வயதிலும் அனுபவத்திலும்
மூத்தவரான நம் பதிவுலகத் தோழமையான ஜிஎம் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் உறவுகள் சார்ந்த
பதிவொன்றுக்கு தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய அனுபவங்களும் சிந்தனைகளும்
என்னை மிகவும் கவர்பவை. அவருடைய நிதானமான அழுத்தமான எண்ணப்பகிர்வுகளும், கருத்துக்களை
மிகத்துல்லியமாக எழுத்தாக்கும் திறமும் என்னை வியப்பில் ஆழ்த்துபவை.
உறவுகள் என்ற தலைப்பில்
சமீபத்தில் அவர் எழுதிய பதிவின் தொடர்ச்சியாக சில பெண் பதிவர்களின் கருத்துகளைக் கேட்டு
எழுதியுள்ளார். அப்பெண் பதிவர்களுள் நானும் ஒருத்தி என்பதறிந்து வியந்தேன். ஜிஎம்பி
ஐயா அவர்கள் எங்களை பெண் பதிவர்களின் பிரதிநிதிகளாகக் கருத்துக்களைக் கூறுவார்கள் என்று
எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண் பதிவர்களின் மட்டுமல்ல பெண்களின் பிரதிநிதியாகவும்
இந்த விஷயத்தில் கருத்தளிக்க இயலுமா என்பது சந்தேகமே. ஏனெனில் இதுபோன்ற சிந்தனைகளிலெல்லாம்
இதுவரை நான் ஈடுபட்டதே இல்லை. வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு வாழுந்தன்மை உடையவள்
நான்.
என்னைப் பொறுத்தவரை
கணவன் மனைவியாகட்டும், பெற்றோர் பிள்ளைகளாகட்டும், உடன்பிறந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும்,
மற்ற உறவுகளாகட்டும்… எந்த உறவுநிலையையும் இது இப்படிதான் என்ற வரையறைக்குள் கொண்டுவருவது
அசாத்தியம். உறவுகள் நீட்டிப்பதும் வெட்டுப்படுவதும் அவரவர் வளர்ந்த விதம், வாழும்
சூழல், தேவைகள், சூழ்ந்துள்ள மற்ற உறவுகளின் இயல்பு போன்ற பல காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.
ஒரு குடும்பக்
கட்டமைப்பில் பெண் ஆணை ஆட்டுவிப்பதோ ஆண் பெண்ணை அடிமைப்படுத்துவதோ அவரவர் தனிப்பட்ட
குணநலன் சார்ந்த நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடிகிறதே தவிர பொதுவான கருத்தாக கொள்ளமுடியவில்லை.
பெரும்பான்மை என்று சொன்னால் பல இடங்களில் பெண்கள் ஆணைச் சார்ந்து வாழும் நிலையிலும்
சரி, சாராத நிலையிலும் சரி.. ஏதோ ஒரு விதத்தில் அல்லல்படுவதையும் அடிமைப்படுவதையும்
அறிந்தேயிருக்கிறோம். உரிய மரியாதை கிட்டாமல் உதாசீனப்படுத்தப் படுவதோடு இன்னும் சில
பெண்கள் வெளியில் சொல்லமுடியாத வேதனையை அனுபவிப்பதுமான பல வாழ்க்கை அனுபவங்களை கண்டும்
கேட்டும் அறிந்திருக்கிறோம். சில இடங்களில் நிலைமை தலைகீழாக இருப்பதும் நமக்குத் தெரியும்.
பெற்ற தாயுடனும் பேசும் உரிமை மறுக்கப்பட்டு வாழும் ஆண்களின் மனக்குமுறலும் வேதனையும்
வெளிப்படக் கேட்டு வருந்தியிருக்கிறோம். அதனால் உறவுகள் தொடர்பறுந்து போவதன் ஒட்டுமொத்தப்
பழியைத் தூக்கி பெண்களின் மீதோ அல்லது ஆண்களின் மீதோ சுமத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.
உறவுகள் விட்டுப்போவதற்கு
மாறிவரும் வாழ்க்கைச்சூழல் ஒரு முக்கியக் காரணம். அவசர யுகம் எந்திரமயம், உலகமயமாக்கல்
என்றெல்லாம் மாறிவரும் சூழலில் எந்த உறவையும் தொடர்பெல்லைக்குள் தக்கவைத்துக்கொள்ள
நம்மால் முடியவில்லை. நின்று நிதானித்துப் பேசவும் நமக்கு நேரமில்லை… அல்லது நேரமில்லாதது
போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறோம். உண்மையில் சோம்பேறிகளாகிக் கொண்டு வருகிறோம்.
