13 February 2012

ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் 5





பள்ளிகள் வாழும் கலையைக் கற்றுக்கொடுக்காவிடினும் சாகும் எண்ணத்தைத் தூண்டக்கூடாது என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். கொலை செய்யவும் தூண்டக்கூடாது என்றும் சேர்த்துச் சொல்லும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளேன் 

சென்னையில் பிரபல பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், வகுப்பறையிலேயே ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொன்ற நிகழ்வை ஊடகங்கள் வழி அறிந்தது முதல் மனத்தை அழுத்தும் பாரத்தை எப்படி இறக்கிவைப்பதென்றே தெரியவில்லை 

நிகழ்வு தரும் வேதனை ஒருபுறம் என்றால் அந்நிகழ்வுக்கான காரணங்களாக முன்வைக்கப்படும் பட்டியல்…. பெரும் வேதனை. முக்கியமாய் பெற்றோர் வளர்ப்பு சரியில்லை, தந்தையரின் பணிவெறி, தாயாரின் சின்னத்திரை ஈர்ப்பு, ஒழுங்கின்மையும் ஒழுக்கமின்மையுமே கதாநாயகத்தனமாகச் சித்தரிக்கும் பெரிய திரைகளின் பாதிப்பு, பள்ளிகளின் அச்சுறுத்தல், பாலியல் வக்கிரத் திரைப்படங்கள், தாராளமயமாக்கலால் எழுந்த சமூக மயக்கம் , டாஸ்மார்க் என நீளும் பட்டியலில் முக்கியமான ஒன்றை அனைவருமே தவறவிடுகின்றனர்.  மதிப்பெண் மட்டுமே ஒருவனை உருப்படவைக்கும் என்னும் மாயை. அதைக் கட்டவிழ்த்துவிட்டுவிட்டு, கத்திக்குத்து வரை ஒரு பிஞ்சின் மனத்தில் நஞ்சை வேரூன்றச் செய்துவிட்டு இப்போது குய்யோ முறையோவென்று கூக்குரலிடுவது என்ன நியாயம்? அதற்காக அவன் செய்தது நியாயம் என்று வாதிடவில்லை. அநியாயத்துக்கான மூலகாரணம் பற்றி மட்டுமே இங்கு பேசுகிறேன். 

ஆசிரியர் அவன் பெற்ற குறைந்த மதிப்பெண்ணை மற்றவர் முன்னிலையில் சுட்டிக்காட்டி மனம் புண்படுத்தாதிருந்தாலோ, பெற்றவர் அம்மதிப்பெண்ணை ஒரு பொருட்டாக எண்ணாது மற்றக் குணங்களைக் கொண்டாடியிருந்தாலோ, பள்ளி நிர்வாகம் தேர்ச்சி விகிதத்தில் காட்டிய அக்கறையை மாணவர் நலனில் காட்டியிருந்தாலோ இப்படி ஒரு சம்பவம், அதுவும் நம் நாட்டில் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. இப்படி ஆசிரியர், பெற்றோர், பள்ளி என்று ஒவ்வொருவராய்க் குறை சொல்வதற்கு பதில் மொத்தமாய் நம் கல்விமுறையே காரணம் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை 

அமெரிக்காவில், ஐரோப்பாவில், ஆஸ்திரேலியாவில் இப்படி மாணவர்கள் துப்பாக்கியும் கையுமாய் உள்ளே நுழைந்து உடன்படிக்கும் மாணவர்களை, ஆசிரியர்களை, மேலும் கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களையெல்லாம் நீ கேட்டதில்லையா? பார்த்ததில்லையா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதையும், படிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் இல்லையென்பதையும், படிப்பல்லாத மற்றக் காரணிகளால் மனநலம் பாதிப்படைந்து அதனால் அத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் 

இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் இன்னுமொரு கொடிய சம்பவத்தைப் பற்றிய செய்தி என் காதில் விழுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன் தன் சக மாணவர்கள் முன்னிலையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். இந்தக் கோரச் செயலுக்குக் காரணம் மன அழுத்தம் என்றாலும் அதற்கு அவனது படிப்போ, மதிப்பெண்களோ காரணமாய் இருக்காது என்பதை உறுதியாய்ச் சொல்லமுடியும். குடும்ப வன்முறைகளும், தகாத உறவுகளின் பின்னணியும், மூத்த மாணவர்களால் இழைக்கப்படும் கேலிவதைகளும், அதற்கு அடுத்தக் கட்டமான துயரவதைகளும் காரணங்களாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது. 

சென்ற பதிவில் ரமணி சார் ஆஸ்திரேலியப் பிள்ளைகள் பதினெட்டு வயதில் பெற்றோரைப் பிரிய மனதளவில் எப்படித் தயாராகிறார்கள் என்று எழுதக் கேட்டிருந்தார் 

ஆஸ்திரேலியா போன்ற மேலைநாடுகளில் பிள்ளைகள் பதினெட்டு வயதில் தங்கள் பெற்றோரைப் பிரிந்து செல்வதற்கு மேற்குறிப்பிட்டக் காரணிகளும் ஒரு காரணம். அவற்றை விளக்குமுன் நம் நாட்டிலும் மேலை நாடுகளிலும் இருக்கும் வாழ்க்கைமுறைகளின் ஒப்பீடு அவசியமானது. 

