ஆரம்பப்பள்ளிப் பிள்ளைகளுக்குத் தேர்வு இல்லையென்றாலும் அவர்களின்
கல்வித்தரத்தைப் பரிசோதித்து, அது குறைந்திருக்கும்பட்சத்தில் மேம்படுத்துவதற்கான முயற்சியை ஆஸ்திரேலியக் கல்வி நிர்வாகம்
கைவிட்டுவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டும், மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம்
வகுப்புப் பிள்ளைகளுக்கு NAPLAN (National Assessment Program — Literacy and
Numeracy) என்னும் தேர்வுகள் The Australian
Curriculum, Assessment and Reporting Authority (ACARA) மூலம் நடத்தப்படுகின்றன. இந்நிறுவனமானது
கல்வி அமைச்சர்களின் வழிகாட்டுதல் படியும், தேர்ந்த
கல்வியாளர்களின் ஆலோசனை மற்றும் பங்களிப்புடனும் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
இந்த நாப்ளான் தேர்வுகள் மூலம் மாணவர்களின் எழுத்தறிவும்
எண்ணறிவும் சோதிக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் நிலைபெறத் தேவையான அறிவல்லவா
இவை!
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று ஔவையாரும்,
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்று வள்ளுவரும் வாய்மொழிந்தவை இங்கு செயல்படுத்தப்படுகின்றன.
அந்தந்த வயதின் கல்வியறிவுக்கேற்றபடி பொதுக் கேள்வித்தாள்கள்
தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பாடங்கள்
படித்து மனப்பாடம் செய்யும் வேலையில்லை. மொழியறிவும், அடிப்படைக்
கணித அறிவும் இருந்தால் போதும்.
மொழியறிவுத் தேர்வில் வாசிப்புத் திறன், வாசித்ததைப்
புரிந்துகொள்ளும் தன்மை, எண்ணத்தை எழுத்தாக்கும் திறமை, எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி
எழுதும் வல்லமை, நிறுத்தற்குறியீடுகளைப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தும்
அறிவு போன்றவையும், எண்ணறிவுத் தேர்வில் அடிப்படைக் கணக்குகள் பற்றிய அறிவும், புதிர்களை
விரைவில் புரிந்துகொள்ளும் திறனும் சோதிக்கப்படுகின்றன. எழுத்துத்
தேர்வைத்தவிர வேறு எதற்கும் எழுதவேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு
வினாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்தால்
போதுமானது. (நம் TNPSC தேர்வுகளைப்போல்)
இத்தேர்வுகளுக்காக மாணவர்களைத் தயார் செய்யவேண்டாம் என்று
கல்வித்துறை பெற்றோருக்கு அறிவுறுத்துகிறது. இது வெற்றி, தோல்வியை
நிர்ணயிக்கும் தேர்வு அல்லவென்றும், மாணவர்களின் அறிவு
வளர்ச்சியைக் கணக்கிடும் அளவுகோலே என்றும் கூறி மேலும் பெற்றோரும் ஆசிரயர்களும் செய்யவேண்டியவை
எனக் குறிப்பிடுவதாவது; பிள்ளைகளுக்கு, தேர்வு
பற்றியப் பதட்டத்தை உருவாக்காமல் நல்ல மன அமைதியை உண்டாக்குவதும், தேர்வினை
எப்படிச் செய்யவேண்டும் என்னும் வழிமுறையைக் கற்றுத்தருவதுமே!
தேர்வுகளை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுதுவார்கள். இதனால்
தேவையற்றப் பயம் குறைகிறது. பழகிய வகுப்பு, பழகிய மாணவர்கள், பழகிய ஆசிரியர்
என்னும்போது ஏதோ வகுப்புத் தேர்வு எழுதுவது போலவே உணர்வார்கள். ஆனால் தேர்வுக்கான
விதிமுறைகளைப் பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.
தேர்வுகள் பொதுவாக மே மாதத்தில் நடைபெறும். தேர்வுகள்
அனைத்தும் (language convention, reading, writing, and numeracy)
ஒரே நாளில் நடத்தப்படாமல் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த நாளில் நடத்தப்படுவதோடு தேர்வுநேரமும் 40
முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே என்பது சிறப்பு.
