30 August 2015

பறவைகளுக்கு ஏனிந்த அடையாள அட்டைகள்?


சிட்னியிலுள்ள சில பூங்காக்களிலும் பொது இடங்களிலும் காணப்படும் சில காக்கட்டூ (cockatoo) மற்றும் ஐபிஸ் (ibis) பறவைகளின் இறக்கைகளில் எண் அட்டைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஐபிஸ் என்பது வேறொன்றும் அல்ல, அரிவாள்மூக்கன் என்றும் அன்றில் என்றும் நம் நாட்டில் குறிப்பிடப்படும் பறவைதான்.

கந்தகநிறக் கொண்டை காக்கட்டூ



ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில்


பறவைகளுக்கு ஏனிந்த எண் அட்டைகள் என்று தீவிரமாய் யோசித்துப் பார்த்ததில்லை. அதெல்லாம் பறவை ஆய்வாளர்களின் பொறுப்பு என்று இருந்துவிட்டேன். ஆனால் அதில் பொதுமக்களுக்கும் பங்குண்டு என்பதை சமீபத்தில்தான் அறிந்தேன். எண் அட்டை பொருத்தப்பட்ட பறவைகளைப் பார்ப்பவர்கள், அந்த எண் அட்டையின் நிறம், எண் இவற்றோடு பறவையைப் பார்த்த இடம், நாள், நேரம் போன்றவற்றைக் குறிப்பிட்ட இணையப்பக்கங்களில் பதியுமாறு வனத்துறை அலுவலகத்திலிருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.






இத்தகவல்கள், இப்பறவைகளின் வாழ்விடம், புலம் பெயர்வு, இனப்பெருக்கம் போன்றவற்றைக் கண்காணிக்கப் பெரிதும் உதவுவதோடு, மக்கள் புழங்கும் நகர்ப்பகுதிகளில் இவற்றின் நடமாட்டம், இயற்கை சார்ந்த வனப்பிரதேசங்களில் இவற்றின் நாட்டம் போன்றவற்றையும் ஆய்வு செய்ய பயன்படுகிறதாம். பறவைகளின் கால்களில் அடையாள வளையம், கழுத்துப்பட்டை மாட்டி கண்காணிப்பதைப் போன்றதுதான் இதுவும்.




சில காக்கட்டூ பறவைகளின் உடலில் GPS transmitters பொருத்தப்பட்டு, அவற்றின் நடவடிக்கைகள் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கொருமுறை பதிவு செய்யப்படுகின்றன. சூரிய சக்தியால் இயங்கும் இந்த அலைபரப்பிகளில் பதிவாகும் பதிவுகள் செயற்கைக்கோள் வழியாக ஒவ்வொருநாளும் பெறப்படுகின்றன.


சூரிய சக்தியால் இயங்கும் ட்ரான்ஸ்மிட்டர்

இயல்புக்கு மாறாய் இறக்கையில் சுமந்திருக்கும் அட்டைகள் பறவைகளுக்கு நெருடலாய் இருக்காதா? இருக்காது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 800 கிராம் எடையுள்ள காக்கட்டூவுக்கு 20 கிராம் எடையிலான ட்ரான்ஸ்மிட்டர்கள் ஒரு பெரிய பாரமாய் இருக்காதாம். மேலும் ஒரு பறவையின் உடலில் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குதான் இந்த அலைபரப்பிகள் பொருத்தப்பட்டிருக்குமாம். அதன்பின் அகற்றப்பட்டுவிடுமாம். அது தவிர, இனப்பெருக்கக் காலத்துக்குப்பிறகான இறகுதிர்தலின்போது இறகோடு பிணைக்கப்பட்டுள்ள அட்டைகளும் உதிர்ந்துவிடுமாம்.  
******

31 comments:

  1. புதிய தகவல்கள். சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. வியப்பிற்குரிய செய்திகள்சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ஐயா.

      Delete
  3. அரிய தகவல். நான் வெகுநாட்களாய் தெரிந்துகொள்ள நினைத்தது. அறியத்தந்தமைக்கு நன்றி!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவால் உங்களுக்குப் பயனுண்டு எனில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி செந்தில்குமார்.

      Delete
  4. சில செய்திகள் அறிந்தவை. பல செய்திகள் புதியன. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  5. பறவைகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு உதவுமோ என்னவோ. அரிய தகவல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எண்ணிக்கைக் கணக்கெடுப்பை விடவும் அவற்றின் வாழ்க்கை முறை பற்றிய ஆய்வுக்குப் பெரிதும் உதவும் என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  6. தகவல் மிகவும் வியப்பை அளித்தது...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  7. அந்நாட்டில் மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம். எனவே வனத்துறை அறிவிப்பைக் கேட்டு பெரும்பாலான மக்கள் ஒத்துழைப்பார்கள். அதனால் துல்லியமாக அவர்களால் பறவைகளைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்க முடிகிறது. நம் நாட்டில் இது போல் வர இன்னும் பல்லாண்டுகள் ஆகும். சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கீதா!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அக்கா. இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதன் மூலம் நம் மக்களும் இதைப்பற்றி அறியமுடிவதுடன் இதுபோன்ற ஆய்வுகளுக்கு உதவும் மனநிலைக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் முடிந்தால் அது போதுமே. மதுரையில் இதுபோன்ற பறவை ஆய்வுக்குப் பொதுமக்கள் பலரும் தங்கள் பங்களிப்பை வழங்கிவருவதை சமீபத்தில் அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

