23 April 2012

இரவல் வண்ணச்சிறகுகள்



வான் தொட விழையும்
வன்மரங்களின் கிளைகளினூடே
வழிந்தொழுகும் வெய்யில் மழை
ஆங்காங்கே நனைக்குமொரு
அடர்வனந்தனிலே....

அடைக்கலமாயிருந்தன,
ஆயிரமாயிரம் பறவைகள்!

அன்பால் ஆக்கிரமித்திருந்த அவை
என்றுமே அடுத்தவர் நலம்நாடின.
அவர்தம் புகழ்பாடின.
அங்கே கரையலும், அலறலும், அகவலுமே
அங்கீகரிக்கப்பட்ட இன்சங்கீதமே.

பட்சிகளின் கலந்திசையால் ஈர்க்கப்பட்டு
இளைப்பாறிச் செல்லும் எண்ணத்துடன்
வனம் புகுந்தது ஒரு வண்ணப்பறவை!

அழகில் அது
அதிகபட்சத்தைக் கண்டிருந்தது.
அது பாடிய பாடலோ
இனிமையின் உச்சத்தைக் கொண்டிருந்தது.

வந்திறங்கிய பறவையின்
வசீகரம் கண்டு வாய் பிளந்தன,
பழைய பறவைகள்!
வசமிழந்து சொக்கி நின்ற
வனப்பறவைகள் கண்டு
சூழ்ச்சியிலிறங்கியது சுந்தரப்பறவை!

தன் கானம் ஒன்று மட்டுமே
கானகமெங்கும் எதிரொலிக்கும்வகையில்
கவின்மிகு யுத்தி செய்தது.


இறகுகளில் வழியும்
இறுமாப்பின் வண்ணங்களை
பிச்சைக்காசென இறைத்துவிட்டு
பிறிதோர் கானகம் புகுந்தது.

பட்சி பறந்து சென்ற பாதை பார்த்தே
பிரமித்து நின்ற பறவைகள் யாவும்,
சிந்தியிருந்த வண்ணங்களை எடுத்து
சிறகுகளில் பூசிக்கொண்டன.

அன்றிலிருந்து....
கானகத்தின் சொந்தப்பறவைகளுக்கு
தங்கள் கானம் மறந்துபோயிற்று.
எழுப்பிய சிறுவொலியும் 
எதிரொலியால் அடிபட்டுப்போனது.

சுயம் தொலைத்த சுவடுமறியாமல்
வானம் பார்த்து வாழத்தொடங்கின,
வசீகரப்பறவையின் மீள்வருகைக்காய்!

48 comments:

  1. சுயம் இழந்து திரியும் அவலம் குறித்த கவிதை
    அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ் மண வாக்கிட்டு அளிக்கும் ஊக்கத்துக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

      Delete
  2. சுயம் தொலைத்த சுவடுமறியாமல் வாழத் தொடங்கின... அருமையான வரிகள். சுயம் தொலைந்ததையே உணராமல் வாழுகி்ன்ற நிலைதானே நிதர்சனத்தில தெரிகிறது. உணர்வுகளைத் தட்டியெழுப்பியது கவிதை! (த.ம.2)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் நிதர்சனம் காட்டிய விமர்சனத்துக்கும் தமிழ் மண வாக்குப்பதிவிட்டு அளிக்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி கணேஷ்.

      Delete
  3. சுயம் தொலைத்த சுவடுமறியாமல்
    வானம் பார்த்து வாழத்தொடங்கின,
    வசீகரப்பறவையின் மீள்வருகைக்காய்!

    அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்திட்டப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி முனைவரே.

      Delete
  4. அன்பால் ஆக்கிரமித்திருந்த அவை
    என்றுமே அடுத்தவர் நலம்நாடின.
    அவர்தம் புகழ்பாடின.

    அழகான வசீகரிக்கும் வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் சிலாகிப்பான வரிகளுக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  5. சுயம் தொலைத்த சுவடுமறியாமல்
    வானம் பார்த்து வாழத்தொடங்கின,
    வசீகரப்பறவையின் மீள்வருகைக்காய்!

    சுயம் தொலைத்தால் தொந்தரவே மிஞ்சும் என்பதை அருமையாய் உரைத்த அழகுக்கவிதைக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கூடுதல் விமர்சனமும் பாராட்டும் மேலும் மகிழ்வளிக்கிறது. நன்றி மேடம்.

      Delete
  6. //சுயம் தொலைத்த சுவடுமறியாமல்
    வானம் பார்த்து வாழத்தொடங்கின,
    வசீகரப்பறவையின் மீள்வருகைக்காய்!//

    சுயம் தொலைத்தால் இழப்பது எத்தனை எத்தனை.... கவிதை மூலம் சொல்லி இருப்பது அழகு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகானப் புரிதலுக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  7. அழகான கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்கிறேன். மிகவும் நன்றி வை.கோ. சார்.

      Delete
  8. Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி சார்.

      Delete
  9. சுயம் தொலைத்தது பறவைகள் மட்டுமே சுயம் தொலைக்காத கவிதைகள் இட்டுமே நயம் பட உரைத்தீர் நன்று! சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் தாலாட்டும் தமிழும் கண்டு மிக்க மகிழ்வோடு நன்றி கூறுகிறேன் ஐயா.

