23 April 2013

கிருஷ்ணவேணி


 
 
மாநகரத்தின் ஒரு மூலையில் காலம்காலமாய் கவனிப்பாரற்றுக் கிடந்த அந்தச் சிற்றூர் தன் ஜீவாதாரமான வயல்வரப்புகளை, குடியிருப்புகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் தாரை வார்த்துவிட்டு மொத்தமாய் தன் சுயவிலாசம் இழந்து நின்றுகொண்டிருந்தது.  

நகரத்துக்குப் படையெடுப்பவர்களின் பெருக்கம் விஸ்தரிப்புகளுக்கு வழிகோல,  அந்தச் சிற்றூர், கிராமிய நகர வாழ்க்கைக்கு இடைப்பட்ட இரண்டுங்கெட்டான் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தது. அதன் ஆதிகாலத்தோடு தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்ட கிருஷ்ணவேணியைப் போல் அதுவும் காலத்துக்கேற்றபடி தன்னை அவ்வாழ்க்கைக்குப் பொருத்திக்கொள்ளத்தான் வேண்டும். கிருஷ்ணவேணியா? யாரது என்கிறீர்களா? 

அவள்தான் அந்த ஊரில் முதன்முதலில் மாடிவீடு கட்டியவள் என்ற பெருமைக்குரியவள். இந்த இருபது வருடங்களில் அவள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாதவர்களே அவ்வூரில் இல்லை என்னுமளவு பெயர் பெற்றவள். 

இன்று கிருஷ்ணவேணியின் மகள் வசந்திக்கும் மிராசு கோவிந்தசாமிப்பிள்ளையின் மகனுக்கும் மாநகரின்  பெரிய மண்டபத்தில் விமரிசையான திருமணம். அதற்குதான் கிருஷ்ணவேணியின் தெருவைச்சேர்ந்த இந்த ஏழுபெண்களும் பட்டுப்புடவை சரசரக்க, மல்லிகையும், முல்லையும் மணக்க, உடலெங்கும் பொன்னும் போலியும் தகதகக்க, முகத்தில் சந்தோஷமும் சிரிப்பும் தாண்டவமாட பயணம் செய்துகொண்டிருக்கின்றனர். 

குமாருக்கு இது புது அனுபவம். இதுவரை இப்படி பெண்களுடன் பயணம் செய்யும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை. கம்பெனியின் ஊழியர்களை அழைத்துப்போகவும், சாமான்கள் ஏற்றிச்செல்லவுமே பயன்பட்டுக்கொண்டிருந்த அந்த மாருதி ஆம்னி இன்று ஏழு பெண்களைச் சுமந்து பிறந்தபயனை அடைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டான். அதிலும் ஒருத்தி மட்டும் பாவாடை தாவணியில் இருந்தது விசேஷம்.

இருபெண்மணிகள் அறுபதைத்தாண்டியவர்கள் என்பதும் அதில் ஒருத்தி ஐயர் வீட்டம்மாள் என்பதும் பார்த்தவுடனேயே தெரிந்தது. மற்ற பெண்கள் முப்பது நாற்பதுகளில் இருக்கக்கூடும். இந்தப்பெண்களில் கோகிலா மட்டும்தான் பரிச்சயம். இரண்டொருமுறை பார்த்திருக்கிறான். 

நெடுஞ்சாலையில் வேன் சீராகப்போய்க்கொண்டிருந்தது. அவர்கள் ஏதேதோ பேசிச் சிரித்தபடி வந்தனர். குமாரையும் அவர்களது உற்சாகம் தொற்றிக்கொண்டது. பாட்டியைத்தவிர வேறு பெண்களுடன் பேசியதுகூட இல்லை.  

ஏனோ பெண்களைக் கண்டாலே அத்தனை ஈர்ப்பு இதுவரை உண்டானதில்லை. அதற்கு அவனைப் பெற்றவளும் ஒரு காரணமாக இருக்கலாம். அவனது அறியா வயதில் அவனை குடிகாரத் தகப்பனிடம் தனியே விட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டவளின் மேல் இன்றுவரை அடங்காத கோபம் அவனுக்கு.  

ஆனால் இன்று அந்தப் பெண்களின் மத்தியில் இருப்பது ஒரு புத்துணர்வைக் கொடுத்தது. அதிலும் அந்த பாவாடை தாவணிக்காரி அடிக்கடி தன் மேல் கண்களை ஊன்றியது என்னவோ போலிருந்தது.  