தேர்வுத்தாள்கள் அனைத்தும் பலத்தப் பாதுகாப்புடன் அகாரா நிறுவனத்துக்கு
அனுப்பப்படும். தேர்வு மதிப்பீடுகள் யாவும் மேற்கண்டப் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி
ஒரே அளவுகோலின் பத்து பிரிவுகளில் கணக்கிடப்படுகின்றன. ஆண்டு இறுதியில்
அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மதிப்பீட்டு அறிக்கையானது பிறர் பார்வைக்கு
மறைவாக கனத்த உறையில் இடப்பட்டு ஒட்டி அனுப்பப்படும். தேவைப்பட்டால்
பள்ளி நிர்வாகம் மாணவரின் எதிர்கால நலன் கருதி, பிரித்துப்
பார்க்க அனுமதி உண்டு. மாணவர்களின் திறன் ஆசிரயர்களுக்குத் தெரியுமாதலால், பெரும்பாலும்
உறைகள் பிரிக்கப்படாமலேயே வீட்டுக்குத் தபாலில் அனுப்பப்படுகின்றன.
நாட்டில் பொதுவாக கணக்கிடப்பட்டிருக்கும் சராசரிக்கல்வி நிலையோடு
நம் பிள்ளைகளின் கல்வியறிவை ஒப்பிட்டு அறிவதன் மூலம், பின்தங்கிய
பாடத்தில் மேலும் சிரத்தை எடுக்கலாம் அல்லது நம்பிள்ளையின் அறிவுத்தகுதி அறிந்து அதற்கேற்றபடி
அவனை அனுசரித்துப் போகலாம்.
ஆஸ்திரேலியக் கல்விமுறையிலும் பெரும் மாற்றம் வரும் வாய்ப்பு
உள்ளது என்பதை சமீபத்திய நாளிதழ் செய்தியொன்று கோடிகாட்டுகிறது. ஆஸ்திரேலிய
மாணவர்களை ஆசிய மாணவர்களோடு ஒப்பிடுகையில் மூன்றுவருடங்கள் கல்விநிலையில் பின்தங்கியிருப்பதாக
க்ராட்டன் கல்வி நிறுவனம் ஒன்று தன் ஆராய்ச்சியின் முடிவில் வருத்தம் தெரிவித்துள்ளது. ஆசியர்கள்
என்பது ஆஸ்திரேலியர்களின் பார்வையில் எப்போதுமே கிழக்காசிய நாட்டு மக்களையேக் குறிக்கும். மற்ற ஆசிய
நாட்டு மக்களை, சீனர், பாக்கிஸ்தானியர், இந்தியர்
என்று தனித்துக் குறிப்பிடுவர். அதன்படி
ஆஸ்திரேலிய மாணவர்களின் கல்வித்தரம்
ஷாங்காய் மாணவர்களின் கல்வித்தரத்தைக் காட்டிலும் மூன்றுவருடங்கள் பின்தங்கியிருப்பதாகவும், ஹாங்காங், சிங்கப்பூர்
மற்றும் தென்கொரிய மாணவர்களைவிடவும் ஒன்றிரண்டு வருடங்கள் பிந்திய நிலையில் இருப்பதாகவும்
கூறப்படுகிறது. இந்த நாடுகளின் வெற்றிகரமானத் தேர்ச்சிக்குப் பின்னால் இருக்கும்
கல்விமுறைக்கான அடிப்படைத் தத்துவங்கள் ஒத்திருப்பது பெரும் வியப்பளிக்கும் செய்தி.
சிங்கப்பூரில் பயிற்சிநிலை ஆசிரியர்கள் யாவரும் சம்பளம் வாங்கினாலும்
பொதுநல ஊழியர்களாகவே கருதப்பட்டு சமுதாயத்தில் உயர்மட்ட அந்தஸ்தைப்பெறுகின்றனர். அவர்கள்
தேர்ந்த கல்வியாளர்களால் வழிநடத்தப்படுவதுடன், கற்பிக்கும்
முறைகளில் திறனாய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் போலவே கருதப்படுகின்றனர் என்றும் அத்தகவற்குறிப்பு
மேலும் தெரிவிக்கிறது.
என் மகன் ஏழாம் வகுப்பு என்பதால் இந்த வருடம் நாப்ளான் தேர்வு
உண்டு. தினமும் அதற்கானப் பயிற்சிகளை வகுப்புகளிலேயே பள்ளிகள் கற்றுத்தருகின்றன. பயமின்றித்
தேர்வெழுதவும், தேர்வுத்தாளைப் படித்துப் புரிந்துகொள்ளவும், குறிப்பிட்ட
நேரத்துக்குள் தேர்வை முடிக்கவும் இப்பயிற்சி வகுப்புகள் உதவுகின்றன.
