பேன்டெங் (Banteng)
எனப்படுவது தென்கிழக்காசியாவைத் தாயகமாய்க்கொண்ட மாட்டினம். ஆனால் பாருங்கள்.. தாயகத்தில்
அருகிவரும் உயிரினமாகிவிட்ட இவ்வினம் அது அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவில் அளவில்லாமல்
பெருகிவிட்ட உயிரினம் ஆகிவிட்டது. சொல்லப்போனால்
உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையிலான பேன்டெங் மாடுகள் தற்சமயம் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றன.
இந்த இனத்தில்
பசுக்கள் பார்ப்பதற்கு நம்மூர் செவலைப் பசுக்களைப் போன்று இருக்கின்றன. இளங்கன்றுகளும்
கூட செம்பழுப்பு நிறத்திலே காட்சியளிக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட 800 கிலோ எடையுள்ள
காளைகளோ உருவத்திலும் நிறத்திலும் நீண்டு வளைந்த கொம்பின் அமைப்பிலும் நம்மூர் எருமைகளைப்
போலவே உள்ளன. பேன்டெங் இனத்திலுள்ள பசு, காளை இரண்டுக்கும் உள்ள பொதுவான அம்சங்கள்,
நான்கு கால்களுக்கும் காலுறை அணிந்தாற்போல் மூட்டுவரையிலான வெண்ணிறமும், பின்புறம் வாலுக்கு அடியில் காணப்படும் பெரிய வெண்ணிற வட்டமுமாகும்.
ஜெர்மனியின் அஞ்சல் தலையில் பேன்டெங் மாடுகள் |
1849 இல் வடக்குப்
பிரதேசத்தில் உள்ள கோபர்க் தீபகற்பத்தில் முகாமிட்டிருந்த பிரித்தானிய இராணுவத்தின்
இறைச்சித்தேவையை ஈடுகட்ட இருபதே இருபது பேன்டெங் மாடுகள் இந்தோனேஷியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு
பண்ணையில் அடைத்து வளர்க்கப்பட்டனவாம். ஒரு வருடத்தில் முகாம் காலிசெய்யப்பட்டதும்
இவை கட்டவிழ்த்து விடப்பட்டன. 1960 இல் 1500 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை 2005 இன்
கணக்கெடுப்புப்படி பத்தாயிரம். பேன்டெங் மாடுகளின் தாயக நாடுகளிலோ அவற்றின் மொத்த எண்ணிக்கை ஐநூறுக்கும்
குறைவுதானாம்.
இந்த பேன்டெங் மாடுகளால்
மேய்ச்சல் நிலங்கள் அடியோடு மேயப்பட்டுவிடுவதால் கங்காரு போன்ற மற்ற தரைவாழ் தாவர உண்ணிகளுக்கு
உணவுப்பற்றாக்குறை உண்டாகிவிடுகிறது. ஆனால் எருமைகளோடு ஒப்பிடுகையில் பேன்டெங் மாடுகளால்
உண்டாகும் பாதிப்பு குறைவுதான் என்கிறார்கள். பேன்டெங்குகள் ஒருவகையில் இவை தாங்கள் வாழும்
பகுதியில் உள்ள மக்களுக்கு உதவிகரமாக உள்ளனவாம். காட்டையொட்டிய பகுதிகளில் இவை புற்களை மொத்தமாக மேய்ந்துவிடுவதால் காட்டுத்தீ பரவும் வாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுவிடுகிறது என்கிறார்கள்.
மேலும் ஆஸ்திரேலியாவின்
சொந்தப்பறவையான டோரஸியன் காகத்துக்கு உணவாக தங்கள் உடலில் உள்ள உண்ணிகளை பங்குவைப்பதாலும்
அவற்றுக்கும் உதவிகரமாக உள்ளனவாம். வேட்டைப்பிரியர்களுக்கு அவ்வப்போது இலக்காவது தவிர
கங்காரு, ஒட்டகம், எருமை போன்று பெருமளவில் கூட்டமாக வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவதில்லை.
இந்த பேன்டெங் வேட்டை மூலமாக வடக்குப்பிரதேசத்துக்குக் கிடைக்கும் வருமானம் வருடத்துக்கு
200,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய்).