ஒருகையால் ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டு மறுகையால் தலைக்கு மேலிருந்த கண்ணாடியை மெதுவாக பக்கவாட்டில் திருப்ப அவள் முகம் பளிச்செனத் தெரிந்தது. அவளும் அவனைப் பார்ப்பதுபோல் தெரிய சட்டென்று கண்ணாடியை சரியாகப் பொருத்தினான். 

"ஏம்ப்பா...டிரைவரு.... கல்யாணமண்டபத்துக்கு வழி தெரியுமா?" வயதானவள் கேட்டாள். 

"தெரியுங்க. சார் சொல்லியிருக்காரு!" 

"ஹும்! கோகிலா வீட்டுக்காரு மனசு வச்சதால சுகமா வேன்ல பயணம். இல்லைனா பஸ் பிடிச்சுதான் போயிருக்கணும். பட்டுப்பொடவையெல்லாம் கசங்கி வேர்த்து வடிஞ்சு போய்ச்சேருவோம். இப்படி அலுங்காம குலுங்காமப் போகமுடியாது. கோகிலா ஒன் வூட்டுக்காருக்கு கோடி புண்ணியம்டீ!" 

"கொத்தமங்கலத்தம்மா! விஷயமில்லாமலா அவர் வேன் ஏற்பாடு பண்ணியிருக்கார்? அக்கா இப்ப முழுகாம இருக்காங்க. அதான் பெண்டாட்டிய எப்படி தனியா அனுப்புறதுன்னு நம்மளையும் துணைக்கி அனுப்பிவச்சிருக்காரு." 

ராஜி கேலி பேச, கோகிலா கண்களாலேயே குமார் இருப்பதைச் சுட்டிக் காட்டி அவளை அடக்கினாள். 

"ராஜிக்கா! இந்த மாசம் ஏலச்சீட்டு கட்டிட்டியாக்கா?" ஈஸ்வரி நினைவூட்டினாள். 

"இல்ல, ஈசு! போனவாரமே கிருஷ்ணவேணியக்கா வந்து கேட்டுச்சு. இப்ப கையில இல்ல, அப்புறமா தரேன்னு சொல்லி அனுப்பிச்சேன். அப்புறம் மறந்தே போச்சு!" 

"எதுக்கும் தயாரா இரு, ராஜி, அது கல்யாணவீடுன்னு கூட பாக்காது. ஈட்டிக்காரன் மாதிரி காசு வசூல்பண்றதிலேயே குறியா இருக்கும். 

"என்ன கோமதி, இப்படி பயமுறுத்தறே?, நான் கையிலே கொண்டுவரலையே?" 

"ஏண்டீ கோமதி, அவளைப் படுத்தறே? கிருஷ்ணவேணி அப்படியெல்லாம் செய்யமாட்டாடீ. மக கல்யாணவேலையில பிஸியா இருப்போ. இப்போ போய்  அவளண்ட பைசா கேட்டு அசிங்கப்படுத்துவாளா என்ன?" 

"மாமி, உங்களுக்குத் தெரியாது. ஒருதடவ எங்க வீட்டுக்காருக்கு மஞ்சக்காமால வந்து முடியாம பத்துநாளு ஆஸ்பத்திரியில கெடந்தாரு தெரியுமா? அப்ப பாக்கவந்தாளே மவராசி, போறபோக்கில பொடவக்காசை ஞாபகப்படுத்திட்டுப் போனான்னா பாத்துக்கோங்க!" 

"அதனாலதான் மாடிமேல மாடிகட்டி மகாராணியாட்டம் இருக்கா. ஒண்ணுமில்லாத ஆளைக் கோபுரத்தில உக்காத்தி வச்சிருக்கா!" கொத்தமங்கலத்தம்மா சொல்லவும் மாமி ஆச்சரியப்பட்டாள். 

"ஒண்ணுமில்லாத ஆளா? யாரு அவ ஆம்படையானையா சொல்றேள், கொத்தமங்கலத்தம்மா?" 

"ஆம்படையானா? மங்களம் மாமி! அது அவ புருஷன்னா நீங்க நெனைச்சுகிட்டிருக்கீங்க? நல்லா நெனச்சீங்க, போங்க!" 

