பென்சிலை எப்படிப் பிடிப்பது
என்றும் அறிந்திராத வயதில்
அநேக சித்திரம் வரைந்து
அடிக்கடி என்முன் நீட்டுவான்,
என்ன இது கண்டுபிடியென்றொரு
புதிரையும் முன்வைத்து.
கொக்கிபோல் துவங்கியிருந்த
ஒரு கிறுக்கல் பந்திலிருந்து
கோணல்மாணலாய் இழுக்கப்பட்ட
சில கோடுகளைக்கொண்டு
ஏதேனும் ஒரு மிருகமாய் கற்பனை செய்தேன்.
தூக்கிய தும்பிக்கையுடன் யானையோ…
கழுத்துநீண்ட ஒட்டகசிவிங்கியோ…
கட்டாயமாய் இரண்டில் ஒன்று என்றேன்.
அவன் விரித்த விழிகளுடன் என்னைப் பார்த்து
அம்மா! இது நம் வீட்டு நாற்காலி என்றான்.
அடுத்தடுத்த முறைகளிலும்
அவன் உருவகித்தவற்றை
அடையாளங்காண இயலாமல்
முகம் சோரவைத்தேன்.
நீயே சொல்லடா என்றால்
நீதான் கண்டுபிடிக்கணும் என்று
நித்தமும் போராட்டம்.
பழகப்பழக அவன் பாஷை புரிந்தது.
அவன் வரையும் கோடுகளுக்கும்…
வளைவுகளுக்கும்… ஏன், புள்ளிகளுக்கும்
அர்த்தம் கண்டுபிடித்துவைத்தேன்.
அவனுடைய ஓவியங்களை மேயும்
என் கண்களையே பார்த்திருப்பவனின்
கண்களை மகிழ்ச்சியில் மின்னச்செய்தேன்.
அவனுடைய உலகத்தின் சன்னலுக்குள்
அவ்வப்போது எட்டிப்பார்த்ததன் விளைவாய்
சிலந்திமனிதனையும், வெளவால் மனிதனையும்,
ஏலியன்களையும் பென்டென்னின் தசாவதாரங்களையும்,
இரும்புமனிதனையும், இன்னும் சில பிரபலங்களையும்
எளிதில் இனங்கண்டு இன்ப அதிர்ச்சி அளித்தேன்.
இப்போதும் வரைகிறான்.
யாரென்று கேட்டு அதே விளையாட்டை
இன்னமும் தொடர்கிறான்.
அவன் சொல்லும்வரை
கோஸ்ட் ரைடர்களையோ...
ஸ்கேர் க்ரோக்களையோ...
டேர்டெவில்களையோ...
சிவப்பு மண்டையோட்டுக்காரனைப்பற்றியோ..
உண்மையிலேயே எனக்கு
எதுவும் தெரிந்திருக்கவில்லை.
வில்லன்களுக்கும் விசிறியானவனை
விசித்திரமாய்ப் பார்த்து வியக்கிறேன்.
அவன் உலகத்துடனான என் பந்தம்
எப்போது கட்டவிழ்ந்தது என்ற
விவரம் தெரியாமல் விழிக்கிறேன்.
வளர்ச்சி விகிதத்தில் அவனைவிடவும்
வெகுவாய்ப் பின்தங்கிவிட்டேன் என்ற
உண்மை எனக்கு உறைக்க...
எவ்விதத் தயக்கமுமின்றி என் அறியாமையை
அவனிடம் ஒத்துக்கொள்கிறேன்.
அதை ஏற்பதில் மட்டும்
அவனுக்கேன் இத்தனைத் தயக்கம்?
எதுவும் பேசாமல் முகம் சுருங்கி
என்னைவிட்டு விலகிச் செல்பவனைக் கண்டு
சோர்ந்தாலும்.... தேற்றிக்கொள்கிறேன்.
இனி அவனுடைய ஓவியநாயகர்களின்
பிரஸ்தாபங்களைப் பகிர்ந்துகொள்ள
நண்பர்கள் உதவுவார்கள்…
அழகிய கவிதை...
ReplyDeleteஅழகாக முடித்துள்ளீர்...
ReplyDeleteதமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...
ReplyDeleteரொம்ப அழகாயிருக்கு கவிதை. குழந்தைகளின் உலகமே தனிதானே :-))
ReplyDeleteவில்லன்களுக்கும் விசிறியானவனை
ReplyDeleteவிசித்திரமாய்ப் பார்த்து வியக்கிறேன்
மாறுபட்ட அருமையான கற்பனை!
வரிகள் பல மனத்தோடு ஒன்றிப்
போகின்றன! வாழ்த்துக்கள்!!
புலவர் சா இராமாநுசம்
வருக வலைப் பக்கம் தருக கருத்துரை
சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்
ReplyDeleteமிகச் சிறந்த கவிதை இதுதான்
என்னைப்பிடி என நகர்ந்து நகர்ந்து
நடக்கப் பழக்கிய எனது மகள்
பின்னாளில் அவளுக்கு இணையாக
ஓட முடியாது இளைத்து நின்ற போது
நான் கொண்ட உணர்வினை
ஒருமுறை இந்தக் கவிதை
நினைவுறுத்திப்போனது
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தமிழ்மணம் 2
ReplyDeleteஎத்தனை முறை படித்தாலும் முதல் தடவை போலவே உணர்வு. கையை கெட்டியாய் பிடித்துக் கொண்டு கூடவே வருகிறது கவிதை.