பட்டனை அழுத்தவும் அலுப்புப் பட்டு தொடுதிரைகளைத் தொட்டுத் தடவி காரியமாற்றிக் கொண்டிருக்கும்
காலமிது.
நேரமில்லை என்பது
ஒரு சாக்கு. நேரமில்லாமலா நெடுந்தொடர்களிலும் முகநூலிலும் இணையத்திலும் எங்கோ ஒரு முகந்தெரியாத
நண்பருடன் அரட்டை அடிப்பதிலும் நேரத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறோம். அவசரம் அவசரம்
என்று எதிலும் நிற்க நேரமில்லாமல் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும் நாம்தான் சினிமா,
அரசியல், மதம் சார்ந்த பல வெட்டி சர்ச்சைகளில் இறங்கி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒற்றைப் பிள்ளை
போதுமென்று முடிவெடுத்த நாம்தான் அந்த ஒற்றைப் பிள்ளைக்கும் ஓய்வுப்பொழுதை ஒதுக்காமல்
வீடியோ கேம் வாங்கிக் கொடுத்து ஒண்டியாய் விளையாட விட்டிருக்கிறோம். குழந்தையிலிருந்தே
தனிமைப்படுத்தப்பட்ட பிள்ளைக்கு குடும்பத்தின் அருமை தெரியுமா? உறவுகளின் உன்னதம் புரியுமா?
நாமோ இன்றைய பொழுதுகளை இழந்துகொண்டு நாளைப் பொழுதுகளுக்காய் சேமித்தபடி நாட்களைக் கடத்திக்
கொண்டிருக்கிறோம்.
பெரும்பாலும் தேவைகளின்
நிமித்தமே உறவுகளின் தேவையும் தீர்மானிக்கப்படுகிறது. அது கணவன் மனைவி உறவானாலும் சரி
மற்ற உறவுகளானாலும் சரி. தேவை எது என்பதும் ஆளுக்காள் மாறுகிறது. சிலருக்கு பொருளாதாரம்..
சிலருக்கு கௌரவம்.. சிலருக்கு ஆள்மாகாணம்.. சிலருக்கு வேறு ஏதாவது.. வெகு சிலருக்கே
அன்பின் அடிப்படையில் உறவுகளின் தேவை தேவைப்படுகிறது.
குடும்ப அமைப்பு
கொஞ்சம் கொஞ்சமாய்த் தொலைந்துகொண்டு வரும் இக்காலத்தில் திருமணத்தின் மீதான நம்பிக்கையும்
மதிப்பிழந்துகொண்டு வருவது உண்மை. இப்படியானதொரு நிலையில் கணவன் மனைவி குழந்தை என்ற
முக்கோணத்தின் உள் நுழைய தாத்தா பாட்டி அத்தை மாமா சித்தப்பா சித்தி உறவுகளுக்கு அனுமதி
மறுக்கப்படுகிறது. அது அம்மா வழியா அப்பா வழியா என்ற பேதமில்லாமல் ஒட்டுமொத்தமாகவே
உறவுகள் ஒதுக்கித் தள்ளப்படுவது நிதர்சனம்.
புகுந்த வீடு பிறந்த வீடு என்ற பேதம் பாராமல் அனைத்து உறவுகளையும் அனுசரித்தும் அன்பு செலுத்தியும் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு உறவுகளின் உன்னதம் பற்றி நாம் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமேற்படுவதில்லை. ஒருதலைப் பட்சமான உறவுப்பேணலில்தான் உரசல்களும் மனக்கசப்புகளும் உண்டாகின்றன.
