எனக்கு
எட்டு வயதாகும்போது எங்கள் வீட்டில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அப்போது நாங்கள், அழகான சிட்னி துறைமுகத்தின் வசீகரமான விரிகுடாக்களில்
ஒன்றான மோஸ்மான் விரிகுடா பகுதியில் வசித்துக்க்கொண்டிருந்தோம்.
அப்போதெல்லாம்
வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவும்தான் இருந்தன. எங்கள் வீட்டைச் சுற்றிலும் யூகலிப்டஸ் மரங்களின்
காடு. ஒத்த தோற்றமுள்ள யூகலிப்டஸ் மரங்களின்
காட்சி ஒருவித சலிப்பையே
தரும். காட்டின் ஊடோடிய
பாதைகளில் போக்குவரத்தும் அரிதாகவே இருக்கும். எங்கள் வீடு, துறைமுகத்துக்கு
செல்லும் பிரதான சாலையை விட்டு வெகுதூரம் விலகி உள்ளடங்கி இருந்தது.
நடுவில்
திறந்தவெளி முற்றத்துடன் கூடிய நாற்புறக்
கட்டடம் அது. கிட்டத்தட்ட வீட்டின் எல்லா அறைகளின் வாசல்களும்
முற்றத்தை நோக்கியே அமைந்திருந்தன. ஒவ்வொரு
அறைக்கு வெளியிலும் சிறிய அளவிலான அழைப்பு மணிகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் முன்வாசலில் கட்டப்பட்டிருக்கும் அழைப்பு
மணி மிகப்பெரியது.
கீழே தொங்கிக்கொண்டிருக்கும்
மெல்லிய சங்கிலியைப் பிடித்திழுத்தால், வெளிச்சுவரோடு
பொருத்தப்பட்டுள்ள நீளமான இரும்புத்தண்டு மணியோடு மோதி ஒலியெழுப்பக்கூடிய பழங்கால பாணியினாலான அழைப்பு
மணி அது. இழுப்பதற்கு ஏதுவாக சங்கிலியின்
நுனியில் ஒரு வளையம் இருந்தது.
தண்ணென்று
குளிர்காற்று வீசிக் கொண்டிருந்த ஒருநாள் இரவு எட்டு மணி வாக்கில் நான், என் அம்மா, என் அக்காக்கள் அனைவரும் சிட்னியிலிருந்து திரும்பி
வரும் எங்கள் அண்ணன்களுக்காக
உணவுண்ணும் அறையில் காத்துக் கொண்டிருந்தோம். அவர்கள் அங்கே உயர்நிலைப்பள்ளியில் படித்துக்
கொண்டிருந்தார்கள். போக வர தினமும் ஆறு மைல் தூரத்தைப் படகுகளில் துடுப்பு போட்டபடியோ
அல்லது பயணித்தோ சென்றுவரும் அவர்கள் வீடு திரும்ப பொழுது சாய்ந்துவிடும்.
குறிப்பிட்ட தினத்தன்று பொழுதுசாய்ந்தும்
அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. வடகிழக்குப்
பருவக்காற்று வீசத்தொடங்கியிருப்பது காரணமாக துடுப்பு போடுவதில்
சிரமம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது முன்வாசலில் அழைப்பு மணியோசை
நிதானமாக கேட்டது.
“ஒருவழியாக வந்துட்டாங்க. ஆனால் இப்படி பலமா காத்தடிக்கும்
வேளையில் முன்வாசல் வழியா வருவது எவ்வளவு முட்டாள்தனம்? இந்தப் பிள்ளைகளோடு பெரும் இம்சைதான்!”
அம்மா சலித்துக்கொண்டாள்.
எங்கள்
வீட்டு வேலைக்காரப் பெண் ஜூலியா,
கையில் மெழுகுவர்த்தியுடன்
நீண்ட நடைபாதையைக் கடந்துசென்று கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு எவரும் இல்லை. அவள் புன்னகைத்தபடியே உணவுண்ணும் அறைக்குத்
திரும்பிவந்து சொன்னாள்.
