18 September 2011

உறைக்குள்ளிருந்தே உயிர்மாய்க்கும் கத்தி!


சுவாதீனமாயிருங்கள்!
எந்நேரமும் எதிர்கொள்ளநேரிடும்
வலியின் சுவையறிந்த நாவுகளை!

வன்சொற்கள் விதைத்து
ரணங்களை அறுக்கும் கலையில்
கைதேர்ந்த அவை,
பதுக்கும் வலிகளையும் கண்டறிந்து
பரிகசிக்கும் வல்லமை பெற்றவை!

மேலாடையில் ஊர்ந்துசெல்லும்
சிற்றெறும்பைத் தட்டிவிடுவதுபோல்
அசட்டையாய் இருக்கக்கூடும் எனினும்,
குத்தீட்டிவெல்லும் கொடுஞ்சொற்கள் ஏந்தி
உதட்டு உறைக்குள் பதுங்கி
 உங்கள் பலவீனத்தைப் பார்த்திருக்கும் அவற்றிடம்
உங்கள் பாசாங்கு பலிக்காமல் போகலாம்.

பாராமுகமாய் ஒதுங்கும்போதும்
பாய்ந்திழுத்துப் பேசி வளைத்து
வன்மப்புன்னகையினுள் வெஞ்சினம் மறைத்து
விடைபெறும் தருணம்
விருட்டென்று குரல்வளையில் செருகப்படும்
கூரிய சொற்களின் வீரியம் குறைக்கக்கூடும்,
மற்றுமொரு தருணம்
முனைப்புடன் தாக்கும் சொற்கள்
முன்னிலும் கூர்தீட்டப்பட்டும்
முனைகளில் நச்சு தோய்க்கப்பட்டும்!

சுதாரித்துக்கொள்ளுங்கள்!
வக்கணை பேசும் இந்நாவிலும்
வஞ்சனை கொஞ்சம் இருக்கலாம்.

14 September 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (16)


இப்போது பிரபுவின் மரணம் பற்றித் தெரியவந்தால் மருத்துவமனை நிர்வாகம் ஏதாவது பிரச்சனை செய்யலாம் அல்லது அவர்கள் மூலம் சுந்தரிக்கு உடனடியாய் தெரியவரலாம் என்பதால் விஷயத்தை வெளியில் சொல்லவேண்டாம் என்று நினைத்தாள்.

இறந்தவனைப் பற்றிக் கவலைப்படுவதை விடவும், உயிருடன் இருப்பவளைக் காப்பாற்றுவதே முதற்காரியம் என்று உணர்ந்த வித்யா, விக்னேஷை, சுந்தரி இருந்த மருத்துவமனைக்கு வரவழைத்தாள். சுந்தரியின் அறுவை சிகிச்சைக்கான அனுமதிப் பத்திரத்தில் அவனையே கையெழுத்து போடச்சொன்னாள். விக்னேஷ் நிலைகுலைந்து போயிருந்ததால் வித்யா எதைச் சொன்னாலும் செய்யும் நிலையில் இருந்தான்.

ஒருவழியாய் அறுவை சிகிச்சை முடிந்து தாயும் சேயும் நலம் என்ற செய்தி கேட்ட பின் தான் வித்யாவின் இதயத்துடிப்பு இயல்புநிலைக்கு வந்தது.

அழகான பெண் குழந்தை! தந்தையின் மரணத்தில் தான் ஜனித்த விவரம் அறியாமல் அமைதியாய் உறங்கும் சிசுவைப் பார்த்து கண்ணீர் வடித்தாள், வித்யா.

சுந்தரி மயக்க நிலையிலிருந்தாள். உதவிக்கு வந்த வீட்டுக்காரம்மாவிடம் கரங்குவித்து நன்றி சொன்ன வித்யாவும், விக்னேஷும் அவரிடம் பிரபுவின் துயரச் செய்தியை சொல்ல, அவர் பெருங்குரலெடுத்து அழத்துவங்க, அவசரமாய் அவரை அடக்கினர். அவர் அழுதால் காரியம் கெட்டுவிடும் என்று அஞ்சினர். அவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு பக்குவமாய் நடந்துகொண்டார்.

********
பிரபுவின் அலுவலக நண்பர்கள் அத்தனைப் பேரும் வந்திருந்து உதவினர். பிரபுவின் நிலைதான் கேள்விக்குறியாகிப் போனது. சுந்தரி இருக்கும் நிலையில் அவளிடம் சொல்வதே சரியில்லை என்பதால் பிரபுவின் பெற்றோருக்குச் சொல்வது என்ற முடிவுக்கு வந்தனர். என்னதான் பிள்ளை மேல் கோபமிருந்தாலும், இந்த நிலையில் மனம் இரங்கித்தானே ஆகவேண்டும். துக்ககரமான செயல்தான் என்றபோதும் நிச்சயம் மறுக்கமாட்டார்கள் என்று நம்பினர்.

