23 May 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 13 (முயல்கள்)




முயல்கள் சாதுவான பிராணிகள். அவற்றால் பெரிதாய் என்ன பாதகம் விளைந்துவிடும் என்றுதானே நினைக்கத்தோன்றுகிறது? ஆனால் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் சொந்த மண்ணின் தாவரங்கள் பலவும் அழியும் நிலையில் உள்ளதற்கு முயல்கள் முக்கியக்காரணம் என்றால் வியப்பாக உள்ளதல்லவா? ஆம். முயல்களின் கொறிக்கும் குணத்தால் பல அரிய தாவரங்களின் விதைகளும் குருத்துகளும் சிதைக்கப்படுகின்றன. வம்சவிருத்தி பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இனமே அழிந்துபோகிறது. அப்படி அழியக்கூடிய அபாயத்திலிருக்கும் தாவர இனங்கள் ஒன்றிரண்டல்ல கிட்டத்தட்ட 121 வகை என்கிறது 2007 இல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு.


முதல் கப்பற்தொகுதியுடன் கொண்டுவரப்பட்ட வளர்ப்பு முயல்களை விடவும் வேட்டைக்கென அறிமுகப்படுத்தப்பட்ட பெருமுயல்கள்தாம் ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் பெரும் சரிவை உண்டாக்குவதாக உள்ளன. 1859 இல் இருபத்து நான்கே நான்கு காட்டுமுயல்கள் விக்டோரியா மாநிலத்தில் விடப்பட்டன. அறுபது வருடங்களுக்குப் பிறகு 1920 இன் கணக்கெடுப்புப்படி ஆஸ்திரேலியாவில் அவற்றின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கும் மேலாம். அதன்பிறகு ஒரு நூற்றாண்டு கடக்கவிருக்கும் நிலையில் இப்போது அவற்றின் எண்ணிக்கை என்னவாக இருக்குமென்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். முயல்களின் எண்ணிக்கை பெருகும் வேகத்தை கீழே உள்ள வரைபடம் மூலம் அறிந்துகொள்ளலாம். 



முயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆகும் செலவும், முயல்களால் ஏற்படும் பொருளாதார நட்டமுமாக ஆஸ்திரேலிய அரசுக்கு ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 113 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 565 கோடி ரூபாய்). நாட்டின் பல பகுதிகளிலும் மானாவாரியாய் பெருகிக்கொண்டிருந்த முயல்கள் மேலும் பரவுவதைத் தடுக்க பல யோசனைகள் பலராலும் முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே முயல்கள் ஏகமாய்ப் பரவிக்கிடக்கும் குவீன்ஸ்லாந்துக்கும் நியூ சௌத் வேல்ஸுக்கும் இடையில் இனியும் முயல்கள் பரவாமல் தடுக்க ஒரு பலத்த கம்பிவேலி போடப்படவேண்டும் என்று அப்போதைய (1884) எம்.எல்.ஏ ஒருவர் முன்வைத்த ஆலோசனையைக் கிண்டல் செய்து ஒரு கேலிச்சித்திரம் வரையப்பட்டது. படத்தைப் பார்த்தால் உங்களுக்கும் சிரிப்பு வருகிறதுதானே? ஆனாலும் முயல் தடுப்பு வேலி போடப்பட்டது. அதனால் முயல்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும் டிங்கோ மற்றும் நரிகளின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.



கிழக்குப் பகுதி முழுவதும் ஆக்கிரமித்த முயல்கள் மேற்கு ஆஸ்திரேலியப் பக்கம் படையெடுப்பதைத் தடுக்கவும் மேற்கு ஆஸ்திரேலியாவின் விளைநிலங்களைப் பாதுகாக்கவும் மாநிலத்தின் குறுக்கே தெற்குக் கடற்கரையிலிருந்து வடக்கு கடற்கரை வரை நீண்ட இரும்புக் கம்பிவேலி போட முடிவுசெய்யப்பட்டது. 1901 இல் தொடங்கிய அந்த வேலை முடிய ஆறு ஆண்டுகள் பிடித்தன. இன்றும் உலகிலேயே மிக நீளமான கம்பிவேலி என்ற பெருமைக்குரியது அந்த 1837 கி.மீ. நீளமுள்ள வேலி. கூடுதல் பாதுகாப்புக்காக அத்துடன் மேலும் இரண்டு கம்பிவேலிகள் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் போடப்பட்டன.


