மற்ற கால்நடைகளின்
கதையைப் போன்று ஆடுகளின் கதையும் 1788 இல் முதல் கப்பல் தொகுதி வந்திறங்கியதிலிருந்துதான்
ஆரம்பிக்கிறது. ஐரோப்பியக் குடியேறிகளின் பால் மற்றும் இறைச்சித் தேவைக்காக வெள்ளாடுகளும்,
ரோமத்தொழிலுக்காக அங்கோரா மற்றும் காஷ்மீரி இன ஆடுகளும் கொண்டுவரப்பட்டன.
ரோமத்தொழிலில்
உலகெங்கும் அதிகரித்த போட்டியால் தொழிற்சாலைகள் சில வருடங்களில் இழுத்து மூடப்பட்டன.
ஆடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இருப்புப்பாதை அமைப்பவர்களும் சுரங்கத்தொழில் செய்பவர்களும்
பணிகளை முடித்து முகாம்களை காலிசெய்துவிட்டுப் போகும்போது அங்கிருந்த வெள்ளாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இப்படியாக ஆங்காங்கு கட்டவிழ்த்து விடப்பட்ட ஆடுகள் இன்று கண்டம் முழுவதும் பரவலாகப்
பெருகி உள்ளூர் தாவர உண்ணிகளுக்குப் போட்டியாக களத்தில் உள்ளன.
வருடத்துக்கு இரண்டு
அல்லது மூன்று குட்டிகள் ஈனும் ஆடுகளின் எண்ணிக்கை மளமளவென்று பெருகி, 2010 –ன் கணக்கெடுப்புப்படி
ஆஸ்திரேலியாவில் மட்டும் சுமார் முப்பது இலட்சம் இருக்கலாம் என்றும் குவீன்ஸ்லாந்தில்
மட்டுமே ஐந்து இலட்சம் இருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அக்கம்பக்கத் தீவுகளில்
இருப்பவை தனிக்கணக்கு.
ஆடுகள் தாங்கள்
வாழும் பகுதிகளில் விளைச்சலுக்கும் நீர்நிலைகளுக்கும் பெரும் சேதம் உண்டாக்குவதோடு
நாட்டின் சொந்த விலங்குகளான கங்காருகளுக்கு உணவுப்போட்டியாகவும் களத்தில் இருப்பதால்
குவீன்ஸ்லாந்தில் இவை விவசாயத்துக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் கேடுவிளைவிக்கும்
உயிரினம் (agricultural and environment pest) என்று வரையறுக்கப்பட்டுள்ளன. இவை பண்ணையாடுகளின்
மேய்ச்சல் நிலங்களையும் அபகரித்துக்கொண்டுவிடுவதாலும் இவற்றிடமிருந்து பண்ணையாடுகளுக்கு
கோமாரி நோய், குளம்புநோய் போன்ற நோய்கள் பரவுவதாலும் பண்ணை உரிமையாளர்கள் பெருத்த நஷ்டம்
அடைகின்றனர்.
காட்டாடுகள் தங்கள்
உறைவிடங்களாய் பாறையிடுக்குகளையும் மலைப்பொந்துகளையும் தேர்ந்தெடுப்பதால் பாறைவாழ்
வல்லபிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போவதாக அறியப்பட்டுள்ளது. இயல்பிலேயே கூச்ச சுபாவம்
கொண்ட பாறைவாழ் வல்லபிகள் உணவும் உறைவிடமும் அற்று வாழ வழியின்றி அழிந்துபோகின்றன.
பல அரிய தாவரங்களின் இளஞ்செடிகளையும் துளிர்களையும் ஆடுகள் தின்றுவிடுவதால் அவற்றின்
இனப்பெருக்க சங்கிலி தொடர்பறுந்து போயிருக்கிறது பல பகுதிகளில். சில வகை மரங்கள் தங்கள்
அடுத்த சந்ததியைக் காணாமலேயே மடிந்துவிடுகின்றன.
ஆஸ்திரேலிய நிலப்பரப்பு
தவிரவும் அதைச் சுற்றியுள்ள பல தீவுகளிலும் ஆடுகள் காணப்படுகின்றன. பக்கமாய் இருக்கும்
தீவுகளுக்கு ஆடுகள் நன்னீர்தேடி நீந்தியே சென்றுவிடுகின்றனவாம். சில தீவுகளில் பெரும்
முயற்சி எடுக்கப்பட்டு ஆடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் சில தீவுகளில்
வாழும் பூர்வீக மக்களால் அவர்களுடைய வேட்டை விளையாட்டுக்காகவும் இறைச்சிக்காவும் விட்டுவைக்கப்பட்டுள்ளன.