பிரபுவின் பெற்றோருக்கு போன் செய்து நிலைமையைச் சொன்னார்கள். அவர்களோ, வாயில் வந்ததை எல்லாம் பேசி சுந்தரியை சபித்தார்களே தவிர, மகனுக்காகத் துளியும் துக்கப்பட்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் மகனை சுந்தரிதான் கொலை செய்ததுபோல் பேசினார்கள், ஏசினார்கள். அவளை மட்டுமல்லாது பிறந்த குழந்தையின் ஜாதகத்தையும் பாதகம் என்றனர். அவர்களது பேச்சு பொறுக்கமுடியாத விக்னேஷ், சடாரென்று கேட்டுவிட்டான்,

"உங்க பிள்ளையோட உடம்பு இங்க இருக்கு! வந்து வாங்கிக்கிற எண்ணம் இருக்கா, இல்லையா உங்களுக்கு?"

"எங்க புள்ளய உயிரோட பறிச்சிட்டு இப்ப பொணமாக் குடுக்குறாளா? எப்ப அவன் அந்த வேலைக்காரக் கழுததான் ஒசத்தின்னு எங்களை அவமானப்படுத்திட்டுப் போயிட்டானோ, அப்பவே நாங்க அவன தலமுழுகியாச்சி. இப்ப அங்க இருக்கிறது எங்க புள்ள இல்ல...அந்த தளுக்கு சுந்தரியோட புருஷன்....அவளே அவனுக்கு கொள்ளி போடட்டும், எங்க வயித்தெரிச்சல் அவள சும்மா வுடாது...அவ....நாசமா...."

போனை வைத்துவிட்டான். இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை. அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. சுந்தரி மருத்துவமனையிலிருந்து வரும்வரை உடலை பதப்படுத்தி வைத்திருக்கலாம் என்ற யோசனையை வித்யா, விக்னேஷ் இருவருமே நிராகரித்தனர். கணவன் இறந்துவிட்டான் என்பதே பெரும் அதிர்ச்சிதான். அதனிலும் அதிர்ச்சி கொடுக்கும்விதமாய் முகம் நசுங்கி, கோரமாய் இறந்திருப்பவனைப் பார்த்து பிள்ளை பெற்றவளுக்கு ஏதாவது விபரீதம் நிகழ்ந்துவிடடால்....

பலத்த யோசனைக்குப் பிறகு நண்பனின் ஈமகாரியங்களைத் தாங்களே செய்வது என்ற முடிவுக்கு வந்து அதற்கான முறையான ஏற்பாடுகள் செய்து காரியத்தை முடித்தனர். இறந்துபோனவனின் முகத்தைக்கூட தன் கண்ணில் காட்டாமல் அவனுக்கு இறுதிச்சடங்கு நிகழ்த்திவிட்டதற்காக சுந்தரி எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதென்று மனத்தைத் திடப்படுத்திக்கொண்டனர்.
*******


கண்விழித்தபோதெல்லாம், 'அவரு எங்க? அவரு எங்க? " என்று தேடித்தவித்த சுந்தரியை சமாளிப்பதுதான் பெரும்பாடாய் இருந்தது.  அவசர வேலை விஷயமாய் டெல்லி போயிருக்கிறானென்றும், இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடுவானென்றும் ஆளாளுக்கு மாறி மாறி ஒரே பொய்யைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

முதலில் நம்பமாட்டேன் என்று அடம்பிடித்தவள், பின் என்ன நினைத்தாளோ, அப்படியே அடங்கிப்போனாள். அவ்வப்போது குழந்தையை எடுத்து உச்சி முகர்ந்து கண்ணீர் விடுவாள். பின் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்துவிடுவாள். வித்யா, சமையல் செய்து மருத்துவமனைக்கு எடுத்துவந்தாள்.

வீட்டுக்காரம்மா குழந்தைத் துணியைத் துவைத்துக் காயவைத்துவிட்டு வந்து சுந்தரியின் அருகில் அமர்ந்தார். குழந்தையை எடுத்து அவளருகில் கிடத்தி பாலூட்டச் செய்தார்.பின் ஒரு தம்ளரில் ஜூஸ் எடுத்துக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.

"நான் மாட்டேன்! எங்க வீட்டுக்காரரு எங்க போனார்னு தெரிஞ்சாதான் நான் குடிப்பேன். யாருமே என்கிட்ட எதுவும் சொல்லமாட்டேங்கறீங்க, எனக்கு கவலையா இருக்கு!"

“சுந்தரி…………!  உம்புருஷன் உனக்கு கார் அழைக்கப்போனாருல்ல.... அப்போ...அவங்க மானேஜர்கிட்ட இருந்து அவசரமா போன் வந்துச்சாம்! முக்கியமான வேலையாம். டெல்லி போவணுமின்னு. இவரு எவ்வளவோ சொல்லியிருக்காரு. அதெல்லாம் இல்ல... நீ வந்துதான் ஆவணும்னு சொல்லிட்டாராம். சரின்னுதான் இந்த வித்யாப்பொண்ணுகிட்ட சொல்லி உன்னைப் பாத்துக்கச் சொல்லிட்டு அங்கிருந்தபடியே கெளம்பிட்டாராம்!"

இந்தக்கதையை சிறுபிள்ளையும் நம்பாது என்று அறியாதவர்போல் சுந்தரிக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார். அறைக்குள் நுழைந்த வித்யாவுக்கு அவரின் நிலையைப் பார்த்தாலும் பரிதாபமாயிருந்தது.