நம் நாட்டைப் பொறுத்தவரை, கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை சிதைந்துபோய்விட்டாலும் குடும்பக் கட்டமைப்பின் மேல் நமக்கு இருக்கும் நம்பிக்கையும் நன்மதிப்பும் இன்னும் முற்றிலுமாகக் குலைந்துபோய் விடவில்லை. குடும்பம், குழந்தைப்பேறு, வளர்ப்பு, படிப்பு, வேலை, திருமணம் என்று தாயும் தகப்பனும் அக்கறை செலுத்துவதோடு தங்கள் வாழ்வையே அதற்கு அர்ப்பணிக்கின்றனர் 

ஒரு நல்ல குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் உண்டாகும் கருத்துவேறுபாடுகள் யாவும் குழந்தைகளின் கண்மறைவாய் வைக்கப்படுகின்றன. மனமொத்துப் போகாநிலையிலும் குழந்தைகளுக்காக, குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழும் பல தம்பதியினரைப் பார்த்திருக்கிறோம். இந்த நிலை நம் காலங்களில் இருந்தது. இன்றும் பல குடும்பங்களில் தொடர்கிறது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினரிடம் இது போன்ற அர்ப்பண உணர்வுகளைக் காண்பது அரிதாகத்தான் உள்ளது. மேலைநாட்டு மோகம், வளர்ந்துவரும் வசதிப்பெருக்கம், உலகமயமாக்கலின் தாக்கம், ஈகோ மனப்பான்மை என்ற பல காரணிகளைச் சொல்லலாம். அவற்றைப் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம் 

இப்போது ஆஸ்திரேலியப் பெற்றோரைப் பார்ப்போம். ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியர்கள் என்று வரிக்கு வரி நான் குறிப்பிடுவது ஆஸ்திரேலியப் பூர்வீகக்குடிகளைக் குறிக்காது. அவர்களில் பெரும்பான்மையோர் இன்னும் தங்கள் சமூக, கலாச்சார கட்டமைப்புகளிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் இன்றும் கூடிவாழ்கின்றனர் 

நாற்பதாயிரம் வருடங்களுக்கும் மேலாக இம்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பூர்வீகக்குடிகளிடமிருந்து சுமார் நானூறு வருடங்களுக்கு முன் இம்மண்ணை ஆளும் உரிமையைக் கைக்கொண்ட ஐரோப்பியர்களின் வாரிசுகளைப் பற்றியே பேசுகிறேன் 

ஆஸ்திரேலியர்கள் பொதுவாகவே நிரந்தரக் குடும்பக் கட்டமைப்பில் நம்பிக்கை அற்றவர்கள். பிறருக்காக தங்கள் விருப்பு வெறுப்புகளை விட்டுத்தர விரும்பாதவர்கள்.. ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பப் படிவங்களில் வேண்டப்பட்டிருக்கும் தகவல்களே அவற்றுக்கு அத்தாட்சி. 

விண்ணப்பப் படிவங்களில் தாய். தந்தை, மாற்றுத்தாய், மாற்றுத்தந்தை, இவர்கள் அனைவரின் பெயர், முகவரி, எந்தெந்த நாட்களில் எந்தெந்த பெற்றோரின் பொறுப்பில் அவன் இருக்கவேண்டும், பிள்ளைக்கு ஏதேனும் விபத்து எனில் முதலுரிமை யாருக்குத் தரப்படவேண்டும், இரண்டாவதாய் யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற விவரங்களைக் கேள்விகளாய்த் தாங்கியிருக்கும் அந்த விண்ணப்பத்தைப் பார்த்தாலே தலைசுற்றும் 

சமீபத்தில் ஓரினத் திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கச் சொல்லிப் பாராளுமன்றத்தில் சூடான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கையில் விண்ணப்பப் படிவங்களில் மேலும் திருத்தங்கள். தாய், தந்தை என்பதற்குப் பதில் பெற்றோர்(1) மற்றும் பெற்றோர்(2) என்றும் அவர்களுடைய பாலினம் கேட்டும் கேள்விகள் உள்ளன. அதேபோல் வீடு வாடகைக்கு என்றால் அந்த விண்ணப்பத்தில் கணவன், மனைவி என்று இருக்காது. விண்ணப்பதாரர் மற்றும் அவருடன் சேர்ந்து வாழ்பவர் என்று குறிப்பிட்டு, வாடகையில் இருவரின் தனித்தப் பங்கு பற்றியும் கேட்டிருக்கும். அந்த அளவுக்கு இங்கு குடும்பக் கட்டமைப்பின் அஸ்திவாரம் பலவீனமாக உள்ளது. அவ்வளவு ஏன்? இன்றைய ஆஸ்திரேலியப் பிரதமர் மிஸ். ஜூலியா கில்லார்டும் திருமணம் செய்துகொள்ளாமல் தன் துணைவருடன் சேர்ந்து வாழ்வது திருமண பந்தத்தின் மீதான அவர்களது எதிர்மறை ஈடுபாட்டுக்கு இன்னொரு சான்று. 

மற்றொரு அதிர்ச்சிகரமானத் தகவல், ஆஸ்திரேலியாவில் பதின்மவயதுத் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதாக ஆஸ்திரேலியக் கல்வி மற்றும் குழந்தைகள் நலத்துறையின் புள்ளியியல் தகவலறிக்கை சொல்கிறது. ஆயிரத்துக்கு பதினெட்டு கர்ப்பங்கள், 15 முதல் 19 வரையிலான பதின்ம வயதுக் கர்ப்பங்கள் என்னும் விகிதாச்சாரத்துடன்  உலகவரிசையில் பதினொன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆயிரத்துக்கு 52 என்ற கணக்கில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. ஆயிரத்துக்கு 27 என்று இங்கிலாந்து இரண்டாமிடத்தில் உள்ளது. ஆனால் பெற்றெடுக்கப்படும் குழந்தைகளைக் கொண்டே இப்புள்ளிவிவரம் கணக்கில் கொள்ளப்படுகிறது என்றும் கலைக்கப்படும் கர்ப்பங்களையும் கணக்கெடுத்தால் ஆஸ்திரேலியாவில் பதினெட்டு என்பது முப்பத்திரண்டாக உயரும் என்றும் அவ்வாய்வறிக்கை மேலும் அதிர்ச்சித்தகவல் அளிக்கிறது 

