30 April 2012

மானம் பாத்த பொழப்பு

மானம் பாத்தப் பொழப்பும்
மலையேறிப் போச்சி.
என் மானம் காத்த ஒழவும்
மண்ணாப்போச்சி.
தானமா வந்த தண்ணியும்
திடுக்குனு நின்னுபோச்சி.

வறண்ட பூமி பாத்து
திரண்ட கண்ணீரப் பாத்தும்
இறங்கலையே அந்த ஆகாசமேகமும்.
இரங்கலையே எந்த அரசாளும்மனசும்.

வக்கத்த போக்கு பாத்து
நாம்பெத்த மக்களெல்லாம்
வெக்கமத்து என்னை வெட்டிவுட்டு
கக்கத்துப் பொட்டியோட காரேறிப் போயாச்சி.

கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.

சொல்லி அழவும் நாதியத்தவனா
ஒட்டுத்துணியும் ஒட்டுனவயிறுமா
இத்துப்போன ஏத்தக்காலோரம்
இடிஞ்சிபோயி உக்காந்திருக்கேன்.

மாடா உழைச்ச கழனியெல்லாம்
காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
என்னயக் காடுகொண்டுபோவ
வாடா காலான்னு வழியிலயே
காத்திருக்கேன்.


74 comments:

 1. அருமை, மிக அருமை கீதா! எந்த வரியைப் பாராட்டி எழுதுவது என்பது முதன்முறையாகப் புரியவில்லை. ஏனென்றால் அத்தனை வரிகளையுமே அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்! அழகான எதுகை மோனைகளுக்கிடையே வறண்ட நிலத்தில் அமர்ந்திருக்கும் உழவனின் மனசின் வலி தெரிகிறது! அந்தப் புகைப்படமும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மனதின் வெளிப்பாடு கண்டு மகிழ்கிறேன் மேடம். வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

   Delete
 2. உழவனின் வேதனை கவிதையின் கரு..அருமை..முடிவு யோசிக்க வைக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுமதி.

   Delete
 3. உழவும்,நிலமும், நிலையும் அனுபவப்பட்டவராகத் தோன்றவில்லை. இருந்தாலும் ஆங்கிலத்தில் சொல்லும் EMPATHY கவிதை முழுவதும் தமிழில் சிறக்கிறது. அசாத்தியத் திறமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா. அனுபவம் அறியவில்லை என்றாலும் அவலம் அறிந்தவள். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 4. வார்த்தைகள் ஒவ்வொன்றும் வரிகள் ஒவ்வொன்றும்
  பிரமிப்பை ஏற்படுத்திப் போகின்றன
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்கிட்டளிக்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

   Delete
 5. புகைச் சித்திரத்தை
  உயிரூட்டும் வர்களில் உழவனின்
  வாழ்க்கை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி செய்தாலி.

   Delete
 6. //மாடா உழைச்ச கழனியெல்லாம்
  காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
  என்னயக் காடுகொண்டுபோவ
  வாடா காலான்னு வழியிலயே
  காத்திருக்கேன்.//

  வறண்ட பூமியில் வாழ்கின்ற விவசாயி,அவனது

  திரண்ட கண்ணீரில் தெரிகின்ற துயரத்தைக்
  கவிதை வரிதோறும் வரைந்த ஓவிய மாக்க
  காட்டுவது அருமை!

  த ம 2
  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் அருமையானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஐயா.

   Delete
 7. வறண்ட மனமா இல்லை வறண்ட பூமியா மழைக்காக ஏங்குகிறது.வாழ்வியல் சொல்கிறது மானம் பார்த்த கவிதை.மழைக்காகக் கொட்டிய வார்த்தைகள்
  மழையாக அழகு !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஆழமான ரசிப்புக்கும் நன்றி ஹேமா.

   Delete
 8. கீதாக்கா இந்த கவிதையை படிக்கும் போது ஏனோ பேயத்தேவரோட கதாப்பாத்திரம் கன்ணுல வந்து போகுது.... மழைக்காக காத்திருப்பத்தா இல்லை எதுவும் விளையாத பொட்டகாட்டுல இன்னும் மிச்சமிருக்கும் நம்பிக்கையை இந்த மழையாவது காப்பாத்துமான்னு காத்திட்டு இருக்கிற இந்த புகைப்படமே மனதை கணக்க வைக்கிறது, உங்கள் கவிவரிகள் அதை தூக்கி சுமைக்க வைக்கிறது.... வாழ்த்துக்கள் அக்கா :) ஏனோ பல நேரங்களில் உங்கள் பதிவுகள் என் முகப்பில் தோன்றுவதே இல்லை பல பதிவுகளை தவறவிட்டுவிட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. கை கொடுங்கள் ரேவா. எனக்கும் பேயத்தேவரே கண்முன் தோன்றினார். அதுவும் சமீபத்தில் மீண்டும் அவரை வாசிக்கும் அனுபவம் கிட்டியது. இன்னும் மனம் விட்டகலவில்லை அவ்விதிகாசம். படம் பார்த்தபோது தோன்றிய கவிதைதான் இது. கருத்துக்கு நன்றி.

