4 May 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 11 (மான்கள்)




ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்ந்திருந்த விலங்கினம் மான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்து வேட்டைக்கென ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மான்கள் இப்போது ஆஸ்திரேலிய மழைக்காடுகளிலும் யூகலிப்டஸ் காடுகளிலும் பண்ணைநிலங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. கங்காரு, வல்லபிகளின் உணவுக்குப் போட்டியான மான்களின் எண்ணிக்கை மளமளவென்று பெருகுவது வியப்புக்குரிய விஷயமன்று. முன்பே சொன்னது போல் இங்கு சிங்கம், புலி, சிறுத்தை போன்ற பெரிய அளவிலான வேட்டையாடும் விலங்கினங்கள் கிடையாது என்பதுதான் இயற்கை சமநிலை குலைந்துபோனதற்கு முக்கியக் காரணம்.

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பதினெட்டு மானினங்களில் புதிய இடத்தில் பொருந்தாமல் அழிந்தவை போக தற்போது உள்ளவை Fallow, Red, Sambar, Rusa, Hog, Chital என ஆறு வகை மானினங்கள் மட்டுமே. சூழலுக்கு அழகு சேர்க்கவும் வேட்டையாடிக் களிக்கவும் என இறக்குமதி செய்யப்பட்ட இவை, இப்போது நாட்டின் மிகப்பெரும் உபத்திரவங்களுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருப்பது வருத்தம் தரும் செய்தி.


ஆஸ்திரேலியாவில் இறக்குமதியான அந்நிய விலங்குகளான ஒட்டகம், ஆடு, மாடு, எருமை, குதிரை, கழுதை, மான், பன்றி போன்ற பெரும்பான்மையான விலங்கினங்கள் குளம்புள்ள விலங்கினங்கள். அதனாலேயே பல இடங்களில் மண் அரிப்புகளும் நீர்நிலைகளின் கரைகள் இடிந்துபோவதுமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. மேலும் களைவிதைகள் பரவ குளம்பு விலங்குகள் ஒரு முக்கியக் காரணம். குளம்புள்ள விலங்குகளுக்கே வரக்கூடிய சில நோய்கள் காடுவாழ் விலங்குகளின் மூலம் கால்நடைகளுக்கும் பரவலாம் என்ற பயமும் பண்ணையாளர்களிடம் உள்ளது. ஆஸ்திரேலியாவின் சொந்த விலங்கு எதற்குமே குளம்பு கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.


ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் பலவும் மான்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் அங்கு கங்காரு, வல்லபி உள்ளிட்ட மற்ற தாவர உண்ணிகள் வாழ்வது அரிதாகிவிட்டது. மேலும் விவசாய நிலங்களைப் பாழ்படுத்துவதாலும், கால்நடைப் பண்ணைகளின் மேய்ச்சல் நிலங்களையும் பங்குபோட்டுக் கொள்வதாலும் விவசாயிகளும் பண்ணை உரிமையாளர்களும் இவற்றைக் கண்டதும் சுடத் தவறுவதில்லை.  சில விவசாயிகள் வருடத்துக்கு நூறு மான்களைக்கூடக் கொல்கிறார்களாம். 

கங்காருகளின் எண்ணிக்கை அளவில்லாமல் பெருகும்போது கங்காரு அறுவடை என்ற பெயரில் அரசு கங்காருக்களை வேட்டையாடிக் கொல்வதைப் போல மான்களின் எண்ணிக்கை பெருகும்போதும் மான் அறுவடை நடத்தப்படுகிறது. 2011 இல் விக்டோரியா மாநிலத்தில் மட்டும் 41,000 மான்கள் கொல்லப்பட்டனவாம். அவற்றில் 34,000 மான்கள் சம்பார் இன மான்கள். 


அரசே மான்களைக் கொல்கிறதே நாம் கொன்றால் என்ன என்று யார் வேண்டுமானாலும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு மான்வேட்டைக்குப் போய்விடமுடியாது.  எந்தெந்த மானினங்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளதோ அவற்றை மட்டும்தான் வேட்டையாட அனுமதி. அதுவும் அரசிடமிருந்து முறைப்படி வேட்டைக்கான உரிமத்தைப் பெற்றிருக்கவேண்டும். ஒரு பக்கம் சொந்த உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. மறுபக்கம் வந்த உயிரினங்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முடிவில் மிஞ்சப்போவதுதான் என்ன?


