ஒண்டவந்த பிடாரி
ஊர்ப்பிடாரியை விரட்டியது போல் என்று சொல்வார்கள். அது ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை பல விஷயங்களில் உண்மை. ஆஸ்திரேலிய மண்ணின் சொந்த உயிரினங்கள்
அல்லாது பிற கண்டங்களிலிருந்து இங்கு
அறிமுகப்படுத்தப்பட்டு தங்கள் இனத்தைத் தக்கவைத்து
வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரினங்கள் அநேகம். மனிதர்களும் விதிவிலக்கல்ல.
அறுபதாயிரம் ஆண்டுகளாய்
இந்த மண்ணைத் தெய்வமாய்த் தொழுது, தங்களுக்கென்று தனித்த மொழி, கலை, பாரம்பரியம், கலாச்சாரம்,
தொழில், வணிகம், வாழ்க்கை முறை என்று வாழ்ந்துவந்த சுமார் ஏழு இலட்சம் பூர்வகுடி மக்களை
இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கி, தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திய ஐரோப்பியரிடமிருந்து
ஆரம்பிக்கிறது கதை. வந்திறங்கிய நாளிலிருந்தே அபகரிப்பு ஆரம்பமாகிவிட்டது.
ஆஸ்திரேலியாவின்
வளமிக்க கடற்கரையோரப்பகுதிகள் பூர்வகுடியினரிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு குடியேற்றங்கள்
நிகழ்ந்தன. பூர்வகுடிகளின் எதிர்ப்புகள் முறியடிக்கப்பட்டன. எதிர்த்தவர்கள் மிரட்டப்பட்டனர். மீறியவர்கள் கொத்து
கொத்தாய் சுடப்பட்டனர்; தூக்கிலிடப்பட்டனர்.
வாழ்விடத்தோடு
அம்மக்களின் அமைதியான வாழ்க்கையும் பறிபோனது. தாய்மார்களிடமிருந்து குழந்தைகள் பலவந்தமாய்ப்
பறிக்கப்பட்டனர். ஒரு தலைமுறையே கொள்ளையடிக்கப்பட்டது. Stolen generation என்ற பெயரில்
வரலாற்றில் இடம்பிடித்தது, ஒருநாளும் திருத்தியெழுத இயலாத அம்மாபெரும் தவறு.
ஐநூறு மொழிகளைத்
தோற்றுவித்த ஆதிகால மக்களால் அவற்றுள் ஒரு மொழிக்குக் கூட எழுத்துவடிவத்தைத் தோற்றுவிக்க
இயலவில்லை என்பது வருத்தம் தரும் தகவல். எந்தொவொரு மொழிக்கும் எழுத்துவடிவம் இல்லாத
காரணத்தாலேயே அவர்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும், ஏக்கங்களும் தவிப்புகளும், ஆத்திரமும்
ஆதங்கமும் ஏட்டிலும் இலக்கியத்திலும் இடம்பெறாமல் போயொழிந்துவிட்டன.
ஐரோப்பியக் குடியேற்றத்தால்
பூர்வகுடி மக்கள் அடைந்த துயர் அதிகம். அம்மக்கள்
அதுவரை அறிந்திராத புதுப்புது நோய்களும், வாழ்விட அபகரிப்பும், வந்தேறிகளுக்கு எதிரானப்
போராட்டங்களும் அவர்களுடைய மக்கள்தொகை பெருமளவில் குறையக் காரணமாயின. 1788 முதல்
1930 வரையிலான தாயக மண்மீட்கும் தொடர் போராட்டங்களில் உயிரிழந்த பூர்வகுடியினரின் எண்ணிக்கை
கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கு மேல் இருக்கலாம். ஐரோப்பியர் தரப்பில் இரண்டாயிரம்.
1700-களில் ஏழு இலட்சமாக இருந்த பூர்வகுடி மக்களின் எண்ணிக்கை 1900-இல் வெறும்
93,000 –ஆக குறைந்துபோனது.
ஆக்கிரமிப்பை முறியடிக்க
இயலாது என்பது முற்றிலுமாய்ப் புரிந்துபோன நிலையில் போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்தன.
