8 August 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (11)



பிரபு வீட்டுக்குப் போகும் வழியில் பூக்காரம்மாவிடம் மூன்று முழம் கனகாம்பரமும், பக்கத்துக் கடையில் கொஞ்சம் புளிப்பு மிட்டாயும் வாங்கிக்கொண்டான். சுந்தரிக்கு இப்போதெல்லாம் மல்லிகைப்பூவின் வாசமே வயிற்றைப் புரட்டி எடுக்கிறதாம்.

 பூ மட்டுமில்லை, பழ வாசம், கவுச்சி எதுவுமே பிடிக்காமல் போய்விட்டது. மசக்கை படுத்தும் பாட்டை இவனால் பார்க்கச் சகிக்கவில்லை. சரியாக சாப்பிடுவதுமில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி.....வாந்தி.....வாந்திதான்!

டாக்டரிடம் காட்டினால்  இது சகஜம்தான் என்று கூறி வாந்தி நிறுத்த மாத்திரை தந்தார். அதையும் வாந்தியெடுத்துவிடுகிறாள்.  சுந்தரியைப் பார்க்கப் பார்க்க பாவமாய் இருந்தது. அவளை வேலை எதுவும் செய்யாமல் சும்மா இரு என்றாலும் கேட்பதே இல்லை. .  கஷ்டப்பட்டு எதையாவது சமைத்துவிடுகிறாள்.
வேலைக்காரப் பெண் வருவதற்குள்ளாகவே எல்லா வேலைகளையும் முடித்துவிடுகிறாள்.

ஹும்! இன்னும் எத்தனைக் காலமோ இந்த அவஸ்தை? பொதுவாக நான்கு அல்லது ஐந்து மாதத்துடன் வாந்தி நின்றுவிடுமாம். இவளுக்கோ ஏழாவது மாதம் வரை தொடர்ந்து பாடாய்ப்படுத்துகிறது.

இப்படியொரு வேதனையை அவள் அனுபவிக்கவேண்டுமென்று முன்பே தெரிந்திருந்தால் குழந்தைப்பேற்றைக் கொஞ்சகாலம் ஒத்திப் போட்டிருந்திருக்கலாம். குழந்தை பிறந்தால் இன்பம் இரட்டிப்பாகுமே என்று நினைத்தால் அது வருவதற்கு முன் இப்படி படுத்துகிறதே அவளை?

அப்பப்பா! போதும்! இந்த ஒரு குழந்தையுடன் போதுமென்று முடிவெடுத்துவிட வேண்டியதுதான். இன்னொரு முறை சுந்தரி இப்படித் தவிப்பதைப் பார்க்க என்னால் முடியாது.

பிரபு முடிவெடுத்தவனாய் வண்டியை வேகம் கூட்டி வீடு வந்திறங்கினான்.

வாசலில் நின்றவண்ணம், எதிர்வீட்டுப் பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்த கோமதியம்மா,  இவனைக் கண்டதும் புன்னகைத்து ஒதுங்கி வழி விட்டார்.

பிரபுவின் போர்ஷன் மாடியில் இருந்தது. வீட்டுக்காரர்கள் வயதானவர்கள் என்பதால் கீழ்ப்பகுதியில் இருந்துகொண்டு இரண்டு அறைகள் கொண்டிருந்த மாடிப்பகுதியை வாடகைக்கு விட்டிருந்தனர். அவர்களுக்கு இரண்டுமகன்கள். இருவரும் அமரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டனர். மூன்று வருடத்துக்கு ஒருமுறை வந்து போவார்கள்.

பிள்ளைகள் தங்கள் கூடவே இல்லாத ஏக்கம் அவ்வப்போது அவர்கள் பேச்சில் வெளிப்படும். அதனாலோ என்னவோ, பிரபுவையும், சுந்தரியையும் தங்கள் பிள்ளைகள் போலவே பார்த்து எல்லா வசதிகளும் செய்துகொடுத்தனர்.

காலை பத்து மணிக்கு தெருக்குழாயில் நல்ல தண்ணீர் வரும். பிரபு தனியாளாய் இருந்தபோது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. அவனுக்குத் தேவை ஒரு குடம் தண்ணீர். கோமதியம்மா தான் பிடித்து வைத்திருப்பார். இவன் வந்ததும் மேலே எடுத்து வருவான்.

சுந்தரி வந்தபிறகு, கீழ் வீட்டில் வேலை செய்யும் சாந்தியையே தங்களுக்கும் பேசிக்கொண்டான். அவளே இரண்டு குடத்தில் தண்ணீர்  பிடித்து மேலே கொண்டுவந்து வைத்துவிடுவாள்.