ஆஸ்திரேலியாவில் ஒற்றைப் பெற்றோருக்கு அரசு தரும் அதிகபட்ச சலுகைகளும் இப்படி சிறு வயதில் குழந்தைகளைப் பெற்று வளர்க்க ஊக்கமூட்டுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. தாங்களே இன்னும் வாழ்க்கையில் முதிர்ச்சி அடையா நிலையில் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை அவர்களால் எப்படி சரியான பாதையில் வளர்க்க இயலும்? சமூக வன்முறைகளுக்கு இதுபோன்ற சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகளும் ஒரு காரணமாக இருப்பதில் வியப்பென்ன 

படிக்கும் காலத்தில் பெண்பிள்ளைகளின் பாதை திசைமாறிப்போவதைத் தவிர்க்க, குறைந்தபட்சம் குழந்தைப்பேறுகளையும் கர்ப்பங்களையும் தடுக்க பள்ளி நிர்வாகம் பாலியல் கல்வியைப் பள்ளிகளில் கற்றுத்தருகிறது. பாலியல் பிரச்சனைகள், பரவும் நோய்கள், பாதுகாப்பான உடலுறவு போன்றவற்றில் இருபாலாருக்கும் அறிவுரையும் ஆலோசனையும் தரப்படுகிறது 

பத்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பிள்ளை வளர்ப்பு பற்றியப் பாடம் ஒன்று உள்ளது. அதில் கரு உருவாவதிலிருந்து தாய்க்கு உண்டாகும் மாற்றங்கள், பிரச்சனைகள் பற்றிக் கற்பிப்பதுடன், வகுப்புக்கு வெவ்வேறு கர்ப்ப காலக்கட்டத்தில் உள்ள இளம் தாய்மார்கள் சிலரை அழைத்துவந்து நேரடியாக அவர்களுடைய உடலியல், மனோவியல் மாற்றங்களையும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளையும் பற்றி மாணவிகள் தாங்களாகவே கேட்டுத் தெரிந்துகொள்ள வழிவகுக்கிறது. அதிலேயே பல மாணவிகளுக்கு தாய்மை என்பது அத்தனை எளிதல்ல என்பது புரிந்துவிடுகிறது. அதோடு விடவில்லை. செயல்முறைப் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது 

ஒரு குழந்தைப் பொம்மை. பொம்மை என்று நினைத்தால் பொம்மைதான். ஆனால் பிறந்த குழந்தைக்குண்டான அத்தனைச் செயல்களையும் செய்யக்கூடிய அளவில் கணினிக் கட்டுப்பாட்டுடன் ஒரு உயிருள்ள குழந்தை போலவே இயங்குகிறது. பாடத்திட்டத்தின்படி அதை ஒவ்வொரு மாணவியும் இரண்டுநாட்கள், பெரும்பாலும் வார இறுதி நாட்களில் வீட்டுக்குக் கொண்டுசென்று வளர்க்கவேண்டும். அந்த இரண்டு நாளும் அம்மாணவியே அதன் தாய். அவள் தன் உண்மைக் குழந்தை போலவே அதைக் கவனித்துக்கொள்ளவேண்டும்.  சாதாரண விஷயம்தானே என்கிறீர்களா? அதுதான் இல்லைஇந்தக் குழந்தை வளர்ப்பில் குடும்ப உறுப்பினர் எவரும் அவளுக்கு உதவக்கூடாது என்பது பள்ளியின் கட்டாய அறிவிப்பு. எனவே தனியொருத்தியாய் இந்தப் பயிற்சியை மாணவி மேற்கொள்ளவேண்டும். எங்காவது வெளியிடங்களுக்குச் செல்வதானாலும் குழந்தையைக் கையில் கொண்டுசெல்லவேண்டும்.

குழந்தையைப் போலவே அதுவும் அடிக்கடி அழும். அழுவதற்கான சரியான காரணத்தை தாய் அறிந்திடவேண்டும். பசி என்றால் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள பாட்டிலில் இருக்கும் நீரைப் புகட்டவேண்டும். அதுவும் எப்படி? சரியான முறையில் கையில் ஏந்தி, தலையைச் சற்று உயர்த்தி, மெல்ல மெல்ல, மூச்சு முட்டாமல், புரையேறிக்கொண்டுவிடாமல், வெகு சிரத்தையாகக் கொடுக்கவேண்டும். அது அழுவது பசிக்காக இல்லையெனில் குடிக்காமல் முரண்டு செய்தழும். அடுத்தது அது சிறுநீர் கழித்திருக்கிறதா? அந்த ஈரத்தில் குளிர்ந்து அழுகிறதா என்று அதன் நாப்கினை அகற்றி சோதிக்கவேண்டும். ஈரமாக இருந்தால் உடனே அகற்றிப் புதிய நாப்கினை அணிவிக்க வேண்டும். அதுவுமில்லை. ஆனாலும் அழுகிறது என்றால் வேறென்ன? தூக்கமாக இருக்கலாம். குழந்தையைக் கையிலெடுத்து மார்போடு இதமாக அணைத்து மெதுவாய்த் தாலாட்டியும், தட்டிக்கொடுத்தும் தூங்கவைக்கவேண்டும். இரவில் அடிக்கடி விழித்து அழும். அழுகையின் காரணங்களை மனத்தில் ஓடவிட்டு அதற்கேற்றபடி செயலில் இறங்கவேண்டும். பசியாற்றிய அரைமணி நேரத்தில் அழுதால் அது நிச்சயம் பசிக்கான அழுகை இல்லை என்பதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும் 

அழுத்திப் பிடித்தால் மூச்சுத் திணறி, குழந்தை இறந்துவிடும். சரியான நேரத்தில் பசி போக்காவிடில் கத்தி விறைத்துவிடும். இரண்டு நிமிடம் தொடர்ச்சியாக அழவிட்டால் அதன்பின் செயலற்றுப்போய்விடும். என்ன செய்தும் பயனில்லை. நாம் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் முறைகள் அந்தக் குழந்தை பொம்மைக்குள் இருக்கும் கட்டுப்பாட்டகத்தில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும். கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தபின் ஆசிரியர் அதைக் கவனித்து அம்மாணவியின் குழந்தை வளர்ப்பு முறைகளைப் பற்றிய ரிப்போர்ட் தருவார். தாறுமாறாக இருந்தால், நீ தாயாயிருக்கத் தகுதி அற்றவள் என்பது ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்பட்டுவிடும் 