“எட்வர்ட் தம்பி ஏதோ குறும்பு பண்ணுறார் போலிருக்கும்மா.”
அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே
மறுபடியும் மணியோசை கேட்டது,
இம்முறை வேகமாக.
என் அக்கா, தான் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வேகமாய் எறிந்துவிட்டு வசைபாடியபடியே
எரிச்சலுடன் சென்றவள்,
வெடுக்கென்று கதவைத்
திறந்தபடி சொன்னாள்,
“முட்டாப்பசங்களா, உள்ளே வந்து தொலைங்க!” பதில் இல்லை. அவள் வெளியில் சென்று வராந்தாவில் பார்த்தாள். யாரும் கண்களுக்குப் புலப்படவில்லை. அதேசமயம், மறுபடியும் மணி ஒலித்தது. அவள் கோபத்துடன்
கதவைச் சாத்திவிட்டு மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தாள். அழைப்புமணியிலிருந்து மிகச் சன்னமான ஒலி
எழுந்தடங்கியது.
“யாரும் கண்டுக்காதீங்க. இந்த முட்டாள்தனமான விளையாட்டு கொஞ்சநேரத்தில் அலுத்துப்போனதும் பசியெடுக்க ஆரம்பிக்கும். அப்போது தானாகவே வருவாங்க” அம்மா சொன்னாள்.
“யாரும் கண்டுக்காதீங்க. இந்த முட்டாள்தனமான விளையாட்டு கொஞ்சநேரத்தில் அலுத்துப்போனதும் பசியெடுக்க ஆரம்பிக்கும். அப்போது தானாகவே வருவாங்க” அம்மா சொன்னாள்.
இப்போது
மணி தெளிவாக மூன்றுமுறை ஒலித்தது.
நாங்கள் ஒருவரை ஒருவர்
பார்த்து சிரித்துக்கொண்டோம்.
ஐந்து நிமிடங்கள் கழித்து
எட்டு அல்லது பத்து தடவை விடாமல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
“அவங்களை…
இப்போ கையும் களவுமாகப் பிடிக்கிறேன் பார்.” அம்மா எங்களை சைகையால் அமைதியாக இருக்கச்
சொல்லிவிட்டு மிக மெதுவாக அடியெடுத்து வைத்து முன்வாசலுக்கு நடந்தாள். நாங்களும் சத்தமெழுப்பாமல் நுனிக்காலால்
நடந்து அவள் பின்னாலேயே சென்றோம்.
கதவின் கைப்பிடியை
மெதுவாகத் திருகி,
சரியாக மணியொலிக்கும்
நொடியில் படக்கென்று
கதவை விரியத் திறந்தாள்.
ஒரு ஜீவனையும் காணோம்.
எதற்கும்
அலட்டிக்கொள்ளாத சுபாவத்தினளான எங்கள் அம்மா இப்போது கோபமும் எரிச்சலும் கொண்டவளாய்
வெளியில்
சென்று வராந்தாவில் நின்றபடி
இருட்டைப் பார்த்துக் கத்தினாள்.
“ஒழுங்கா உள்ளே வந்துடுங்க பசங்களா, இல்லைன்னா எனக்கு பயங்கரமான கோவம் வந்துடும். நீங்க என்ன செஞ்சுவச்சிருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். மணியின் சங்கிலியை வேறெங்கேயோ
இழுத்துக்கட்டிவச்சு அங்கிருந்து விளையாடிட்டிருக்கீங்க. போதும் இந்த விளையாட்டு. நிறுத்திட்டு
சாப்பிடவாங்க. வரலைன்னா.. இன்னைக்கு சாப்பாடே கிடையாது, சொல்லிட்டேன்.”
அழைப்புமணி
மறுபடி ஒருமுறை அரைகுறையாய் எழுப்பிய ஒலியைத் தவிர வேறெந்த பதிலும் இல்லை.