   \\ஏனோ பல நேரங்களில் உங்கள் பதிவுகள் என் முகப்பில் தோன்றுவதே இல்லை.\\

   உங்களுக்குமா? :(

   Delete
 9. விவசாயியின் வேதனையை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. அருமை. படத்தை வைத்து கவிதை எழுதினீர்களா..... இல்லை கவிதைக்கேற்ற படம் கிடைத்ததா..... அவ்வளவு பொருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. படம் என்னைப் பாதித்ததன் விளைவுதான் இக்கவிதை ஆதி. ஆனால் எழுதி முடிக்கும்வரை என் மனம் என்னிடத்தில் இல்லை. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆதி.

   Delete
 10. ஒரு விவசாயியின் வேதனை. அதனை பகிர்ந்துகொள்ளக்கூட நாதியற்றவர்களாகி இன்று இருக்கிறார்கள். விவசாயி என்று சொன்னால் யாரும் இன்று மதிப்பதில்லை.அவர்களை மிகக்கேவலமாக பார்க்கும் கொடுமை பல ஆபிஸ்களில் நானும் கண்டிருக்கிறேன். அவர்களை மதிக்காத நாடு உருப்படாது. மே தினத்தன்று அருமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் விவசாயிகளின் இன்றைய வேதனையான நிலைமையைப் பகிர்ந்துகொண்டதற்கும் பாராட்டுக்கும் நன்றி விச்சு.

   Delete
 11. ஓஓஓஓஓ அருமை கீதா அக்கா
  உழவனின் வேதனையை அழகு கவியில்
  கூறியுள்ளீர்கள். மொத்தத்தில் சூப்பர்
  அக்கா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி எஸ்தர்.

   Delete
 12. ஆஹா... எனக்கு முன் வந்தவர்கள் எல்லாம் பாராட்டியதை விட நான் புதிதாக என்ன சொல்லிப் பாராட்டுவது என்று புரியாமல் குழம்பி நிற்கிறேன் கீதா! கவிதையின் சரளமான வரிகளை ரசித்தாலும் அந்த ஏழை உழவனின் நிலை கண்டு மனதில் ‌தோன்றும் பரிதாப உணர்வு சற்றே வேதனையை உண்டு பண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. எத்தனை பேர் கருத்திட்டாலும் ஒவ்வொருவரின் கருத்துரையும் தனித்துவம் வாய்ந்தது அல்லவா? உங்கள் கருத்தில் அதை அழகாய் வெளிப்படுத்தியமை கண்டு மகிழ்கிறேன். நன்றி கணேஷ்.

   Delete
 13. விவசாயின் வேதனைகளை மழையின்றி வெடித்துப்பிளந்த வயல் போலக் காட்டியுள்ள கவிதை

  நல்ல படைப்பு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் நன்றி வை.கோ. சார்.

   Delete
 14. வரிக்கு வரி பாராட்டத் தோன்றுகிறது. உழவர்களின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கீங்க! அதுவும் கடைசி பாரா நெஞ்சை உலுக்கியது.....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி வெங்கட்.

   Delete
 15. அருமையான கவிதை.
  இறுதி வரிகள்
  "...மாடா உழைச்ச கழனியெல்லாம்
  காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
  என்னயக் காடுகொண்டுபோவ
  வாடா காலான்னு.."
  மனதை அழுத்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மனம் அழுத்தும் வரிகளைக் குறிப்பிட்டு சிலாகித்தமைக்கும் மனம் நிறைந்த நன்றி டாக்டர்.

   Delete
 16. பாடலும் அதற்குப் பொருத்தமான படமும் பாடலை நாட்டுப்புற தொனியில் சொன்ன பாங்கும் அதற்குள் பொதிந்திருக்கிற பொருளும் அருமை! வெகு அருமை!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் உற்சாகமூட்டும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி மணிமேகலா.

   Delete
 17. ஒவ்வொரு வரியும் அற்புதம்!அருமையான படைப்புக்கு நன்றி!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சேஷாத்ரி.

   Delete
 18. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 19. “கெக்கலிக்கிற புழுதிக்காடு பாத்தும்
  எக்களிக்கிற எந்திரவிவசாயம் பாத்தும்
  துக்கத்தால் தொண்ட விக்கித்துப் போச்சி.²

  காய்ந்து போன இடத்தைக் கவிதை வரிகளால்
  பசுமையாக்கக் காட்டியுள்ளீர்கள்.
  அருமைங்க கீதமஞ்சரி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி அருணா.

