31 January 2017

என்றாவது ஒரு நாள்.. வந்ததே அத்திருநாள்...







இந்தியக் குடியரசு தினம் மற்றும் ஆஸ்திரேலிய தினம் என்று என் பிறந்தநாடும் புகுந்தநாடும் கொண்டாடும் சிறப்புநாளில் (26.01.17) 'என்றாவது ஒரு நாள்' என்னும் என் முதல் நூல் மேடை கண்டு மெய்சிலிர்த்துப்போனது. இந்நூலுக்கான வெளியீட்டு விழாவினை கட்டாயம் தான் நடத்தியே தீருவேன் என்று நூலை வாசித்த நாள் முதலாய் எனக்கு உறுதியளித்தபடி இருந்தார் சிட்னிவாழ் தோழியும் உயர்திணை அமைப்பின் அமைப்பாளரும்அட்சயப்பாத்திரம் வலைத்தளத்தின் உரிமையாளருமான மணிமேகலை என்னும் யசோதா பத்மநாதன் அவர்கள்





இருவருடங்களாய் அசைபோட்டபடி இருந்த அவரது இலட்சியம் ஐந்து நாட்களுக்கு முன்னர் தன் இலக்கை எட்டி வெற்றிப் புன்னகைதனை ஆன்றோர் சபைதனில் அள்ளிவீசியபோது அந்த இலக்கினை அடைய அவர் மேற்கொண்ட  பிரயத்தனங்களும் சிரமங்களும் பட்ட பாடுகளும் மேடையின் திரைச்சீலைக்குப் பின்னால் மறைவாய் நின்றுகொண்டிருந்ததை என் அகப்பார்வையால் அறிந்துணர முடிந்தது. அன்று நான் மேடையில் பேசியபோது குறிப்பிட்டேன்.. ‘தோழி யசோதாவின் நட்பு மட்டும் எனக்குக் கிடைத்திராவிடில் இன்று இந்த மேடையில் உங்கள் முன் நான் இல்லை’. இது வெற்றுப்புகழுரை அன்று. என் ஆழ்மனத்தின் வெளிப்பாடு.








ஆஸ்திரேலிய மண்ணில் ஐரோப்பியர் குடியேறிய வரலாற்றின் அடிப்படையில் பிரபல எழுத்தாளர் ஹென்றிலாஸனால் நெய்யப்பட்ட கதைகளின் தொகுப்பான இந்த மொழிபெயர்ப்பு நூலை வெளியிட ஏற்ற தினமாக ஆஸ்திரேலிய தினத்தை அவர் தேர்ந்தெடுத்தமையும் விழா அழைப்பிதழை ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் கொடிவண்ணங்களாகிய கருப்பு, சிவப்பு, மஞ்சள் என்ற வண்ணக்கலவையோடு உருவாக்கியதையும் கொண்டே இந்நூல் மீதான அவரது உள ஈடுபாட்டை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். தன் பாடுகளைப் பின்னிருத்தி, மேடையில் எனை அமர்த்தி, நானும் என் நூலும் பெறும் சிறப்புகளை முன்னிருக்கையிலிருந்து முகமலர்ச்சியோடு தாயின் பூரிப்போடு பார்த்திருந்தார் தோழி யசோதா.






நிகழ்ச்சிக்கு அழைப்புவிடுத்திருந்தவர்களுள் தவிர்க்கவியலாத காரணத்தால் வரவியலாத ஒருசிலரைத் தவிர பெரும்பான்மையோர் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர். விழா துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாகவே வந்துவிட்ட ப்ளாக்டவுன் கவுன்சிலர் உயர்திரு சூசை பெஞ்சமின் அவர்கள் தன்னை சென்னைப் பேட்டைப் பையன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.






அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனி அரசாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை அருளாய்
குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்
குலவிடும் தனிப் பரம் பொருளே!

எனும் பாரதியின் பாடலோடு இறைவணக்கம் செலுத்தித் அறிமுக உரை நிகழ்த்தினார் நண்பர் பிரவீணன் மகேந்திரராஜா அவர்கள். பல்கலைக்கழகப் பேராசிரியராக இருக்கும் அவரது நாவில் தமிழ் துள்ளிவிளையாடும்.. இலக்கிய மேற்கோள்களோடு நிகழ்வினை மிக நேர்த்தியாகத் தொகுத்தளித்த பாங்கும், அவரது கவித்தமிழும், விழாவை இறுதிவரை சுவாரசியம் குறையாமல் வைத்துக்கொண்டமையும் மிகச்சிறப்பு.



