தினமும் பார்க்கும் காட்சிதான்
என்றாலும் இன்றும் பார்க்கத் தோன்றியது. குழந்தைகளின் குதூகலத்தைப்போல்
ஒவ்வொருநாளும் சலிக்காமல் என்னமாய் விளையாடுதுகள்? காதலுடன் ஒன்றையொன்று துரத்திப் பிடித்து விளையாடும் அழகே அழகு.
முன்னால் ஓடிய மல்லி சற்றே நின்று பின்னால் வரும் மாதுவைப் பார்த்தது. ஆமாம்,
மைதிலி அந்த அணிற்சோடிக்கு அப்படிதான்
பெயரிட்டிருந்தாள்.
சம்பத்திடம் சொன்னபோது அவனால் சிரிப்பை
அடக்கமுடியவில்லை. வீடே அதிரும்படி ஓஹோவென்று சிரித்தான். அப்படியே
சிரித்துவிட்டுப் போயிருந்தால் கூடப் பரவாயில்லை. கீழே ஓடிப்போய் அம்மாவிடமும்
அப்பாவிடமும் சொல்ல... வேலைக்காரி சுப்பு உட்பட எல்லோரும் அவளைக் கேலியாகப்
பார்த்து சிரித்தபோதுதான் வெட்கம் பிடுங்கித் தின்றது.
சே! என்ன மனுஷன் இவன்? பெண்டாட்டி கிசுகிசுப்பாய் சொன்னதை இப்படியா பகிரங்கப்படுத்தி கேலி
செய்வது? காற்றிலாடி ஊடியும்
உறவாடியும் கதைபேசிய கயிறுகளுக்குப் பெயரிட்ட பாரதியைக்
கேள்விகேட்பாரில்லை. அணிற்குஞ்சுகளுக்குப் பெயரிட்ட என்னைக் கேலி பேசுகிறார்கள்.
ஹும்!
மனதுக்குள் மருகிக்கொண்டிருந்தபோது
அத்தையின் பேச்சு வெடுக்கென்று அவள் மானத்தைப் பறித்துக் காற்றில் பறக்கவிட்டது.
"ஆமாம், ஒரு பிள்ளையைப் பெத்து பேர்வைக்கத் துப்பில்லை... அணிப்பிள்ளைக்குப் பேர் வைக்கிறாளாமா?"
சுருக்கென்று தைத்தது. தைக்கட்டும்
என்றுதான் பேசியிருப்பாள் என்பதும் புரிந்தது.
சம்பத்தைத் தேட அவன் யாருடனோ வாசலில்
பேசும் குரல் கேட்டது. சற்று நேரத்தில் உள்ளே வந்தவன்,
"அப்பா... நாடார் வந்தாரு. மரத்தையெல்லாம் பாத்தாராம். அடுத்தவாரம் வந்து உரம் வச்சிட்டுப் போறேன்னாரு... எவ்வளவு ஆவும்னேன். அம்மாவுக்குத்
தெரியும்னுட்டாரு... நீங்களே பாத்துப் பேசிக்கோங்க..."
"சம்பத்து... அவருகிட்ட இந்த மூணாந்தென்னைமரம் பத்திக் கேட்டியாடா?"
"இல்லயே, என்னப்பா கேக்கணும்?"
"என்னடா இப்படிக் கேக்குறே? மூணு வருஷத்துல காய்க்கும்னு வச்சது. கூடவச்ச மரமெல்லாம் காச்சிக்
குலுங்குது. இதுமட்டும் இன்னமும் கன்னி கழியாத புதுப்பெண்ணாட்டம் அப்படியே நிக்கிது. சனியன் புடிச்சதை வெட்டிட்டு புதுசு
நட்டிருந்தாக்கூட இந்நேரம் பாளை கட்டியிருக்கும். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாம
இப்படி வெட்டியா நிக்கிது!"
அத்தை தென்னை பற்றிப் பேசுகிறாளா?
தன்னைப் பற்றிப் பேசுகிறாளா? மைதிலி குழப்பத்துடன் காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள். அரிந்த
காய்கறிகளை எடுத்துப்போகவந்த சுப்பு, மைதிலியின்
கண்ணீரின் காரணம் வெங்காயமா? மனக்காயமா? என்றறிய அவள் முகத்தையே பார்த்தாள்.