இதுவரை தனக்கென்ன என்று தன் வேலையில் கவனமாய் இருந்த குமாரையும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. 

கொத்தமங்கலத்தமா தன் மடியிலிருந்த வெற்றிலைப்பெட்டியை எடுத்துத் திறந்தாள். சஸ்பென்ஸ் வைப்பதுபோல் ஏடாகூடமாய் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு மற்றவர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டு இதற்குதான் காத்திருந்ததுபோல் அதைக் கண்டுகொள்ளாதவளாய் தன் வேலையில் ஆழ்ந்தாள்.  

இப்போதைக்கு அவள் வாயைப் பார்ப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தவர்கள் போல் மற்ற ஐவரும்  தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். தாவணி போட்டவள் இவர்கள் பேச்சில் ஆர்வம் காட்டாதவளைப்போல் சன்னல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். 

ச்சீ! இப்படியுமா இருப்பாங்க?” ராஜி வியந்தாள். 

"அப்ப புருஷன் யாரு? ஓடிப்போய்ட்டானா?"
 
ஒரு நிமிடமும் வீணாவதை விரும்பாத ஈஸ்வரி கொத்தமங்கலத்தம்மாவைக் கேட்டாள். 

அவளோ வாய்கொள்ளாத வெற்றிலைச் சாற்றுடன் மேல்நோக்கிப் பார்த்தபடி எதையோ சொல்லமுயல, பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்கலம் மாமி சற்று இடம்விட்டு தள்ளி அமர்ந்துகொண்டாள்.  

தலையை வெளியில் நீட்டி அக்கம்பக்கம் பார்த்தபடியே புளிச்சென்று எச்சிலை ரோட்டில் துப்பியவள் தொடர்ந்தாள். 

"ராஜி, அந்தப் பொம்பளயப் பத்தி ஒனக்குத் தெரியாது, நீ எங்க தெருவுக்கு குடிவந்து ஆறுமாசந்தானே ஆவுது? அவளை எனக்கு இருவது வருஷமா தெரியும்.'' 

"இருவது வருஷமாவா?" கொத்தமங்கலத்தம்மாவை நம்பாமல் ராஜி ஏறிட்டாள். 

"அடி நம்புடி! அப்ப இந்த ஊரிலே அங்கொண்ணும் இங்கொண்ணுமாதான் வீடு. எங்க வூட்டுக்குப் பக்கத்திலதான் அந்தாளு...அதான்..... அந்த பரந்தாமன் குடியிருந்தாரு. சின்னப் பொட்டிக்கடை வச்சிருந்தாரு. அவரு பொண்டாட்டிக்கு ரொம்பநாளாவே உடம்பு சரியில்லே... புத்துநோய்... கையில இருந்ததையெல்லாம் செலவுசெஞ்சும் அந்தப்பொம்பள பொழைக்கல. கடையும் கைவிட்டுப்போய்ட்டு. ஆளு அதில ரொம்பவே இடிஞ்சி போயிட்டாரு.  தலைக்கு மேல கடன். நண்டும் சிண்டுமா இந்த முரளியும் முத்துவும்! ஒருநாளு ரொம்பவே மனச வுட்டுட்டாரு போல. தற்கொல பண்ணிக்கலாம்னு ரயில் லைன் பக்கம் போயிருந்திருக்காரு. அப்ப இவளும் அங்க அதே காரணத்துக்காக வந்திருக்கா. கர்ப்பமா வேற இருந்திருக்கா. இவளைப் பாக்கவும்  இவருக்கு சடார்னு எதுவோ தோணி முடிவ மாத்திகிட்டு இவளையும்  அழைச்சிகிட்டு வீட்டுக்கு வந்திட்டாரு. 

"அப்படியா? என்னால நம்பவே முடியலையே? முரளியும் முத்துவும் இவ பிள்ளைங்க இல்லையா?  எப்பவும் எம்மவனுவோன்னு சொல்லிக்கும்!"  

அப்ப…..வசந்தி?” கோகிலா குறுக்கிட்டாள். 

"கேளு! புள்ளதாச்சியா வந்தாளா, இங்க வந்துதான் இந்த வசந்திக்குட்டியப் பெத்தா. ஆச்சி, இருவது வருஷம். இன்னைக்கு அதுக்கு கல்யாணம்! ஆத்தி, என்னாலேயே நம்பமுடியலையே?"  

