27 February 2012

பொன்மலை என்பது என் ஊராம்....




என் ஊர் பற்றியத் தொடர்பதிவுக்கு எனக்கும் அழைப்பு விடுத்த வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் ஊர் என்று சொல்லும்போதே அதில் தொணிக்கும் பெருமிதத்தை எவராலும் உணரமுடியும். அறியா வயதில் அதுதானே நம் உலகம்.மனம் லயித்து எழுதவேண்டும் என்பதற்காகவே ஒத்திப்போட்டுவந்த என்னை மற்றுமொரு தொடர்பதிவுக்கு அழைத்துவிட்டார் காணாமற்போன கனவுகள் ராஜி. ஆரம்பப் பள்ளி வாழ்க்கையின் அழகிய நினைவுகளுக்குள் நுழையுமுன் ஊருக்குள் நுழையவேண்டாமா? நுழைந்துவிட்டதோடு, உங்களனைவரையும் வரவேற்கிறேன். 

வாருங்கள். திருச்சி மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. 

திருச்சி மாநகரத்தில் பிறந்த பல பதிவர்களின் பார்வையில் திருச்சியின் பெருமைகளையும் சிறப்புகளையும் முன்பே அறிந்திருப்பீர்கள்.  அதிலும் வை.கோபாலகிருஷ்ணன் சாரின் ஊரைச்சொல்லவா என்னும் இந்தப் பதிவு ஒன்றே போதும், திருச்சியின் அத்தனைப் பெருமைகளையும் பறைசாற்ற. மிகவும் நன்றி வை.கோ. சார். அம்மாநகரத்தின் ஒரு பகுதியாய் அமைந்த என் ஊரான பொன்மலை பற்றிச் சொல்ல விழைகிறேன்.




பொன்மலை என்றதுமே நினைவுக்கு வருவது பொன்மலை ரயில்வே பணிமனையும் அதனைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் நேர்த்தியான பணியாளர் குடியிருப்புகளும்தான். இந்தியாவில் மிகப்பெரிய இரயில் கட்டுமாணப் பணிமனையான இது, எழுபத்தைந்து வருடப் பழமை வாய்ந்தது.





சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் பொன்மலை ரயில்வே பணிமனை, கிட்டத்தட்ட ஆறாயிரம் ஊழியர்களின் வாழ்க்கையை தன்னுள் அடக்கியது. டீசல் என்ஜின்களைப் பழுதுபார்ப்பதும், நீலகிரி மலைரயில்களை நிர்வகிப்பதும் முக்கியமான வேலை என்றாலும் தென்னக ரயில்வே மற்றுமல்லாது பிற பகுதி ரயில்வேக்களின் பழுது பார்ப்பகமாகவும் இது திகழ்கிறது.  என் அப்பா, சித்தப்பா, அப்பாவழித் தாத்தா, அம்மாவழித்தாத்தா, தாய்மாமாக்கள், இவர்கள் அல்லாது பெரும்பாலான உறவினர்கள் இந்தப் பணிமனையில் பணிபுரிந்ததால் என்னவோ இரயில்வே நிர்வாகமே சொந்தம்போல் ஒரு உணர்வு.

புகைவண்டிப் பயணம் இலவசம் என்பதால் அப்போதெல்லாம் எங்கு செல்வதாக இருந்தாலும் ரயில்தான். பேருந்து என்றப் பேச்சுக்கே இடம் கிடையாது. எத்தனை மணிநேரத் தாமதமானாலும் ரயில்நிலையத்திலேயே காத்திருந்து ரயிலில் அழைத்துச் செல்வதுதான் அப்பாவின் பழக்கம்.

ஆங்கில வழி மற்றும் தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் இரு ரயில்வே பள்ளிக்கூடங்கள், ரயில்வே ஊழியர்களுக்கான கல்யாண மண்டபம் மற்றும் சகலவசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை என ஊழியர்களின் அனைத்துத் தேவைகளையும் தனக்குள் கொண்ட பொன்மலை, பொன்மலைவாசிகளைப் பொறுத்தவரை ஒரு சிற்றுலகம்தான்.  

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள், ஊழியர்களின் தகுதிக்கும் வருமானத்துக்கும் ஏற்றபடி A, B, C, D, E, F, G, H என்று வகைப்படுத்தப்பட்டு, படிப்படியாக வசதிப் பெருக்கம் பெறக்கூடிய அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. குடிநீர், கழிப்பறை, குளியலறை, சாக்கடைவசதி, தார்ச்சாலை என சகல வசதிகளுடனும் ஒரு மாதிரிக் குடியிருப்பென கட்டப்பட்டிருந்தவை அவை. நாற்சதுர வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் மத்தியில் உள்ள மைதானங்களில் மாலை வேளைகளில் குழந்தைகளும் பெரியவர்களும் குழுமிப் பேசி, பரஸ்பரம் நட்புறவுடன் கெழுமிய நாட்களை நினைவுகூர்கிறேன். இன்று அப்படிப் பேசுவாரும் இல்லை, தெருவிலும் மைதானத்திலும் ஓடியாடும் குழந்தைகளைக் காணமுடிவதும் இல்லை.