அவர் என்ன சொல்வது? மாணவியே வெறுத்துப்போயிருப்பாள். ஒரு குழந்தை எப்படியெல்லாம் படுத்துகிறது? தூங்கவிடாமல், தொலைக்காட்சி பார்க்கவிடாமல், குளிக்கவிடாமல், வெளியிடங்களுக்கு செல்லவிடாமல் எப்போதும் அழுது, தன்னையே கவனித்துக்கொள்ளச் சொல்கிறதேஒன்றிரண்டு நாட்களே இப்படியெனில்…. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ஒரு குழந்தையை வளர்ப்பது எத்தனை சிரமம்? எனவே இப்போதைக்கு குழந்தையே பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பாள். வந்திருப்பாள் என்ன? வந்துவிட்டார்கள் என் மகளின் சிநேகிதிகள். என் மகள் அந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுக்காததால் அந்த அனுபவம் அவளுக்கு வாய்க்கவில்லை 

இது பதின்மவயதுப் பிள்ளைப்பேறுகளைத் தடுக்க பள்ளிகள் கையாளும் ஒரு சிறு முயற்சியே. இதுபோன்ற நிலை நம் நாட்டில் இன்னும் உருவாகவில்லையென்பதை நினைத்து நாம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் 

இன்னும் சொல்வேன்….


52 comments:

  1. குழந்தை வளர்ப்பு பற்றி பல பயனுள்ள தகவல்கள் சொல்லித்தரும் கல்வி முறை ;)

    வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றே தான்.

    பல விஷயங்களை நன்கு அறிய முடிகிறது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. உண்மையில் எனக்கு தலை சுற்றல் வந்துவிட்டது.குழந்தை வளர்ப்பை தெரிந்துகொள்வது அவசியம்தான்.ஆனால் இப்படி செய்வதால் மாணவிகளுக்கு டிப்ரசந்தான் வரும்.மாணவர்களுக்கு குழந்தை பராமரிப்பு அவசியமில்லையா.பெற்றெடுப்பவளுக்கு மட்டும்தான் இந்த கல்வியா?ஆனாலும் இந்த கலாச்சாரத்தில் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதே பெரிய விசயம்தான்.
    ஆனாலும் இவர்களின் குடும்ப மற்றும் கலாச்சாரங்களை பாக்கும்போது இவ்ளோ அட்வான்சான கல்விமுறை இருந்து என்ன பயன் என்று நினக்கிறேன்.

    ReplyDelete
  3. குழந்தைகளின் தவறுக்கு இன்னும்மொரு மிக முக்கிய காரணம் அவளை தன்னம்பிக்கை இல்லாமல் வளர்ப்பது.கோழைத்தனமான இதயம் சிறு தோல்வியை கூட சந்திக்க முடியாமல் சாகிறது.வெற்றி மட்டுமே காட்டி வளர்ப்பது மிக தவறு.பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்


    மிக மிக அருமையான பதிவு சகோதரி வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தாங்களே இன்னும் வாழ்க்கையில் முதிர்ச்சி அடையா நிலையில் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை அவர்களால் எப்படி சரியான பாதையில் வளர்க்க இயலும்? சமூக வன்முறைகளுக்கு இதுபோன்ற சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகளும் ஒரு காரணமாக இருப்பதில் வியப்பென்ன?//

    தெளிவான‌ விள‌க்க‌ம்.

    ReplyDelete
  5. மாதாபிதா குரு தெய்வம் என்று போதிக்கப் படும் நம் நாட்டுக் கல்வி தரம் தாழ்ந்து இருக்கக் காரணமே கல்வி வியாபரமானதுதான்.நீங்கள் குறிப்பிட்டுள்ள குழந்தை வளர்ப்பு போன்றவை கற்பிக்கப் ப்டும் விதம் எனக்கு உடன்பாடு இல்லை. தாய்மையும் குழந்தை நலனும் நம் மக்கள் , ஏன் ஒவ்வொரு தாயின் ரத்தத்திலேயே ஊறி இருக்கும். உபயோகமான டிப்ஸ் வேண்டுமானால் தரலாம். குழந்தை வளர்ப்பின் உச்சகட்ட சம்பவம் நம் நாட்டுத் தம்பதிகளுக்கு நார்வே நாட்டில் அரங்கேறி இருப்பது மேல் நாட்டவரின் இன்னொரு முனை. பொதுவாக உங்கள் கருத்து bias இல்லாமல் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. Anonymous13/2/12 23:03

    achoooo...paarkkave kastamma irukku

    ReplyDelete
  7. Anonymous13/2/12 23:09

    பதின்மவயது பிள்ளைபேறுக் கல்வி முறை
    அத்தனை சிறிய வயதிலேயே கற்பிக்கப் பட்டால்
    எதிர்மறை விளைவைத்தான் தரும்.
    தகவல் வியப்பு + அதிர்ச்சி.

    ReplyDelete
  8. //தாங்களே இன்னும் வாழ்க்கையில் முதிர்ச்சி அடையா நிலையில் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை அவர்களால் எப்படி சரியான பாதையில் வளர்க்க இயலும்? சமூக வன்முறைகளுக்கு இதுபோன்ற சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகளும் ஒரு காரணமாக இருப்பதில் வியப்பென்ன? //

    இது மிகவும் வருத்தம் தரும் விஷயம் தான்.