கொத்தமங்கலத்தமாவே வியந்துகொண்டாள். அனைவரும் அவள் பேச்சில் ஐக்கியமாயிருந்தது புரிந்தது. 

அந்த முரளியும், முத்துவும் இவள அம்மான்னுதான் கூப்புவானுங்க, இவ பேச்சத் தட்ட மாட்டானுங்க. சொன்னவேலய செய்வானுங்க! 

"ஆமாம்! ஆமாம்! அத்தனப் பெரிய பையன் அதுவும் எஞ்சினீயரிங் படிச்ச பையனை சீட்டுப்பணம், பொடவப்பணம் வசூல் பண்ண அனுப்புது, அவனும் வெக்கமில்லாம வந்து கேக்குறானே?" 

"அந்த வசந்திக்குட்டி மட்டும் என்ன? அந்தாளை அப்பன்னுதான் சொல்லிகிட்டுத் திரிவா. ஒரு குடும்பத்திலயே எத்தனை சண்டை சச்சரவு வருது? இது ரெண்டும் கல்யாணமும் கட்டிக்கல. ஆனா பாரு, இருவது வருஷமா எல்லாத்தையும் ஏமாத்திகிட்டுத் திரியுதுங்க. எங்க போனாலும் தம்பதி சமேதராதான் போவாங்க... பார்க்கிறவங்களுக்கு என்னவோ ஆதர்ச தம்பதி மாதிரி தோணும். ஆனா... என்னை மாதிரி அந்தக்காலத்தில இருந்து இதே ஊரில இருக்கிறவங்களுக்குதான் இது வந்த வழி தெரியும். மத்தவங்க எல்லாம் உங்களை மாதிரிதான் அதைப் பத்தி ஒண்ணும் தெரியாம பழக்கம் வச்சிப்பாங்க. இப்ப பொண்ணு குடுக்கிற எடத்தில கூட இதையெல்லாம் மறைச்சிதான் கல்யாணம் பண்ணுவாங்க." 

"கில்லாடிப்பொம்பளதான் அது" 

"ஐயையோ...இப்படியாப்பட்ட பொம்பளையா அது? என்கிட்ட மவனுக்குப் பொண்ணு இருந்தா சொல்லுன்னுச்சே! நல்லவேள, அது லட்சணம் இப்பயாச்சும் தெரிஞ்சிதே! வம்பை வெல கொடுத்து வாங்க இருந்தேனே?" 

கோமதி படபடவென பொரிந்தாள்.  

"அதானே? இனிமே சீட்டு விவகாரத்திலிருந்து வெலகிடவேண்டியதுதான்." கோகிலாவும் பதறினாள். 

"எல்லாம் காலக்கொடுமை! மஞ்சள் பூசி நெத்தி நெறய  குங்குமப்பொட்டு வச்சுகிட்டு என்னமா குடும்பப்பொம்பள மாதிரி நடிக்குது?" 

"அதைதான் சொல்வா, ஒய்யாரக்கொண்டையாம்,தாழம்பூவாம்,  உள்ள இருக்குமாம் ஈரும் பேனும்னு!" மாமி தன் பங்குக்கு சொன்னாள். 

"இந்த கிருஷ்ணவேணி இன்னைக்கு இல்ல...அன்னைக்கே காசுல குறி. சாமர்த்தியக்காரி. மவராசி, தெருவுல ஒரு சாணி கெடக்க வுடமாட்டா. பொறுக்கிட்டு வந்து வறட்டி தட்டி வித்திடுவா. சுள்ளி பொறுக்குவா. முள்ளு வெட்டி அடுப்பெரிப்பா. என் வூட்டுல வீணாக்கெடக்கிற தென்ன மட்டையை வாங்கிட்டுப் போயி வெளக்குமாறு கிழிச்சி எனக்கே வித்திடுவான்னா பாரேன்! நாம தெருவுல வீசுறதை எல்லாம் அவ காசாக்கிடுவா. அத்தன சாமர்த்தியம். ஓய்வு ஒழிச்சல்னு ஒரு நிமிஷம் ஒக்காரமாட்டா." 

"அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுதான் இவ்வளவு சொத்து சேத்துதா?" 