      Delete
  8. அதிசய தகவல் மற்ற பறவைகள் அதை கொத்தி எடுத்து விடாதா ?
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. மற்ற பறவைகள் எதுவும் சட்டை செய்யவில்லை. ஆனால் சுமந்திருக்கும் பறவைக்குதான் உறுத்தலாய் இருக்குமோ என்று எனக்கு சந்தேகம். வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றிங்க கில்லர்ஜி.

      Delete
  9. அருமையான ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

      Delete
  10. ஆமாங்க ஏதோ எண்ணிக்கைக்காக எழுதியிருப்பாங்க போல என்று தான் படிக்கும் போது நினைத்தேன். ஆனால் தகவலை படித்ததும் ஆச்சரியமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. பலநாள் பார்த்திருந்தும் எனக்கும் காரணம் தெரியவே இல்லை. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி செய்தபோதுதான் பல விவரங்கள் தெரியவந்தன. கருத்துக்கு நன்றி சசி.

      Delete
  11. தங்கள் தகவலுக்கு நன்றிங்க,
    வரலாற்று நாவல்களில் இது போல் மெல்லிய பட்டுதுணியில் செய்தி எழுதி அதனை பறவையின் இறகு உடலோடு சேரும் இடத்தில் வைத்து செய்தி அனுப்பியதாக படித்துள்ளேன். அவை செய்திகளை யாருக்கு தரவேண்டுமோ அவர்களிடம் மட்டும் தன் உடலில் எங்கு செய்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் கைப் படும் போது உடம்பை சிலிர்த்துக்காட்டுமாம். எதிரியிடம் அகப்படாதாம். பட்டாலும் கண்டுபிடிக்க முடியாதாம். உண்மையா? இயலுமா? என சிந்தித்தது உண்டு.
    ஆனால் இவை தன் உடலில் இதனை வைக்க எதிர்ப்பில்லை எனும் போது,,,, ஏற்பதாகவே உள்ளது.
    தங்கள் பகிர்வு விழிப்புணர்வு அளிக்கும்.
    வாழ்த்துக்கள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வரலாற்று நாவல்களிலிருந்து எடுத்துக்காட்டிக் கருத்துரைத்து சிறப்பித்தமைக்கு நன்றி மகேஸ்வரி. பறவைகளை அந்தக் காலத்தில் தூது விடப் பழக்கியிருக்கும்போது நீங்கள் குறிப்பிடுவதும் சாத்தியம்தான் என்று தோன்றுகிறது.

      Delete
  12. தகவலுக்கு நன்றிகள்.....அடையாள அட்டையில் இவ்வள‌வு விடயங்கள் உண்டோ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நானும் சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். என் வியப்பை இங்கே பகிர்ந்துகொண்டேன். கருத்துக்கு நன்றிங்க புத்தன்.

      Delete
  13. தகவலுக்கு நன்றிகள்.....அடையாள அட்டையில் இவ்வள‌வு விடயங்கள் உண்டோ?

    ReplyDelete
  14. சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  15. வளர்ந்த நாடுகள் இந்த விலங்காய்வென்பதையே ஒரு பாடமாக, தொழிலாக ஆக்கி ஆர்வமுள்ளோரை கற்க வைத்து தொழில் கொடுப்பதுடன் எதிர்காலத் தலைமுறைக்கு ஆழ்ந்த அறிவைத் தருகிறார்கள்.
    வளர் முகநாடுகளிலும் உண்டு. ஆனாலும் அதில் பலர் ஆர்வத்துடன் சேர்வதில்லை, ஏதும் தொழில் இல்லையே என சேர்கிறார்கள். அதனால் முடிவுகள் திருப்தியாக இல்லை.
    எனினும் இப்போதுள்ள தொடர்புச் சாதனங்களால், பலருக்கு உலக நடப்பு தெரிவதால், இனி வரும் தலைமுறை ஆர்வம் காட்டி- நம் நாட்டு பல்லுயிர் உலகம் பற்றி இப்படியான ஆய்வுகளைச் செவ்வனே செய்து தரவுகளைச் சரியாகத் தருவார்களென நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நம் மக்களிடம் பல்லுயிரியம் பற்றிய விழிப்புணர்வு தற்போது பெருகிக்கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன் ஐயா.

      Delete
  16. ஆஹா.... புதிய தகவல் எனக்கு. இதோ.... உங்க ஊரில் பார்த்த பறவையைப் பற்றி நீங்க சொன்ன தளத்தில் பதிஞ்சுடறேன்.

    நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி டீச்சர். :)

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.