ஒருபக்கம் காட்டாடுகளால்
ஏற்படும் சேத மதிப்பு ஆண்டுக்கு இருபத்தைந்து மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார்
125 கோடி ரூபாய்) என்றாலும் இன்னொரு பக்கம் அவற்றை உயிருடனோ இறைச்சியாகவோ ஏற்றுமதி
செய்யும் நிறுவனங்களுக்கு கிடைக்கும் ஆண்டுவருமானம்
சுமார் இருபத்தொன்பது மில்லியன் டாலர்கள் (சுமார் 145 கோடி ரூபாய்) என்பதை மறுக்கமுடியாது.
இறைச்சி தவிர ரோமத்தால் கிடைக்கும் உபரி வருமானம் கூடுதல் வரவு.
இந்த காட்டாடுகளால்
சில நன்மைகளும் உண்டு. களைத்தாவரங்கள் பலவற்றை செலவில்லாமல் கட்டுப்படுத்த ஆடுகள் உதவுகின்றன.
குறிப்பிட்ட சில களைத்தாவரங்கள் ஆடுகள் விரும்பியுண்ணும் உணவாக இருப்பது சிறப்பு.
வருடாவருடம் ஆடுகளின்
எண்ணிக்கையைக் குறைக்குமுகமாக அவற்றில் முப்பது சதவீதம் வேட்டையாடப்படுகின்றன. ஆடுகளைக்
கொல்வதற்கு பல உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இனப்பெருக்க காலம் தவிர மற்ற காலங்களில்
கிடா ஆடுகள் தனி மந்தையாகவும் கிடேரி ஆடுகள் தனி மந்தையாகவும் பிரிந்து வாழ்கின்றன.
அவற்றின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு தக்க தருணத்தில் வேட்டை நடத்தப்படுகிறது.
குதிரைகளில் சவாரி
செய்தபடி ஆடுகளை விரட்டி ஒன்றுதிரட்டி பட்டியில் அடைத்து பின்னர் கசாப்பு இடத்துக்கு
அனுப்புகிறார்கள். கசாப்புக்குத் தேவைப்படாத காலத்தில் ஹெலிகாப்டர்கள் மூலம் துப்பாக்கியால்
சுட்டுக் கொல்கிறார்கள். பொதுவாக ஆடுகள் நீர்நிலைகளின் அருகிலேயேதான் வாழும் என்பதால்
கோடைக்காலங்களில் எளிதாக அவற்றின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள முடியும். மற்றக் காலங்களில்
அவற்றின் இருப்பிடத்தை அறிய ‘judas goat’ என்ற யுத்தி பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக யூதாஸ் ஆடு என்பது காட்டு ஆடுகளை வழிநடத்திக் கசாப்புத்தளத்துக்கு அழைத்துக்கொண்டு வருவதற்கெனவே பழக்கப் படுத்தப்படும் ஆடு. ஆனால் ஆஸ்திரேலியாவின் யூதாஸ் ஆடு அப்படியல்ல. மந்தையிலிருந்து ஒரு ஆடு
மட்டும் பிடிக்கப்பட்டு அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு மீண்டும் மந்தையோடு சேர்த்துவிடப்படுகிறது. அதன் நடவடிக்கைகள்
கண்காணிக்கப்படுகின்றன. வேட்டைக்காலத்தில் சரியாக ஆட்டுமந்தையின் இருப்பிடம் அறியப்பட்டு
வேட்டை நடத்தப்படுகிறது.
வெள்ளாட்டுக் கூட்டத்தில்
ஒரு கருப்பாடு! முப்பது வெள்ளிக்காசுகளுக்காக முத்தமிட்டு ஏசுவைக் காட்டிக்கொடுத்தார்
யூதாஸ். ஆனால் இந்த யூதாஸ் ஆடோ தன்னையறியாமலேயே தன் கூட்டத்தையும் காட்டிக்கொடுத்து
தானும் பலியாகிவிடுகிறது.