தமிழ்ப்பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி இந்நிகழ்வைத் துவக்கிவைத்து ஆசியுரை வழங்கினார் பிரபல இருதயநோய் நிபுணரான டாக்டர் மனோமோகன் அவர்கள்




ஆஸ்திரேலிய பூர்வகுடியான இம்மண்ணின் மைந்தர்களையும் அவர்களுடைய வாழ்வியல் சிதைக்கப்பட்ட வரலாற்றையும் நினைவுகூர்ந்ததோடு ஈழவிடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான வீர்ர்களையும் பொதுமக்களையும் நினைவில் கொணர்ந்து மரியாதை செலுத்தி தம் உரையைத் துவக்கினார். தமிழில் இதுபோன்ற ஆக்கங்கள் வரவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இரண்டொரு நாள் முன்பு தான் சிட்னியில் பங்கேற்ற தமிழர் திருமணம் ஒன்றினைப் பற்றிக் குறிப்பிட்டபோது, ஓதுவாரைக் கொண்டு நடத்தப்பட்ட அத்திருமணத்தில் ஊசி விழும் ஓசை கூட துல்லியமாய்க் கேட்கும் வண்ணம் அமைதி நிலவியதாகவும் அதற்குக்காரணம் அது அங்கிருந்த அனைவரும் நன்கறிந்த ஒரு மொழியில் நடைபெற்றதுதான் என்று கூறி மொழியின் மகத்துவம் எடுத்துரைத்தார்.  



வரவேற்புரையை நண்பர் குமாரசெல்வம் அவர்கள் வழங்கினார். நினைத்தமாத்திரத்தில் கவிபாடும் வல்லமை கொண்ட ஆசுகவியாம் அவர் தம் வரவேற்புரையையும் அழகுக்கவி வரிகளால் அலங்கரித்திருந்தார். தன் மகனை சான்றோன் எனக் கேட்டு ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயாய் அந்நேரத்து என் உணர்வினை மிக அழகாகக் குறிப்பிட்டு நெகிழ்த்தினார்.




புத்தக ஆய்வும் பகிர்வும் பற்றி வெவ்வேறு வயதுகளில் வெவ்வேறு துறைகளில் உள்ள ஐவர் பேசவிருந்தனர். அன்று திடீரென தமக்கேற்ப உடல்நலக்குறைவால் நண்பர் ரஞ்சகுமார் அவர்களால் பங்கேற்கவியலவில்லை. அவரது நேர்மையான விமர்சனத்தைக் கேட்க ஆவலோடு எதிர்பார்த்திருந்த எமக்கு சற்றே ஏமாற்றம்தான். சட்டம் பயிலும் மாணவியான செல்வி திவ்யா கதிர்காமநாதன் முதலில் பேசினார். ஐந்து வயதிலேயே ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட்டதாக அவர் சொன்னதை அவரது அழகுத்தமிழ் நம்பவிடாது தடுத்தது. இளைய தலைமுறையைச் சார்ந்தவரும், பள்ளியிலும் கல்லூரியிலும் ஹென்றிலாஸனின் படைப்புகளின் வாயிலாக அவரை முன்பே அறிந்தவருமான அவர் இந்நூலில் உள்ள கதைகளை மூலக்கதைகளின் இயல்போடு ஒப்பிட்டுநோக்கி அளித்த விமர்சன உரை முக்கியத்துவம் பெறுவதாக அமைந்தது. உரையின் இறுதியில் மொழிபெயர்ப்பில் நான் தடுமாறியிருந்த ஒரு இடத்தைச் சுட்டிச் சென்றதும் பாராட்டுக்குரியது. 




