25 April 2015

ஒண்டவந்த பிடாரிகள் 10 - (பன்றிகள்)



1788-ஆம் ஆண்டு முதல் கப்பல் தொகுதி ஆயிரக்கணக்கான கைதிகளுடனும் அதிகாரிகளுடனும் வந்திறங்கியபோது, உணவுத்தேவைக்காக உடன் கொண்டுவரப்பட்டவை நாற்பத்தொன்பதே பன்றிகள். ஆனால் இன்று பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் அல்லாமல் ஆஸ்திரேலியக் காடுகளில் தன்னிச்சையாகத் திரியும் பன்றிகளின் எண்ணிக்கை மட்டுமே இரண்டரை கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விக்டோரியா மாநிலத்தில் இவை pest என்று வரையறுக்கப்பட்டுள்ளன.

இத்தனை வருடங்களில் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, காட்டுப்பன்றிகள் வளர்ப்புப்பன்றிகளை விடவும் மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. வளர்ப்புப் பன்றிகளை விடவும் அளவில் சிறியதாக இருந்தாலும் வலிமையும் மூர்க்கமும் நிறைந்தவை காட்டுப்பன்றிகள். வளர்ப்புப்பன்றிகளை விடவும் இவற்றின் ரோமம் முரட்டுத்தனமாக இருக்கும். இவற்றின் வால் வளர்ப்புப்பன்றிகளுக்கு இருப்பதைப் போல சுருண்டு இல்லாமல் நேராகவும் நுனியில் அடர் ரோமங்களுடனும் காணப்படும். காடுவாழ் பன்றிகளில் ஒரு ஆண் பன்றியின் எடை சராசரியாக 100 கிலோ வரை இருக்கும் என்றாலும் சில சமயங்களில் 250 கிலோ வரையிலும் கூட இருப்பதுண்டாம். ஆண்பன்றிகளுக்கு தந்தம்போல் இருப்பக்கமும் கோரைப்பற்கள் நீண்டு வளர்ந்திருக்கும்.


ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளை ஒட்டி வாழும் பன்றிகள் ஐந்து முதல் பத்து வரையிலோ ஐம்பது முதல் நூறு வரையிலோ உணவும் நீரும் கிடைப்பதைப் பொறுத்து கூட்டமாக வாழும். யானைக்கூட்டத்தைப் போலவே காட்டுப்பன்றிக்கூட்டத்திற்கும் தலைமைப்பொறுப்பு மூத்த தலைவியிடம்தான். அக்கூட்டத்தில் பெண்பன்றிகளும் குட்டிகளும் மட்டுமே இருக்கும். பருவம் வந்தபின் ஆண் பன்றிகள் கூட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுவிடும். இனப்பெருக்க காலத்தில் மட்டும்தான் அங்கே அவற்றுக்கு இடமுண்டு. ஒரு ஈட்டுக்கு பத்து குட்டிகள் என்ற அளவில் வருடத்துக்கு இரண்டு முறை குட்டி ஈனும் பன்றிகளின் எண்ணிக்கை வதவதவென்று பெருகுவதில் வியப்பென்ன?



காட்டுப்பன்றிகள் கிடைக்கும் எதையும் தின்று உயிர்வாழும் தன்மையுடையவை. தாவர உணவுகளோ, தானியங்களோ, கிழங்குகளோ கிடைக்காத பொழுதுகளில் தவளை, மீன், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை வேட்டையாடி உண்கின்றன. சில சமயங்களில் கால்நடைப் பண்ணைகளில் உள்ள ஆட்டுக்குட்டிகளையும் வேட்டையாடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 30% விளைச்சல் பன்றிகளால் நாசமாகிறது என்கிறது ஆய்வு. காட்டுப்பன்றிகளால் வேளாண்துறைக்கு உண்டாகும் நஷ்டம் மட்டுமே வருடத்துக்கு நூறு மில்லியன் டாலர்களுக்கும் மேல். (இந்திய மதிப்பில் ஐநூறு கோடி ரூபாய்).

