11 March 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 5 (எருமைகள்)


எருமை! -- ஒண்டவந்த பிடாரிகளுள் ஒன்று. ஆரம்பகால ஐரோப்பியக் குடியேற்றத்தின் போது வடக்கு ஆஸ்திரேலியப் பகுதியில் முகாமிட்டிருந்த பிரித்தானிய இராணுவத்தின் இறைச்சித் தேவையை ஈடுகட்டுவதற்காக இந்தோனேஷியாவிலிருந்து 1825-1843 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 80 எருமைகள் கொண்டுவரப்பட்டன. 1850-இல்  அந்த முகாம் மூடப்பட்டபோது அனைத்தும் கட்டவிழ்த்துவிடப்பட்டுவிட்டன. வடக்குப் பிரதேசத்தின் செழுமையான காடுகளும் புல்வெளிகளும் சூழ்ந்த வளைகுடாப் பகுதிகள் இவற்றுக்கு சாதகமாக அமைய இனம் இப்போது பல்கிப் பெருகிவிட்டது.

ஆஸ்திரேலியாவில் இரண்டுவகை எருமைகள் உள்ளன. ஒன்று சுருண்டுவளைந்த கொம்புகளைக் கொண்ட மேற்காசிய ஆற்று எருமைகள் (river type buffaloes), மற்றொன்று பின்னோக்கி நீண்டு வளர்ந்த கொம்புகளைக் கொண்ட கிழக்காசிய சேற்று எருமைகள் (swamp type buffaloes).




1981-இல் வான்வழி எடுத்த கணக்கெடுப்புப்படி வடக்குப் பிரதேசத்தில் இருந்த எருமைகளின் எண்ணிக்கை 2,82,000. அடுத்த நான்கு ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்து 3,41,000 –த்தைத் தொட்டது. உடனடியாக அரசு தரப்பில் களையெடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு 1989-இல் அவற்றின் எண்ணிக்கை 1,22,000 என்ற அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எருமைகள் எப்போதும் நூற்றுக்கணக்கான அளவில் மந்தைகளாகத்தான் வாழும். அவற்றை ஹெலிகாப்டர்கள் மற்றும் பெரிய வாகனங்களின் மூலம் விரட்டி, திரட்டி, பட்டியில் அடைக்கிறார்கள். மந்தையிலுள்ள இளங்கன்றுகள் பண்ணை வளர்ப்புக்கென ஒதுக்கப்பட்டுவிடுகின்றன. ஆரோக்கியமான எருமைகள்  இறைச்சிநிமித்தம் ஏற்றுமதிக்கு தயார்செய்யப்படுகின்றன. பெரும்பாலும் எருமைகள் காயமுறாதவகையிலேயே பிடிக்கப்படுகின்றனகொல்லப்படும் எருமைகளின் இறைச்சி மனிதர்களுக்கும் நாய் பூனை போன்ற வளர்ப்புப்பிராணிகளுக்கும் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது




ஆரம்பகாலத்தில் வருடத்துக்கு சராசரியாக 4000 என்ற அளவில் எருமைத்தோல்கள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதியாயின. பிறகு மெல்ல வளர்ச்சியடைந்து ஏழாயிரத்தை எட்டியது. 1937 இல் அதிகபட்ச சாதனையாக ஒரே வருடத்தில் 16,549 எருமைத்தோல்கள் ஏற்றுமதியாயின. பல நாடுகளிலிருந்தும் போட்டிகள் அதிகரிக்கவும் 1956-வாக்கில் ஆஸ்திரேலியா இந்தத் தொழிலைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.



