26 August 2011

கண்ணாடிச் சட்டத்துக்குள் ஒரு கவிதாயினி


காய்கறி நறுக்கும் வேகத்தோடு
போட்டி போட்டுக்கொண்டு
கவிதைக்கான கருவொன்று,
கச்சிதமாய் உருவானது
அவளது கவனத்தில்!

சமையலை முடித்துவிட்டு
சாவகாசமாய் எழுத எண்ணி,
அவரவர்க்குப் பிடித்தவை, பிடிக்காதவை,
மாமியாருக்கு ஒவ்வாதவை அறிந்து
பார்த்துப் பார்த்து சமைத்து,
சமைத்தப் பாத்திரம் துலக்கி,
கணவர் பிள்ளைகளை அனுப்பி,
அத்தனையும் முடித்து,
அடுப்பையும் அணைத்து,
அவசரமாய் தாள் தேடியபோது,
நினைவுக்கு வந்துபோயின,
நீண்டநேரமாய் சோப்புநீரில்
நீந்திக்கொண்டிருக்கும்
நாளைக்கான சீருடைகள்!

வீணாய்ப்போகும் வெய்யிலை நொந்து,
விரைவாய்த் துவைத்துலர்த்தி,
வீட்டைப் பெருக்கி, சுத்தம்செய்து,
விட்டதைத் தொடர முனைந்தபோது,
மதிய உணவுக்கான மணி அடித்தது!

பத்தியசாப்பாட்டை மற்றவளுக்குப் பரிமாறி,
தானுமிரண்டு கவளம் அள்ளித்திணித்து,
மறுபடி பேனா கையிலெடுக்க,
மழை வருமோவென மாமியார் முனக,
மாடிப்படிகளில் மந்திபோல் தாவியோடி,
காய்ந்த துணிகளைக் களைந்துவந்து,
கலைந்த துணிகளை மடித்துமுடிப்பதற்குள்
'அம்மா' என விளிக்கின்றனர்,
பிள்ளைகள் பள்ளிவிட்டு வந்து!

மீண்டும் அடுக்களைக்கு உயிரூட்டி,
மாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்து,
அங்கிங்கு ஆடித்திரிந்த பிள்ளைகளை
அடக்கி ஓரிடம் அமரவைத்து,
படிப்பித்து, வீட்டுப்பாடம் செய்வித்து,
இன்றைக்கு இது போதுமென்று எழுப்பிய வேளை,
'அப்பாடா' என்றபடியே
களைப்புடன் வந்தமர்கிறார், கணவர்.

சடுதியில் சாப்பாட்டு மேசை நிரப்பி,
கொட்டாவி விட்டக் குழந்தைகளைத் தட்டியெழுப்பி,
உணவூட்டி, உறங்கச்செய்து,
பாத்திரம், அடுப்படி கழுவி,
'மறந்துவிட்டாளோ மருமகள்?' என்றே
மருளும் மாமியாருக்குத்
தக்க மாத்திரைகளைத் தவறாமல் தந்துதவி,
தொய்ந்து விழும் இமைகளை
சிரமத்துடன் தூக்கி நிறுத்தி,
அவர் சொல்லும் அலுவலகக் கதைகளுக்கு,
ஆர்வத்துடன் 'உம்' கொட்டி,
அயர்வு மேலிட உறங்கமுனைகையில்,
காத்திருந்த கனவுகளின் அழுத்தம் தாளாமல்,
சத்தமின்றிக் கலைந்து போகிறது,
அவள் கவிதைக்கரு,
உயிர்ப்பெறாமலும், அவளறியாமலும்!

தலைமாட்டுக் கடிகார அழைப்புக்கு,
காலையில் கண் விழித்த அவளைப்பார்த்து,
கைகொட்டிச்சிரிக்கிறது,
கல்லூரியில் பெற்ற 'கவிதாயினி' பட்டம்,
கண்ணாடிச் சட்டத்துக்குள் சிறைப்பட்டபடி!

23 comments:

  1. good lyrics.keep it up

    ReplyDelete
  2. நீண்டநேரமாய் சோப்புநீரில்
    நீந்திக்கொண்டிருக்கும்
    நாளைக்கான சீருடைகள்!/

    /கண்ணாடிச் சட்டத்துக்குள் சிறைப்பட்டபடி/

    supper...
    vaalththukkal...

    why you can't my said plz...?

    ReplyDelete
  3. சராசரி பெண்ணின் நிலையை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  4. அருமையான கவிதை

    ReplyDelete
  5. அதேதான் மறந்ததுபோக நினைவில் இருப்பவற்றை கணினியில் பதிகிறேன். கடமைகளுக்கு கவிதைகள் பிடிக்காது போலும். வாழ்த்துக்கள் கீதா.