மக்களின் எண்ணங்களை, சிந்தனைகளை மழுங்கடிக்கும் தொலைக்காட்சி, கணினி, அலைபேசி போன்றவை ஆக்கிரமிக்காத காலம் அது. பண்டிகைகள் யாவருக்கும் பொது. பரவசங்கள் பொது. துக்கமும் பொது. துயரங்களும் பொது. 

இந்து, முஸ்லிம், கிறித்துவர் என்று அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும், தமிழர், மலையாளிகள், தெலுங்கர், கன்னடர், ஆங்கிலோ இந்தியர் என்று பலதரப்பட்ட மொழி பேசுவோரும், பல்வேறு சாதியினரும் ஒற்றுமையாய் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒருவருக்கொருவர் அன்புடனும் நட்புறவுடனும் பழகிய சூழலில் என் குழந்தைப்பருவமும் இளமைக்காலமும் கழிந்தது என்பதை நினைக்கையிலேயே பெருமிதம் நிறைகிறது.

பொன்மலைவாசிகளுக்குப் பிடித்த விளையாட்டு என்றால் பேட்மிண்டன் என்று சொல்லலாம். சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, காணும் இடங்களில் எல்லாம் பூப்பந்து விளையாடுவதை இன்றும் பார்க்கலாம். அதிலும் மரத்தால் செய்யப்பட்ட கட்டைபேட் என்று சொல்லப்படும் மட்டையால் அடித்துவிளையாடுவது பலருக்கும் விருப்பம். டேபிள் டென்னிஸ் மட்டையைப் போல் சற்றுப் பெரியதாக இருக்கும் அதை அநேகமாய்த் தாங்களாகவே தயாரிப்பர் என்பதும் ஒரு வியப்பு.

பணிமனையின் அருகிலேயே ஒரு சந்தை. ஞாயிற்றுக்கிழமை சந்தை. சட்டி பானை முதல் காய்கறி, பழம், கோழி, வாத்து (உயிருடன்தான்) இவற்றுடன் மக்கள் கூட்டத்துடன் காட்சியளிக்கும் அது  திருவிழாக்கடைகளை நினைவுபடுத்தும். அங்குக் கிடைக்காதப் பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு எல்லாமும் கிடைக்கும். அதிலும் சம்பள சந்தை பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கு எல்லோருக்கும் ஒரே நாள் சம்பளம் மாதா மாதம் 3 ந்தேதி என்பதால் அன்று மாலைச் சந்தை லாந்தர்களாலும், திரிவிளக்குகளாலும் களைகட்டியிருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (மின்சாரம் வருவதும்  தெரியவில்லை,  போவதும் தெரியவில்லை என்று கேள்விப்படுகிறேனே...) முன்பே சொன்னதுபோல் அப்பா, சித்தப்பா, மாமா என்று அத்தனைப்பேரிடமிருந்தும் தின்பண்டங்கள் கிடைக்கும் நாள் அது. இன்று நினைத்தாலும் மகிழ்ச்சியில் புரளவைக்கும் நாட்கள் அவை. 

அடிவாரத்தில் பொன்னேஸ்வரி அம்மனும் உச்சியில் முருகனும் குடிவைத்திருக்கும் மலைக்கோவில் பொன்மலையின் மற்றுமொரு சிறப்பு.  திரும்பிய இடங்களில் எல்லாம் தேவாலயங்களும், பள்ளிவாசல்களும், கோவில்களும் என்று எல்லா மதத்தினருக்கும் வழிபாட்டுத் தளங்கள் இருந்தாலும் எல்லோரும் எல்லா இடங்களுக்கும் சென்றுவரும் வகையில் ஒற்றுமையின் இருப்பிடமாய்த் திகழ்வது குடியிருப்புவாசிகளின் மனம்.  