மொத்தமாக மூன்று வேலிகளின் நீளத்தையும் கணக்கிட்டால் 3,256 கி.மீ. நீளம் வரும். நூறு வருடங்களுக்கு முன் இதற்காக செலவு செய்யப்பட்ட தொகை அப்போதைய மதிப்பில் சுமார் நான்கு கோடி ரூபாய். பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் 120 பேர்,  ஒட்டகங்கள் 350, குதிரைகள் 210, கழுதைகள் 41. இந்த வேலியை அடைத்ததோடு நிம்மதியாக இருந்துவிட முடியவில்லை. தொடர்ச்சியாய் அந்த வேலிகளைப் பராமரிப்பது பெரும் பிரச்சனையாகவே இருந்துவந்தது.



myxomatosis என்னும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வேலிபராமரிப்புக்கான அவசியம் அவசியமற்றுப்போயிற்று. முயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த கொடிய வைரஸ் முயல்களிடையே பரப்பப்பட்டது. வைரஸால் பாதிக்கப்பட்ட முயலைக் கடிக்கும் கொசு மற்றும் உண்ணிகள் மூலம் மற்ற முயல்களுக்கும் நோய் பரவும். பாதிக்கப்பட்ட முயல்களின் உடலில் கட்டிகள் தோன்றி கண்பார்வை இழந்து, காய்ச்சல் கண்டு இரண்டுவாரத்தில் இறந்துபோகும். ஒரேயடியாக சாகாமல் சித்திரவதைப்பட்டு சாவது எவ்வளவு கொடுமை! மனிதர்களின் சுயநலத்துக்கு இதுவும் ஒரு சான்று.



மேற்கு ஆஸ்திரேலியாவின் முயல்தடுப்பு வேலியையும் கடத்தப்பட்ட மூன்று சிறுமிகளையும் மையமாக வைத்து 2002 இல் rabbit proof fence என்றொரு திரைப்படம் வெளியானது. தாயிடமிருந்து பிரித்துக் கொண்டுசெல்லப்பட்ட மூன்று சிறுமிகள், அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாமிலிருந்து தப்பித்து தங்கள் தாயைத் தேடிவருவதுதான் கதை. கிட்டத்தட்ட 2400 கி.மீ. தூரத்தை உணவின்றி உறக்கமின்றி பாலையிலும் குளிரிலும் மிகவும் கஷ்டப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது வாரங்கள் நடையாய் நடந்து தாயை வந்தடைகின்றனர் சிறுமிகள். அவர்களுக்கு அடையாள வழிகாட்டியாய் இருப்பது இந்த முயல்தடுப்பு வேலிதான். இந்தத் திரைப்படம் 1931-இல் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முயல்தடுப்பு வேலி முயல்களைத் தடுத்ததோ இல்லையோ… ஆனால் அந்த அபலைச் சிறுமிகளுக்கு வழிகாட்டியாய் இருந்து தாயிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. 


சரி. சிறுமிகள் ஏன் கடத்தப்படவேண்டும்யார் கடத்தினார்கள்? அதைப் புரிந்துகொள்வதற்கு ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பக்கமான  stolen generation பற்றிக் கொஞ்சம் தெரிந்திருக்கவேண்டும்.




Stolen generation என்பது காணாமற்போன ஒரு தலைமுறையைக் குறிக்கும் சொல். வெள்ளையருக்கும் பூர்வகுடிகளுக்கும் பிறந்த கலப்பினக் குழந்தைகளை வலுக்கட்டாயமாக தாய்மார்களிடமிருந்து பிரித்துக்கொண்டு சென்று தனியே வளர்த்து அவர்களுடைய பழக்கவழக்கங்களை, நடை உடை பாவனைகளை வெள்ளையரைப் போலவே மாற்றும் ஒரு முயற்சி ஆரம்பகால ஐரோப்பிய ஆதிக்கத்தால் மேற்கொள்ளப்பட்டதுஅக்குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி போதிக்கப்பட்டது. ஆங்கிலேய வழக்கப்படியான வாழ்க்கைமுறை பயிற்றுவிக்கப்பட்டது. அவர்களது பூர்வகுடி கலாச்சார பாரம்பரிய ஆன்மீக அடையாளங்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டன. தாய்ச்செடியிலிருந்து ஒடித்து வேறிடத்தில் பதியனிடப்பட்ட செடிகளைப் போல கடைசிவரை தங்கள் உற்றார் பெற்றோரைக் காணாமலேயே முடிந்துபோனது அவர்களுடைய வாழ்க்கை.