தன் வீட்டை விட்டுவிட்டு, வயதான கணவரை விட்டுவிட்டு துளியும் உறவில்லாத இவர்களுக்காக அவர் ஏன் கஷ்டப்படவேண்டும்? கண்விழித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்? குழந்தைத்துணி துவைக்கவேண்டும்? உலகத்தில் இதுபோல் தன்னலம் கருதாதவர்கள் இருப்பதால்தான் உலகம் இன்றும் உயிர்ப்புடன் இயங்குகிறது என்று நினைத்துக்கொண்டாள்.

"அவரு எங்கிட்ட சொல்லாம போகமாட்டாரு. எல்லாரும் சேர்ந்து என்னவோ என்கிட்டயிருந்து மறைக்கிறீங்க, சொல்லுங்கம்மா......எனக்கு ரொம்ப பயமா இருக்கு!"

அந்தம்மா வாயைத் திறக்குமுன் வித்யா சொன்னாள்,
"சுந்தரி, நீ இப்படிக் கவலைப்படுவேன்னுதான் பிரபு உங்கிட்ட சொல்லலை.”

"அக்கா...."

“நீ இப்படி சாப்பிடாம, கொள்ளாம உடம்பைக் கெடுத்துகிட்டா குழந்தைக்குதான் கஷ்டம்! முதல்ல ஜூஸைக்குடி"

இந்த ஒரு வாரத்தில் சுந்தரியை 'வா...போ....' என்று ஒருமையில் அழைக்கும் அளவுக்கு நெருங்கிப் பழகியிருந்தாள் வித்யா. தன்னை விடவும் அவள் இளையவள் என்பதை விடவும், அவளை தன் உடன்பிறந்தவளாகவே நினைத்ததே காரணம். சுந்தரியும் வாய்க்கு வாய் வித்யாவை, 'அக்கா, அக்கா' என்றழைத்து தன் பாசத்தை வெளிப்படுத்தினாள்.

ஆனாலும் சுந்தரியிடமிருந்து அனைவரும் எதையோ மறைப்பதை அவளால் உணரமுடிந்தது.

'எந்தப் புருஷனாவது தன் பெண்டாட்டி தலைப்பிரசவத்துக்கு துடிச்சிட்டிருக்கும்போது அவகிட்ட சொல்லாம கொள்ளாம தூரப்பயணம் போவானா? என் புருஷன் போயிருக்கிறதா அத்தனைப்பேரும் சொல்றாங்களே!  இது எப்படி சாத்தியம்? எனக்கு வலி எடுத்தபெறகு கார் புடிக்கப்போனவருக்கு என்னவோ ஆயிருக்குது, என்னாதது? ஏதாவது அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்காரா? அப்படின்னா...என்னோட போன்லயாவது பேசியிருப்பாரே? இல்லையே! எப்போ கேட்டாலும் அவரிருக்கிற இடத்தில சிக்னல் கிடைக்கலைன்னு சொல்லி மழுப்புறாங்க!

ஒருவேள........அவரு உயிரோடவே இல்லையா? கடவுளே! நான் தான் இலவு காத்த கிளி மாதிரி காத்துகிட்டிருக்கேனா? அவரு வரப்போறதே இல்லையா?

சீச்சீ! ஏன் அப்படி நினைக்கணும்? அப்படியெல்லாம் இருக்காது. இப்படியா எல்லாரும் ஒத்தாப்போல பொய் சொல்லி என்னை ஏமாத்துவாங்க? ரொம்ப அடிபட்டு பேசமுடியாத  நெலமையில அவர் இருக்கணும். அதான் என்கிட்ட சொன்னா நான் கவலைப்படுவேன்னு எல்லாரும் மறைக்கிறாங்க. ஆனா .....ஆனா......'

சுந்தரி கவனித்த இன்னுமொரு விஷயம்....குழந்தை பிறந்தபிறகு ஒரு குடும்பத்தில் நிகழும் இயல்பான கொண்டாட்டம் எதுவுமே இல்லையென்பது. குழந்தையைக் கொஞ்சும்போது கூட அதன் அப்பாவைப் பற்றிய பேச்சை அனைவருமே கவனமாகத் தவிர்க்கிறார்கள். எப்போதும் ஏதோ ஒரு சோகம் அனைவர் முகத்திலும் இழையோடிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால்......

‘எதை நம்புறது, எதை நம்பாமலிருக்கிறது? அவரு இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? அவரு மட்டும் உயிரோட இல்லைன்னா...... நானும் அவரோட போய்ச் சேர்ந்திடுவேன்.’

"ங்ஙா………..ஆ…..... ங்ஙா……………….ஆ…………......."

குழந்தையின் அழுகை சுந்தரியின் கவனத்தைக் கலைத்தது. தவிப்புடன் குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டாள். 'என் கண்ணம்மா! ஒன்ன விட்டுட்டுப் போவேனாடி, என் தங்கமே! என்னென்னமோ யோசிச்சேன், பாரு! நான் ஒரு பைத்தியக்காரிடி!"

குழந்தையின் உச்சியில் முத்தமிட்டாள். வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். இனி பிரபுவைப் பற்றி எவரிடமும் எதையும் கேட்கப்போவதில்லை என்று முடிவெடுத்தவளாய் குழந்தையைக் கொஞ்சத் தொடங்கினாள்.

எப்படியோ ஒரு வாரம் ஓடிவிட்டது. சுந்தரியை வீட்டுக்கு அழைத்துப்போகலாம் என்று கூறியதும், விக்னேஷும், வித்யாவும் இனி எப்படி இந்தப் பிரச்சனையை சமாளிப்பது என்று கவலைப்படத் தொடங்கினர்.