“ஜூலியா, மெழுகுவர்த்தியும் மடக்கு ஏணியும் எடுத்துவா. இந்த பசங்க மணியின் சங்கிலியை எதோடு இழுத்துக்கட்டியிருக்காங்கன்னு
பார்ப்போம்.” அம்மா எரிச்சலுடன் சொன்னாள்.
ஜூலியா
மடக்கு ஏணியை எடுத்துவந்தாள்.
என் அக்கா அதை விரித்து
நிறுத்தி அதன்மேலேறி சங்கிலியை ஆராய்ந்தாள். அசாதாரணமான வகையில் வேறெந்த கயிற்றுடனோ கம்பியுடனோ
அது பிணைக்கப்பட்டிருக்கவில்லை.
அவள் முக்காலியிலிருந்து
இறங்கும்போது மறுபடி ஒருமுறை மணியின் மங்கிய ஒலிச்சத்தம் கேட்டது.
நாங்கள்
வரவேற்பறைக்குத் திரும்பினோம்.
ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும், எங்கள் அண்ணன்கள் மூவரும் வழக்கமாய் வரும்
பின்வாசல் வழியே உள்ளே வந்தார்கள். மழையில்
நனைந்து ஈரமும் சேறுமாக வரவேற்பறையினுள் நுழைந்த அவர்கள் உரத்த குரலில் பசி பசியென்று
கோஷமிட்டனர். எங்கள் அம்மா அவர்களை முறைத்துப் பார்த்து
சாப்பாடு கிடையாது என்றாள்.
“ஏம்மா,
என்ன விஷயம்? எங்களுக்கு சாப்பாடு இல்லைன்னு சொல்ற அளவுக்கு
நாங்க என்ன தப்பு பண்ணினோம் அல்லது எதை சரியா செய்யலை? ரெண்டு மணிநேரம் இந்த காத்தோடு
போராடி படகு வலிச்சி களைச்சி வந்திருக்கோம். எங்களுக்கு சாப்பாடு கிடையாதுன்னா என்ன
நியாயம்?” டெட் கேட்டான்.
“நான் எதைப் பத்தி
சொல்றேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். உங்களுடைய அந்த சின்னப்பிள்ளைத்தனமான
விளையாட்டு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சி இன்னமும் விளையாடுறது உங்களுடைய அடாவடித்தனத்தைதான்
காட்டுது.”
டெட் அவளை
திகைப்புடன் நோக்கினான்.
“என்னம்மா சொல்றீங்க? சின்னப்பிள்ளைத்தனமான விளையாட்டா? நாங்க விளையாடினோமா?”
மறுபடி
மணி ஒலிக்கவும் ஜூலியா பயத்தில்
மிரண்டாள். இந்த மர்மமான
மணியோசைக்கு டெட்டும் மற்ற பிள்ளைகளும் காரணமில்லை என்பது அம்மாவுக்குத் தெளிவாகப்
புரிய, அவள் நடந்தவற்றை அவசரமாக அவர்களிடம்
சொன்னாள்.
“சரி,
வாங்க, நாம் போய்
அது யாருன்னு கண்டுபிடிப்போம். ஜூலியா, நீயும் தம்பிங்க ரெண்டுபேரும் குதிரை லாயத்துக்குப்
போய் லாந்தர் விளக்குகளை கொண்டு வந்து ஏத்துங்க. ஒரே நேரத்தில் எல்லோரும் வெளியே போய்
இந்தப்பக்கமா ரெண்டுபேர் அந்தப்பக்கமா ரெண்டுபேர் சுத்திவருவோம். நிச்சயமா… யாரோ நம்மிடம்
விளையாட்டு காட்டுறாங்க. கண்டுபிடிப்போம், வாங்க.” என்றான் டெட்.
உயரமான ஒடிசலான அயர்லாந்துப் பெண்ணான ஜூலியா கடுமையான உழைப்பாளி.