பொதுவாக நம் நாட்டில்
கால்நடைகளோடு சில பறவைகள் நட்புரிமை கொண்டாடுவதைப் பார்த்திருப்போம். கால்நடைகளின்
மேலிருக்கும் உண்ணிகளை காக்கை, குருவி, கொக்கு, நாரை போன்ற பறவைகள் பயமின்றி கொத்தியெடுத்துத்
தின்பதை அறிவோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற காட்சிகள் காணக்கிடைக்காது.
ஆஸ்திரேலியாவைப்
பொறுத்தவரை இதுவரையிலும் எந்த சொந்தப்பறவையும் மற்ற அந்நியவிலங்கினங்களோடு நட்புறவு
பேணியதில்லையாம். பேன்டெங் மாடுகளுக்கும் டோரஸியன் காகங்களுக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதுதான்
முதல் உறவாம். இந்த உறவு உண்டாவதற்கு 150 ஆண்டுக்காலம் பிடித்திருக்கிறது என்கிறார்கள்.
சொந்த நாட்டில்
வாழவழியில்லாமல் அழியும் தருவாயில் உள்ள ஒரு இனம் வந்த நாட்டில் வகையற்றுப் பெருகிப்போய்க்
கிடக்கிறது. அருகிவரும் உயிரினம் என்று சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள
இவ்வினத்தை என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய
அரசு. தேவையா இது?
(தொடரும்)
(படங்கள் நன்றி: இணையம்)
முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 6 (நரிகள்)
அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 8 (குதிரைகள் & கழுதைகள்)
(படங்கள் நன்றி: இணையம்)
முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 6 (நரிகள்)
அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 8 (குதிரைகள் & கழுதைகள்)
வணக்கம் சகோதரி!
ReplyDeleteமாட்டிறைச்சிக்கு தடைபோடும் மாநிலம் இந்தியாவில் உள்ளது.
அத்தகைய தடையை அங்கெல்லாம் செய்ய முடியாது அல்லவா?
இருப்பினும்
அருகிவரும் உயிரினம் என்று சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள "பேன்டெங்" வகை இனத்தைபெருகி வர வழி வகை காண ஆஸ்திரேலிய அரசு
முயல வேண்டும்.
வெற்றி மாடுகளுக்கா? மாட்டிறைச்சிகளுக்கா?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
த ம + 1
மிக நல்லதொரு பதிவு!
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.
Delete//தாயகத்தில் அருகிவரும் உயிரினமாகிவிட்ட இவ்வினம் அது அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவில் அளவில்லாமல் பெருகிவிட்ட உயிரினம் ஆகிவிட்டது//
ReplyDeleteஆஸ்திரேலியா நல்ல ராசியான இடம் போலிருக்கிறது. அங்கு எதனைக் கொண்டுவந்து விட்டாலும், அவை எண்ணிக்கையில் மிகவும் அதிகமாகப் பல்கிப் பெருகி விடுவது மலைக்கத்தான் வைக்கிறது.
>>>>>
\\ஆஸ்திரேலியா நல்ல ராசியான இடம் போலிருக்கிறது. அங்கு எதனைக் கொண்டுவந்து விட்டாலும், அவை எண்ணிக்கையில் மிகவும் அதிகமாகப் பல்கிப் பெருகி விடுவது மலைக்கத்தான் வைக்கிறது.\\ ரசிக்கவைக்கும் பின்னூட்டம். உண்மையில் அங்கு அவற்றுக்கு எதிரிகள் இல்லை என்பதால்தான் அது சாத்தியம். அவை பெருகுவது சரிதான். ஆனால் அங்கு ஏற்கனவே உள்ள மற்ற இனங்களை அழிப்பதுதான் பிரச்சனையே...
Delete//பேன்டெங் இனத்திலுள்ள பசு, காளை இரண்டுக்கும் உள்ள பொதுவான அம்சங்கள், நான்கு கால்களுக்கும் காலுறை அணிந்தாற்போல் மூட்டுவரையிலான வெண்ணிறமும், பின்புறம் வாலுக்கு அடியில் காணப்படும் பெரிய வெண்ணிற வட்டமுமாகும்.//
ReplyDelete:) நல்ல வர்ணிப்பு. தபால் தலைகளில் உள்ள படங்களிலும் இந்த பிரத்யேக ஓளி வட்டத்தினையும், காலுறைகள் அணிந்தது போன்ற காட்சியினையும் காண முடிந்தது. :)
>>>>>
தங்கள் ரசிப்புக்கும் ரசனையான பின்னூட்டங்களுக்கும் மிகுந்த நன்றி கோபு சார்.