இரண்டாவதாய்ப் பேசினார் எழுத்தாளர் கார்த்திக் வேலு அவர்கள். பேன்ஜோ பேட்டர்சன், ஹென்றி லாஸன் என்ற சமகாலத்திய இருமாபெரும் எழுத்தாளுமைகளை ஒப்பிட்ட அவர், அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக ஹென்றிலாஸன் முன்னவரிடமிருந்து வேறுபடும் விதம் குறித்து விவரித்து, ஹென்றி லாஸனுடையப் படைப்புகளை நான் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தையும் அதற்கான நியாயத்தையும் என் தரப்பிலிருந்து அழகாகக் குறிப்பிட்டார். ஹென்றி லாஸனின் கவிதை வரிகள் அவரது உரைக்கும் நிகழ்வுக்கும் சிறப்பு சேர்த்தன. மொழிபெயர்ப்பின் சிரமங்களை மிக அருமையாக எடுத்துரைத்தார். இருவேறு மொழி மட்டுமல்லஇருவேறு கலாச்சார பண்பாட்டுப் பின்னணியின் புரிதல் அவசியம் என்றும் இருவேறு தளங்களில் அழுந்திக் காலூன்றினாலொழிய தரமான மொழிபெயர்ப்பு சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார். என்னுடைய மொழிபெயர்ப்பு குறித்த அவரது கருத்து எனக்கு நல்லதோர் நிறைவைத் தந்தது என்றால் மிகையில்லை.




மூன்றாவதாகப் பேசிய நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்கள் தன்னை என்னுடைய பரமரசிகை என்று குறிப்பிட்டபோது அதில் எனக்கு சந்தேகம் ஏதும் ஏற்படவில்லை.. ஏனெனில் பல தருணங்களில் அதை அவர் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலியில் இரண்டுமுறை என்னை நேர்காணல் கண்டு எனக்கான வாசகவெளியை விரிவுபடுத்தியிருக்கிறார். நூலிலுள்ள கதைகளை மிக அழகான தன் குரலால் வாசித்து வளப்படுத்தியிருக்கிறார். அன்றும் மேடையில் சில கதைகள் குறித்த அவரது சிலாகிப்பு தொடர்ந்த்து. பாத்திரங்கள் பேசுவதை உற்ற பாணியில் ஏற்ற இறக்கத்தோடு அவர் விவரித்து ஒரு நாடகம் பார்ப்பதைப் போன்ற உணர்வை பார்வையாளர்களுக்கு அளித்தபோது அனைவருமே அதை கரகோஷமெழுப்பி ரசித்து மகிழ்ந்தனர்.




அடுத்துப் பேச வேண்டிய மருத்துவர் கார்த்திக் அவர்கள் கான்பராவில் மருத்துவர்களுக்கான சிறப்பு விருந்து நிகழ்வில் பங்கேற்ற கையோடு மூன்று மணிநேரம் குடும்பத்துடன் காரில் பயணித்து அவர் பேசவேண்டிய நேரத்துக்கு சரியாக நிகழ்விடம் வந்துசேர்ந்தார். எமக்காக அவர் எடுத்துக்கொண்ட சிரமம் நெகிழச்செய்தது. அவர் பேசுகையில் மண்வளம் சார்ந்து மனித இயல்புகள் மாறுகின்ற யதார்த்தத்தை மிக சுவைபடக் கூறினார். ஒரு இலக்கியம் வாசிப்பவரின் மனத்தைத் தைக்க வேண்டும் என்றும் பல நாட்களுக்கு அதைப்பற்றிய சிந்தனை வாசகர் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். நூலின் பல கதைகளையும் கதை மாந்தர்களையும் சிலாகித்த அவர், சீனத்தவன் ஆவி கதையோடு தன் வாழ்வில் நடைபெற்ற திகில் அனுபவம் ஒன்றையும் எம்மோடு பகிர்ந்துகொண்டார். ஹென்றி லாஸன் கதைகளில் காணப்படும் நுட்பம் குறித்தும் கோடிட்டுக் காட்டினார்.




ஆய்வுப் பகிர்வுகளுக்குப் பிறகு எனது ஏற்புரை அமைந்தது. பேரிளம்பெண்ணான நான் எனது கன்னிப்பேச்சை இந்த மேடையில் ஏற்றுவதற்கான வாய்ப்பினை இந்நூல் மூலம் பெற்றமைக்காய் எனது மகிழ்வினைத் தெரிவித்தேன். ஆரம்பத்தில் தயக்கத்துடன் துவங்கினாலும் அவையோரின் உற்சாகமும் ஊக்கந்தரும் செவிசாய்ப்பும் சற்று நேரத்தில் தயக்கத்தை விலக்கி சொல்லநினைத்தவற்றைத் தவறாமல் சொல்லவைத்தது.