"அதுமட்டுமில்லடி, இருந்த அத்தனூண்டு எடத்திலயே காய்கறித்தோட்டம் போட்டா. அவ கைராசியா இல்ல தெருவுல கெடக்கிற ஆட்டாம்பிழுக்கையைக்கூட விடாம பொறுக்கி உரமா போட்டதாலயா தெரியல...என்னமா வெளஞ்சிது தெரியுமா? அத்தனையும் காசாக்கினா. அப்புறம் கொஞ்சங்கொஞ்சமா பொடவ யாவாரம், சீட்டுப்புடிக்கிறதுன்னு ஆரம்பிச்சா...இன்னைக்கு வரைக்கும் விடாம நடத்துறாளே, நமக்கு யாருக்காச்சும் அந்த சாமர்த்தியம் வருமா?" 

கொத்தமங்கலத்தம்மா கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். இப்போது எவரும் குறுக்கிடவில்லை. அனைவருமே மலைத்துப்போய் அமர்ந்திருப்பது புரிந்தது. கொத்தமங்கலத்தாம்மாவே தொடர்ந்தாள். 

"அப்புறமும் அவ ஓயலை. சொசைட்டியில மாடு வாங்கி பால் யாவாரம் செஞ்சா. அந்தாளோட மொத்தக் கடனையும் மூணே வருஷத்தில அடைச்சான்னா நம்புவியா நீ? அந்தளவோடயும் நிக்கலயே!  எடம் வாங்கினா, வீடு கட்டினா, மாடி கட்டினா, புள்ளங்கள கான்வென்ட் அனுப்பி படிக்கவச்சா. பரந்தாமன் இன்னைக்கு காரில போறாருன்னா அது அத்தனையும் இவளாலதான். ஆனா ஒரு விஷயத்துல அவளப் பாராட்டணும்டி, ஒரு தகிடுதத்தம் கெடயாது அவகிட்ட. கையும் சுத்தம், வாயும் சுத்தம்!'' 

"அப்புறம் ஏன் பொண்ணை டீச்சராகிட்டு ஒருத்தனை எஞ்சினியராக்கிட்டு ஒருத்தனுக்கு மட்டும் கடை வச்சிக் கொடுத்திட்டுது?" 

"அதுக்கென்னடி பண்றது? அவன் தலையெழுத்து! படிப்பு ஏறல. பத்தாவதில பெயிலாயிட்டான், பள்ளிக்கூடம் போமாட்டேனுட்டான். பாத்தா... அவனுக்கொரு மளியக்கடை வச்சிக்கொடுத்திட்டா. பய பிரமாதமா யாவாரம் பண்றானாமே! எல்லா அவ கொடுத்த ட்ரெயினிங்குதான். 

அந்தம்மா சொல்லி முடித்ததும் பெரும் நிசப்தம். கொஞ்ச நேரம் கழித்து மாமிதான் சொன்னாள். 

"கொத்தமங்கலத்தாமா, நான் கூட நீங்க சொல்ல ஆரம்பிக்கும்போது அவள என்னமோன்னு நெனைச்சேன். அவளை நாமெல்லாம் கையெடுத்துக்கும்பிடணும். சரிஞ்சு நின்ன ஒரு குடும்பத்தையே ஒருத்தி தன் உழைப்பால நிமிர்த்தி இருக்கான்னா அவளை என்னன்னு சொல்றது?” 

கிருஷ்ணவேணியைப் பற்றிய மாயையிலிருந்து ஒவ்வொருவராய் விடுபடத்தொடங்கியிருந்தனர். 

"மாமி சொல்றது சரிதான். பல குடும்பப்பொம்பளைகளே குடும்பத்தைப் பத்திக் கவலப்படாம ஆடம்பரமா செலவு செஞ்சு வாழும்போது எங்கேயோ இருந்து வந்த ஒருத்தி தன்னைக் காப்பாத்தினவன் குடும்பத்துக்காக காலமெல்லாம் உழைக்கிறானா அவ உண்மையிலேயே தெய்வம்தான்." 

"கொத்தமங்கலத்தம்மா! எங்ககிட்ட சொன்னது எங்களோடயே இருக்கட்டும். வேற யாருகிட்டயும் சொல்லாதீங்க. அந்த உத்தமிக்கு நாம செய்யற மரியாதை அதான்." 