    ReplyDelete
  9. //அழுத்திப் பிடித்தால் மூச்சுத் திணறி, குழந்தை இறந்துவிடும்.//


    இது இன்னொரு விஷயத்திலும் ரொம்ப பொருந்தும் .பிள்ளைகளை எதற்க்கெடுத்தாலும் குறைகளை குத்திகாட்டிகொண்டு /கம்பேர் செய்யும் //
    அடக்கி வைக்கும் பெற்றோர்களும் கவனிக்க வேண்டியது .
    ஒரு பெண் பள்ளியில் படித்தாள்.அவங்கம்மா எதற்க்கெடுத்தாலும் பைபிளில் சத்யம் செய்ய சொல்வாங்க .அப்பெண் பள்ளியில் வந்து அடங்காது அட்டகாசம் செய்வாள் /வீட்டில் அடக்குமுறை வேறுவிதமாக அப்பெண்ணை மாற்றி விட்டது .
    .......................
    வெளி நாட்டு பள்ளிமுறை பல விசயங்களில் சிறந்தது
    இன்னொரு ஆதங்கம் இருக்கு வெளிநாட்டு பள்ளி கல்வி முறை விஷயத்தில் .
    வரைமுறையின்றி எல்லாம் கற்றுகொடுக்கப்ப்படும்போது சிறு பிள்ளைகளுக்கு இதெல்லாம் அதிகமோ என்றே தோன்றுகிறது .

    ....................
    .சென்னை சம்பவத்தில் நானும் உங்களை மாதிரிதான் யோசித்தேன் கீதா .இங்கே ஏழு வாரம் பள்ளி தொடர்ந்து நடக்கும் எட்டாவது வாரம் கண்டிப்பாக எட்டு அல்லது பத்து நாள் விடுமுறை .ஆசிரியருக்கும் /மாணவருக்கும் ரிலாக்சேஷன் தேவை .

    ReplyDelete
  10. பத்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் மனநிலை ஆண்// பெண் மற்றும் வளர்ப்பு பற்றி தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள் கீதா .உங்க எழுத்துக்கள் ஆழமாக சிந்திக்க தூண்டுகிறது

    ReplyDelete
  11. இங்கெல்லாம் எம் வீடுகள்போல பெரியவர்கள் இருப்பதில்லைதானே.அதனால் ஆண் பெண் குடும்ப உறவு முதல் குழந்தைகள் வளர்ப்பது,
    கர்ப்பமுற்றிருக்கும்போது கணவனின் பணி என்ன,எப்படி அன்பு செலுத்தி அவவை எப்படிக் கவனித்துக்கொள்வதுவரை அத்தனையுமே புத்தகம் புத்தகம்தான்.ஆனால் நான் அறிந்திருக்கிறதைவிட கீதா நீங்கள் நிறையவே அறிந்து வைத்திருக்கிறீர்கள்.தொடருங்கள் !

    ReplyDelete
  12. நான் ஒன்று கவனித்தேன் கீதா... இன்றைய குழந்தைகள் விளையாடும் வீடியோ கேம்கள் கூட வன்முறையை அடிப்படையில் கொண்டதாகவே உள்ளன. ரோட்டில் பைக்கில் போகையில் மற்றவனை உதைத்து விழ வைப்பதும், பிரதமரைக் காப்பாற்ற கணக்கின்றி சுட்டுத் தள்ளுவதுமாக வன்முறை விதை இப்படியும் விதைக்கப்படுகிறது. பின் இப்படியான நிகழ்வுகளைக் கண்டு நம்மைப் போன்றவர்கள் புலம்புவதுதான் மிச்‌சம்!

    ReplyDelete
  13. பின்னாளில் வாழ்க்கைக்குப் பயிற்சியாக பதின்ம வயதுக் கர்ப்பத்தைத் தடுக்க குழந்தை போன்ற ஒன்றைத் தந்து பயிற்சி தருவது புது விஷயமாக இருக்கிறதுங்க கீதா. நிகழ்உலகில் மாணவர்களின் கவனம் பதிய நல்ல முயற்சியென்றே படுகிறது. இந்நிலை இங்கும் வந்துவிடுமோ என்று லேசான அச்சமும் ஏற்படுகிறது. தொடர்கிறேன்!

    ReplyDelete
  14. இந்தப் பதிவின் விஷயங்கள் கொஞ்சம் அதிர்ச்சி ரகமாகத்தான் இருக்கின்றன. என்ன புரியுதுன்னா, எல்லா சமுதாயங்களிலும்/நாட்டிலும் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்குங்கிறதுதான்.

    நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ளணும்,அதான்.

    நல்லா கோர்வையா, தெளிவா, விளங்கும்படி எழுதுறீங்க கீதா.

    ReplyDelete
  15. ஆசிரியர்கள் எல்லா மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்றும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்களிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துக் கொள்ள வேண்டியுள்ளது.

    அதையும் பொருட்படுத்தாத மாணவர்களிடம் தான் ஆசிரியர்கள் கோவத்தை காட்டுகிறார்கள் அதுவும் அந்த மாணவர் திருந்துவார் என்ற எண்ணத்தில் தான் ஆனால் சில நேரங்களில் இப்படி எதிர்மறையாக ஆகிவிடுகிறது.


    மேலை நாடுகளில் கல்வி முறையானது மிகவும் வித்தியசமானது ஆனால் நமது கல்வி முறை இன்னும் மனப்பாடம் செய்யும் நிலையில் தான் உள்ளது..



    ஆனாலும் அனைத்து மேலைநாடுகளை ஒப்பிடும் போது நமது இந்திய கல்விதான் மேன்மைதாங்கியதாக இருக்கிறது...

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  16. நீண்ட பதிவு, என்றாலும் முழுவம் படித்தேன்!
    சுவைபட எழுதியுள்ளீ்ர்! வாழ்த்துக்கள்!
    அன்னிய கலாச்சாரத்திலும் நம்முடைய
    கலாச்சாரத்திலும் பல நன்மைகளும் உண்டு
    தீமைகளும் உண்டு
    நல்லன கொண்டு, தீயன விலக்கி
    பண்பட்ட ஒரு சமுதாயம் தோன்றுமா?
    இன்றைய சூழ்நிலையைப் பார்க்கும் போது
    கேள்விக் குறிதான் விடையாக தெரிகிறது
    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. தேவையான விழிப்புணர்வுப்பதிவு. மனம் கனக்கிறது சகோ. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. குடும்ப வன்முறைகளும் தகாத உறவுகளின் பின்னணியும் மூத்த மாணவர்களால் இழைக்கப்படும் கேலிவதைகளும் அதற்கு அடுத்தக் கட்டமான துயரவதைகளும் காரணங்களாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது.