    ReplyDelete
  6. கைகொட்டிச்சிரிக்கிறது,
    கல்லூரியில் பெற்ற 'கவிதாயினி' பட்டம்,
    கண்ணாடிச் சட்டத்துக்குள் சிறைப்பட்டபடி..

    ஒரு நாளின் அழுத்தங்களைச் சுமந்து மனம் லயிக்கும் விஷயத்தில் ஈடுபட முடியாத அவஸ்தையை அழுத்தமாகவே கவிதையாக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  7. அப்படியே எல்லாப் பெண்களின் மனசுலயும் இருக்கதைச் சொல்லிட்டீங்க அழகா!!

    ReplyDelete
  8. யதார்த்தமான கவிதை கீதா. ஆனால் எவ்வளவு நாள் புலம்புவது? மாற்றுத் தன்னிலைகளை உருவாக்குவது ஒரு தேவை இல்லையா?

    ReplyDelete
  9. பாரதிதாசனின் குடும்விளக்கின்
    தலைவிக்கு விளக்கம் தருவதுபோல
    மிகச்சிறந்த கவிதை அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. @ kobiraj

    //good lyrics.keep it up //

    Thank you very much.

    ReplyDelete
  11. @vidivelli,

    supper...
    vaalththukkal...

    Thank you very much.

    ReplyDelete
  12. @ thirumathi bs sridhar

    //சராசரி பெண்ணின் நிலையை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.//


    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஆச்சி.

    ReplyDelete
  13. @ என் ராஜபாட்டை"- ராஜா

    //அருமையான கவிதை//

    கவிதைப் பாராட்டுக்கு நன்றி. உங்கள் வலையில் அளித்த பல்சுவை விரு(ந்)து ரொம்ப நல்லா இருந்தது.

    ReplyDelete
  14. @ சாகம்பரி

    //அதேதான் மறந்ததுபோக நினைவில் இருப்பவற்றை கணினியில் பதிகிறேன். கடமைகளுக்கு கவிதைகள் பிடிக்காது போலும். வாழ்த்துக்கள் கீதா. //

    அழகாச் சொன்னீங்க. உங்களுக்குத் தோன்றும் எதுவும் மறக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன் சாகம்பரி. ஏதோ என்னால் முடிந்தது... :)

    ReplyDelete
  15. @ ரிஷபன்

    //ஒரு நாளின் அழுத்தங்களைச் சுமந்து மனம் லயிக்கும் விஷயத்தில் ஈடுபட முடியாத அவஸ்தையை அழுத்தமாகவே கவிதையாக்கி விட்டீர்கள்.//

    ஆம் ரிஷபன் சார். இன்னும் அழுத்தத்திலிருந்து விடுபட இயலாத பெண்கள் அநேகம் உள்ளனர். உங்கள் கருத்துப்பதிவும் அழுத்தமாகவே உள்ளது. நன்றி.

    ReplyDelete
  16. @ ஹுஸைனம்மா

    //அப்படியே எல்லாப் பெண்களின் மனசுலயும் இருக்கதைச் சொல்லிட்டீங்க அழகா!!//

    முதல் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஹுஸைனம்மா.

    ReplyDelete
  17. @ மிருணா

    //யதார்த்தமான கவிதை கீதா. ஆனால் எவ்வளவு நாள் புலம்புவது? மாற்றுத் தன்னிலைகளை உருவாக்குவது ஒரு தேவை இல்லையா?//

    மாற்றுத்தன்னிலை கண்டதன் மறுவடிவமே இக்கவிதை. இன்னும் வழியறியாது வாழ்பவர்களின் மனமொழியாக மேற்கோள் காட்டப்படவும் இது உதவலாம். எண்ணப்பகிர்வுக்கு நன்றி மிருணா.

    ReplyDelete
  18. @ சக்தி
    //nice//

    Thank you very much.

    ReplyDelete
  19. @ புலவர் சா இராமாநுசம்

    //பாரதிதாசனின் குடும்விளக்கின்
    தலைவிக்கு விளக்கம் தருவதுபோல
    மிகச்சிறந்த கவிதை அருமை!//

    ஆம் ஐயா. குடும்பவிளக்கென வாழும் பல பெண்களின் திறமைகள் குடத்தினுள் இட்ட விளக்காய் வெளியில் தெரியாமலேயே போய்விடுகின்றன. கருத்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  20. அடிக்கடி கலைந்துபோகிற கவிதைக் கருக்கள்...

    அநேகப் பெண்களின் நிலைமையை அழகா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  21. கருத்துரைக்கு நன்றி சுந்தரா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.