மாதாகோவிலில் உப்பும் மிளகும் நேர்ந்துகொட்டுவதிலாகட்டும், பயந்த குழந்தைகளுக்கு ஓதி பயந்தெளிவிக்க பள்ளிவாசல்களுக்குப் படையெடுப்பதிலாகட்டும், கோவில் திருவிழாக்களுக்குக் நன்கொடைகள் வழங்குவதிலாகட்டும் மதங்கள் பற்றிய குறுக்கீடு இல்லாமல் மனங்கள் மட்டுமே ஒன்றி வாழ்ந்த அதிசயம் அது 





பொழுதுபோகவும், பண்டிகை நாட்களில் மட்டுமல்லாது, தேவைப்படுபவற்றைத் தேவைப்படும் எந்நேரத்திலும் வாங்கவும் திருச்சி டவுன் சென்று, தெப்பக்குளத்தின் சுற்றுப்புறச் சுவர்களையொட்டி நடைபோட்ட நாட்கள், கால்வலிக்க வலிக்க, ஓடி ஓடி மலைக்கோட்டையின் மேலேறிக் கால்வலி மறந்த பால்ய நாட்கள், பேருந்தேறிவந்து, மலைக்கோட்டையை நித்தமும் தரிசித்தபடியே பட்டயப்படிப்பை முடித்த பருவநாட்கள்... திருமணமாகி சென்னை வந்தபின் தாய்வீடு பயணிக்கும் ஒவ்வொரு முறையும் திருச்சி மலைக்கோட்டையைக் கண்டவுடன் சிறு குழந்தையெனக் குதூகலித்து கணவரையும் குழந்தைகளையும் வியப்புக்குள்ளாக்கிய நாட்கள்... வாழ்வில் என்றுமே மறக்கவியலா நாட்கள்.

தோட்டம் பராமரித்தும் மரங்கள் வளர்த்தும் தம் சுற்றுப்புறங்களைப் பேணுவதில் பெரும் அக்கறை காட்டுவதில் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளைத் தம் சொந்த வீடு போலத்தான் நினைத்து வாழ்வர். வீடுகளைக் காலி செய்யுமுன் தாம் வளர்த்தவற்றை வெட்டி மரங்களை மொட்டை அடித்து, அடுத்து வருபவரை அனுபவிக்க விடாமல் செய்யும் சில அற்ப மனிதர்களும் உண்டு

காலப்போக்கில் சொந்தவீட்டுக் கனவு ஒவ்வொரு பணியாளருக்குள்ளும் குடியேற, குடியிருப்புகள் மீதான மோகமும் குடியிருப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கைவிடப்பட்டுவிட்டன.  பொன்மலையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இருந்த வயல்கள் எல்லாம் இப்போது வீடுகளாகிவிட்டன. சுடுகாட்டுக் கொட்டகையும் கூப்பிடுதூரத்தில் என்னுமளவில் மனைகளின் விற்பனை பெருகிவிட்டது.


இன்றுஅம்மா வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் களையிழந்தும் கவனிப்பாரற்றும் இன்னும் சில பகுதிகளில் இடிந்தும் கிடக்கும் குடியிருப்புகளைக் காணும்போது ஏதோ மனத்துக்குள் இனம் புரியாத வலி.  வசதிகள் புகுந்துவிட்டன. மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. ஆனாலும் அந்தப் பழைய நாட்களும் வாழ்க்கையும் மனத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள்தாமே….

இத்தொடர்பதிவுக்கு நான் அழைக்கவிரும்புபவர்கள்
1. தமிழ்க்கவிதைகள் தங்கச்சுரங்கம் ஸ்ரவாணி
2. தென்றல் சசிகலா
3. சேகர் தமிழ் தனசேகரன்
4. கிராமத்துக் கருவாச்சி கலை
5. காரஞ்சன்(சேஷ்)

தொடரும் அனைவருக்கும் என் உளம் நிறைந்த நன்றி.

86 comments:

  1. அழகான பதிவு. சொந்த ஊரைப் பற்றி நிறைய சொல்லியுள்ளீர்கள். சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?

    ReplyDelete
    Replies
    1. முதல் ஆளாய் பின்னூட்டமிட்டுக் கருத்துரைத்ததற்கு நன்றி விச்சு.

      Delete
  2. hi good one article recall my school days i studied at sacred hearts high school 1973-1977 it gives nice details about that place

    ReplyDelete
    Replies
    1. hi, welcome and thank you for the comment. The childhood days are the golden days for everyone.

      Delete
  3. பிறந்த இருந்த இடத்தின் மனப் பதிவுகள் போல
    உழைக்கப் போன இடத்தின் பதிவுகள் ஆழப் பதிவதில்லை
    சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா
    என்கிற அருமையான பாடல் வரிகள்தான்
    தங்கள் பதிவினப் படிக்க என்னுள் வந்தது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரமணி சார். கவலையற்றுத் திரிந்த பள்ளிப்பருவ நாட்கள் என்றுமே மனத்தில் பசுமையான நாட்கள்தானே.. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  4. 1965-66 வாக்கில் சில காலம் பொன்மலைப்பட்டியில் தங்கி இருந்தோம். அப்போது குடியிருந்த வீட்டருகே ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. பாம்பென்று நினைத்து ஒரு அரணையைக் கொன்ற ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் ,நினைவுகள் அழிவதில்லை.அந்தக் காலத்தில் எழுதியதுதான் இப்போது தொடர்பதிவாக நான் வெளியிடும் ‘ நினைவில் நீ.” வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? அப்போவெல்லாம் நான் பிறக்கவே இல்லை. அந்த டூரிங் டாக்கீஸ் பெயர் சரவணா என்று நினைக்கிறேன். சரியா என்று தெரியவில்லை. வருகைக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி ஐயா.