   Delete
 20. நிழற்படத்துக்கான கவிதையா?

  கவிதைக்கான நிழற்படமா?

  அருமை.

  ReplyDelete
  Replies
  1. நிழற்படம் கண்டு நெஞ்சிலாடிய துயரமே கவிதையாய். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவரே.

   Delete
 21. கவிதை படித்து பல நிமிடங்கள் கடந்தும் மனதை நெருடுகிறது விவசாயியின் குமுறல்..
  நல்ல கவிதை அக்கா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துரைக்கும் நன்றி ஆளுங்க.

   Delete
 22. இறுதியிரண்டு வரிகளில் கருத்துப்பிழையைக்காண்கிறேன்,

  இன்று காடுகள் அருகிவிட்டன. விளைநிலங்களெல்லாம் அறுக்கப்பட்டு வீடுகள் கட்ட‌ நிலங்களாக்கப்பட்டு விலை போகின்றன. விவசாயம் ஆருக்கு வேண்டும்? விவசாயிக்கு விளைத்த பயிறுக்குப் பணம் கொடுப்பாரில்லை. எனவே அவர்கள் தங்களை மாய்த்துக்கொள்கிறார். அப்படிச் செய்ய விரும்பார், அந்நிலங்களை வியாபாரிகளிடம் விற்று பட்டணங்களுக்குப் புலம் பெயர்ந்துவிட்டார்.

  இச்சிந்தனைகள்தான் அவ்விவசாயியின் மனதில் ஓடியிருக்கும். தான் இன்று பார்க்கும் இந்நிலம் இன்னும் சிறிது நாட்களில் கல் வீடுகளாக மாறிவிடும். என்ற நினைப்பே.

  விளை நிலங்கள் காடுகளாகப்போய்விட்டாலொன்றும் நட்டமில்லை. அதற்காக அந்த விவசாயி கண்ணீர் வடிக்கத்தேவையில்லை. ஆனால் அவை கான்கிரீட் காடுகளாகி விட்டால்? இறுதியில் அனைவரும் வாழ பயிற்றுக்கு எங்கே போவது?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி. தாங்கள் குறிப்பிட்ட இடத்தில் காடு என்பதை விளைபயிர் அல்லாத புல்பூண்டுகள் மண்டிக்கிடக்கும் இடத்தையே குறிப்பிட்டேன். பொருட்பிழை எனில் பொறுத்தருளவும்.

   Delete
 23. கருப்பு வெள்ளை படமும் கவிதையும் போட்டி போடுது என் மனதில்
  இரண்டுமே அருமை .

  {உங்க பதிவு என் டாஷ் போர்டில் வரவே மாட்டேங்குது கீதா )

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஏஞ்சலின். பலருடைய டாஷ்போர்டிலும் என் பதிவு வெளிப்படுவதில் சிக்கல் இருக்கிறதாம். என்ன செய்ய என்று தெரியலைப்பா.

   Delete
 24. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

   Delete
 25. படங்களும் கவிதையும் அருமை. பகிர்வுக்கு நன்றி தோழி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

   Delete
 26. மாடா உழைச்ச கழனியெல்லாம்
  காடாக்கிடக்கிறதக் காணச்சகியாம,
  என்னயக் காடுகொண்டுபோவ
  வாடா காலான்னு வழியிலயே
  காத்திருக்கேன்.

  கனத்துக் கலங்கவைக்கும் ஆக்கம்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

   Delete
 27. இன்றைய கிராமங்கள்..சீவனின்றி சிதிலமடையும் விவசாயி..கண் திறக்கவும் கை கொடுக்கவும் ஆளின்றி.. மிக அருமையாய் எழுதி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 28. வணக்கம் சகோதரி..
  தாமதமாகிவிட்டது..
  ஒரு அற்புதமான கவியைக் காண..

  ஒரு பட்டுக்கோட்டையாரை இங்கே காண்கிறேன்...

  உழவன் நாட்டுக்கு முதுகெலும்பு..
  இங்கே உழவன் முதுகெலும்பு
  உடைந்தே காணப்படுகிறான்...

  நாட்டுப்புற நடை அழகு சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. தாமதமானாலும் அழகானக் கருத்துரை தந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி மகேந்திரன். நானும் சில காரணங்களால் வலைப்பக்கம் தொடர்ந்து வர இயலவில்லை. நீங்கள் உள்ளிட்ட பலருடைய பதிவுகள் படிக்கவேண்டியுள்ளது.

   நாட்டுப்புற நடைக்கு நீங்கள்தான் என் குரு. அங்கு பழகியது இங்கு வெளிப்பட்டுள்ளது. நன்றி மகேந்திரன்.

