14 September 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (16)


இப்போது பிரபுவின் மரணம் பற்றித் தெரியவந்தால் மருத்துவமனை நிர்வாகம் ஏதாவது பிரச்சனை செய்யலாம் அல்லது அவர்கள் மூலம் சுந்தரிக்கு உடனடியாய் தெரியவரலாம் என்பதால் விஷயத்தை வெளியில் சொல்லவேண்டாம் என்று நினைத்தாள்.

இறந்தவனைப் பற்றிக் கவலைப்படுவதை விடவும், உயிருடன் இருப்பவளைக் காப்பாற்றுவதே முதற்காரியம் என்று உணர்ந்த வித்யா, விக்னேஷை, சுந்தரி இருந்த மருத்துவமனைக்கு வரவழைத்தாள். சுந்தரியின் அறுவை சிகிச்சைக்கான அனுமதிப் பத்திரத்தில் அவனையே கையெழுத்து போடச்சொன்னாள். விக்னேஷ் நிலைகுலைந்து போயிருந்ததால் வித்யா எதைச் சொன்னாலும் செய்யும் நிலையில் இருந்தான்.

ஒருவழியாய் அறுவை சிகிச்சை முடிந்து தாயும் சேயும் நலம் என்ற செய்தி கேட்ட பின் தான் வித்யாவின் இதயத்துடிப்பு இயல்புநிலைக்கு வந்தது.

அழகான பெண் குழந்தை! தந்தையின் மரணத்தில் தான் ஜனித்த விவரம் அறியாமல் அமைதியாய் உறங்கும் சிசுவைப் பார்த்து கண்ணீர் வடித்தாள், வித்யா.

சுந்தரி மயக்க நிலையிலிருந்தாள். உதவிக்கு வந்த வீட்டுக்காரம்மாவிடம் கரங்குவித்து நன்றி சொன்ன வித்யாவும், விக்னேஷும் அவரிடம் பிரபுவின் துயரச் செய்தியை சொல்ல, அவர் பெருங்குரலெடுத்து அழத்துவங்க, அவசரமாய் அவரை அடக்கினர். அவர் அழுதால் காரியம் கெட்டுவிடும் என்று அஞ்சினர். அவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு பக்குவமாய் நடந்துகொண்டார்.

********
பிரபுவின் அலுவலக நண்பர்கள் அத்தனைப் பேரும் வந்திருந்து உதவினர். பிரபுவின் நிலைதான் கேள்விக்குறியாகிப் போனது. சுந்தரி இருக்கும் நிலையில் அவளிடம் சொல்வதே சரியில்லை என்பதால் பிரபுவின் பெற்றோருக்குச் சொல்வது என்ற முடிவுக்கு வந்தனர். என்னதான் பிள்ளை மேல் கோபமிருந்தாலும், இந்த நிலையில் மனம் இரங்கித்தானே ஆகவேண்டும். துக்ககரமான செயல்தான் என்றபோதும் நிச்சயம் மறுக்கமாட்டார்கள் என்று நம்பினர்.

பிரபுவின் பெற்றோருக்கு போன் செய்து நிலைமையைச் சொன்னார்கள். அவர்களோ, வாயில் வந்ததை எல்லாம் பேசி சுந்தரியை சபித்தார்களே தவிர, மகனுக்காகத் துளியும் துக்கப்பட்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் மகனை சுந்தரிதான் கொலை செய்ததுபோல் பேசினார்கள், ஏசினார்கள். அவளை மட்டுமல்லாது பிறந்த குழந்தையின் ஜாதகத்தையும் பாதகம் என்றனர். அவர்களது பேச்சு பொறுக்கமுடியாத விக்னேஷ், சடாரென்று கேட்டுவிட்டான்,

"உங்க பிள்ளையோட உடம்பு இங்க இருக்கு! வந்து வாங்கிக்கிற எண்ணம் இருக்கா, இல்லையா உங்களுக்கு?"

"எங்க புள்ளய உயிரோட பறிச்சிட்டு இப்ப பொணமாக் குடுக்குறாளா? எப்ப அவன் அந்த வேலைக்காரக் கழுததான் ஒசத்தின்னு எங்களை அவமானப்படுத்திட்டுப் போயிட்டானோ, அப்பவே நாங்க அவன தலமுழுகியாச்சி. இப்ப அங்க இருக்கிறது எங்க புள்ள இல்ல...அந்த தளுக்கு சுந்தரியோட புருஷன்....அவளே அவனுக்கு கொள்ளி போடட்டும், எங்க வயித்தெரிச்சல் அவள சும்மா வுடாது...அவ....நாசமா...."