கோதுமை வயல்களையும் ஓட்ஸ் வயல்களையும் நாசம் செய்யும் பன்றிகளை சுட்டுக்கொல்ல தொழில்முறை மட்டும் கேளிக்கை வேட்டைக்காரர்கள் வரவழைக்கப்படுகின்றனர். காட்டுப்பன்றிகள் மூர்க்கம் நிறைந்தவை என்பதால் ஒற்றையாய் வேட்டையாடச் செல்லுதல் புத்திசாலித்தனம் இல்லை என்கிறார்கள் அனுபவசாலிகள். குழுவாக இணைந்தே வேட்டைக்குச் செல்கிறார்கள். வேட்டையாடப்பட்ட இளம்பன்றிகளை உணவுக்குப் பயன்படுத்தினாலும் அதில் ஆபத்தும் அதிகம் என்று குறிப்பிடுகிறார்கள். காட்டுப்பன்றிகள் இறந்த விலங்குகளையும் அழுகிய  மாமிசங்களையும் உண்பதால் ஏராளமான நோய்க்கிருமிகளும் புழுக்களும் அப்பன்றியிறைச்சியில் இருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். 



விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் நாசமாக்குவதோடு கால்நடைப் பண்ணைகளிலும் பெரும் சேதங்களை உண்டாக்கும் காட்டுப்பன்றிகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதென்பது அரசுக்கு மாபெரும் சவால். விஷ உணவு வைத்தும் பொறிகள் வைத்தும் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியும் கட்டுப்படுத்த முனைகிறது. முடியாதபோது பண்ணைகளையும் விளைநிலங்களையும் சுற்றி போடப்படும் உறுதியான தடுப்புவேலிகள் ஓரளவு பயன்தருகின்றன.


(தொடரும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 9 (பூனைகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 11 (மான்கள்)

31 comments:


  1. பன்றிகள் மூர்க்கமானவை. பதிவின் க்டைசியில் இணைக்கப்பட்டுள்ள படம் ஆஸ்திரேலிய காட்டுப் பன்றியின் பிரமாண்டத்தைக் காட்டுகிறது.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. //பன்றியின் எடை சராசரியாக 100 கிலோ வரை இருக்கும் என்றாலும் சில சமயங்களில் 250 கிலோ வரையிலும் கூட இருப்பதுண்டாம். //

    அடேங்கப்பா ! :)

    //யானைக்கூட்டத்தைப் போலவே காட்டுப்பன்றிக்கூட்டத்திற்கும் தலைமைப்பொறுப்பு மூத்த தலைவியிடம்தான். அக்கூட்டத்தில் பெண்பன்றிகளும் குட்டிகளும் மட்டுமே இருக்கும். பருவம் வந்தபின் ஆண் பன்றிகள் கூட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுவிடும்//

    அடப்பாவமே ! ஆண்களின் நிலை எங்குமே பரிதாபமானதுதான் போலிருக்கு! :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. :) சில விலங்கினத்தில் ஆண் விலங்குகள் தங்கள் ஆளுமையைக் காட்ட அடிக்கடி சண்டை போட்டவண்ணமேதான் இருக்கும். ஒரு தலைமையின் கீழ் குழுவாய் இணைந்து செயல்படுவது அரிது. அதனால்தான் அவை வளர்ந்ததும் விரட்டியடிக்கப்பட்டுவிடுகின்றன போலும். தங்கள் வருகைக்கும் சுவாரசியமான கருத்துக்கும் மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  3. //ஆனால் இன்று பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் அல்லாமல் ஆஸ்திரேலியக் காடுகளில் தன்னிச்சையாகத் திரியும் பன்றிகளின் எண்ணிக்கை மட்டுமே இரண்டரை கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.//

    //ஒரு ஈட்டுக்கு பத்து குட்டிகள் என்ற அளவில் வருடத்துக்கு இரண்டு முறை குட்டி ஈனும் பன்றிகளின் எண்ணிக்கை வதவதவென்று பெருகுவதில் வியப்பென்ன?//

    கணக்குப்போட்டுப்பார்த்தாலே தலையைச்சுற்றும் போலிருக்கிறதே. :)

    காட்டுப்பன்றிகள் போலவே (மனதை மிகவும்) கனக்க வைக்கும் விஷயங்களை பதிவாகக்கொடுத்து வருகிறீர்கள்.

