3 July 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 8

தலைவனைப் பிரிந்து தனிமைத் துயரில் வாடும் தலைவியின் துயர் நீக்கவும் துயிலுண்டாக்கவும் தோழியரும் செவிலியரும் படும்பாட்டை எடுத்தியம்பும் வரிகள்...

தளிர்ஏர் மேனித் தாய சுணங்கின்
அம்பணைத் தடைஇய மென்தோள் முகிழ்முலை
வம்பு  விசித்து யாத்த, வாங்குசாய் நுசுப்பின்
மெல்இயல் மகளிர் நல்அடி வருட;
நரை விராவுற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
இன்னே வருகுவர் இன் துணையோர்’ என
உகத்தவை மொழியவும் (148- 156)



தளிரெனப் பொலிவுடன் மிளிரும் 
தேகமதில் பொலியும் தேமலையும்
ஓங்கிச் செழித்து வளர்ந்த
மூங்கிலெனத் திரண்ட தோள்களையும்
பங்கமிலாக் கச்சையுள் அடங்கிடும்
பங்கய மொட்டுப்போலும் தனங்களையும்
தாங்கி வரும் மெல்லிடையை
ஏந்திவரும் மென்னியல் மகளிர்,
தலைவியின் மென்பாதங்கள் வருடி
துயிலுண்டாக்கப் பெரிதும் முனைய.....

பிரியமான கணவனின்
பிரிவுத் துயர் பொறுக்காத
பிரியமகளின் துயர் பொறுக்காத
நறுமணமிகுந்த நரைமயிர்க்கொண்ட
பொறுமைமிகுந்த வளர்ப்புத்தாய்மார் கூடி
திறம்பட பல உரைத்தும் திரித்தும்
இப்போதே வருவார் அவர் என்றும்
இனிதே அவள் மனம் மகிழப்  பகன்றும்
தேற்றுதல் பல புரிந்தும்
ஆற்றாது கலங்கியவளாய்.....


…………………..ஒல்லாள்,மிகக் கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோன்நிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய கால்திருத்திப்
புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்நிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுஉயிரா
மாஇதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சோத்திச் சில தெறியாப்
புலம்பொடு வதியும்  நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறல்தந்து
இன்னே முடிகதில் அம்ம (156 – 168)                 

சாதிலிங்கச் சாந்து பூசி
சின்ன மரக்குடங்களேந்தி
திண்மையான கட்டிலோடு
வன்மையாய்ப் பொருந்திய கால்கள்
அழகுபடத் தாங்கிநின்ற
மெழுகுபூசிய மேல்விதானத்தின்
திரைச்சீலைதனிலே திருத்தமாய்
வரையப்பட்ட ஓவியம் கண்டாள்.




மேஷராசியோடு மட்டுமல்லாது
மற்றைய ராசிகளோடும் சுற்றித்
திரியும் சூரியனைப் போலல்லாது
திகழும் சிறப்புடை சந்திரனாம் 
உற்றவன் அவனைப் பிரியாது
உலவும் உரோகிணி போலல்லாது
கொற்றவனைத் தான்பிரிந்திருக்கும்
கொடுநிலையை நினையச் சகியாது
தனிமைத் துயராலே தான் வருந்தி
குவளை மலர்போலும் விழியோரம்
கசியும் கண்ணீர்த் துளிகள்தம்மை 
சுண்டித் தெறித்தாள் தன் சிவந்த விரலாலே.



அன்புநிறை இப்பெண்ணுள்ளம்
இன்னல் களையும் வண்ணம்
மின்னலெனப் போர்முடித்து எம்
மன்னனுக்கு வெற்றியைத் தந்து
மகிழ்விப்பாய் எம்மை இன்றேயென்று
பெற்றவர்க்கு நிகர் செவிலியர்,
பற்றுதல் மிக்கப் பாசத்தோடு
கொற்றவனின் வரவு வேண்டி
கொற்றவையை வேண்டி நின்றார்....

******************************************************
அடுத்த பகுதியுடன் நெடுநல்வாடை நிறைவுறும். 
(படங்கள் உதவி: இணையம்)

34 comments:

  1. தனிமைத் துயராலே தான் வருந்தி
    குவளை மலர்போலும் விழியோரம்
    கசியும் கண்ணீர்த் துளிகள்தம்மை
    சுண்டித் தெறித்தாள் ///ஆம் தனிமையின் கொடுமை அவஸ்தைதான்

    ReplyDelete
  2. பங்கய மலர் போல... குவளை போலக் கண்கள்... அந்நாளில் மலர்களை ஒப்புமை கூறி வர்ணனை செய்வது என்னமாய் மனதை மயக்குகிறது! தோழிகள், தலைவியின் பாதம் வருடி, மென்மசாஜ் செய்து தூங்கச் செய்ய முனைவதும், தலைவனுக்காய் அவள் ஏங்கி விதான ஓவியத்தைப் பார்ப்பதுமாக காட்சி மனக்கண்ணில் விரிகிறது. ரசிக்க வைக்கிறது.