போனை வைத்துவிட்டான். இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை. அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. சுந்தரி மருத்துவமனையிலிருந்து வரும்வரை உடலை பதப்படுத்தி வைத்திருக்கலாம் என்ற யோசனையை வித்யா, விக்னேஷ் இருவருமே நிராகரித்தனர். கணவன் இறந்துவிட்டான் என்பதே பெரும் அதிர்ச்சிதான். அதனிலும் அதிர்ச்சி கொடுக்கும்விதமாய் முகம் நசுங்கி, கோரமாய் இறந்திருப்பவனைப் பார்த்து பிள்ளை பெற்றவளுக்கு ஏதாவது விபரீதம் நிகழ்ந்துவிடடால்....

பலத்த யோசனைக்குப் பிறகு நண்பனின் ஈமகாரியங்களைத் தாங்களே செய்வது என்ற முடிவுக்கு வந்து அதற்கான முறையான ஏற்பாடுகள் செய்து காரியத்தை முடித்தனர். இறந்துபோனவனின் முகத்தைக்கூட தன் கண்ணில் காட்டாமல் அவனுக்கு இறுதிச்சடங்கு நிகழ்த்திவிட்டதற்காக சுந்தரி எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதென்று மனத்தைத் திடப்படுத்திக்கொண்டனர்.
*******


கண்விழித்தபோதெல்லாம், 'அவரு எங்க? அவரு எங்க? " என்று தேடித்தவித்த சுந்தரியை சமாளிப்பதுதான் பெரும்பாடாய் இருந்தது.  அவசர வேலை விஷயமாய் டெல்லி போயிருக்கிறானென்றும், இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடுவானென்றும் ஆளாளுக்கு மாறி மாறி ஒரே பொய்யைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

முதலில் நம்பமாட்டேன் என்று அடம்பிடித்தவள், பின் என்ன நினைத்தாளோ, அப்படியே அடங்கிப்போனாள். அவ்வப்போது குழந்தையை எடுத்து உச்சி முகர்ந்து கண்ணீர் விடுவாள். பின் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்துவிடுவாள். வித்யா, சமையல் செய்து மருத்துவமனைக்கு எடுத்துவந்தாள்.

வீட்டுக்காரம்மா குழந்தைத் துணியைத் துவைத்துக் காயவைத்துவிட்டு வந்து சுந்தரியின் அருகில் அமர்ந்தார். குழந்தையை எடுத்து அவளருகில் கிடத்தி பாலூட்டச் செய்தார்.பின் ஒரு தம்ளரில் ஜூஸ் எடுத்துக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.

"நான் மாட்டேன்! எங்க வீட்டுக்காரரு எங்க போனார்னு தெரிஞ்சாதான் நான் குடிப்பேன். யாருமே என்கிட்ட எதுவும் சொல்லமாட்டேங்கறீங்க, எனக்கு கவலையா இருக்கு!"

“சுந்தரி…………!  உம்புருஷன் உனக்கு கார் அழைக்கப்போனாருல்ல.... அப்போ...அவங்க மானேஜர்கிட்ட இருந்து அவசரமா போன் வந்துச்சாம்! முக்கியமான வேலையாம். டெல்லி போவணுமின்னு. இவரு எவ்வளவோ சொல்லியிருக்காரு. அதெல்லாம் இல்ல... நீ வந்துதான் ஆவணும்னு சொல்லிட்டாராம். சரின்னுதான் இந்த வித்யாப்பொண்ணுகிட்ட சொல்லி உன்னைப் பாத்துக்கச் சொல்லிட்டு அங்கிருந்தபடியே கெளம்பிட்டாராம்!"

இந்தக்கதையை சிறுபிள்ளையும் நம்பாது என்று அறியாதவர்போல் சுந்தரிக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார். அறைக்குள் நுழைந்த வித்யாவுக்கு அவரின் நிலையைப் பார்த்தாலும் பரிதாபமாயிருந்தது.

தன் வீட்டை விட்டுவிட்டு, வயதான கணவரை விட்டுவிட்டு துளியும் உறவில்லாத இவர்களுக்காக அவர் ஏன் கஷ்டப்படவேண்டும்? கண்விழித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்? குழந்தைத்துணி துவைக்கவேண்டும்? உலகத்தில் இதுபோல் தன்னலம் கருதாதவர்கள் இருப்பதால்தான் உலகம் இன்றும் உயிர்ப்புடன் இயங்குகிறது என்று நினைத்துக்கொண்டாள்.

