16 January 2020

காட்டுத்தீ அழித்த கானுயிர்வளம்




கடந்த நான்கு மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் எரிந்துள்ள காடுகளின் பரப்பளவு சுமார் 8 மில்லியன் ஹெக்டேர்கள். அதீத வெப்பமும் காற்றும் இனிவரும் நாட்களில் இவ்வெண்ணை இன்னும் கூட்டக்கூடும். இக்கட்டுரையை எழுதும் வேளையில் ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 300 இடங்களுக்கு மேல் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் 140-க்கும் மேற்பட்ட இடங்கள். சில கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு எரிந்துகொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பெருந்தீயோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

HMAS Adelaide

ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதன் முறையாக Army, Navy, Airforce ஆகிய முப்படைகளிலிருந்தும் சுமார் 3,000 வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிக்கென ஆஸ்திரேலியாவின் மிகப்பெரியப் போர்க்கப்பலான HMAS Adelaide பலத்த முன்னேற்பாடுகளுடனும் தண்ணீர், உணவு, உடை, மருந்துகள், படுக்கை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடனும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 75,000 தன்னார்வல தீயணைப்பு வீரர்களைக் கொண்டு உலகிலேயே மிகப்பெரியது என்ற பெருமையை உடைய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தீயணைப்புத்துறை (New South Wales Rural Fire Service -NSW RFS) வீரர்களோடு அயல் மாநிலங்களிலிருந்தும், நியூசிலாந்து, சிங்கப்பூர், பாப்புவா நியூகினி, கனடா, கலிஃபோர்னியா ஆகிய அயல் நாடுகளிலிருந்தும் மாற்றுத் தொழில்நுட்பமும் தேர்ந்த அனுபவமும் கொண்ட ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் கைகோர்த்து களமிறங்கியுள்ளனர்.

பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தீ பரவிவிடாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடாக backburn எனப்படும் தீ அரண் உத்தி கையாளப்படுகிறது. RAFT எனப்படும் Remote Area Firefighting Teams தண்ணீரின் உதவியில்லாமல் தீயணைக்கும் முயற்சிகளை ஒரு பக்கம் மேற்கொண்டுவருகிறார்கள்.  எரிபொருளை நீக்கி தீப்பரவாது தடுக்கும் உத்தி இது.  குடியிருப்புப் பகுதியை ஒட்டிய காடுகளின் மத்தியில் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் இறங்கும் இவர்கள், கையோடு கொண்டுசென்றிருக்கும் மரமறுக்கும் கருவி, புல் அகற்றும் கருவி, ரம்பம் போன்ற கைக்கருவிகளைப் பயன்படுத்தி மரங்களை வெட்டி, காய்ந்து தீப்பற்றத் தயாராய் இருக்கும் புற்களை அகற்றி என அப்பகுதியை மிகுந்த பிரயத்தனத்துடன் சுத்தம் செய்து மேற்கொண்டு தீப்பரவ வழியிலாது தடுக்கிறார்கள். 

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் சுமார் பத்து சதவீதமளவு சமீபத்திய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ இதுவரை காவு வாங்கியவர்களின் எண்ணிக்கை 20. மேலும் 30 பேர் குறித்த தகவல் தெரியவில்லை. 1500 வீடுகளுக்கு மேல் தீக்கிரையாகியுள்ளன. வீடுகள் தவிர கடைகள், வணிக வளாகங்கள், பண்ணைத்தொழுவங்கள், கொட்டகைகள் என தீ தின்றவை ஏராளம். பலியான கால்நடைகளின் எண்ணிக்கையோ இலட்சக்கணக்கில்.

உயிர்ச்சேதம், உடமைச்சேதம், கால்நடை இழப்பு போன்ற நாட்டுவளமிழப்போடு காட்டுவளமிழப்பும் பெரிய அளவில் கவனிக்கப்பட வேண்டியது. காடுவாழ் உயிரினங்கள் பலவும் அழிவைத் தொட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த கானுயிர் அழிவு குறித்து உலக நாடுகள் பலவும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவிக்கக் காரணம் உள்ளது. ஆஸ்திரேலியாவின் கானுயிர் வளம் பிரத்தியேக சிறப்புடையது. அது குறித்த புரிதல் இருந்தால்தான் அவற்றின் இழப்பு குறித்த தீவிரத்தை நம்மால் உணர்ந்துகொள்ள இயலும். 