சாந்தியின் குழந்தைக்கு முடியவில்லை என்று ஒருவாரமாய் அவள் வேலைக்கு வரவில்லை. அதனால் குடத்தை, வேலைவிட்டு வந்து மாடிக்கு எடுத்துவருவதாக பிரபு சொல்லியிருந்தாலும், சுந்தரியால் அதுவரை பொறுமை காக்க முடியாது. தானே கொண்டுவந்துவிடுவாள்.

கர்ப்பமான பிறகு குடத்தைத் தூக்காதே என்று எத்தனை முறை கூறினாலும் கேட்பதில்லை. படியேறும்போது மயக்கம் வந்துவிட்டாலோ, தடுமாறிவிட்டாலோ என்னாவது? அவள் கேட்பதே இல்லை.

இன்றும் வராந்தாவில் குடங்களைக் காணவில்லை. பிரபு பார்வையை அங்குமிங்கும் தவழவிடுவதைப் பார்த்த கோமதியம்மா குறிப்பறிந்து வாய்திறந்தார்.

"தம்பீ! கொடத்த தானே தேடுறீங்க? சொல்ல சொல்ல கேக்காம சுந்தரிப்பொண்ணு அப்பவே எடுத்துட்டுப் போயிடுச்சுங்களே! எங்க வீட்டய்யா கூட,  தான் கொண்டுவந்து தரேன்னு சொன்னாரு! வேணாமின்னு சொல்லிடுச்சு!"

"அப்படியா?"

"நீங்க கொஞ்சம் சொல்லி வைங்க! மாசமா இருக்கு! ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போவுது!"

"சரிம்மா, சொல்றேன்!"

மாடியேறியதும் தன் கையிலிருந்த பூப்பொட்டலத்தை கட்டிலில் வீசினான்.

"என்னங்க, எப்ப வந்தீங்க?"

"உனக்கு எத்தன தடவ சொல்றது? அறிவில்லே?"

"என்னாச்சுன்னு இப்படிக் கத்துறீங்க?"

"எதுக்கு தண்ணிக்குடத்தை  எடுத்துட்டு மாடி ஏறுறே?"

"அதுக்குதானா? நான்கூட என்னமோன்னு நெனச்சு பயந்திட்டேன்! நீங்க இப்படிக் கத்துறதப் பாத்தா நாம ரெண்டுபேரும் சண்டை போடறதா அக்கம்பக்கத்தில நெனச்சிப்பங்க!"

"பேச்ச மாத்தாதே! நான் கோபமாத்தான் இருக்கேன்!"

"ஏங்க, பொழங்குறதுக்கு தண்ணி வேணாமா? அதுக்குதான் எடுத்திட்டு வந்தேன். நான் செய்யாத வேலையா? இதெல்லாம் என்னா கொடம்? நம்ம ஊர்ல இருக்குமே...எப்பா...எவ்ளோ பெரிசு...அதையெல்லாம் நான் தான் தூக்குவேன். என்னவோ பச்சப்புள்ளயாட்டம் இத்தனூண்டு இருக்கு, இதுக்குப் போய் ஆர்ப்பாட்டம் பண்றீங்களே!"

அவள் அலட்சியமாய்ச் சொல்ல பிரபுவுக்கு மேலும் கோபம் வந்தது.

"இங்கே பார்! அந்தக்கதையெல்லாம் அப்போ! இப்போ நீ என் மனைவி! குழந்தையை சுமந்துகிட்டு இருக்கிற! சும்மா வாயாடம நான் சொல்றதை செய்!"

"அடேங்கப்பா! என்னா கோவம் வருது உங்களுக்கு?"

"பின்னே, சொல்லச் சொல்லக் கேக்காம செஞ்சா கோவம் வராதா?"

"சரி..சரி...இனிமேல் தூக்கலை. அப்படி தண்ணி தேவைப்பட்டா.... , கீழ வந்து கிண்ணத்தில் எடுத்துட்டுப் போறேன்!"

"அதுகூட வேணாம்! நீ படியேறி இறங்கவே வேணாம்! வேலையெல்லாம் ஒத்திப்போடு! நான் வந்ததுக்கு அப்புறம் செஞ்சுக்கலாம்."

"இது ரொம்ப நல்லாயிருக்கே?"

சுந்தரி மேவாயில் கைவைத்து, தலைசாய்த்துச் சிரித்தாள்.