நதியின் வெள்ளத்தை எதிர்க்கமுடியாதபோது வெள்ளத்தின் போக்கிலேயே போய் கரை சேர முயல்வதைப்
போல் பூர்வகுடி மக்களும் ஆதிக்கவாசிகளின் போக்கிலேயே சென்று தங்கள் இனத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்
உத்தியைக் கையாண்டனர். குறைந்துகொண்டு போன பூர்வகுடியினத்தின் மக்கள்தொகை மளமளவென்று
பெருகி இன்று மறுபடியும் ஏழு இலட்சத்தைத் தொட்டிருப்பதற்கு அந்த சமயோசிதமே காரணம்.
எழுத்துமொழியில்லா அவர்கள் தங்களுடைய இலக்கியத்தைப் படைக்க ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் அநேக பூர்வகுடி இனங்களைப் பிணைக்கும் மொழியும் அதுவாகவே
ஆகிப்போனது.
வாழவந்த மண்ணை
தங்கள் சொந்த மண்ணாகவே எண்ணிய ஐரோப்பியர்கள் தங்களுடைய வசதிக்காக இங்கு அறிமுகப்படுத்திய
அயல்மண்ணின் உயிரினங்களும் தாவரங்களும் அநேகம். அதன் மூலமாக ஒரு நாட்டின் இயற்கைச்சூழலும்
அது சார்ந்த உயிரின வாழ்வும் பாதிப்புக்கு ஆளாகி உயிரியல் சமன்பாடு சீர்குலைய நேரும்
என்ற பிரக்ஞை இல்லாது எங்கெங்கிருந்தோ இங்கு கொண்டிறக்கப்பட்டவை யாவும் பல்கிப் பெருகியதோடு,
வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் இன்று அவர்களுக்கே ஒரு பெரும் தலைவலியாய் விளங்குவதுதான்
விநோதம்.
ஊர்ப்பிடாரிகளை
விரட்டிய ஒண்டவந்த பிடாரிகளைப் பற்றி இங்கு தொடர்ந்து எழுதவிருக்கிறேன். ஐரோப்பியரைப்
பற்றி சொல்லியாகிவிட்டது. அடுத்ததாய் அவர்கள் இங்கு அறிமுகப்படுத்திய விலங்குகளுள் ஒன்றான ஒட்டகம் பற்றி சொல்லப்போகிறேன். என்னது? ஆஸ்திரேலியாவில் ஒட்டகமா என்று
மலைக்கிறீர்களா? ஆம். ஒட்டகம்தான். ஒட்டகம் என்றால் கொஞ்சநஞ்ச எண்ணிக்கை அல்ல, உலகிலேயே
அதிக அளவில் ஒட்டகங்கள் இருக்கும் நாடு என்ற பெருமைக்குரியது ஆஸ்திரேலியா. அதைப் பற்றி
அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்)
வழக்கம்போல சுவாரஸ்யமான தகவல்கள். விடாது தொடர்கிறேன்.
ReplyDeleteவாங்க. வருகைக்கு நன்றி ஸ்ரீராம். அடுத்த பகுதி இப்போது வெளியிட்டிருக்கிறேன்.
Deleteவேறு வழியில்லை... அவர்களே சமாளிக்க வேண்டும்...
ReplyDeleteஅதைத்தான் செய்கிறார்கள். ஆனால் என்ன செலவு ஏராளம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteஅருமையான
ReplyDeleteகாலத்தால் கரைந்தோடிய வரலாற்றின் பக்கங்களில் இருந்து
அறியாச் செய்திகள் பலவற்றை மீட்டுருவாக்கி படைத்துள்ளீர்கள்
சகோதரியாரே
அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கின்றேன்
நன்றி
தம +1
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. அடுத்த பதிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Deleteவணக்கம்
ReplyDeleteவியக்கவைக்கும் விடயங்களின் தொகுப்பு நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகுந்த நன்றி ரூபன்.
Deleteகீதமஞ்சரி,
ReplyDeleteசுவாரஸியமா தொடங்கியிருக்கீங்க. படிக்கும்போதே 'ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களா!' என நானும் வியந்தேன். இங்கும் இதே கதைதான்.
வாங்க சித்ரா. என்னுடைய வியப்புதான் இப்படி பதிவாக மாறிவிட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.
Deleteமிக அருமையான ஆரம்பம். பாராட்டுக்கள்.