உலகில் வேறெங்கும் காண முடியாத அதிசய உயிரினங்கள் பலவற்றின் தாயகம் ஆஸ்திரேலியா. இம்மண்ணின் ஆதி உயிரினங்கள் அனைத்துமே ஏதோவொரு வகையில் விசித்திரமும் விநோதமும் நிறைந்தவை. பெரும்பாலான ஆஸ்திரேலிய விலங்கினங்களின் சிறப்பம்சம் அவை மார்சுபியல் என்பதுதான். மார்சுபியல் இனத்தில் குறுகிய கால கர்ப்பத்தில் பிறக்கும் முழுவளர்ச்சியற்றக் குட்டிகளை வளர்க்க பெண் விலங்குகளின் வயிற்றில் பை போன்ற அமைப்பு இருக்கும். கங்காரு, வல்லபி, கோவாலா, வாம்பேட், போசம் என ஆஸ்திரேலியாவில் 140-க்கும் மேற்பட்ட மார்சுபியல் விலங்குகள் உள்ளன.

மார்சுபியல் இனத்திலேயே தாவர உண்ணிகள், கொன்றுண்ணிகள்,  அனைத்துண்ணிகள் என பலவகை உண்டு. பாலூட்டிகளில் வழமையான பாலூட்டிகள், மோனோட்ரீம்ஸ் எனப்படும் முட்டையிடும் பாலூட்டிகள், பறக்கும் பாலூட்டிகள் என பல வகை உண்டு. முட்டையிட்டு அடைகாத்து குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் உயிரினங்களான பிளாட்டிபஸ்ஸும், எக்கிட்னாவும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அதிசயங்கள். விநோதமான பறவையினங்களும், விஷச் சிலந்திகளும் பாம்புகளும், கடற்பூங்காவென சிலாகிக்கப்படும் பவளப்பாறைத்திட்டுகளும், அவை சார்ந்து வாழும் அற்புத கடல்வாழ் உயிரிகளுமென ஆஸ்திரேலியா பல்லுயிர் வாழ்தன்மைக்கு பிரசித்தமானது.


ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் 800-க்கும் மேற்பட்ட பறவையினங்களில் பாதிக்கு மேல் உலகில் வேறெங்கும் காணவியலாத அபூர்வப் பறவைகள். 8 செ.மீ. நீளமே உள்ள வீபில் (weebil) எனப்படும் சின்னஞ்சிறிய தேன்சிட்டு முதல் 2 மீ. உயரமுள்ள பென்னம்பெரிய பறவைகளான காஸோவரி மற்றும் ஈமு வரை இங்கே உள்ளன.

உலகில் மிகக்கடுமையான விஷம் கொண்ட 25 பாம்பினங்களுள் 21-க்கு ஆஸ்திரேலியாதான் தாயகம். 140 வகை நிலம்வாழ் பாம்புகளுக்கும் 32 வகை கடற்பாம்புகளுக்கும் அல்லாது, சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய உப்புநீர் முதலைகளுக்கும் ஆஸ்திரேலியா பிரசித்தம்ஃப்ரில் கழுத்து ஓணான், நீலநாக்கு பல்லி, தாடி ஓணான், கோவான்னா என 700-க்கும் மேற்பட்ட ஊர்வன பட்டியலும், பரந்த கடற்புரத்தையும் பேரரண் பவளப்பாறைத் திட்டையும் சார்ந்துவாழும் கடல்வாழ் உயிரிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே போகும்.


உலகின் வேறெங்கும் காணப்படாத அதிசய உயிரினங்கள் உள்ள ஆஸ்திரேலியாவில்தான் உலகின் வேறெங்கும் காணப்படாத அளவுக்கு உயிரினங்களின் அழிவும் நடைபெற்றுள்ளது. இலட்சக்கணக்கான வருடங்களாக ஆஸ்திரேலிய மண்ணில் நிலைகொண்டிருந்த பல உயிரினங்கள் ஐரோப்பியக் குடியேற்றத்துக்குப் பிறகு முற்றிலுமாய் அழிந்துவிட்ட இனமாகிவிட்டன. கடந்த 200 ஆண்டுகளில்  அழிவுக்காளானவை என்று 24 பறவையினங்கள், 7 தவளையினங்கள், 27 விலங்கினங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது பன்னாட்டு இயற்கைநல பாதுகாப்பு சங்கம்.

நரி, நாய், முயல், ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை, குதிரை, பன்றி, கோழி, வாத்து, மைனா என அறிந்தும் அறியாமலும் அந்நிய நாடுகளிலிருந்து கொண்டுவந்து அறிமுகப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பல, சொந்த மண்ணின் உயிரினங்களுக்கே உலை வைக்குமளவுக்குப் பல்கிப் பெருகியிருப்பது சூழல் சமன்பாட்டுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. கூடவே புவி வெப்பமயமாதல், சூழல் சீர்கேடு, காடுகள் அழிப்பு, இரசாயன உரங்களின் பயன்பாடு, மனிதனின் சுயநலம், பொறுப்பற்ற தன்மை போன்ற பல காரணங்களால் இன்னும் கூட ஏராளமான உயிரினங்கள் அழியக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

அழிந்துவரும் விலங்கினங்களைப் பாதுகாக்க பெருமுயற்சி மேற்கொண்டு வரும் இவ்வேளையில் சமீபத்திய காட்டுத்தீக்களினால் சுமார் 480 மில்லியன் விலங்கு, பறவை, ஊர்வன உள்ளிட்ட கானுயிர்கள்  அழிந்திருக்கலாம் என்று Professor Chris Dickman விடுத்துள்ள அறிக்கை நம்மை திடுக்கிடச் செய்வதோடு ஆஸ்திரேலியாவின் சூழலியல் மாறுபாடு குறித்த அச்சத்தையும் உண்டாக்குகிறது. காடுகள் எரிந்துகொண்டிருக்கும் வேளையில் இக்கணக்கெடுப்பு எப்படி சாத்தியம்? இதில் எந்த அளவு துல்லியம் இருக்கமுடியும்?