      Delete
  5. மனதை நெருடும் அருமயான பதிவு.என்னை தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி.நான் ஏற்கனவே நண்பர் துரை டேனியலின் ஆசைக்கினங்க என் ஊரை பற்றிய தொடர்பதிவை முடித்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனசேகரன். நீங்கள் முன்பே ஊர் பற்றி எழுதியதை நான் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.

      Delete
  6. அடடா... திருச்சி தான் உங்கள் ஊரா ஃப்ரெண்ட்! ரயில்வேயில் பெரும்பாலான உறவினர்கள் பணிபுரிந்தார்கள் என்றால் கரி அள்ளிப் போட்டு ஓடும் இன்ஜின் கொண்ட ரயிலில் பயணித்த அனுபவம் உங்களிடமும் உண்டா? திருவிழா, சந்தை, உறவினர்களிடமிருந்து நிறைய தின்பண்டங்கள் கிடைப்பது என என் இளமைக் காலத்தின் பல அம்சங்களையும் திரும்பிப் பார்க்க வெச்சுட்டீங்க. மிகமிக மகிழ்வுட்ன் தங்களுக்கு நன்றி செர்ல்கிறேன் அதற்காக.

    ReplyDelete
    Replies
    1. கரி கண்ணில் பட்டு கண்கசக்கி நின்ற நாட்களை மறக்கமுடியுமா? இதில் சன்னலோரம் உட்காருவதற்கு எனக்கும் தம்பிக்கும் போட்டிவேறு நடக்கும். உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி கணேஷ்.

      Delete
  7. பொன்மலையை பற்றிய உங்களின் பொன்னான எழுத்துக்கள் என்னை கவர்ந்தன. மேலும் இந்த பதிவின் மூலம் நீங்களும் என் குடும்பத்தினரில் ஒருவரே என்றும் அறிந்து கொண்டேன். நான் உங்களுக்கு கொஞ்சம் தூரத்து உறவினன். அதாவது நானும் ரயில்வே குடும்பத்தை சார்ந்தவன். என் தந்தை மதுரையில் உள்ள ரயில்வே துறையில் வேலை பார்த்தவர்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? வேடிக்கை என்னவென்றால் இன்று ரயில்வேயில் சொல்லிக்கொள்ளும்படி எந்த உறவும் இல்லையென்பதுதான். வயதானவர்கள் ஓய்வுபெற்றுவிட்டார்கள். இளைய தலைமுறையினர் வேறு வேலைகளில் அமர்ந்துவிட்டார்கள்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  8. திருச்சிக்கே வந்து போன அனுபவம் கிடைத்தது தோழி . வசந்த மண்டபம் மகேந்திரன் அண்ணாவை தொடர் பதிவிற்கு அழைத்ததே தென்றல் தாங்க . இருப்பினும் பிறந்த ஊர் பற்றி எழுத கசக்குமா என்ன நேரம் இருக்கும் பொது நிச்சயம் எழுதுகிறேன் தோழி .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா. பாருங்க, நீங்க துவக்கினது தெரியாம உங்களையே அழைத்திருக்கேன். கவனிக்கவில்லை.மன்னிக்கவும். இருந்தாலும் இன்னும் எழுதறேன் என்று சொன்னதில் மிகவும் மகிழ்ச்சி.

      Delete
  9. //அந்தப் பழைய நாட்களும் வாழ்க்கையும் மனத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள்தாமே…. //

    திருச்சி மலைக்கோட்டை படத்தைப் போட்டு,
    திரும்பி வாரா அ ந் நாட்களை எல்லாம்
    திடுக் எனவே என் கண்முன்னே
    திருப்பி வைத்து விட்டீர்களே !!

    அந்தக் காலத்து ஆண்டார் தெரு
    ஆலமரம் ஒன்று அமைதியாய் வானளாவ
    அதன் முன்னே கருப்பண்ண சாமி ஒன்று குடியிருந்து
    ஆண்டாண்டு காலமாய் காத்து வரும் வீதியது.

    ஆடி பதினெட்டில்
    தேடி வரும் காவிரி வெள்ளம் .
    தைப்பூசத்திரு நாளில்
    தெருவெல்லாம் பக்தர் வெள்ளம் !!