ஏற்றுமதியாகிக்கொண்டிருந்த எருமை இறைச்சிக்கும் 1968-இலிருந்து பிரச்சனை. முறையான பராமரிப்பில்லாத எருமைகள் என்பதால் அவற்றின் இறைச்சிக்கு தரச்சான்றிதழின் அவசியம் ஏற்படவும் அதன்பின் இறைச்சியாக அல்லாமல் உயிருடனேயே எருமைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு எருமையும் கிட்டத்தட்ட 500 கிலோ முதல் 1200 கிலோ வரை இருக்கும் என்றாலும் அவற்றின் இறைச்சியில் கொழுப்பு குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு நாளைக்கு முப்பது கிலோ தாவர உணவை உண்ணும் எருமையின் ஆயுட்காலம் இருபது வருடங்கள். ஒரு சதுரகிலோமீட்டருக்கு கிட்டத்தட்ட 34 எருமைகள் என்ற கணக்கில் அடர்த்தியாக வாழும் எருமைகளால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவது பெரும்பிரச்சனை.  


நூற்றுக்கணக்கான எருமைகள் ஒரே நேரத்தில் நன்னீர்த் தேக்கங்களில் இறங்கி நீரைக் கலங்கடித்து பயன்படுத்தமுடியாமல் செய்துவிடுவதும், பயன்பாடுகளில் உள்ள குளம்குட்டைகளின் கரைகளை உடைத்து நீரை வெளியேற்றுவதும், மண் அரிப்பு உண்டாக்குவதும், விளைநிலங்களை வீணாக்குவதும், சதுப்புநிலங்களை ஆக்கிரமித்து அங்கிருக்கும் உயிரினங்களை விரட்டியடிப்பதும், இவற்றின் தோல் மற்றும் சாணம் மூலம் களைவிதைகளைப் பரப்புவதும், கோடைக்காலங்களில் மக்களின் வசிப்பிடங்களின் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதுமாக இவற்றால் வடக்குப்பிரதேச மக்கள் படும் தொல்லைகள் அதிகம் என்பதால் இவற்றைக் கொல்வதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

ஒண்டவந்த பிடாரிகள் வரிசையில் அடுத்ததாய் தந்திரத்துக்குப் பெயர் பெற்ற நரியாரைப் பற்றிப் பார்ப்போம்.


(தொடரும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 4 (மைனாக்கள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 6 (நரிகள்)

33 comments:

  1. வணக்கம்
    சகோதரி
    விலாவாரியான தகவல் கண்டு மகிழ்ந்தேன்.. தொடருங்கள் அடுத்த நரியை பற்றி..த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.

      Delete
  2. ஓ... சென்ற பதிவில் கேட்ட கேள்விக்கு பதில் எருமையா?!!!

    :)))))

    படித்தேன், தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ;)) தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  3. ஒண்டவந்த பிடாரிகள் வரிசையில்
    எருமைகள் பற்றி அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

    ஏதோ ஒருசில காரணங்களால் ஆரம்பத்தில் சில ஜோடிகளை இறக்குமதி செய்யப்போய், அவை இனப்பெருக்கத்தின் காரணமாக இவ்வாறு ஏராளமாகப் பல்கிப்பெருகி, குளம் குட்டைகளையும், நீர் நிலைகளையும் பாழாக்குவதும், தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதையும் படிக்க வியப்பாக உள்ளது.

    அவற்றின் எடைகளும் எக்கச்சக்கமாக இருக்கின்றதே ! இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே அரசுக்கு ஏராளமான செலவுகள் ஆகும் போலிருக்குதே !!

    சரி, அடுத்ததாக ‘நரி முகத்தில்’ விழிக்கவும் நாங்கள் இப்போதே தயாராகி விட்டோம். அதிர்ஷ்டம் :) .................. தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் தேவையின் அளவை விஞ்சி பல்கிப்பெருகிவிட்ட அந்நிய நாட்டு உயிரினங்களால் சொந்த மண்ணின் உயிரினங்கள் அழிவது மிகவும் வருத்தத்துக்குரியது. அதனால் செலவு செய்தாவது சொந்த மண்ணின் உயிரினங்களைக் காக்கப் போராடுகிறது அரசு. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கோபு சார். விரைவில் நரி பற்றி தகவல்களைப் பகிர்கிறேன்.

