புகழ்பெற்ற
பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ஹெலன் கெல்லர் என்னும் பெண்மணியிடம்
அதிசயிப்பதற்கு ஒன்றுமில்லை, அவரும் இயல்பான மாந்தராக இருந்திருந்தால்! ஆனால் கண்பார்வையற்ற,
கேட்கவும் பேசவும் இயலாத
ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அறிந்தால் எத்தனை வியப்பு உண்டாகிறது. அத்தகைய வியக்கத்தக்கப்
பெண்மணியின் நினைவு நாளில் அவரைப் பற்றிய இக்கட்டுரையைப் பதித்து அவர் பெருமையை நினைவுகூர்வதில் மிகவும்
மகிழ்கிறேன்.
அமெரிக்காவின்
அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் வருடம் ஜூன் 27ஆம் நாள் பிறந்த ஹெலன் ஆடம்ஸ் கெல்லருக்குப்
பிறவியில் குறைகளேதுமில்லை. பதினெட்டு மாதக்
குழந்தையாயிருக்கும்போது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் தம் பார்வையை, பேசும், கேட்கும் திறனை
இழந்தவரை, தம் வாழ்நாளின் இறுதிவரை
அயராது அடுத்தவருக்காகப் பாடுபடத் தூண்டியது அவருடைய மனோதிடமாகும். அதற்கு
உறுதுணையாயிருந்தவர் அவருக்கு வாய்க்கப்பெற்ற அற்புத ஆசிரியராவார்.
பிள்ளைப்
பிராயத்தில் தனது தேவைகளை சரிவர வெளிப்படுத்தத் தெரியாத நிலையில் அவரிடம் முரட்டுத்தனம்
மிகுந்திருந்தது. உலகத்தைப் பற்றிய எந்த விவரமும் அறிந்திராத அவரை அமைதிப்படுத்தி
அவருள் புதைந்து கிடந்த அற்புத அறிவாற்றலையும், விடாமுயற்சியையும், சாதிக்கும் நெஞ்சுரத்தையும் வெளிக்கொணர்ந்து உலகறியச்
செய்த பெருமை அவரது ஆசிரியை ஆன் சல்லிவனையே
சாரும்.
1887 ஆம் வருடம்
மார்ச் மாதத்தில் ஒரு நாள்! ஹெலன் கெல்லரின் புதிய வாழ்க்கைத் துவங்கப்பெற்ற அந்த
நாளை தன் வாழ்வின் மறக்கமுடியாத முக்கியமான நாளாகக் குறிப்பிடுகிறார் ஹெலன். ஆம், தன் வாழ்நாளையே ஹெலனின் வளர்ச்சிக்காக
அர்ப்பணித்த ஆசிரியை ஆன் சல்லிவனின் அருமை அறியாது, மூர்க்கத்துடன் எதிர்கொண்ட நாள்!
ஏழு வயது ஹெலனுக்குப்
பாடம் கற்றுத் தர அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லால் ஏற்பாடு செய்யப்பட்ட இருபது வயது
இளம் ஆசிரியை அவர். பெர்கின்ஸிலிருக்கும் பார்வையற்றோர் பள்ளியில்
பணிபுரிந்துகொண்டிருந்த ஆன் சல்லிவனுக்கு பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின் ஓரளவு
மட்டுமே பார்க்கும் திறனிருந்தது. ஆனாலும் அவர் தன் முழு உத்வேகத்தையும் காட்டி, ஹெலன் கெல்லருக்கு வாழும் கலையைக் கற்பித்தார்
என்றே சொல்லவேண்டும். மாபெரும் சிரமங்களை எதிர்கொண்டு ஹெலனுக்குப் பாடம்
கற்பித்தார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட நிலையிலும் கல்வியின் ஒளிக்கீற்றை ஹெலனின்
ஆழ்மனதினுள் அற்புதமாகச் செலுத்தினார். சகிப்புத் தன்மையுடனும், பொறுமையுடனும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்கவேண்டும்
என்பதற்கு பெரும் முன்மாதிரியாய்த் திகழ்ந்தார்.