(தொடரும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 10 (பன்றிகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 12 (ஆடுகள்)

37 comments:

  1. ஒண்டவந்த பிடாரிகள் லிஸ்ட்டில் மானா என்பதே முதல் ஆச்சர்யம். சமநிலை குறித்த தகவலால் தெளிவு. குளம்பினால் வரும் பிரச்னை ஆச்சர்யம். வேட்டையாடவும், எந்த இடத்தில் வேட்டையாட வேண்டும் என்பதற்கும் அனுமதி பெறவேண்டும் என்பதும் ஆச்சர்யம். நம் ஊரில் மான்களைக் கொன்றால் குற்றம். சல்'மான்'கான் இன்னும் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். எனக்கும் மானா என்றுதான் முதலில் ஆச்சர்யமாக இருந்தது. விவரங்களை மேற்கொண்டு அறிய அறிய ஆச்சர்யம் வளர்ந்துகொண்டே போனது. என்னை வியப்புக்குள்ளாக்கிய தகவல்களை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளமுடிவதில் மகிழ்ச்சி.

      Delete
  2. மான்களுமா...? வியப்பு தான்....

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இன்னும் வியப்பு மாறவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  3. வியப்புதான் அதிகரித்துக் கொண்டே போகிறது சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  4. இயற்கை எத்தனை அழகாக சமநிலையை உருவாக்கியிருக்கிறது என்பதற்கு இந்த பதிவே சாட்சி. அமைதியான அழகான விலங்குகளாக இருந்தாலும் புலி, சிங்கம் போன்ற கொன்றுண்ணிகள் இல்லாததால் மான்கள் கூட பிரச்னை மிக்கதாக மாறியிருக்கிறது.

    அருமையான பதிவு!

    த ம 4

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். இயற்கையின் சமநிலையை மாற்ற மனிதன் செய்யும் முயற்சிகள் அவனுக்கே எதிர்விளைவுகளை உண்டாக்கும் என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் மூலமாகவாவது உணர்ந்து திருந்தவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி செந்தில்குமார்.

      Delete
  5. ஏனோ மான்குட்டிகள் மேல் நம்மை அறியாமல் ஒரு பாசமும், வாஞ்சையும், புனிதமும், இரக்கமும் தோன்றத்தான் செய்கின்றது.

    அவைகளின் எண்ணிக்கையும் அதிகமாகி அங்கு தொல்லை தருவதாகவும், அவை பெரும்பாலும் வேட்டையாடி அழிக்கப்படுகின்றன என்பதும் மனதுக்கு வருத்தம் தரும் செய்தியாகவே உள்ளன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மான்களையும் மான்குட்டிகளையும் நினைத்தாலே மனம் துள்ளுமே.. அப்படிப்பட்ட மான்களை அழிப்பதை நினைத்தால் மனம் வேதனைப்படாமலிருக்குமா? வருத்தம்தான் மிஞ்சுகிறது.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு சார்.

      Delete
  6. //ஒரு பக்கம் சொந்த உயிரினங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. மறுபக்கம் வந்த உயிரினங்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முடிவில் மிஞ்சப்போவதுதான் என்ன?//

    ஒண்டவந்த பிடாரிகள் என்ற தலைப்பினில் தாங்கள் எழுதிவரும் இந்தப் பொக்கிஷ வரலாற்றுத் தொடராவது மிஞ்சினால் ஓக்கேதான் :)

    வழக்கம்போல மிகவும் சுவாரஸ்யமான பதிவு. தொடரட்டும். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்த தகவல்களோடு மேலும் சில தகவல்களைத் திரட்டிதான் இந்த தொடரை எழுதிவருகிறேன். இன்னும் நான்கைந்து தொடர்களோடு இப்பதிவு ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். பார்ப்போம். தங்கள் பாராட்டுகளுக்கு மிகுந்த நன்றி கோபு சார்.

