இப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமையானால் நூலகம் செல்வதே விக்னேஷுக்கு வாடிக்கையாகிவிட்டது. வீட்டில் முன்பு போல் அம்மாவுடன் நேரத்தைக் கழிக்க முடிவதில்லை.
அம்மாவின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் மெல்ல மெல்ல விக்னேஷை அவரிடமிருந்து விலகவைத்தது. ஆயினும் தன் கடமைகளைத் தவறாமல் செய்துவந்தான். அம்மாவை மருத்துவரிடம் அழைத்துப்போவது, மருந்து மாத்திரைகளை வேளாவேளைக்கு சரியாகக் கொடுப்பது, அவருக்கு கால் பிடித்துவிடுவது போன்றவற்றை இயந்திரமாய்ச் செய்தான்.
இந்த ஞாயிற்றுக்கிழமை தற்செயலாய் வித்யாவை நூலகத்தில் சந்திக்க நேர்ந்தது. அவளைப் பார்த்ததும் தன் துன்பமெல்லாம் விலகியது போல உணர்ந்தான். என்றுமில்லாத உற்சாகம் அவனுக்குள் தொற்றியது. வித்யாவிடம் எல்லாவற்றையும் சொல்லி ஆறுதல் தேட மனம் விழைந்தது.
"விக்கி, எப்படியிருக்கீங்க?"
“ம்!”
"வீட்டுக்கு ஒருநாள் வாங்களேன், அப்பா உங்களை விசாரிச்சார்!"
"வித்யா, உன் கூட கொஞ்சம் பேசணும்! வெளியில வரியா?"
என்னதான் காதலிக்கவில்லை என்று சொன்னாலும், இவனுக்கு அவள்மேல் காதல் இருப்பதை அவள் அறிந்திருந்தாள். அதனால் குதூகலத்துடன் முன்னே சென்றாள். 'அம்மாவிடம் பேசியிருப்பானோ? அவர் அழைத்துவரச் சொல்லியிருப்பாரோ?'
விக்னேஷ், அவளிடம் பேசவேண்டியவற்றை மனதுக்குள் ஒருமுறை ஒத்திகை பார்த்துக்கொண்டான்.
அந்த நூலகவளாகத்தில் அடர்ந்திருந்த மரங்களின் நிழலில் தன் கைக்குட்டை விரித்து வித்யா அமர, அவளெதிரில் தானும் அமர்ந்துகொண்டான்.
"சொல்லுங்க, விக்னேஷ்! என்ன விஷயம்?"
ஆவல் தாளாதவளாய் வித்யா கேட்க, ஒத்திகை செய்யப்பட்ட அத்தனையும் மறந்துபோக, தேர்வுத்தாளைக் கையில் வாங்கிய கடைசிபெஞ்ச் மாணவனைப் போல் திருதிருவென விழித்தான்.
"என்னப்பா, என்னாச்சு?"
"வ...வந்து...வித்யா...அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை..."
"எதை....? நம்ம காதலையா?"
குறும்பு பொங்க குறுகுறுப்புடன் அவனைப் பார்த்தபடியே கேட்க, அவன் சட்டெனத் தலை கவிழ்ந்துகொண்டான்.
இப்பொழுதாவது சொல்லிவிட மாட்டானா என்று அவள் மனம் ஏங்கியது.
அருகில் சாரையாய் சென்றுகொண்டிருந்த எறும்புகளின் குறுக்கே ஒரு குச்சியால் கோடு இழுக்க, திருவிழாவில் காணாமல் போன பிள்ளைகளென திக்குத் தெரியாமல் அலைந்தன அந்தச் சிற்றெறும்புகள்.
"ப்ச்! அதையேன்ப்பா கலைக்கிறீங்க? அது பாட்டுக்குதானே போய்கிட்டிருக்கு?"
அவற்றுக்காகப் பரிதாபப்பட்டாள், வித்யா.
"இப்படிதான் என் கனவுகளை.... ஆசைகளை....... நம்பிக்கையை..... எங்கம்மா கலைச்சிட்டாங்க, வித்யா,!"
போட்டு உடைத்துவிட்டான். எப்படிச் சொல்லப்போகிறோமென்று ஏராள ஒத்திகை பார்த்தவன், எப்படியாவது சொன்னால் போதுமென்று முடிவெடுத்து சொல்லவேண்டியதை அவள் முகம் பாராமல் சொல்லி முடித்துவிட்டான்.
சட்டென்று அவனைக் கேட்டாள்.
"சரி, இதில் என்ன பிரச்சனை, உங்களுக்கு? நீங்களும் உங்க அம்மா என்ன சொல்றாங்களோ அதைச் செய்யத்தானே விரும்புவீங்க?"
"அது...அது...."
"என்ன தயக்கம்?"
"என் கல்யாணம் என் விருப்பப்படி நடக்கணும்னு விரும்புறேன், வித்யா!"
"அதை நீங்க உங்க அம்மாகிட்டயே சொல்லியிருக்கலாமே!"