கிட்டத்தட்ட
ஐம்பதாண்டுகள், இருவரின் நட்பும் நீடித்தது. ஆன் சல்லிவனின்
மரணமொன்றே இருவரையும் பிரித்தது. அதுவரையிலும் ஹெலனுக்கு ஒரு தாயாய், தாதியாய், சகோதரியாய், சிநேகிதியாய், ஆசிரியராய், பார்வையுமாய் வாழ்ந்து பெரும் சாதனை
புரிந்தார். அவருடைய அறிமுகம் இல்லாதிருந்தால் ஹெலன் கெல்லர் என்னும் சாதனைப்
பெண்மணியை இந்த உலகம் அறிந்திருக்காது.
டீச்சர் என்று
இறுதிவரை ஹெலனால் அன்பாய் அழைக்கப்பட்ட ஆன் சல்லிவன், ஹெலனுக்குப் போதித்த முறை சொல்லி மாளாது. அவர் சிறுமியாயிருந்த ஹெலனின்
கைகளில் முதலில் ஒரு பொம்மையைக் கொடுத்து மறுகையில் d o l l என்று எழுதிக் காட்ட, ஹெலனும் பிசகாமல்
அதே வரிசையில் எழுதிக் காட்டினார். ஆனாலும் அச்சொல் பொம்மையைக் குறிக்கிறது என்பதோ
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் உண்டு என்பதையோ ஒவ்வொரு பொருளைக் குறிக்கவும் ஒரு
சொல் உண்டு என்பதையோ அவர் அப்போது அதை அறிந்திருக்கவில்லை. ஆயினும் தம்
ஆசிரியருடன் ஒரு விளையாட்டாய் இப்படி சொற்களை எழுதி விளையாடினார். அதில் பெரும்
மகிழ்வும் அடைந்தார்.
ஒருநாள்
தோட்டத்தில் உலவுகையில் ஆன் சல்லிவன் தண்ணீர்க் குழாயைத் திறந்து நீரை ஹெலனின்
கையில் பாயச் செய்து மறுகையில் w a t e r என்று மீண்டும் மீண்டும் எழுதிக் காட்டினார். தண்ணீரின் வேகத்துக்கேற்ப அவர்
அதை மெதுவாகவும் வேகமாகவும் எழுதிக் காட்டியபோது ஹெலனுக்குள் ஒரு அற்புத மாற்றம்
நிகழ்ந்தது. தன் கையில் சில்லிடும் அந்தப் பொருளைக் குறிக்கும் வார்த்தை அது என்ற
உண்மை புரிய... அப்போதுதான் முதன்முதலாய் சொற்களுக்கும் பொருட்களுக்கும் உள்ள
ஒற்றுமை புரிந்து சட்டென்று தரையைத் தட்டிக் காட்டி அதற்குரிய சொல்லைக் கேட்டார்.
மகிழ்ந்துபோன ஆசிரியை தம்மால் இயன்றவரை அக்குழந்தைக்கு வார்த்தைகளை
அறிமுகப்படுத்தினார். அன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட முப்பது வார்த்தைகளை
அர்த்தத்துடன் விளங்கிக்கொண்டார் ஹெலன்.
இப்படியாகத்
துவங்கப் பெற்றது ஹெலனின் கல்விப் பயிற்சி.
பார்வையற்றவர்களுக்கான பிரத்யேக, எழும்பிய
எழுத்துக்களின் வடிவங்களைக் கைகளால் தடவித் தடவி கற்றுணர்ந்தார். தன் பத்தாவது
வயதில் பேசுவதிலும் ஆர்வம் காட்ட, அதற்கென சிறப்பு
ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டார்.