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு WWF (World Wild Fund for Nature)க்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இப்புள்ளிவிவரம் பகிரப்பட்டுள்ளது. காடுகள் அழிவதன் மூலம் கானுயிர்கள் அழிந்துவருவதை முன்னிட்டு கானுயிர் வாழ்பரப்பு குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையின் இணை ஆக்குநரும் ஆஸ்திரேலிய உயிரினங்கள் குறித்த சூழலியல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மையில் சுமார் 30 வருடங்கள் அனுபவசாலியுமான  Professor Chris Dickman  குறிப்பிடுவதன் பின்னணியில் இருக்கும் சாத்தியக்கூறுகள் ஏற்கத்தக்கவை. இக்கணக்கெடுப்பில் விலங்கினம், பறவையினம், ஊர்வனவினம் மட்டுமே உள்ளன. பூச்சியினம், தவளையினம், வௌவாலினம் குறித்த அழிவு கணக்கிடப்படவில்லை. எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால் இழப்பின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவையாக இருக்கக்கூடும். மேலும் இம்மதிப்பீடு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தினுடையது  மட்டுமே.

ஒரு ஹெக்டேர் (பத்தாயிரம் சதுர மீட்டர்கள்) நிலப்பரப்பில் சுமார் 18 விலங்குகளும் 20 பறவைகளும் 130 ஊர்வனவும் வாழ்வதாக முந்தைய கானுயிர் கணக்கெடுப்புகள் தந்திருக்கும் புள்ளி விவரத்தைக் கொண்டும் அன்றைய தேதி வரை எரிந்துள்ள காடுகளின் மொத்தப் பரப்பளவைக் கொண்டும் அழிந்துள்ள கானுயிரிகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. தீப்பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தற்போது இவ்வெண்ணிக்கை இன்னும் கூடுதலாய் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  அதே சமயம் பூமிக்கடியில் வளை தோண்டி வாழும் பல விலங்கினங்களும் ஊர்வனவும் தீயிடமிருந்து தப்பி பதுங்கி உயிரோடிருக்க வாய்ப்புண்டு என்ற குறைந்த பட்ச நம்பிக்கையும் உள்ளது.
கங்காரு, ஈமு போன்ற அளவில் பெரிய உயிரினங்களுக்கு ஓரளவாவது தப்பித்துச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருந்தும் எரிந்துமுடிந்த காடுகளில் ஆங்காங்கே கரிக்கட்டையாய் கங்காருகளின் சடலங்கள் காணக்கிடைக்கின்றன. கோவாலா போன்ற மரத்தில் வாழும் உயிரினங்களுக்கும் சிற்றுயிர்களுக்கும் பறவைகளுக்கும் காட்டுத்தீ கோர முடிவைத்தான் தந்திருக்கிறது. தீயில் சிக்கித் தப்பிய விலங்குகள் உடல் முழுக்க தீக்காயங்களோடு வாழப்போராடி முடியாமல் மடியும் காட்சி அவலம். 

கங்காரு தீவில் மட்டுமே வசிக்கும் Dunnart என்ற சுண்டெலி அளவிலான சிறு மார்சுபியல் விலங்கினமும் தெற்காஸ்திரேலியத் தீவொன்றில் வாழ்கின்ற Southern brown bandicoot  இனமும் Yellow bellied glider, Greater glider, Pygmy possum போன்ற மேலும் பல அரிய உயிரினங்களும் காட்டுத் தீயினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. 



ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் முக்கியமானவை கோவாலாக்கள்.  நகர விஸ்தரிப்பு, காடழிப்பு, chlamydia என்னும்  பால்நோய்த்தொற்று, வாகனவிபத்து, நாய், நரிகளால் ஏற்படும் உயிரிழப்பு என பல்வேறு காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இச்சூழல் அபாயத்தைக் கருத்திற் கொண்டு கோவாலாக்களுக்கென சிறப்பு சரணாலயங்கள், பாதுகாப்பகங்கள், மருத்துவமனைகள் போன்றவை அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் இனம் பெருகுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் காட்டுத்தீயால் கடந்த நான்கு மாதங்களில் நியூ சவுத் வேல்ஸில் மட்டும் சுமார் 8000 கோவாலாக்கள் (30%) இறந்து போயிருப்பதாக வரும் கணிப்புகள் பெருங்கவலை அளிக்கின்றன.  

