ஆஸ்திரேலியா முழுவதும்
பரவலாக சுற்றித்திரியும் Brumby எனப்படும்
காட்டுக்குதிரைகளின் எண்ணிக்கை நான்கு இலட்சம் இருக்கும் என்றாலே வியக்கும்
நமக்கு இங்கிருக்கும் கழுதைகளின் எண்ணிக்கை ஐம்பது இலட்சத்துக்குமேல் என்ற தகவல் நம்புவதற்கு
கடினம் என்றாலும் உண்மை அதுதான்.
ஆயிரக்கணக்கான
கைதிகளுடன் வந்த முதல் கப்பற்தொகுதியுடன் குதிரைகளும் ஆஸ்திரேலியாவில் வந்திறங்கிய
ஆண்டு 1788. விவசாய நிலங்களில் வேலை செய்வதற்காகவும் போக்குவரத்துக்காகவும் கொண்டுவரப்பட்ட
குதிரைகளுள் சில தப்பி காடுகளில் வாழத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரங்களும்
வாகனங்களும் புழக்கத்துக்கு வந்துவிட, குதிரைகளின் அவசியம் அவசியமற்றுப் போனது. வளர்ப்புக்குதிரைகள்
யாவும் ஏற்கனவே சுதந்திரமாய்த் திரியும் குதிரைகளோடு சேர்ந்து வாழும் வகையில் காடுகளுக்கு
விரட்டிவிடப்பட்டுவிட்டன.
குதிரைகள் பயன்பாட்டில்
இருக்கும்போதே கழுதைகளும் ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதற்கொரு காரணம்
இருந்தது. மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதி, வடக்கு பிரதேசத்தில் விக்டோரியா
ஆற்றுப்பகுதி போன்ற ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் விளையும் ஒருவகைத்தாவரம்
குதிரைகளுக்கு ஒவ்வாமையை உண்டாக்கி பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனால் அப்பகுதிகளில்
போக்குவரத்துக்கும் பாரம் சுமக்கவும் கழுதைகள் இறக்குமதியாயின. தேவைகள் தீர்ந்துபோன
நிலையில் அவையும் காடுகளுக்கு விரட்டியடிக்கப்பட்டன.
குதிரையின் கர்ப்பகாலம்
11 மாதங்கள் என்பதால் இரண்டு வருடத்துக்கு ஒரு குட்டிதான் ஈனும். கழுதை வருடத்துக்கு
ஒரு குட்டி ஈனும். அப்படியிருந்தும் அவற்றின் இனப்பெருக்கம் எக்கச்சக்கமாகப் பெருகி
இன்று pest என்ற நிலையை எட்டியிருப்பதற்கு காரணம் அவற்றுக்கு சமமான எதிரிகள் ஆஸ்திரேலியாவில்
இல்லை என்பதே. அவ்வப்போது ஏற்படும் காட்டுத்தீயும் வறட்சியும் மட்டுமே இவ்வினங்களைக்
கட்டுப்படுத்தும் இயற்கை எதிரிகள். வறட்சிக்காலத்தில் தண்ணீர் கிடைக்காமலும் போதுமான
புல் கிடைக்காமல் ஒவ்வாத புற்களை உண்பதாலும் குதிரைகள் மடிந்துபோகின்றன.
மண் அரிப்பு, களை
பரப்பு இவற்றோடு கங்காரு போன்ற சொந்தமண்ணின் தாவர உண்ணிகளின் உணவுப்போட்டியாய் களத்தில்
உள்ளவை இந்த கழுதைகளும் குதிரைகளும். நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்துக்கொள்ளும்
இவை அங்கு வாழும் சொந்த மண்ணின் உயிரினங்களை அவற்றின் வாழ்விடங்களிலிருந்து விரட்டி
உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்காமல் செய்துவிடுவதால் பல உயிரினங்கள் அழிந்துபோய்க்கொண்டிருப்பது
ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படும் தகவல்கள். குதிரைகள் பண்ணைகளின் கால்நடைகளுக்கான மேய்ச்சல்
நிலங்களையும் விட்டுவைப்பதில்லை. எளிதாக வேலிகளைத் தாண்டியும் சிதைத்தும் உள்ளே சென்று
கால்நடைகளுக்கான புற்களையும் அபகரித்துக்கொள்கின்றன.