வேலைக்காரியின் பரிதாபப்பார்வையைப்
புறந்தள்ளி தன் வேலையைத் தொடர்ந்தாள். மைதிலி வேறென்ன செய்வாள்?
அம்மா சொன்னாள், 'நம்ம வம்சத்துக்கு எழுதிவச்ச விதி இதுதான் போல... எல்லாருக்கும் லேட்டாதான் பிள்ளை உண்டாவுது. ஆனா ஒருத்தருக்கும் பிள்ளை இல்லாமப் போகலை... உன் சித்தி மகள் ரேவதிக்கு ஏழு வருஷம் கழிச்சுதான் தரிச்சிது... பாண்டுவுக்கு ஆறு
வருஷம்... ஏன் ... நம்ம பெரியாத்தா பேரனுக்கு........"
உடனடியாய்ப் பிள்ளை உண்டானவர்களை
கவனமாய்த் தவிர்த்து அங்குமிங்குமான உதாரணங்களைத் தேடிப்பிடித்துக் காட்டி
அவளுக்கு ஆறுதல் சொன்னாள். மைதிலிக்கும் ஏக்கமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன
செய்வது? அதற்காக இல்லாததை நினைத்து ஏங்கி, இருக்கிற
வாழ்க்கையைத் தொலைத்துக்கொள்வதா?
அத்தைதானே, பேசினால் பேசட்டும், பாவம் ஒரே மகன், அவன் வாரிசைப் பார்க்க அவர்களுக்கும் ஏக்கம் இருக்காதா? பேரப்பிள்ளையை மடியில் போட்டுக் கொஞ்சி விளையாட ஆசை இருக்காதா?
மனதைத்
தேற்றிக்கொண்டிருந்தவேளையில்தான் அத்தை அந்த திடுக்கிடும் யோசனையை முன்வைத்தாள்.
"ஏன்டா சம்பத்து... இந்த சனியன் பிடிச்சதை வெட்டியெறிஞ்சிட்டா என்ன?"
"எந்த சனியனைம்மா?"
"ம்? பூவும் வைக்காம காயும் வைக்காம வெட்டியா நிக்குதே ஒண்ணு. தண்ணிக்கும்
உரத்துக்கும் பிடிச்ச கேடு! அதைத்தான்!".
"ஆத்தீ.... அடுக்குமா இது?"
சுப்பு அதிர்ச்சியுடன் மேவாயில் கைவைத்துக்
கேட்டாள்.
"டீ... நீ சும்மா இரு! எல்லாத்துக்கும்
ஏடாகூடமா எதாவது சொல்லிகிட்டு!" அத்தை அவளை அடக்கினாள்.
"எத்தன வருசமா பாத்தாச்சி? வெட்டிடவேண்டியதுதான். அடுத்தவாரம் நாடார் வரும்போது சொல்லி ஏற்பாடு
பண்ணிடறேன்!" அத்தை முடிவெடுத்துவிட்டாள்.
தென்னைமரத்தை வெட்டவேண்டாமென்று
எத்தனைக் கெஞ்சியும் பயனில்லை. மலட்டு மரத்துக்கு சிபாரிசு என்னவென்று ஆயிரம்
குத்தல்பேச்சுகளைத் தவிர வேறெந்த எதிர்வினையும் உண்டாகவில்லை.
மைதிலிக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை.
நள்ளிரவில் சன்னலருகில் நின்று தென்னங்கீற்றிடுக்கில் கண்ணாமூச்சியாடும் நிலவினைப்
பார்த்தபடியே நின்றிருந்தாள். மனம் தன்னிச்சையாய்ப் பிதற்றத் தொடங்கியிருந்தது.
காய்ப்பற்றத் தென்னையே!
காய் பற்றாக்காரணத்தால்
காப்பாற்ற ஆளின்றிப்போனாயோ?
காத்திருந்து காத்திருந்து
கண் பூத்தது, தென்பூக்கவில்லையென்றே
காரணம் சொல்லி வேரொடு வீழ்த்த
காலக்கெடு குறித்துவிட்டார்!
எத்தனை உரமிட்டாயிற்று,
எத்தனைக் களையெடுத்தாயிற்று,
எத்தனை வருடமாயிற்று,
எத்தனை விடுவதாவென்று
எத்தனை முஸ்தீபுகள்?
சொரணை கெட்ட மரமே!