கோவாலாக்கள் பொதுவாக தண்ணீர் குடிக்காத விலங்குகள். அவை தங்களுக்குத் தேவையான நீர்ச்சத்தை தாங்கள் உண்ணும்  யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே பெற்றுக்கொள்கின்றன. ஆனால் தீப்பற்றிய காடுகளில் மரங்களை இழந்து, பதறித்திரியும் கோவாலாக்கள், காப்பாற்றப்பட்டு தண்ணீர் புகட்டப்படுகின்றன. தண்ணீரை மாய்ந்து மாய்ந்து அவை குடிக்கும் காட்சிகளே சொல்லிவிடும், நாட்கணக்காக உணவின்றி நீர்ச்சத்து குறைந்துபோய் அவை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றன என்பதை. கோவாலாக்கள் காப்பாற்றப்பட்டாலும் அவற்றின் மனப்பதற்றம் குறைக்கப்பட்டு, உடற்காயங்கள் ஆற்றப்பட்டாலும் புதிய வனத்தில் புதிய சூழலில் அவற்றை வாழ்விப்பதென்பது பெரும் சவால்.

தீயை அணைப்பதொரு பக்கம் இருக்க, நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, எரிந்து கருகிய காடுகளிலும் பண்ணை நிலங்களிலும் ஆங்காங்கே கிடக்கும் இறந்து அழுகிய விலங்குடல்களை எரிப்பதும் புதைப்பதும், எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்று பயங்காட்டியபடி சாலையோரத்தில் காட்சியளிக்கும் எரிந்து கரிக்கட்டையான நெடுமரங்களை அப்புறப்படுத்துவதுமான தூய்மைப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தற்போது தீயிடமிருந்து தப்பியுள்ள உயிரினங்களுக்கு உணவின்மையும் உறைவிடமின்மையும் இனிவரும் நாளில் பெரும் பிரச்சனையாகக்கூடும். போதாக்குறைக்கு காடற்ற, மரங்களற்ற திறந்தவெளிகள், நரிகளுக்கும் காட்டுப்பூனைகளுக்கும் நல்ல வேட்டைக்களமாக மாறிவிடும். உணவுச்சங்கிலியின் பல கண்ணிகள் ஆங்காங்கே அறுந்துபோய் உள்ள இச்சூழலில் விரைவிலேயே மற்றுமொரு கானுயிர் கணக்கெடுப்பின் தேவையும் அது சார்ந்த முன்னெடுப்புகளும் தொடருழைப்பும் காத்திருக்கின்றன.  சூழல் சமன்பாடு சீர்குலைந்தால் வரக்கூடிய ஆபத்து இதனினும் பேராபத்தாய் இருக்கும் என்பதை உணர்ந்து இனியேனும் பொறுப்பாய் மனிதகுலம் செயல்படவேண்டிய தருணமிது.   


(ஜனவரி, 2020 எதிரொலி பத்திரிகையில் நடுப்பக்கக் கட்டுரையாக வெளியானது)


8 January 2020

தீக்குளித்த காடுகளால் புழுதி பூசிய சிட்னி




அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்துதணிந்தது காடுதழல் வீரத்திற்
குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ

என்று பாடினான் பாரதி. இப்படியாகத்தானே ஆண்டுதோறும் காட்டிடை மனிதர் தயவுடனோ தயவின்றியோ பொரிந்து வளர்ந்த அக்கினிக்குஞ்சுகளால் அழிந்தொழிகின்றன ஆஸ்திரேலியக் காடுகள்.  எப்போதும் கோடையில் தன் கோரம் காட்டும் bush fire எனப்படும் காட்டுத்தீ இவ்வருடம் (2019) வசந்தகாலத்தின் ஆரம்பத்திலேயே வருகைப்பதிவு செய்துவிட்டது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் இதுவரை எரிந்த, எரிந்துகொண்டிருக்கும் நிலப்பரப்பு மட்டுமே சுமார் 2.5 மில்லியன் ஹெக்டேருக்கும் மேல்செப்டம்பர் ஆறாம் தேதி நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் வடபகுதிகளில் ஆரம்பித்த காட்டுத்தீ அக்டோபர் இறுதி வரை எரிந்து இரு மனித உயிர்களையும் 43 வீடுகளையும் காவு கொண்டு அடங்கியது. 320,000 ஹெக்டேர் நிலப்பரப்புக்கும் மேல் எரிந்துபோயுள்ள வுல்லமி தேசியப் பூங்காவில். தற்போது காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நவம்பர் 13 அன்று கிரேட்டர் சிட்னி பகுதியில் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட இயலாமல் வரலாற்றில் முதன் முறையாக அப்பகுதி பேரபாயப் பகுதி என அறிவிக்கப்பட்டது. நியூசௌத்வேல்ஸ், குவீன்ஸ்லாந்து உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் பற்றிய அநேக காட்டுத்தீக்களால் கடந்த மூன்று மாதங்களில் 684 வீடுகளும், 2000-க்கு மேற்பட்ட கட்டடங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன. 250 வீடுகளும் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், பண்ணை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற கால்நடைகள் மடிந்துள்ளன. காட்டுயிர்களுக்கு கணக்கில்லை.

