18 April 2013

வெறுமையின் சில துளிகள்

 

 

சாத்தியக்கூறுகள் ஏதுமற்று
 சட்டென்று  வெளியேகிய சமரசங்களின் சாடலால்
திகைப்புற்றுக் கிடக்கிறது மனம்.

ஆடல் முடிந்த அரங்கு போல...
அறுப்பு முடிந்த வயல்களைப்போல...
பறவை பிரிந்த கூடு போல...
திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...
இன்னபிற வெற்றுக்களங்களையுமொத்து
வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!

சித்திரை மாத வெயிலது  உச்சிப்பொழுதுகளில்
வேட்கை மிகுதியோடு தன் வறண்ட நாவை
புழுதி பறக்கும் தெருக்களில் துழாவித் துழாவி
சொச்சமிருக்கும்  ஈரத்தையுறிஞ்சியும்
தன் தாகந்தணியாது திரிவதைப்போல்
நா நீட்டியபடியே அலைகிறது வெறுமை.

இடி கொணரும் கோடைமழையென
எதிர்பாராது அணைத்தூறும் சில
அன்னியோன்னியத் தருணங்களின் தயவால்
வெறுமையின் வேர்முடிச்சுகளினின்று
மெல்லக் கிளைக்கலாம்
வாழ்வின் சுவாரசியத் துளிர்கள்.

அல்லது வெறுமனே திரிந்திருக்கலாம்
வெட்டவெளியில் சில சுவாசத்துளிகள். 

15 April 2013

தனித்து விடப்பட்ட நட்பொன்று....

 
 
காரணம் சொல்லப்படாமல்
கழற்றிவிடப்படும் நட்பு பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு அகோரவிபத்துக்கொப்பான
அதிரடிப் பின்விளைவுகளைத்தாங்கி,
அகாலமரணமடைந்தவர்களின்
ஆவியைப் போன்றே
அலையத்தொடங்கிவிடுகிறது அது.

திருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தைபோல
அழுது திரிந்துகொண்டிருந்த அதற்கு,
அப்படி அந்நியப்படுத்தப்பட்டதற்கான காரணம்
எதுவும் அறிவிக்கப்படவில்லை,
அந்தர்தியானமான நட்பின் தரப்பிலிருந்து
யாதொரு கருணையும் காட்டப்படவில்லை.

அதன் பழைய நண்பர்கள் என அறியப்பட்டவர்கள்
தற்போது புதிய நண்பர்களாய்
இன்னொரு வட்டத்துக்குள் இணைந்திருக்கலாம்.

பத்மவியூகத்தைப் போன்றே நட்பின் வியூகங்களும்
நுழைதற்கு வெகு எளிது.
 அவ்வியூகமுடைத்து வெளியேறுவதென்பது
அசாதாரண நிகழ்வென்று அறிந்தபோதும்
அவ்வித்தை அவர்களுக்கு கைவரப்பெற்றிருப்பதால்
 இன்னும்பலவற்றில்
இணைந்துவெளியேறக்கூடும்.

பழகிய நட்புகளையிழந்து
பாழ்வெளியில் தனித்துவிடப்பட்ட நிலையில்
தன்னைத்தானே நொந்துகொண்ட நட்பு,
கொஞ்சங்கொஞ்சமாய் சுயமுணர்ந்துகொண்டது.

இப்போதெல்லாம்…….
நேர்ந்துவிடப்பட்ட கிடாவினைப்போன்று
இலேசான மமதையுடன்
இலக்கின்றி இருப்பின்றி அலைவதிலேயே
இன்புறத் தொடங்கிவிட்டது அது!
******************************
(பி.கு. இது ஒரு மீள்பதிவு.) 

13 April 2013

கலக்கப்போறது ஆரு?


 
 

(முன்குறிப்பு: இது என்னுடைய முதல் நகைச்சுவை முயற்சி. உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று கேட்கும் நண்பர்கள் இந்தமுறை மட்டும் மன்னித்துப் பொறுத்தருளவும். முக்கியமாய் கொங்குத்தமிழ் அன்பர்கள்! :D) 

அல்லாருக்கும் வணக்கமுங்க. இன்னிக்கு என்ற ஊட்டுல ஒரு விசேசமுங்க. அது என்னதுன்னு நீங்க ஓசிக்கங்காட்டியும் நானே சொல்லிப்போடறேனுங்க. என்ற மாமனுக்கும் எனக்கும் கண்ணாலமாயி முழுசா ஒரு வருசம் ஓடியேப் போச்சுங்க. எங்க போச்சி, ஏன் போச்சின்னு எல்லாம் கேக்கப்படாதுங்க. அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வந்துடுங்க. அதென்னது நல்ல கோவம், கெட்ட கோவமுன்னு அதுக்கும் அகராதி கேக்கப்படாதுங்க. சமாச்சாரத்தக் கேட்டுப்போட்டு செரி, செரின்னு தலையாட்டிப்போட்டுப் போவோணும், என்ற மாமனாட்டமா.