கொத்தமங்கலத்தமாவுக்கு என்னவோ போலாயிருக்கவேண்டும். "அட, சொல்லணும்னா சொன்னேன்? ஏதோ பேச்சு வந்திச்சு, அப்படியே சொல்லிட்டேன். இதப்போய் வேற யார்கிட்டயாவது சொல்லுவேனா?" 

"சரி, இவ்வளவு நல்லவங்க, ஏன் தற்கொலை பண்ணிக்கப்போனாங்களாம்?" 

இதுவரை அமைதியாய் இருந்த தாவணிப்பெண் முதன்முறையாய் வாய்திறந்தாள்.

"யாருக்குத் தெரியும்? அவதான் என்ன கேட்டாலும் வாயே தொறக்கமாட்டளே?" கொத்தமங்கலத்தம்மா ஒரு கேள்வியுடன் அவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். 

ஆனால் வேனை ஓட்டிக்கொண்டிருந்த குமார் மனதுக்குள் சொன்னான். 

'எனக்குத் தெரியும். அவ புருஷன் ஒரு குடிகாரனாவும், சந்தேகப்பிராணியாவும் இருந்திருக்கணும், என் அப்பா மாதிரி! கர்ப்பிணின்னும் பாக்காம ராவும் பகலும் அவள அடிச்சி, உதைச்சி, இம்சைப்படுத்தியிருக்கணும். போக்கிடம் இல்லாத அவ, சித்திரவதை தாங்காம தற்கொல பண்ணிக்கிற எண்ணத்தோட ஓடிப்போயிருக்கணும், என் அம்மா மாதிரி!' 

இனி அம்மாவைத் தவறாக நினைக்கக்கூடாது என்ற எண்ணம் அவனுள் வலுப்பெற்றது. வீட்டுக்குப் போனதும் பாட்டியிடம் அம்மாவின் பெயர் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆவல் உந்த, சூழல் மறந்து சீட்டி அடித்தபடியே வாகனத்தைச் செலுத்த, அவன் நாணும் வகையில் பின்னாலிருந்த பெண்கள் களுக்கென்று சிரித்தனர்.
 
படம் உதவி: இணையம்.

36 comments:

  1. //"மாமி சொல்றது சரிதான். பல குடும்பப்பொம்பளைகளே குடும்பத்தைப் பத்திக் கவலப்படாம ஆடம்பரமா செலவு செஞ்சு வாழும்போது எங்கேயோ இருந்து வந்த ஒருத்தி தன்னைக் காப்பாத்தினவன் குடும்பத்துக்காக காலமெல்லாம் உழைக்கிறானா அவ உண்மையிலேயே தெய்வம்தான்." //

    மிகவும் அருமையான கதை. எழுத்தின் நடை அபாரம். டிரைவரின் தாயாக இருக்குமோ என்று சந்தேகப்பட வைக்கும் முடிவு. எல்லாமே அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வாவ், கிருஷ்ணவேணி நாடி நரம்பெங்கும் சென்று மயிர்கூச்சும் உணர்வினைத்தருகிறாள்.. எத்தகைய சாமர்த்தியம், அசாத்திய துணிச்சல், அசராத உழைப்பு அத்தனையும் சாத்தியப்பட்டதால் சாதனையாளராய் மிளிர்கிறாள்.. பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதை இக்கதையும் சொல்லிவிடுமோ என்று பயந்தேன், நல்லவேளை என் பயத்திற்கு வெளிச்சம் காட்டி விட்டது வரிகள்.. தாயை பற்றி எண்ணத்தை மாற்றிக்கொண்ட குமார், அதற்கான கதை நகர்வு எல்லாமே அழகுக்கா, செம...தன் கரையை துடைத்த மனிதருக்கார் அக்கறையோடு போராடும் குணம் வாய்த்தவர்க்ள் வாழும் கடவுள்களே.. இதுக்கு மேல சொல்லத்தெரியலை அத்தனை அருமை கதை...

    ReplyDelete
  3. கிருஷ்ணவேணி ..அருமையான பெண்மணி ..மனதை ஆட்கொண்ட கதை .
    மிக அழகாக எழுதியிருக்கீங்க கீதா ..
    பயணம் செய்யும்போது நடைபெறும் உரையாடல் இயல்பான நடை ..இறுதிவரை கதையை அற்புதமாக முடித்த விதம் ..எல்லாமே அருமை .