"நான் சீரியஸா சொல்றேன், விளையாடாதே!"

"சரி. இனிமே நீங்க சொன்னபடியே செய்யிறேன்"

"..............."

"அதான் ..சரின்னு சொல்லிட்டேனே! கொஞ்சம் சிரிக்கிறது...."

"……...."

"வேணாம், வேணாம், உம்மணாமூஞ்சியே நல்லாயிருந்ததுது."

அவன் சிரித்தான். அவள் தோளில் சாய்ந்து தன் பெருத்த வயிறு குலுங்க அவளும் சிரித்தாள்.

ஏழாம் மாத இறுதியில் சுந்தரிக்கு வளைகாப்பு நடந்துமுடிந்தது. அக்கம்பக்கத்தை அழைத்து, மிக விமரிசையாக வளைகாப்பு நிகழ்த்தி முடித்தார் கோமதியம்மா. பிரபு சுந்தரி கதை அவர்களுக்குத் தெரிந்திருந்ததால், அவர்களே முன்னின்று எல்லா ஏற்பாடுகளும் செய்து அச்சுபகாரியத்தை நிகழ்த்தினர். சுந்தரிக்கும் இதில் மிகவும் சந்தோஷம்.

விக்னேஷ், அம்மாவை அழைத்தபோது, பிடிவாதமாய் வர மறுத்துவிட்டார். அம்மா போய்ப் பார்த்து ஏதாவது ஆலோசனைகள் சொல்வார்; ஆறுதல் சொல்வார் என்று எதிர்பார்த்தான். அம்மா பிடிவாதமாக இடத்தைவிட்டு நகரமாட்டேன் என்று விட்டார். அவனுக்கு அம்மாவின்மேல் வருத்தம்தான். ஆனாலும், அவர் உடல்நிலையைக் காரணம் காட்டி, அம்மாவால் படியேற இயலாது என்று சொல்லி சுந்தரியின் கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொண்டான்.

அங்கு போயிருந்தபோதுதான் பிரபு ரகசியமாய் ஒரு விஷயம் சொன்னான்.  ஊர்க்காரப்பையன் ஒருவனை சமீபத்தில் சந்திக்க நேர்ந்ததாம். பிரபுவின் பெற்றோர் இன்னும் இவன்மீதும், சுந்தரி மீதும் கோபமாக இருக்கிறார்களாம். சுந்தரியின் பெற்றோரை தரக்குறைவாகப் பேசியதால், சுந்தரியின் தம்பி அவர்களை எதிர்க்க, அவனை ஆள்வைத்து அடித்து, அதனால் ஊருக்குள் ஜாதிப்பிரச்சனையாகிவிட்டதாம்.

பிரபுவின் பெற்றோரின் தொல்லையும், துன்புறுத்தலும் தாங்காமல் சுந்தரியின் பெற்றோரும், தம்பியும் ஊரைவிட்டே போய்விட்டதாகவும், எங்கு போனார்கள் என்று எந்த விவரமும் தெரியவில்லை என்றும் சொல்லக்கேட்க, விக்னேஷுக்கு மிகவும் வேதனையாய் இருந்தது.

இந்த விவரம் சுந்தரிக்குத் தெரியாது என்றும், குழந்தை பிறந்தபிறகு அவளிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் சொன்னான்.


தொடரும்....




மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

மு. உரை:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
---------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

8 comments:

  1. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு.//

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. இயல்பா வீடுகளில் நடக்கும் சம்பவம்போலேயே கதை நகர்கிறது.அருமை கீதா !

    ReplyDelete
  3. கதை நகர்த்தும் நடை அழகு...தொடர்கதை என்பதால் ஆரம்பத்திலிருந்து படிக்க ஆரம்பிக்கிறேன் நன்றி... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @ இராஜராஜேஸ்வரி,

    தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  5. @ ஹேமா,

    கருத்துக்கு நன்றி ஹேமா. வாழ்க்கையின் ஓட்டத்துடனே கதை நகர்த்திச் செல்கிறேன். அன்பின் ஆளுமை மட்டுமே இங்கு வில்லன்.

    ReplyDelete
  6. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாய உலகம்.

    ReplyDelete
  7. கதை நகர்த்துவது கையில் பொம்மைகளை வைத்துக் கொண்டு பொம்மலாட்டம் ஆடுவதுபோல் ரசிக்கும்படி உள்ளது.

    ReplyDelete
  8. கருத்தூட்டி உற்சாகமளிப்பதற்கு நன்றி சாகம்பரி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.