நூலினை வெளியிட்டு சிறப்பித்தார் 
வைத்தியக்கலாநிதி மனோமோகன் அவர்கள்.





நூலின் சிறப்புப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டோர்... 

  சிட்னி தமிழ் அறிவகம் சார்பாக
திரு. ராஜேஸ்வரன் அவர்கள்

ப்ளாக்டவுன் கவுன்சில் சார்பாக
கவுன்சிலர் திரு.  சூசை பெஞ்சமின் அவர்கள்.

ஏடிபிசி வானொலி சார்பாக
திரு. ஈழலிங்கம் ஐயா அவர்கள் 

தாயகம் தமிழ் ஒலிபரப்பு சேவை சார்பாக
திரு. எழில்வேந்தன் ஐயா அவர்கள்.  

தமிழ் முழக்கம் வானொலி சார்பாக
திரு. ஸ்ரீதரன் அவர்கள்.

தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பாக
திரு. அனகன் பாபு அவர்கள் 

ஆஸ்திரேலிய தமிழிலக்கிய கலைச்சங்கம் சார்பாக
பேராசிரியர் ஆசி. கந்தராசா அவர்கள்.

சிட்னி தமிழ் மன்றம் சார்பாக
திரு. பொன்ராஜ் தங்கமணி அவர்கள்
,
தமிழ்வளர்ச்சி மன்றம் சார்பாக
திரு. அன்பு ஜெயா ஐயா அவர்கள்

தமிழ்ச்சங்கம் சார்பாக
திரு. வேங்கடம் அவர்கள்.


என்னுடைய வானொலி நிகழ்ச்சிகளின் பரமரசிகரும்
என்னைத் தன் மகளெனக் கொண்டாடுபவருமான
திரு. பத்மநாதன் ஐயா அவர்கள்


இறுதியாக இந்நிகழ்வு செவ்வனே நடைபெற உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிப்பெருக்கால் ததும்பித் தளும்பும் நெஞ்சத்தோடு நன்றி நவின்றார் தோழி யசோதா. சிற்றுண்டியோடு சிறு கலந்துரையாடல் இடம்பெற்றது. இறுதியாக திரையில் ஹென்றி லாஸனின் வாழ்க்கை குறித்த 15 நிமிட நிழலுரு சித்தரிப்போடு விழா இனிதே நிறைவுற்றது. எங்கள் நெஞ்சங்களும் நெகிழ்ந்து நிறைந்தது


ஹென்றி லாஸனின் வாழ்க்கை சித்தரிப்பு காணொளி 




நேரில் வந்திருந்து வாழ்த்தியவர்களுக்கும் 
வர இயலாவிடினும் மானசீகமாய் வாழ்த்தியவர்களுக்கும் 
உயர்திணையின் சார்பில் அன்பும் நன்றியும். 
****

புகைப்படங்கள் மற்றும் காணொளி மூலம் 
இந்நிகழ்வை ஆவணப்படுத்த உதவிய 
திரு. மணிமாறன் அவர்களுக்கு 
எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. 
****

நூல் உருவாக்கத்தில் உறுதுணையாயிருந்த 
என் கணவருக்கும் குடும்பத்தார்க்கும் 
 பதிப்பித்து உதவிய அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கும் 
என் மனமார்ந்த நன்றி. 
****

பிற்சேர்க்கை
காணொளிகள் இணைப்பு

part 1/6


part 2/6



part 3/6

part 4/6

part 5/6

part 6/6




23 comments:

  1. படங்களுடன் பதிவு வெகு அருமை. வேகமாக ஒருமுறை வாசித்து முடித்து விட்டேன். மீண்டும் ஒருமுறை வாசிப்பேன். காணொளிகளையும் கண்டு ரஸிப்பேன். தங்களுக்கு என் அன்பான பாராட்டுகள் + வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் உடனடி வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி கோபு சார். திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தயவால் மற்ற காணொளிகளையும் விரைவில் பதிவேற்றுவேன்.