“வித்யா, ஒண்ணு தெரியுமா? எங்க அம்மா என்கிட்ட சத்தியம் வாங்குனதுக்கு அப்புறம்தான் எனக்குன்னு ஒரு வாழ்க்கை, என் காதல், என் கல்யாணம்னு தோண ஆரம்பிச்சிடுச்சி”
“என்ன உளறுரீங்க?"
"ஆமாம், வித்யா! என் மனசில் நீதான் இருக்கிறே! அன்னைக்கு அம்மா இப்படிப் பண்ணிட்டாங்களேன்னு மனசுடைஞ்சு போனப்ப எனக்கு நீதான் ஆறுதல் தந்தே, வித்யா! உன்னோட தவிப்பு இப்ப எனக்குப் புரியுது, வித்யா! ஐ லவ் யூ, வித்யா!"
"விக்னேஷ், எனக்கு இப்பதான் ரொம்பக் கவலையா இருக்கு! உங்க அம்மாவை ஏமாத்தாதீங்க, விக்னேஷ்!”
"ப்ச்! அன்னைக்கு அம்மாகிட்ட ஏன் தான் சத்தியம் செஞ்சேனோன்னு இருக்கு! மறுத்திருக்கலாம், ஆனா...அது எனக்குப் பழக்கமில்லாதது. அதுக்கப்புறம் உன்னை நினைக்காமலாவது இருந்திருக்கலாம். ஆனா.....அதுவும் முடியலை. என்ன பண்றதுன்னே தெரியலை, வித்யா! ஒரே குழப்பமா இருக்கு!"
"இப்ப புலம்புறதில என்ன லாபம், விக்னேஷ்?"
அவள் எறும்புகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். சற்றுநேரம் அங்குமிங்கும் அலைந்த எறும்புகள் வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கத் துவங்கியிருந்தன. ஒன்றன்பின் ஒன்றாக அந்த வரிசையில் இணைந்து மீண்டும் தம் இலக்கு நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தன.
வித்யா சிரித்தாள்.
"ஏன் சிரிக்கறே, வித்யா? என்னைப் பார்த்தா ஒரு பைத்தியக்காரன் மாதிரி இருக்கா?"
"விக்னேஷ்! அந்த எறும்புகளைப் பாருங்க, கலைச்சுவிட்டாலும் வேற பாதை அமைச்சு, தான் போகவேண்டிய இடத்துக்கு கரெக்டா போய்ச்சேருதுங்க. அதுகளால் முடியுற ஒரு செயலை ஏன் உங்களால் செய்ய முடியாது? யோசிச்சுப் பாருங்க!"
"வித்யா! நீ சொல்றது சரி...ஆனா...எங்கம்மா....."
"அவங்க இப்ப இருக்கிற நிலைமையில எல்லாமே தப்பாதான் தோணும். அதுக்கு நீங்க அவங்க உடம்புக்கு மருத்துவம் பண்றதோடு அவங்க மனசுக்கும் மருத்துவம் பண்ணணும்."
"அது எப்படி?"
"அவங்க தன்னைச் சுத்திப் போட்டிருக்கிற வட்டத்தில் இருந்து அவங்களை வெளியில கொண்டுவாங்க. இந்த உலகத்தில் நீங்களும், உங்க அம்மாவும் மட்டுமே வாழலைன்னு புரியவைங்க. காலம் காலமா அடைபட்டுக்கிடக்கிறவங்களை வெளியில் கொண்டு வரது அத்தனைச் சுலபமில்லே. இருந்தாலும் முயற்சி செய்யுங்க! கொஞ்சமாவது பலன் கிட்டாதா?"
"அம்மா வெளியில் வந்து பழகுறதுக்கும், நம்ம காதலுக்கும் என்ன சம்பந்தம்?"
" ஹும்! உங்க அம்மா மட்டும் இல்லே...நீங்களும் கூட உங்க வட்டத்தை விட்டு வெளியில் வரணும், விக்னேஷ். என்ன ஒரு வித்தியாசம்னா....உங்க அம்மாவுடைய வட்டத்தை விட உங்க வட்டம் கொஞ்சம் பெரிசு!"
"நீ சொல்றது சரிதான் வித்யா! நானும் இப்பதான் அதையெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன்!"
"அதை நீங்க என்கிட்ட உங்க காதலைச் சொன்ன நிமிஷமே புரிஞ்சுகிட்டேன், ரொம்ப தேங்ஸ்பா!"
"வித்யா, நீ எப்பவும் இப்படியே யோசனை சொல்லிகிட்டு வாழ்க்கை பூராவும் என் கூடவே வரணும்னு விரும்பறேன்பா!"
"அப்படின்னா...இத்தனைநாள் அம்மா யோசனை...இனிமே என் யோசனையா? எப்பதான் நீங்களா யோசிக்கப்போறீங்க?"
அவள் குறும்பாய்க் கேட்க, விக்னேஷ் பதில் சொல்லமுடியாமல் அசடு வழிந்தபடியே சிரித்தான்.