ஸாரா ஃபுல்லர்
என்னும் அந்த ஆசிரியை அவருக்கு உதட்டசைவுகளைக் கொண்டு
உச்சரிக்கும் முறையைக் கற்பித்தார். பெரும் சிரமமான அக்காரியத்தை சவாலகவே அவர்
மேற்கொண்டார். பேசுபவரின் உதடுகளைத் தன் விரல்களால் தொட்டுணர்ந்து பேசப்பழகினார் ஹெலன்.
ஆரம்பத்தில் அவருடைய பேச்சு அவர் ஆசிரியைகளுக்கு மட்டுமே புரிந்தது.
கடும்பயிற்சிக்குப் பின் மற்றவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் சற்றே கரகரத்தக்
குரலில் பேசத் தொடங்கினார். ஆனால் அக்குரல் வெளிப்படுத்திய கருத்துக்களோ மிக
ஆழமானவை!
சிறுமியாய்
இருக்கும்போதே, 'என்றேனும் ஒருநாள் நான் கல்லூரி செல்வேன்' என்று உறுதிபடச் சொல்லியிருந்தபடியே 1900
த்தில் ராட்க்ளிஃப் கல்லூரியில் காலடி எடுத்துவைத்தார். 1904 இல் பி.ஏ. பட்டம்
பெற்று வெளியேறினார். பார்வையற்ற, காது கேளாதப்
பெண் ஒருவர் பட்டப் படிப்பை முடித்தது அதுவே முதல் முறை! பட்டப்படிப்பு அத்துடன்
முடிந்துபோனாலும் ஹெலன் தம் வாழ்க்கை முழுவதிலும் பல விஷயங்களையும் ஆர்வத்துடன்
கற்றுத் தேர்ந்தார். பிரெயில்
முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளை ஹெலன் கற்றார்.
பல்வேறு துறைகளில் அவருக்கிருந்த பரந்த ஞானத்தையும்
அவருடைய அயராத சாதனையையும் கண்ட டெம்பிள் பல்கலைக்கழகம், ஹார்வேர்டு பலகலைக்கழகம், ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்தின்
க்ளாஸ்கோ பல்கலைக்கழகம்,
இந்தியாவின் தில்லி
பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்
பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல
பல்கலைக்கழகங்கள் அவருக்கு கெளரவ முனைவர் பட்டங்களை அளித்து பெருமை சேர்த்தன.
1905 இல் ஆன் சல்லிவன், மாபெரும் இலக்கிய விமர்சகரும் பொதுவுடைமைவாதியுமான ஜான் மேஸியைத்
திருமணம் செய்துகொண்டார். அத்திருமணம், ஹெலனின் வாழ்க்கையிலோ ஆன் சல்லிவனுடனான ஆசிரியர் மாணவி உறவிலோ எந்தப்
பாதிப்பையும் உண்டாக்கவில்லை. மாறாக
அவ்வருமைத் தம்பதியினர் இணைந்து ஹெலனின் படிப்புக்கும் மற்ற நடவடிக்கைகளுக்கும்
பெரிதும் உதவினர்.
கல்லூரி
நாட்களில் வெளிப்பட்ட ஹெலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத்
தொடர்ந்திருந்தது. 1903 இல் ‘என் வாழ்க்கைக்
கதை’ என்ற அவருடைய படைப்பு
பெண்கள் சஞ்சிகையொன்றில் தொடராக வெளிவந்து பின் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது.
மராத்தி உள்ளிட்ட ஐம்பதுக்கும்
மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஹெலனின் படைப்புகளில் இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.
நன்னம்பிக்கை -
ஒரு கட்டுரை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம்,
இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன்
கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆன் சல்லிவன் மேஸி - என் ஆசிரியை, திறந்த கதவு
போன்றவை அவருடைய பிரசுரமான படைப்புகள் சில. இவை தவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை
போன்றவை தொடர்பாக பல கட்டுரைகளையும், ஆக்கங்களையும்
நாளிதழ்களுக்கும், வாராந்திர, மாதாந்திரப் பத்திரிகைகளுக்கும் பங்களித்தவண்ணமிருந்தார். ஹெலன் கெல்லர்
தம் வாழ்நாளில் பல சாதனை விருதுகளாலும், உலகின் பல்வேறு
நாடுகளிலிருந்தும் அரசுகளின் உயரிய விருதுகளாலும் கெளரவப்படுத்தப்பட்டார்.