தொடரும்...

*******************************************************************************************
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

மு. உரை:
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
----------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

11 September 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (15)



வித்யாவோ எதையும் நம்பமுடியாதவளாய் நின்றிருந்தாள். அவனைப் பார்த்து முழுதாய் ஒருமணி நேரம் ஆகியிருக்குமா? எத்தனை சந்தோஷத்துடன் வீடு சென்றான். அப்படி என்னதான் அவசரவேலையோ அவனுக்கு? பிரபு சுந்தரி தம்பதியைப் பார்த்தாலே கல்யாண ஆசை வருகிறதென்று சொன்னேனே! சொல்லி வாய் மூடவில்லையே! அதற்குள் போய்ச் சேர்ந்துவிட்டானே!

ராஜாராம் அதிர்ச்சியிலிருந்தாலும் அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி யோசித்தான். சுந்தரியிடம் யார் போய் சொல்வது? எப்படிச் சொல்வது? எல்லோருடைய மனமும் சுந்தரியை எண்ணி இரங்கிற்று. சுந்தரியை அழைத்துவர யாராவது போகவேண்டும் என்றான்.

விக்னேஷின் உடைந்த மனநிலை இந்த சமயத்தில் உதவாது என்றான்.  பெண் என்பதாலும், இப்போதைக்கு வித்யா சற்று திடமனநிலையில் இருப்பதால் சூழ்நிலையை பக்குவமாய்க் கையாளுவது சாத்தியம் என்றும் சொல்லி வித்யாவை அனுப்ப யோசனை சொன்னான்.  சுந்தரி வந்து உறுதி செய்து கையெழுத்திட்ட பின் தான்  பிரேதப் பரிசோதனை செய்து உடலை ஒப்படைப்பார்கள் என்றான்.

இப்படி ஒரு கோரநிலையில் பிரபுவைப் பார்த்தால் சுந்தரிக்கு இதயமே நின்றுவிடும் என்று விக்னேஷும் வித்யாவும் பயந்தனர்.

பலவழிகளையும் யோசித்து ஒன்றுமே புலப்படாத நிலையில் வித்யா, சுந்தரியை அழைத்துவர சம்மதித்தாள். அதற்கிடையில் அப்பாவுக்கு போன் செய்து விவரம் சொல்லி வீட்டுக்கு இன்றிரவு வர இயலாத  நிலையைத் தெரிவித்தாள். அவர் தானும் வருகிறேன் என்றபோது, அவருக்குச் சிரமம் வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.

விக்னேஷ் அம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தான். அதிர்ச்சியில் அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் என்னசெய்வதென்ற பயத்துடனே வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னான்.  பிரபுவின் அகால மரணச் செய்தியைக் கேட்டதுமே அவரது கை கால்கள் வெடவெடவென்று நடுங்கின. விக்னேஷின் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டார். நீ என்னைவிட்டுப்போய்விடாதே என்று ஏதேதோ சொல்லிப் புலம்பி அழ  ஆரம்பித்துவிட்டார். விக்னேஷுக்கு அம்மாவை எண்ணி பயம் வந்துவிட்டது.

பக்கத்து விட்டு மனோகரி அக்காவும், அவள் கணவரும் உதவிக்கு வந்தனர். இருவரும் அன்றிரவு அம்மாவுடனேயே தங்கியிருந்து அவரைப் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தனர். அம்மாவைப் பற்றிக் கவலைப்படாமல் மற்ற காரியங்களைப் பார்க்குமாறு அவனுக்கு ஆறுதல் கூறினர். பெருமூச்சுடன் விக்னேஷ் வெளியேறினான்.

வித்யா ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்துகொண்டு பிரபுவின் வீட்டுக்கு விரைந்தாள். சுந்தரியிடம் எப்படிச் சொல்வது என்று புரியவில்லை. வீட்டுக்கார கோமதியம்மா மிகவும் தங்கமானவர் என்று அறிந்திருந்தாள். அவர் உதவியுடன் சொல்லலாம். ஆனாலும்......ஆனாலும்.......

திடுக் திடுக்கென்று அடித்துக்கொள்ளும் நெஞ்சைப் பற்றியவாறே வாசலில் நிறுத்தச் சொல்லி இறங்கினாள்.
எதிர்பார்த்திருந்தவர் போல் தவிப்புடன் வாசலுக்கு ஓடிவந்த கோமதியம்மா இவளைப் பார்த்ததும், சற்றே ஏமாற்றத்துடன் பின்வாங்கியவராய்,

"யாரும்மா?" என்றார்.

"நான் பிரபுவோட ஆபிஸில் வேலை பாக்கறேன். அவரோட ஃபிரெண்ட். சுந்தரி இருக்காங்களா?"

"வாம்மா, பிரபு தம்பி அனுப்புச்சா, உன்னய? சீக்கிரம் வாம்மா...அந்தப் பொண்ணு கெடந்து துடியாத் துடிக்குது. போன புள்ளய காணோமேன்னு தவிச்சிட்டிருக்கேன். அப்பவே வலி வந்திட்டுது. அவசரத்துக்கு ஒரு ஆட்டோவக் கூப்புடுங்க தம்பின்னா....ஆங், ஆட்டோவெல்லாம் குலுக்கிப்போடும், எம்பொண்டாட்டிக்கு கார் புடிச்சுச்சிட்டு வரேன்னு போச்சு! தம்பிதானே அனுப்பிச்சுது?"

