13 June 2019

பூக்கள் அறிவோம் (81 - 85)


பூக்கள் அறிவோம் தொடரில் இம்முறை ஆஸ்திரேலிய ஸ்பெஷல். ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் தனித்த சிறப்புடைய சில தாவரங்களையும் ஆஸ்திரேலிய மண்ணைப் பூர்வீகமாகக் கொண்ட சில தாவரங்களையும் அறிந்துகொள்வோமா?

81. வராட்டா
Waratah (Telopea speciossissima)




பார்ப்பதற்கு அழகாய் தாமரையிதழ் போன்ற புறவிதழ்களுடன் அகன்ற கூம்புத் தோற்றத்தில் கண்ணைக் கவரும் வராட்டா மலர் 1962 முதல் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் மாநில மலர் என்ற சிறப்பை உடையது. செடியிலிருந்து பறித்த பின்னும் இரண்டு வாரங்களுக்கு வாடாத தன்மையாலும் வெள்ளை, சிவப்பு, வாடாமல்லி, இளஞ்சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் கண்ணைப் பறிப்பதாலும் அலங்காரப் பூங்கொத்துகளில் இடம்பெறும் அந்தஸ்தும் இதற்கு உண்டு. பூக்கூம்பின் விட்டம் 5 – 15 செ.மீ. வரை இருக்கும். ஒரு கூம்பில் சுமார் 250 தனிப்பூக்கள் இருக்கலாம். பறவைகள், போஸம்கள், தேனீக்கள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. விதையிலிருந்து செடி வளர்ந்து பூப்பதற்கு ஐந்தாண்டு காலம் தேவைப்படும். 



வராட்டா என்பது சிட்னியைச் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்திருந்த இவோரா பூர்வகுடி இனத்தினர் பயன்படுத்திய பெயராகும். மூலூனே, மேவா என்று வேறு சில பூர்வகுடிப் பெயர்களும் இதற்கு உண்டு. ஆரம்பகாலக் குடியேறிகள் வைத்த பெயர் ஆஸ்திரேலியாவின் துலிப் என்பதாகும். இதன் அறிவியல் பெயரான Telopea speciosissima என்பதற்கு தொலைவிலிருந்தும் காணக்கூடிய மிக அழகான தாவரம் என்று பொருள். (Telopos என்றால் கிரேக்கமொழியில் தொலைவிலிருந்தும் காணக்கூடியஎன்றும் speciosus என்றால் லத்தீனில் மிக அழகானஎன்றும் பொருள்.)

காடுகளில் தன்னிச்சையாக வளர்ந்து மலரும் பூக்களைப் பறிப்பதும் செடிகளைப் பிடுங்குவதும் சட்டவிரோதமாகும். தோட்டங்களில் இவற்றை வளர்ப்பதும் பராமரிப்பதும் புதிய செடிகளை உற்பத்தி செய்வதும் தோட்டக் கலைஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகப்பெரிய சவால். குறிப்பிட்ட வானிலை, மண் மற்றும் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே வளரக்கூடியது. வேர்ப்பகுதி எந்நேரமும் ஈரப்பதத்துடன் இருக்கவேண்டும்.


வராட்டா மலர் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்கள் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையது. பண்டைக்காலத்தில் அவர்கள் இத்தாவரத்தின் நார்களைக் கொண்டு கூடைகள் முடைந்தனராம். இம்மலர் குறித்த செவி வழிக் கதைகள் பல அவர்களிடம் உண்டு. இவோரா பழங்குடியினர் சொல்லும் கதை இது. முற்காலத்தில் வராட்டா பூக்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்தனவாம். வோங்கா புறா ஒன்று ஒருநாள் இரைதேடச் சென்ற தன் கணவனைக் காணாமல் தேடிச் சென்றது. வழியில் ஒரு பருந்தின் பார்வையில் சிக்கிவிட்டது. பருந்து துரத்தவும், அதனிடமிருந்து தப்பிக்க, பக்கத்திலிருந்த வராட்டா புதருக்குள் ஒளிந்துகொண்டது. சிறிது நேரத்தில் வோங்கா புறாவின் கணவன் அதைத் தேடிக்கொண்டு வந்தது. கணவனின் குரல் கேட்டு பெண் புறா வெளியில் வர முயற்சி செய்தது. ஆனால் வரமுடியவில்லை. புதருக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. காயம்பட்ட அதன் உடலிலிருந்து வழிந்த குருதி வராட்டாப் பூக்களை சிவப்பாக மாற்றிவிட்டதாம். 