காட்டுத்தீக்களை அணைக்க தீயணைப்பு வீரர்களோடு ஏராளமான தன்னார்வலத் தொண்டர்களும் களமிறங்கியுள்ளனர். விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாது நியூசிலாந்து போன்ற அண்டை நாட்டிலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் நியூ சௌத்வேல்ஸ் மாநில தீயணைப்புத் துறையோடு கைகோர்த்துள்ளனர்.  ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களின் மூலம் தீ எரியும் பகுதிகளில் தண்ணீர் பொழிவிக்கப்படுகிறது. தீப்பற்றுதலைத் தடுக்கும் இரசாயத்துகள் தூவப்படுகிறது.  தீப்பற்ற வாய்ப்புள்ள பல குடியிருப்புப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. திறந்தவெளி தீப்பயன்பாட்டுக்கான தடையுத்தரவு மாநிலம் முழுவதும் அமலில் உள்ளது. மரம் அறுக்கும், புல் வெட்டும் இயந்திரங்கள் உருவாக்கும் சிறு தீப்பொறியும் கூட காட்டுத்தீ உருவாக்கும் என்பதால் தீ உருவாக வாய்ப்புள்ள பகுதிகளில் இயந்திரப் பயன்பாடு, பண்டிகைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறும் வானவேடிக்கைகள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.

காடுகளின் அழிவால் காட்டுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன எனினும்  யூகலிப்டஸ் காடுகளின் அழிவால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளவை கோவாலாக்கள்.  பிற விலங்குகளுக்கு தப்பியோடவாவது ஒரு வழி உண்டு.  யூகலிப்டஸ் மரங்களின் உச்சியில் வாழும் கோவாலாக்கள் மரங்களிலிருந்து இறங்கித் தப்பிப்பதற்குள் மிக எளிதாக காட்டுத்தீக்கு இரையாகிவிடுகின்றன.  மேலும் இவை தப்பிக்கும் முயற்சியாக மரத்தின் உச்சிக்கிளைகளை தஞ்சமடைவதால் உயிரிழப்பு உறுதியாகிவிடுகிறது. பல தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் முயற்சியால் தீக்காயங்களோடு பல கோவாலாக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.  சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண்மணி தீக்காயமுற்ற கோவாலா ஒன்றினை தன் மேலாடையைப் போர்த்துக் காப்பாற்றிக் கொண்டுவந்த காணொளி பரவலானது. Ellenborough Lewis எனப் பெயரிடப்பட்ட அக்கோவாலாவைக் காப்பாற்ற இயலாமற் போனது துரதிர்ஷ்டமே.  அதைப் போல இன்னும் எத்தனை எத்தனையோ கோவாலாக்கள் உயிரிழந்துள்ளன.  அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் ஏற்கனவே இடம்பிடித்துள்ள கோவாலாக்களின் இன்றைய நிலைமை கவலைக்குரியதாக இருப்பதால் அவற்றின் எண்ணிக்கை குறித்த மீள் கணக்கெடுப்பு தற்போது துவங்கப்பட்டுள்ளது.  பாதிப்புக்காளான பிற காடு வாழ் உயிரிகள் குறித்த ஆய்வும் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ உருவாகும் இடங்கள் காய்ந்த புல்வெளிகளும், வறண்ட யூகலிப்டஸ் மரக்காடுகளும்தான்.  ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் நிலவும் அதீத வெப்பமும் குறைந்த ஈரப்பதமும் வறட்சியான சூழலும் காட்டுத்தீ உருவாவதற்குப் பெரிதும் ஏதுவான காரணிகள். புவி வெப்பமயமாதலும் தற்போது முக்கியக் காரணியாக உள்ளது.  யூகலிப்டஸ் மரங்களின் தைலச்சாறு காட்டுத்தீக்கு எரிசக்தியைக் கொடுப்பதும், பலத்த வெப்பக்காற்று வீசுவதும் காட்டுத்தீ பரவப் போதுமானவை. சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட மின்னல்களும் நூற்றுக்கணக்கான புதிய காட்டுத்தீக்களை உருவாக்கியுள்ளன.  