    இதில் நீங்கள் குறிபபிட்ட மூத்த மாணவர்களால் இழைக்கப்படும் கேலிவதைகள் என்ற புதிய மாணவர்களின் மீது நடத்தப்படும் காட்டுமிராண்டிதனம் அமெரிக்கா கனடாவில் இல்லை. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலேயே நடத்தபடுகின்றன.

    ReplyDelete
  19. ஆஸ்திரேலியப் பள்ளிகள் பற்றி நிறைய தகவல்கள் தொடர் பதிவுகளாகத் தந்துள்ளீர்கள். நானும் தொடர்ந்து வருகிறேன். பல புதிய விசயங்களைத் தெரிந்துகொண்டேன். பொம்மையை வைத்து தாய்மையைப் பற்றிய விழிப்புணர்வு நல்ல ஐடியா.

    ReplyDelete
  20. நல்ல பதிவு! நன்றி!
    ஆசிரியை கொல்லப் பட்ட சம்பவம் குறித்து என்னுடைய வலைப்பூவில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன்
    http://www.esseshadri.blogspot.in/2012/02/blog-post_11.html
    நேரம் கிடைக்கும்போது படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்.
    நன்றி!
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  21. அருமையாக விஷயங்களை விளக்கிப் போகிறீர்கள்
    கலாச்சார நிலையிலும் பண்பாட்டு நிலையிலும்
    இத்தனை மாறுபாடாக உள்ள சூழலில் நம்மவர்களின்
    நிலை எப்படி உள்ளது ?
    எப்படி சமாளித்துப் போகிறார்கள் ?
    எப்படித்தான் சரியாக வீட்டளவில் இருந்தாலும்
    வெளிப்பாதிப்பைத் தவிர்க்க இயலுமா ?
    உங்கள் தொடர் முடிகையில் இதற்கெல்லாம்
    விளக்கம் கிடைக்குமென நினைக்கிறேன்
    பயனுள்ள அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. அருமை பதிவு

    ReplyDelete
  23. @ வை.கோபாலகிருஷ்ணன் சார்

    தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி. தாங்கள் வருத்தப்படும் விஷயம் மிகவும் உண்மைதான்.

    ReplyDelete
  24. @ ஆச்சி, இன்னும் விவரமா சொன்னால் இன்னும் தலை சுத்தும். பெண்பிள்ளைகள் படிக்கும் காலத்திலேயே கர்ப்பமாவதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. கற்பைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஒருவருடன் வாழும்போது அவருக்கு உண்மையாக இருக்கவேண்டும். கற்பின் எல்லை அவ்வளவுதான்.

    மற்றபடி பருவ வயதில் பிள்ளைப்பெறும் தம்பதியினருக்கு கர்ப்பம் உருவான மாதத்திலிருந்தே மருத்துவமனைகள் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி இருவருக்கும் குழந்தை வளர்ப்பிற்கான வழிமுறைகளைச் சொல்லித்தருகின்றன. மேலும் மனைவியின் பிரசவத்தின்போது கணவன் கட்டாயம் அருகிலிருக்கவும் பரிந்துரைக்கின்றன.

    ReplyDelete
  25. @ தனசேகரன், மிகச்சரியானக் கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். வெற்றி தோல்வி இரண்டுமே இணைந்ததுதான் வாழ்க்கை என்பதை பெற்றோர் பிள்ளைகளுக்குப் புரியவைக்கவேண்டும். கருத்துக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  26. @ நிலாமகள், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  27. @ G.M B ஐயா, தங்கள் வருகைக்கும் தெளிவான கருத்துரைக்கும் மிகவும் நன்றி. ஆஸ்திரேலியக் குழந்தைகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வளர்வதால் பள்ளிக்கல்வி முடியுமுன்னரே பாதிப்பிள்ளைகள் பாலியலில் ஈடுபட்டுவிடுகின்றனர் என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. தவறிக் கர்ப்பம் சுமக்கும் பெண்பிள்ளைகள் அரசு தரும் சலுகைகளுக்காகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதாகவும் அந்த ஆய்வறிக்கை சொல்கிறது. பிள்ளை பெற்றபின் சிரமப்படாமல், பிள்ளை பெறுமுன் எச்சரிக்கையாய் இருக்கச் சொல்லி அறிவுறுத்துகிறது பள்ளி நிர்வாகம். அதன் பாதிப்பே இது. நம் நாடு போல் பொறுப்பாய் பிள்ளை வளர்ப்பவர்களை இங்கு காண முடியாது. தூங்கும் மழலைகளை காரிலேயே விட்டுவிட்டு பெற்றோர் ஷாப்பிங் சென்றுவிட, வெப்பத்தினாலும், தனிமைப் பயத்தாலும் கதறிக் கதறி உயிர்விட்ட பல குழந்தைகளின் கதைகளை அடிக்கடி செய்திகளில் படிப்பதுண்டு.

    ReplyDelete
  28. வாங்க கலை, உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  29. @ ஸ்ரவாணி, வேறு வழியில்லை தோழி. ஜி.எம்.பி ஐயாவுக்கு சொன்ன பதிலைப் பார்த்தால் உங்களுக்கும் புரியும். அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் அற்ற சமூகம் அது.

    ReplyDelete
  30. @ ஏஞ்சலின், ஊக்கமளிக்கும் உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ஏஞ்சலின். முடிந்தவரை எழுதப் பார்க்கிறேன்.