ReplyDelete@ #கவிதை வீதி# சௌந்தர்,
ReplyDelete//அழகிய கவிதை...//
//அழகாக முடித்துள்ளீர்...//
//தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...//
இரட்டைப் பாராட்டுக்கும், இனிதே அளித்த தமிழ்மண வாக்குக்கும் இதயங்கனிந்த நன்றி செளந்தர். உங்கள் ஊக்கம் என்னை இன்னும் வளர்க்கும்.
@அமைதிச்சாரல்,
ReplyDelete//ரொம்ப அழகாயிருக்கு கவிதை. குழந்தைகளின் உலகமே தனிதானே :-))//
ஆம், அந்த உலகத்தில் நாமும் இருப்பது மகிழ்வான விஷயம். அவர்களது உலகைவிட்டு வெளியேற்றப்படும்போது கவ்வும் வெறுமை சகிக்க இயலாதது. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி அமைதிச்சாரல்.
@ புலவர் சா இராமாநுசம்,
ReplyDelete//மாறுபட்ட அருமையான கற்பனை!
வரிகள் பல மனத்தோடு ஒன்றிப்
போகின்றன! வாழ்த்துக்கள்!!
புலவர் சா இராமாநுசம்
வருக வலைப் பக்கம் தருக கருத்துரை//
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஐயா.
தங்கள் வலைப்பூ பார்த்தேன். அருமையாக உள்ளது. தொடர்ந்து வருவேன்.
//சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்
ReplyDeleteமிகச் சிறந்த கவிதை இதுதான்
என்னைப்பிடி என நகர்ந்து நகர்ந்து
நடக்கப் பழக்கிய எனது மகள்
பின்னாளில் அவளுக்கு இணையாக
ஓட முடியாது இளைத்து நின்ற போது
நான் கொண்ட உணர்வினை
ஒருமுறை இந்தக் கவிதை
நினைவுறுத்திப்போனது
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள் //
உங்கள் மனவோட்டம் வெளிப்படுத்திய வார்த்தைகளில் நெகிழ்ந்தேன். ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வந்ததும் அனுபவிக்கும் உணர்வு அது. அவர்களது வளர்ச்சியில் மனம் பெருமை கொள்ளும் அதே சமயம் சிறு இடைவெளி கண்டு ஏங்குவதும் உண்மையே... என் பதினொரு வயது மகனிடம் நான் கண்ட அனுபவமே மேற்கண்ட கவிதையாய்.
கருத்திட்டும், வாக்களித்தும் ஊக்குவிப்பதற்கு மிகுந்த நன்றி.
@ த. ஜார்ஜ்,
ReplyDelete//எத்தனை முறை படித்தாலும் முதல் தடவை போலவே உணர்வு. கையை கெட்டியாய் பிடித்துக் கொண்டு கூடவே வருகிறது கவிதை//
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ஜார்ஜ்.
மழலை மொழியும் கவிதை தானே :) அழகன கவிதை :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சாய் பிரசாத்.
ReplyDeleteஎன்னதான் முயன்றாலும் அவர்களுடைய உலகத்திற்குள் நம்மை முழுமையாக ஒப்படைக்க முடிவதில்லை. ஏதோ வகையில் இணைகோடுகளாக அவர்களுடன் பயணிக்கிறோம். தோல்வியையும் கவிதையாக ஒப்புக்கொள்கிறீர்கள். நானும்தான் கீதா.
ReplyDeleteஎனக்கும் இந்தக் கவிதை மிகவும் பிடித்து விட்டது கீதா. வித்தியாசமான கருவும், வாழ்விலிருந்து பெற்ற எடுத்துக்காட்டுகளும். கொஞ்சம் வசன நடை இருந்தாலும் // நண்பர்கள் உதவுவார்கள்// என்ற வரிகள் எழுத்தை உயரமாக்குகிறது. இந்த பக்குவம் பெற்றோர்களுக்கு வர வேண்டிய ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. மிக அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDelete@ சாகம்பரி,
ReplyDeleteஉண்மைதான். இணைகோடுகளாகவேனும் பயணிக்கமுடிந்தாலும் நெஞ்சிலே உண்டாகுமே சிறு நிறைவு. நன்றி சாகம்பரி.
@ மிருணா,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் அழகான விமர்சனத்துக்கும் நன்றி மிருணா.
அவன் உலகத்துடனான என் பந்தம்
ReplyDeleteஎப்போது கட்டவிழ்ந்தது என்ற
விவரம் தெரியாமல் விழிக்கிறேன்..
இதே போல உணர்வதாலேயே இந்தக் கவிதை சற்று கூடுதலாகவே மனசுக்குள் ஆசனமிட்டு அமர்ந்து கொள்கிறது மிகச் சுலபமாய்.
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ரிஷபன் சார். எல்லாப் பெற்றோரும் ஒரு கட்டத்தில் உணரும் உணர்வுதானே அது!
ReplyDelete