ஆனால் சரியான பயந்தாங்கொள்ளி. அவள் மறுபடியும் பயந்து அழத் தொடங்கினாள்.
“எதுக்கு இப்போ அழறே? என்னாச்சு உனக்கு?” டெட் கோபத்துடன் கேட்டான்.
“முன்பு சிறையிலிருந்து தப்பிவந்த
கைதிகளால் இந்த இடத்தில் மூன்று கொலைகள் நடந்திருக்கு. செயின்ட் லியோனார்டில் இருக்கிற காவலதிகாரியின் மனைவி என்னிடம் சொல்லியிருக்கிறாங்க. கடற்கரையோரமாக மூன்று காவலாளிகள் இரவுணவு சாப்பிட்டுக்கிட்டிருக்கும்போது சில கைதிகள் அவங்களைக்
கொன்னுட்டு தப்பிச்சிட்டாங்க. எங்கே பாத்தாலும் இரத்தமாம். அந்தப்பக்கத்தில் இருந்தவங்க எல்லாருமே பாத்தாங்களாம்… அந்த இரத்தத்தையும்… அந்த…”
“உன் உளறலை நிறுத்தறியா?”
டெட் கத்தினான்.
என் அக்கா ஓஹோவென்று சிரிக்க, தங்கை ஓடிச்சென்று அம்மாவின் பாவாடையைப்
பிடித்துக்கொண்டாள்.
டெட்டின்
ஆவேசமான கத்தலையும் ஆத்திரம் தெறிக்கும் முகத்தையும் பார்த்து ஜூலியா ஒரு நிமிடம் வாயடைத்துப்
போனாள். அவள் நடுங்கியவாறே முதலாளியின் கட்டளைக்குக்
கீழ்ப்படிந்து வெளியே செல்ல முயன்றபோது மணி மறுபடியும் பலமாக ஒலிக்க அவள் அங்கேயே நிலைகுலைந்து தரையில் விழுந்தாள். பயத்தில் அவளுக்கு கைகால்கள் வெட்டி இழுக்க ஆரம்பித்தன.
எதையும்
நிதானமாகக் கையாளும் அம்மா, எங்கள்
அனைவரையும் அறையை விட்டு வெளியேற்றி, கதவைச்
சாத்தித் தாழிட்டாள்.
ஜூலியாவின் வலிப்பு
எப்படி குணமாகும் என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.
“அவள் இங்கேயே அறைக்குள்ளேயே இருக்கட்டும். அவள் தன்னைவிடவும் நாற்காலி மேசைகளைத்தான் அதிகம் காயப்படுத்துவாள். விநோதமான பிறவி. டெட், இப்போ நீயும் தம்பிகளும் போய் லாந்தரை எடுத்துவாங்க. குழந்தைகளைப் பார்த்துக்கிட்டு நான் சமையலறையில் இருகக்கேன்.” அம்மா சொன்னாள்.
நாங்கள்
குதிரை லாயத்துக்கு ஓடி மூன்று லாந்தர்களை எடுத்துப் பற்றவைத்தோம். எங்கள்
மூத்த அண்ணன் டெட் சொல்வதை நாங்கள் செய்யவில்லை என்றால் அவன் என்ன செய்வான் என்று
எங்களுக்குத் தெரியுமென்பதால் நானும் எனக்கு அடுத்த அண்ணனும் உள்ளுக்குள் பயந்திருந்தாலும்
தைரியமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டோம். பின்வாசலைத்
திறந்துவிட்ட டெட், எங்களை வீட்டின் இடப்பக்கம் துவங்கி வீட்டை வலம் வந்து முன்வாசல் கதவருகே அவனை
சந்திக்குமாறு சொல்லிவிட்டு வலப்பக்கமாக அவன் சென்றான்.