காட்டுக்குதிரைகள்
ஹெலிகாப்டர்கள் மூலம் ஒன்றுதிரட்டப்பட்டு, பட்டியில் அடைத்துவைக்கப்படுகின்றன. இளங்குதிரைகள்
மட்டும் தனியே பிரித்தெடுக்கப்படுகின்றன. அவை பயிற்சியளிக்கப்பட்டு வளர்ப்புக் குதிரைகளாக
மாற்றப்படுகின்றன. மற்றவை கொல்லப்படுகின்றன. குதிரைகளைக் கொல்வதை எதிர்க்கும் விலங்குநல
அமைப்புகள், முரட்டுக்குதிரைகளாய்த் திரியும் அனைத்துக் குதிரைகளுக்கும் முறையாக பயிற்சியும்
பராமரிப்பும் தந்து வளர்த்தால் அவற்றை நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்
என்று முன்வைக்கும் யோசனை வாதப்பிரதிவாதங்களுடன் பரிசீலனையில் உள்ளது. ஆனால் செயல்படுத்துவதில்
உள்ள சிக்கல்களும் சிரமங்களும் யோசனையைப் புறந்தள்ளிக்கொண்டிருக்கின்றன.
சில இடங்களில்
குதிரைகளுக்கு remote darting எனப்படும் எறி ஊசி மூலமாக இனப்பெருக்கத் தடுப்பூசிகள்
போடப்படுகின்றன. ஆனால் அவற்றை வருடா வருடம் போடவேண்டியிருப்பதால் அதனால் உண்டாகும்
பயன் குறைவுதான். பல வருடங்களுக்குப் பயன்தரத்தக்க வகையில் புதிய மருந்துக்கான ஆராய்ச்சிகள்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில்
காட்டுக்குதிரைகளின் இனத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அங்கு கையாளப்படும் முயற்சி
என்பது கூடுதல் தகவல்.
இயற்கைக்கு முரணாய்
இன்னும் என்னென்னவெல்லாம் செய்யப்போகிறோமோ மனிதர்களாகிய நாம்? இப்படி உலகெங்கும் இயல்புக்கு
மாறாய் விலங்குகளின் இனப்பெருக்க விகிதத்தைக் கட்டுப்படுத்தப் போடப்படும் தொடர் தடுப்பூசிகளின்
பயனாய், பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அவ்வினமே அழிவுக்குப் போய்விடும் ஆபத்து
இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறோமா?
விதையில்லாத பழங்களையும் கருவில்லாத முட்டைகளையும்
கொண்டுவந்துவிட்டோம். இப்போது மலட்டு மிருகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
எங்கு போய் முடியுமோ அனைத்தும்?
(படங்கள் : நன்றி இணையம்)
முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 7 (பேன்டெங் மாடுகள்)
வணக்கம்
ReplyDeleteஒவ்வொரு தகவலும் வியப்பாக உள்ளது...உண்மைதான் இறுதியில் சொல்லிய விடயம் கவலையளிக்கிறது பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ரூபன்.
Deleteஎந்த தலைப்பில் எழுதுவதானாலும் எல்லா விவரங்களையும் சேகரித்துச் சுவை குன்றாமல் பதிவிடுகிறீர்கள். நம்மூர் மேனகா காந்தி அங்கு இருந்தால் என்ன செய்வார்கள்- மனதில் ஒரு எண்ணம் ஓடுகிறது. .வாழ்த்துக்கள்.
ReplyDeleteமேனகா காந்தியைப் போல் பலர் இங்கு இருக்கிறார்கள்.. ஆனால் மக்களின் நலன்களோடு ஒப்பிடுகையில் விலங்குநலனெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteகாட்டுக்குதிரைகளின் எண்ணிக்கை நான்கு இலட்சம் !
