20 August 2011

சிவப்பி


குளம் சிவப்பியின் குற்றச்சாட்டுகளுக்குக் காதுகொடுத்தபடி சலனமற்று இருந்தது.சிவப்பி குளத்தை அமைதியாய் இருக்கவிடுவதே இல்லை. நீருக்கு மேலிருந்த தன் கழுத்தை சற்றே உள்ளிழுத்து வாய் கொள்ளா நீரை உறிஞ்சி தலையைத் தூக்கி எட்டிய வரைக்கும் வேகமாய்க் கொப்பளித்துத் துப்பினாள். அவளுள் இருபது வருட கோபமும் இன்னும் அடங்கியபாடில்லை. குளம் எப்போதும்போல் பொறுமையாய் இருந்தது.

முன்னெல்லாம் குளமும் பதில் சொல்லிக்கொண்டிருந்தது. 'என்னை நம்பு, உன்னைபோலவே நானும் ஒரு பெண், நான் அப்படிச் செய்வேனா?' என்றெல்லாம் அவளுக்குப் புரியவைக்க முயன்றது. ஆனால் சிவப்பி அதன் பேச்சுக்கு செவிசாய்க்கவே இல்லை. குளத்து நீரைக் கோழை என்றாள். கொலைகாரி என்று அழுதாள். அவளுக்காகப் பரிதாபப்பட்டு குளமும் அழுதது. அதன் கண்ணீர் வெளித்தெரியாக் காரணத்தால் சிவப்பிக்குக் குளத்தின் துயரம் புரியவில்லை.

யாருமற்றப் பொழுதுகளில் குளத்துடன் ஆவேசத்துடன் சண்டையிடும் அவள்,  குளக்கரையில் எவருடைய நடமாட்டமாவது தென்பட்டால் அமைதியாகிவிடுவாள்.

இன்றும் சிவப்பி, தன் மனக்குமுறலைக் குளத்தில் கொட்டிக்கொண்டிருந்த வேளை, கொலுசுச்சத்தம் கேட்கவும் தீர்க்கமானாள். ஒரு இளம்பெண் அழுக்குத் துணிகள் அடைத்த அலுமினிய அன்னக்கூடையை இடுப்பில் அணைத்துப் பிடித்தபடி படிகளில் இறங்கிக்கொண்டிருந்தாள்.

தண்ணீரில் பூத்துநிற்கும் தாமரை போல் சிவப்பியின் தலை மட்டும் நீருக்கு மேலே தெரிந்தது. வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்பதுபோல் தண்ணீர் முழந்தாளளவு இருந்தாலும் சரி, ஆளை மூழகடிக்கும் அளவு இருந்தாலும் சரி, சிவப்பிக்கு எல்லாமே கழுத்தளவுதான்.

அவள் சிவப்பியைப் பார்த்து சிநேகமாய்ச் சிரித்தாள். அவளுக்கு நினைவு தெரிந்தநாளிலிருந்தே இந்தக் குளமும் சிவப்பியும் பரிச்சயம். பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டிவிட்டு மற்ற உடைகளைக் களைந்து, கொண்டுவந்த துணிகளோடு துவைத்துவிட்டு பின் குளத்துநீரில் மிதந்த சோப்புநுரைகளைக் கைகளால் விலக்கியபடி நீரில் இறங்கினாள்.

அவளுக்கு வயது பதினெட்டு முதல் இருபதுக்குள் இருக்கலாம். சிவப்பி அவளைப் பார்த்தால் சற்று இளகித்தான் போவாள். சிவப்பிக்கு தன் வயது தெரியாது. குளத்துக்கும் அதன் வயது தெரியவில்லை. ஊற்றெடுக்கத் துவங்கிய நாளைப் பற்றிய எந்தக் குறிப்பும் அதன் நினைவேட்டில் இல்லை. சிவப்பி மட்டுமே இருபது வருடங்களாய் அதன் நினைவை, எண்ணத்தை, சிந்தனையை ஆக்கிரமித்திருந்தாள். அவளைக் குளிர்விப்பது மட்டுமே குளத்தின் அன்றாடக் குறிக்கோளாக இருந்தது. செய்யாத தவறுக்காக இப்படித் தன்னைப் பழி வாங்குகிறாளே என்று சிவப்பி மேல் அவ்வப்போது கோபம் வந்தாலும் அவளது அறியாமையை எண்ணி இரங்கவும் செய்தது.

