26 September 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (18)


படிக்காத, கிராமத்துப்பெண்; வெளியுலகம் அறியாப்பேதை. கணவனே உலகம் என்று அவன் காலடியையே சுற்றி சுற்றி வந்தவள். சுந்தரியை நினைக்க நினைக்க வித்யாவின் வேதனை அதிகமானது.

கோமதியம்மா தன்னால் இயன்ற அளவு சுந்தரிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.

"சுந்தரி, நீ இனிமே தைரியமா இருக்கணும், போனவன நெனச்சுக் கவலப்படுறதில லாபமில்ல. குழந்தைய பாரு! இனிமே அதுக்காக நீ வாழ்ந்தாகணும். எவ்வளவோ பிரச்சனைகளத் தாண்டி இந்த வாழ்க்கை உனக்குக் கிடச்சிருக்கு! அத நீ வீணாக்கிடக்கூடாது. பிரபுவோட ஆசப்படி இந்தக் குழந்தைய வளத்து ஆளாக்கவேண்டியது உன் பொறுப்பு!"

அவள் தற்கொலைக்கு முயன்றுவிடுவாளோ என்று அவர் பயப்படுவது அவர் பேச்சில் நன்றாகத் தெரிந்தது. சுந்தரி என்ன நினைக்கிறாள் என்று தெரியாததாலேயே வித்யாவுக்கும் அந்தப் பயம் தொற்றியது.

விக்னேஷ் தன் கையாலாகாதத்தனத்தை எண்ணி, மருகிக்கொண்டிருந்தான். நண்பனின் மனைவிக்கும், அவள் பச்சிளம் சிசுவுக்கும் உதவமுடியாத நிலையை எண்ணி தன்னைத் தானே நொந்துகொண்டான்.

சுந்தரியோ மிகவும் உறுதியாய் இருப்பதுபோல் தெரிந்தது. காரணம் தெரியாமல் இந்த ஒருவாரகாலம் எதையெதையோ நினைத்துக் கவலைப் பட்டதைவிடவும், இன்ன காரணம் என்று தெளிவாய்த்தெரிந்தது மனதுக்கு நிம்மதி கொடுத்தது.

கணவன் வருவானா, மாட்டானா, ஏதேனும் சிக்கலில் மாட்டியிருக்கிறானா? என்ன மாதிரியான சிக்கல்? சிறைக்குச் சென்றுவிட்டானா? சித்திரவதைப்படுகிறானா? அவன் பெற்றோர் வந்து வலுக்கட்டாயமாய் அவனைக் கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்களா? அவன் எங்கே என்ன துன்பப்படுகிறானோ?  என்றெல்லாம் உளைந்துகிடந்த மனதுக்கு, இனி அவன் வரப்போவதில்லை என்ற உறுதியான செய்தியும், அவனுடைய இறுதி யாத்திரை இனிதே நடந்தது என்ற செய்தியும் மருந்தாய் அமைந்தன.

அடிபட்டு அனாதையாகத் தெருவில் கிடக்காமல், நண்பனின் உதவியோடு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறான். அவன் மனைவி பிரசவத்துக்கு துடித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவளிடம் சொல்வது சரியல்ல என்று உணர்ந்து தவிர்த்திருக்கிறார்கள், நண்பர்கள். அவன் பெற்றோரிடம் சொல்லியும் அவர்கள் வராததால் தாங்களே முன்னின்று இறுதிச்சடங்கு செய்திருக்கின்றனர். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? மாறாய் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் அல்லவா? சுந்தரி மனத்தெளிவு பெற்றிருந்தாள்.

சுந்தரியைப் பார்க்க பிரபுவின் அலுவலகத்திலிருந்து ஒவ்வொருவராய் வந்து சென்றனர். அக்கம்பக்கத்திலிருந்தும் வந்து துக்கம் விசாரித்துச் சென்றனர். இப்படி ஒவ்வொருவராய் வந்து அவளது நினைவுகளைக் கிளறிச் செல்வது சரியில்லைஎன்று கோமதியம்மா நினைத்தார். ஆனால் அவருக்கு அதைச் சொல்ல எவ்வித உரிமையும் இல்லாத பட்சத்தில் அமைதியாய் இருந்துவிட்டார்.

வித்யா மேலும் ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு இரவும் பகலும் சுந்தரி கூடவே இருந்தாள். இரவில் கண் விழித்துக் குழந்தையைப் பார்த்துக்கொண்டாள். அக்காவின் குழந்தைகளைப் பார்த்துக்கொண்ட அனுபவம் கைகொடுத்தது. விக்னேஷ் விடுப்பில் இருந்தாலும், பகலில் வந்து தேவையானவற்றைச் செய்துவிட்டு இரவு வீடு திரும்பிவிடுவான்.