ReplyDeleteகுடிநீரை கிடைக்கும் போதெல்லாம் தனக்குள் சேமித்துக்கொள்ளும் ஒட்டகம் போல, நானும் மிகுந்த தாகத்துடன் தங்கள் எழுத்துக்களை மேலும் படிக்கக் காத்திருக்கிறேன். தொடரட்டும் தங்களின் இந்தப் புதுமையான தொடர்.
வாழ்த்துகள்.
அன்புடன் கோபு
வருகைக்கும் பாராட்டுக்கும் சுவாரசியமான பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்.
Deleteஆஸ்திரேலியாவில் குடியேறியவர்கள் என அறியப் படுபவரின் முன்னோர்கள் நாடு கடத்தப் பட்டு வந்த சமூக விரோதிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பல விளையாட்டுக்களில் பூர்வ குடி என்று அழைக்கப்பட்ட aborigines பிற இனங்களோடு கலந்து ஒரு புது entity ஆகி வருகிறார்கள் என்றும் தெரிகிறது. தொடரக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteதாங்கள் கேள்விப்பட்டவை சரிதான் ஐயா. இவற்றைப் பற்றி என்னுடைய புத்தகத்தின் முன்னுரையிலும் விளக்கமளித்துள்ளேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
Deleteஐரோப்பியர்கள் எந்த நாட்டையும் விட்டு வைக்க வில்லை போலும்! சுவாரஸ்ய தகவலானாலும் நெஞ்சம் கனத்தது! தொடர்கிறேன்! நன்றி!
ReplyDeleteவரலாறு பல சமயம் நம் மனத்துக்கு இதம் தருவதில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
Deleteபுதுமையான தகவல்கள் தொடர்கிறேன் சகோ
ReplyDeleteவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி கில்லர்ஜி.
Deleteபகிர்வுக்கு நன்றிகள் தொடரை தொடர்ந்து வாசிக்க ஆவலாயுள்ளேன்
ReplyDeleteவருகைக்கும் ஆர்வத்துடன் வாசிப்பதற்கும் நன்றி புத்தன்.
Deleteநதியின் போக்கிலேயே போய் தங்களைத் தக்கவைத்துக் கொண்ட ஆதிவாசிகளின் சாதுர்யம் வியக்கவைக்கிறது. இல்லையேல் ஐரோப்பியர் அவர்களை முழுமையாக அழித்திருப்பார்கள். எழுத்து மொழியில்லா அவர்கள் தங்கள் எண்ணத்தை ஆக்கத்தை வெளியிட ஆங்கிலத்தைச் சுவீகரித்துக் கொண்டதும் நல்லது தான். பொருத்தமான தலைப்புக்குப் பாராட்டு. சுவாரசியமான தொடருக்குப் பாராட்டுக்கள்!
ReplyDeleteஆமாம் அக்கா. எதிர்ப்புகள் முறியடிக்கப்பட்ட நிலையில் என்னதான் செய்வார்கள் பாவம். தலைப்பு பொருத்தம் என்று பாராட்டியதற்கு நன்றி அக்கா. இன்று அடுத்த பகுதி வெளியிடப்பட்டுள்ளது.
Deleteஇத...இதத்தான் எதிர்பார்த்தேன். வானளாவிய கட்டடங்களையும் அகன்ற சாலைகளையும் பார்த்துப் பழகிய பலருக்கு ஆஸ்திரேலியா என்றால் இந்த பழங்குடிகளும் ஞாபகத்திற்கு வரவேண்டும். அவர்களைப் பற்றி மேலும் அறிய காத்திருக்கிறோம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. இந்த முதல் பகுதியில் அவர்களை ஓரளவு குறிப்பிட்டுவிட்டு அடுத்த பகுதியில் அவர்கள் அறிமுகப் படுத்திய விலங்கு பறவைகளையும் அவற்றால் அவர்களுக்கேற்படும் அவதிகளையும் குறிப்பிட உத்தேசித்துள்ளேன். பூர்வகுடிகள் பற்றி மேலும் விரிவாக எழுதும் எண்ணம் உள்ளது. விரைவில் எழுதுவேன். நன்றி.
Deleteஅருமை.. அவுஸ்திரேலிய ஒட்டகங்களைக் காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்ன்..