ஒரு குழந்தை காணாமல் போனாலேயே பதறும் தாய்மனம். ஒரு தலைமுறையே காணாமல் போவதென்றால்…அம்மக்களின் வேதனையை என்னவென்று சொல்வது? ஆஸ்திரேலிய வரலாற்றில் கறைபடிந்த காலகட்டமாகவே அது கருதப்படுகிறது. பூர்வகுடி மக்களின் ஆழ்மனத்தில் நீறு பூத்த நெருப்பாக இன்றளவும் கனன்றுகொண்டிருக்கும் வேதனைமிகு நிகழ்வு அது.


(தொடரும்)
(படங்கள் உதவி; இணையம்)

முந்தைய பகுதி:
ஒண்டவந்த பிடாரிகள் - 12 (ஆடுகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 14 (லாண்டானா, பிட்டூ & லிசியம்)

44 comments:

  1. அழகாய் வெள்ளை முயல்களைக் கண்டு ரசித்து இருக்கிறோம். ஆனால் இவ்வளவு இருக்கிறது என்று இப்போது தான் தெரிகிறது..

    ஒரு நூற்றாண்டு கடக்கவிருக்கும் நிலையில் இப்போது அவற்றின் எண்ணிக்கை என்னவாக இருக்குமென்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.//

    அப்பப்பா...!!!
    ..
    ஒரு குழந்தை காணாமல் போனாலேயே பதறும் தாய்மனம். ஒரு தலைமுறையே காணாமல் போவதென்றால்…அம்மக்களின் வேதனையை என்னவென்று சொல்வது?//

    மனம் பதறுகிறது....

    முயல்தடுப்பு வேலி முயல்களைத் தடுத்ததோ இல்லையோ… ஆனால் அந்த அபலைச் சிறுமிகளுக்கு வழிகாட்டியாய் இருந்து தாயிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. //

    எப்படி குழந்தைகள் வந்தார்கள் என நினைக்கையிலேயே...வேலி என்று தெரிய
    நிம்மதி ஆகிவிட்டது

    தொடர்ந்து பல விஷயங்களை அறியத்தருகிறீர்கள் சகோ...நன்றி

    தம 1



    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் நெகிழ்வான கருத்துரைக்கும் மிகவும் நன்றி உமையாள்.

      Delete
  2. லிஸ்ட்டில் முயல்களுமா? ஆச்சர்யம்தான்
    வைரஸைப் பரப்பி முயலினத்தை ஒழிக்கும் முயற்சியை எதிர்த்த ஆட்களே இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. லிஸ்டில் முயல்களுக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அவ்வளவு செலவு செய்து வேலி போட்டிருப்பதிலிருந்தே அதை நம்மால் அறியமுடிகிறது. வைரஸ் பரப்புவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள். ஆனால் உலகளவில் பல நாடுகளும் இதை அங்கீகரித்துவிட்டதால் எதிர்ப்பு பயனற்றுப் போயிருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  3. லிஸ்ட்டில் முயல்களுமா? ஆச்சர்யம்தான்
    வைரஸைப் பரப்பி முயலினத்தை ஒழிக்கும் முயற்சியை எதிர்த்த ஆட்களே இல்லையா?

    ReplyDelete
  4. 1859 இல் வெறும் 24 காட்டு முயல்கள் அறுபது ஆண்டுகளில் அதாவது 1920 இல் ஆயிரம் கோடியாக அதிகரித்துவிட்டன. அதன் பிறகு இப்போது ஓர் நூறாண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவற்றின் மொத்த எண்ணிக்கை எத்தனை ஆயிரம் கோடிகளோ..... !!!!!

    மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. செய்திகள் பிரமிக்கத்தான் வைக்கின்றன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இவற்றையெல்லாம் அறிந்துகொண்டபோது வியப்புதான் மிஞ்சியது. நான் வாசித்தறிந்து பிரமித்த விஷயங்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு சார்.

      Delete
  5. தாங்கள் தேர்ந்தெடுத்துக் காட்டியுள்ள படங்களை சிரிப்பை வரவழைக்கின்றன.

    நடுவில் நெட் கட்டி பேட்மிண்டன் விளையாடும் அந்த முயல்கள் வேலிகளைத்தாண்ட முடியாதா என்பது தான் அதில் உள்ள மிகப்பெரிய நகைச்சுவையாக அந்தக்கார்டூன் வரையப்பட்டுள்ளது. :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வேலியின் பயனின்மை குறித்து அப்போதைய கேலிச்சித்திரம் ரசிக்கவைப்பதோடு உண்மையையும் உணர்த்துகிறதே. தாங்களும் அதை ரசித்தமைக்கு நன்றி கோபு சார்.

      Delete
  6. //ஒரேயடியாக சாகாமல் சித்திரவதைப்பட்டு சாவது எவ்வளவு கொடுமை! மனிதர்களின் சுயநலத்துக்கு இதுவும் ஒரு சான்று.//

    இதைக்கேட்கவே மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எந்தத் தவறும் செய்யாத அப்பிராணிகள் அவைகள். அவற்றைக் கொல்ல முடிவெடுத்ததே பாவம். அதிலும் சித்திரவதைப்பட்டு சாவதென்பது எவ்வளவு கொடுமை. வேதனையான விஷயம்தான்.

      Delete
  7. பூர்வகுடி மக்களின் ஆழ்மனத்தில் நீறு பூத்த நெருப்பாக இன்றளவும் கனன்றுகொண்டிருக்கும் வேதனைமிகு நிகழ்வு படிக்கவே மிகவும் கொடுமையாகத்தான் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்தில் சொ.ஞானசம்பந்தன் ஐயா குறிப்பிட்டுள்ளது போல் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் நாள் பகிரங்கமாக பூர்வகுடி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அது கொஞ்சம் காயமாற்றினாலும் வடு என்றைக்கும் மாறாது அல்லவா?

      Delete
  8. Rabbit proof fence திரைப்படக்கதையை தங்கள் மூலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    சுவாரஸ்யமான பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    இதுபோன்ற சுவையான தகவல்களுடன் பதிவுகள் மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் தங்கள் தொடர் பின்னூட்டங்களுக்கும் ரசித்தவற்றைக் குறிப்பிட்டு அளிக்கும் கருத்துரைகளுக்கும் மனமார்ந்த நன்றி கோபு சார்.

      Delete
  9. முயல்கள் கூடவா...? வியக்கவே வைத்தது...

    முடிவு தகவல் மிகவும் வருத்தப்பட வைத்தது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் முயல்களும் கூடத்தான். மற்றவற்றிலும் முயல்களால் உண்டாகும் பாதிப்பு மிக அதிகம் என்பதை பதிவின் மூலம் தெரியும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  10. வணக்கம்
    பதிவை படித்த போது ஒரு படம் பார்த்தது போல ஒரு உணர்வு மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ரூபன்.

      Delete
  11. முயல்களின் கதையை விட கொடியதாக இருக்கிறது அந்த மறைக்கப்பட்ட சமுதாயத்தின் கதை! மிகப்பெரிய பணி ! வாழ்த்துகள் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. உண்மை மைதிலி. ஒண்டவந்த பிடாரிகள் என்ற தலைப்பில் முதலிடம் பெறுவது மனிதர்கள்தாம் என்ற தகவலை உறுதிப்படுத்தும் நிகழ்வு அது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா.

      Delete
  12. ஒரு தலைமுறையே காணாமல் போயிருக்கிறதா
    கொடுமை சகோதரியாரே கொடுமை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மனம் நெகிழ்ந்த கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  13. உயிரினங்களின் சமநிலை இல்லையென்றால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதற்கு ஆஸ்திரேலியா நிகழ்கால உதாரணம் அதை அற்புதமாக தங்கள் பதிவில் தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். ஆச்சரியமான பல தகவல்கள் உங்கள் மூலம் அறிகிறோம்!