என் மகன் சராசரி மாணவன் என்றாலும் எனக்கு அதைப்பற்றிய கவலையில்லை. அவனிடம்
படிப்புத் தவிர ஓவியங்கள் வரைதல், கற்பனாசக்தி, புதியவற்றை உருவாக்கும்
ஆர்வம், பூச்சிகள் பற்றிய நுட்ப அறிவு, கணினியில்
வரைதிறன் போன்ற திறமைகளுடன், பாசம், ஒழுக்கம், பெரியோரிடத்தில்
மரியாதை, அடுத்தவரை மதிக்கும் குணம், நண்பர்களைக்
கொண்டாடும் குணம் போன்ற நல்ல குணங்களும் இருப்பதால் படிப்பில் பின்தங்கியிருப்பது என்னைப்
பெரிதும் பாதிக்கவில்லை. இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் இப்படி நிதானமாக யோசித்திருக்க
முடியுமா என்று தெரியவில்லை. நான் அழுத்தம் கொடுக்காவிட்டாலும் பள்ளிகள் அழுத்தம் கொடுத்திருக்கும்
என்பது உண்மை.
இந்தியாவில் தேர்வு சமயங்களில் பள்ளிகளில் அடிக்கடி பார்க்கும்
நிகழ்வு ஒன்று உண்டு. அது மாதத்தேர்வாயிருந்தாலும் சரி, காலாண்டு, அரையாண்டுத்
தேர்வுகளாக இருந்தாலும் சரி, வகுப்பு விட்டுப் பிள்ளைகள் (அது ஒன்றாம்
இரண்டாம் வகுப்புக்குள்தான் இருக்கும்) வெளியில் வந்தவுடனேயே, அவர்களை
அழைத்துச் செல்ல வந்திருக்கும் பெற்றோர், பெரும்பாலும் தாய்மார்கள்
அவர்களது கையிலிருந்து கேள்வித்தாளைப் பிடுங்கி, “இதுக்கென்ன
எழுதினே? அதுக்கென்ன எழுதினே?” என்று கேள்விகளால்
துளைப்பதும், அதற்கு அந்தக் குழந்தைகள் திருதிருவென விழிப்பதும் மீறி, ஏதாவது
பதில் சொன்னால், “சனியனே… நேத்து விடிய விடிய சொல்லிக்குடுத்தேனே… இப்படி
மாத்தி எழுதிவச்சிருக்கியே, முண்டம்… முண்டம்” என்று ஆவேசத்துடன்
அதன் தலையில் குட்டுவதும், அந்தக் குழந்தையை வேறு எதுவும் பேசவிடாமல் தேர்வைப்பற்றியே
கேட்டுக் கேட்டு முகம் வாடவைப்பதுமாய் எத்தனை எத்தனை நிகழ்வுகள்!
நானும் இதுபோல் ஒருகாலத்தில் செய்திருக்கிறேன். வீட்டுக்குள்
குழந்தைகள் நுழைந்ததும் எப்போதும் பள்ளியில் நடந்தவற்றைப் பற்றி ஆர்வமாகச் சொல்வார்கள். ஆனால் தேர்வு
நேரங்களில் அவர்களைப் பேசவேவிடாமல் முடிந்துபோன தேர்வுத்தாளைக் கையில் வைத்துக்கொண்டு
அது பற்றியே பேசி பிள்ளைகள் மனத்தை நோகடித்தவள் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும்
வெட்கமாக உள்ளது. என் மாமனாரின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பத்திலேயே அப்பழக்கத்தைக்
கைவிட்டேன். தக்க நேரத்தில் தக்க அறிவுரை வழங்கிய அவர் ஒரு ஓய்வுபெற்றத்
தலைமையாசிரியர் என்பதும் வியப்புதானே?
ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல இந்தியப் பெற்றோரின் முகத்திலும்
இந்த நாப்ளான் தேர்வுச் சமயம் பதட்டத்தைக்
காணமுடியும். இதற்கென்று சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு பணம் கட்டி
அனுப்பும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். எதிலும்
முதலாவதாக வரவேண்டும் என்னும் எண்ணம், நம் இந்தியரின்
இரத்தத்தில் ஊறியதா என்பது தெரியவில்லை. என் மகளே இதற்கு
உதாரணம். அதைப் பற்றி அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.
nanringa akkaa ungal pagirvukku
ReplyDeleteஇது வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் தேர்வு அல்லவென்றும், மாணவர்களின் அறிவு வளர்ச்சியைக் கணக்கிடும் அளவுகோலே என்றும் கூறி மேலும் பெற்றோரும் ஆசிரயர்களும் செய்யவேண்டியவை எனக் குறிப்பிடுவதாவது; பிள்ளைகளுக்கு, தேர்வு பற்றியப் பதட்டத்தை உருவாக்காமல் நல்ல மன அமைதியை உண்டாக்குவதும், தேர்வினை எப்படிச் செய்யவேண்டும் என்னும் வழிமுறையைக் கற்றுத்தருவதுமே!
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்..ஆஸ்திரேலிய கல்வி முறையை இந்தியாவில் இருந்தபடியே அறிந்துகொண்டேன்.
தமிழ்மணத்தில் இணைத்தேன்.வாக்கிட்டேன்.நன்றி.
ReplyDeleteநானும் இதுபோல் ஒருகாலத்தில் செய்திருக்கிறேன். வீட்டுக்குள் குழந்தைகள் நுழைந்ததும் எப்போதும் பள்ளியில் நடந்தவற்றைப் பற்றி ஆர்வமாகச் சொல்வார்கள். ஆனால் தேர்வு நேரங்களில் அவர்களைப் பேசவேவிடாமல் முடிந்துபோன தேர்வுத்தாளைக் கையில் வைத்துக்கொண்டு அது பற்றியே பேசி பிள்ளைகள் மனத்தை நோகடித்தவள் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வெட்கமாக உள்ளது. உண்மைதாங்க நம் எதிர்பார்ப்பை குழந்தைகள் மீது திணிக்கிறோம் என்பதே உண்மை . அருமையான பதிவு .
ReplyDeleteஇந்த பதிவிலும் புது விசயங்களை தெரிந்துகொண்டேன்.நம்மூரில் அப்படியே மனப்பாடம் செய்து எழுதும் பழக்கம்தானே அதிகம்.
ReplyDeleteநுண்ணறிவுக்கான சோதனை. மனப்பாடம் செய்யாமல் மாணவனுக்குள் புதைந்திருக்கும் திறனை சோதிப்பது என்பது மிக நன்று. நீங்கள் இன்றிருப்பதைப் போல மகனைப் புரிந்து கொண்டு நடக்க இந்தியப் பள்ளிகள் விட்டிருக்காது என்பது மிக நிதர்சனமான விஷயம்ங்க. ரேங்க் என்பதைக் குறி வைத்தே இங்கு மாணவன் பட்டை கட்டிய குதிரையாக விரட்டப்படுகிறான். பாவம்... தனித் திறமைகள் கவனிக்கப்படுவது மிக அபூர்வம். நீங்கள் மகனை ஊக்குவிப்பதில் மகிழ்வும். கடைசியில் உங்கள் மாமனார் சொன்னதைப் பகிர்ந்ததில் நிறைவும் (எனக்கும் ஏற்புடைய கருத்து என்பதால்) கொண்டு தங்களுக்கு நன்றி நவில்கிறேன் தோழி.
ReplyDeleteஉங்கள் பல பதிவுகளுக்கு என்னால் தமிழ்மணத்தில் வாக்கிட முடியவில்லை. ஏன்?
ReplyDeleteஇந்தியாவில் இருந்திருந்தால் என்னால் இப்படி நிதானமாக யோசித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் அழுத்தம் கொடுக்காவிட்டாலும் பள்ளிகள் அழுத்தம் கொடுத்திருக்கும் என்பது உண்மை.
ReplyDeleteஎதிலும் முதலாவதாக வரவேண்டும் என்னும் எண்ணம், நம் இந்தியரின் இரத்தத்தில் ஊறியதா என்பது தெரியவில்லை.
உண்மைதாந் அருமையான் பதிவிற்கு நன்றி!
காரஞ்சன்(சேஷ்)
பயனுள்ள பதிவு. பள்ளிப்படிப்பு மட்டுமே ஒரு குழந்தையை நிர்ணயிப்பதில்லை....நல்ல குணங்களோடு அவரின் தனித்திறமைகளும் சேர்ந்தாலே நல்ல மனிதன் தான்.