அவர் மறுபடியும் கேட்க, வித்யாவுக்கு நிலைமையின் தீவிரம்  உறைத்தது. பிரபுவின் அசுரவேகத்துக்கான காரணம் புரிந்தது. இந்த நிலையில் அவரிடம் என்னவென்று சொல்வது? சமயோசிதமாய் முடிவெடுத்த வித்யா,

"ஆமாம்மா, அவர்தான் அனுப்பினார்! சீக்கிரமா அவங்களை கூட்டிட்டு வாங்க!"

என்று அவசரப்படுத்தினாள்.

அந்தம்மா ஏற்கனவே தயாராய் வைத்திருந்த மாற்றுத்துணி, ஃபிளாஸ்க் இத்யாதி அடங்கிய பைகளை எடுத்து வித்யாவிடம் தந்துவிட்டு சுந்தரியை அழைக்கப் படியேறினார். வித்யா கார் டிரைவரிடம் "பக்கத்திலிருக்கும் லக்ஷ்மி மெடர்னிடி ஹாஸ்பிடலுக்குப் போகணும்" என்று சொல்லிவிட்டு, கீழே வந்த சுந்தரியை கைத்தாங்கலாய் அழைத்து காருக்குள் அமரவைத்தாள்.

சுந்தரி வேதனையில் முனகிக்கொண்டு இருந்தாள். அந்த வேதனையிலும், இவளைப் பார்த்து, "வாங்க அக்கா!" என்றதும் மளுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது வித்யாவின் கண்களில். 

சுந்தரி பல்லைக் கடித்துக்கொண்டு முகத்தைச் சுழித்தாள். அவள் பெரும் அவஸ்தையில் இருக்கிறாள் என்பது புரிந்தது. இடையிடையே, "அவரு வரலையா? அவரு எங்க?"  என்று கேட்க, வித்யா பதிலுரைக்க இயலாமல் தவித்தாள். நிலைமை புரியாதவராய் கோமதியம்மாவும்,

"உம் புருஷன்தானே? ஆட்டோவில வந்தா குலுங்கும், எம்பொண்டாட்டி கஷ்டப்படுவான்னு சொன்னவர்தானே! இப்போ முன்கூட்டியே ஆஸ்பத்திரியில படுக்கை எல்லாம் மெத்துனு இருக்கா...எம்பொண்டாட்டிக்கு உறுத்தாம இருக்கான்னு அங்கயே படுத்துப் பாத்து செக் பண்ணிட்டிருக்காரோ, என்னமோ...."

என்று கிண்டல் செய்து சிரிக்க, வித்யாவின் கண்கள் சட்டென கண்ணீரை உகுத்தன. அதை அந்தம்மா கவனித்துவிட்டார்.

"உனக்குக் கல்யாணமாயிடுச்சாம்மா?"

"இல்லைங்க!" தலை கவிழ்ந்தபடியே பதில் சொன்னாள் வித்யா.

"அதான்...பயப்படுறே போல இருக்கு. எல்லாம் கல்யாணமானா சரியாப்போயிடும். இந்த வேதனையெல்லாம் குழந்தை நல்லபடியாப் பொறந்து, அதைக் கையில தூக்கின மறுநிமிஷமே மறந்திடும்! அம்மா, சுந்தரி....கொஞ்சம் பொறுத்துக்கோ! தோ...ஆஸ்பத்திரி வந்திடுச்சி!"

பரிசோதனைக்குப்பின் உடனேயே லேபர் வார்டுக்கு அனுப்பப்பட்டாள், சுந்தரி. கோமதியம்மா, சுந்தரியின் கூடவே இருந்து தான் பெற்ற பெண்ணைப்போல் கவனித்துக்கொண்டார். அவரிருக்கும் தைரியத்தில் வித்யா சற்று நிம்மதி அடைந்தாள்.பிரபு எங்கே என்ற அவரது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அவள் தவிப்பதைப் புரிந்துகொண்டவர்போல் அந்தம்மா மெற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டார்.

வித்யா ராஜாராமுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல சிக்கல் புரிந்து அனைவரும் கையைப் பிசைந்துகொண்டு நின்றனர்.

சுந்தரியின் நிலை மிகவும் மோசமாயிருந்தது. சுகப்பிரசவம் நிகழ வழியில்லாமல் போயிற்று. அறுவை சிகிச்சை செய்ய அவள் கணவனின் கையொப்பம் தேவை என்று சொல்ல, வித்யா இருதலைக்கொள்ளி எறும்புபோல் தவித்தாள். மனைவியின் கையொப்பத்துக்காக கணவனின் சடலம் அங்கே காத்திருக்க, கணவனின் கையொப்பத்துக்காக மனைவி இங்கே மறுபிறவிக்குக் காத்திருக்க....எதை எப்படிக் கையாள்வது என்பதில் வித்யா மட்டுமல்ல...அனைவருமே குழம்பிப்போயினர்.

தொடரும்...

*********************************************************************************************

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

மு. உரை:

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

------------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு


7 September 2011

நான் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவனாய்!