நாங்கள்
ஒருவரோடு ஒருவர் ஒண்டிக்கொண்டு நடுங்கும் கால்களுடனும் அடைக்கும் மூச்சுடனும் எங்களுக்கு
கொடுக்கப்பட்ட சுற்றைக் கடக்க ஆரம்பித்தோம். புல்வெளியில் கண்ணில் தென்படும் எதன்மீதும்
கவனத்தை ஊன்றாமல் முன்வாசலில் டெட்டை சந்தித்து வீட்டுக்குள் செல்வதொன்றையே இலக்காக
நிர்ணயித்து கிட்டத்தட்ட ஓடினோம்.
டெட் வருவதற்கு ஐந்து
நிமிடங்கள் முன்னதாகவே வராந்தாவை அடைந்து முன்வாசல் கதவையும் அடைந்துவிட்டோம்.
“நீங்க எதையாவது பார்த்தீங்களா?” கையில் விளக்குடன் வந்துகொண்டிருந்த டெட்
எங்களைப் பார்த்துக் கேட்டான்.
“இல்லை,
எதுவுமில்லை.” கதவைக் குறிவைத்தபடியே சொன்னோம்.
டெட் எங்களை
ஏளனமாய்ப் பார்த்தான்.
“பயந்தாங்கொள்ளிப்
பசங்களா! ஏன் இப்படி பயந்து நடுங்குகிறீங்க? பெண்களையும் குழந்தைகளையும் விட நீங்க ரொம்ப மோசம். காத்து பலமா வீசுறதால் மணி ஒலித்திருக்கு. காத்து இல்லைன்னா வேறு ஏதோ ஒண்ணு… அது என்னன்னு எனக்குத் தெரியலை. ஆனால் எனக்கு இப்போ பசிக்கிது. அம்மா வந்து கதவைத் திறந்தால்தான் நாம் உள்ளே போகமுடியும். இப்போ யாராவது
அந்த மணியை அடிங்கடா.”
அந்த இரவின்
பயங்கரத்திலிருந்து விடுபடும் உத்வேகத்துடன் நாங்கள் அழைப்புமணியின் சங்கிலியைப் பிடித்திழுத்தோம். ஆனால் இழுக்கமுடியவில்லை.
“எங்கேயோ சிக்கியிருக்கு, டெட், இழுக்கமுடியலை.”
“பயந்தாங்கொள்ளிகள்! அதை இழுக்கக் கூட தைரியமில்லை!” எங்களைத் தள்ளிவிட்டு டெட் வளையக் கைப்பிடியைப்
பற்றி வேகமாக இழுத்தான்.
மணி ஒலிக்கவில்லை.
“ஆமாம்,
எங்கேயோ சிக்கிதான்
இருக்கிறது.” டெட் ஒத்துக்கொண்டு தன் கையிலிருந்த
லாந்தர் விளக்கைத் தூக்கிப்பிடித்து மேலே பார்த்தவன் அலறினான்.
“டேய்… இங்கே பாருங்கடா”
நாங்கள்
மேலே பார்த்தோம்.
மணியடிக்கும் இரும்புக்கம்பியையும்
சங்கிலியையும் பல சுற்றுகளாகப் பின்னிப் பிணைந்தபடி ஒரு பெரிய மலைப்பாம்பு! தலைகீழாக அதாவது அதனுடைய தலை எங்களை நோக்கி
இருந்தது. எங்களை அங்கு பார்த்தும் எவ்வித
பயமுமின்றி இன்னும் உற்சாகமாக உடலை முறுக்கிக்கொண்டிருந்தது.
டெட் குதிரைலாயத்துக்கு
ஓடிச்சென்று துணி காயவைக்க உதவும், முனையில்
கூர்பற்கள் உள்ள கழியை எடுத்துவந்தான். எங்களை
பீதியில் ஆழ்த்திய அந்த பாம்பை அந்தக்கழியாலேயே எதிர்கொண்டான். அது அந்த இடத்திலிருந்து விடுபடுவதற்குள்
அங்கேயே வைத்து பலமான அடிகளால் அதன் முதுகுத்தண்டை பல இடங்களில் ஒடித்தான். வீட்டுக்குள்ளிருந்து மடக்கு ஏணி கொண்டுவரப்பட்டது. அதில் ஏறிய டெட், அந்த ஜந்துவின் வாலைப் பிடித்து மிகவும்
சிரமப்பட்டு விடுவித்து வராந்தாவில் எறிந்தான்.
