1 July 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (6)

                             

“உன் சந்தேகம் இதுவாதான் இருக்கும்னு நினைச்சேன். சுந்தரி! இப்ப சொல்றேன், கேட்டுக்கோ! இனி வாழ்நாள் பூராவும் உனக்கிந்த சந்தேகமே வரவே கூடாது!

எனக்கு அப்படியொரு எண்ணம் வரதுக்குக் காரணமே எங்கம்மாதான்! அவங்க பகட்டு வாழ்க்கையில் காட்டின ஆர்வத்தை, குடும்ப வாழ்க்கையில் காட்டவில்லை. அப்படிக் காட்டியிருந்தா, என் அப்பா இப்படி மாறியிருந்திருப்பாரான்னு நினைச்சேன்.

அதனால் பணமும், பணத்தின் மேல் இருக்கிற ஈடுபாடும்தான் குடும்பவாழ்க்கையைச் சிதைக்கிதுன்னு முடிவெடுத்து என் வாழ்க்கையில் அந்தத் தவறைச் செய்யக்கூடாதுன்னு நினைச்சேன். எல்லா நற்குணங்களும் இருக்கிற ஒரு ஏழைப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும்னு முடிவு செஞ்சுகிட்டேன்.

என் படிப்பு முடிஞ்ச நேரம் என் பாட்டி தவறிட்டாங்க. போக்கிடம் இல்லாமல் நான் மறுபடியும் கிராமத்துக்கே வரநேர்ந்திச்சு. அப்பதான் உன்னைப் பாத்தேன். வீட்டை அழகாய், நேர்த்தியாய் நீ வச்சிருந்த பாங்கு, உன் பக்குவமான சமையல், அம்மா எப்பக்கூப்பிட்டாலும் அலுத்துக்காம நீ அவங்களுக்கு செஞ்ச பணிவிடை... இதையெல்லாம் பார்த்து மலைச்சிருக்கேன்.

ஒரு சின்னப்பெண் இப்படி பம்பரம் மாதிரி ஓயாம வேலை செய்யறாளேன்னு ஆச்சர்யப்பட்டிருக்கேன். மத்த வேலைக்காரங்க எல்லாம் கடமைக்குச் செய்யும்போது நீ மட்டும் ஒரு ஈடுபாட்டோடு வேலை செய்தது எனக்குப் பிடிச்சிருந்தது. பணிவு, கனிவான பேச்சு,  மரியாதை, மத்தவங்களுக்கு உதவுற குணம் எல்லாம் உன்கிட்ட இருந்தது."

"அடேயப்பா! ஒண்ணும் தெரியாதவராட்டம் எப்பவும் புத்தகமும் கையுமா இருந்திட்டு, இவ்வளவு விஷயங்களைக் கவனிச்சிருக்கீங்களே!"

சுந்தரி அதிசயித்தாள்.

"உன்னைபோல் ஒருத்திதான் எனக்கு மனைவியா வரணும்னு உள்மனம் சொல்லிச்சு. அது ஏன் நீயாகவே இருக்கக்கூடாதுன்னுதான் உன்கிட்ட என் விருப்பத்தைச் சொன்னேன். ஆனா...நீ மறுத்துட்டே!"

"பின்னே? முதலாளியோட மகன் திடீர்னு ஒரு வேலைக்காரப்பொண்ணுகிட்டே வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீயான்னு கேட்டால் என்ன தோணும்?"

"பைத்தியம்னு நினைச்சியா?"

"ம்ஹும்! காமுகன்னு நினைச்சேன். பொண்ணுங்களை ஏமாத்தறதுக்காக கல்யாணம்கிற வலை வீசறவர்னு நினைச்சேன்."

"அடிப்பாவி! இத்தனைநாள் சொல்லவே இல்ல...."

"தப்புதான்! மன்னிச்சிடுங்க!"

"எது? சொல்லாததா?"

"இல்ல..அப்படி நினைச்சது.."

"சரி, விடு! இப்பவாவது சொன்னியே!"

"அப்புறமும் நீங்க என்னைப் பாக்குறப்ப எல்லாம் அதே கேள்வியைக் கேட்டுகிட்டே இருந்தீங்க!"

"ஆமாம், ஏன்னா...எனக்கு அந்நேரம் நீ ஒரு தேவதையாத் தெரிஞ்சே! உன்னை விட எனக்கு மனசே இல்ல."

"திடீர்னு சென்னைக்கு வேலை கிடைச்சு கெளம்பிப்போய்ட்டீங்க!"

"அப்பாடா! ஒழிஞ்சான்னு நினச்சிருப்பே!"

"அதுதான் இல்ல...ஏதையோ இழந்தது மாதிரிதான் இருந்திச்சு. ஆனாலும் இது சரியா வராதுன்னும் தோணிச்சு!"

"ஆனா..நான் விடலையே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஊருக்கு வந்தேனே! உன்னை மறுபடி மறுபடி கேட்டுட்டே இருந்தேனே! உனக்குப் படிக்கத் தெரியாதுன்னு தெரியாம காதல் கடிதமெல்லாம் எழுதிக் கொடுத்தேனே!"

பிரபு சிரித்தான்.

"நீங்க எனக்காகவே ஊருக்கு வர்றீங்கன்னு அப்புறம்தான் புரிஞ்சது. நீங்க உண்மையாவே என்னை நேசிக்கறீங்கன்னு புரிஞ்சது."

"என்ன புரிஞ்சு என்ன பிரயோஜனம்? இப்ப சந்தேகம் வந்திடுச்சே?"

"அதைத்தான் தீர்த்துட்டீங்கல்லே...."

"ஹும்! ஒரு பெரிய போராட்டத்துக்குப் பின்னாலதான் உன் கையைப் பிடிச்சேன்!"

"இப்பவரைக்கும் விடல்லை!"

கோர்த்திருந்த விரல்களைக் காட்டிச் சிரித்தாள்.

"இனிமேலும் விடப்போறதா உத்தேசமில்லை!"

அவன் அவள் கரங்களை இறுகப் பற்ற, "!" என்று பொய்யாய் அலறினாள்.

************************************************************

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

மு. உரை:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
-----------------------------

தொடர்ந்து வாசிக்க
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (7)

முந்தைய பதிவு
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (5)

6 comments:

  1. அழகிய கதை நடை...
    தொடரட்டும்...

    ReplyDelete
  2. arumaiyaana kathai .........
    vaalththukkal

    ReplyDelete
  3. >>"இப்பவரைக்கும் விடல்லை!"

    கோர்த்திருந்த விரல்களைக் காட்டிச் சிரித்தாள்.

    "இனிமேலும் விடப்போறாதா உத்தேசமில்லை!"


    ஹேப்பி லைன்ஸ்

    ReplyDelete
  4. இந்த லைன் க்ளியர். விக்னேஷ் லைன் தொடருமா?

    ReplyDelete
  5. கீதா...சின்னதா ஓய்வு எடுத்து முடிச்சு இப்பத்தான் வந்து வாசிக்கிறேன்.தொடருங்கள் !

    ReplyDelete
  6. ஊக்கத்துக்கு நன்றி செளந்தர்.

    வருகைக்கு நன்றி விடிவெள்ளி.

    ரசனைக்கு நன்றி செந்தில் குமார்.

    ஆர்வத்துக்கு நன்றி சாகம்பரி. ஆம், அடுத்து விக்னேஷின் நிலை...

    தொடர் ஊக்கத்துக்கு நன்றி ஹேமா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.