பழுதடைந்த பாட்டுப்பெட்டி உபயத்தால்
பழுதடையாக் காதுகளுக்கு உத்திரவாதத்துடன்
நெடியப் பேருந்துப் பயணம் ஒன்றில்
நிறைவாய் சன்னல் ஓரம் நான்!

யாத்திரை புறப்படக் காத்திருந்ததுபோல்
நித்திரை தேடியலைந்தன சில விழிகள்!
நொறுக்குத்தீனிப் பொட்டலத்தைப்
பரபரவெனப் பிரித்தன சில கரங்கள்!

கதைப்புத்தகத்துக்குள் புதைந்து
தொலைந்துபோயின சில முகங்கள்!
கத்திக் கதை பேசிச் சிரித்தன,
வெற்றிலைச் சிவப்பேறிய சில வாய்கள்!

கடந்து செல்லும் பாதையெங்கும்
கொஞ்சிய இயற்கையின் கோலாட்டத்தை
ரசித்தபடி நான்....
நான் மட்டும்!

பார்வைபிடுங்கும்
பளீர் மின்னலென
கண்ணாமூச்சிக் காட்டியது
மலைகளுக்கப்பால்
மாலைச்சூரியன்!

பச்சைக் கம்பளத்தைப்
பரவலாய் விரித்திட்டு அது
பறந்துவிடாதிருக்க,
நட்டுவைத்த கம்பமென
நாற்புறமும் மரங்கள்!

சலசலக்கும் சிற்றோடை
கண்மறைவதற்குள்ளாய்
சட்டென நீரில் மூழ்கிப்
பறந்துவந்து தலைசிலுப்பியது,
என் மனக்காகம்!

அச்சடித்தக் காகிதம் ஒன்று
ஆகாயத்தில் பறப்பதுபோல்
இடவலம் இடம்விட்டு
இணைச்சிறகுகளில் இடிபடாமல்
இயங்கும் நாரைக் கூட்டத்தின் நடுவே
சத்தமின்றிச் சிலதூரம் பயணித்துப்
பின் அரைமனதாய்த் திரும்பிவந்தன,
என் ஒரு சோடிக் கண்கள்!

இயற்கையின் எழிலை ரசித்து,
எண்ணிலா இன்பத்தைத் துய்த்தபடி,
ஆசீர்வதிக்கப்பட்டவனாய் நான்.....
நான் மட்டுமே!

என்ன பிறவிகள் இவர்கள் என்றே
ரசனையறியா சகபயணிகளை
ஏக்கத்துடன் சபித்தவேளை,
சடாரென உலுக்கி நின்றது, பேருந்து!

உள்ளே ஒருவன் ரத்தவாந்தியெடுத்து
உயிருக்குத் துடித்துக்கொண்டிருக்க,
அந்தவிவரம் அறியாமல்
ஆகாயத்திலிருந்து குதித்தவன்போல்,
என்னவாயிற்று என்று
அலட்சிய வினாவெழுப்பிய நொடியில்
அற்பனிலும் கீழாய் சபிக்கப்பட்டவனானேன்! 
******

(பி.கு.)சற்றுமுன் பதியப்பட்ட ஏதோவொரு தூண்டுதல் என்னும் கவிதை ஏப்ரல் மாதத்தில் முன்பே பதிந்த கவிதை. தவறி மீள்பதிவாகிவிட்டது. அதை இந்தக் கவிதையால் இடமாற்றியுள்ளேன். இண்ட்லியில் இணைப்புக் கொடுத்தபிறகே கவனித்தேன்.தவறுக்கு வருந்துகிறேன்.

5 September 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?(14)

                                  
நாகலட்சுமியிடம் ஒரு மெல்லிய இழையிலான மாற்றம் தெரிந்தது. விக்னேஷ் சொல்வதை மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தார். அவ்வப்போது வெளியிடங்களுக்கு அம்மாவும் பிள்ளையும் சென்றுவந்தனர். அம்மாவுக்கு அதிகம் அலைச்சல் கொடுக்காத, அவரை அயரவைக்காத இடங்களாகத் தேர்ந்தெடுத்தான் விக்னேஷ். ஆபிஸில் லோன் போட்டு கார் வாங்கினான். நினைக்கும்பொழுதில், நினைக்கும் இடத்துக்கு அம்மாவை அழைத்துச்செல்ல அது ஏதுவாக இருந்தது.

ஆனாலும், நாகலட்சுமி, மகனின் திருமணப்பேச்சை மட்டும் எடுக்காமல் மிகுந்த கவனமுடன் செயல்பட்டார். அதுவே விக்னேஷுக்கு வசதியாகவும் இருந்தது. அவர் பாட்டுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யத்துவங்கிவிட்டால் வித்யாவின் நிலை.....? அதனால் அவன் திருமண விஷயத்தில் அம்மா கட்டிக்காக்கும் பொறுமைக்கு மனதளவில் நன்றி சொன்னான்.

வித்யாவை முன்பு போல் இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை. அம்மாவுடன் வெளியில் செல்லும் காரணம் இவனுக்கு. அக்காவும் அவள் குழந்தைகளும் புனேயிலிருந்து வந்து வீட்டில் தங்கியிருப்பதால் அவர்களுடன் நேரத்தைச் செலவிடும் நிர்ப்பந்தம் வித்யாவுக்கு.