    சித்திரை முதல் நாளில் நம்
    நித்திரை கலையுமுன்னே
    பித்துக்குளி முருகதாசின்
    நாலு வீதி ஊர்வலம்.


    காவேரி கரையங்கே என் பள்ளி. தெப்பக்
    குளமருகே என் கல்லூரி.
    கனிவே உருவான என் முதல்வர்.
    கடமையில் கண்ணாவார், எர்ஹார்ட் ஃபாதர்.
    இலக்கியத்தைப் பேச வந்த அதே நேரத்தில்
    நேயத்தையும் ஒழுக்கத்தையும் போதித்த ஸெக்யூரா

    எத்தனை சுவைகள் !!
    எத்தனை நினைவுகள் !!
    இத்தனைக்கும் நடுவிலே ....


    காலேஜ் படிக்கும்போதே காதல் வயப்பட்டு
    காலை மாலை பாராது
    கால் வலியும் பாராது
    மலை உச்சி வீதிகளில்
    மனங்கவரந்த அவள் வீட்டருகில்
    வலம் வந்த நேரங்கள், இனி
    வா எனினும் வருமா என்ன ?

    பாலக்கரை நெரிசல் ஊடே
    பொன்மலை ரயில் நிலையம் வந்து
    ஆள் இல்லா பெஞ்ச் ஒன்றில்
    அமர்ந்து பேசிய பேச்செல்லாம்
    அத்தனையும் சத்தியம் எனினும்
    அடுத்த சென்மம் ஒன்றிருந்தால்
    அப்போதுதான் சாத்தியம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.... ஆழ்மனத்தில் உறங்கிக் கிடந்த பல நினைவுகளைத் தட்டி எழுப்பிவிட்டேன் போலும் இப்பதிவின் மூலம். சுமையா சுகமா தெரியவில்லை எனினும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் நிறைகிறது மனம். மிகவும் நன்றி.

      Delete
  10. Anonymous27/2/12 15:52

    நெஞ்சில் நிற்கும் அழகான வர்ணனை .
    மத நல்லிணக்கம் பற்றி ஹைலைட்
    செய்து இருந்தது இன்னும் அருமை .
    கண்டிப்பாக விரைவில் தொடர்கிறேன் தோழி .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கூரிய கவனிப்பு வியப்பளிக்கிறது ஸ்ரவாணி. மிகவும் நன்றிப்பா. உங்களுடைய தளத்தில் என்னால் பின்னூட்டமிடவே முடியவில்லை. படிக்கமுடிகிறது. பலமுறை கருத்துப் பதிய முயற்சித்துப் பார்த்துவிட்டேன். நாளை மறுபடியும் வந்துபார்க்கிறேன்.

      Delete
  11. பொன்மலை என்ற பெயரே அழகு!
    தங்கள் கட்டுரை, பொன்குடத்திற்கு வைத்த பொட்டு!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. இப்பொன்மலை மின்னுகிறது தங்கள் கருத்துரையால்! மிகவும் நன்றி ஐயா.

      Delete
  12. Anonymous27/2/12 16:21

    ரொம்ப சுபேரா சொல்லி இருக்கீங்க அக்கா ...

    திருச்சி தான் உங்க ஊரா ...கலக்குறிங்க போங்க ....
    நானும் எழுதுறேன் அக்கா எங்க ஊரைப் (ஊர்களைப் ) பற்றி சிக்கிரமே!

    தொடர அழைத்தமைக்கு நன்றி அக்கா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை. உங்க ஊர்ப்புராணமும் சுவாரசியமா இருக்கு. தொடர்ந்ததுக்கு நன்றிமா.

      Delete
  13. மலைக்கோட்டை கோவில்ல என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஒருத்தர் இருக்கார். அவரை பார்க்க வருடமொரு வருவோம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? சந்தோஷம் ராஜி.

      Delete
  14. வசதிகள் புகுந்துவிட்டன. மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. ஆனாலும் அந்தப் பழைய நாட்களும் வாழ்க்கையும் மனத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள்தாமே….
    >>>
    இதுதான் டாப். எல்லா ஊருலயும் இப்போ இந்த நிலமைதான் சில வித்தியாசங்களுடன்....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். பழசையெல்லாம் நினைத்து மகிழ்ந்திருக்கவேண்டியதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

      Delete
  15. ஆஹா! நீங்களும் நம் ஊர் திருச்சி தானா!

    அதானே பார்த்தேன், நமக்குள் எழுத்துலகிலும் ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதோவொரு ஈர்ப்பு உண்டாகி உள்ளதே என்று.

    மிக்க மகிழ்ச்சி. பொன்மலையைப் பற்றிய நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. திருச்சிக்காரர்கள் பதிவுலகில் நிறையபேர் இருப்பது மிகவும் மகிழ்வுக்குரிய செய்தி அல்லவா வை.கோ சார்! தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி சார்.