"அவரு எங்கிட்ட சொல்லாம போகமாட்டாரு. எல்லாரும் சேர்ந்து என்னவோ என்கிட்டயிருந்து மறைக்கிறீங்க, சொல்லுங்கம்மா......எனக்கு ரொம்ப பயமா இருக்கு!"

அந்தம்மா வாயைத் திறக்குமுன் வித்யா சொன்னாள்,
"சுந்தரி, நீ இப்படிக் கவலைப்படுவேன்னுதான் பிரபு உங்கிட்ட சொல்லலை.”

"அக்கா...."

“நீ இப்படி சாப்பிடாம, கொள்ளாம உடம்பைக் கெடுத்துகிட்டா குழந்தைக்குதான் கஷ்டம்! முதல்ல ஜூஸைக்குடி"

இந்த ஒரு வாரத்தில் சுந்தரியை 'வா...போ....' என்று ஒருமையில் அழைக்கும் அளவுக்கு நெருங்கிப் பழகியிருந்தாள் வித்யா. தன்னை விடவும் அவள் இளையவள் என்பதை விடவும், அவளை தன் உடன்பிறந்தவளாகவே நினைத்ததே காரணம். சுந்தரியும் வாய்க்கு வாய் வித்யாவை, 'அக்கா, அக்கா' என்றழைத்து தன் பாசத்தை வெளிப்படுத்தினாள்.

ஆனாலும் சுந்தரியிடமிருந்து அனைவரும் எதையோ மறைப்பதை அவளால் உணரமுடிந்தது.

'எந்தப் புருஷனாவது தன் பெண்டாட்டி தலைப்பிரசவத்துக்கு துடிச்சிட்டிருக்கும்போது அவகிட்ட சொல்லாம கொள்ளாம தூரப்பயணம் போவானா? என் புருஷன் போயிருக்கிறதா அத்தனைப்பேரும் சொல்றாங்களே!  இது எப்படி சாத்தியம்? எனக்கு வலி எடுத்தபெறகு கார் புடிக்கப்போனவருக்கு என்னவோ ஆயிருக்குது, என்னாதது? ஏதாவது அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்காரா? அப்படின்னா...என்னோட போன்லயாவது பேசியிருப்பாரே? இல்லையே! எப்போ கேட்டாலும் அவரிருக்கிற இடத்தில சிக்னல் கிடைக்கலைன்னு சொல்லி மழுப்புறாங்க!

ஒருவேள........அவரு உயிரோடவே இல்லையா? கடவுளே! நான் தான் இலவு காத்த கிளி மாதிரி காத்துகிட்டிருக்கேனா? அவரு வரப்போறதே இல்லையா?

சீச்சீ! ஏன் அப்படி நினைக்கணும்? அப்படியெல்லாம் இருக்காது. இப்படியா எல்லாரும் ஒத்தாப்போல பொய் சொல்லி என்னை ஏமாத்துவாங்க? ரொம்ப அடிபட்டு பேசமுடியாத  நெலமையில அவர் இருக்கணும். அதான் என்கிட்ட சொன்னா நான் கவலைப்படுவேன்னு எல்லாரும் மறைக்கிறாங்க. ஆனா .....ஆனா......'

சுந்தரி கவனித்த இன்னுமொரு விஷயம்....குழந்தை பிறந்தபிறகு ஒரு குடும்பத்தில் நிகழும் இயல்பான கொண்டாட்டம் எதுவுமே இல்லையென்பது. குழந்தையைக் கொஞ்சும்போது கூட அதன் அப்பாவைப் பற்றிய பேச்சை அனைவருமே கவனமாகத் தவிர்க்கிறார்கள். எப்போதும் ஏதோ ஒரு சோகம் அனைவர் முகத்திலும் இழையோடிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால்......

‘எதை நம்புறது, எதை நம்பாமலிருக்கிறது? அவரு இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? அவரு மட்டும் உயிரோட இல்லைன்னா...... நானும் அவரோட போய்ச் சேர்ந்திடுவேன்.’

"ங்ஙா………..ஆ…..... ங்ஙா……………….ஆ…………......."

குழந்தையின் அழுகை சுந்தரியின் கவனத்தைக் கலைத்தது. தவிப்புடன் குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டாள். 'என் கண்ணம்மா! ஒன்ன விட்டுட்டுப் போவேனாடி, என் தங்கமே! என்னென்னமோ யோசிச்சேன், பாரு! நான் ஒரு பைத்தியக்காரிடி!"