அந்தப் பெண் சிவப்பியிடமிருந்து பாதுகாப்பான தூரத்திலேயே குளித்துக்கொண்டிருந்தாள். சிவப்பி கண்களை எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிவப்பி இதுபோல் அமைதியாய் இருக்கும் வேளைகளில்தான் குளம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளமுடிகிறது. எதையும் யோசிக்க முடிகிறது. இப்போதும் குளம் யோசித்தது. சிவப்பியின் மகளும் இன்று உயிரோடு இருந்திருந்தால் இவள் வயதில் தானே இருப்பாள்?  இருபது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளுக்குள் மூழ்கத்தொடங்கியிருந்தது.

சிவப்பிக்கும் இந்தக் குளத்துக்கும் அப்படி என்ன உறவும் பகையும்? அதற்குமுன் சிவப்பியைப் பற்றிச் சொல்லவேண்டும். நதிமூலம் போல் சிவப்பியின் மூலமும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சிவப்பியின் மூலமாகவும் அது தெரியவரவில்லை.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பருவ எழில்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையென ஊருக்குள் தோன்றினாள். தெருக்களில் அரைகுறை ஆடையுடன் திரிந்துகொண்டிருந்த அவளைப்  பார்த்தவுடனேயே பெண்கள் பதைபதைத்தனர். பல்லிளித்தனர் பல ஆண்கள். காட்டிய பற்களைப் பதம் பார்த்தன அவள் கையெறிந்த கற்கள். அசுரத்தனத்தோடு நின்றவளை மிருகத்தனத்தோடு தாக்கினர் மக்கள். மூர்க்கத்துடன் திரிந்தவள், பசிக்கும்போது மட்டும் அமைதியடைந்தாள். இரவுநேரங்களில் குளக்கரைப் படிகட்டுகளில் படுத்துக்கொண்டாள்.

அவள் நல்ல நிறமாக இருந்தாள். நடையின் நளினம் மேல்தட்டுப் பெண்களை நினைவூட்டியது. அவள் பெரும்பாலும் கடைவீதியின் முனையில் இருந்த டீக்கடை வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள். அவளை வேடிக்கை பார்க்கவென்றே ஒரு கூட்டம் கடைக்கு வரத் தொடங்கியது. டீக்கடைக்காரர் எத்தனை விரட்டியும் இவள் நகரவில்லை. 'ஏ... சிவப்பி...இந்தா'   டீக்கடைக்காரர் கொடுத்த ஒற்றை ரொட்டியோடு இவளுக்கு சிவப்பி என்ற நாமகரணமும் சூட்டப்பட்டது.

பரிதாபப்பட்ட சிலரின் தயவால் சிவப்பி வயிறு வளர்த்தாள். கூடவே ஒரு உயிரும் வளர்த்தாள். கற்பிழந்ததால் சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால் கற்பிழந்தாளா? என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது ஊர்.  அவள் கர்ப்பத்திற்குக் காரணகர்த்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும்  வரவேண்டியிருந்தது.

வீங்கிய வயிறு வெளித்தெரியும்படி சுற்றிய அவளைப் பார்த்த பார்வைகளில் பரிதாபம், இளக்காரம், அருவருப்பு, சமூகத்தின் மேலான கோபம், வெறுப்பு போன்ற பல உணர்வுகள் தென்பட்டன. ஆனால் அவளுக்கு உதவும் குணம் எவரிடத்தும் தென்படவில்லை.

ஒருநாள் சிவப்பி காணாமற்போனாள். சிலர் கவலைப் பட்டனர், சிலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அவளைப் பற்றிய பேச்சில்லாமல் மறந்திருந்த ஒருநாளில் கைப்பிள்ளையுடன் மீண்டும் ஊருக்குள் பிரவேசமானாள்.

இம்முறை அவள் ஆங்காரத்தின் உச்சத்தில் இருந்தாள். பசிக்கு வேண்டுவதையும் மிரட்டிக் கேட்டாள். குழந்தைகள் உண்ணுவதை பறித்து உண்டாள். கடைவீதியில் பலர் மத்தியில் திறந்த மார்பில் குழந்தைக்குப் பாலூட்டினாள். அதைப் பார்த்த சில வக்கிரக் கண்கள் பசியாற்றிக்கொண்டன.

குட்டிக்குரங்கு தன் தாயை இறுகப் பற்றியிருப்பதுபோல் குழந்தையை எந்நேரமும் இறுகப்பற்றியிருந்தாள் அவள். கொடிய உலகத்தில் பிறந்திருக்கும் உணர்வற்று குழந்தை அவ்வப்போது சிரித்தது. அழகிய விக்கிரகம் மாதிரி ஒரு பெண்குழந்தையைப்  பைத்தியக்காரி ஒருத்தி  பெற்றிருப்பதைக் கண்டு, மலட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு தாய்வீடு விரட்டப்பட்ட ஒருத்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். குழந்தை அவளைப் பார்த்தும் சிரித்தது.