சட்டென்று பாளை வையேன்
எரியும் வயிற்றில் பாலை வாரேன்,
என்னோடு உறவாடிய நீ
என்னெதிரே வேரற்று வீழ்வதை
விழிகொண்டு காண இயலுமோ?
உனக்காய் இரங்கும்வேளையில்
உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு!
உனைப்போலவே எனக்கும்
உறவறுக்கும் தேதியொன்று
உறுதியாகக் குறிக்கப்படுமோ?
பால்கனிக் கதவைத் திறந்து வெளியில்
வந்தாள். சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. தென்னங்கீற்று சடசடப்புடன் மேல்ல
அவள் தோளை உரசியகன்றது. அகன்றதை எட்டிப்பிடித்துக்கொண்டு கன்னத்துடன் உரசியபடியே
கண்மூடி அதன் முரட்டு ஸ்பரிசத்தை அனுபவித்தாள்.
திருமணமாகி வந்த இந்த நான்கு வருஷமாய்
தன்னுடன் உறவாடிய மரம்! தேனிலவு அனுபவித்த காலங்களில் சம்பத் தன்னிடம் செய்த
குறும்புகளை அக்கம்பக்கம் அறியாமல் மறைத்து அந்தரங்கம் காப்பாற்றிய மரம். இப்போது
வளர்ந்துவிட்டது, என்றாலும் இன்னமும் கீற்றுகளைத்
தவழவிட்டு தன் தோள் தடவி ஆறுதல் தந்துகொண்டிருக்கும் மரம்..
வீட்டைச் சுற்றிலும் ஏழு தென்னைகள்
இருந்தாலும் இந்தமரம் மட்டும்தான் இவள் தொட்டுப்பேச இடங்கொடுத்த மரம்.
பக்கத்துவீட்டைப் பார்த்தாற்போலிருந்த இவர்களது அறையின் பால்கனியை ஒட்டி
வளர்ந்திருந்த அம்மரத்தை மூணாம் மரம் என்றுதான் குறிப்பிடுவர். கொஞ்சநாளாய் இரண்டு
அணிற்சோடிகளின் வருகையும் அதிகரிக்க, மைதிலிக்கு
ஒவ்வொருநாளும் ஓய்வுப்பொழுதில் தன்னறைக்குவந்து அவற்றை ரசிப்பதே வாடிக்கையாயிற்று.
அந்த அணில்களைப் பார்க்கும்போது தானும் சம்பத்தும் சந்தோஷமாய்க் கழித்த நாட்கள்
நினைவுக்கு வந்தன.
இரண்டும் இவளைக் கண்டால் முதலில்
பயந்து ஓடிக்கொண்டிருந்தன. இப்போது இவளை அவ்வளவாய் லட்சியம் செய்வதே இல்லை.
இரண்டும் குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டன. கூடு கட்டுவதில் இரண்டும் பிஸி.
எப்போது பார்த்தாலும் பஞ்சு, தேங்காய் நார் எதையாவது வாயில்
வைத்துக்கொண்டுமரத்தில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தவற்றை.....
ஐயோ..... இப்போதுதான் மைதிலிக்கு
ஞாபகம் வந்தது. அடக்கடவுளே! இரண்டும் இந்த மரத்தில்தானே கூடு கட்டின? மரத்தை வெட்டிவிட்டால் அவற்றின் கதி? கூடு கட்டிமுடித்து குட்டிகள் ஈன்றிருக்குமா? என்ன செய்வது இப்போது? நினைக்கவே
நெஞ்சம் பதறியது.
காலையில் சம்பத்திடம் மெல்ல பேச்சைத்
துவக்கினாள்.
"ஏங்க, இந்த மூணாம்மரத்தை வெட்டுறதை அத்தைகிட்ட சொல்லி கொஞ்சநாள் தள்ளிவைக்க
முடியுமா?"
"ஏன்?"
"இல்ல.... அந்த மரத்திலதான்
அணிப்பிள்ளைங்க கூடு கட்டுது. அதான்..."
"அதனால என்ன?"
அதனால் என்னவா? இப்படிக் கேட்பவனிடம் எப்படிச் சொல்வது?
"குட்டி போட்டிருக்கும்னு நினைக்கிறேன்.
அணில்கூட்டைக் கலைச்சி அதோட புள்ளைங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா அப்புறம் அந்தத்
தாய் படற வேதனையைப் பாக்க என்னால் முடியாதுங்க. கொஞ்சநாளானா அதுங்க வளர்ந்து
வெளியில போயிடும். அப்புறமா...."