காட்டுத்தீயினை உருவாக்கவும் பரப்பவும் இவ்வளவு காரணங்கள் போதாதென்று வலிந்து வைக்கப்படும் கொள்ளிகள் ஒரு பக்கம் பெரிய அளவில் காட்டுத்தீ உருவாகக் காரணமாக உள்ளன.  ஆம். ஆஸ்திரேலியக் காட்டுத்தீக்களுள் 15% மட்டும்தான் இயற்கையாக உருவாகி எரிபவை என்றும் மற்றைய 85% மனிதர்களால் அறிந்தோ அறியாமலோ உண்டாக்கப்பட்டவை என்றும் புலனாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையைத் தானே சொரிந்துகொள்வதைப் போல தங்கள் இனமழிய தாங்களே உலை வைத்துக்கொண்டுவிடுகின்றனர் சில அறிவிலிகள். புகைத்துமுடித்தபின் அணைக்காமல் வீதியோரம் விட்டெறியப்படும் சிறு  சிகரெட் துண்டுகளே பல வனத்தீக்களுக்கு ஆரம்பப்புள்ளிகளாம். குடிகாரர்கள், போதை மருந்து உபயோகிப்பவர்கள், தினவெடுத்த இளைஞர்கள், உறவுச்சிக்கல், குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் மனச்சிதைவுக்கு ஆளானோர், விளையாட்டுப் பிள்ளைகள் என பலராலும் பல இடங்களில் காட்டுத்தீக்கள் உருவாகின்றன. 

காடுகள்தானே எரிகின்றன, நமக்கென்ன என்று நகரவாசிகள் யாரும் கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார முடியாதபடி நாடெங்கும், நகரமெங்கும் எதிரொலிக்கிறது அதன் பாதிப்பு. கடந்த சில வாரங்களாக நியூசௌத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளும் புகையால் சூழப்பட்டிருக்கும் சூழலில்  தற்போது சில நாட்களாக சாம்பலும் கரித்துகள்களும் காற்றோடு கலந்து பெரும் சுவாசப் பிரச்சனைகளை உண்டுபண்ணிக்கொண்டிருக்கின்றன. ஐம்பது கி.மீ.க்கு அப்பால் எரிந்துகொண்டிருக்கும் ப்ளூ மவுண்டென்ஸ் எனப்படும் நீல மலைகளிலிருந்து பறந்து வந்து என் வீட்டு வாயிலைத் தஞ்சம் அடைந்திருக்கும்  எரிந்துகருகிய யூகலிப்டஸ் இலைகள் என்னிடம் சொல்ல வரும் சேதி  என்னவாக இருக்கும்?

இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் வீட்டுக்கு வெளியில் வெயில் 42 டிகிரியைத் தொட்டிருக்கிறது. பாலை போல் தகிக்கும் இந்த நண்பகலில் அண்டை வீடும் புலப்படாவண்ணம் காணுமிடமெல்லாம் சூழ்ந்திருக்கும் வெண்புகை மண்டலத்தை, கண்ணாடித்தடுப்பின் உள்ளிருந்து பார்க்கையில் மார்கழி மாதத்தின் அதிகாலைப் பனிமூட்டம் போல அப்படியொரு காட்சி மயக்கம்.  சுவாசப்பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் திரிவதென்பது சாத்தியமற்றுப் போய்விட்டது. காற்றில் கலந்திருக்கும் புகைமாசுவின் அளவு ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 35 முதல் 40 சிகரட்களை புகைப்பதற்கு சமம் என்று சுகாதார மையங்கள் எச்சரிக்கின்றன. சுவாசக்கோளாறு உண்டாக்கும் இப்புகை மாசு முற்றிலும் ஒழிவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகலாம். இக்கோடை கொண்டுவரக்கூடிய கனமழையே அனைத்துக்குமான தீர்வென்று நம்பி இருக்கையில் கோடை மழையின் அளவு இவ்வருடமும் குறையுமென்னும் வானிலை ஆய்வு மைய அறிவிப்புகள் கலக்கமூட்டுகின்றன.

தானே எரிந்து தானே அணைவது வனத்தின் இயல்பு. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப காடுகள் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு ஒருமுறை தம்மைத் தாமே அழித்துப் புத்துயிர் பெறுவது இயற்கை. ஆஸ்திரேலியக் காடுகளின் சிறப்பம்சம், காட்டுத்தீக்குப் பிறகான சில மாதங்களிலேயே உயிர்க்கும் தன்மை. இன்னும் சொல்லப்போனால் பாங்சியா போன்ற ஆஸ்திரேலியத் தாவரங்களின் கடின மேலோடு கொண்ட விதைகள் காட்டுத்தீயால் தூண்டப்பட்டு வெடிப்பதன் மூலம் புதிய தாவரங்கள் தோன்றுகின்றன. புத்தம்புதியக் காட்டினை உருவாக்க முயலும் இயற்கையின் உத்தி இது. எரிந்த காட்டின் சாம்பலுரம் புதிய காட்டின் அடியுரமாகும். ஆனால் பருவந்தவறிய மழை, புவி வெப்பமயமாதல், மிகைக் கரியமிலவாயு வெளிப்பாடு போன்ற பல்வேறு புதிய காரணிகளால் இயற்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. இப்போதும் கூட புவி வெப்பம் கூடுவது குறித்த ஆய்வுகள் அனைத்தும் கண்கட்டென்று சொல்லி மறுப்பாரும் உண்டு.  பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதென்று எண்ணுமாம். பூனைகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கட்டும். நாம் விழித்துக்கொண்டு செயல்படுவோம். நாம் வாழும் இப்புவியைக் காப்போம்.  வரும் தலைமுறைகளும் வாழ வழிசெய்வோம்.

