூரத்தில் வரக்கண்டேன்

நிலையத்தில் நின்றதும் ஏறிக்கொண்டேன்

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன்

சந்தோஷம் நெஞ்சில் நிறையக் கண்டேன்.

 

அசையும் பச்சைக்கொடி பார்த்தேன்

அனைத்தும் மெல்ல நகரக் கண்டேன்.

முன்னால் ரயிலும் விரையக் கண்டேன்

பின்னால் மரங்கள் மறையக் கண்டேன்.

 

வழியில் பச்சை வயல் பார்த்தேன்

வெள்ளைக் கொக்குகள் பல பார்த்தேன்

சோளக்கொல்லை பொம்மைகளும்

ஜோராய் நிற்கும் அழகு பார்த்தேன்

 

கோணல் பனைமர வரிசை கண்டேன்

குரங்குகள் தாவும் சோலை கண்டேன்

குறுக்கிடும் பாதையில் காத்திருக்கும்

கார் பஸ் வரிசையும் நான் பார்த்தேன்.

 

டாட்டா காட்டி ஓடிவரும்

குழந்தைகளுக்கு கை அசைத்தேன்.

அடடா அடடா என்பது போல்

ஆற்றைக்கடக்கும் ஒலி ரசித்தேன்.

 

ரயிலுக்குள் பலவும் விற்கக் கண்டேன்

ரசனையாய்ப் பாடும் பாடல் கேட்டேன்.

பலப்பல நிலையம் கடக்கக் கண்டேன்

பலகைப் பெயர்களைப் படித்து வந்தேன்

 

அம்மாச்சி ஊரும் வரக்கண்டேன்

மகிழ்ச்சியில் மனமும் ஆடக்கண்டேன்

குஷியுடனே குதித்திறங்கிக் கொண்டேன்

விசிலூதிய ரயிலுக்கு விடைகொடுத்தேன்.


(ஆகஸ்டு 2020 பூஞ்சிட்டு இதழில் வெளியானது)



பூஞ்சிட்டு – இது குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், நூல் அறிமுகம், பொது அறிவு, புதிர்கள், விளையாட்டு போன்ற பல விஷயங்களைக் கொண்ட பல்சுவை மாத இதழ். அனைவரும் வாசித்துப் பயன் பெறுக. 

22 September 2020

வசந்தமே வருகவே!

தோட்டத்துப் பிரதாபம் - 17

வசந்தமே வருகவே என வசந்தகாலத்தை வரவேற்று வாழ்த்திக் கொண்டிருக்கின்றன தோட்டம் முழுவதும் வண்ண வண்ணப் பூக்கள். 

பார்வைக்கு அழகாகவும் வசீகரமாகவும் ஆரஞ்சு மற்றும் பிங்க் வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் இப்பூக்களின் பெயர் Pigface flowers. பார்வைக்கு அழகாக இருக்கும் இப்பூக்களுக்கு பன்றிமுகப்பூ (Pigface flowers)  என்று ஏன் பெயரிடப்பட்டுள்ளது தெரியுமா? இதன் பழங்கள் பார்ப்பதற்கு பன்றி முகம் போல இருப்பதால்தான். பழங்கள் பழுத்தபின் அவற்றையும் படமெடுத்துப் பகிர்கிறேன். 


pigface flowers - pink

pigface flowers

pigface flower


பூத்துக் காய்த்து இப்பருவத்தின் முதல் விளைச்சலை தாராளமாய் வழங்கிக் கொண்டிருக்கும் snowpeas பூவும் காயும் கொடியும்.

snowpeas flowers

snowpeas

snowpeas


தளதளவென்று பூத்துக் குலுங்கி தோட்டம் முழுவதும் நறுமணத்தால் நிரப்பும் தளவம். குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்களுள் தளவம் எனப்படுவதும் தற்காலத்தில் பிச்சிப்பூ எனப்படுவதும் இந்த Jasminum polyanthum தானாம்.  

பிச்சிப்பூ


பிச்சிப்பூ


பிச்சிப்பூ


அவரைக்கு மட்டுமல்ல, முள்ளங்கிக்கும் பூ அழகு. முள்ளங்கி விளைச்சலில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவினாலும் பூக்களின் அழகு அதை மறக்கச் செய்துவிடுகிறது.  


முள்ளங்கிப் பூக்கள்


முள்ளங்கிப் பூக்கள்

சிவப்பு, வெள்ளை, இரண்டும் கலந்தவை என்று ஒரே செடியில் விதவிதமாய் மலர்ந்து மகிழ்விக்கும் சால்வியா மலர்கள்.

salvias

salvias

salvias


salvias


salvia

போன வசந்தகாலம் முதல் இப்போது வரை கடந்த ஒரு வருடமாக ஒரு நாள் கூட விடாமல் பூத்துக்கொண்டிருக்கும் கேலண்டுலா பூக்கள்.   

calendula

calendula

calendulas


வசந்தகாலத்தின் முதல் பூக்கள் 

snapdragon flower

Pink rose


white rose


களையிலும் கலையழகு காட்டும் குட்டிப்பூ 


(பிரதாபங்கள் தொடரும்)