ReplyDeleteஎண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று ஔவையாரும்,
ReplyDeleteஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்று வள்ளுவரும் வாய்மொழிந்தவை இங்கு செயல்படுத்தப்படுகின்றன.
அருமையான தகவல் பகிர்வுகள் பயன்மிக்கவை.. பாராட்டுக்கள்.. நன்றிகள்.. வாழ்த்துகள்..
//பிள்ளைகளுக்கு, தேர்வு பற்றியப் பதட்டத்தை உருவாக்காமல் நல்ல மன அமைதியை உண்டாக்குவதும், தேர்வினை எப்படிச் செய்யவேண்டும் என்னும் வழிமுறையைக் கற்றுத்தருவதுமே! //
ReplyDeleteஅருமையான தகவல்களுடன் கூடிய அழகிய பதிவு.
PEER pressure என்பது குழந்தைகளுக்கு இருக்கிறதோ இல்லையோ பெற்றோர்களிடம் நிறையவே காணப் படுகிறது. குழந்தைகளை ஒப்பிட்டு அவர்களைப் பற்றி அவர்களே தாழ்வு மனப் பான்மைகொள்ள வகுக்கும் நம் தேர்வு முறையை விட நீங்கள் கூறும் ஆஸ்திரேலிய முறை சிறந்ததாகப் படுகிறது. விரிவான பகிர்வு .நன்றி.
ReplyDeleteஇங்கே அபுதாபியிலும், (இந்தியர்களுக்கென்று) CBSE பாடத்திட்டமே கடைபிடிக்கப்படுவதால் இங்கேயுள்ள இந்திஅயப் பெற்றோர்களுக்கும் இதே பதட்டம் உண்டு. ஆறாம் வகுப்பு முதலே அநேகமாக எல்லாப் பாடங்களுக்கும் டியூஷனுக்கு அனுப்புகிறார்கள். சமயத்தில், ட்யூஷன் ஃபீஸ், பள்ளிக் கட்டணத்தைவிட அதிகம் வரும்!! :-((
ReplyDelete//எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்னும் எண்ணம், நம் இந்தியரின் இரத்தத்தில் ஊறியதா என்பது தெரியவில்லை.//
ReplyDeleteசரியாக சொன்னீங்க கீதா .இங்கேயும் இந்திய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஸ்பெஷல் டியூஷனுக்கேல்லாம் அனுப்புகிறார்கள் .நானும் ஆரம்பத்தில் சராசரி இந்திய தாயாக இருந்து என்னை மாற்றிக்கொண்டேன் .
மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றால் ... இங்கே ஒவ்வொரு டெர்ம் முடிவிலும்
STAR OF THE TERM மாணவர்களுக்கு கோப்பை தருவார்கள் இரண்டாம் வகுப்பு வரை என் மகள் தொடர்ந்து எடுத்தா .மூன்றாம் வகுப்பில் எடுக்கவில்லை நான் நேரே சென்று ஆசிரியரை கேட்டு விட்டேன்
அவர் சொன்னார் மூன்றாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்புவரை படிப்பில் பின்தங்கிய பிள்ளைகளுக்கே அப்பரிசு கிடைக்கும் .TO ENCOURAGE THOSE CHILDREN .இதனால் ஒரு குழந்தையின் மனதும் பாதிக்கபடாது .AND ASIAN MUMS DO NOT PRESS YOUR CHILDREN .அப்புறம் அவங்க சொன்னது வீட்டில் சந்தோஷமாக இருக்கும் எந்த பிள்ளையும் பள்ளியில் நன்கு கான்சன்றேட் செய்யும்.
இங்கே என் மகள் ஆறாம் வகுப்பு இந்த வருடம்ஆஸ்திரேலியா போலவே SATS இருக்கு .
டீச்சர் என்னிடம் பெற்றோர் சந்திப்பில் சொன்னது .பரீட்சை நேரம் மட்டும் சீக்கிரம் தூங்க வைக்கவும் .
இங்கே ரிப்போர்டில் தன் கல்வி ABILITY பற்றி பிள்ளைகளே எழுதுகிறார்கள் எவ்வளவு நல்ல விஷயம்
........
தொடருங்கள் .மிக அருமையாக எழுதுகிறீர்கள் .இன்னும் தெரிந்து கொள்ள ஆவல்
தேர்வினைப்பற்றிய ஒரு தேர்ந்த பதிவு. மாணவர்களுக்கு தேர்வுபயம் இல்லையென்றால் அவன் சிற்ப்பாவனாக வருவான். நாம்தான் அவனைப் பயமுறுத்துகிறோம்.