Deleteஒவ்வொரு பிராணிகளாலும் ஏற்பட்டுவரும் ஒருசில நன்மைகள், ஒருசில பிரச்சனைகள் என மிக அழகாக தெளிவாக படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இந்தத் தொடரினை எழுதி வருகிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தங்களின் தொடர் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி கோபு சார்.
Deleteஅறியாத தகவல்கள்...
ReplyDeleteஅரிய இனத்தை பாதுகாக்க வேண்டும்...
ஆம். பாதுகாக்கத்தான் வேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteஇவற்றை வீட்டு விலங்காக மாற்ற முடியாதா? இல்லை வீடுகளில் வளர்ப்பதில்லையா? நல்ல தகவல்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளே போதுமான அளவு இருப்பதாலும் தேவைக்கான இறைச்சி, பால் தருவதாலும் இவற்றை வளர்க்க எவரும் துணியவில்லை.
Deleteவிரிவான தகவல்கள்! நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
Deleteஅரிய தகவல்கள் தந்தமைக்கு மீக்க நன்றி . இந்த மாடுகளை அவற்றின் பூர்விகத் தாயகங்களுக்குக் கொண்டு சென்று அழிவிலிருந்து இனத்தைக் காப்பாற்ற இயலாது போலும் !
ReplyDeleteபூர்வீக நாடுகள் எவையும் பெரும் அக்கறை கொண்டு இறக்குமதி செய்யத் தயாராயில்லாத நிலையில் கட்டிக்காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அவை இறக்குமதியான நாட்டின் வசமாகிவிட்டது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இதுவரையிலும் எந்த சொந்தப்பறவையும் மற்ற அந்நியவிலங்கினங்களோடு நட்புறவு பேணியதில்லையாம். பேன்டெங் மாடுகளுக்கும் டோரஸியன் காகங்களுக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதுதான் முதல் உறவாம். இந்த உறவு உண்டாவதற்கு 150 ஆண்டுக்காலம் பிடித்திருக்கிறது
ReplyDeleteவியப்பான செய்தி! நம்மூரில் காகம் முதல் கரிச்சான், கொக்கு, நாரை போன்ற பறவைகள் கால்நடைகளோடு எவ்வளவு நெருக்கமாகப் பழகுகின்றன? மாடுமேல் ஊர்வலம் போவது போன்ற காட்சி நம்மூரில் சர்வ சாதாரணம். இது போல் பழக்கம் ஏற்பட பல ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறது.
கால்களில் உரை போட்டது போல் உருவமும் வித்தியாசமாக இருக்கிறது. சுவையான செய்திகளைத் தொடர்ந்து கொடுப்பதற்கு நன்றி கீதா!
இங்கிருக்கும் கங்காரு, போஸம், வல்லபி, வாம்பேட் உள்ளிட்ட பல பிராணிகள் இரவுவிலங்குகள். அதனாலேயே பறவைகளுக்கும் விலங்குகளுக்குமான உறவு உண்டாகும் வாய்ப்பில்லாமல் போனதற்கு முக்கியக்காரணம் என்று நான் நினைக்கிறேன். பதிவை ரசித்ததற்கும் கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கும் நன்றி அக்கா.
Deleteஅவற்றின் தாயகத்தில் அருகி விட்ட இந்த பேண்டெங் வகை மாடுகளை அங்கேயே அனுப்பி வைக்கலாமே.....
ReplyDeleteதொடர்கிறேன்.
தென்கிழக்காசிய நாடுகள் முன்வந்தால்தானே அது நடக்கும். இதுவரை எந்த நாடும் முன்வரவில்லை என்றே நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி வெங்கட்.
Deleteகையைப் பிசைந்துகொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. தேவையா இது?
ReplyDeleteவாசித்தேன் நல்வ தகவல்...