அந்த மலைப்பாம்பு
ஒன்பது அடிக்கும் மேலே நீளமாகவும் நல்ல பருமனாகவும் இருந்தது. அது சுவருக்கும் மணியின் சங்கிலிக்கும் இடையில்
தன் உடலை உராய்ந்து உராய்ந்து தன்
சட்டையை
உரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறது. அந்த அப்பாவி ஜீவனை டெட் கொன்று கீழேபோட்டபோது, அது தான் செய்ய நினைத்த காரியத்தை கிட்டத்தட்ட முடித்திருந்தது.
&&&&&&&&
மூலக்கதை: The snake and the bell by L.Becke
தமிழில்: கீதா மதிவாணன்
23-02-2015 அதீதம் இதழில் வெளியானது.
(பட உதவி: இணையம்)
மிகவும் சுவாரஸ்யமாகப் படித்து வந்தேன். மனதில் ஓர் திக்.....திக் ஏற்பட்டது.
ReplyDeleteஆனால் கடைசியில் நான் எதிர்பார்த்தபடியே முடிவு இருந்ததுதான் இதில் உள்ள மிகவும் வேடிக்கை.
>>>>>
தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு சார். முடிவு நீங்கள் எதிர்பார்த்ததுதான் என்று அறிந்து வியந்தேன். நல்ல தேர்ந்த கதாசிரியர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். இந்தக் கதையின் தலைப்பை ஆங்கிலத்தில் இருப்பதுபோல் அழைப்புமணியும் பாம்பும் என்று மாற்றினால் பலரும் யூகித்துவிடுவார்கள் என்றுதான் அழைப்புமணி என்று மட்டும் வைத்திருந்தேன். அப்படியும் தாங்கள் யூகித்தது சிறப்பு. பாராட்டுகள் சார்.
Deleteதலைப்புத்தேர்வு தாங்கள் வைத்ததுதான் சரி. அப்போதுதான் படிப்பவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். நானும் அதை பாம்பு என யூகிக்கவே இல்லை. ஏதோ ஒன்று மறைவிடம் தேடி மணிக்குள் புகுந்திருக்கலாம் என சந்தேகப்பட்டேன்.
Deleteகடைசியில்தான் அது மிக நீண்ட மலைப்பாம்பு என்பதை தங்களின் கடைசி 2-3 பாராவைப்படித்ததும் தான் தெரிந்துகொண்டேன்.
பாம்பென்று நினைக்காவிட்டாலும் பறவையோ வேறேதோ ஜந்துவோ என்று நினைத்தீர்கள் அல்லவா? அந்த கணிப்பைத்தான் பாராட்டுகிறேன் கோபு சார்.
Delete//அந்த அப்பாவி ஜீவனை டெட் கொன்று கீழேபோட்டபோது, அது தான் செய்ய நினைத்த காரியத்தை கிட்டத்தட்ட முடித்திருந்தது.//
ReplyDeleteஅது செய்ய நினைத்த காரியம் ‘சட்டை உரித்தல் தானா?
>>>>>
ஆம்.. அதுவேதான். :)
Delete//எனக்கு எட்டு வயதாகும்போது எங்கள் வீட்டில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. //
ReplyDeleteஎன்ற ஆரம்ப வரிகளைப்படித்ததும் உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்ததோ என நினைத்தேன். ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் தாங்கள் அந்த வயதில் நம்ம ஊர் திருச்சியில் தான் இருந்திருக்க வேண்டும். நான் சொல்வது சரியா, மேடம் ?