      Delete
  16. //வாருங்கள். திருச்சி மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

    திருச்சி மாநகரத்தில் பிறந்த பல பதிவர்களின் பார்வையில் திருச்சியின் பெருமைகளையும் சிறப்புகளையும் முன்பே அறிந்திருப்பீர்கள். அதிலும் வை.கோபாலகிருஷ்ணன் சாரின் ஊரைச்சொல்லவா என்னும் இந்தப் பதிவு ஒன்றே போதும், திருச்சியின் அத்தனைப் பெருமைகளையும் பறைசாற்ற. மிகவும் நன்றி வை.கோ. சார். அம்மாநகரத்தின் ஒரு பகுதியாய் அமைந்த என் ஊரான பொன்மலை பற்றிச் சொல்ல விழைகிறேன்.//

    என்னுடைய தொடர்பதிவையும் இங்கு சுட்டிக்காட்டியுள்ளதற்கு மிக்க நன்றி.

    சந்தோஷம், மேடம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவை விஞ்சி திருச்சி பற்றிச் சிலாகிக்க எதுவும் இல்லை சார். உங்கள் அளவுக்கு அனுபவமும், அவதானிப்பும் எனக்கு இல்லையென்பதும் உண்மை. அதனால்தான் உங்கள் பதிவைக் குறிப்பிட்டேன். உங்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும்.

      Delete
  17. நல்ல சித்திரம். படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  18. படிக்கும் போதே மனத்திரையில் காட்சிகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சத்ரியன்.

      Delete
  19. கால்வலிக்க வலிக்க, ஓடி ஓடி மலைக்கோட்டையின் மேலேறிக் கால்வலி மறந்த பால்ய நாட்கள், --

    நிறைய முறை நானும் உணர்ந்த அழகான நாட்கள்...

    பொன்னான நினைவுகளை மின்னவைத்த வரிகள்..

    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், அழகான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டமைக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

      Delete
  20. எங்களுக்கெல்லாம் மனக்கண்ணிலேயே உங்கள் ஊரின் பசுமை நினைவின் மூலம் அக்காலத்துக்கு இட்டு சென்றுவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஷக்திபிரபா.

      Delete
  21. சுவிஸ்ல் இருந்து பயணச்சீட்டு இல்லாமலே பொன்மலைக்குப் பயணம் செய்ய வைத்த கீதாவுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ஆல்ப்ஸ் மலையிலிருந்து பொன்மலைப் பயணித்தீர்களா? நன்றி ஹேமா.

      Delete
  22. சொந்த ஊரைப் பற்றி சொல்வது என்றாலே ஒரு சுகம் தான். ரொம்ப நல்லா இருக்கு பொன்மலை பற்றிய நினைவுகள்.

    என் புகுந்த வீடு திருச்சி ஸ்ரீரங்கம் தான். திருமணத்திற்கு முன்பு வரை நான் திருச்சிக்கு வந்ததேயில்லை. ஆனால் இப்போ எனக்கு பிடித்த ஊராகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் திருச்சி பற்றிய மகிழ்வான எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி ஆதி.

      Delete
  23. //மக்களின் எண்ணங்களை, சிந்தனைகளை மழுங்கடிக்கும் தொலைக்காட்சி, கணினி, அலைபேசி போன்றவை ஆக்கிரமிக்காத காலம் அது. பண்டிகைகள் யாவருக்கும் பொது. பரவசங்கள் பொது. துக்கமும் பொது. துயரங்களும் பொது. //

    உண்மை,உண்மை.
    அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆச்சி, உங்க அனுபவமும் இப்படித்தானா?

      Delete
  24. ஊர் பற்றி சொல்லத் தொடங்கினால்
    உற்சாகம் பெருக்கெடுக்க நினைவுகள் சரமாகிறதே கீதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி.

      Delete
  25. ஒவ்வொரு முறையும் திருச்சி மலைக்கோட்டையைக் கண்டவுடன் சிறு குழந்தையெனக் குதூகலித்து ...

    தினசரி மலைக்கோட்டையைப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு..

    தினமுமே குதூகலம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ம்.. குதூகலமாய் அனுபவியுங்க ரிஷபன் சார். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  26. உங்கள் ஊரைப் பற்றி நீங்கள் கூறியது எல்லாம் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி.

      Delete
  27. வணக்கம்! அட! நீங்க எங்க திருச்சியில் உள்ள பொன்மலை. மறக்க முடியாத ரெயில்வே ஆர்மரி கேட், சந்தை மற்றும் சாலை முழுக்க மரங்கள் உள்ள ரெயில்வே காலனி. இவைகளைப் பற்றி பசுமையான நினைவுகளோடு சுவையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பொன்மலை பற்றிய நினைவுகளில் திளைத்து மகிழ்ந்ததற்கும் மிகவும் நன்றி.