   Delete
 29. அன்புள்ள...

  மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி நதி கரைமேவுகிறது. நமது பண்பாட்டின் அடிச்சுவடு மாறாத ஒரு நெடுவாழ்வியலின் கவிதையிது. அழகாக வருகிறது உங்களுக்கு நாட்டுப்புற மெட்டு. அருமை. எளிமை. எதார்த்தம். முதல் பாடலின் இறுதி இருவரிகள் இப்படியிருந்தால் நன்றாகயிருக்குமா? ஏனென்றால் தொடக்கம்முதல் அந்த ஓசை சரியாக வருகிறது.

  தானமா வந்த தண்ணியும்
  திடுக்குனு நின்னுபோச்சி.

  என்பதற்குப் பதில் தானமா வந்த தண்ணியும்- தரை காய போயாச்சு...
  அல்லது தானமாக வந்த தண்ணியும் தரை தட்டிப் போச்சு... அல்லது
  தானமா வந்த தண்ணி தவிக்க விட்டுப் போயாச்சு...அல்லது
  தானமா வந்த தண்ணியும் தரைவெடிக்க மறைஞ்சாச்சு...

  இது மனதில் பட்டது. அவ்வளவுதான். இசைகூட்டிப் பாடலாம் உங்கள் கவிதையை. நமது பண்பாட்டின் வேர்களை இப்படியாக எல்லாரும் கவனத்தில் கொள்ளும்போது அது தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ஆழந்தூன்றிக் கவனித்து இட்ட அருமையான விமர்சனத்துக்கும் மனமார்ந்த நன்றி ஹரணி சார். இந்தக் கவிதையை வேறொரு தளத்தில் இதே வரிகளுடன் பதிவிட்டு விட்டதால் இனி மாற்றுவது சரியாக இருக்காது என்று தோன்றுகிறது. எனினும் தங்கள் ஆலோசனையை மனத்தில் கொண்டு அடுத்தடுத்த முறைகளில் இன்னும் மெருகுடன் படைக்க முயல்கிறேன். வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி சார்.

   Delete
 30. வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துரைக்கும் நன்றி ஆளுங்க.

  ReplyDelete
 31. Anonymous6/5/12 03:05

  மிகச் சிறப்பாக எழுதிய நாட்டுப்புறக் கவிதை சகோதரி .வாழ்த்தகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி தோழி.

   Delete
 32. யதார்த்தம் உறைக்கும் இயல்பு நிலைக்கவிதை.இந்த நிலை மாறுமா?இல்லை விவசாயிகளின்----------------தொடருமா?

  ReplyDelete
  Replies
  1. கேள்விக்குறியே வாழ்க்கையாய். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமலன்.

   Delete
 33. உழவனின் அவல நிலையை வெளிப்படுத்திய கவிதை அற்புதம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி.

   Delete
 34. அருமையான வரிகள்.. உழவனின் நெஞ்சம் வாடுவதை அப்படியே கவிதையாய் தெளித்து விட்டீர்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் மிகவும் நன்றி சேகர்.

   Delete
 35. வெறும் பாராட்டுகளோடு கடந்து செல்ல முடியவில்லை
  வரி வரியாய் குடிதிருகிரீர்கள் விவசாயிகளின் உணர்வுகளை

  படிக்கும் போதே மனது கரைந்து விழி வழியாக வெளி வருகிறது ...........

  வார்த்தைகளில் கூட துயரத்தின் ரசம் ஒழுகுகிறது உண்மையில் சிறந்த கவிதான் கீதா நீங்கள் சமூகதின் ஓலங்களை படம்பிடித்து காட்டியிருகிரீர்கள்

  ReplyDelete
  Replies
  1. எத்தனை விளைநிலங்கள் வீணாய்ப் போகின்றன, வீடுகளாய் உருவெடுக்கின்றன, எத்தனை உழவர்களின் எதிர்காலம் இப்படி ஒன்றுமில்லாமல் போய்க்கிடக்கிறது. மனவேதனையை இப்படியேனும் வெளிப்படுத்த முடிகிறதே நம்மால்.

   வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துரைக்கும் நன்றி சரளா.

   Delete
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ஹூஸைனம்மா.

   Delete
 36. கவிதைதானேன்னு இருந்துட்டேன். (அவ்வளவு ஆர்வம் இல்லையென்பதால்) இன்று வந்து பார்த்தால், அட, அட... முதல் பின்னூட்டமிட்டிருக்கும் மனோ அக்காவின் வார்த்தைகளை ரிப்பீட்டுகிறேன். ரொம்ப அருமை கீதா.

  ReplyDelete
 37. simply explaining practical thing that happens to a farmer

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நிதர்சனம் சுட்டும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.