செரியம்மிணி, உன்ற ஊட்டு சமாச்சாரத்த உன்ற ஊட்டோட வச்சிக்காம சபையில என்னத்துக்கு சத்தம்போட்டு சொல்லவந்தேன்னு கேப்பீக. என்னது கேக்கமாட்டீங்களா? அட, கேப்பீகன்னு சொல்லுறேனில்லகேட்டுப்போடுங்க. என்ற வெசனத்தை உங்களவிட்டா வேற ஆருட்ட போய் சொல்லமுடியும்?

என்ற மாமனுக்கு எம்மேல நெம்ப இஸ்டமுங்க. என்ற கையால எது குடுத்தாலும் இனிக்குதும்பாருங்கஎன்னது? பாவக்காப் பொரியலா? அதையுந்தேன் இனிக்குதுன்னு சொல்லிப்போட்டாருங்க. இத்தனைக்கும் பலநா பதமா சோறு வடிச்சதில்லீங். சோறு கொழைஞ்சிபோனா, கூழா நெனைச்சிக் குடிச்சிபோட்டு கம்முனு போயிடுவாருங்க. என்ற மாமனுக்கு எம்மேல எம்புட்டு இஸ்டமுன்னு இப்பவாச்சும் தெரிஞ்சிருப்பீகளே..

இம்புட்டு ஆச வச்சிருக்கிற மாமனுக்கு நெசமாவே என்னமாச்சும் இனிப்பு பண்ணித் திங்கக் குடுக்கோணும்னு ஆசைங்க எனக்கு. இன்னிக்கு கண்ணால நாளா வேறப் போயிட்டுதுங்களா? மளார்னு சோலிய முடிச்சிப்போட்டு பொழுதோட வந்துடுறேங்கண்ணு, பொறவு ஒட்டுக்கா சினிமா பாக்கப்போவலாம்னு சொல்லிப்போட்டு என்ற மாமன் களத்துமேட்டுக்கு போயிருக்காருங்க. 

அவரு வாரதுக்குள்ள எதாச்சி புதுசா பலகாரம் பண்ணிப்போட்டு மாமனை அசத்திப்போடோணும்னு அரக்கப்பரக்க, அப்பத்தாகிட்ட போனு போட்டுக் கேட்டா, ஒப்புட்டு, ஒறப்படை, புக்கை, பணியாரமுன்னு எல்லாம் பழைய பலகாரமா சொல்லுதுங்க. அதுல பாருங்க, பணியாரங்கவும் குபுக்குனு சிரிச்சிப்போட்டேனுங்க 

குண்டப்பன் குழியில வுழுந்தானாம், எழுந்தானாம், அல்லார் வாயிலயும் வுழுந்தானாம் அவன் எவன்னு அப்பத்தா போட்ட விடுகதை அப்பத்தானா நாவகத்துக்கு வரோணும்? அப்பத்தாவுக்கு பொசுக்குனு கோவம் வந்து விசுக்குனு போனை வச்சிப்போட்டுது. அட, கெரவத்தேன்னு அத வுட்டுப்போட்டு அடுத்தத ஓசிச்சேனுங்க.

 நம்ம மெத்தவூட்டக்கா இல்ல, மெத்தவூட்டக்கா…. நல்லா படிச்சவுக, பதவிசானவுக, பாசக்காரவுக. அவிக நான் கேக்கு பண்ணிப்போடுறதுல கில்லாடியாக்கும்னு சொல்லிப்போட்டது நாவகத்துக்கு வந்துச்சி. ஒருக்கா கிறிஸ்மஸ் அப்போ அந்தக்கா குடுத்த கேக்கை என்ற மாமன் ஒட்டுக்கா தின்னதும் நாவகத்துக்கு வந்திடுச்சிங்க.

 செரி மாமனுக்குப் புடிச்ச  கேக்கையே இன்னிக்குப்  பண்ணிப்போடலாம்னு மெத்தவூட்டக்காட்ட வழிமொறயக் கேட்டேனுங்க. அதுக்கென்ன கண்ணு, சுளுவா செஞ்சிபோடலாமுன்னு சொல்லிப்போட்டு என்ற வயித்துல பாலை வார்த்தாக.

 நம்ம நேரம் கேட்ட நேரமாப் போச்சுதுன்னா, முந்திப் போற சனியனையும் முக்குல நிக்கச் சொல்லி வழித்தொணைக்கி அழைக்கச் சொல்லுமாம்.