சுந்தரி தெளிவாய் இருப்பது அவளுடைய நடவடிக்கைகளில் புலப்பட்டது.

அவள் உடலும் சற்று தேறிவந்தது. எழுந்து நடமாடத் தொடங்கியிருந்தாள். குழந்தையை அடிக்கடி மடியில் வைத்துக்கொண்டு உற்சாகத்துடன் கொஞ்சினாள்.

"என் செல்லக்குட்டி....என் அம்முக்குட்டி......என் ராஜாத்தி......என் பவுனு....சக்கரக்குட்டி....அம்மா பாரு....அம்மா பாரு..... இனிமே அப்பா அம்மா எல்லாம் நான் தான்....அப்பா வேணுமின்னு அடம்புடிக்கக் கூடாது....சரியா.....சமத்து.....நான் சொல்லுறதெல்லாம் புரியிதா....சிரிக்கிறே....சிரி....சிரி....."

வித்யா சுந்தரியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்னக்கா..?"

"சுந்தரி! இவ்வளவு சீக்கிரம் நீ உன் மனசை தேத்திக்குவேன்னு நான் எதிர்பார்க்கலை. எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு, சுந்தரி...."

"அக்கா! திடீர்னு சொல்லியிருந்தீங்கன்னா  என்னாயிருக்கும்னு எனக்கே தெரியலை. இதை நான் முன்னாடியே கொஞ்சம் யூகிச்சிருந்ததாலயோ என்னமோ என்னால இந்த அதிர்ச்சியை ஏத்துக்க முடியுது. ஏதோ விபரீதம் நடந்திருக்குன்னு என் உள்மனசு சொல்லிச்சு. ஆனா....என்னன்னு புரியல. இப்ப தெளிவாயிடுச்சி.இனிமே கலங்கமாட்டேன்.  அவரோட ஆச என்ன தெரியுமாக்கா? நான் எப்பவும் சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருக்கணும்கிறதுதான். அத நான் நிறைவேத்த வேணாமா, சொல்லுங்க அக்கா.."

இந்த சின்னப்பெண்ணுக்குள் இத்தனை மனத்துணிவா? வியந்துபோய் அமர்ந்திருந்தாள், வித்யா.

"அக்கா, அவரு ஆசப்படியே பொம்பளப்புள்ள பிறந்திருக்கு. அவரிருந்து எப்படி வளப்பாரோ, அப்படி வளத்து, அதப் பாத்து சந்தோஷப்படுறதுதானக்கா புத்திசாலித்தனம்?"

வித்யா புன்னகைத்தாள். இனி இந்தப் பெண்ணுக்கு தன் பாதுகாப்பு தேவையில்லை என்று உணர்ந்தாள். இவள் எந்தத் தவறான முடிவுக்கும் போகமாட்டாள் என்பது உறுதியாய்த் தெரிந்தது. அன்றே கோமதியம்மாவிடம் சொல்லிக்கொண்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டாள்.
 
அவள் புறப்படத்தயாரானபோது விக்னேஷ் வந்தான்.

"வீட்டுக்கு புறப்பட்டுட்டேன்னு வீட்டுக்காரம்மா சொன்னாங்க!"

"ஆமாம்பா, சுந்தரி கொஞ்சம் நார்மல் நிலைக்கு வந்தாச்சு. நானும் வீட்டுக்குப் போய் நாலஞ்சு நாளாகுது. அப்பா புனே போய்ட்டு வந்துட்டாராம். போன்ல எதையும் கிளியரா சொல்லமாட்டேங்கறாரு. என்ன பிரச்சனைன்னு தெரியல.வீட்டுக்குப் போனாதான் தெரியும்."

"சரி, நீ கிளம்பு! நானும் வரவா?"

"வேணாம், விக்கி, இன்னொருநாள் வாங்க!"

வித்யா போய்விட்டாள்.

விக்னேஷ் தொட்டிலுக்கு அருகில் வந்து நின்று குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களுக்கு அது ஒரு பொம்மைபோல் தெரிந்தது. அகலக் கண்களை விழித்து, கைகால்களை உதைத்துக்கொண்டு படுத்திருந்தது. இந்தக் குழந்தையைக் கொஞ்சும் பாக்கியம் கிடைக்கப்பெறாத பிரபுவை எண்ணி நெஞ்சம் விம்மியது.கண்கள் கலங்கின.

"என்ன அண்ணே...பாப்பா என்ன சொல்றா....?"

சுந்தரியின் குரல் கேட்டு விக்னேஷ் அவசரமாய் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

"என்ன அண்ணே, இது? நானே மனசத் தேத்திகிட்டேன், நீங்க இன்னும் அழுதுகிட்டு? நீங்க எல்லாரும் இருக்கிற நம்பிக்கையிலதான் நான் வாழ்ந்துகிட்டிருக்கேன். இல்லைன்னா...எப்பவோ போய்சேர்ந்திருப்பேன்."