    ReplyDelete
  4. நல்ல கதை... முடிவில் நல்ல எண்ணம் உருவானது அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  5. பெண்களின் வம்பளப்பிலேயே கதை சொன்னது நல்ல உத்தி.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. ம்ம்ம் ..நல்ல கதை
    யதார்த்தமான நடை அருமை

    ReplyDelete
  7. கதையின் கருவும் சொல்லிச் சென்றவிதமும்
    முடிவும் மிக மிக அருமை
    நானும் அந்த வேனில் பயணப்பட்டதைப் போல்
    உணர்ந்தேன்
    மனம் கவர்ந்த சிறுகதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அருமையான சிறுகதை. கிருஷ்ணவேணி மனதைத் தொட்ட பெண்மணி. கதையின் நடுவே தப்பாகத் தெரிந்தாலும் கடைசியில் அவரது நல்ல குணத்தைச் சொல்லியது நன்று.

    அனைவருமே நல்லவர்கள் தான் - சூழ்னிலையும் பார்க்கும் பார்வையும் தவறாக இருக்கும்போது தானே தவறாகத் தெரிகிறது.

    கூடவே பயணித்த ஒரு உணர்வு. கூடவே ஓட்டுனருக்கும் மனமாற்றம் ஏற்படுத்தியது நன்று....

    வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  9. பின்னிடீங்க கீதா பொம்பளைங்களை வம்பர்களாய் காண்பித்து அடுத்த் நொடியே அவர்கள் மனம் நியாயத்திற்கு கட்டு பட்டது என்றும் காண்பித்தது கதை படிக்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஏதோ பக்கத்து வீட்டில் இருக்கும் விஷயம்போல் இருந்தது எனக்கு அருமை

    ReplyDelete
  10. கிருஷ்ணவேணி மனதில் விஸ்வரூபமெடுத்து உயர்ந்து நிற்கிறாள்! ஏறத்தாழ அவள் வாழ்க்கைக் கதையையும் போராட்டத்தையும் போகிற போக்கில் ஒரு வேன் அரட்டையில் சொன்னது அருமை. அதனூடாக டிரைவரின் காதல் இழையும் கலந்து வைச்சு அசத்திட்டீங்க! மனதுக்கு நிறைவு தந்தது அழகான முடிவு!

    ReplyDelete
  11. ஒரு நல்ல கதை படித்த திருப்தி எனக்கு.

    ReplyDelete
  12. அருமையான கதை. சிறப்பான நடை. பாராட்டுகள்.

    ReplyDelete
  13. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் மனமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  14. @ரேவா

    மிகவும் லயித்து வாசித்திருக்கிறீர்கள் என்று உங்கள் பின்னூட்டம் சொல்கிறது. மனமார்ந்த நன்றி ரேவா.

    ReplyDelete
  15. @angelin

    வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  16. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  17. @G.M Balasubramaniam

    புதிய உத்தியிலான கதைமுயற்சியைத் தாங்கள் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  18. @செய்தாலி

    வருகைக்கும் கதையை ரசித்துப்பாராட்டியமைக்கும் மிக்க நன்றி செய்தாலி.

    ReplyDelete
  19. @Ramani S

    வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  20. @வெங்கட் நாகராஜ்

    கதையின் கருவை அழகாகப் படம்பிடித்துக் காட்டியக் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.

    ReplyDelete
  21. @poovizi

    வருகைக்கும் உங்கள் மனந்திறந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி பூவிழி.

    ReplyDelete
  22. @பால கணேஷ்

    வருகைக்கும் கதையை ரசித்து இட்ட அழகானப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி கணேஷ்.

    ReplyDelete
  23. @Chellappa Yagyaswamy

    தங்களுடைய வருகையும் பாராட்டும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.

    ReplyDelete
  24. @ராமலக்ஷ்மி

    தங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  25. இவ்வளவு தாமதமா வாரேண்ணு நினைக்காதீர்கள் தோழி!
    நீங்க பதிவு போட்டபோது வந்து முழுவதும் வாசிக்க முடியாமல் தடைப்பட பின்னரும் இரண்டுதடவை தடங்காலாக தாமதமானாலும் தடங்கலில்லாமல் அமைதியாக முழுவதையும் ரசிச்சுப் படித்து கருத்துப் பகிரணும்னு நினைத்து இன்னிக்குத்தான் செயற்படுத்தினேன்.