அப்பிடித்தாங்க, மெத்தவூட்டக்கா விரிச்ச வலையில எண்ணெயில வுழுந்த பணியாரமாட்டம் நானும் தொபுக்கடீர்னு வுழுந்திட்டேனுங்க. சாமானெல்லாம் வாங்கிப்போட்ட பொறவு, கண்ணு எனக்கொரு அவசர சோலி வந்துபோட்டுதுன்னு சொல்லிப்போட்டு, அல்லாத்தையும் காயிதத்துல எழுதிக் குடுத்துபோட்டு, ஒத்தாசைக்கில்லாம, ஒறம்பரயப் பாக்கோணும்னு ஊருக்குப் போயிட்டாக.

 நானும் காலைல புடிச்சி காயிதத்தையே மொறச்சி மொறச்சி பாத்துட்டு நிக்கிறேனாக்கும். பொறவு என்ன பண்ண? நீங்களே படிச்சி ஒரு வழி சொல்லிப்போட்டுப் போங்க. 

எடுத்ததுமே கோளாறுதேன் 

1.   முதலில் அவனை 200 டிகிரிக்கு சூடு செய்யவும். 

எவனைன்னு சொல்லிப்போடணுமல்லோ 

2.   இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
 
பாத்திரமுன்னா போசிதேன்னு தெரியும். எப்பிடியா? மெத்தவூட்டக்கா அப்பிடித்தானே சொல்லுவாக. செரின்னு முட்டைய ஒடைச்சி போசியில ஊத்திப்போட்டேன்.

3.   பீட்டரின் உதவியால் நன்றாக நுரைக்கக் கலக்கவும். 

அடுத்தவடியா மெத்தவூட்டக்காவோட மச்சானை நான் எங்கேனு போய்த்தேடுவேன்? அவரு என்னத்துக்கா? அவரு பேருதானுங்களே பீட்டரு. முட்டையைக் கலக்குறதுக்கும் ஒரு தனித்தெறமை வேணுமாக்கும். அதான் அந்தக்கா ஊட்டு கேக்கு மெத்து மெத்துன்னு பஞ்சாட்டமா இருக்கு.

4.   அப்புறம் பட்டரையும் சேர்த்துக்கொள்ளவும். 

அடக்கெரகமேபீட்டரோட பட்டரையும் சேக்கணுமாமேநான் எந்தப் பட்டரைக் கண்டேன்எனக்குத் தெரிஞ்சதெல்லாம் திருவிளையாடல் படத்துல வார பாணபட்டரு மட்டுந்தானுங்க. அவரையும் எங்கேனு தேடிப்போவேனுங்க?

5.   சுகரை இப்போது சேர்க்கவும். 

ஆருங்க? அந்த பாகவதம் சொன்ன சுகருங்களா? அல்லாத்துக்கும் முன்னால அவன்னு ஒருத்தனை சொல்லிப்போட்டாங்களேஅவனாருன்னு தெரியலீங்க. அவனையும் கண்டுபிடிக்கோணும். ஒரே ஒளப்பலாப் போச்சுதுங்க 

போச்சாது போன்னு நானே நொரைக்கக் கலக்கலாம்னு கலக்குனா, நொரையே வாரலங்க. கலக்கோ கலக்குன்னு கலக்குன வெசையில போசி கவுந்து முட்டையெல்லாம் விசிறி வூடே கந்தர கோலமாயிப்போச்சிதுங்க. அதுக்குதேன் மெத்தவூட்டக்கா பீட்டரை ஒத்தாசைக்கு வச்சிக்கிட்டு முட்டையைக் கலக்குன்னு சொல்லிப்போட்டுருக்கு. அச்சாணியமாப் போச்சேஇது ஆவுற காரியமில்லன்னு கேக்கு ஆசைய அத்துவுட்டுட்டேனுங்க. 

பொழுதும் சாஞ்சிபோச்சி. என்ற மாமன் வார நேரமாயிப் போட்டுதுங்க. கேக்கு பண்ணிப்போடோணும்னு ஆசைப்பட்டு அல்லாம் கோக்குமாக்காயிப் போச்சுது 

என்ற மேலெல்லாம் முட்ட அபிசேகமாயிப்போச்சுதல்லா? மறுக்கா தலைக்கு வாத்துட்டுப் போயிஅன்னாடம் வடிக்கிற சோத்தையாச்சும் ஒழுங்கா வடிச்சிப்போடோணும் ரவைக்குசரி, நான் வாரேனுங்கஇனி ஆராச்சும் கேக்கு பண்ணிப்போடச் சொல்லிக்குடுத்தா…. என்ன பண்ணோணும்? 

அல்லாத்தையும் கலக்குறதுக்கு ஆராரு வேணுமுன்னு முந்தியே கேட்டுப்போடோணும்சொல்லிப்போட்டேன். ஆமா...
********************************************************************************
படம் உதவி: இணையம்

10 April 2013

பெரிய மனுஷியாகிவிட்டாளாம்...