      Delete
  4. பிரச்சனை என்பதால் கொல்வது என்பது....?

    ReplyDelete
    Replies
    1. லட்சக்கணக்கில் பெருகிவிட்ட அந்நிய மண்ணின் உயிரினங்களால் மக்களுக்குப் பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் சொந்த மண்ணின் உயிரினங்கள் பல வாழவகையற்று அழிந்துகொண்டிருப்பது அரசின் கவனத்தில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எருமைகளை இங்கே அழித்தாலும் அவை சொந்த மண்ணில் வாழும். இனம் அழியாது. ஆனால் கங்காரு போன்ற விலங்குகள் இங்கு அழிந்தால் முற்றிலுமாக இனம் அழிந்துபோகுமே. அதனால்தான் இந்த ஏற்பாடு என்கிறது அரசு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

    வலைச்சர தள இணைப்பு : வலைப்பூக்கள் பலவிதம்

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி தனபாலன்.

      Delete
  6. தகவல்கள் வியப்பினைத் தருகின்றன சகோதரியாரே
    ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது
    இதெல்லாம் மனிதன் தனக்குத் தானே உண்டாக்கிக் கொண்டதுதானே

    ReplyDelete
    Replies
    1. தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு எனலாம். சொந்த செலவில் வைத்துக்கொண்ட சூனியம் எனலாம். எல்லாம் மனிதரின் செயல். பாதிக்கப்படுவதென்னவோ வாயில்லாப்பிராணிகள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  7. எருமைகளின் இறைச்சி தவிர கறவை எருமைகளாக உபயோகப்படுத்துவதில்லையோ. நான் சிறு வயதில்கேள்விப்பட்டது . எவ்வளவு தூரம் உண்மை என்றுதெரியவில்லை. எருமைக் கன்றுகளில் பிழைத்து வளருவதன் எண்ணிக்கை மிகக் குறைவாம்

    ReplyDelete
    Replies
    1. \\எருமைக் கன்றுகளில் பிழைத்து வளருவதன் எண்ணிக்கை மிகக் குறைவாம்\\ வீடுகளில் வளர்க்கும் எருமைகளில் இந்தப் பிரச்சனை இருக்கலாம். ஆனால் இவை காடுகளில் வாழும் எருமைகள். மிகவும் மூர்க்கம் நிறைந்தவை. அதனால் இவற்றின் இனம் இங்கே வெகுவாகத் தழைத்துவருகிறது.

      ஆஸ்திரேலியாவில் கறவை மாடுகள் தனியாக பண்ணைகளில் வைத்து ஆரோக்கியமான சூழலில் பேணப்படுவதால் இந்த எருமைகளின் தேவை ஏற்படவில்லை. கறவை மாடுகள் எனில் கண்காணிப்பு அதிகம் தேவைப்படும். இறைச்சி எனில் ஒரே ஒருமுறை பரிசோதனை செய்து ஆரோக்கியமான மாடு என்று தரச்சான்றிதழ் அளித்துவிட்டால் போதும். அதனால்தான் இறைச்சிக்கென மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  8. அருமையான அலசல் கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கவிப்ரியன் கலிங்கநகர்.

      Delete
  9. சிறப்பான பல தகவல்களை அரிய முடிகிறது! தொடர்ந்து வாசிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  10. பசும்பாலை விட எருமைப்பாலில் கொழுப்புச் சத்து அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் 500 முதல் 1200 கிலோ எடையுள்ள எருமையின் இறைச்சியில் கொழுப்பு குறைவாக இருக்கும் என்ற செய்தி வியப்பளிக்கிறது. கொழுப்பின் பெரும்பகுதி பால் வழியாக வெளியேறிவிடுகிறதோ! ஒவ்வொன்றும் முப்பது கிலோ தாவரம் உண்டு இத்தனை பெருகியிருக்கிறது என்றால் ஆஸ்திரேலியா தாவர வளமையை அறிந்து கொள்ள முடிகிறது. வியப்பான செய்திகளைத் தொகுத்தலிளிப்பதற்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எருமையின் இறைச்சியில் கொழுப்பு குறைவு என்று அறிந்து எனக்கும் வியப்புதான். வடக்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரம் நிறைய வளைகுடாக்களும் தீபகற்பங்களும் உள்ளன. மழையும் அதிக அளவு பெய்வதால் மிகவும் செழுமையாக இருக்கும். அந்தப் பகுதிகள் இந்த எருமைகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாக இருப்பது இவற்றின் எண்ணிக்கை பெருக முக்கியக்காரணம். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  11. Anonymous13/3/15 20:09

