11 January 2016

பயணங்கள் முடிவதில்லை - தொடர்பதிவு





பயணங்கள் முடிவதில்லை என்னும் தொடர்பயணத்துக்கு என்னை அழைத்திருக்கும் தங்கை மைதிலிக்கு என் அன்பான நன்றி. சமீப காலமாக எதையும் எழுதவோ வாசிக்கவோ ஆர்வமின்றி சுணங்கியிருக்கும் மனத்தை உசுப்பிவிடும் சிறு உந்துதலுக்காய் கூடுதல் நன்றி. நானொரு பயணப்பிரியை. ஆனால் என் அப்பாவுக்கும், கணவருக்கும் பயணங்களில் அவ்வளவாக விருப்பமில்லை என்பதால் பயண அனுபவங்கள் எனக்கு மிகவும் குறைவே. இருப்பினும் கிடைக்கும் சிறு சிறு பயணப்பொழுதுகளையும் ரசிப்பதில் நான் குறைவைப்பதில்லை. அவசரங்களும் அழுத்தங்களும் நிறைந்த இயந்திர வாழ்க்கையில் அடுத்தத் தெருவுக்கு செல்லும் சிறுநடைப்பயணமோ.. அரைமணிநேரக் குறும்பயணமோ கூட மனத்துக்கு ஆசுவாசமளிக்கும் மந்திரத்தை தன்னகத்தேக் கொண்டிருக்கும் என்பது நான் அனுபவபூர்வமாய்க் கண்டறிந்த உண்மை.  சரி. இப்போது கேள்விகளுக்கு வருகிறேன். 

1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

என்னுடைய அப்பா தென்னக ரயில்வே பணிமனையின் ஊழியர் என்பதால் எங்கள் குடும்பத்துக்கு இந்தியா முழுமைக்கும் சென்றுவர இலவச ரயில்வே பாஸ் உண்டு. அதனால் எங்கு செல்வதாக இருந்தாலும் ரயில்தான். பிறந்ததிலிருந்தே ரயில் பயணம் செய்துவருவதால் முதல் ரயில் பயணம் என்பது, நான் மூன்று மாதக் குழந்தையாயிருக்கும்போது நீடாமங்கலம் முதல் திருச்சி பொன்மலை வரையில் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் என்னுடைய பத்தாவதுவயதில் அமைந்தது. ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகளுக்கான தனித்தப் பயண ஏற்பாடு அது. ரயில்வே பள்ளியின் ஆசிரியர்கள் வழிநடத்த, அண்டை மாநிலமான கேரளாவுக்கு சுற்றுலா ஏற்பாடு. தனி கம்பார்ட்மெண்ட் வசதி.

புதிய தோழமைகள், புதிய அனுபவங்கள், புதிய இடங்கள், புரியாத மொழி என இரண்டுவாரங்கள் இனிமையான பயண அனுபவம். முதன்முதலாக நீராவிப்படகில் பயணித்தபோது ஏற்பட்ட திகிலான உணர்வுசிறு சாரலாய் மழை ஆரம்பித்ததும் படகு மூழ்கிப்போய்விடுமோ என்று நினைத்ததும், வெளியில் சொல்ல பயந்து உள்ளுக்குள் அழுததும், ஒரு தீவுத்திட்டோரம் ஒதுங்கியிருந்த, உடல் உப்பிப்போன பிரேதமொன்றைப் பார்த்து எல்லோரும் பயந்தலறி வீறிட்டதும்… மலம்புழா அணைக்கட்டின் பிரமாண்டமான, பெண்ணின் நிர்வாண சிலையைப் பார்த்து வெட்கத்துடன் பெண்பிள்ளைகள் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஓடிப்போனதும்ஓய்வுப் பொழுதுகளில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பாட்டுப்பாடி விளையாடியதும்

தோழமையுடன் கொண்டாடிய அந்த இரண்டு வாரங்களுக்குப் பின் அனைவரும் பிரிந்துபோனோம். ஆளுக்கொரு மூலையில் மறுபடி ஐக்கியமானோம்ஆனால் பால்யத்தில் உண்டான அனுபவம் என்பதாலோ என்னவோ.. பசுமரத்தாணி போல இன்றைக்கும் மனத்தில் பசுமையாய்ப் படிந்திருக்கும் நினைவலைகள் அத்தனையும்.

3. எப்படிப்  பயணிக்கப் பிடிக்கும்?

உறவுகள் நட்புகளோடு எனில் எல்லோரும் ஜாலியாகப் பேசி, அரட்டை அடித்து, பாட்டுப்பாடி, ஒருவரை ஒருவர் கேலி செய்தபடி பயணிப்பது பிடிக்கும். தனிமை எனில் ஜன்னலோரம் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வர பெரிதும் பிடிக்கும்.

4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

மனத்துக்கு இதம் தரும் பழைய பாடல்களை குறைந்த சத்தத்தில் கேட்கப் பிடிக்கும். ஆனால் ஹெட்செட்டில் கேட்கப்பிடிக்காது.

5. விருப்பமான பயண நேரம்?

பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசிப்பதால் எந்தப் பொழுதும் எந்த நேரமும் ரசனைக்குரியதே… எனினும் பெருமழை பெய்தோய்ந்த பொழுதின் பிறகான பயணம் மிகவும் பிடிக்கும்.

6. விருப்பமான பயணத்துணை?

நம்மைப் போலவே பயணத்தை ரசிக்கும் நட்பும் உறவும்.

7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

கூடுமானவரை பயணத்தின்போது புத்தகம் தொடமாட்டேன். வாசிப்பில் மனம் லயிக்காது + தலைவலியும் வரும். திரைப்படம் பார்ப்பதிலும் விருப்பம் இல்லை. வெளியில் வேடிக்கை பார்த்துவரவே பிடிக்கும். விமானப்பயணத்தின்போதும் அப்படிதான். பிள்ளைகள் கணவருடன் பேசிக்கொண்டு வருவேன். அல்லது சும்மா மற்றப் பயணிகளை வேடிக்கைப் பார்த்தபடி…

8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

இலக்கு நிர்ணயிக்காது மனம் போன போக்கில் இயற்கையை ரசித்தபடி பயணிக்கும் பயணம் எதுவும்.

9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

பிடித்தப் பாடல்கள் எல்லாமே வரிசைகட்டிக்கொண்டு பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றாலும் வாய்விட்டு முணுமுணுப்பது அரிது.

10. கனவுப் பயணம் ஏதாவது?

அப்படி எதுவும் இல்லை.. அமையும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையை ரசனைக்குரியதாக்கிக் கொள்ளவேண்டும், அவ்வளவே.




இத்தொடரைத் தாமதமாகத் தொடர்ந்திருப்பதால், எனக்குத் தெரிந்த நட்புகள் பலரும் அழைக்கப்பட்டுவிட்டனர். இருப்பினும் தொடர் அறுந்துவிடாமலிருக்கும் பொருட்டு மூவரை இங்கே அன்புடன் அழைக்கிறேன். இவர்களும் முன்பே அழைக்கப்பட்டிருக்கலாம் எனினும் என்னுடைய அழைப்பையும் ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி 



34 comments:

  1. பதிவுலகப்
    பயணத்திலிருந்து
    பல்லாண்டுகளாக
    பயந்தபடி
    பங்குகொள்ளாத ஆச்சி யைப்
    பதிவிட
    பக்குவமாக அழைத்துள்ளது
    பரவஸம் ஏற்படுத்துகிறது :)

    ReplyDelete
    Replies
    1. ஆச்சி மறுபடியும் வலைப்பூப் பக்கம் வந்திருப்பதே மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து எழுதவேண்டும் அல்லது நாம் எழுதவைப்போம். :))

      தங்கள் உடனடி கருத்துரைகளுக்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  2. தங்களின் இந்தப் ‘பயணங்கள் முடிவதில்லை - தொடர்பதிவு’ மிகவும் அருமையாக, அழகாக, எளிமையாக, யதார்த்தமாக உள்ளது.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  3. உங்கள் பயண அனுபவங்கள் படித்தேன். ரயில்வேயில் பணிபுரிந்த தந்தையைப் பெற்றிருந்தும் நிறைய பயணம் மேற்கொண்டதில்லை என்பது ஆச்சரியம். ஆனால் இப்போது சேர்த்து வைத்து இந்தியா ஆஸ்திரேலிய பயணங்களை மேற்கொள்கிறீர்களே...!!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். கடந்த எட்டு வருடங்களில் இரண்டு பயணம். இரண்டிலும் சொல்லிக்கொள்ளும்படியான சுவாரசியங்கள் அமையவில்லை என்பது உண்மை. :)))

      Delete
  4. யதார்த்தமாக சொல்லிச் சென்ற விதம் அழகு வாழ்த்துகள் சகோ
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  6. அருமையான அனுபவங்கள் கீதாக்கா!பத்து வயதில் போன பயணத்தின் நினைவு இனிக்கின்றது.

    எனக்கும் அப்படி ஒரு அனுபவம் உண்டு. பாடசாலையால் சுற்றுலா சென்றது.கடலில் குளித்ததும் நினைவில் இருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. சிறுவயது அனுபவங்கள் எதுவுமே அவ்வளவு எளிதில் மறக்காது இல்லையா? வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நிஷா.

      Delete
  7. என் தந்தையும் பயணம் விரும்பமாட்டார், அதனால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த LTC வாய்ப்புகளைக் கூட நாங்கள் பயன்படுத்தியதில்லை. இலவச ரயில் பாஸ் இருந்தும் பயணம் செய்யாதது அதைவிட அதிகமாக இருக்கிறதே :)
    சுற்றுலா அனுபவம் சுவாரசியமாகவும் திகிலாகவும் கூட, மறக்க முடியாததுதான்!
    //பெருமழை பெய்தோய்ந்த பொழுதின் பிறகான பயணம் மிகவும் பிடிக்கும்.// கவித்துவமான ரசனை! பிரமாதம்!
    பயணக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அழகான பதில்கள்! இலக்குகள் இன்றி இயற்கையை ரசித்து மேற்கொள்ளும் பயணம், நானும் வருகிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. எதுவும் எளிதில் கிட்டுவதாலேயே அதன் மகிமை தெரியாமல் போய்விடுமோ? :)) வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி கிரேஸ்.