குழந்தையின் உச்சியில் முத்தமிட்டாள். வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். இனி பிரபுவைப் பற்றி எவரிடமும் எதையும் கேட்கப்போவதில்லை என்று முடிவெடுத்தவளாய் குழந்தையைக் கொஞ்சத் தொடங்கினாள்.

எப்படியோ ஒரு வாரம் ஓடிவிட்டது. சுந்தரியை வீட்டுக்கு அழைத்துப்போகலாம் என்று கூறியதும், விக்னேஷும், வித்யாவும் இனி எப்படி இந்தப் பிரச்சனையை சமாளிப்பது என்று கவலைப்படத் தொடங்கினர்.

தொடரும்...

*******************************************************************************************
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

மு. உரை:
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
----------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

18 comments:

  1. நீங்கள் கொண்டுவந்து கதையை நிறுத்துகிற
    இடத்தில் நானும் ஒவ்வொரு முறையும்
    அந்த அந்த கதாபாத்திரங்களாக நின்று
    என்ன செய்யலாம் என யோசித்துத்தான் பார்க்கிறேன்
    ஒன்றும் புரியாமல்தான் போகிறது
    இப்போது கூட விக்னேஷ் வித்தியாவாக மாறி
    யோசித்துப் பார்க்கிறேன்.குழப்பமாகத்தான் இருக்கிறது
    மனம் கவர்ந்த தொடர் (தொடரா? நிஜக் கதையா )
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. குழந்தை பிறந்தபிறகு ஒரு குடும்பத்தில் நிகழும் இயல்பான கொண்டாட்டம் எதுவுமே இல்லையென்பது. குழந்தையைக் கொஞ்சும்போது கூட அதன் அப்பாவைப் பற்றிய பேச்சை அனைவருமே கவனமாகத் தவிர்க்கிறார்கள். எப்போதும் ஏதோ ஒரு சோகம் அனைவர் முகத்திலும் இழையோடிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால்......

    விறுவிறுப்பு ஏற்ற தெரிந்திருக்கிறது..

    ReplyDelete
  3. கதையை தொடர்கிறேன் ஒருவித மனவலியுடனும் எதிர்பார்ப்புடனும்.

    ReplyDelete
  4. இன்றைக்குத்தான் இந்த ஒரு பகுதியைப் படித்தேன்.கதையை மிக விறுவிறுப்பாகக் கொண்டுசெல்லும் விதம்,மற்றப்பகுதிகளையும் உடனே படித்துவிடவேண்டுமென்று எண்ணவைத்தது.

    ஆரம்பித்துவிட்டேன்.

    ReplyDelete
  5. தொடரா? நிஜக் கதையா )
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. enga kondu vanthu niruthi vittirkal. ini sunthari eppadi eduththukuvanu payama irukku.

    ippave manasu lesa aki vittathu. iniyum padicha nan aluthu viduven.

    so me eskeppuuuuuu. but one think nalla irukku.

    ReplyDelete
  7. அன்புச் சகோதரி!

    சோகத்தின் வார்ப்படமான
    சுந்தரியாவது வாழட்டும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார். இது முழுவதும் நிஜக்கதை அல்ல. முன்பே சொன்னது போல் சுந்தரியின் பாத்திரம் மட்டுமே உண்மை. மற்றவை என் கற்பனையே.

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன் சார்.

    ReplyDelete
  10. தொடர்வதற்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  11. ஆர்வத்துடன் தொடர்வதற்கு நன்றி சுந்தரா.

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிராமத்து காக்கை.

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஆயிஷா. ஒரு உண்மைப்பாத்திரத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கற்பனைக் கதை.

    ReplyDelete
  14. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றிங்க பித்தனின் வாக்கு. நாம் வாழ்க்கையில் சந்திக்காத சிக்கல்களா? அதிலிருந்து எப்படி மீண்டுவருகிறோம் என்பதுதானே படிப்பினை?

    ReplyDelete
  15. உங்கள் வாழ்த்து உரியவரைச் சென்றடையட்டும். மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  16. என்னங்க இது கமெண்ட் போட முடியல,தொடரும்னு படித்ததும் இன்னும் சோகமாயிட்டு.இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.சுந்தரிக்கு எனது பரிதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி. தொடர்ந்து வாங்க.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.