    ஆற்று எருமை சேற்று எருமை எனப் பிரிவு அடடா!
    இலங்கையில் எருமைத் தயிர் மிகப் பிரசித்தம் தெரியுமோ!
    நாங்களும் விரும்பிச் சாப்பிட்டுள்ளோம்.

    ReplyDelete
    Replies
    1. எருமைத்தயிர் கெட்டியாக இருக்கும். எங்களுக்கும் பிடிக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

      Delete
  12. உலகில் பற்பல உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கையில் எருமை கொஆலா முதலியவை பெருகுவது வியப்பளிக்கிறது . ஆஸ்திரேலியாவைப் பற்றிய பலதுறைத் தகவல்களைத் தொடர்ந்து வழங்குவதைப் பாராட்டுகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஆஸ்திரேலியாவிலும் பல உயிரினங்கள் (native species) அழிந்துகொண்டும் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. காரணம் எருமை, ஒட்டகம், குதிரை போன்ற அந்நிய விலங்குகளின் வருகையும் அபரிமிதமான எண்ணிக்கையும். கோவாலாக்களின் எண்ணிக்கை பெருகவில்லை. அவற்றின் வாழ்விடங்கள் தற்சமயம் வெகுவாக அழிக்கப்படுவதால் கோவாலாக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மார்சுபியல் அல்லாத, அந்நிய நாட்டு உயிரினங்களின் எண்ணிக்கைதான் அதீதமாய்ப் பெருகிக்கொண்டு போகின்றன.

      Delete
  13. உலகில் பற்பல உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கையில் எருமை கொஆலா முதலியவை பெருகுவது வியப்பளிக்கிறது . ஆஸ்திரேலியாவைப் பற்றிய பலதுறைத் தகவல்களைத் தொடர்ந்து வழங்குவதைப் பாராட்டுகிறேன் .

    ReplyDelete
  14. எவ்வளவு தகவல்கள்!! உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள் கீதமஞ்சரி. பகிர்விற்கு நன்றி. உங்களால் ஆஸ்திரேலியா பற்றி நிறைய அறிந்துகொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      Delete
  15. எறுமையின் அழிவு கஷ்டமாகத்தான் இருக்கிறது, என்ன செய்வது ! அந்நிய படையெடுப்பை தடுப்பது போல் அந்நிய உயிரினங்கள் அதிகமாய் வளர்வதை தடுக்க தான் வேண்டும் வேறு வழி இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அப்படி நினைத்துதான் மனத்தை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அவையும் உயிர்தானே என்று நினைக்கையில் மிகவும் பரிதாபகரமாக உள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  16. வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து மிருகங்களாலும் பிரச்சனை உருவாவதும், அவை மொத்தமாக கொல்லப்படுவதும் சோகம்.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கு நன்றி வெங்கட். அந்நிய விலங்குகள் காடுகளிலும் பாலைகளிலும் பெருகும்வரை கவனத்துக்கு வரவில்லை. வயல்களிலும் பண்ணைகளிலும் புகும்போதுதான் இவ்வளவு ஜீவன்கள் கட்டுப்பாடின்றி பெருகியிருக்கின்றனவா என்று அவசர அவசரமாக விழித்துக்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது அரசு.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.