(தொடரும்)
(படங்கள் உதவி: இணையம்)
முந்தைய பகுதி:
ஒண்டவந்த பிடாரிகள் - 11 (மான்கள்)
அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 13 (முயல்கள்)
(படங்கள் உதவி: இணையம்)
முந்தைய பகுதி:
ஒண்டவந்த பிடாரிகள் - 11 (மான்கள்)
அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 13 (முயல்கள்)
படிக்கப் படிக்க வியப்புதான் மேலிடுகிறது சகோதரியாரே
ReplyDeleteநன்றி
தங்கள் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteஅரிய தகவல்கள் கீதா
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
Delete//இனப்பெருக்க காலம் தவிர மற்ற காலங்களில் கிடா ஆடுகள் தனி மந்தையாகவும் கிடேரி ஆடுகள் தனி மந்தையாகவும் பிரிந்து வாழ்கின்றன.//
ReplyDelete:) ஆச்சர்யமான தகவலாக உள்ளது.
மற்ற விலங்கினங்களில் சிலவற்றை கோடிக்கணக்கான எண்ணிக்கையில் சொல்லியிருந்தீர்கள். அவற்றுடன் ஒப்பிடும் போது ஆடுகள் லட்சக்கணக்கில் என்று சொல்லியுள்ளது சற்றே நிம்மதிதரும் விஷயமாக உள்ளது.
>>>>>
ஆமாம். ஆடுகள் மற்ற விலங்குகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது எண்ணிக்கையும் குறைவு. அவற்றால் ஏற்படும் பாதகங்களும் குறைவுதான்.
Deleteஇந்த ஆடுகளால் கிடைக்கும் நன்மைகள் தீமைகள், அழிக்க ஆகும் செலவினங்கள், ஏற்றுமதி + ரோமங்களால் கிடைக்கும் வருமானம் என அனைத்தையும் வெகு அழகாக புரியும்படியாக + தெளிவாக கணக்கிட்டுச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
நான் அறிந்து வியந்தவற்றை மற்றவர்களும் அறியத் தருவதில் மகிழ்கிறேன். வாசித்தறிந்தவற்றுள் தாங்கள் ரசித்தவற்றைக் குறிப்பிட்டுப் பாராட்டுவதற்கு மிகுந்த நன்றி கோபு சார்.
Delete//2010 –ன் கணக்கெடுப்புப்படி ஆஸ்திரேலியாவில் மட்டும் சுமார் முப்பது இலட்சம் இருக்கலாம் என்றும் குவீன்ஸ்லாந்தில் மட்டுமே ஐந்து இலட்சம் இருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அக்கம்பக்கத் தீவுகளில் இருப்பவை தனிக்கணக்கு.//
ReplyDeleteசுமார் 227 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த எண்ணிக்கையில் வந்து இறங்கிய ஆடுகள், வேட்டையாடி கொன்று தின்றதுபோக, இன்னும் பஞ்சமில்லாமல் இவ்வளவு எண்ணிகைகளில் பரவி இருப்பது வியப்பளிக்கும் விஷயம் தான்.
வழக்கம்போல அருமையான ஆச்சர்யமான தகவல்கள் + அற்புதமான படங்கள். ஆட்டின் கொம்பைப்பார்த்தாலே பயமுறுத்துவதாக உள்ளது ! சுவாரஸ்யமான பகிர்வுக்கு நன்றிகள்.
பதிவைப் பொறுமையாக வாசித்து தொடர்ச்சியான பின்னூட்டங்களால் ஊக்கமளிக்கும் தங்களுக்கு மிகுந்த நன்றி கோபு சார்.
Deleteஇந்த மாதிரி இறக்குமதி செய்யப்பட்ட விலங்கினங்கள் உள்ளூர் விலங்குகளுக்கு எதிரியாய் இருந்து ஒண்ட வந்த பிடாறிகளாக இருப்பதைக் குறிப்பிடும் பதிவுகளில் பிறிதொரு நாளில் அங்கு வாழ வந்த மனிதர்களில் பலரும் ஒண்ட வந்த பிடாறிகள் என்று குறிப்பிடப்பட்டால் ஆச்சரியமில்லை. விவரமான விஷயங்களால் பதிவு நிறைவாய் இருக்கிறது வாழ்த்துக்கள்.
ReplyDeleteபூர்வகுடி மனிதர்களைத் தவிர மற்ற அனைவருமே இந்த ஒண்ட வந்த பிடாரிகள் வரிசையில்தான் அடக்கம். இப்போது இம்மாபெரும் நிலப்பரப்பை ஆள்வதே அவர்கள்தானே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteபாவம் அந்த யூதாஸ் ஆடு. தான் செய்வது தானே அறியாமல் கெட்ட பெயருடன் சாகிறது!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். மனிதர்களின் சூழ்ச்சிக்குப் பலியாடுதான் அந்த யூதாஸ் ஆடு. உண்மை உணரும் தன்மை இருந்தால்தான் எல்லாம் தப்பிவிடுமே.