ReplyDelete45 நிமிடத் தேர்வு போதுமே ஒரு மாணவனின்
ReplyDeleteநுட்ப அறிவைச் சோதிக்க. தேர்வுக்கு முன்னதாக வீட்டிலேயே
ஒரு மாடல் எக்ஸாம் நடத்தும் பெற்றோரை
எல்லாம் நான் கண்டதுண்டு.
நொந்ததுண்டு. பதிவு தொடர்வது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலும் எம் பெற்றோர்கள் மாறவேயில்லை உங்களைப்போல ஒருசிலரைத் தவிர.எதஒயோ திணிக்கப் பார்க்கிறார்கள்.ஆனால் பிள்ளைகள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.
ReplyDeleteஇங்கு பிள்ளைகளின் தரம் தாமாகவே கணிக்கப்பட்டு அதன்வழி பாதை காட்டுகிறார்கள் ஆசிரியர்கள்.
நாளடைவிலேயே புள்ளிகள் விழுந்துகொண்டிருக்கின்றன்.பிள்ளைகள் எங்களைப்போல கஸ்டப்படுவதை நான் காணவில்லை.கொடுத்துவைத்தவர்கள் !
மிக விரிவாக அந்த நாட்டுக் கல்வி முறை பற்றி எழுதியிருப்பதைப் பாராட்டுகிறேன் . உங்கள் மாமனாரைப் போல எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் .
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteஇந்தத் தவறை இங்குள்ள பெற்றோர்கள் எல்லோருமே
மிகச் சரியாகச் செய்வோம்
அக்கறை என்கிற பெயரில்...
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
எதிலம் முதலாவதாக வரவேண்டும் என்ற எண்ணம் பிள்ளைகளை காட்டிலும் இந்திய பெற்றோர்களை தான் அதிகம் பாடாய் படுத்துகிறது. அவர்கள் அதற்காக பிள்ளைகளை எப்போதும் குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இது ஆபத்தான அபத்தம்.
ReplyDeleteஎல்லோருக்கும் பயனுள்ள நல்ல பதிவு.
இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் இப்படி நிதானமாக யோசித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை
ReplyDelete>>
கண்டிப்பாய் யோசித்திருக்க முடியாது. உங்கள் பிள்ளையை போலதான் என் பிள்ளையும் 60% மார்க் வாங்கிவாந்தாலும் விளையாட்டு, கராத்தே, கட்டுரைலாம் நல்லா இருக்கான். என்னால் புரிந்து கொண்டு அவனை அதிகம் சிரமமப்டுத்துவதில்லை. ஆனால் என் அப்பாவோ அவன் அக்காளுடன் சுட்டிக்காட்டி இன்னும் மார்க் வேணும்ம்னு சொல்றார். என்ன செய்ய
@ கலை,
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கலை.
@ மதுமதி,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பதிவை தமிழ்மணத்தில் என்னால் இணைக்க முடியவில்லை.தாங்கள் இணைத்து வாக்கிட்டதற்கு மிகவும் நன்றி.
@ சசிகலா,
ReplyDeleteவருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி சசிகலா.
@ ஆச்சி,
ReplyDeleteஆமாம் ஆச்சி. அந்த முறை மாறவேண்டும் என்பதுதான் பல தேர்ந்த கல்வியாளர்களின் விருப்பம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ ஆச்சி,
ReplyDelete\\thirumathi bs sridhar said...
உங்கள் பல பதிவுகளுக்கு என்னால் தமிழ்மணத்தில் வாக்கிட முடியவில்லை. ஏன்? \\
என் ப்ளாக்கையே தமிழ்மணத்தில் காணவில்லை. புதிதாகப் பதிவு செய்தால் முன்பே பதிவாகி இருக்கிறது என்று வருகிறது. ஒன்றுமே புரியவில்லை. மீண்டும் முயற்சி செய்யவேண்டும்.
@ கணேஷ்,
ReplyDeleteவருகைக்கும் அழகான விரிவானப் பின்னூட்டத்துக்கும் நன்றி கணேஷ். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் தந்தையரைவிடவும் தாய்மார்களிடமே அதிக அழுத்தமும் மன உளைச்சலும் காணப்படுகிறது. இதன்மூலம் குழந்தைகளையும் படுத்தி, தங்கள் உடல்நலனையும் அவர்கள் கெடுத்துக்கொள்கிறார்கள். மிகவும் வருத்தமான விஷயம் இது.