(டிசம்பர் மாத 'எதிரொலி' பத்திரிகையில் வெளியான என் கட்டுரை)

5 January 2020

ஜெ(எ)ன் கிறுக்கல்கள்

கிறுக்கல்களோடு இவ்வருடத்தை இனிதே துவங்குகிறேன். 😀
Zentangles, Zen doodle art என்றெல்லாம் குறிப்பிடப்படும் 
ஜென் கிறுக்கலோவியங்கள் மனத்துக்கு அமைதியும் உற்சாகமும் தருபவை.
மனம்போன போக்கில் ஆனால் ஒழுங்கும் சிரத்தையும் கொண்டு வரையப்படுபவை. 
தேவையற்ற சிந்தனைகளைப் புறந்தள்ளி 
தியானம் போல மனத்தை ஒருமுகப்படுத்த வல்லவை. 

கடந்த மூன்று மாதங்களாக நான் அவ்வப்போது வரைந்த 
ஜென் கிறுக்கலோவியங்களை 
என் சேமிப்பாகவும் நீங்கள் ரசிக்கவுமாய் 
இங்கே தொகுப்பாக்குகிறேன்.  


படம் 1

படம் 2

படம் 3


படம் 4

படம் 5

படம் 6


படம் 7

படம் 8

படம் 9

படம் 10

ஓவியங்களை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். 
அனைவருக்கும் அன்பும் நன்றியும்
 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்.

16 December 2019

கான்பெராவின் வசந்தகாலத் திருவிழா



வசந்தகாலம் என்றாலே காணுமிடமெல்லாம் களைகட்டிவிடும். வண்ணவண்ணப் பூக்கள் எங்கணும் மலர்ந்து கண்ணைக் கவரும். வாசம் பரப்பி மகிழ்விக்கும். சிந்தையை குளிர்விக்கும். தோட்டத்தின் ஒற்றைப்பூவே உளம் மயக்கும் என்னும்போது ஒரு மில்லியன் பூக்களை ஒரே இடத்தில் காணநேரிட்டால்? தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரிய மலர்க்காட்சி என்று சொல்லப்படுகிற கான்பராவின் Floriade திருவிழாவில்தான் அத்தகு அரிய காட்சியைக் காணமுடியும். ஆண்டுதோறும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஒருமாத காலத்துக்கு நடைபெறும் இந்த வசந்தகாலக் கொண்டாட்டம் எப்போது ஆரம்பித்தது?

ஆஸ்திரேலியாவின் தலைநகராக கான்பெரா உருவாக்கப்பட்டதன் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக ஏதேனும் புதுமை செய்ய எண்ணியபோது தோன்றியதுதான் இந்த மலர்க்காட்சி கருத்துப்படிவம். 

Burley Griffin ஏரிக்கரையில் அமைந்திருக்கும் காமன்வெல்த் பூங்காவில் அதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. நெதர்லாந்தின் உலகப்புகழ் வாய்ந்த Keukenhof மலர்த்தோட்டத்தை அடிப்படையாய்க் கொண்டு இங்கும் அது போலவே உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் செயல்பாட்டாளாரான நிலவடிவமைப்பு வல்லுநர் Christiaan Slotemaked de Bruine மேற்பார்வையில் சிற்பங்கள், ஒளிவிளக்குகள், பூப்படுகைகள், இசைமேடைகள் என ஒவ்வொன்றாய் உருவாக்கப்பட்டன. 1988-ல் முறையாய் துவங்கப்பட்ட மலர்த்திருவிழா ஆண்டுதோறும் புதிய புதிய மையக்கருக்களைக் கொண்டு பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்துவருகிறது.      

32-வது மலர்த்திருவிழாவான நடப்பு ஆண்டின் (2019) theme அதாவது கருப்பொருள் world in Bloom. மையப்பொருளுக்கேற்றபடி Tulips, Poppies, Daffodils, Pansies, Chrysanthemum என வகைவகையாக வண்ணவண்ணப்பூக்கள் கண்ணைப் பறித்தாலும் மைய ஈர்ப்பென்னவோ துலிப் மலர்கள்தான். துலிப் மலர்களுள்ளும்தான் எத்தனை வகை… எத்தனை வண்ணம். 