வெகுநாட்களுக்குப் பிறகு கடற்கரை சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

கடற்கரைக் காற்று இதமாக வீசினாலும், விக்னேஷ், வித்யா இருவரின் மனநிலையும் அதை ரசிக்கும்படி இல்லை. விக்னேஷின் பிரச்சனைக்கு வித்யாவால் ஓரளவு நிம்மதி கிடைத்திருந்த நேரத்தில், வித்யாவுக்கு அவள் அக்கா உருவில் புதுப்பிரச்சனை துவங்கியிருந்தது.

"விக்கி, வீட்ல ஒரே பிரச்சனை! எப்ப பாத்தாலும் அழுகை, புலம்பல்தான்! அத்தானுக்கு வேற பெண்ணோட தொடர்பு இருக்காம். ரொம்ப வருஷமா இருக்காம். அது இவளுக்கு இப்பதான் தெரியவந்ததாம். நேரடியாய்க் கேட்டுட்டாளாம். அவர், ஆமாம், அதுக்கென்ன இப்போங்கறாராம். உன்னோட வாழ்ந்தவரைக்கும் போதும்னு குழந்தைகள அழைச்சுட்டு கிளம்பி வந்துட்டா. அப்பாவுக்கும் எனக்கும் என்ன பண்றதுன்னு புரியலை. அப்பா அடுத்தவாரம் புனே போறார். பேசினாதான் அவர் என்ன சொல்றாருன்னு தெரியும்."

"உங்க அத்தான் மேல் தப்பிருக்காதுன்னு நினைக்கிறியா?"

"அப்படியும் இருக்கலாமில்லே....எங்க அக்காவுக்கு வாய் அதிகம், எல்லாத்தையும் எடுத்தோம், கவுத்தோம்னு பேசற டைப். அவ சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலையே!"

"நீ சொல்றதுதான் சரி. எதையும் ஆராயாம ஒரு முடிவுக்கு வரது சரியில்லைதான்! உங்கப்பா நல்ல செய்தியோடு வருவார்னு நம்புவோம்!"

"சரி, இப்ப எங்க அத்தை...அதான் உங்கம்மா எப்படி இருக்காங்க?"

"ம். நல்ல முன்னேற்றம் தெரியுதுப்பா. சாப்பாட்டில மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்துகிட்டா போதும், இன்னும் சீக்கிரமா தேறிடுவாங்க."

"எப்படியோ...எல்லாப் பிரச்சனையும் சீக்கிரமா தீர்ந்து நம்ம கல்யாணம் நடந்தாப் போதும்னு இருக்கு எனக்கு!" 

"அவ்வளவு அவசரமா உனக்கு?"

"ஏன், உங்களுக்கு அவசரமில்லையா?    பிரபுவப் பாருங்க, எவ்வளவு சந்தோஷமா இருக்கார்னு, எனக்கு அவங்க ரெண்டுபேரையும் பார்த்தாலே கல்யாண ஆசை வந்திடுது."

"இங்கே பாரு, வித்யா, காதலிக்கிறதில் இருக்கிற சுகம் கல்யாணத்துக்கு அப்புறம் கிடைக்காது."

"ஆகா! ரொம்ப அழகுதான்! சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்கிற மாதிரி இருக்கு.”

"எங்க, புளிக்குதான்னு பாக்கறேன்"

என்று கூறிக்கொண்டே வித்யாவின் கரத்தை எடுத்து முத்தமிட முனைய, அவள் வெடுக்கென்று இழுத்துக்கொண்டு,

"ஏதேது? ரொம்பத் தேறிட்டீங்க, போலயிருக்கு!" என்று அழகு காட்டினாள்.

"ஏய்! நீதானே சொன்னே?"

"ஆமாம், சொன்னேன், சொரைக்காய்க்கு உப்பில்லேன்னு... நேரமாச்சு, எழுந்திரிங்க,போகலாம்!"

இதற்குமேல் இங்கிருந்தால் ஆபத்து என்பதுபோல் வித்யா கிளம்பத்தயாராக, விக்கி பரிதாபமாய் அவளைப் பார்த்துக் கேட்டான்.

"என்னைப் பாத்தா உனக்கு பாவமாயில்லையாப்பா?"

"இல்லவே இல்லை. அம்மாகிட்ட சத்தியம் பண்ணிட்டு வந்து என்கிட்ட என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு? கிளம்புங்க, நீங்க வரலைன்னா நான் போறேன்!"

"நீ போனதுக்கப்புறம் எனக்கென்ன வேலை? இரு, நானும் வரேன்!"

இருவரும் கடற்கரை மணலைத் தட்டிவிட்டு எழுந்து செல்லும் அழகை பின்புறத்திலிருந்து அலைகள் ஒன்றையொன்று முட்டி மோதியவண்ணம் கரைக்கு வந்து ரசித்துச் சென்றன.

கையில் செருப்பைப் பிடித்துக்கொண்டு மணலில் கால் புதைய ரசித்து நடந்தவளைத் தானும் ரசித்தபடியே உடன் நடந்த விக்னேஷை அவன் செல்போன் அழைத்தது.

"ஹலோ. விக்னேஷ்தான்! சொல்லுங்க!"

"....என்....என்ன.......என்ன....."

அதிர்ச்சியில் உறைந்து நின்றவனின் கையிலிருந்து போன் நழுவி விழ......வித்யா பதட்டமடைந்தாள்.

"என்ன விக்கி? யாரு? என்னாச்சு?"