"மைதிலி, இதை எப்படி அம்மாகிட்ட சொல்லமுடியும்? எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணி ஆளுக்கு சொல்லிவிட்டாச்சி. இப்ப போய்
சொன்னா.... அம்மா கடுப்பாயிடுவாங்க, அதுவுமில்லாம
அதைச் சொல்றதுக்கும் ஒரு தகுதி வேணாமா?”
"என்ன தகுதி வேணும்?"
சம்பத் மெளனமாயிருந்தான்.
"சொல்லுங்க, என்ன தகுதி வேணும்? ஒரு மனுஷியா இருக்கிறேனே, இது பத்தாதா? பிள்ளை பெத்திருந்தாதான் தாய்மை பத்தி
தெரியுமா? இல்ல.. தாய்மை பத்திப் பேச அருகதை
இருக்கா? என்ன சொல்லவரீங்க?"
பதில் சொல்லாமல் விடுவிடுவென்று
மாடிப்படிகளில் இறங்கிப்போனவனின் பின்னாலேயே மைதிலியும் விரைந்தாள்.
“ஏய், காலையிலேயே என்ன அவன்கிட்ட நச்சரிப்பு?"
சாமியே வந்து கேட்கும்போது இடையில்
பூசாரியிடம் என்ன கெஞ்சல்?
"அத்தே... தென்னமரத்தை ஒரு பத்துப்
பதினஞ்சு நாள் கழிச்சு வெட்டச் சொல்லமுடியுமா?"
"அதுக்குள்ள அந்தமரம் என்னத்தைக்
கிழிக்கப்போவுது?"
"அந்த மரத்தில அணில் கூடு
கட்டியிருக்கு... அது..."
"ஏண்டி, ஒரு புள்ளய தக்கவைக்கத் துப்பில்ல, அணிப்பிள்ளைக்கும் தென்னம்பிள்ளைக்கும் வக்காலத்து வாங்குறே?"
"நல்லாக் கேளும்மா, இதைத்தான் நானும் சொன்னேன்."
கோடரி தென்னையை வீழ்த்துமுன்
வார்த்தைகள் இவளை வீழ்த்தின. அத்தையிடமிருந்து அடிக்கடி வெளிப்பட்டு முனை
மழுங்கியிருந்த பழிபேசும் ரம்பத்தைவிடவும் சம்பத்திடமிருந்து புதிதாகப் புறப்பட்ட
நன்கு கூர்தீட்டப்பட்ட வார்த்தைக்கோடரி அவளது எதிர்கால நம்பிக்கையை ஒரே வெட்டில்
துண்டாக்கியது. இத்தனைநாள் எங்கு மறைத்துவைத்திருந்தான் இவ்வாயுதத்தை? எப்போது சாணைபிடித்தான்? தக்க சமயம்
பார்த்து உபயோகித்துவிட்டானே!
மைதிலி நிலைகுலைந்துபோனாள்.
பித்துப்பிடித்தவள்போல் வளையவந்தவளைத் தேற்றவும் ஆளில்லை.
வீம்புக்காகவே வேலைகள் முடுக்கிவிடப்பட்டு
துரிதமாய் நடைபெற்றன. பக்கத்துவீட்டுப் பக்கம் சாய்ந்துவிடாமல் மரம் உள்நோக்கி
இழுத்துக்கட்டப்பட்டது. மல்லியும் மாதுவும் தங்கள் எதிர்ப்பையும் பயத்தையும் காட்ட
உச்சஸ்தாயியில் கத்திக் கூப்பாடிட்டுக் கொண்டிருந்தன. உதவிக்கு இவளை அழைக்கின்றனவோ?
மைதிலி அறைக்குள்
முடங்கிப்போயிருந்தாள். அடிவயிற்றுக்குள் ஒரு பிரளயமே உருவாகிக்கொண்டிருந்தது.
ஐயோ... மல்லி! சும்மா இரேன்! என்னால் தாங்கமுடியவில்லையே.... மாது.... ஏண்டா
என்னைப் படுத்தறே!
மட்டேர் மட்டேர் என்று கோடரிச் சத்தம்
மரத்துடன் இவள் இதயத்தையும் சேர்த்தே பிளந்தது.
சடசடவென்ற சத்தத்துடன் முறிந்து
விழுந்தது மரம்.