ReplyDeleteகழுதைகளின் எண்ணிக்கை ஐம்பது இலட்சத்துக்குமேல் !!
அடடா ! மிகவும் (ஆச்சர்யமளிக்கும்) வியப்பு மிக்க வித்யாசமான செய்திகள்தான்.
ஒவ்வொன்றையும் பற்றி எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்து, எல்லாக் கோணங்களிலும் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள் !!!!!!
அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே அவஸ்தைதான் போலிருக்கிறது.
//விதையில்லாத பழங்களையும் கருவில்லாத முட்டைகளையும் கொண்டுவந்துவிட்டோம். இப்போது மலட்டு மிருகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்கு போய் முடியுமோ அனைத்தும்? //
முத்தாய்ப்பான யோசிக்க வைக்கும் முடிவுரை ................ தொடரட்டும்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். சுவாரஸ்யமான பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு சார். தங்களுடைய உழைப்போடு ஒப்பிட்டால் என்னுடையதெல்லாம் தூசுதான்.
Deleteதகவல்கள் அனைத்தும் பிரமாண்டம்.
ReplyDeleteத.ம.2
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.
Deleteவியக்க வைக்கும் தகவல்கள்... கூடவே பயமும்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். நாளைய உலகை நினைத்து பயமாய்த்தான் இருக்கிறது..
Deleteஅப்படியா சங்கதி?
ReplyDeleteஆம் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteசகோதரி வணக்கம்.
ReplyDeleteதென்னிந்தியாவைப் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகள் என்கிற புத்தகத்தில் கே .ஏ நீல கண்ட சாஸ்த்ரி தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து யவனர்கள் எப்படி இந்தக் குதிரைகளை பண்டை வேந்தர்களின் தலையில் கட்டினர் என அழகுபட ( அவலம் பட???) விவரிப்பார். ( எப்படி அரைத்தனர்.............. அது சுவாரசியமான கதை!!!)
ஆங்கிலேயர் குதிரைகளை மலைவாழிடங்களுக்குப் பாதை அமைக்கப் பயன்படுத்தினர் என்று படித்திருக்கிறேன்.
சரிவான முகடுகளில் சரியான ஏறுதளத்தைக் கண்டறிந்து ஏறுவன அவை. அதை ஒட்டி மலைமீது பாதை அமைப்பதற்கான வழித்தடங்களை அவர்கள் வகுத்தனர் என்பர்.
இந்திய ராணுவத்தில் கழுதைகள் கொண்ட பிரிவு இன்னும் செயல்படுகிறது.
இயற்கைச் சமநிலை குலைந்தால் என்னாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தங்களின் இந்தப் பதிவைக் காண்கிறேன்.
தொடர்கிறேன்.
த ம 5
நன்றி.
குதிரைகள் எப்படி இந்தியாவுக்கு வந்தன அதுவும் குறிப்பாக தென்னிந்தியாவுக்கு வந்தன என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அறிந்திருக்கவில்லை. தாங்கள் குறிப்பிடும் விவரங்கள் அந்நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
Deleteஇயற்கை சமநிலை குலைவதால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்துதான் இந்தத் தொடரை எழுதுகிறேன். ஆனால் எல்லாவற்றுக்கும் மூல காரணம் மனிதர்களின் ஆசையும் அறியாமையும் என்னும்போது வருத்தம்தான் மிஞ்சுகிறது.
தங்கள் வருகைக்கும் கூடுதல் தகவல்கள் அடங்கிய பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி.
வியப்பாகவும், கவலையாகவும் உள்ளது...எங்கோ போகுது உலகம்...என்ன வாகுமோ...? நன்றி சகோ.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கவலையை வெளிப்படுத்தும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி உமையாள்.