ஒரு விடியற்காலையில் ஊரே சிவப்பியின் அலறலில் கண்விழித்தது. உரத்தக் குரலில் ஓலமிட்டபடி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வீதிகளில் வெறிபிடித்ததுபோல் ஓடிக்கொண்டிருந்தாள், சிவப்பி. கையில் குழந்தை இல்லை, உடலில் ஒட்டுத்துணியில்லை. நிர்வாணமாக.... நிராதரவாக.... ஓலமிட்டபடி ஓடியவளை நிர்தாட்சண்யமின்றி கல்லெறிந்து விரட்டிக்கொண்டிருந்தன, சில கல்நெஞ்சங்கள்.

குழந்தை எங்கே? என்னவாயிற்று? ஏன் இந்த அலங்கோலம்? எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகள் கொடுக்கப்படவில்லை.

சொல்லாவிட்டாலும் விடைகள் கிடைத்தன. குட்டிகளோடு இருக்கும் பெண்மிருகங்களை தம் இச்சைக்கு உட்படுத்த ஆண் மிருகங்கள் முதலில் செய்வது குட்டிகளைக் கொல்வதுதானாமே.... இங்கேயும் ஒரு மிருகமோ... பல ஒன்றிணைந்தோ.... அந்தக் காரியத்தை ஆற்றியிருக்கின்றன என்பது குளத்தில் மிதந்துவந்த குழந்தையின் சடலம் உறுதிப்படுத்தியது.

குழந்தையைக் கொன்றது குளம்தான் என்று உறுதியாக நம்பினாள் சிவப்பி. அந்தக் குளத்து நீரைக் கால்களால் மிதித்தாள், கைகளால் அறைந்தாள். கையில் குவித்து வாய் நிறைய உறிஞ்சி வேகமாய் உமிழ்ந்தாள்.குழறிய வார்த்தைகளால் வசவுகளைக் கொட்டினாள். குமுறி அழுதாள். என்ன செய்தும் அவள் உக்கிரம் தணியவில்லை. ஊர் வெறுமனே வேடிக்கைப் பார்த்தது.அவளது விம்மிய மார்பகங்களின் வலியைத் தீர்க்க இயலாத வெறுமையை எண்ணி குளம் கலங்கியது.

சிவப்பி குளத்தினுள் முங்கி முங்கி தன் சிசுவைத் தேடினாள். ஒவ்வொருமுறையும் எதையோ பற்றிபடி மேலே வந்து ஆர்வம் தெறிக்கும் கண்களால் வெறித்தாள். அது பெரும்பாலும் பழந்துணியாகவோ.... பாறாங்கல்லாகவோதான் இருக்கும். ஆனாலும் அவள் அசரவில்லை. அன்றிலிருந்து குளமே அவள் குடியிருப்பானது. அவளுக்காக குளம் அழுதது. கொஞ்சநாள் சிவப்பிக்குப் பயந்து குளக்கரைப் பக்கம் புழக்கம் தவிர்த்திருந்த ஊர், இப்போது அவளை அலட்சியப்படுத்தி மீண்டும் புழங்கத்தொடங்கியது.

அன்று கோரதாண்டவம் ஆடியபடி குளத்தினுள் குதித்தவள்தான். இன்றுவரை குளத்தைத் தன் குழந்தையைக் கொன்ற கொலைகாரியாகவே பார்த்து கொந்தளித்துக்கொண்டிருக்கிறாள். அவளைக் குளிர்விக்கத்தானோ என்னவோ கோடையிலும் குறைந்த அளவு தண்ணீரையாவது தக்கவைத்துக்கொள்ளத் தொடங்கியது குளம்.

இருபது வருடத்துக்கு மேலாகியும் இன்னும் அவள் சோகத்தைக் கரைக்க முடியவில்லை குளத்து நீரால். சிவப்பி ஓய்ந்துவிட்டாள். முன்பு போல் இப்போது சிவப்பியால் முங்கியெழ முடியவில்லை. என்றாவது தன் குழந்தையைக் கண்டுபிடிதுவிடுவோம் என்ற நம்பிக்கையும் அவளுள் தளரத் தொடங்கியது. வெறுமனே குளத்திடம் சண்டையிட்டபடி தன் குழந்தையைத் திருப்பித் தரும்படி வேன்டிக்கொண்டிருக்கிறாள்.