@ Seshadri e.s
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
@ கோவை2தில்லி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துக்கும் மிகவும் நன்றி.
@ இராஜராஜேஸ்வரி,
ReplyDeleteதங்கள் மனமார்ந்த பாராட்டுக்கும் நன்றிக்கும் வாழ்த்துக்கும் என் உளங்கனிந்த நன்றி மேடம்.
@ வை.கோபாலகிருஷ்ணன் சார்,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சார்.
@ G.M Balasubramaniam ஐயா,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் விரிவானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி
@ ஹூஸைனம்மா,
ReplyDeleteஅபுதாபியிலும் நம் நாட்டுப் பாடத்திட்டமே பின்பற்றப்படுவது வியப்பாக உள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.
@ ஏஞ்சலின்,
ReplyDeleteமிகவும் நல்ல விஷயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி ஏஞ்சலின். பள்ளிகள் இதுபோல் மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் நடந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் படிப்பில் ஆர்வமில்லாத மாணவர்களுக்கும் படிக்கும் ஆசை உண்டாகும்.
@ விச்சு,
ReplyDeleteஉண்மைதான். வெறும் தரையில் ஒருவனை நீளம் தாண்டச் சொல்லுங்கள். முடிந்தவரையில் அதிக தூரம் தாண்டுவான். இதையே அதனிலும் மிகவும் நீளம் குறைவாக உள்ள பள்ளத்தைத் தாண்டச் சொல்லுங்கள். பயத்தில் உதறலெடுத்துப் பாதியில் வீழ்ந்துவிடுவான். தேர்வுகளும் அப்படித்தான் குழந்தைகளைப் பயமுறுத்தி அதலபாதாளத்தில் விழ வைக்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விச்சு.
@ ஸ்ரவாணி,
ReplyDeleteவருகைக்கும் அழகானப்பின்னூட்டத்துக்கும் நன்றி ஸ்ரவாணி. சுருக்கமாக எழுதத்தான் நினைத்திருந்தேன். பலரும் தரும் ஊக்கத்தால் மேலும் எழுதும் ஆர்வம் உண்டாகிறது. தொடர் ஊக்கத்துக்கு நன்றி.
@ ஹேமா,
ReplyDeleteநம் இரத்தத்தில் ஊறியது என்றேனே… அதை அத்தனை விரைவில் மாற்ற முடியுமா? அயல்நாட்டில் குடியேறிய அடுத்தத் தலைமுறையினர் கொஞ்சம் மாறலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.
@ சொ. ஞானசம்பந்தன்,
ReplyDeleteதங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மட்டில்லாத மகிழ்ச்சி.
@ Ramani
ReplyDeleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.
@ தீபிகா,
ReplyDeleteநடைமுறையில் காணப்படும் பிரச்சனையை மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
@ ராஜி,
ReplyDeleteமற்றவர்களுடன் ஒப்பீடு கூடவே கூடாது ராஜி. அது நம்பிள்ளைகளுக்குள் என்றாலும் கூடாது. யார் என்ன சொன்னாலும் தாயின் பொறுப்பிலிருந்து நாம் விலகாமல் பிள்ளைகளைத் தேற்றவேண்டும். அதுவே அவர்களை சரியான பாதையில் செல்ல ஊக்குவிக்கும். அதைத்தான் நீங்களும் நானும் செய்கிறோம் என்பதை நினைத்துப் பெருமைப்படலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.
பயனுள்ள நல்ல பதிவு.
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காஞ்சனா.
Deleteமிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை. நம்நாட்டு கல்வித்துறை அதிகாரிகளின் கண்ணிலும், கவனத்திலும் விழவேண்டிய தகவல்.
ReplyDeleteஉங்களின் இக்கட்டுரையாக்க முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி சத்ரியன்.
ReplyDeleteகீதா & மற்றவர்கள் கவனத்திற்கு:
ReplyDeletehttp://penathal.blogspot.com/2012/03/2.html
இதுவும் கல்வி குறித்துப் பேசும் பதிவுதான்.
பயனுள்ள தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஹூஸைனம்மா. இப்போதுதான் சென்று படித்துக் கருத்திட்டு வந்தேன்.
Delete