      Delete
  7. எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கங்க‌ள் இருப்பது போல, மான்களுக்கும் இரன்டு பக்கங்கள் இருப்பதறிந்து ஆச்சரியமாக உள்ள‌து!
    நல்ல பதிவு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  8. பாவம் மான்கள்! நலமா சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. நலமே ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. தங்கள் உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

      Delete
  9. சமநிலை எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாகிறது..
    வருத்தமான ஆச்சர்யம் தம + 1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள்.

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நாட்டின் நலன் கருதி நடத்தப்படும் வேட்டையானாலும் வருத்தம் அளிக்கக் கூடியதே. ‘ஆஸ்திரேலியாவின் சொந்த விலங்கு எதற்குமே குளம்பு கிடையாது என்பது கவனிக்கத்தக்கது./ புதிய தகவல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  12. எவ்வளவு எவ்வளவு புதிய செய்திகள்....

    அறிந்து கொள்ள எவ்வளவு இருக்கிறது...

    இனிமையான வகுப்பின் சூழல் .... தங்களின் பதிவுகளைப் படிக்குந் தருணங்களில்....!

    எழுத்தில் இதன் சாத்தியம் எத்துணை கடினம் என்பதை நான் அறிவேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் தொடர்வதற்கும் மிகவும் நன்றி விஜி சார்.

      Delete
  13. வணக்கம்
    அறியமுடியாத தகவல்கள் அறிந்தேன் தங்களின் பதிவுவழி. த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.

      Delete
  14. பல நாடுகளில் மான்களின் எண்ணிக்கை குறைந்தபடியே இருக்க, அங்கேயோ பெருகி வரும் மான்களினால் தொல்லை.

    குளம்பில்லாத உயிரினங்கள் - புதிய தகவல். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கொன்றுண்ணிகள் இல்லாததுதான் மிக முக்கியக்காரணம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  15. குளம்புள்ள விலங்குகளால் கரை உடைகிறது; களை விதைகள் பரவுகின்றன; சொந்த உயிரினம் எதற்குமே குளம்பு கிடையாது என்பதெல்லாம் புதிய சுவாரசியமான செய்திகள். சுவையான செய்திகளைத் தொடர்ந்து தொகுத்துக் கொடுப்பதற்கு நன்றி கீதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.

      Delete
  16. மான்களும் ஒண்டவந்த பிடரிகள் ஆகிவிட்டகதை சுவராஸ்யம் ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

      Delete
  17. அருமையான தகவல்கள். மிக்க நன்றி கீதா. உங்களது வலையினை என் வலையின் முகப்பில் வைத்துள்ளேன். பாருங்கள். இனி தினமும் பார்க்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் இளைப்பாறும் வலைக்காடுகளுள் ஒன்றாய் கீதமஞ்சரியும் இருப்பதறிந்து மிகவும் மகிழ்ச்சி. நன்றி எட்வின் சார்.

      Delete
  18. தொடர்ந்து ஒண்டவந்த பிடாரிகளின் கட்டுரைகளை படித்து வருகின்றேன்,இந்த தொடரை வாசிக்கும் பொழுது மனதில் எண்ணுவதுண்டு மிருகங்களை விட அவுஸ்ரேலியாவுக்கு வந்த ஒறிஜினல் ஒண்டவந்த பிடாரிகள் நாங்கள்(மனிதர்கள்) தானே என்று........உங்கள் தொடர் தொடர வாழ்த்துக்களும் நன்றிகளும்

    ReplyDelete
  19. தொடர்ந்து ஒண்டவந்த பிடாரிகளின் கட்டுரைகளை படித்து வருகின்றேன்,இந்த தொடரை வாசிக்கும் பொழுது மனதில் எண்ணுவதுண்டு மிருகங்களை விட அவுஸ்ரேலியாவுக்கு வந்த ஒறிஜினல் ஒண்டவந்த பிடாரிகள் நாங்கள்(மனிதர்கள்) தானே என்று........உங்கள் தொடர் தொடர வாழ்த்துக்களும் நன்றிகளும்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து சரிதான். முதல் பகுதியிலேயே இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  20. உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.