சலனம் கேட்டு குளம் தன்னினைவுக்கு வந்தது. அந்தப்பெண் குளித்துமுடித்துவிட்டு மேற்படிக்கட்டில் நின்றபடி உடைமாற்றிக்கொண்டிருந்தாள். கொண்டுவந்திருந்த ஒரு பையிலிருந்து பொட்டலம் ஒன்றை எடுத்து படிக்கட்டில் வைத்துவிட்டு சிவப்பியைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனாள்.

சிவப்பி ஆர்வத்துடன் குளத்தினின்று வெளியேறி அதை நோக்கிப் போக... அவள் நிர்வாணத்தை தன் நீர்த்துளிகளால் மறைக்க முயன்று தோற்றது குளம்.
*****

படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்

29 comments:

  1. மிக மிக அருமையான படைப்பு
    கவித்துவமான வரிகள்
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
    ரம்யமான நடை
    சிவப்பியை ஒரு குறியீடாகக் கொண்டு
    படிக்கையில் கதை நிறையச் சொல்லிப் போகிறது
    தரமான பதிவைத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான மனம் நெகிழ வைத்த சிறுகதை எனினும் இன்றும் சில பல சிகப்பிகள் வழியறியாமல் வாழ்வு தொலைக்கப்பட்டு மனித வக்கர மிருகங்களின் பிடியில் என்று மாறுவார்கள் இவர்கள்..

    ReplyDelete
  3. சிவ‌ப்பியின் ம‌ன‌நோயினும் கொடிதாய் இருக்கிற‌து ச‌மூக‌த்தின் சுய‌ந‌ல‌ம் சார்ந்த‌ வேட்கைக‌ள். தேர்ந்த‌ ந‌டையில் வாசிப்போரை க‌ட்டியிழுத்து சிவ‌ப்பிக்கான‌ அனுதாப‌மெழ‌ச் செய்த‌மை பாராட்டுக்குரிது.அவ‌ளைப் ப‌சியாற்றும் அக்க‌றையுள்ள‌ ஒரு ஜீவ‌னையும் காட்டி எஞ்சிய‌ வாழ்விற்கான‌ ந‌ம்பிக்கை கீற்றையும் உருவாக்கியிருப்ப‌து ந‌ன்று.

    ReplyDelete
  4. இன்றைய சமுதாயத்தின் இழிநிலை, அவலம்
    அதன் எதிரொலியை மிக அருமையாகப்
    படம் பிடித்துக் காட்டும் கதை!நன்று

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. உண்மை சம்பவம் போல இருக்கிறது. மிக அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மிகுந்த வலியுடன் உணர்ந்து எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள் கீதா.

    ReplyDelete
  6. தன்னிலை மறந்து திரிஞ்சாலும், அவளும் தாய்தானே.. அந்த தாய்ப்பாசத்தை ரொம்ப அழகா சித்தரிச்சிருக்கீங்க. கதை ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  7. @ Ramani,

    உங்கள் பாராட்டுக்கு நன்றி ரமணி சார். அற்புதப் படைப்பாற்றல் கொண்ட உங்களிடமிருந்து பாராட்டுப் பெற்றதில் பெருமகிழ்ச்சி எனக்கு.

    ReplyDelete
  8. @ தினேஷ்குமார்,

    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி தினேஷ் குமார். அபலைகளின் அவலம் சொல்லொணாதது. உங்கள் ஆதங்கம் சரியே.

    ReplyDelete
  9. @ nilaamaghal,

    வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி நிலாமகள். பல ஆண்டுகளுக்கு முன் மனம் பாதித்த சம்பவம் அது. அதையே இங்குக் கதையாக்கியிருக்கிறேன்.

    ReplyDelete
  10. @ புலவர் சா இராமாநுசம்,

    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  11. @ சாகம்பரி,

    உண்மைச்சம்பவம்தான் சாகம்பரி, என் சிறுவயதில் என்னைப் பாதித்த அப்பெண்மணியையும், அவர் சோகத்தையும் எழுத்தில் கொண்டுவர முயன்றிருக்கிறேன். அந்தப் பாதிப்பு என்னைவிட்டு இன்னும் விலகவில்லை என்பதை உங்கள் விமர்சனம் மூலம் அறிகிறேன். நன்றி.

    ReplyDelete
  12. @ அமைதிச்சாரல்,

    தாய்மைக்கு அளவுகோல்தான் என்ன? வருகைக்கும் உணர்வுபூர்வ கருத்துப்பதிவுக்கும் நன்றிங்க அமைதிச்சாரல்.

    ReplyDelete
  13. கவித்துவமான கதை

    ReplyDelete
  14. என்ன சொல்ல கீதா?மனம் கனத்துப் போகிறது.