“……………………”

"என்னப்பா? என்னாச்சு?"

"ஐயோ........பிரபூ......."

வித்யா அவனை உலுப்ப, அதிர்ச்சியிலிருந்து விடுபட்டவன், சட்டென்று மடிந்து அமர்ந்து அழத்துவங்க, எதுவும் புரியாமல் வித்யா தவிப்படைந்தாள்.

கீழே விழுந்த கைபேசியை எடுக்க......தொடர்பு துண்டிக்கப்படவில்லை என்பது புரிந்தது.படபடப்புடன் பேசினாள்.

"ஹலோ.....நான் விக்னேஷோட ஃபிரெண்ட் பேசறேன்! அவர்...அவர் பேசற நிலையில் இல்லை. என்ன விஷயம், சொல்லுங்க!"

"அய்யய்யோ...எப்போ......எந்த ஹாஸ்பிடல்?"

விவரம் சொன்னதும், "நாங்க உடனே வரோம்!" வைத்துவிட்டாள்.

விக்னேஷின் அருகில் சென்று அவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவன் கண்ணீர் அவள் மார்பை நனைக்க,  அவள் விழிவழிநீரோ. அவன் உச்சந்தலையை நனைத்தது.

அவ்வழியே சென்ற குடும்பம் ஒன்று  இது ஒரு காதல் நாடகமென்று நினைத்து தூ என்று தூற்றிச் சென்றது. வித்யா எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அடுத்து என்ன செய்வது என்பதில் இருந்தது அவள் கவனம்.

அவள் மனக்கண்ணில் சுந்தரி வந்துபோனாள். நிறைமாத கர்ப்பிணி! எப்படித்தாங்குவாள் இந்த இடியை? பெற்றவரை...உடன்பிறந்தவனை...ஊரை...உறவுகளை....எல்லாம் விட்டுவிட்டு நீயே தஞ்சம் என்று வந்தவளை நிராதரவாய் தவிக்கவிட்டுச் சென்றவன்மேல் கோபம் வந்தது. அப்படி என்ன அவசரம் அவனுக்கு? இத்தனைச் சீக்கிரம் இவ்வுலகை விட்டுப் பிரியவேண்டிய நிர்ப்பந்தம் என்ன? காலன் அவனுக்கு கார் வடிவத்திலா வரவேன்டும்?

போனவன் போய்விட்டான். இனி சுந்தரியின் எதிர்காலம்? என்ன பாவம் செய்தாளென்று இவ்வளவு பெரிய தண்டனை?
கேள்விகள் வித்யாவைக் குடைந்தன.

ஒருவாறாக விக்னேஷைத் தேற்றி மருத்துவமனை வந்தாயிற்று.

அங்கே மேலெல்லாம் ரத்தக்கறையுடன் ராஜாராம் நின்றிருந்தான். பிரபுவின் அலுவலக நண்பன். உறவினரைப் பார்க்க அவ்வழியே சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறினான். பிரபுவின் பேரில்தான் தவறென்றான். எதற்கு அப்படியொரு அசுரவேகத்தில் பைக்கை ஓட்டிவந்தான் என்பது புரியவில்லை என்றான். தூக்கி எறியப்பட்டவனை குற்றுயிரும், குலையுயிருமாய் தான் தான் மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாகவும், வரும்போதே உயிர் பிரிந்துவிட்டதாகவும் கூறி அழுதான்.

விக்னேஷ் இன்னமும் அதிர்ச்சி மாறாமல் அமர்ந்திருந்தான். ஒரே நண்பன். எல்லா நற்குணங்களுக்கும் சொந்தக்காரன். நெஞ்சத்துணிவு மிக்கவன். எத்தனைக் கனவுகளோடு திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைத்தான்....எல்லாமே கனவுகளாகவே போய்விட்டதே...... சுந்தரி......ஐயோ..... சுந்தரியை எப்படித் தேற்றுவது? அவள் எப்படித் தாங்குவாள்? அந்த அப்பாவிப் பெண்ணுக்கு இது தெரியுமா?

இன்னும் அவளிடம் சொல்லவில்லை என்றான் ராஜாராம். அவளிடம் இந்தத் துக்கத்தை எப்படிச் சொல்வது? தாங்குமா அவளது சின்னஞ்சிறு இதயம்? அதிர்ச்சியில் ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டால்...... 

'சுந்தரியின் பெற்றோர் ஊரைவிட்டுப் போன செய்தியையே அவளிடம் சொல்லவேண்டாமென்றாயே பிரபு! இப்போது நீ திரும்பி வரவே முடியாத இடத்துக்குப் போய்விட்டாய் என்ற செய்தியை நான் எப்படி அவளிடம் சொல்வேன்? அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டாயே..... இனி அவள் காலமெல்லாம் கண்ணீர் விடுவதை நாங்கள் காணநேருமே! கை, கால் இழந்து முடமாகவேனும் அவள் கண்முன் வளையவந்திருக்கக் கூடாதா? இப்படியா கண்மூடித் திறப்பதற்குள் கண்மறைந்து போகவேண்டும்? பிரபு...என் உயிர் நண்பா....என்னைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாயே.....'

விக்னேஷின் உள்மனம் ஓயாமல் அரற்றிக்கொண்டே இருந்தது.

 தொடரும்...

************************************************************************************************
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

மு. உரை:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு