11 September 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (15)



வித்யாவோ எதையும் நம்பமுடியாதவளாய் நின்றிருந்தாள். அவனைப் பார்த்து முழுதாய் ஒருமணி நேரம் ஆகியிருக்குமா? எத்தனை சந்தோஷத்துடன் வீடு சென்றான். அப்படி என்னதான் அவசரவேலையோ அவனுக்கு? பிரபு சுந்தரி தம்பதியைப் பார்த்தாலே கல்யாண ஆசை வருகிறதென்று சொன்னேனே! சொல்லி வாய் மூடவில்லையே! அதற்குள் போய்ச் சேர்ந்துவிட்டானே!

ராஜாராம் அதிர்ச்சியிலிருந்தாலும் அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி யோசித்தான். சுந்தரியிடம் யார் போய் சொல்வது? எப்படிச் சொல்வது? எல்லோருடைய மனமும் சுந்தரியை எண்ணி இரங்கிற்று. சுந்தரியை அழைத்துவர யாராவது போகவேண்டும் என்றான்.

விக்னேஷின் உடைந்த மனநிலை இந்த சமயத்தில் உதவாது என்றான்.  பெண் என்பதாலும், இப்போதைக்கு வித்யா சற்று திடமனநிலையில் இருப்பதால் சூழ்நிலையை பக்குவமாய்க் கையாளுவது சாத்தியம் என்றும் சொல்லி வித்யாவை அனுப்ப யோசனை சொன்னான்.  சுந்தரி வந்து உறுதி செய்து கையெழுத்திட்ட பின் தான்  பிரேதப் பரிசோதனை செய்து உடலை ஒப்படைப்பார்கள் என்றான்.

இப்படி ஒரு கோரநிலையில் பிரபுவைப் பார்த்தால் சுந்தரிக்கு இதயமே நின்றுவிடும் என்று விக்னேஷும் வித்யாவும் பயந்தனர்.

பலவழிகளையும் யோசித்து ஒன்றுமே புலப்படாத நிலையில் வித்யா, சுந்தரியை அழைத்துவர சம்மதித்தாள். அதற்கிடையில் அப்பாவுக்கு போன் செய்து விவரம் சொல்லி வீட்டுக்கு இன்றிரவு வர இயலாத  நிலையைத் தெரிவித்தாள். அவர் தானும் வருகிறேன் என்றபோது, அவருக்குச் சிரமம் வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.

விக்னேஷ் அம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தான். அதிர்ச்சியில் அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் என்னசெய்வதென்ற பயத்துடனே வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னான்.  பிரபுவின் அகால மரணச் செய்தியைக் கேட்டதுமே அவரது கை கால்கள் வெடவெடவென்று நடுங்கின. விக்னேஷின் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டார். நீ என்னைவிட்டுப்போய்விடாதே என்று ஏதேதோ சொல்லிப் புலம்பி அழ  ஆரம்பித்துவிட்டார். விக்னேஷுக்கு அம்மாவை எண்ணி பயம் வந்துவிட்டது.

பக்கத்து விட்டு மனோகரி அக்காவும், அவள் கணவரும் உதவிக்கு வந்தனர். இருவரும் அன்றிரவு அம்மாவுடனேயே தங்கியிருந்து அவரைப் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தனர். அம்மாவைப் பற்றிக் கவலைப்படாமல் மற்ற காரியங்களைப் பார்க்குமாறு அவனுக்கு ஆறுதல் கூறினர். பெருமூச்சுடன் விக்னேஷ் வெளியேறினான்.

வித்யா ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்துகொண்டு பிரபுவின் வீட்டுக்கு விரைந்தாள். சுந்தரியிடம் எப்படிச் சொல்வது என்று புரியவில்லை. வீட்டுக்கார கோமதியம்மா மிகவும் தங்கமானவர் என்று அறிந்திருந்தாள். அவர் உதவியுடன் சொல்லலாம். ஆனாலும்......ஆனாலும்.......

திடுக் திடுக்கென்று அடித்துக்கொள்ளும் நெஞ்சைப் பற்றியவாறே வாசலில் நிறுத்தச் சொல்லி இறங்கினாள்.
எதிர்பார்த்திருந்தவர் போல் தவிப்புடன் வாசலுக்கு ஓடிவந்த கோமதியம்மா இவளைப் பார்த்ததும், சற்றே ஏமாற்றத்துடன் பின்வாங்கியவராய்,

"யாரும்மா?" என்றார்.

"நான் பிரபுவோட ஆபிஸில் வேலை பாக்கறேன். அவரோட ஃபிரெண்ட். சுந்தரி இருக்காங்களா?"