"சுந்தரி....என்னம்மா நீ....?"

"பின்ன என்னண்ணே? தைரியம் சொல்லவேண்டிய நீங்களே மனச விடலாமா? அப்புறம் நான் எப்படி தைரியமா இருக்க முடியும்?"

"இல்லம்மா....இனிமே கலங்கமாட்டேன்! தைரியமா இருப்பேன்!"

"அண்ணே…....உங்க கிட்ட……. ஒரு விஷயம் பேசணும்!"

சுந்தரி தயங்கித் தயங்கிச் சொல்ல, விக்னேஷ் என்ன சொல்லப்போகிறாளோ,பக்கத்தில் வித்யாவும் இல்லையே என்று நினைத்துக்கொண்டான்.

"அண்ணே....அக்கா இருக்கும்போதே பேசணும்னு நெனச்சேன். ஆனா அக்கா திடீர்னு வீட்டுக்கு கெளம்பிட்டாங்க....அண்ணே...அது வந்து....வந்து.....என்னய……..ஊருக்கு திருப்பி அனுப்பிடாதீங்க அண்ணே...."

சுந்தரி திடும்மென்று இப்படிச் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

"அது...அது....." அவன் தடுமாறுவதைக் கண்டு அவள் மிரண்டாள்.

"அண்ணே....உங்கள கெஞ்சி கேக்கறேன் அண்ணே.....நான் இங்கியே ஏதாவது வீட்டுவேல பாத்தாவது என் குழந்தய வளத்துக்கறேண்ணே....அங்க போனா.... எனக்கு அவப்பேரைத் தவிர வேற என்ன கெடைக்கும்? இந்தக் குழந்தய நிம்மதியா வளக்கமுடியுமாண்ணே என்னால? எத்தன நாள் வெட்டியா உக்காந்து சாப்புடமுடியும்? அங்க இருந்தாலும், ஏதாவது வேல செஞ்சாதானே வயித்தைக் கழுவமுடியும்? அத இங்கியே செய்யிறேனே! என் வேதனையாவது மிச்சமாவும். எங்க வீட்டுக்காரு ஆசப்படி சிரிக்கிறேனோ, இல்லயோ....அழுகாமயாவது இருப்பேன்ல...."

கரம் குவித்து கண்ணீருடன் அவன்முன் நின்றவளைப் பார்த்து என்ன சொல்வதெனத் தெரியாமல் தவித்தன், விக்னேஷ்.

ஐயோ! ஊரில் இவளை வரவேற்க யாருமில்லை என்பது தெரியாமல் இருக்கிறாளே! உண்மையைச் சொல்லிவிடவேண்டியதுதான். ஊருக்குப் போக அவளுக்கு விருப்பமில்லை. அதனால் உண்மையைச் சொல்வதால் ஒன்றும் கெட்டுவிடப்போவதிலை. அதே சமயம், இவளுடைய உதவி இருந்தால்தான் இவள் பெற்றோரைக் கண்டுபிடிக்கவும் முடியும். அவர்கள் எங்கு போயிருப்பார்கள் என்று ஓரளவு ஊகிக்க முடியும். விக்னேஷ் துணிந்து அவளிடம் சொன்னான்.

"சுந்தரி, நீ விரும்பினாலும் உங்க ஊருக்குப் போகமுடியாதும்மா!"

"ஏன், அண்ணே?"

விக்னேஷ் விவரம் சொல்ல, சுந்தரி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள். பிரபு வந்து அவர்களிடம் பெண் கேட்டபோது, அவமானப்படுத்தி அனுப்பியதில்தான் அவர்கள் மேல் இவளுக்குக் கோபம். மற்றபடி அவளை எந்தக்குறையுமில்லாமல்தானே வளர்த்தார்கள்! கஞ்சி ஊற்றியபோதும், வயிறு நிறைந்ததே! ஆடம்பரமாய் துணிமணி வாங்கித்தராவிட்டாலும், அரைகுறையாய் அலையவிடவில்லையே!

அம்மாவும் அப்பாவும் அவள்மேல் எத்தனை அன்பு வைத்திருந்தார்கள்? தம்பி அவளிடம் எவ்வளவு பாசம் காட்டினான்?

இனி அவர்களை எல்லாம் எப்போது பார்ப்பேன்? அடியும் உதையும், அவமானமும் பெற்று, பிறந்து வளர்ந்த ஊரைவிட்டுப் போகும்போது எப்படி வயிறெரிந்து போனார்களோ, அந்தப்பாவம்தான் தன்னை இப்படி நிர்க்கதியாக்கிவிட்டதோ?