Deleteஇயற்கைக்கு எதிராய் இனப்பெருக்கத்தை அதிகரிப்பது, அல்லது குறைப்பது அந்நிய மண்ணில் விலங்குகளைப் புகுத்துவது போன்ற இயற்கை சமன்நிலையைக் குறைக்கும் செய்கைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கிறோம் இது எங்குப் போய் முடியுமோ? என்று கவலையாகத் தான் இருக்கிறது. நல்லபல தகவல்கள் கொண்ட தொடருக்குப் பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா. இயற்கை சமநிலை குலைவதால் உண்டாகும் பாதிப்புகளைப் பார்த்தாவது இனி மக்கள் திருந்தவேண்டும்.
Deleteபடிக்கப் படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது சகோதரியாரே
ReplyDeleteஎப்படி இவ்வளவுதகவல்களைத் தங்களால் திரட்ட முடிந்தது
வாழ்த்துக்கள் சகோதரியாரே
நன்றி
தம+1
அந்நிய விலங்குகளின் ஆக்கிரமிப்பு தொடர்பாக சில கட்டுரைகளை வாசிக்கநேர்ந்தபோது ஏன் இவற்றை ஒரு தொகுப்பாக தமிழில் எழுதக்கூடாது என்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவுகள். ஊக்கம் தரும் தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteபாவமாகத்தான் இருக்கிறது இந்த விலங்குகளை நினைத்தால் . ஆத்திரேலியா ஒரு பிரம்மாண்ட பாலை என்றே நினைத்திருந்தேன் ; அங்கு பற்பல வகை உயிரிகள் எக்கச்சக்கமாக ப் பெருகுவதை இந்தத் தொடர் மூலமாக அறிகிறேன் .
ReplyDeleteஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 50% பாலைதான் என்றாலும் மற்றப் பகுதிகளில் மழைக்காடுகள் ஊசியிலைக்காடுகள் புதர்க்காடுகள் என்று விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருப்பதாலும் பெரிய அளவிலான கொன்றுண்ணிகள் இல்லாத காரணத்தாலும் விலங்குகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
Deleteஇந்தியாவில் தான் இயற்கையை புரிந்து கொள்ளாத மனிதர்களோ என்று எண்ணம் உங்கள் பதிவால் இதுவும் உலகமயமாக்கல் என்றே தோன்றுகிறது..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி எழில். எந்த நாடாய் இருந்தால் என்ன? சுயநலம் முன்னிற்கும்போது இயற்கை பற்றிய சிந்தனைகள் செயலிழந்துபோவது இயல்புதானே?
Deleteநன்கு விவரமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள் இந்த கட்டுரைகளை. இத்தனை நாள் எப்படி தவற விட்டேன் உங்கள் பதிவுகளை?
ReplyDeleteஇனி தொடர்கிறேன்.
வருகைக்கும் ஊக்கம் தரும் தங்கள் கருத்துரைக்கும் தொடர்வதற்கும் மிகவும் நன்றி.
Deleteஎங்கு போய் முடியுமோ? இதே கேள்வி தான் தொடர்ந்து படிக்கும் எனக்குள்ளும்.....
ReplyDeleteஇயற்கைக்கு மாறாக அனைத்தையும் செய்து பல தொல்லைகளை அடைந்து கொண்டிருக்கிறோம்....
உண்மைதான்... இயற்கைக்கு மாறான எதுவும் ஆபத்தில்தான் முடியும் என்பதை இனிமேலாவது உணர்ந்து நடந்தால்தான் நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Delete''..விதையில்லாத பழங்களையும் கருவில்லாத முட்டைகளையும் கொண்டுவந்துவிட்டோம். இப்போது மலட்டு மிருகங்களை...''
ReplyDeleteவிநோதமான தகவல்களே......
ஒண்டவந்த பிடாரிகள் - 8 (குதிரைகள் & கழுதைகள்) - ஆஸ்திரேலியா - எனது பக்கத்தில் பகிர்கிறேன். அருமையான தகவல்கள். அற்புதமான எழுத்தாற்றல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கீத மஞ்சரி - Geetha Mathivanan
ReplyDelete