"வாம்மா, பிரபு தம்பி அனுப்புச்சா, உன்னய? சீக்கிரம் வாம்மா...அந்தப் பொண்ணு கெடந்து துடியாத் துடிக்குது. போன புள்ளய காணோமேன்னு தவிச்சிட்டிருக்கேன். அப்பவே வலி வந்திட்டுது. அவசரத்துக்கு ஒரு ஆட்டோவக் கூப்புடுங்க தம்பின்னா....ஆங், ஆட்டோவெல்லாம் குலுக்கிப்போடும், எம்பொண்டாட்டிக்கு கார் புடிச்சுச்சிட்டு வரேன்னு போச்சு! தம்பிதானே அனுப்பிச்சுது?"

அவர் மறுபடியும் கேட்க, வித்யாவுக்கு நிலைமையின் தீவிரம்  உறைத்தது. பிரபுவின் அசுரவேகத்துக்கான காரணம் புரிந்தது. இந்த நிலையில் அவரிடம் என்னவென்று சொல்வது? சமயோசிதமாய் முடிவெடுத்த வித்யா,

"ஆமாம்மா, அவர்தான் அனுப்பினார்! சீக்கிரமா அவங்களை கூட்டிட்டு வாங்க!"

என்று அவசரப்படுத்தினாள்.

அந்தம்மா ஏற்கனவே தயாராய் வைத்திருந்த மாற்றுத்துணி, ஃபிளாஸ்க் இத்யாதி அடங்கிய பைகளை எடுத்து வித்யாவிடம் தந்துவிட்டு சுந்தரியை அழைக்கப் படியேறினார். வித்யா கார் டிரைவரிடம் "பக்கத்திலிருக்கும் லக்ஷ்மி மெடர்னிடி ஹாஸ்பிடலுக்குப் போகணும்" என்று சொல்லிவிட்டு, கீழே வந்த சுந்தரியை கைத்தாங்கலாய் அழைத்து காருக்குள் அமரவைத்தாள்.

சுந்தரி வேதனையில் முனகிக்கொண்டு இருந்தாள். அந்த வேதனையிலும், இவளைப் பார்த்து, "வாங்க அக்கா!" என்றதும் மளுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது வித்யாவின் கண்களில். 

சுந்தரி பல்லைக் கடித்துக்கொண்டு முகத்தைச் சுழித்தாள். அவள் பெரும் அவஸ்தையில் இருக்கிறாள் என்பது புரிந்தது. இடையிடையே, "அவரு வரலையா? அவரு எங்க?"  என்று கேட்க, வித்யா பதிலுரைக்க இயலாமல் தவித்தாள். நிலைமை புரியாதவராய் கோமதியம்மாவும்,

"உம் புருஷன்தானே? ஆட்டோவில வந்தா குலுங்கும், எம்பொண்டாட்டி கஷ்டப்படுவான்னு சொன்னவர்தானே! இப்போ முன்கூட்டியே ஆஸ்பத்திரியில படுக்கை எல்லாம் மெத்துனு இருக்கா...எம்பொண்டாட்டிக்கு உறுத்தாம இருக்கான்னு அங்கயே படுத்துப் பாத்து செக் பண்ணிட்டிருக்காரோ, என்னமோ...."

என்று கிண்டல் செய்து சிரிக்க, வித்யாவின் கண்கள் சட்டென கண்ணீரை உகுத்தன. அதை அந்தம்மா கவனித்துவிட்டார்.

"உனக்குக் கல்யாணமாயிடுச்சாம்மா?"

"இல்லைங்க!" தலை கவிழ்ந்தபடியே பதில் சொன்னாள் வித்யா.

"அதான்...பயப்படுறே போல இருக்கு. எல்லாம் கல்யாணமானா சரியாப்போயிடும். இந்த வேதனையெல்லாம் குழந்தை நல்லபடியாப் பொறந்து, அதைக் கையில தூக்கின மறுநிமிஷமே மறந்திடும்! அம்மா, சுந்தரி....கொஞ்சம் பொறுத்துக்கோ! தோ...ஆஸ்பத்திரி வந்திடுச்சி!"

பரிசோதனைக்குப்பின் உடனேயே லேபர் வார்டுக்கு அனுப்பப்பட்டாள், சுந்தரி. கோமதியம்மா, சுந்தரியின் கூடவே இருந்து தான் பெற்ற பெண்ணைப்போல் கவனித்துக்கொண்டார். அவரிருக்கும் தைரியத்தில் வித்யா சற்று நிம்மதி அடைந்தாள்.பிரபு எங்கே என்ற அவரது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அவள் தவிப்பதைப் புரிந்துகொண்டவர்போல் அந்தம்மா மெற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டார்.

வித்யா ராஜாராமுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல சிக்கல் புரிந்து அனைவரும் கையைப் பிசைந்துகொண்டு நின்றனர்.

சுந்தரியின் நிலை மிகவும் மோசமாயிருந்தது. சுகப்பிரசவம் நிகழ வழியில்லாமல் போயிற்று. அறுவை சிகிச்சை செய்ய அவள் கணவனின் கையொப்பம் தேவை என்று சொல்ல, வித்யா இருதலைக்கொள்ளி எறும்புபோல் தவித்தாள். மனைவியின் கையொப்பத்துக்காக கணவனின் சடலம் அங்கே காத்திருக்க, கணவனின் கையொப்பத்துக்காக மனைவி இங்கே மறுபிறவிக்குக் காத்திருக்க....எதை எப்படிக் கையாள்வது என்பதில் வித்யா மட்டுமல்ல...அனைவருமே குழம்பிப்போயினர்.