பால்கனிக் கதவைத் திறந்து பதைப்புடன்
எட்டிப்பார்த்தாள் மைதிலி.
தென்னை தலை கொய்யப்பட்டும் உடல் துண்டுகளாக்கப்பட்டும்
ஒரு போர்க்களத்து வீரனைப் போல் சிதறிய அங்கங்களுடன் ஆங்காங்கே கிடந்தது.
பஞ்சுப்பொதிபோல் கிடந்த அணிற்கூட்டை காக்கைகள் முற்றுகையிட்டிருந்தன. மல்லியையும்
மாதுவையும் தேடினாள் மைதிலி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றைக் காணவே இல்லை.
அவள் மனம் கொண்ட வெறுமையை பால்கனி
பிரதிபலித்துக்கொண்டிருந்தது.
(படம் உதவி: இணையம்)
ஈரமற்ற இதயங்கள்! அருமையான நடையில் மனதைத் தொட்ட நல்ல கதை.
ReplyDeleteவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteவார்த்தைகளால் துண்டாடப் படுகிற ஒரு பெண்ணின் வேதனையை அணிலையும் தென்னை மரத்தையும் வைத்து சொல்லி இருக்கிற விதம் அருமை. மனம் கனக்க செய்யும் சிறுகதை. வார்த்தைகள் கதையின் ஆழத்தை புரியவும்..வலியை நாம் உணரவும் செய்கிறது .
ReplyDeleteவருகைக்கும் விமர்சனப் பதிவுக்கும் மிகவும் நன்றி தீபிகா.
Deleteமுடிவு அப்பெண் கற்பம் தரித்து அவர்கள் முகத்தில் கரியைப்பூசுவதாய் இருக்கும் என்று நினைத்தேன் ..,
ReplyDeleteஇப்போது மருத்துவம் எவ்வளவோ வளர்ச்சியை எட்டியிருந்தும் இன்னும் இதுபோல சில மனிதர்கள் (?) இருக்கவே செய்கிறார்கள் :(
கூடுமானவரை யதார்த்தம் மீறாத வகையிலேயே கதைகளை எழுத முயற்சி செய்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வரலாற்று சுவடுகள்.
Deleteஅவர்கள் பேசியது தென்னை மரத்தையா. மைதிலியையா? அவள் கண்ணீருக்குக் காரணம் வெங்காயமா. மனக்காயமா? அருமையான வரிகளில் படைத்திருக்கிறீர்கள் கீதா. கதையின் ஊடாய் தந்திருக்கும் கவிதையும் அருமை. ஆனால் மற்றவர் மனம் அறியாமலும் கருணையற்றும் வாழும் மனிதர்களை எண்ணுகையில் கோபமும் வேதனையும் கலந்து வருகிறது. சிறுகதையின் கடைசியில் வரும் வெறுமை என்னையும் தாக்கியது உங்கள் சிறந்த எழுத்துக்குச் சாட்சி.
ReplyDeleteமிகவும் ஊன்றிக் கவனித்திருக்கிறீர்கள் என்பது உங்கள் விமர்சனம் மூலம் தெரிகிறது. அழகான ஆழமானக் கருத்துப்பதிவுக்கும் ஊக்கம் தரும் வரிகளுக்கும் மிகவும் நன்றி கணேஷ்.
Deleteகதை மாதிரியே தெரியல சகோ கண்முன் வந்து போன காட்சியை முழுக்க பார்க்க முடியாமல் கண்ணீர் முட்டுகிறது . மனதுக்குள் ஒரு நெருடல் மைதிலிக்கும் இந்நிலை வந்துவிடுமோ என்று .
ReplyDeleteவருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றி சசிகலா.
Deleteமுதலில் வாக்கிட்டே, மறுமொழி பிறகிட்டேன்! முத்திரைக் கதை!
ReplyDeleteஉன்னத நடை! கண் முன் காணும் திரைப்படம் போல காட்சிகள்!
இடையே ஓர் ஓவியக் கவிதை!
என்றும் நெஞ்சில் நின்று நிலவும்!
அருமை!
சா இராமாநுசம்
தங்கள் வருகையும் ஊக்கம் தரும் பாராட்டும் கண்டு மகிழ்கிறேன். மிகவும் நன்றி ஐயா.