      Delete
  10. கான மயிலாடக் கண்டிருந்த ......என்னும் பாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான ஒப்பீடு. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete
  11. சிறந்த வரிகள் ... படமே பாதி கவிதையாகிறது ..
    செம கலக்கல் .. புரிந்து உணர்ந்து ரசித்தேன் .. என் நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்து சிலாகிப்பதற்கும் மிகவும் நன்றி அரசன்.

      Delete
  12. இறகுகளில் வழியும்
    இறுமாப்பின் வண்ணங்களை
    பிச்சைக்காசென இறைத்துவிட்டு
    பிறிதோர் கானகம் புகுந்தது.

    பட்சி பறந்து சென்ற பாதை பார்த்தே
    பிரமித்து நின்ற பறவைகள் யாவும்,
    சிந்தியிருந்த வண்ணங்களை எடுத்து
    சிறகுகளில் பூசிக்கொண்டன.

    அருமையான வண்ணங்கள் கலந்த கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி அருணா.

      Delete
  13. சுயம் தொலைத்த சுவடுமறியாமல்
    வானம் பார்த்து வாழத்தொடங்கின,
    வசீகரப்பறவையின் மீள்வருகைக்காய்!
    >>>
    நம்பிக்கை கொண்டு வாழும் அஜ்ஜீவனின் நம்பிக்கை கைக்கூட பிரர்த்திக்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கும் விதமும் ரசிக்கவைக்கிறது. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி ராஜி.

      Delete
  14. வணக்கம் சகோதரி...
    எவ்வளவு இயல்பான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட
    கவின்மிகு கவிதை...

    " சுயம் இங்கு தொலைத்தால்
    சவமிங்கு நீயடா "
    என உரைத்து நிற்கும் வரிகள்
    நெஞ்சில் துளையிட்டு நின்றுகொண்டது....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான விமர்சனப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி மகேந்திரன்.

      Delete
  15. வசீகரப் பறவையைக் கண்டு காப்பியடித்துச் சுயத்தைத் தொலைத்த பறவைகள் போல தமிழர்களாகிய நாம், ஆங்கில மோகங் கொண்டு சொந்த அடையாளங்களைத் துறந்து வெள்ளைக்காரனாகவும் ஆக முடியாமல், தமிழனாகவும் இல்லாமல் இரண்டுங் கெட்டான் ஆகிக் கொண்டிருக்கிறோம்.

    நல்லதொரு கருத்துச் சொல்லும் கவிதைக்குப் பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பார்வையால் கவிதை மேலும் அழகுபெறுகிறது அக்கா. வருகைக்கும் ஆழமான விமர்சனத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  16. சுயம் கலைந்து ஆனால் சுயத்தை மறக்காத ஈழத்தவர்களோடு கவிதையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன் கீதா.....வலிக்கிறது சிறகுகள்.வண்ணங்கள் கலங்கி ஆனால் இன்னும் கலையாமல் !

    ReplyDelete
    Replies
    1. எதிலும் அழகானப் புரிதல் உங்களுக்கு. வருகைக்கும் உளப்பகிர்வுக்கும் நன்றி ஹேமா.

      Delete
  17. தன்னையறியாது வாழ்தல் வீழ்ச்சியைத் தரும் என்பதை அழகாக படைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்திட்டப் பின்னூட்டத்துக்கும் நன்றி சத்ரியன்.

      Delete
  18. //அன்றிலிருந்து....
    கானகத்தின் சொந்தப்பறவைகளுக்கு
    தங்கள் கானம் மறந்துபோயிற்று.
    எழுப்பிய சிறுவொலியும்
    எதிரொலியால் அடிபட்டுப்போனது.

    சுயம் தொலைத்த சுவடுமறியாமல்
    வானம் பார்த்து வாழத்தொடங்கின,
    வசீகரப்பறவையின் மீள்வருகைக்காய்!//

    வரிகள் உணர்ந்து புரியபட்டுபோது
    உண்மையில் சுயம் உணர்ந்தேன் தோழி

    சொல்லாடல் ,பொருள் ,மொழியின் மென்மை நிகர் சொல்ல வார்த்தை இல்லை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் உற்சாகமூட்டும் அழகிய பின்னூட்டமும் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி செய்தாலி.

      Delete
  19. Anonymous24/4/12 17:10

    தன் திறமையறியாது பிறர் துதி பாடும் பிறவிகள் பற்றி குறித்தீர்கள் சகோதரி. நல்ல சிலேடைக் கருத்து .வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தோழி.

      Delete
  20. சுயம் தொலைத்த சுவடுமறியாமல்
    வானம் பார்த்து வாழத்தொடங்கின,
    வசீகரப்பறவையின் மீள்வருகைக்காய்!//அழகாக படைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்திட்டப்பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி மாலதி.

      Delete
  21. அருமையான கவிதை...... சுயத்தை இழந்து விட்டு தானே இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி ஆதி.

      Delete
  22. அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிகவும் நன்றி.

      Delete
  23. நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.அரிதாரங்களே நிறைய ஆக்ரமித்துள்ள சமூகத்தில் கல்ர் காட்டும் பறவைகள் இங்கு நிறையவே.பறவைகளை இங்கு ஒரு உருவகமாவே பார்க்க முடிகிறது.

    ReplyDelete
  24. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  25. தங்கள் திறமைகளை மறந்து பிறரைத் தங்கள் பிதாமகராக ஏற்பவர்களைச் சாடும் கவிதை!!
    நன்று!!
    வாழ்த்துகள் அக்கா!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.