      Delete
  28. சொந்த ஊர் பற்றிய பதிவு அருமை....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  29. எமை ஏக்கமுற வைக்கிறது.
    உங்கள் ஊரின் நினைவுகள்.

    மண்ணின் வாசம் சுமந்துவரும்
    ஞாபகங்கள்..எங்கு வாழ்ந்தாலும்
    எம்மோடு ஒட்டிக்கொண்டேயிருக்கும்.

    வாழ்க பொன்மலை.
    வாழ்க உங்கள் கிராமத்து சொந்தங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனியக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி தீபிகா.

      Delete
  30. விவரமான , சுவை மிக்க தகவல்களுக்காகப் பாராட்டுகிறேன் . பொன்மலை எனக்குப் பழக்கம் தான் . சி டைப் மற்றும் எச் டைப் குடியிருப்புகளில் சில நாள் தங்கியிருக்கிறேன் . பேட்மிண்டன் தமிழகச் சேம்பியன் ராஜகோபால் பொன்மலைக்காரர் தான் . அவரது தலைமையில் என் மகனது திருமணம் நடைபெற்றது . உச்சியில் இருப்பது பிள்ளையார் அல்லவோ ? உச்சிப்பிள்ளையார் என்பது பெயர் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் சுவையானத் தகவல் பரிமாற்றத்துக்கும் மிகவும் நன்றி.

      சிறு விளக்கம்: திருச்சி தாயுமான சுவாமி குடிகொண்டிருக்கும் மலைக்கோட்டையில் உச்சியில் இருப்பவர் பிள்ளையார். நான் குறிப்பிட்டுள்ளது பொன்மலையில் உள்ள மலைக்கோவில் பற்றியது. சிறுகுன்று போல் காட்சியளிக்கும் இதன் உச்சியில் முருகக் கடவுளே குடியிருக்கிறார்.

      Delete
    2. ஓ ! அங்கே ஒரு மலைக்கோவில் உள்ளதா ? தகவலுக்கு நன்றி .

      Delete
  31. மலைக்கோட்டைக் காற்றை மறக்கமுடியுமா? திருச்சி வரும்போதெல்லாம் விசிட் அடிக்குமிடம் மலைக்கோட்டையும் உச்சியில் உட்கார்ந்து காற்றுவாங்குவதும் தவறாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க செந்தில்குமார், நீங்களும் திருச்சியின் ரசிகரா? வருகைக்கும் நினைவுப் பகிர்வுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  32. தனசேகரன், உங்களுடைய அன்புக்கு மிகவும் நன்றி. நல்ல கவிஞர் நீங்கள். உங்கள் கையால் விருது வாங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன். இன்னுமின்னும் எழுதும் உற்சாகத்தைப் பெறுகிறேன். மனமார்ந்த நன்றி தனசேகரன்.

    ReplyDelete
  33. Anonymous2/3/12 15:25

    அன்புத் தோழி கீத்ஸ் ,
    வணக்கம் !
    நான் பல்வேறு சொந்த காரணங்களுக்காக
    வலையின் பக்கம் வருவதை நிறுத்தி வைத்துள்ளேன் .
    என் மகனின் ஆண்டுத் தேர்வுகள் ஆரம்பமாகிவிட்டன.
    அதன் பிறகு தொடர்வேனா என்பது எனக்கே உறுதியாகத் தெரியவில்லை .
    நீங்கள் அழைத்திருந்த சொந்தஊர் தொடர்பதிவு என்னால் தொடர முடியாமைக்கு மிக வருந்துகிறேன் தோழி .
    மன்னிக்கவும் .
    மற்றபடி என் ப்ளாக் ஐ பிரைவேட் ஆக்கி உள்ளதால் யாரும் பார்வையிட முடியாது .

    பதிவுலகில் நீங்கள் தொடர்ந்து வெற்றிநடை போட
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் இதுவரை தந்த
    ஊக்கத்திற்கும் ஆக்கத்திற்கும் மிக்க நன்றி தோழி..
    இயன்றபோது வந்து கருத்துரை பதிகிறேன் .
    வணக்கம் . நன்றி . goodluck !

    ReplyDelete
    Replies
    1. என்னாச்சுப்பா? நல்லபடியாகச் சென்றுகொண்டிருந்த பாதையில் திடீர் தடங்கல்? தடைக்கற்கள் கடந்து மீண்டும் புதிய உற்சாகத்துடன் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

      தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி தோழி. இயன்றபோதெல்லாம் வருகை தாருங்கள். என்றென்றும் நலமே விளையட்டும்.

      Delete
  34. சொந்த ஊர் பற்றியும் , அதில் மதங்கள் பற்றிய உங்கள் பார்வையும் ரசிக்கவைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி.