"ஐயே...போதுமே! சகிக்கல...வாங்க, போவோம்!"
"எங்க?"
"இந்த நல்லநாளைக் கொண்டாட எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தாங்க!" என்று கூறிவிட்டு குழந்தையென முன்னே ஓடினாள்.
தொடரும்...
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
செல்வார்க்குச் செல்லாதது இல்.
மு.வ உரை:
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
----------------------------------
----------------------------------
தொடர்ந்து வாசிக்க
முந்தைய பதிவு
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.//விடாமுயற்சி விசுவரூப வெற்றியென்று சொல்றீங்க.
ReplyDelete//தேர்வுத்தாளைக் கையில் வாங்கிய கடைசிபெஞ்ச் மாணவனைப் போல் திருதிருவென விழித்தான்//
ReplyDeleteதெளிந்த நீரோடைப் போன்ற கதையின் போக்கும்
ஆங்காங்கே உரையாடலில் வருகின்ற உவமைகள்
மேலே தந்துள்ளதைப் போன்ற கவிநயம் படைத்த
வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளன
தெடருங்கள், தெடர்ந்து வருவேன்
நன்றி! வணக்கம்!வாழ்த்து!
புலவர் சா இராமாநுசம்
nice
ReplyDelete//அந்த எறும்புகளைப் பாருங்க, கலைச்சுவிட்டாலும் வேற பாதை அமைச்சு, தான் போகவேண்டிய இடத்துக்கு கரெக்டா போய்ச்சேருதுங்க. அதுகளால் முடியுற ஒரு செயலை ஏன் உங்களால் செய்ய முடியாது? //
ReplyDeleteதன்னம்பிக்கையூட்டும் தங்கமான வரிகள்...
வாழ்த்துக்கள்.
அருமையான சரளமான ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடை! வாழ்த்துக்கள்!!
ReplyDelete@ சாகம்பரி,
ReplyDelete//விடாமுயற்சி விசுவரூப வெற்றியென்று சொல்றீங்க.//
இல்லையா பின்னே? அந்த நம்பிக்கையில்தானே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கருத்துக்கு நன்றி சாகம்பரி.
@ புலவர் சா இராமாநுசம்
ReplyDelete//தெளிந்த நீரோடைப் போன்ற கதையின் போக்கும்
ஆங்காங்கே உரையாடலில் வருகின்ற உவமைகள்
மேலே தந்துள்ளதைப் போன்ற கவிநயம் படைத்த
வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளன
தெடருங்கள், தெடர்ந்து வருவேன்
நன்றி! வணக்கம்!வாழ்த்து!//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஐயா.
@ மாலதி,
ReplyDelete//nice//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி.
@ MUTHARASU,
ReplyDelete//தன்னம்பிக்கையூட்டும் தங்கமான வரிகள்...
வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றிங்க முத்தரசு.
@ மனோ சாமிநாதன்
ReplyDelete//அருமையான சரளமான ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடை! வாழ்த்துக்கள்!!//
உங்கள் உற்சாகமூட்டும் வாழ்த்து என்னை இன்னும் எழுதவைக்கும். நன்றி மேடம்.
அவசர வேளை காரணமாக இடையில்
ReplyDeleteஇரண்டு பதிவுகளை படிக்காமல் விட்டுவிட்டேன்
அதனால் மிகச் சரியாக கதை மாந்தரின்
உணர்வின் போக்கு புரியாமல் போய்விடும் என்று
இன்று 13 பதிவுகளையும் ஒரே மூச்சில்
படித்து முடித்தேன்,அருமை அருமை
இயக்குநர் பாலச்சந்தர் அதிக கதாபாத்திரங்களை
இழுத்துப்போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் சில
குறிப்பிட்ட கதாபாத்திரங்களை மட்டும்
கைவசம் வைத்துக்கொண்டு அவர்களது
ஒவ்வொரு சிறு மன உணர்வுகளைக் கூட
நாம் உணரச் சொல்லிப் போவார்
தங்களும் அதே பாணியில்
பிரபு சுந்தரி விக்னேஷ் அவரது தாயர்
வித்யா என சில முக்கியமான கதாபாத்திரங்களை மட்டும்
கையாண்டு அவர்களது உணர்வுகளை மிக நுணுக்கமாக
படிப்பவர்கள் உணரும் வண்ணம் சொல்லிப்போவது
அருமையிலும் அருமை.கொவிலுக்குச் செல்கையில்
அவரது தாயாரின் மனோ நிலையை விவரித்த விதம்
அருமையிலும் அருமை
வெகு நாட்களுக்குப் பின் ஒரு நல்ல நாவலைப் படிக்கிற திருப்தி
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
தங்கள் மனந்திறந்த பாராட்டுக்கு நன்றி ரமணி சார். உங்கள் ஊக்கத்தால் என் எழுத்து இன்னும் வளப்படும். மறுபடியும் முதலிலிருந்து படித்ததோடு விரிவான கருத்துரையும் வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
ReplyDelete