>>>>>
ஆமாம் கோபு சார்.. அப்போது திருச்சியில்தான் இருந்தேன். மொழிபெயர்ப்புக்கதை என்று தலைப்பிலேயே குறிப்பிட்டிருந்தால் இந்த சந்தேகம் வந்திருக்காது.
Deleteபேய்க்காற்று வீசுவதால் மணி தானாகவே கூட அடிப்பது உண்டு. அதுபோல இருக்கலாம் அல்லது வேறு ஏதோ பெரிய பறவையோ, ஓணான் போன்ற ஜந்துக்களோ மணிக்குள் புகுந்திருக்கலாம் என நான் நினைத்தேன்.
ReplyDeleteநல்ல இருட்டினில் முரட்டு சைஸ் மலைப்பாம்பு என்றதும் வியப்பாக இருந்தது.
>>>>>
ஓரளவுக்கு உங்கள் யூகம் சரியாகிவிட்டதே... எனக்கு ஆங்கிலத்தில் வாசிக்கும்போது தலைப்பைக் கொண்டு கணித்துவிட்டதால் வியப்பு எதுவும் ஏற்படவில்லை. :(
Delete//மூலக்கதை: The snake and the bell by L.Becke
ReplyDeleteதமிழில்: கீதா மதிவாணன்//
அழகாக மொழியாக்கம் செய்ததுடன் மிகவும் த்ரில்லிங்காக அதை ஓர் மர்மக்கதைபோலச் சொல்லியுள்ள எழுத்து நடை அருமையோ அருமை.
//23-02-2015 அதீதம் இதழில் வெளியானது.//
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் அன்பான நன்றி கோபு சார்.
Deleteநானும் தன்வரலாறாக இருக்குமே என்று எண்ணி ஏமாந்தேன்.
ReplyDeleteமொழிபெயர்ப்பின் தேர்ந்த ஆற்றொழுக்கு
இடமும் பெயர்களும் மாற்றியிட்டால் நம் கதையொன்றைப் படிக்கும் தன்மையில் உள்ளது.
மொழிபெயர்ப்பின் வெற்றியை இத்தன்மைதான் பெரிதும் தீர்மானிக்கிறது என்பது என் எண்ணம்.
நன்றி.
தங்களுடைய ஊக்கமிகு பின்னூட்டம் மிகுந்த உற்சாகம் தருகிறது. மனமார்ந்த நன்றி விஜி சார்.
Deleteநானும் என்னமோ நினைத்தேன்... முடிவில் தான் அறிந்தேன்...
ReplyDeleteதிகைப்புடன் சுவாரஸ்யம்... நன்றி சகோதரி...
வருகைக்கும் கதையை ரசித்ததற்கும் நன்றி தனபாலன்.
Deleteபதிவில் மூலக்கதை the snake and the bell என்று எழுதி இருப்பதுகண்டு எங்கே பாம்பு இன்னும் வரவில்லையே என்று நினைத்திருந்தேன் அனைத்து திகிலுக்கும் பாம்புதான் காரணமா. நான் என்பதிவு ஒன்றில் “ ஆ பாம்பு “ என்று நாங்கள் பொன்மலைப் பட்டியில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சியை எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது
ReplyDeleteமூலக்கதையின் தலைப்பை முன்பே பார்த்துவிட்டதால் கதையில் சுவாரசியம் இருந்திருக்காது. எனக்கும் அப்படிதான் இருந்தது. ஆனால் தலைப்பில் பாதியை எடுத்துவிட்டால் படுசுவாரசியமாக இருக்கும் என்று தோன்றியது. எடுத்துவிட்டேன். தங்கள் பதிவையும் வாசித்தேன். என்னுடைய மொழிபெயர்ப்பு புத்தகத்தின் முதல் கதை கிட்டத்தட்ட தங்கள் அனுபவத்தைப் போன்றதொரு கருவைக் கொண்டுதான் புனையப்பட்டிருக்கும்.