    ஸ்வீட் சாப்பிடுகிற குழந்தை ‘இனிமே அவ்வளவுதான்’ என்றதும் முழிப்பதைப் போல அடுத்த பகுதியுடன் நிறையும் என்ற வார்த்தையைப் பார்த்து முழித்துக் கொண்டிருக்கிறேன் நான்!

    ReplyDelete
  3. அருமையான பணி
    சிறப்பாகச் செய்கிறீர்கள்
    தங்கள் பதிவின் மூலமே
    நெடு நல்வாடையின் சிறப்பினை உணர்ந்தேன்
    மனமார்ந்த நன்றி
    ஈடில்லா தங்கள் இலக்கியப்பணி
    இனிதே தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  5. அழகுடன் அருமையான ரசிக்க வைக்கும் விளக்கம்...

    நெடுநல்வாடை நிறைவுறும் என்னும் போது சிறிது வருத்தம் தான்..

    வாழ்த்துக்கள் பல... நன்றி...

    ReplyDelete
  6. இந்த வரிகளை எல்லாம் உங்கள் பதிவின் மூலம் தான் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது..

    ReplyDelete
  7. //அன்புநிறை இப்பெண்ணுள்ளம்
    இன்னல் களையும் வண்ணம்

    மின்னலெனப் போர்முடித்து எம்
    மன்னனுக்கு வெற்றியைத் தந்து

    மகிழ்விப்பாய் எம்மை இன்றேயென்று//

    அருமையான வரிகள்!! தமிழாக்கத்தை மிகவும் ரசித்தேன் கீத மஞ்சரி!

    ReplyDelete
  8. சுலபமாகப் புரிய வைக்கும் அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  9. //திறம்பட பல உரைத்தும் திரித்தும்
    இப்போதே வருவார் அவர் என்றும்
    இனிதே அவள் மனம் மகிழப் பகன்றும்
    தேற்றுதல் பல புரிந்தும்
    ஆற்றாது கலங்கியவளாய்.....// ஆஹா!
    உங்கள் பணி சிறப்பானது. மனமுவந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. அன்புநிறை இப்பெண்ணுள்ளம்
    இன்னல் களையும் வண்ணம்
    மின்னலெனப் போர்முடித்து எம்
    மன்னனுக்கு வெற்றியைத் தந்து
    மகிழ்விப்பாய் எம்மை இன்றேயென்று
    பெற்றவர்க்கு நிகர் செவிலியர்,
    பற்றுதல் மிக்கப் பாசத்தோடு
    கொற்றவனின் வரவு வேண்டி
    கொற்றவையை வேண்டி நின்றார்....//

    தாய் பாசத்தை போல் வளர்த்த செவிலியர் பாசமும் சிறந்ததாய் காட்டப்படுவது சிறப்பு.
    வெற்றி தர கொற்றவை வழிபாடு கண் முன் விரிகிறது.

    அருமையாக விளக்கம் தந்தீர்கள் கீதமஞ்சரி.

    ReplyDelete
  11. துணையிழந் துமுடன் துயிலும் இழந்து
    கணைகாண் மாதிவள் காட்டிய காட்சியை
    கலையிது பாரென கவியிலே தீட்டினை
    விலையிலை உன்றிறமை வாழிநீ! வாழ்கவே!

    மிக மிக அருமை தோழி! என்னவென பாராட்ட உங்கள் ஆற்றலினை...

    அடுத்த பதிவுடன் இது முடிவடையப் போவது வருத்தமே!
    இனி இப்படி எங்கு காண்பது?...

    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.4

    ReplyDelete
  12. // மேஷராசியோடு மட்டுமல்லாது
    மற்றைய ராசிகளோடும் சுற்றித்
    திரியும் சூரியனைப் போலல்லாது
    திகழும் சிறப்புடை சந்திரனாம்
    உற்றவன் அவனைப் பிரியாது
    உலவும் உரோகிணி போலல்லாது
    கொற்றவனைத் தான்பிரிந்திருக்கும்
    கொடுநிலையை நினையச் சகியாது
    தனிமைத் துயராலே தான் வருந்தி
    குவளை மலர்போலும் விழியோரம்
    கசியும் கண்ணீர்த் துளிகள்தம்மை
    சுண்டித் தெறித்தாள் தன் சிவந்த விரலாலே.//
    நீங்கள் நெடுநல்வாடையின் ஒவ்வொரு வரிக்கும் எழுதியிருக்கும் எளிய வரிகள் அருமையோ அருமை..அதிலும் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது..
    சிறப்பான காரியம் செய்தீர்கள் தோழி..உங்களைப் பார்த்து (பொறாமையுடன் :) ) மலைத்து வியந்து வாழ்த்துகிறேன்!பாராட்டுகள் கீதமஞ்சரி :)

    ReplyDelete
  13. அழகிய கவிதைக்கு அதைப்போலவே அழகான கவிதையில் உரை தந்தீர்கள். மகிழ்ச்சி!

    ReplyDelete
  14. பாடலும், விளக்கமும் அருமையாக இருந்தது. தங்கள் பணி சிறப்பானது. பாராட்டுகள்.