    தொடர்கிறேன்.

    த ம 6

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் பதிவின் சாரத்தை மிக அழகாகப் புரிந்தெழுதிய பின்னூட்டத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகுந்த நன்றி செந்தில் குமார்.

      Delete
  14. வைரஸ் பரப்பி கொல்லும் விதம் கொடுமையானது. மனிதர்களுக்கு மட்டுமேயானதா உலகம் எனும் கேள்வியை அடிக்கடிக் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

    stolen generation.. பதற வைக்கும் உண்மைகள்.

    ReplyDelete
    Replies
    1. அதேதான். எல்லாவற்றையும் ஆளப்பிறந்தவர்கள் தாங்கள்தாம் என்ற மனிதர்களின் ஆதிக்க மனப்பான்மை என்று மாறுமோ அன்றுதான் உலகம் தழைக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. முயல்களின் கதையை விட குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து வளர்த்து ஆஸ்திரேலியா வரலாற்றில் கறையை ஏற்படுத்திய நிகழ்வு சொல்லும் சோகம் அதிகம். அறியாத செய்திகளைச் சுவையாகத் தொகுத்துக் கொடுப்பதற்குப் பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அக்கா. அந்த நிகழ்வின் சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை அவர்கள். இப்போதும் பல இடங்களில் அவர்களுக்கான அங்கீகாரங்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வருகைக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி அக்கா.

      Delete
  17. வியப்பும் அதிர்ச்சியும் வருத்தமும் ஒருசேர...

    ReplyDelete
    Replies
    1. நமக்கே இப்படியென்றால் அனுபவித்தவர்களின் வலியை என்னவென்பது? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலாமகள்.

      Delete
  18. நம்ம ஊர்ல முயல்கள் அருகிக் கொண்டு வருவதால் கவலைப் படுகிறோம்

    ReplyDelete
    Replies
    1. நம்மூரில் முயல்கள் அருகிக்கொண்டு வருகின்றன என்பது எனக்குப் புதிய தகவல். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க எட்வின்.

      Delete
  19. சுவை மிக்க பதிவுக்குப் பாராட்டு . Stolen generation குறித்துப் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஆஸ்திரேலிய பிரதமர் .( Kevin Rudd என நினைவு .) பல நாடுகளுக்கு மத வெறியர் , பயங்கரவாதிகள் என மனிதர்களால் பிரச்சினை என்றால் இந்த நாட்டுக்கு விலங்குகளால் .

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் குறிப்பிட்டுள்ள தகவல் சரிதான். 13-02-2008 அன்று அப்போதைய பிரதமர் கெவின் ரட் பூர்வகுடி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அதுவும் ஆஸ்திரேலிய வரலாற்றில் பதிவாகியுள்ள முக்கிய நிகழ்வு. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி.

      Delete
  20. ஆச்சரியமான,சுவாரஸ்யமான தகவல்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

      Delete
  21. அங்கிருப்போரில் பெரும்பானமையோர் வந்தேறிகள் தானே.சிறு கற்பனை. பூர்வகுடியினரும் இவர்களை ஒண்ட வந்தபிடாரிகளென்றுதானே நினைப்பார்கள். தன் வினை தன்னைச் சுடும் சரிதானே.

    ReplyDelete
    Replies
    1. இத்தொடரின் முதல் பகுதியில் நான் குறிப்பிட்டுள்ளதும் இதுதான். பூர்வகுடி மக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு வந்தேறியும் ஒண்டவந்த பிடாரிகள்தாம். சந்தேகமே இல்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  22. ஒண்டவந்த பிடாரிகள் - 13 (முயல்கள்) = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி Geetha Mathivanan

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவைத் தங்கள் பக்கத்தில் பகிர்வதற்கும் நன்றி ஐயா.

      Delete
  23. இந்த முயல்களை உணவில்லாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.அவர்களுக்கு உடனடி உணவாகவும் .பல்கி பெருகி வருங்கால உணவாகவும் உதவும்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசனைதான். ஆனால் முன்னெடுப்பவர்கள் யாரோ? எல்லாமே வணிகரீதியாகப் பார்க்கப்படும் இக்காலத்தில் உடனடி லாபம்தானே முக்கிய இலக்காக இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.