    ஆனா என்ன எல்லாரும் எழுதிய கருத்தைத்தான் நானும் சொல்லப்போகிறேன். என்பங்கிற்கு...:)

    மிக மிக அருமையாக கதையை அந்த வண்டியில் கொண்டு போனீர்கள். சொற்பதங்கள் காட்சிப்பதிவைத் தந்தது. எழுத்தில் வாசிக்கின்றோமென உணர்வே இல்லாமல் ஒரு குறும்படம் அல்லது நாடகம் பார்த்த உணர்வு எனக்கு.

    கதைமுடிவும் அற்புதம். டயலாக் எல்லாமே தத்ரூபமா இருந்தது. ரொம்ப ரசித்துப்படித்தேன்.
    தொடருங்கள் மேலும்...

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  26. பயணம்போல கதையும் ரசிக்கும்படி இருந்தது

    ReplyDelete
  27. @இளமதி

    எவ்வளவு தாமதமாக வந்தாலும் தவறாக நினைக்கமாட்டேன் இளமதி. அவரவர்க்கு ஏதேனும் வேலை இருக்கும், வரத் தடங்கல் இருக்கும் அல்லவா? முடியும்போது வந்து வாசியுங்கள், கருத்திடுங்கள்.

    கதை பற்றிய உங்கள் பின்னூட்டம் வெகுவாக உற்சாகம் தருகிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  28. @கவியாழி கண்ணதாசன்

    தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  29. மாமி சொல்றது சரிதான். பல குடும்பப்பொம்பளைகளே குடும்பத்தைப் பத்திக் கவலப்படாம ஆடம்பரமா செலவு செஞ்சு வாழும்போது எங்கேயோ இருந்து வந்த ஒருத்தி தன்னைக் காப்பாத்தினவன் குடும்பத்துக்காக காலமெல்லாம் உழைக்கிறானா அவ உண்மையிலேயே தெய்வம்தான்."

    "கொத்தமங்கலத்தம்மா! எங்ககிட்ட சொன்னது எங்களோடயே இருக்கட்டும். வேற யாருகிட்டயும் சொல்லாதீங்க. அந்த உத்தமிக்கு நாம செய்யற மரியாதை அதான்."//

    தன்னை காப்பத்தின்வர் குடும்பத்திற்கு உழைத்த பெண்மணியின் கதை அருமை.
    தன் அம்மாவைப் பற்றி தவறான மதிப்பில் இருந்த குமார் மனம் மாறி தன் அம்மாவின் பெயரை பாட்டியிடம் தெரிந்துகொள்ள துடிப்பது மகிழ்ச்சி.
    கதை மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  30. மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீங்க கீதமஞ்சரி. நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக மீதி இடுகைகளையும் படிக்கிறேன்.

    ரவிவர்மாவின் ஓவியம் - பார்த்தால் மனதுக்கு இதம் எப்பொழுதும். பகிர்ந்தமைக்கு நன்றி. மீதி ஓவியங்கள் இணையத்தில் கண்டால் லிங்க் கொடுக்க இயலுமா?

    ReplyDelete
  31. @கோமதி அரசு

    வருகைக்கும் கதையை ரசித்துக் குறிப்பிட்ட வரிகளுக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  32. @இமா

    வருகைக்கும் கதை பற்றிய பின்னூட்டத்துக்கும் நன்றி இமா.

    google images இல் ravi varma paintings என்று தேடினால் நிறைய கிடைக்கிறது. ஆனால் அவற்றில் பல நகல்களும் இருக்கு. கவனித்து தேர்ந்தெடுக்கவேண்டும்.

    ReplyDelete
  33. நல்ல நடையில் கதை நகர்ந்து செல்கின்றது. சிறப்பான முடிவு.

    ReplyDelete
  34. தங்கள் மின்னஞ்சல் முகவரியை என் வலைப்பூவில் பின்னூட்டமாகத் தெரிவிக்க இயலுமா? என் கவனத்துக்கு மட்டுமே. வெளியிடுவதில்லை.

    ReplyDelete
  35. கீதா, வழக்கம்போல வித்தியாசமான கருகொண்ட அருமையான கதை.

    ReplyDelete
  36. சமூக நீதிபோதனைக்கதை! அருமை!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.