      Delete
  2. //இந்நூலுக்கான வெளியீட்டு விழாவினை கட்டாயம் தான் நடத்தியே தீருவேன் என்று நூலை வாசித்த நாள் முதலாய் எனக்கு உறுதியளித்தபடி இருந்தார் சிட்னிவாழ் தோழியும் உயர்திணை அமைப்பின் அமைப்பாளரும், அட்சயப்பாத்திரம் வலைத்தளத்தின் உரிமையாளருமான மணிமேகலை என்னும் யசோதா பத்மநாதன் அவர்கள். //

    ’நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான்...நான்...நான்’ என்று பாட்டுப்பாடி சாதனை செய்துள்ள அவர்களுக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தோழி இப்பதிவின் மூலமாக அறிந்திருப்பார் எனினும் நானும் அவரிடம் தங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  3. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    மகிழ்ந்தேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  4. அருமையான நிகழ்வை அழகிய படங்களோடு சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொள்கிறோம். வாழ்த்துகள். நண்பர் தனபாலன் உதவியோடு சீக்கிரம் காணொளியும் வெளியிடுவீர்கள் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஸ்ரீராம். நண்பர் தனபாலனின் உதவியால் அடுத்தடுத்த காணொளிகளைப் பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன். விரைவில் இணைப்பு தருகிறேன்.

      Delete
  5. வாழ்த்துக்கள், சகோதரி! படங்களையும் நிகழ்வுகளின் வர்ணனைகளையும் பார்த்தும் படித்தும் மனத்திற்கு நிறைவாக இருந்தது.

    ஒரு புத்தகத்தை வெளிக்கொணர்தலை விட சிரமமான விஷயம் அதற்காக ஒரு விழா எடுத்தல். தங்கள் நண்பர் யசோதாவின் முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

    எல்லோருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஜீவி சார். இப்படியொரு புத்தகம் வந்திருக்கிறது என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் மூலம்தான் விளம்பரப்படுத்த வேண்டியுள்ளது. தோழியின் முயற்சிகளைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

      Delete
  6. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் சகோதரி...

    எனக்கொரு வாய்ப்பு (Upload Video) கொடுத்து உள்ளீர்கள்... விரைவில் பதிவு செய்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கீழ் உள்ள இணைப்பு உங்களுக்கு மிகவும் உதவும் சகோதரி... இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள்... எனது பதிவில் சொல்கிறேன்... நன்றி...

      https://www.youtube.com/watch?v=PECLd821AXY

      Delete
    2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன். காணொளியின் அளவைக் குறைக்க நீங்கள் கொடுத்த இணைப்பு மிகவும் உதவியாக உள்ளது. அதன்படிதான் பதிவேற்ற முயல்கிறேன்.இணையவேகம் இல்லாமையால் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டுவிடுகிறது. முழுவதும் பதிவேற்றியவுடன் இங்கு இணைப்பினைக் கொடுப்பேன். கேட்டவுடன் உதவியமைக்கு மிக மிக நன்றி.

      Delete
  7. மனம் நிறைந்த வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  8. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது. நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகளும், நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா. விக்கிபீடியா போட்டியில் தாங்கள் வெற்றிபெற என் வாழ்த்துகள்.

      Delete
  9. மனம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தோழி...
    அன்பின் யசோதா தோழிக்கும் அவ்வண்ணமே!

    நிகழ்வை மிக அழகாகவும் நிறைவாகவும் எங்களுடன் பகிர்ந்து இருக்கீங்க! நம் தமிழ்க் கலாச்சாரமும் தமிழும் உலகமெலாம் தங்களைப் போன்ற பற்றாளர்களால் செம்மையாக பிரகாசிப்பதில் பெருமகிழ்ச்சி.

    காணொளி கண்டு பின் வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் நிலாமகள்.. தோழியின் முயற்சி இல்லையெனில் இது எதுவும் சாத்தியமில்லை.. அவர்களைப் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி.

      Delete
  10. மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் கீதா.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி.

      Delete
  11. மிகவும் மகிழ்ச்சி கீதா! காணொளி இன்னும் காணவில்லை.நேரங்கிடைக்கும் போது பார்ப்பேன். பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அக்கா.. காணொளியின் பிற பகுதிகளையும் விரைவில் பதிவேற்றிவிடுவேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.