சில பூக்களை ஒற்றையாய்ப் பார்த்தாலே வசீகரிக்கும். சில பூக்களைக் கொத்தாய்ப் பார்க்க அழகு. ஆனால் துலிப் பூக்களை வயலாய்ப் பார்ப்பதே பேரழகு. கருப்பு வண்ண பான்சி மலர்கள், அடுக்கிதழ் துலிப் மலர்கள், ஆஸ்திரேலியத் தேனீக்கள் போன்றவை இன்னபிற சிறப்பம்சங்கள். தோட்டத்துக் குள்ளர்கள் இன்னொரு சுவாரசியமான ஈர்ப்பு. வயதுவாரியாக குழந்தைகளும் பெரியவர்களும் வண்ணம் அடித்து அழகுபடுத்திய குள்ளர்கள் வரிசை கட்டி நின்று வசீகரிக்கிறார்கள்.    

Ferris wheel எனப்படும் ராட்சத ராட்டினம் தவிர்க்கவியலாத சிறப்பம்சம். சுமார் 32 மீ. உயரத்திலிருந்து பூங்காவின் மொத்தப் பரப்பையும் பூப்படுகைகளின் அழகையும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கான்பெராவையுமே பார்த்து உவக்கலாம். 

பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் இசை, நடனம், கலைகள், உடைகள், கலைப்பொருட்கள் மற்றும் தோட்ட உபகரணங்கள் விற்பனை நிலையங்கள், தோட்டக்கலைப் பயிற்சி வகுப்புகள், நாய்க் கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு, மதுபானம் என பன்முனைக் கொண்டாட்டத்தின் உச்சம் இத்திருவிழா.   

பகல் பொழுதில் வண்ண வண்ணப் பூக்கள் கண்பறிக்கின்றன என்றால் இரவுப்பொழுதில் வண்ண வண்ண ஒளியலங்காரங்கள் வாய்பிளக்கவைக்கின்றன. பகலின் தோற்றத்தை முற்றிலுமாய் மாற்றி வேறொரு உலகைக் கண்முன் விரிக்கின்றது Nightfest எனப்படும் இரவொளித்திருவிழா. கிட்டத்தட்ட சிட்னியின் விவித் திருவிழாவை ஒத்து பூங்கா முழுவதும் வண்ண ஒளிவீச்சுகள் குழைந்தடிக்கின்றன.

ஆண்டுதோறும் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் இத்திருவிழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்கின்றனர். காணுமிடமெல்லாம் மலர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு மனிதத் தலைகள். புகைப்படக் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்றால் தற்படக் கலைஞர்களுக்கோ பெருங்கொண்டாட்டம்.

("எதிரொலி" நவம்பர் மாதப் பத்திரிகையில் வெளியான என் குறுங்கட்டுரை)

கான்பெரா மலர்த்திருவிழாவில் நான் எடுத்த ஒளிப்படங்களுள் சில கீழே. 


(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

(12)

(13)

(14)

(15)

(16)

(17)

(18)

(19)

(20)

(21)

(22)

(23)

(24)

(25)

(26)

(27)

(28)

(29)

(30)
மீதமுள்ள படங்கள் வேறொரு பதிவாக வெளியாகும். 
ரசித்த அனைவருக்கும் அன்பும் நன்றியும். 


5 December 2019

மீசைக்கரண்டி


மேசைக்கரண்டி தெரியும். இதென்ன மீசைக்கரண்டி? இரண்டில் ஏதாவது ஒன்றுதான் சாத்தியம் என்ற சூழலில் இரண்டுக்குமே ஆசைப்பட்டால், கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா என்ற சொலவடையைப் பயன்படுத்துவோம்.

உண்மையிலேயே ஒருவருக்கு கூழ் குடிக்கவும் ஆசையிருந்து மீசை வளர்க்கவும் ஆசையிருந்தால் என்ன செய்வார்? மீசையை இடக்கையால் லேசாக ஒதுக்கிவிட்டுக் குடிப்பார்.

கொஞ்சம் சோம்பேறிகளாகவோ அல்லது பெரும் செல்வர்களாகவோ அல்லது இரண்டுமாகவோ இருந்தால்? ஸ்பெஷலாக ஒரு ஸ்பூன் தயாரிக்கப்பட்டுவிடும், ஸ்பூனே மீசை மயிரை ஒதுக்கித் தந்துவிடும்படி.

19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் மீசை வளர்ப்பில் பெரு மோகம் உருவான காலகட்டத்தில், அரசர்கள் பிரபுக்கள் போன்ற உயர்மட்டத் தலைகள் சூப் குடிக்கும்போது ஏற்பட்ட சிரமத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதானாம் இந்த மீசைக்கரண்டி. 😄😄😄



இத்தகவல் இம்மாத 'காக்கைச் சிறகினிலே' இதழில் வெளிவந்துள்ளது. காக்கை குழுமத்துக்கு மனமார்ந்த நன்றி.