தொடரும்...

*********************************************************************************************

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

மு. உரை:

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

------------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு


13 comments:

  1. கடந்த சில பகுதிகளைத்தான் வாசிச்சேன். இது ரொம்ப கலங்க வைக்குதே!!

    ReplyDelete
  2. எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன்
    இக்கதையில் கணவன் கையெழுத்திற்காக மனைவியும்
    மனைவியின் கையெழுத்திற்காக கணவனும் காத்திருக்கும்
    அவல நிலையைப் போல நான் படித்ததே இல்லை
    மனம் கலங்கச் செய்து போகும் பதிவு
    ஆயினும் மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  3. நிறையப்பேர் கலக்கலாக எழுதுகிறார்கள்.
    வாசிப்பவர் மனம் கலங்கும்படி சிலர் மட்டுமே எழுதுகிறீர்கள்.

    தொடரின் மற்ற பாகங்களை நான் இதுகாறும் வாசித்தவனில்லை.
    வாசிக்கும் தைரியமும் இப்போது எனக்கில்லை.

    ReplyDelete
  4. அடுத்த அத்தியாயம் நல்லதிருப்பத்தோடு இருக்குமென்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. ரொம்பவும் கலங்கவைக்கிறது கீதா. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  6. Anonymous13/9/11 13:57

    //எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன்
    இக்கதையில் கணவன் கையெழுத்திற்காக மனைவியும்
    மனைவியின் கையெழுத்திற்காக கணவனும் காத்திருக்கும்
    அவல நிலையைப் போல நான் படித்ததே இல்லை
    மனம் கலங்கச் செய்து போகும் பதிவு//
    True

    ReplyDelete
  7. udane aduththa pakuthiyayai paikka vendumpol ullathu,viruviruppaana sokaththudan selkirathu

    ReplyDelete
  8. படிக்கும் போதே கண்ணீர் ஊற்றாகிறது
    கதைதான் என்றாலும் இதயம் வெடிப்பது
    போல் துடிக்கிறது
    நீங்கள் எப்படித்தான்
    எழுதினீர்களோ மனபலம் மிக்கவர் என்று
    கருதுகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. கலங்க வெச்சுட்டுது கதை. அசத்தலான சரளமான நடையில் ஆளை அப்டியே கதைக்குள் இழுத்துட்டுப் போறீங்க வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  10. போன அத்தியாயத்தில் ரமணி சாரின் கருத்துரைக்குப் பதில் சொன்னபோது குறிப்பிட்டிருந்தது போல் இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதையில் வரும் சுந்தரி என்னும் கதாப்பாத்திரம் மட்டும் உண்மை. அவருடைய உண்மைப்பெயர் வேறு. மற்றப் பாத்திரங்கள் யாவும் கற்பனையே. என்னை நெகிழ்த்திய சோகம் உங்களையும் கலங்கச் செய்ததில் ஆச்சர்யமில்லை. மனிதம் நம்முள் இன்னுள் ஈரம் காயாமல் இருக்கிறதென்பதற்கு இதைவிடவும் வேறு என்ன சாட்சி இருக்கக்கூடும்?

    ReplyDelete
  11. பின்னூட்டமிட்டு கருத்தறியச் செய்ததற்கு நன்றி ஹுஸைனம்மா.

    மனம் கலங்கினாலும் தொடர்ந்துவந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி ரமணி சார்.

    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சிசு. சோகத்திலும் திடமான மனத்துடன் இன்றும் அந்தச் சுந்தரி வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருக்குச் செய்யும் மரியாதைதான் இந்தக் கதை.தொடர்ந்து வாங்க.

    ReplyDelete
  12. தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி சாகம்பரி. இன்றே அடுத்தப் பகுதியைப் பதிவிட்டுவிடுகிறேன்.

    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி அனாமிகா.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி, அடுத்தப் பகுதி வந்துகொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. மனபலம் மிக்கவளா? நானா? தவறாக எண்ணிவிட்டீர்கள் ஐயா. நெஞ்சம் நெகிழ்த்திய பல சம்பவங்கள் இன்றும் என் மனத்தை விட்டகல மறுப்பதன் விளைவே இந்தக் கதைகளும் கவிதைகளும். ஒவ்வொரு கதையின் பின்னும் என் மனம் பாதித்த ஏதேனும் ஒரு நிகழ்வு கட்டாயம் இருந்தே தீருகிறது. முழுவதுமாய் கற்பனையில் வடிக்க என்னால் முடியவில்லை. தொடர்ந்து வருகை தந்து ஊக்குவிப்பதற்கு நன்றி ஐயா.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க அமைதிச்சாரல்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.