    ReplyDelete
  15. @ ரிஷபன்

    //கவித்துவமான கதை//

    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  16. @ மிருணா

    //என்ன சொல்ல கீதா?மனம் கனத்துப் போகிறது.//

    பல சமயங்களில் வெறும் பார்வையாளராகவே நின்றுவிடுகிறோம். என்ன செய்வது? வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மிருணா.

    ReplyDelete
  17. படித்தபின் சில நிமிடங்கள் வேறெதையும் சிந்திக்கத் தோன்றவில்லை.மிகச் சிறப்பான படைப்புக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  18. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுந்தரா.

    ReplyDelete
  19. நல்லதொரு படைப்பு கீதா

    தொடருங்கள்

    ReplyDelete
  20. வருகைக்கும் ஊக்கமிகுப் பாராட்டுக்கும் நன்றி ஆமினா.

    ReplyDelete
  21. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி ஆமினா.

      Delete
  22. கதையின் ஒவொரு வரிகளில் இழையோடும் நிஜத்தை நினைகையில் நெஞ்சு விம்மி வெடிக்கிறது .... இந்த துரியோதனர்களுக்கு மத்தியில் பாஞ்சாளிகளாக நிர்கதியற்று நிற்கும் பெண்குலத்தை நினைகையில் இரத்தம் கொதிக்கிறது .....இந்த சிவப்பி போன்று எதனை சிவப்பிகள் திரை மறைவில் புழுங்கி கொண்டிருகிரார்களோ ?எப்போது விடியுமோ அவர்களின் வாழ்கை .....இந்த கேள்விக்குறிகள் வியப்பு குறிகளாகும் நாளை எதிர்பார்க்கிறது உங்களின் கதை மனதை பிசைந்து விட்டது சொல்ல முடியாத பல வலிகளை உருவாக்கியது ..........

    சமுதாயத்தின் இழிநிலைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதும் ஒரு எழுத்தாளனின் கடமை என்பதை உணர்ந்திருகிரீர்கள் // முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும் வரவேண்டியிருந்தது.// அப்பட்டமான , ஆழமான உண்மை .........

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தேர்ந்த விமர்சனம் கண்டு மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. கதையின் ஆழத்தை மிகத் துல்லியமாக அளந்திருக்கிறீர்கள் என்பதை தங்கள் வார்த்தைகள் மூலம் அறிகிறேன். நன்றி சரளா.

      Delete
  23. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (S'inscrire à ce site
    avec Google Friend Connect)

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி யாதவன் நம்பி.

      Delete
  24. வலைச்சரம் மூலமாகத் தங்களை இன்று தொடரும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள். எனது வலைத்தளங்களைக் காண அன்போடு அழைக்கிறேன்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  25. மிகவும் அருமையான கதைக்கருவை, வெகு அழகாகக் கையாண்டு, அற்புதமாகவும் தனித்திறமையுடனும் எழுதி அசத்தியுள்ளீர்கள்.

    கற்பனைதான் என்றாலும் ஆங்காங்கே இன்றும்கூட நடந்திடும் சமூக அவலமான, இதுபோன்ற மனம் நலம் பாதிக்கப்படுவோரின் (அதிலும் குறிப்பாக இளம் பெண்களின்) துயரங்களையும், கொடுமைகளையும், சமூக சிந்தனைகளுடன் சித்தரித்துக்காட்டியுள்ள நல்லதொரு படைப்பினை ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு இன்றுதான் என்னால் படிக்க நேர்ந்துள்ளது.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    //பரிதாபப்பட்ட சிலரின் தயவால் சிவப்பி வயிறு வளர்த்தாள். கூடவே ஒரு உயிரும் வளர்த்தாள். கற்பிழந்ததால் சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால் கற்பிழந்தாளா? என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது ஊர். அவள் கர்ப்பத்திற்குக் காரணகர்த்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும் வரவேண்டியிருந்தது.//

    சமுதாயத்திற்குக் கொடுத்துள்ள இந்த சாட்டையடி வரிகள் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது. தங்களுக்கு மீண்டும் என் ஸ்பெஷல் பாராட்டுகள், மேடம்.

    பிரபல பத்திரிகையொன்றில் பிரசுரமானது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கும் என் பாராட்டுகள், மேடம்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ப்ளாக்கிலும் கருத்திட்டு இங்கும் கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு மிகவும் நன்றி கோபு சார். கதையெழுதும் ஆர்வம் உச்சத்தில் இருந்தபோது எழுதிய கதை இது.. தங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்வளிக்கிறது. நன்றி கோபு சார்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.