      Delete
  8. தொடர் பதிவு மிக அருமை. எனது பதிவாகிய பனீர் குடமிளகாய் கிரேவியை ருசிக்க எனது தளத்திற்கும் வருகை தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். உங்கள் சமையலை ருசிக்க உடனே வருகிறேன்.

      Delete
  9. தொடர்பதிவினில் வலைய வந்தமைக்கு நன்றி. பயண அனுபவங்களை ஒருவரித் தகவல்களாக, சுருங்கச் சொன்னாலும் விளக்கமாகவே சொன்னீர்கள். எனது தந்தையும் ஒரு ரெயில்வே ஊழியர்தான். இந்தியா முழுக்க பயணம் செய்ய, இலவச பாஸ் என்று சொன்னாலும் எல்லோருக்கும் அந்த வாய்ப்புகள் அமைவதில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள். வாய்ப்புகள் பலருக்கு அமைவதில்லை. அமையும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளப் பலருக்குத் தெரிவதில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  10. தொடர் பதிவு அருமை. அனுபவங்களைப் பகிர்ந்தவிதம் மற்றவர்களையும் எழுதவைத்துவிடும் போலுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete
  11. பயணத்தில் இணைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா! மாலையில் படித்துவிட்டு மீதி கருத்துக்களை கூறுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உடனடி கருத்துக்கும் மீள்வருகைக்கும் மிகவும் நன்றிம்மா.

      Delete
  12. Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  13. கேள்விகளுக்கு ஏனோ தானோ என்று பதிலிறுக்காமல் அனுபவித்து எழுதியுள்ளாய் கீதா. நல்ல ரசனை! என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி. விரைவில் கலந்து கொள்ள முயல்கிறேன். ஏற்கெனவே நிஷா என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்தார். நானும் ஏற்றுக்கொள்வதாக எழுதினேன். ஆனால் என்னால் இன்று வரை எழுத முடியவில்லை. நேரங்கிடைக்கும் போது சுருக்கமாகவேனும் பதில் சொல்வேன். நன்றி கீதா!

    ReplyDelete
    Replies
    1. தொடர்பதிவில் இணைய ஒத்துக்கொண்டதற்கு நன்றி அக்கா. நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  14. இனிமையான அனுபவங்கள் - தொடர்பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  15. ஒவ்வொரு பதிலிலும் உங்கள் வழக்கமான வழமையான சொல்விளையாடல். சொல்லவந்ததை இத்தனை சுவையாய் சொல்ல உங்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டும். அதிலும் இரண்டாவது பதில் இனிமையாய் தொடங்கி திகிலில் சுழற்றி செம...செம... இத்தனை இனிமையாய் இணைந்தமைக்கு மிக்க நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. பால்யத்தின் மகிழ்வான நினைவுகளைக் கிளறி மேலெழுப்பியதற்கு உங்களுக்குதான் நான் நன்றிசொல்லவேண்டும். வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றிம்மா.

      Delete
  16. உங்கள் எழுத்தே வளைத்துப் போடுகின்றது சகோ! எவ்வளவு அருமையாகச் சொல்லுகின்றீர்கள் சிறு விஷயத்தைக் கூட! பாராட்டுகள்! எனக்கும் பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். மிகவும் என்றால் அளவே இல்லை அதற்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால், விருப்பம் இருக்கும் அளவிற்குச் சந்தர்ப்பங்கள் அவ்வளவு வாய்த்ததில்லை என்றாலும் வாய்த்தத் தருணங்களை நான் விட்டதில்லை அனுபவித்துவிடுவேன். என் மகனுக்கும் மிகவும் பிடிக்கும் என்பதால் அவன் மூலம் பயணங்கள் அமைவதுண்டு. நாங்களும் தொடரில் இருந்ததால் தங்கள் பதிவை இன்றுதான் வாசித்தோம்.. இனிதான் பிறரது பதிவுகளையும் வாசிக்க வேண்டும்.

    அருமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி கீதா. பயணங்களை ரசிக்கும் உங்களுடைய பயண அனுபவங்களையும் அறிந்து ரசித்தேன்.

      Delete
  17. இயல்பான பதில்கள். பயணங்கள் எப்போதுமே பிடித்தமாக அமைவதில்லை

    ReplyDelete
  18. தங்கள் மற்றும் வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களும் என் மீது கொண்டுள்ள அன்பிற்கு மிக்க நன்றிகள்.அதற்காகவே விரைவில் தொடர்பதிவைட வேண்டும்,வேண்டும்,வேண்டும்ம்ம்ம்ம்ம் என்று நினைத்து நினைத்து இன்றுதான் போஸ்ட் செய்துள்ளேன்.தாமதத்திற்கு வருன்துகின்றேன்.பலரும் பயண தொடர்பதிவை முடித்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.எனவே நான் யாரையும் தொடர் பதிவிற்கு அழைக்கவில்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன். http://aatchi.blogspot.in/2016/03/blog-post_15.html

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.