    வயதுவந்தக் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதிலும் ஒரு அளவு உண்டு. எல்லை மீறாமலும், அதே சமயம் கைவிட்டுப் போய்விடாமலும் கயிற்றின்மேல் நடப்பதுபோல்தான் அது. மிகவும் கஷ்டம்.

    ReplyDelete
  31. @ ஹேமா, பல விஷயங்கள் இங்கு வந்தபோது எனக்கு அதிர்ச்சியைத்தான் அளித்தன ஹேமா. கலாச்சார அதிர்ச்சி உண்டாகும் என்று எல்லோரும் சொன்னார்கள். அதை உண்மையில் உணர்ந்தேன். பிள்ளைகளை பள்ளி விட்டு அழைத்துவரும்போது, பேருந்துகளில் பலர் மத்தியில் ஏழாம் எட்டாம் வகுப்புப் பிள்ளைகள் போலிருக்கும் பிள்ளைகள் தங்களை மறந்து, பேருந்தில் இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் முத்தமிட்டுக்கொண்டு வருவதைப் பார்க்க எப்படியிருக்குமென்று நினைத்துப் பாருங்கள். மிகவும் வேதனையாகவும் இருந்தது.

    ReplyDelete
  32. @ கணேஷ் சார்,

    நீங்கள் சொல்லியிருப்பது முழுக்கவும் உண்மை. இன்றையக் குழந்தைகள் விளையாடும் கணினி விளையாட்டுகள் எல்லாமே வன்முறையின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. ஒரு உயிரைப் போக்குவது என்பது ஒரு பொத்தானில் அடங்கிவிடுகிறது. வன்மத்தை வளர்க்கும் விளையாட்டுகளால் குழந்தைகள் மனதிலும் இரக்கம், மனித நேயம் போன்ற உணர்வுகள் இல்லாமல் போய்விடுகின்றன.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  33. @ ஹூஸைனம்மா,

    சரியா சொன்னீங்க. நல்லதை எடுத்துக்கணும், கெட்டதை விட்டுடணும். அதை இந்தப் பதிவின் முதல் பகுதியிலேயே சொல்லித்தான் ஆரம்பித்தேன். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  34. \\கவிதை வீதி... // சௌந்தர் // said...
    ஆசிரியர்கள் எல்லா மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்றும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்களிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துக் கொள்ள வேண்டியுள்ளது.\\

    @ சௌந்தர், நீங்க சொல்லியிருப்பதைத்தான் நானும் குறிப்பிட நினைக்கிறேன். எல்லா மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் வாங்கவேண்டும் என்ற நோக்கத்தையே தவறு என்கிறேன். எல்லாராலும் எல்லாவற்றிலும் சிறந்துவிளங்க முடியாது. தாங்கள் ஒரு ஆசிரியர் என்றாலும் குறித்தப் பாடத்தில் மட்டுமே உங்களுடைய கற்பிக்கும் திறன் சிறப்பாக இருக்க முடியும். எல்லாப் பாடங்களையுமே அதே அளவு திறனுடனும் ஈடுபாட்டுடனும் உங்களைக் கற்பிக்கச் சொன்னால் முடியாது அல்லவா?

    ராணுவத்தை எடுத்துக்கொள்வோம். அதற்குப் பொருத்தமான ஆட்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அப்படியில்லாமல் உடல்வலுவற்றவர்களையும் தேர்ந்தெடுத்துவிட்டு உடல் வலுவானவர்களுக்கு இணையாகப் பயிற்சிகளும் சாகசங்களும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனைத் தவறு.

    உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதா இல்லையா என்பதை பார்த்தும் சோதனைகள் மூலமும் அறிய முடிகிறது. மூளையின் திறன் பற்றியும் அதன் செயல்பாடு பற்றியும் நம்மால் அறிந்துகொள்ள முடிவதில்லை. ஒரு மாணவனுக்குப் படிக்கும் எதுவும் மூளையில் சரிவரப் பதியாமல் போகலாம். அல்லது ஒரு குறிப்பிட்டப் பாடத்தில் மட்டும் கிரகிப்புத்திறன் கூடுதலாய் இருக்கலாம். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று மருத்துவரீதியாகவோ மனரீதியாகவோ அணுகாமல், மற்றவர் முன்னிலையில் கடிவதும், கண்டிப்பதும் கூடாது என்பதுதான் என் எண்ணம். மாணவரின் அறியாமையாலும், வன்மத்தாலும், கொலைகளும் தற்கொலைகளும் தூண்டப்படுவது முற்றிலுமாய்த் தவிர்க்கப்படவேண்டும் என்ற ஆதங்கமே இப்பதிவின் அடிப்படை என்பதை முதல் பதிவிலேயே சுட்டிக் காட்டியே துவங்கியுள்ளேன். எனவே புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    தாங்கள் ஒரு உதாரண ஆசிரியர் என்பதை மாணவ மாணவிகள் அத்தனைப்பேரில் உங்களுக்கு மட்டும் விருதளித்து மகிழ்ந்த விழாவின் மூலம் தெரிந்துகொண்டேன். ஏன் எல்லா ஆசிரியர்களும் தங்களைப் போலவே விருது வாங்கும் பாக்கியம் பெறவில்லை. அணுகுமுறைதான் காரணமாயிருக்கும் என்று நம்புகிறேன். எல்லா ஆசிரியர்களும் மாணவர் மெச்சும் வகையில் தன்மையாகவும் மென்மையாகவும் தவறுகளைத் தனிமையில் கண்டிப்பவராகவும் இருந்துவிட்டால் எத்தனை நன்மை? இப்பதிவின் நோக்கங்களுள் இதுவும் ஒன்று.

    மாற்றுக் கருத்திருந்தால் மனமுவந்து வரவேற்கிறேன்.தங்கள் வருகைக்கும் மனந்திறந்த கருத்துக்கும் மிகவும் நன்றி சௌந்தர்.