Deleteகதைப் போக்கு அவதானிப்பதாயிருந்தாலும் கதை முடிவில் மனம் கனத்து பெருமூச்செறிந்தேன் தோழி. கதைப்பின்னலும் உரையாடல்களின் கூர்மையும் பாத்திரப்படைப்புகளும் ப்ரமாதம்! ட்ரமாட்டிக்காக (அவர்கள் மனம் மாறுவது அல்லது மைதிலி கருத்தரிப்பது) இல்லாமல் யதார்த்தமாக கதைமுடித்திருந்த தங்கள் திறன் பாராட்டத் தக்கது. உணர்வுகளின் வெளிப்பாடு கதையை மிக உயிர்ப்போடிருக்கச் செய்தது. அம்மாவின் ஆறுதலோடு ஜீவகாருண்ய மனசும் படைப்புத் திறனுமே மைதிலியைத் தாங்கிப் பிடிக்கிறது. கவிதையின் வார்த்தை விளையாட்டு அழகு!
ReplyDeleteஅழகான தேர்ந்த விமர்சனத்துக்கு நன்றி நிலாமகள். உங்கள் வார்த்தைகளின் ஊக்கத்தால் இன்னும் எழுதும் ஆவல் பிறக்கிறது. மீண்டும் நன்றி.
Deleteகதை என்று ஒரு கரு மனதில் இருந்தாலும் சொல்லத் தெரிவதில்லை எனக்கு.அந்தக் கலை அழகாகக் கைகூடியிருக்கு கீதா உங்களுக்கு.சாதரண கதைபோல இருந்தாலும் சொன்ன விதத்தில் மனம் நெகிழவைத்துவிட்டீர்கள்.உணர்வுக்கு மைப்பூச்சுக்கள் !
ReplyDeleteகதையென்ன ஹேமா, உங்களுடைய நான்குவரிக் கவிதை உண்டாக்கும் தாக்கம் எவ்வளவு வீரியம். வருகைக்கும் ஊக்கம் தரும் விமர்சனத்துக்கும் நன்றி ஹேமா.
Deleteகதைக்கருவும், எழுத்து நடையும், கோர்வையான சம்பபங்களும் அருமையோ அருமை. படித்து முடிக்கும்போது மனம் கனத்துப்போனது.
ReplyDeleteமிகச் சிறப்பான தங்கள் எழுத்துக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இதே கதைக்கருவில் நான் ஒரு சிறுகதை வெளியிட்டிருந்தேன்
தலைப்பு: நாவினால் சுட்ட வடு
இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2011/01/1-of-2_13.html
http://gopu1949.blogspot.in/2011/01/2-of-2.html
முடிந்தால், நேரமிருந்தால் படித்துவிட்டு, கருத்துக்கூறுங்கள், மேடம்.
அன்புடன்
vgk
நாவினால் சுட்ட வடு கதையின் இருபகுதிகளையும் படித்துப் பின்னூட்டமிட்டேன். மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை நுணுக்கமாய் உணர்த்திய தன்மையைப் பாராட்டுகிறேன். என் மனந்தொட்டக் கதை அது.
Deleteதங்கள் வருகைக்கும் விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி வை.கோ.சார்.
ஆஆஆஆஆ அழகான கதை அக்கா.
ReplyDeleteவாசிக்கும் போதே இறுதி முடிவை கிரகத்தேன்
ஆனால் நான் கிரகித்தது தவறாகிவிட்டது..
ம்ம்ம் நல்ல கதை..
வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி எஸ்தர்.
Deleteவணக்கம் சகோதரி..
ReplyDeleteஅருமையான கதை.
கதையில் கதை நாயகியின்
வெறுமை எண்ணம் முழுக்க முழுக்க
தெரிந்தாலும்
நீங்கள் கதையாகவும் ஊடே
கவிதையாகவும்
சொன்ன விதம் அழகு..
வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி மகேந்திரன்.
Deleteஅருமை.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி காஞ்சனா.
Deleteகதையின் கரு நெஞ்சைத் தொட்டது
ReplyDeleteசொல்லிச் சென்ற அழகும் மிக அருமைங்க கீதமஞ்சரி அக்கா.
வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அருணாசெல்வம்.
Deleteஇதுதான் முடிவோ என்ற யூகத்திலே படித்தேன்.. ஏமாந்தேன்.. அருமையான கதை..
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.