      Delete
  35. உங்கள் எழுத்துக் கை வண்ணத்தில் மிளிர்கிறது உங்கள் ஊரின் அழகு!நேரடியாக நாமே சென்று பார்த்து வந்ததைப் போன்ற திருப்தியத் தருகிறது எழுத்தின் வசீகரம்!!

    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களிடமிருந்து கிடைத்திருக்கும் பாராட்டு பெரும் உற்சாகம் அளிக்கிறது. தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  36. இந்தத் தொடரைப் படிக்கத் துவங்கியவுடன்,

    ”நெஞ்சிலிட்ட கோலமெல்லாம் அழிவதில்லை
    என்றும் அதைக் கலைவதில்லை
    எண்ணங்களும் மறைவதில்லை
    அந்த நாள்.............
    அந்த நாள் என்றும் ஆனந்தமே”
    என்ற அழியாத கோலங்கள் பாடல் தான் நினைவுக்கு வருகிறது. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவரது இளம் பிராய நினைவுகள் ஆனந்தம் அளிக்கக் கூடியவை. அதிலும் உன் அற்புதமான எழுத்து, படிக்கும் அனைவரையுமே கடந்த கால நினைவலைகளில் மூழ்கச் செய்து பேரானந்தம் அளிப்பதாய் உள்ளது. பாராட்டுக்கள் கீதா! தொடர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அழகிய பாடல் வரிகளுடன் இணைத்து இப்பதிவை ரசித்தமைக்கு மிகவும் நன்றி அக்கா. உங்கள் அன்பான வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  37. பாறை தட்டி அல்ல,கல்தட்டி கீழே விழுந்த இளம் பிராயம் முதல் இன்றுவரைநம்து நமது மனதில் நாம் இருக்கிற ஊரி தடங்கள் அழிவதில்லை.அப்படி அழியாத ஒரு சித்திரமாக பொன்மலையை வரைந்து காட்டியிருக்கிறீர்கள்,நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க விமலன், தங்கள் அழகான விவரிப்பால் சிறப்புறுகிறது இப்பதிவு. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  38. மலைக்கோட்டை மாநகரின்
    மனதூரிய நினைவுகள்
    நெஞ்சில் பச்சை குத்திச் சென்றன
    சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் இனிய ரசனைக்கும் என் உளங்கனிந்த நன்றி மகேந்திரன்.

      Delete
  39. உங்களின் இந்தக் கட்டுரை என்னையும் எனது ஊருக்கு இழுத்துச் சென்றதோடு மட்டும் அல்லாமல் கண்களைப் பணிக்கவும் செய்தன... பெரும்பாலும் இது போன்ற சமத்துவ புரிகளில் (ஆம், அதை அப்படித்தான் அழைக்க வேண்டும்) வாழ்ந்த வாழ்க்கையை வேறு யாரும் எங்கும் வாழமுடியாது அதிலும் குறிப்பாக குழந்தைப் பெருவத்தை முழுதாக அனுபவிக்க அருமையான சூழல் கொண்ட இடம் என்றால் இது போன்றவைகளே.
    மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்,
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  40. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சசிகலா.

      Delete
  41. உங்கள் ஊர் மிகவும் அழகாக இருக்கு. நம் நட்பு தொடரட்டும் .......

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி விஜி பார்த்திபன்.

      Delete
  42. எனது ஊரும் பொன்மலைதான்

    ReplyDelete
    Replies
    1. ஒத்த ஊர்க்காரர் என்பதை அறிந்து மெத்த மகிழ்ச்சி நண்பரே.

      Delete
  43. அடிவாரத்தில் பொன்னேஸ்வரி அம்மனும் உச்சியில் முருகனும் குடிவைத்திருக்கும் மலைக்கோவில் பொன்மலையின் மற்றுமொரு சிறப்பு.//

    சிறு வயதில் பேபி அக்காவுடன் பலதட்வை இந்த மலைக்கோவிலுக்கு வந்து இருக்கிறேன்.
    அவர்கள் கண்வர், அண்ணன் எல்லாம் ரயில்வேயில் தான் வேலை செய்தார்கள் அம்பிகாபுரத்தில் சொந்தவீட்டில் இருந்தார்கள்.
    பொன்மலை ரயில் நிலயைத்தை கடக்கும் போதெல்லாம் சின்ன வயது நினைவுகள் வந்து செல்லும்.
    உங்கள் பதிவு மனதை நெகிழ வைத்து விட்டது.

    ReplyDelete
  44. Santhakumar22/3/13 01:26

    There were 3 theatres in ponmalai area,, Saravan,shanmuga and mekala.. Saravana got sealed,Mekala converted to Marriage Hall, Shanmuga still operational with some B grade movies.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.