இவ்விருதுகளினும்
அவர் உயர்வாக மதிப்பது தம் வாழ்நாளில் சந்தித்த பெரிய மனிதர்களின் அறிமுகத்தையும்
நட்பையுமே. சார்லி சாப்ளின், நேரு, ஜான் எஃப் கென்னடி போன்ற பிரபலங்களையும், இன்னும் நெருக்கமான தோழமையுடன் கேத்தரின்
கார்னல், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல், ஜோ டேவிட்ஸன், மார்க் ட்வைன், வில்லியம் ஜேம்ஸ் போன்றோரையும் நட்புகளாகக்
கொண்ட பெருமை அவருக்கு உண்டு. மார்க் ட்வைன்
மிகச் சிறந்த எழுத்தாளர்! ஹெலனைப் பற்றி
அவர் கூறியதாவது: 'இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இருவரைத்
தேர்வு செய்தால் ஒன்று மாவீரர் நெப்போலியன், மற்றொருவர் ஹெலன் கெல்லர் ஆக இருக்கும்'.
ஹெலன் கெல்லரின்
வாழ்க்கை ஒரு ஆவணப்படமாக எடுக்கப்பட்டு ஆஸ்கார் விருது பெற்றது.
மேலும் அவரது
வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தபோது அதில் ஹெலன் கெல்லராகவும் ஆன் சல்லிவனாகவும்
நடித்த இரு நடிகையர் ஆஸ்கார் விருதுகள் பெற்றனர்.
ஒரு தருணம் ஹெலனின் வாழ்விலும் காதல் பூத்தது. ஆன் சல்லிவன்
ஓய்வுக்காகவும் உடல்நிலை தேறவும் Puerto rico தீவுக்குச் சென்றிருந்த
வேளையில் ஹெலனின் எழுத்துப்பணியில் உதவ பீட்டர் ஃபேகன் என்னும் இளம் எழுத்தாளர், தற்காலிக காரியதரிசியாக
நியமிக்கப்பட்டார். அந்நாளில் இருவருக்குள்ளும் ஆழமான காதல் உருவானது. இருவரும் திருமணம்
செய்துகொள்ளும் உரிமை கோரி அரசுக்கு விண்ணப்பித்தனர். முழுவதுமாய்த்
தன்னைப் புரிந்துகொண்ட, அந்த அற்புதக் காதலனைக் கைப்பிடிக்க முடிவெடுத்த நிலையில், ஹெலனின் வீட்டோரால்
அக்காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பீட்டர் துப்பாக்கிமுனையில்
மிரட்டப்பட்டார். தன் வீட்டினரை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்ள ஹெலன் துணிந்த
போதிலும், துரதிஷ்டவசமாக பீட்டர் ஹெலனின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும்
காணாமற்போனார்.
தன் குறுகிய காலக் காதல் வாழ்க்கையைப் பற்றி ஹெலன் இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘என் தனிமையைப்
போக்க வந்த சூரியன் அவன், இருள் நிறைந்த கடலில் மகிழ்வோடு இளைப்பாறக் கிடைத்த சிறு தீவு
என் காதல்.’
பார்வையற்றோருக்காகவும், காதுகேளாத வாய்பேச இயலாதோருக்காகவும் பாடுபடுவதே தம் வாழ்வின்
லட்சியமாகக் கொண்ட ஹெலன், அவர்களுக்காகப் பல புத்தகங்கள் எழுதினார்,
சொற்பொழிவுகள் ஆற்றினார், சட்டங்கள் உருவாக்கப் போராடினார், எல்லாவற்றையும் விட தன் வாழ்க்கையையே ஒரு
முன்னுதாரணமாக ஏற்கும் வகையில் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துகாட்டினார். பார்வையற்றவர்க்கென்று
தேசிய நூலகம் ஒன்றையும் உருவாக்கி, உலக முழுதும்
அதற்கு நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார்.