Deleteமேலே குறிப்பிட்ட பதிவின் சுட்டி சிறிய பதிவுதான்
ReplyDeletehttp://gmbat1649.blogspot.in/2011/12/blog-post_04.html
வாசித்துக் கருத்திட்டேன் ஐயா.
Deleteவிறு விறுப்பான கதை ஓட்டம் ......
ReplyDeleteவருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteநன்றாக உள்ளது கதை .... அதீதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்.
Deleteகதை திக் திக் திக்
ReplyDeleteஅருமை சகோதரியாரே
நன்றி
தம +1
வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் நன்றி ஐயா.
Deleteசுவாரஸ்யமான திகில் கதை. மிக அருமையான தமிழாக்கம். பாராட்டுகள் கீதா.
ReplyDeleteகதையை ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
Deleteகதையை மொழிபெயர்ப்பு என்று தெரியா வண்ணம் நேர்த்தியாக்க் கையாண்டிருக்கிறீர்கள். நீங்கள் தேர்வு செய்யும் வார்த்தைகள்,சொல்லடுக்குகளை பார்க்க மீண்டும் ஒருமுறை படித்தேன். நூற்றுக்கு தொண்ணூறு மார்க் ( பத்து மார்க் வாத்தியாரின் பொறாமைக்காக பிடித்தம் செய்யப்பட்டது ) ரசித்தேன் கீதமஞ்சரி!
ReplyDeleteதொண்ணூறு மார்க்கே எனக்கு யதேஷ்டம். மதிப்பெண்களுக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மோகன்ஜி.
Deleteமிகச் சிறப்பான மொழி பெயர்ப்பு. பாராட்டுக்கள். காற்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே படித்தேன். பாம்பை எதிர்பார்க்கவில்லை. பாவம் சட்டை உரிக்க வந்த இடத்தில் உயிரை விட்டுவிட்டதே!
ReplyDelete'தளிர்' வலைத்தளத்தில் அமானுஷ்ய அனுபவம் படித்துவிட்டு இங்கு வந்தால் இங்கும் ஒரு அமானுஷ்ய அனுபவம்!
மூலக்கதையின் தலைப்பு தெரியாவிட்டால் முடிவை அனுமானிப்பது கடினமே.. தங்கள் வருகைக்கும் திகிலான வாசிப்பனுபவத்துக்கும் மிக்க நன்றி ரஞ்சனி மேடம்.
Deleteஅற்புதம்......
ReplyDeleteமுதல் வரியில் உங்கள் அனுபவம் என நினைத்தாலும் கதாபாத்திரங்களின் பெயர்களைப் பார்த்ததும் கதை என புரிந்தது. அருமையான கதை. முடிவு என்னவாக இருக்கும் என்பதை யோசித்தபடியே படித்தால் பாவம் பாம்பு.....
அருமையான மொழிபெயர்ப்பு. பாராட்டுகள்.
பலருக்கும் அப்படிதான் தோன்றியிருக்கும். ஆனால் தலைப்பிலேயே மொழிபெயர்ப்புக் கதை என்று கொடுத்திருந்தால் குழப்பம் நேர்ந்திருக்காது. வருகைக்கும் கதையை ரசித்துப் பாராட்டியதற்கும் நன்றி வெங்கட்.
Deleteஎங்கள் வீட்டு அழைப்பு மணி மழைக்காலத்தில் இப்படித்தான் வாசல் ஸ்விட்சில் நீர் இறங்குவதால்அடித்துக்கொண்டே யிருக்கும். இப்படி ஏதாவது இருக்கும் என நினைத்தேன். ஆனால் நடை திகிலூட்டுவதாக இருந்தது. மொழிபெயர்ப்பு எனத் தெரியாத மொழி நடை. பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteயாருமில்லாமல் அழைப்புமணி அடித்தால் யாருக்குதான் பயம் வராது. உண்மை என்னவென்று தெரியும்வரை பயமிருந்திருக்கும் அல்லவா? உங்கள் அனுபவமும் திகிலானதே. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.
Delete