 
பதினெட்டு வயது பூர்த்தியாகிவிட்டதாம்!
பெரிதாய்த்தான் அலட்டிக்கொள்கிறாள்!
 
நேற்றைய நமைச்சல்கள் காற்றோடு போயினவாம்!
இன்றுமுதல் அவள் வகுத்த சட்டங்களே
ஏகமனதாய் அமலாக்கம் பெறுகின்றனவாம்.
 
சட்டப்படி பெரியமனுஷியாகிவிட்டாளாம்,
இட்டப்படி எதையும் செய்யலாமாம்,
கட்டப்பட்டு கட்டுக்குள் கிடக்கவேண்டாமாம்,
திட்டமிட்ட வாழ்க்கை தினப்படி அவளுடையதாம்!
 
அறைக்குள் வர அன்னைக்கும் அனுமதியில்லையாம்,
குறைகள் சொல்ல ஒருவருக்கும் உரிமையில்லையாம்.
நியதி மீறினால் நீதிமன்றம் செல்லுவாளாம்,
தனிமனித உரிமை பறிக்கப்படுவதாய் முறையிடுவாளாம்!
 
எதிர்பார்த்திருக்கவில்லை அவளிடம்!
அதிர்ந்து நின்றேன் நான்!
 
என்னவென்று சொல்வது இதை?
என் வளர்ப்பில் எங்கோ குறை…
கர்மவினை
கலாச்சாரச் சீர்கேடு
காலத்தின் கோலம்
ஊழியின் கூத்து
தலையெழுத்து
பூர்வஜென்ம பலாபலன்
 
அரற்றும் மனத்தை அமைதிப்படுத்த
இத்தனைப் பெயர்களில் ஏதொன்றும் அமையாதா என்ன?
ஆதங்கத்துடன் அலசிய வேளை,
அசரீரீ போல் அழைக்கிறாள்,
 
கலங்கிவிட்டாயா அன்னையே?
கல்லாக்கிக் கொள் மனத்தை,
அத்தனை எளிதில் விட்டுவிடமாட்டேன் உன்னை,
வாழ்நாள் முழுக்க வழிநடத்தவேண்டும் என்னை!
 
முரண் புரியாமல் முழித்தவளிடம்
இன்று ஏப்ரல் ஒன்று என்று
வெடித்துச் சிரிக்கிறாள் நிலா!
 
அதிர்ச்சி மீளாது அமர்ந்திருக்கிறேன் நான்! 

29 March 2013

ஒற்றை வார்த்தையில் ஊசலாடுகிறதோர் கவிதை

 
 

 
எத்தனை முறை யோசித்தாலும்
எண்ணத்துக்கு அகப்படாமல்
ஏய்த்து விளையாடுகிறது ஏதோவொன்று! 

கணகாலத்துக்குப் பின் கருவான
அந்தக் கவிதையின் ஓட்டத்துக்கு
அநேகமாய் ஈடுகொடுத்துவிட்டன
அத்தனை வார்த்தைகளும்,
அந்த ஒன்றைத் தவிர! 

மூளைக்குள் முரண்டுபிடிக்கும் அவ்வார்த்தையைக்
கட்டிக்கொணர எத்தனைமுறை ஏவினாலும்
வெறுமனே திரும்பிவருகிறது நினைவுபூமராங்! 
அவ்வார்த்தைக்கு நிகராய் வேறொன்றை
இட்டு நிரப்பவும் மனமொப்பவில்லை.
 
முற்றியும் முற்றாமல்
மூளியெனக் கிடக்கும் அக்கவிதை,
ஒரு முதிர்கன்னியின் மனவழுத்தத்தோடு
ஏளனமும் ஏக்கமுமாய்
என்னைப் பார்க்கும் பார்வையில்
குறுகுறுத்துக் கவிழ்கிறது என் கவியுள்ளம்! 

அஜீரணக்காரனின் நெஞ்செரிச்சல் போல்
அடிக்கடி நினைவுக்கு வந்தும் வராமலும்
உள்ளெரிக்கும் அந்த வார்த்தை என்னவென்று
உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள். 

குறைந்தபட்சம் உங்கள் கவிதையொன்றிலாவது
அதைப் பயன்படுத்துவதன்மூலம்
என் கவனத்துக்குக் கொண்டுவருவீராயின்
மழலையைப் பிரிந்த தாயைப் போல
மன்றாடி நிற்கும் கவிதையிடம் சேர்ப்பித்து
நன்றியோடு நான் ஆசுவாசமடைவேன்!

 

6 February 2013

அன்பின் பரிசுகளுக்கு நன்றி


பதிவுலகில் என்னை வழிநடத்திச் செல்லும், வாழ்த்தி மகிழும்,  அன்பினைப் பகிர்ந்துகொள்ளும் அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் பணிவான நன்றி.