ஹெலன் தம்
ஆசிரியர் ஆன் சல்லிவனுடன் பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, செல்லும் வழியெல்லாம் தன்னைப் போன்ற மாற்றுத்
திறனாளர்களுக்குத் தன்னம்பிக்கை விதைகளைத் தூவினார்.. தன்னால் பண்படுத்தப்பட்ட ஹெலனின்
வளர்ச்சியையும், சாதனையையும்
கண்டு அவ்வாசிரியரின் உள்ளம் எத்தகைய பேருவகை கொண்டிருக்கும்!
1936 இல் ஆன் சல்லிவன்
ஹெலன் கெல்லரை விட்டும் இவ்வுலகைவிட்டும் நீத்தார். அவருடைய மரணம் ஹெலனை மிகவும்
பாதித்தாலும் ஆதரவற்றுப் போய்விடவில்லை. 1914 ஆம் ஆண்டு முதல் அவர்களுக்குத் துணையாக
வீட்டுவேலைகள் செய்துவந்த பாலி தாம்ஸன், ஆன் சல்லிவனின்
இடத்தை ஓரளவு நிரப்பினார். ஹெலனின் பணிகளில் அவருக்குக் கைகொடுத்தார். சோதனை போல் 1960 இல் அவரும் இறந்துவிட... திருமதி வினிஃப்ரட்
கார்பலி என்னும் தாதி, ஹெலனின்
இறுதிக்காலம் வரை அவருக்கு உற்ற துணையாக விளங்கினார்.
ஹெலன் கெல்லர், ஐந்து கண்டங்களிலும் 35 நாடுகளில் தம் பாதம் பதித்து, சேவையாற்றியுள்ளார். 1965 இல் அவர் மேற்கொண்ட ஆசியச் சுற்றுப் பயணமானது 40,00 மைல்கள் தூரத்தையும், ஐந்து மாத கால அவகாசத்தையும் கொண்ட மிக நீண்ட, கடின பயணமாகும். அப்போது அவரது வயது 75.
1961 முதல் பொது வாழ்க்கையிலிருந்து
விலகியிருந்தாலும் உலகம் அவரை மறந்துவிடவில்லை. அப்போதும் பல விருதுகளும்
கெளரவங்களும் வீடு தேடி வந்தன. 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாள், அவருடைய 88 ஆம் பிறந்தநாளுக்கு சில தினங்கள்
முன்பு ஹெலன் கெல்லர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அவருடைய அஸ்தி, வாஷிங்டனில் உள்ள புனித அந்தோணியார்
தேவாலயத்தில் அவருடைய அற்புத ஆசிரியர்கள் ஆன் சல்லிவன் மற்றும் பாலி தாம்ஸனின்
அஸ்திகளோடு வைக்கப்பட்டது. அச்சமயம் நிகழ்த்தப்பட்ட மாபெரும் நினைவஞ்சலியில்
அவருடைய குடும்பத்தார்,
நண்பர்கள், உறவினர்கள், பெரும் பிரபலங்கள்,
அரசு உயரதிகாரிகள், காது கேளாதோருக்கான, பார்வையற்றோருக்கான பெரும் ஸ்தாபனத்தினர், அவரால் பயனடைந்தோர்,
நல்வழிப்படுத்தப்பட்டோரென
பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
'வாழ்க்கையை ஒரு
அவசர நெருக்கடியாக, ஒவ்வொருவரும்
உணரவேண்டும். அப்போதுதான் நமது ஆற்றல் எல்லாம் வலிமை பெற்று செயல்களைத் துரிதமாகச்
செய்ய முடியும்' என்பது அவர் தன்
எழுத்தின்மூலம் பரப்பிய கொள்கை ஆகும். ''வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை
இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது'' என்று சொன்ன
ஹெலன், தானே அப்படி வாழ்ந்து
காட்டியவர்.