Deleteகீதமஞ்சரி31/5/12 20:56
ReplyDelete//நாவினால் சுட்ட வடு கதையின் இருபகுதிகளையும் படித்துப் பின்னூட்டமிட்டேன். மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை நுணுக்கமாய் உணர்த்திய தன்மையைப் பாராட்டுகிறேன். என் மனந்தொட்டக் கதை அது.
தங்கள் வருகைக்கும் விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி வை.கோ.சார்.//
மிக்க நன்றி, மேடம்.
இந்தத்தங்களின் ”காய்க்காத மரம்” சிறுகதையின் தலைப்பும், நடையழகும் என்னை மிகவும் கவந்தது.
வெகு அழகாகவே, அந்த அணில் குட்டிகள் போலவே, மிக மென்மையாக, அதே சமயம் துடிப்புடன் வார்த்தைகளைக் கையாண்டுள்ள விதமும், இடையே அந்தப்பாடல் வரிகளும் மிகச்சிறப்பாகவே உள்ளன.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். ;)))))
மீண்டுமொரு முறை பாராட்டி வாழ்த்தி ஊக்கம் தந்த தங்களுக்கு என் அன்பான நன்றிகள் வை.கோ.சார்.
Deleteமரத்தைச் சாக்காக வைத்து மருமகளைச் சாடும் மாமியார், குழந்தை உண்டாகாமல் போவதற்கும் தானும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற நினைப்பே இல்லாமல் பழியை முழுவதுமாக மனைவி மீது போடும் கணவன் இக்காலத்திலும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ReplyDeleteமுடிவில் கருத்தரித்தாள் என்று முடிக்காமல் யதார்த்தமாக முடித்தது சிறப்பு. மனம் கனக்க வைக்கும் கதை. இடையில் வரும் கவிதையும் அழகு.
பாராட்டுக்கள் கீதா!
வருகைக்கும் ஊக்கம் தரும் அருமையான விமர்சனத்துக்கும் நன்றி அக்கா.
ReplyDeleteமென்மையான மன உணர்வை மனிதத்தோடு சொல்லிப் போன கதை கீதா. ஒரு ஊமையின் விம்மலைப் போல ஒரு வலியை விட்டுச் செல்கிறது கதை. அண்மையில் ஆனந்தவிகடனில் ஒரு கவிதை பார்த்தேன்.
ReplyDeleteபறவைகளின் காவலாளி
முற்றத்தில் காயும்
தானியங்களைப் பார்த்துக் கொள்ளுமாறு
நிலாக்குட்டியைக்
காவலுக்கு வைத்து விட்டு
அம்மா கடைக்குச் சென்றாள்
பொறுக்க வரும் காக்கைகளை விரட்டாமல்
‘சீக்கிரம்...சீக்கிரம்...
அம்மா வர்ரதுக்குள்ளே
தின்னுங்கோ’
எனச் சொல்லும் நிலாக்குட்டியின்
அன்பின் பெருவெளியைச்
சமப்படுத்த
வார்த்தை சிக்கவில்லை எனக்கு
- ந. சிவநேசன் -
பூப்போல இருக்கின்ற உள்ளம் எப்போது கொடுவாளாய் மாறும் என யாருக்குத் தெரியும் கீதா?
அருமையான கதை. உங்கள் உள்ளத்தின் அழகையும் இங்கே காண்கிறேன். எல்லோராலும் இதனை உணரமுடியாது தோழி. அதனைச் சொல்லவும் ஒரு மனம் வேண்டும்.சொன்னீர்க! அதற்கு என் மானசீக வணக்கங்கள்.
(இதற்குப் பிறகு ஒரு ஆழமான பதிவு ஒன்று போட்டிருக்கிறீர்கள். அதைப் பார்க்க தனியாக வரவேண்டும்.)
அட, அழகான கவிதையுடன் ஆழ்ந்த விமர்சனம். மிகவும் நன்றி மணிமேகலா. இன்று எங்கள் வீட்டு நிலாவைப் பற்றி ஒரு பதிவு இட்டிருக்கிறேன். முடியும்போது பார்த்துக் கருத்துச் சொல்லுங்கள்.
Deleteமிக அருமையான கதை மற்றும் ஏற்றார்போல கவிதை.... மனம் கனக்கிறது அணிலை மட்டும் அல்ல அவளையும் நினைத்து!!! பெண்களே பெண்களுக்கு எதிரி.. என்று தான் மாறுமோ இந்த நிலை!!! அழகான சிறுகதை கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள்!!!
ReplyDelete