ReplyDeleteவாங்க அதிரா. வருகைக்கு நன்றி. இன்று ஒட்டகங்கள் பற்றி படத்துடன் வெளியிட்டுள்ளேன். பார்த்து ரசிங்க.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇரண்டு வருடங்கள் ஆஸ்திரேலியாவில் நான் படிக்கும் போது கண்கூடாகப் பார்த்த விஷயங்களை உங்கள் வலைப்பதிவில் சொல்லி இருக்கிறீர்கள்... யார் எந்த நாட்டை அடிமைப்படுத்துவது என ஐரோப்பாவில் ஒரு பெரும் போட்டி நிகழ்ந்து கொண்டு இருந்த காலத்தே, அங்கிருந்து கைதிகளாகவோ, போர்க்குற்றவாளிகளாகவோ அல்லது பல்வேறு நோக்கங்களுடன் வந்தவர்கள் இந்த மண்ணின் மீது மையல் கொண்டு இங்கு பூர்வ குடிகளாக இருந்தவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த சோகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. குடிநீர் குளங்களில் விஷம் கலக்கப்பட்டு சாகடிக்கப்பட்டனர். இன்றும் இவர்கள் தற்போதைய ஆஸ்திரேலியா சமூகத்தின் எல்லையில் வாழும் உதிரிகளாகவே பார்க்கப்படுகின்றனர்.
ReplyDeleteBlog: https://asmalltownkid.wordpress.com/
தங்கள் வருகைக்கும் சிறப்பான பின்னூட்டத்துக்கும் கூடுதல் தகவல்களுக்கு மிகவும் நன்றி.
Deleteநலமா கீதமஞ்சரி? உங்கள் தளம் வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தது இன்று தான் நிறைவேறியது :))
ReplyDeleteஇடைவெளிக்கு மன்னிக்கவும்.
ஆஸ்திரேலியாவில் இருந்து அங்குள்ள மக்கள், பறவைகள், விலங்குகள் என்று அருமையாக எல்லோருக்கும் சொல்லும் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். அருமையான முயற்சி இது தோழி.
ஐரோப்பியர்கள் எந்த நாட்டைதான் அழிக்காமல் விட்டனர்? ஆஸ்திரேலியாவில் தான் உலகிலேயே அதிக அளவில் ஒட்டகங்களா?!!! ஆச்சரியமாக இருக்கிறதே..அடுத்தப் பதிவைப் பார்க்கிறேன்.
நலமே கிரேஸ். நன்றிப்பா. கொஞ்சம் வேலைப்பளு. அதனால்தான் எவர் தளத்துக்கும் அதிகம் வரமுடியவில்லை. வந்து வாசித்தாலும் கருத்திடாமல் போய்விடுகிறேன். சென்ற வாரம் நீங்கள் வலைச்சர ஆசிரியராக இருக்கும்போதும் என்னால் வரமுடியவில்லை. வருந்துகிறேன்.
Deleteஓ அப்படியா? நானும் அதிக தளங்கள் படிக்க முடியவில்லை,,.
Deleteஅதனால் என்ன தோழி? வருந்த ஒன்றுமில்லை,,வேலைப்பளு அறிந்ததுதானே? :)
ஒண்ட வந்த பிடாரிகள்.
ReplyDeleteஇன்று முதலாவது வாசித்தேன்
ஆர்வமாக உள்ளது தொடருவேன்.
அனைத்துப் பகுதிகளையும் வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி தோழி.
Deleteஎத்தனை இழப்பு..... ஆக்கிரமிப்பு செய்வதே இன்றைக்கு பல நாடுகளின் வாடிக்கையாகிவிட்டது...
ReplyDeleteதொடர்கிறேன்.
ஆக்கிரமிப்பால் எழும் ஆபத்துகளைக் கண்கூடாகக் கண்டபின்னும் ஆக்கிரமிப்புகள் தொடர்வது வேதனைதான். விடுபட்டிருந்த எல்லாப் பதிவுகளையும் வாசித்துக் கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி வெங்கட்.
Deleteஅருமை கீதா வலைச்சர அறிமுகத்தில் படித்துவிட்டு வந்தேன் :)
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி தேனம்மை. வருகைக்கும் வாசித்துக் கருத்து இட்டதற்கும் நன்றி.
Delete