மாபெரும்
மங்கையின் வாழ்க்கை, மாற்றுத்
திறனாளிகளுக்கு மட்டுமல்ல, மனம் சோர்ந்த
யாவருக்கும் ஒரு மாமருந்தாகும். வாழ்வின் உன்னதம் உணரச் செய்த அன்னாரின் செயற்கரிய
செயலை மனதிலேற்றி நாமும் நம்மால் இயன்றதை பிறர்க்கு உதவி வாழ்நாளை பயனுள்ளதாக்கிக்
கொள்வோம். நாமும் மகிழ்ந்து
பிறரையும் மகிழ்வுடன் வாழச்செய்வோம்.
தகவல் ஆதாரங்கள்:
ஹெலன் கெல்லரைப் பற்றி எனக்குத் தெரியும் கீதா - ஆனால் இவ்வளவு விரிவாக அல்ல. அதிலும் ஆன் சல்லிவன் பற்றி இப்போ தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. (ப்ளாக் திரைப்பட அமிதாப் காரெக்டர் நினைவுக்கு வருகிறது). ஆச்சரியத்தோடும், பிரமிப்போடும் நினைவுகூரப்பட வேண்டியவர் ஹெலன் கெல்லர். அருமையான பகிர்விற்கு ஆயிரம் நன்றிகள் தோழி.
ReplyDeleteமுதல் வருகைக்கும் அழகானக் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கணேஷ். ப்ளாக் திரைப்படமே ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை அடிப்படையாய் வைத்து எடுத்ததுதானோ என்று தோன்றுகிறது.
Delete" நம்மால் என்ன இயலும்
ReplyDeleteநம்மால் முடியாது"
என்ற அவநம்பிக்கை வார்த்தைகளுக்கு
தகுந்த அருமருந்து
படைத்திருக்கிறீர்கள் சகோதரி.
வாழ்வில் போராடி வெற்றி பெறவேண்டும்
என்ற வாக்கிற்கு ஹெலன் அவர்கள் நல்ல உதாரணம்.
அருமையான ஒரு கட்டுரைக்கு நன்றிகள் சகோதரி.
வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி மகேந்திரன்.
Deleteநானும் அவரது வாழ்க்கை வரலாற்று ந்நுலை வாசித்து அதிசயித்திருக்கிறேன். இன்றைய உங்களின் பகிர்வு பலருக்கும் உபயோகமுள்ளதாக அமையும்.
ReplyDeleteஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி சத்ரியன்.
Deleteவரி விடாமல் படித்தேன் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்
ReplyDeleteமாற்றுக்குறையா தங்கம் மாற்றுத் திறனாளி அவர்
வாழ்த்தத் தக்கவர் மட்டுமல்ல வணங்கத் தக்கவர்
இப்பதிவைத் தந்த தங்களுக்குப் பாராட்டுக்கள்!
சா இராமாநுசம்
தங்கள் நெகிழ்வான விமர்சனம் கண்டு மிக்க மகிழ்வும் நன்றியும் ஐயா.
Deleteஹெலன் கெல்லரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனேயொழிய அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில்லை.
ReplyDeleteஅவரது ஆசிரியையைப் பற்றியும் இன்று தான் தெரிந்து கொண்டேன்.
”வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது'' என்ற அவரது வார்த்தைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. நேரங்கிடைக்கும் போது படத்தையும் தவறாமல் பார்ப்பேன்.
மிகவும் அருமையான நடையில் கெல்லரின் வாழ்க்கை வரலாற்றினை அனைவரும் அறியத் தந்தமைக்குப் பாராட்டுக்கள் பல!