    ReplyDelete
  35. @ புலவர் சா இராமாநுசம் ஐயா,

    நூல் வெளியீட்டுவிழாவின் வேலை மும்முரத்திலும் வந்து முழுப்பதிவையும் படித்துக் கருத்திட்டிருப்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது. மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  36. @ துரைடேனியல் , தங்கள் வருகைக்கும் நெகிழ்வானக் கருத்துக்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  37. @ baleno தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. ஆஸ்திரேலியப் பள்ளிகளில் bullying எனப்படும் பிரச்சனை பள்ளிகளில் அதிகம் உண்டு. ஆரம்ப்ப்பள்ளிகளிலேயே அது தொடங்கிவிடுகிறது. அதிலிருந்து மற்ற மாணவர்களைக் காப்பாற்றப் பள்ளி நிர்வாகம் பெரும் நடவடிக்கை எடுக்கிறது. பல பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுவிடுகிறார்கள். சிலர் வதைக்குள்ளாகிவிடுகிறார்கள்.

    சென்ற மாதம் உயர்நிலைப் பள்ளி மாணவன் ஒருவன் மற்ற மாணவனைத் தாக்கியதில் அவன் இறந்தே போய்விட்டான். இதுபோன்ற சம்பவங்களும் இங்கு நடப்பதுண்டு. பள்ளிகளில் நல்ல நிர்வாகம் இருந்தால் இந்தப் பிரச்சனை குறையும்.

    ReplyDelete
  38. @ விச்சு, தங்கள் தொடர் ஊக்கம் இன்னும் பல விஷயங்களையும் தொட்டு எழுதத் தூண்டுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  39. பயனுள்ள விடயங்கள்
    நான் அறிந்திராத பல தகவல்கள்.
    நன்றி

    ReplyDelete
  40. @ Seshadri e.s.

    தங்கள் வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி. தங்கள் பதிவில் அலசப்பட்டுள்ள அத்தனை அம்சங்களுடனும் நான் ஒத்துப்போகிறேன். நல்லதொரு பகிர்வுக்கு நன்றியும்.

    ReplyDelete
  41. @ ரமணி சார்,

    ஆர்வத்துடன் கேள்விகள் எழுப்பி என்னை இன்னும் ஆழமாக எழுதவைக்கிறீர்கள். தங்கள் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி.இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் என்றால் பெரிய பிரச்சனையில்லை. பலர் அவர்கள் வாழ்க்கைமுறையை உணவு, உடை போன்ற விஷயங்களில் ஆஸ்திரேலிய வாழ்க்கைமுறை போலவே மாற்றிக்கொள்கிறார்கள். கலாச்சாரப் பிடிப்பு உள்ளவர்கள் இங்கும் தங்கள் கலாச்சாரங்களைப் பின்பற்றி வாழ்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் சட்டம் அதனை அனுமதிக்கிறது. பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகளுக்கென்று பிரத்யேக சீருடை உள்ளது. விரும்பினால் அணியலாம். இல்லையெனில் பொதுவாக மற்ற மாணவிகள் அணிவதை அணியலாம். இது பற்றி அடுத்தப் பதிவில் விளக்குகிறேன்.

    ReplyDelete
  42. @ r.v.saravanan

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  43. பள்ளிகள் வாழும் கலையைக் கற்றுக்கொடுக்காவிடினும் சாகும் எண்ணத்தைத் தூண்டக்கூடாது
    >>
    முதல் வரியே சிந்திக்க தூண்டும் வரிகள் தோழி. இப்போ இருக்கும் நிலையில் நம் இந்திய பள்ளிகள் கொலக்களமாக மாறிக்கொண்டிருப்பது வேதனைதான்

    ReplyDelete
  44. இப்படியும் உண்டா ? என்ன வியப்பு !

    ReplyDelete
  45. ஆசிரியர், பெற்றோர், பள்ளி என்று ஒவ்வொருவராய்க் குறை சொல்வதற்கு பதில் மொத்தமாய் நம் கல்விமுறையே காரணம் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை.

    ReplyDelete
  46. ஆஸ்திரேலியாவில் சிங்கிள் மதருக்கு அளிக்கப்படும் அளவுகடந்த ஊக்கத்தொகைக்காகவே பிள்ளைபெற்று வாழ்க்கையை நடத்தும் பெண்கள் உண்டு...

    ReplyDelete
  47. @ ராஜி,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

    ReplyDelete
  48. \\சொ.ஞானசம்பந்தன் said...

    இப்படியும் உண்டா ? என்ன வியப்பு !\\

    ஆம்,வியக்கவைக்கும் செய்திதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  49. இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் மனங்கவர்ந்த இடங்களைச் சுட்டியதற்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  50. ராணுவத்தை எடுத்துக்கொள்வோம். அதற்குப் பொருத்தமான ஆட்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அப்படியில்லாமல் உடல்வலுவற்றவர்களையும் தேர்ந்தெடுத்துவிட்டு உடல் வலுவானவர்களுக்கு இணையாகப் பயிற்சிகளும் சாகசங்களும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனைத் தவறு.

    அருமையான இலகுவான விளக்கம் நன்றி.
    எனது நாட்டவர்களும் (இலங்கை)ஆசிரியர் என்றால் கண்டிப்பாக தான் இருக்க வேண்டும் என்று கூறியது உண்டு. அது தவறு என்று தெரிந்த போதும் அப்போது அவர்களுக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாமல் நேரம் இல்லாமல் பொறுமையில்லாமல் நின்றதுண்டு. இனிமேல் நீங்கள் சொன்னதையே அப்படியே எடுத்து விடுகிறேன்.

    ReplyDelete
  51. @ baleno

    என் கட்டுரை வாயிலாய்த் தங்களுக்கு உதவ முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  52. நல்லதும், கெட்டதும் கலந்திருக்கும் இடத்தில் நல்லதை மட்டுமே - அதுதான் நல்லது என்று புரிந்து - தேர்ந்தெடுக்க பெரியவர்களிடமிருந்து நிறைய வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும் பதின்ம வயதுக் குழந்தைகளுக்கு என்று தெரிகிறது.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.