    தொடரட்டும் தங்களின் சுவையான எழுத்திலாவது .............
    அடுத்து வரப்போகும் ‘ஒட்டவந்தப் பிடாரிகள்-11’ :)

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய ஊக்கம் தரும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி கோபு சார். அடுத்த பதிவைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் வெளியிடுவேன்.

      Delete
  4. தகவல்கள் வித்தியாசமானதாக இருக்கும் சமயம் பயங்கரமானதாயும் இருக்கின்றன!

    ReplyDelete
    Replies
    1. பயங்கரம்தான். மாதிரிக்கு இங்கொரு படம்தான் கொடுத்திருக்கிறேன். தகவல் திரட்டும்போதும் பதிவிடப் படங்கள் தேடும்போதும் கிடைத்தவற்றைக் கண்டு மலைத்துப்போயிருக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  5. வழக்கம்போல தகவல் களஞ்சியம். கடைசிப் படத்தில் பன்றியின் சைஸ் பயமுறுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. இது போல் ஏராளமான பயமுறுத்தும் படங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றைப் பதிவில் இணைப்பதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை என்றாலும் தகவல்களின் வீரியத்தைக் காட்ட இவை உதவும் என்பதால் இணைத்திருக்கிறேன். கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete
  6. யம்மாடி...! யானை மாதிரி அல்லவா இருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. இருநூற்றைம்பது கிலோ வரை போகும் என்னும்போது உருவத்தை நினைத்துப் பார்த்தாலே மலைப்பாகத்தான் இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  7. பன்றிகளை பற்றி இத்தனை தகவல்களா..! ஆச்சரியமாய் இருக்கிறது.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி செந்தில்குமார்.

      Delete
  8. காட்டுப் பன்றிகள் வளர்ப்புப் பன்றிகளை விட” சிறியதாய் இருந்தாலும் ?” கடைசிப் படம் வேறு மாதிரி சொல்கிறாற்போல இருக்கிறதே. உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வரும்போது ஒண்ட வந்த பிடாரிகளே ஊர்ப் பிடாரிகளைவிட அதிகம் என்று தோன்றுகிறதுஆஸ்திரேலியாவில் அந்த உர்ர் விலங்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாய் இருக்குமோ.

    ReplyDelete
    Replies
    1. ஒருசில காட்டுப்பன்றிகளின் எடை 250 கிலோ வரை இருக்கும் என்கிறது தகவல். சாதாரணமாக ஆஸ்திரேலிய வளர்ப்புப் பன்றிகள் நூறு முதல் முந்நூறு கிலோ எடைவரை இருக்கும் என்பதால் அவற்றோடு ஒப்பிடும்போது காட்டுப்பன்றிகள் சிறியதாகத் தோன்றுகின்றன போலும்.

      ஊர் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகம் என்றாலும் இப்படி வரையறையில்லாமல் பெருகும் மற்ற நாட்டு விலங்குகளால் அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டுவருகின்றன என்பது வருந்தவைக்கும் உண்மை.

      தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. ஆண்டுக்கு இரு முறை, தடவைக்குப் பத்துக்குட்டிகள் என்ற எண்ணிக்கையில் பெருகினால் கண்டம் முழுக்கப் பன்றிகளால் நிறைந்துவிடுமே!. 250 கிலோ எடை என்றால் பயமாயிருக்கின்றது. பண்ணைகளில் வேட்டையாடக்கூடியவை காட்டுப் பன்றிகள் என்ற செய்தியும் புதுசு தான். தொடர்ந்து புதிய செய்திகளைத் தொகுத்தளிப்பதற்கு நன்றி கீதா! பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. காட்டுப்பன்றிகள் வேட்டையாடும் என்ற தகவல் அறிந்து நானும் வியந்தேன். வாழும் இடத்திற்கேற்ப எப்படியெல்லாம் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு தங்கள் இனத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன என்று நினைக்கும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.... தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  10. அழியும் உயிர்கள் பற்றி உலகம் கவலைப்படுகையில் ஆஸ்திரேலியா மட்டும் பெருகும் விலங்குகள் குறித்துக் கவல வேண்டியிருக்கிறது !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. பெருகிவரும் விலங்குகள் குறித்து ஆஸ்திரேலியா கவலைப்படுவதற்கான காரணங்களுள் உள்நாட்டு விலங்குகளின் அழிவும் ஒன்று. ஆஸ்திரேலியாவில் ஐரோப்பிய வருகைக்குப் பின் கிட்டத்தட்ட இருபது உயிரினங்கள் அழிந்துபோய்விட்டதாகவும் இன்னும் பல உயிரினங்கள் அழியும் அபாயத்திலிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகநாடுகளிலேயே மிகக்குறுகிய காலத்தில் அழிவை சந்தித்த விலங்குகளின் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவுக்கே முதலிடம் என்கிறது அந்த ஆய்வு முடிவு.

      Delete
  11. விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் நாசமாக்குவதோடு கால்நடைப் ***பண்ணைகளிலும் பெரும் சேதங்களை உண்டாக்கும் காட்டுப்பன்றிகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதென்பது அரசுக்கு மாபெரும் சவால். விஷ உணவு வைத்தும் பொறிகள் வைத்தும் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியும் கட்டுப்படுத்த முனைகிறது.***

    இந்த உலகம் என்னவோ மனிதனுடைய அப்பன் வீட்டு சொத்து என்பதுபோல் எப்போதும் நம் சிந்தனைகள் இருப்பது நம் குறைபாடு. எல்லா உயிரினங்களும் வாழணும்னுதான் நினைக்கும். அது அழகா இருந்தாலும் சரி, எந்த உணவை சாப்பிட்டாலும் சரி. சுயநல மனிதன் என்னவோ இவனுடையது இவ்வுலகம் என்பதுபோல் எந்த ஒரு விலங்குகளையும், மீன்களையும், தாவரங்களையும் அவனுடைய தேவைக்காக பய்னபடுத்திக் கொள்வதுடன், அவைகள் எல்லாவற்ரையும் மனிதமே இல்லாமல் எதிரியாக்கி விடுகிறான்.

    அது ஏன் பன்றி, நாய் என்றால் இழிச்சொல். மனிதனைவிட் கேவலமான விலங்கு வேறெதுவும் இல்லை என்பதே உண்மை.

    ஆமா மனிதன் என்கிற விலங்குதான் ஊர்ப் பிடாரினு உங்களுக்கு யார் சொன்னதுங்க???

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வருண். நீங்கள் இப்போதுதான் முதன்முதலாக இந்தத் தொடரின் இந்தப் பகுதியை மட்டும் வாசித்து உணர்ச்சிவசப்பட்டு உடனே பதிவிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      முதல் பகுதியிலிருந்து வாசித்துப் பாருங்கள். விவரமாக எழுதியிருக்கிறேன். ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல என்றொரு சொல்வழக்கு உண்டு. கிட்டத்தட்ட அதுபோன்ற நிகழ்வுகள் என்பதால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.

      இந்தத் தொடரில் ஊர்ப்பிடாரிகள் என்று நான் குறிப்பிடுவது ஒவ்வொரு மண்ணிலும் காலங்காலமாக வாழ்ந்துவரும் உயிரினங்களைத்தான். ஒண்டவந்த பிடாரிகள் என்று குறிப்பிடுவது ஐரோப்பியர் தங்கள் தேவைக்காக ஆஸ்திரேலியாவில் கொண்டுவந்து இறக்கிய இந்த மண்ணுக்கு சொந்தமில்லாத மற்ற நாட்டு விலங்குகளை.