வருகைக்கும் ஊக்கம் தரும் விமர்சனப் பின்னூட்டத்துக்கும் நன்றி அக்கா. நேரம் கிடைக்கும்போது தவறாமல் படத்தைப் பாருங்கள். சோர்ந்த நேரங்களில் நம்மைத் தூக்கி நிறுத்தும்.
Deleteஹெலன் கெல்லர் என் போற்றுதலுக்குரியவர். இவ்வளவு விரிவாயும் டகல் பிழையின்றியும் தொகுத்திருக்கும் இந்தப் பதிவை சேமித்துக் கொள்கிறேன். நன்றியும் பாராட்டுகளும்...
ReplyDeleteவருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி மோகன்ஜி. கட்டுரை என்பதால் பலரைக் கவராது என்று நினைத்திருந்தேன். தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது.
Deleteஅற்புதமான ஒரு பெண்மணியின் கட்டுரையைப்படிக்கும்போது மனம் சந்தோசப்படுகிறது. அவரின் விடாமுயற்சியும் சல்லீவனின் ஊக்குவிப்பும் வியக்கத்தக்கது.
ReplyDeleteஆமாம் விச்சு. சமீபத்தில் பார்த்தத் திரைப்படம் மூலம் மனதில் அவரைப் பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து வட்டமிட்டுக்கொண்டே இருந்தன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விச்சு.
Deleteமிக அருமையாக விரிவாக எழுதியுள்ளீர்கள். பெயர் கேள்விப் பட்டுள்ளேன். இத்தனை விடயங்கள் தெரியாது. மிக நன்றி. தொடரட்டும் தங்கள் பணி . நல்வாழ்த்து. எங்கே தங்களைக் காணோமே என்பக்கம் வேலை நெருக்கடியோ! நலம் நிறையட்டும்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. கொஞ்சம் வேலைப் பளுதான். விரைவில் தங்கள் தளம் வருகிறேன்.
Deleteமனசுல சோர்வோ, சலிப்போ ஏற்பட்டுச்சுன்னா, ஹெலன் கெல்லரை நினைச்சுக்கிட்டா சலிப்பு பறந்து உற்சாகம் பிறந்துடும்னு தோணுது. இவரோட பேரைக் கேள்விப்பட்டிருந்த என்னை இவ்வளவு டீடெய்லாத் தெரிஞ்சுக்க வெச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ் கீதாக்கா.
ReplyDeleteவருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி நிரஞ்சனா.
Deleteவாசிக்க வாசிக்க ஒரு நெகிழ்வு.ஆனாலும் எத்தனை தைரியம்.இப்படி ஒரு நட்பும் கிடைக்கக் கொடுத்துவைக்கவேணுமே.....திரைப்படம் அதுவும் லிங்கோட...அளவு கடந்த சந்தோஷமும் நன்றியும் கீதா !
ReplyDeleteவருகைக்கும் மனந்தொடும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஹேமா.
Deleteகீதா, உங்களின் சில பதிவுகள் ஏனோ என் ரீடரில் வரவில்லை. இதுவும்.
ReplyDeleteஹெலன் குறித்த அதிகத் தகவல்கள் விபரமாகத் தெரிந்துகொண்டேன்.
படத்தில் ரேண்டமாக ஒரு இடத்தைக் கிளிக் செய்ய, ஓடியதோ ஆன் சல்லிவனுடனான ஹெலனின் முதல் சந்திப்பு. மனதைக் கரைத்துவிட்டது.
முழுதும் இனிதான் குழந்தைகளோடு பார்க்கவேண்டும், இன்ஷா அல்லாஹ்.
ஹூஸைனம்மா, உங்களுக்கு மட்டுமல்ல, பலருடைய டாஷ்போர்டிலும் என் பதிவுகள் தெரியவில்லை என்கிறார்கள். பரிசோதிக்க நானே என்னைப் பின்தொடர்கிறேன். கொடுமை, எனக்கும் என் பதிவுகள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. என்ன செய்து எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. சில நாட்களாகவே என் பிளாக்கரில் கோளாறு. சில சமயம் தானாய் சரியாகிவிடும். அதனால் காத்திருக்கிறேன்.
Deleteஹெலன் கெல்லர் என்னும் உறுதிமிக்கப் பெண்மணியின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு உற்சாக ஊற்று. குழந்தைகளுடன் பார்க்கிறேன் என்றதற்கு நன்றி ஹூஸைனம்மா.
உங்களின் இந்தப் பதிவை முன்பே படித்தது போல் ஞாபகம் வருகிறது மஞ்சரி அவர்களே.ஹேலன் அவர்களோடு சேர்ந்து அந்த ஆசிரியரும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் அல்லவா. மிகவும் நன்று கீதமஞ்சரி அவர்களே.
ReplyDeleteஹெலன் கெல்லர் பற்றி தாங்கள் வேறெங்கும் முன்பே படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அற்புதமான பெண்மணி அல்லவா அவர்? என் மற்றப் படைப்புகளை தமிழ்மன்றத்தில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட
முகவரி http://blogintamil.blogspot.com/2014/08/v-behaviorurldefaultvmlo.html?showComment=1407971958042#c8319385501671425565
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
Deleteவாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்! அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது'' என்று சொன்ன ஹெலன், தானே அப்படி வாழ்ந்து காட்டியவர்.//
ReplyDeleteமிக அருமை. தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள். அருமையான பெண்மணி பற்றிய இந்த பதிவு என் டேஷ்போர்டில் தெரியவில்லை கீதமஞ்சரி அனுராதாபிரேம் அவர்களின் தளம் மூலம் அறிந்து கொண்டு வந்தேன்.
அருமையாக தொகுத்து கொடுத்து விட்டீர்கள் .
‘//என் தனிமையைப் போக்க வந்த சூரியன் அவன், இருள் நிறைந்த கடலில் மகிழ்வோடு இளைப்பாறக் கிடைத்த சிறு தீவு என் காதல்.’//
அவரின் கதலைப்பற்றி அவர் சொன்னது நெகிழ்வாய் இருக்கிறது.
ஹெலன் அவர்களுக்கு கிடைத்த ஆசிரியரும் இறைவனின் கருணை என்றுதான் சொல்லவேண்டும்.
படத்தைப் பார்க்கிறேன். நீங்கள் கொடுத்து இருக்கும் காணொளி தெரியவில்லை.
கருத்துக்கு நன்றி மேடம். காணொளியை வலையில் வைத்திருப்பதற்கும் காலவரையறை உண்டு போலும்.
Deleteஅன்பின் கீத மஞ்சரி - ஹெலன் கெல்லர் - நீண்டதொரு பதிவு அருமை - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - இரசித்தேன் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.
Deleteஹெலன் கெல்லரைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு தெளிவாக படிக்கவில்லை. நான் படித்த புத்தகத்தில் வரலாறு மிகக்குறைவாகவே இருந்தது.. இந்த பதிவின் மூலம் அறிய முடிந்தது.. நன்றி
ReplyDeleteஹெலன் கெல்லர் குறித்த இக்கட்டுரையை எழுதி மூன்று வருடங்களுக்கு மேலாகியும் என்னுடைய பதிவுகளிலேயே பெரும்பான்மையினரால் வாசிக்கப்பட்டு முதலிடத்தில் இருப்பதும் இப்போதும் தொடர்ந்து பின்னூட்டம் கிடைப்பதும் மிகவும் மகிழ்வாக உள்ளது. மிக்க நன்றி நண்பரே.
Deleteஹெலன் கெல்லரைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு தெளிவாக படிக்கவில்லை. நான் படித்த புத்தகத்தில் வரலாறு மிகக்குறைவாகவே இருந்தது.. இந்த பதிவின் மூலம் அறிய முடிந்தது.. நன்றி
ReplyDelete