கூட்டுக்குடும்பங்களின்
அருமை பற்றி ஆதங்கித்துக்கொண்டும், பெற்றோர் வயதான காலத்தில் முதியோர் இல்லங்களுக்கு
அனுப்பப்படும் அவலம் குறித்து விவாதித்துக் கொண்டுமிருக்கும் கடைசி தலைமுறை நாமாகத்தான்
இருப்போம். உறவுகளின் அருமை பெருமை அறிந்த காரணத்தாலேதான் இன்னமும் அவற்றைப் பற்றிய
நம் ஏக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
வளரும் தலைமுறைக்கு
அண்ணன் அக்கா தம்பி தங்கை போன்ற எந்த உறவுகளோடும் வளரும் வாய்ப்பு கொடுக்கப்படா நிலையில்
அதற்கடுத்த தலைமுறையில் அத்தை மாமா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா போன்ற உறவுகளைப்
பற்றியும் எந்தக் குழந்தைக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை. அண்ணன் தம்பிகளுக்குள்
சொத்துத் தகராறோ.. அக்கா தங்கைகளுக்கு சீர் செய்வதில் சிரமமோ… தாய்மாமனை சபையில் முன்னிறுத்தவில்லை
என்ற சங்கடங்களோ எதுவுமே நேரப்போவதில்லை… ஒன்றே ஒன்றுதான்.. பெற்றவர்களை முதுமைக் காலத்தில்
பேணுவது குறித்தான சிரமம் ஒன்றுதான் பிரதானமாகப் போகிறது.
பெற்ற ஒற்றைப்
பிள்ளைக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் சென்ற முறை நான் விடுப்பெடுத்தேன் இந்த முறை
நீ விடுப்பெடுக்கவேண்டும் என்ற ஒப்பந்தப்படி தாயும் தந்தையும் விடுப்பெடுத்து குழந்தை
வளர்க்கும் சூழலில் பெற்றவர்களைப் பேணுவதும் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில்
விடுப்பெடுப்பதும் பிரதான பிரச்சனையாகப் போவதில் வியப்பில்லை.
போகப்போக மேலை
நாடுகளைப் போல இங்கும் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கென்று தனிக்குடும்பம் உருவாகிவிட்ட
பிறகு அவர்களை விட்டு ஒதுங்கி வாழ தங்களை மனத்தளவிலும் பொருளாதார அளவிலும் தயார்படுத்திக்
கொள்ளும் சூழல் விரைவில் உருவாகும்.
காலமாற்றத்தால்
ஆட்டுக்கல் அம்மிக்கல் போன்றவை புழக்கத்திலிருந்து விடுபட்டு கிரைண்டர் மிக்ஸி என உருமாற்றம்
பெற்றது போல் உறவுகளும் காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கின்றனர். இப்போது எந்த
உறவின் திருமணத்துக்கு ஒரு வாரம் முன்னதாக… ஒரு வாரம் வேண்டாம் இரண்டு நாட்கள் முன்னதாகப்
போகிறோம்? நேராக மண்டபத்துக்குப் போகிறோம்.. வீடியோவில் நம் வருகையைப் பதிவு செய்கிறோம்.
மொய் கவரைக் கொடுக்கிறோம். விருந்துண்கிறோம். விடைபெறுகிறோம். அந்த அளவில்தான் உள்ளது
தற்போது நமக்கு உறவுகளுடனான பிணைப்பு. இனிவருங்காலத்தில் அதுவும் விடுபட்டுப்போகும்
வாய்ப்புகள் அதிகம்.
இதற்கு காலமாற்றம்
அல்லாது யாரை குறை சொல்ல முடியும்? ஒற்றையாய் வளரும் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுத்தல்
பற்றியோ பகிர்தல் பற்றியோ என்ன தெரிந்திருக்கப் போகிறது? திருமணமானவுடன் கணவன் மனைவிக்குள்ளே
கூட அந்த விட்டுக்கொடுத்தலும் பகிர்தலும் பிரச்சனைக்குரியவைகளாக மாறுகின்றன. அவர்கள்
இருவருக்குள்ளும் பரஸ்பர புரிதல் உருவாகாமல் பல திருமணங்கள் ஆரம்ப கட்டத்திலேயே விவாகரத்துக்
கோரி வழக்குமன்றங்களின் வாயில்களில் காத்திருக்கின்றன. இந்த நிலையில் மற்ற உறவுகளோடு
அவர்களுக்கு எப்படி பிணைப்பு உண்டாகும்?
ஆகவே இன்னும் ஓரிரு தலைமுறையோடு ஒழியப்போகும் உறவுச்சிக்கல்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் காலமாற்றத்தைக் கருத்தில் கொண்டு நடைமுறை வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று நடப்பதே இப்போதைக்கு நம்மால் இயன்றது என்பேன்.