Deleteஅறுமை
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteயூதாஸ் ஆடு.......
ReplyDeleteஎன்ன ஒரு சொல்லாட்சி...!
உங்களது பதிவுகளைத் தொடர்கொகையில் தோன்றுவது இதுதான்
"நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையால் ஆளப் படும்".
நன்றி.
வருகைக்கும் பதிவின் தன்மைக்கு மிகப்பொருத்தமான குறளை மேற்கோளிட்டுக் கருத்துரை வழங்கியமைக்கும் மிக்க நன்றி.
Deleteயூதாஸ் ஆடு!! அக்கா! நச்சுனு முடிச்சுருக்கீங்க பதிவை! இங்கேயும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் தான் ஆஸ்த்ரேலிய ஈமூ கோழிகளை இப்போதான் அவிழ்த்து விட்டிருப்பதாக தகவல் !! வெகுவிரைவில் தமிழர்களும் இப்படி புலம்ப நேரலாம்! வழக்கம் போலவே பயனுள்ள, அருமையான பதிவு அக்கா!
ReplyDeleteவருகைக்கும் பதிவுக்கும் நன்றி மைதிலி. ஈமூ கோழிகளை மலைப்பகுதிகள் பக்கம் அவிழ்த்து விட்டிருப்பது ஆபத்துதான். அவை மிகவும் பலம் வாய்ந்தவை மட்டுமல்ல, தரைவாழ் பறவைகள். தாங்கள் பிழைக்க மற்றப் பறவைகளையும் விலங்குகளையும் கொல்லக்கூடியவை. நீங்கள் சொல்வது போல் இன்னும் சில ஆண்டுகளில் இதன் பாதகங்கள் வெளியில் தெரியவரும். வருமுன் காப்பதுதான் எப்போதுமே நல்லது. இப்போதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உரிய முயற்சியெடுத்தால்தான் பிற்காலப் பின்விளைவுகளைத் தவிர்க்கமுடியும்.
Deleteதனக்கே தெரியாமல் இப்படி ஒரு தீங்கு! என்ன செய்யும் அந்த ஆடு...
ReplyDeleteதகவல்கள் அனைத்தும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பது போல் மனிதனின் சாதுர்யம் இந்த விஷயத்திலும் வெளிப்படுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteபாவம் வெள்ளாட்டு மந்தையில் அறியா கருப்பாடு.....பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி உமையாள்.
Deleteஆடுகளைப் பிடிக்கக் கையாளப்படும் தந்திரம்.
ReplyDeleteவேட்டையாடப்படும் விலங்குகளின் பட்டியல் நீண்டு செல்கிறது.
தகவல் பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டதற்கும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteஅறிந்திராத பல தகவல்கள்... வியக்கவும் வைக்கிறது...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.
Deleteஒண்டவந்த பிடாரிகள் - 12 (ஆடுகள்) = ஆஸ்திரேலியா - வெள்ளாட்டுக் கூட்டத்தில் ஒரு கருப்பாடு! முப்பது வெள்ளிக்காசுகளுக்காக முத்தமிட்டு ஏசுவைக் காட்டிக்கொடுத்தார் யூதாஸ். ஆனால் இந்த யூதாஸ் ஆடோ தன்னையறியாமலேயே தன் கூட்டத்தையும் காட்டிக்கொடுத்து தானும் பலியாகிவிடுகிறது. = அருமையான தகவல்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி Geetha Mathivanan.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவைப் பகிர்வதற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteயூதாஸ் ஆட்டு விஷயம் சுவாரசியமாயிருக்கிறது. எல்லாமே லட்சக்கணக்கில் பெருகி அழிவுக்குள்ளாகும் போது வருத்தமாய்த்தான் இருக்கிறது. சுவையான புதிய தகவல்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அக்கா. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்ற செயல்தான் இது. நூறு வருடங்களுக்கு முன் குறைந்த எண்ணிக்கையில் அவிழ்த்துவிடப்பட்டவைதாம் இன்று ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் பெருகியுள்ளன. மேலே மைதிலி தெரிவித்திருக்கும் ஈமு குறித்த தகவல் கவலை கொடுப்பதாகத்தான் உள்ளது. இப்போதே தக்க நடவடிக்கை எடுக்காவிடில் உள்ளூர் விலங்குகளும் பறவைகளும் பாதிப்புக்காளாவது உறுதி.
Delete