      அப்படி இறக்கப்பட்ட அந்நிய நாட்டு விலங்கினங்களால் இங்கு ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கும் கங்காரு, பேடிமெலான், க்வோல் போன்ற அரிய விலங்குகளும் பறவைகளும் அழிந்துகொண்டிருக்கின்றன என்றும் சில அழிந்தேபோய்விட்டன என்றும் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

      நேரம் இருந்தால் இந்தத் தலைப்பில் வரும் மற்றப் பகுதிகளையும் வாசித்துப் பாருங்கள். இப்படி வலுக்கட்டாயமாக மனிதர்களால் இயற்கைக்கு மாறாக வேறொரு நிலப்பரப்பில் வாழ நிர்பந்தப்படுத்தப்படும் உயிரினங்களை ஒண்டவந்த பிடாரிகள் என்று சொல்வது தகாது என்றாலும் இந்த தொடருக்கு இதை ஒரு குறியீட்டுத் தலைப்பாகத்தான் வைத்திருக்கிறேன் என்பதையும் சொல்லியிருக்கிறேன்.

      தொடர்ந்து வாசித்தால் என்னுடைய பதிவின் நோக்கம் புரியும். இயற்கைக்கு மாறாக மனிதர்கள் இதுபோன்ற ஆராய்ச்சிகளிலும் முயற்சிகளிலும் இறங்கக்கூடாது என்பதற்கு இந்த நிகழ்வுகளை உதாரணங்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறேன்.

      Delete
  12. சரிங்க, கீதா. என் தவறுதான்.

    ***ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல் என்று சொல்வார்கள். அது ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை பல விஷயங்களில் உண்மை. ஆஸ்திரேலிய மண்ணின் சொந்த உயிரினங்கள் அல்லாது பிற கண்டங்களிலிருந்து இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு தங்கள் இனத்தைத் தக்கவைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரினங்கள் அநேகம். மனிதர்களும் விதிவிலக்கல்ல.

    அறுபதாயிரம் ஆண்டுகளாய் இந்த மண்ணைத் தெய்வமாய்த் தொழுது, தங்களுக்கென்று தனித்த மொழி, கலை, பாரம்பரியம், கலாச்சாரம், தொழில், வணிகம், வாழ்க்கை முறை என்று வாழ்ந்துவந்த சுமார் ஏழு இலட்சம் பூர்வகுடி மக்களை இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கி, தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திய ஐரோப்பியரிடமிருந்து ஆரம்பிக்கிறது கதை. வந்திறங்கிய நாளிலிருந்தே அபகரிப்பு ஆரம்பமாகிவிட்டது. ***

    உஙக கட்டுரையை நேரம் கிடைக்கும்ப் போது வாசித்துவிட்டு என் கருத்தை, நான் கற்றதில் உள்ள சந்தேகங்களை முன் வைக்கிறேன்.

    என் அவசரத்தைப் புரிந்து நிதானமாக பதிலளித்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளை வாசித்தபின்னரான உங்கள் கருத்துரைகளை எதிர்பார்க்கிறேன் வருண். புரிதலுக்கு மிகவும் நன்றி.

      Delete
  13. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உழைப்பின் மேன்மை உணர்ந்த யாவருக்கும் மேதின நல்வாழ்த்துகள். நன்றி புதுவை வேலு.

      Delete
  14. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி பலரும் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். புறக்கணிக்கப்பட்ட விலங்கு பற்றி நீங்கள்தான் வலைப்பூவில் எழுதி இருக்கிறீர்கள். சுவாரசியமான பதிவு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய கருத்துக்கும் மிகவும் நன்றி பாரதிக்குமார்.

      Delete
  15. கடைசி படம் - காட்டுப்பன்றிகளின் பிரம்மாண்டத்தினை காட்டுகிறது. சமீபத்திய பயணம் ஒன்றில் இறைச்சிக்காக வெட்டி வைத்திருந்த பன்றிகளைப் பார்க்கும்போது அதன் அளவு பயமுறுத்தியது!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்கட். வளர்ப்புப் பன்றிகள் காட்டுப்பன்றிகளைவிடவும் அளவில் பெரியவையாம். பயங்கரமாகத்தான் இருக்கின்றன ஒவ்வொன்றும். வருகைக்கும்கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.