    ReplyDelete
  15. தொடக்கம் முதல், நெடுநல்வாடைக்கு நல்ல எளிமையான கவிதை விளக்கம் தந்து வருகிறீர்கள். உதாரணத்திற்கு, இந்த பதிவில்

    நரை விராவுற்ற நறுமென் கூந்தல்
    செம்முகச் செவிலியர் - ( நெடுநல்வாடை (152 -153)

    என்ற வரிகளுக்கு,

    // நறுமணமிகுந்த நரைமயிர்க்கொண்ட
    பொறுமைமிகுந்த வளர்ப்புத்தாய்மார் //

    என்ற தங்கள் கவிதை வரிகளைச் சொல்லலாம்.

    ReplyDelete
  16. நெடுநல்வாடையை நுகர்ந்தோம்.

    ReplyDelete
  17. @கவியாழி கண்ணதாசன்

    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  18. @பால கணேஷ்
    காட்சிகளைக் கண்முன் கொணர்ந்து ரசித்தேனென்று நீங்கள் சொல்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது கணேஷ். இந்த ஸ்வீட் அவ்வளவுதான். வேறொரு ஸ்வீட் விரைவில் பகிரப்படலாம். இனிய தமிழுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கும்போது அதற்கான வாய்ப்பைத் தவறவிடுவேனா... தொடர்ந்து வந்து ஊக்கம் தருவதற்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
  19. @Ramani S

    தங்கள் தொடர் வருகைக்கும் பாடலை இனிதே ரசித்து மகிழ்ந்தமைக்கும் அன்பான நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  20. @Seshadri e.s.

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

    ReplyDelete
  21. @திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தனபாலன்.

    ReplyDelete
  22. @சங்கவி

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி சங்கவி. விருப்பமிருந்தும் நம்மில் பலருக்கு வாய்ப்பமையாமையாலே பல இலக்கியங்களை நுகரத் தவறிவிடுகிறோம். ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  23. @மனோ சாமிநாதன்

    வருகைக்கும் நெடுநல்வாடையையும் விளக்கப்பாடலையும் ரசித்தமைக்கும் அன்பான நன்றி மேடம்.

    ReplyDelete
  24. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  25. @கே. பி. ஜனா...

    வருகைக்கும் மனமுவந்த பாராட்டுகளுக்கும் அன்பான நன்றி ஜனா சார்.

    ReplyDelete
  26. @கோமதி அரசு

    செவிலியர் பாசத்தைப் பறைசாற்றும் இன்னும் பல பாடல்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன. வாசிக்கும்போது மெய்சிலிர்க்க வைப்பவை. வருகைக்கும் பாடலை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

    ReplyDelete
  27. @இளமதி

    இன்கவியால் வாழ்த்தி என்னை இளகச்செய்கிறீர்கள் இளமதி. சற்றே சங்கோஜத்துடன் உங்கள் பாராட்டை ஏற்கிறேன். மிக்க நன்றி இளமதி.

    ReplyDelete
  28. @கிரேஸ்

    உங்கள் இலக்கியச்சேவைக்கு முன் என்னுடையதெல்லாம் எம்மாத்திரம்? ஒவ்வொரு பகிர்விலும் மனம் ஆட்கொள்ளும் உங்களிடமிருந்து கிடைத்திருக்கும் பாராட்டு மிகுந்த உற்சாகம் தருகிறது. நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  29. @Chellappa Yagyaswamy

    தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் அன்பான நன்றி ஐயா.

    ReplyDelete
  30. @கோவை2தில்லி

    வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஆதி.

    ReplyDelete
  31. @தி.தமிழ் இளங்கோ

    தங்களிடமிருந்து கிடைத்திருக்கும் விமர்சனப்பாராட்டு மிகவும் மகிழ்வையும் நெகிழ்வையும் தருகிறது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  32. @மாதேவி

    வருகைக்கும் நெடுநல்வாடையை நுகர்ந்து மகிழ்ந்தமைக்கும் அன்பான நன்றி மாதேவி.

    ReplyDelete
  33. தளிரெனப் பொலிவுடன் மிளிரும்
    தேகமதில் பொலியும் தேமலையும்
    ஓங்கிச் செழித்து வளர்ந்த
    மூங்கிலெனத் திரண்ட தோள்களையும்
    பங்கமிலாக் கச்சையுள் அடங்கிடும்
    பங்கய மொட்டுப்போலும் தனங்களையும்
    தாங்கி வரும் மெல்லிடையை
    ஏந்திவரும் மென்னியல் மகளிர்,
    தலைவியின் மென்பாதங்கள் வருடி
    துயிலுண்டாக்கப் பெரிதும் முனைய.....

    அப்பப்பா எத்தனை வர்ணனைகள் அப்படியும் துயிலாத காதலி..

    ReplyDelete
  34. @Sasi Kala

    முதல் பகுதியிலிருந்து இறுதிவரை ஒரே மூச்சில் வாசித்து உடனுக்குடன் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த உங்களுக்கு என் அன்பான நன்றி சசிகலா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.