ஹும்! இனிமேல் அவர்களை எண்ணிப் புலம்பி என்ன பயன்? கண்ணுக்குள் வைத்துப் பார்த்த கணவனே போய்விட்டான்! இனி மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட்டு ஆவதென்ன?

"சுந்தரி! என்னை மன்னிச்சிடும்மா...பிரபுதான் சொல்லவேண்டாம்னு...."

"பரவாயில்லைண்ணே...என்ன கண்கலங்காம வச்சுக்கணும்னு எத்தனப்பேரு பாடுபட்டிருக்கீங்க...இந்த உலகத்துல எத்தனப்பேருக்கு இந்த அதிஷ்டம் கிடைக்கும்?"

சுந்தரி சிரித்தாள். இத்தனைத் தெளிவாய் இருப்பவளிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தான்.

சுந்தரி அறியாமல்,  சிறுதொகையை சுந்தரி மற்றும் குழந்தையின் செலவுக்காக கோமதியம்மாவின் கைகளில் திணித்து விடைபெற்றான்.

தொடரும்...

************************************************************************************
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

மு. உரை:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானை, தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
-------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

14 comments:

  1. உங்கள் கதையின் போக்குக்குத் தகுந்தார்ப்போல
    எப்படி குறள் மிக அழகாக அமைகிறது
    ஒருவேளை குறளை தேர்ந்தெடுத்து அதற்கேற்றார்ப்போல
    கதை சொல்லிப் போகிறீர்களா?
    சுந்தரியின் எழுச்சிக்கும் அந்த யானைக்கும்தான்
    எத்தனைப் பொருத்தம்
    சிறப்பாக கதை சொல்லிப் போகிறீர்கள்
    தொடரவாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. மனதின் மற்றொரு பரிமாணம் அதிலும் அந்த குறள் - சிதைவிடத்து ஒல்கார். ஒரு வாழ்வியல் ரகசியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது உங்களுடைய கதையினைப்போல். சரியான திசை நோக்கி பயணிக்கிறது, அருமை கீதா.

    ReplyDelete
  3. சுந்தரியின் மன தைரியம் அசாத்தியமானது.துக்கம் அதிகமாகும்போது விரக்தியில் ஒரு தைரியத்தை உணர்ந்திருக்கின்றேன்.சுந்தரியின் மனநிலையும் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளதாக உணருகின்றேன்.

    ReplyDelete
  4. நம்ம சைட்டுக்கு வாங்க!
    தளத்துல இணைச்சுகிடுங்க!
    உங்க கருத்த சொல்லுங்க!
    நல்லா பழகுவோம்!...

    ReplyDelete
  5. தன்னம்பிக்கை மிக்க கதாநாயகியைக் கொண்டு கதை நகர்தலில் தெரிகிறது. இனி தொடர்ந்தும் போராடப்போகிறாள் என்று.

    அருமையான எழுத்து நடை. படிக்கையில் கவனத்தை தன் பக்கம் இருத்தி வைத்துக்கொள்கிறது!

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  6. சுந்தரி வாழவும் குழந்தை வளரவும்
    வாழ்த்துக்கள்!

    அடுத்து வருவதைப் படிக்க ஆவல்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. கதையை நன்றாக நகர்த்தி வருகிறீர்கள். குறள் மிக அருமை.. வாழ்த்துக்கள் கீதா.

    ReplyDelete
  8. உங்களைப் போலவேதான் எனக்கும் வியப்பு ரமணி சார். இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஏற்ற குறளைக் குறிப்பிடும் எண்ணம் இருந்தது. சில அத்தியாயங்களுக்கு மிகவும் பொருத்தமாய் குறள் அமைந்துவிடும்போது மனம் மகிழ்வில் துள்ளி அந்தப் பொய்யாமொழிப் புலவரின்பால் இன்னும் அதிகமாய் பித்தேறிக்கொள்கிறது. வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  9. தேர்ந்த மனவியல் வல்லுநரின் கருத்தால் உளம் பூரிக்கிறது. மிகவும் நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  10. சுந்தரியின் மனதைரியம் மிகவும் வியப்புக்குரிய ஒன்றுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி.

    ReplyDelete
  11. வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி. தங்கள் தளம் நன்றாக உள்ளது. விரைவில் கருத்திடுகிறேன் நண்பரே.

    ReplyDelete
  12. உங்கள் உளப்பூர்வ பாராட்டுக்கு நன்றி சத்ரியன்.

    ReplyDelete
  13. தொடர்ந்து வருகை தந்து ஊக்கமிகு கருத்துரை வழங்குவதற்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  14. உங்கள் ஊக்கம் தரும் பின்னூட்டம் மேலும் ஆர்வத்துடன் எழுதவைக்கிறது. நன்றி மோகன்ஜி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.