17 August 2020

அம்மாச்சியும் மகிழம்பூக்களும்

அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதைதான் நான் முதலில் எழுதி வெளியான சிறுகதை. அதன்பிறகு நிறைய கதைகள் எழுதினாலும் முதல் கதை எழுதியபோதும் அது நிலாச்சாரல் இணையதளத்தில் வெளியானபோதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. என் சிறுகதைகளை நூல் வடிவில் காணவேண்டும் என்பது அம்மாவின் ஆசை. எனக்கு அப்படி ஏதும் தனிப்பட்ட ஆசை இல்லை என்றாலும் ஒருவேளை அம்மாவின் ஆசைப்படி நூல் வடிவாக்கினால் அதற்கு அம்மாச்சியும் மகிழம்பூக்களும் என்றுதான் தலைப்பிடவேண்டும் என்று மனத்துக்குள் முடிவுசெய்திருந்தேன். சிறுகதைகள் நூலாக்கம் பெறும் வாய்ப்பு கோதை பதிப்பகம் வாயிலாய்த் தேடிவந்தபோது, எதிர்பாராது கிடைத்த இந்த வாய்ப்பினைத் தவறவிட மனம் துணியவில்லை. அம்மாவின் ஆசையும் நிறைவேறிற்று. என்னுடைய ஆசையும் நிறைவேறிற்று. கூடவே அம்மாவுக்கு இந்நூலை சமர்ப்பணமும் செய்தாயிற்று. 



அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதையை ஒரு கவிதையாகத்தான் ஆரம்பித்தேன். நினைவும் புனைவுமாய் வரிகள் வளர்ந்து வளர்ந்து கதையாக உருமாறிவிட்டது. சிவப்பிக்கு உயிர் கொடுத்தவள் இப்போது உயிரோடு இருக்கமாட்டாள் எனினும் என் மனக்கண்ணில் இன்னமும் தண்ணீருக்கு மேலே தலை காட்டியபடி நான் சில காலமே அறிந்த அந்த ஊரின் சகதிக்குளத்தில் முங்கியிருக்கிறாள். அப்புவை வளர்த்த ஆறுமுகம் அச்சு அசல் என் பாட்டனார். குருகாணிக்கையில் வரும் அந்த ஆசிரியருக்கு வித்திட்டவர் அடிக்கடி எங்கள் வீட்டுவாசலில் நின்று உரிமையோடு அப்பாவை பெயர் சொல்லியழைத்த அப்பாவின் உடன் படித்த, ஏதோ காரணத்தால் பின்னாளில் மனம் பிறழ்ந்த நண்பர். அலமேலுவின் ஆசைக்குள்ளிருப்பது கிட்டத்தட்ட அதே மாதிரியான என் ஆத்தாவின் ஆசை. இந்த சிறுகதைகளுக்குள் ஏன் ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் நான் இருப்பேன், நீங்கள் இருப்பீர்கள், அவள் இருப்பாள், அவர் இருப்பாள், அவர்கள் இருப்பார்கள், அதுவும் இருக்கும். புள்ளிகளை சிறைப்படுத்தும் இழைக்கோலம் போல சில… புள்ளிகளின் தேவையற்ற பூக்கோலம் போல சில.. 

வாழ்வின் சிக்கல்களைப் பேசும் ஒவ்வொரு பாத்திரத்திலும் பொருந்தியும் விலகியும் எட்ட நின்றும், கிட்ட நின்றும் கடந்த பத்து வருடங்களாக நான் வாழ்ந்தெழுதிய இக்கதைகள் நிலாச்சாரல், தமிழ்மன்றம், வல்லமை, அதீதம், பதிவுகள், பிரதிலிபி என பல இணைய தளங்களில் அவ்வப்போது வெளியாகி பற்பல விமர்சனங்களைப் பெற்றுத்தந்து எழுத்தை சீர்படுத்தியவை. முக்கியமாக தமிழ்மன்றத்தை என்னுடைய சிலேட்டுப்பலகை என்பேன். எழுதியெழுதி அழித்தெழுதி எழுத்தைப் பழகியது அங்கேதான். தமிழ்மன்ற நட்புகளுக்கு இவ்வேளையில் நன்றியறிவித்து மகிழ்கிறேன். இத்தொகுப்பை மிகுந்த சிரத்தையுடன் அழகாக வடிவமைத்துள்ள ஷாஜஹான் சார் அவர்களுக்கும் வெளிக்கொணர்ந்துள்ள கோதை பதிப்பக உரிமையாளர் தோழி நான் ராஜாமகள் அவர்களுக்கும் என் உள்ளார்ந்த அன்பும் நன்றியும். 

புத்தகம் வேண்டுவோர் facebook-ல் இருந்தால் Naan Rajamagal அவர்களையும்,  ஃபேஸ்புக்கில் இல்லாதவர்கள் geethamathibooks@gmail.com என்ற மின்னஞ்சலில் என்னையும் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.