தாரவால் பூர்வகுடியினர் சொல்லும் கதை வேறு. க்ரூபி (குரூபி அல்ல) என்னும் அழகிய இளம்பெண் இளம்வீரனொருவனிடம் மனத்தைப் பறிகொடுத்திருந்தாளாம். போருக்குச் சென்ற அவன் திரும்பிவராதக் காரணத்தால் மனம் வெதும்பி மரித்துப்போனாளாம். அவளைப் புதைத்த இடத்தில் ஒரு செடி வளர்ந்து அழகிய பூவொன்றைப் பூத்தது. அதுதான் அழகிய வராட்டா மலர். பூர்வகுடியினர் இன்றும் இம்மலரைப் புனிதமாய்க் காண்கின்றனர். இது பூக்கும் காலத்தை விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் கலை இலக்கியங்களில் வராட்டா மலருக்கு சிறப்பிடம் உண்டு. நியூ சௌத் வேல்ஸின் ரக்பி அணிக்கு வராட்டாக்கள் என்று பெயர். 1956 முதல் ஆண்டுதோறும்  அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மூன்று வாரங்களுக்கு சிட்னியில் வராட்டா திருவிழா என்னும் வசந்தகாலத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஓவியக் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், அழகுப்போட்டிகள், ஊர்வலங்கள் என விழா களைகட்டும். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்து குவிவார்கள்.




கொசுறு தகவல் - 2009-ல் அங்கீகரிக்கப்பட்ட நியூ சௌத் வேல்ஸின் மாநில அடையாளம் இம்மலரை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அது பார்ப்பதற்கு வராட்டாவைப் போல் அல்லாமல் தாமரையைப் போல் இருப்பதாக பலருக்கும் இன்றுவரை அதிருப்தியும் ஆதங்கமும் நிலவுகிறது. மேலே இருக்கும் படத்தைப் பாருங்களேன். ஆதங்கம் நியாயமென்பது புரியும்.  


82. புல்மரம்
Grass tree (Xanthorrhoea australis)



ஒண்ணு புல்னு சொல்லு, இல்லைனா மரம்னு சொல்லு, இதென்ன இரண்டுங்கெட்டானாட்டம் புல்மரம் என்று கேட்கிறீர்களா? ஒருவித்திலைத் தாவரம் என்பதால் புல், ஆண்டாண்டு பூத்து, மரம் போல நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழும் தன்மையைக் கொண்டிருப்பதால் மரம் அதனால் புல்மரம் (grass tree) எனப்படுகிறது. சில புல்மரங்களுக்கு கிளைகள் கூட உண்டு.

புல்மரங்கள்

இம்மரத்துக்கு இன்னும் சில வேடிக்கையான பெயர்களும் உண்டு. கங்காருவின் மொத்தமான வால் போன்று இருப்பதால் Kangaroo tail, நீள் உருளையான பூந்தண்டு, பூர்வகுடி மனிதன் ஒருவன் ஈட்டியை ஏந்தியிருப்பது போல் தோற்றங்காட்டுவதால் Black boy (இனப்பாகுபாடு காட்டுவதால் தற்போது இப்பெயர் தவிர்க்கப்பட்டு வருகிறது), பிசின் போன்ற திரவம் வெளிப்படுவதால் Grass gum-tree என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.

சில புல்மரங்களின் வயது 600 வருடங்கள் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 66 வகை புல்மரங்களும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன என்பது சிறப்பு. இதன் அறிவியல் பெயர் Xanthorrhoea australis என்பதாகும். Xanthorrhoea என்றால் பண்டைய கிரேக்க மொழியில் மஞ்சள் திரவம்என்று பொருளாம். 
பூர்வகுடி மொழியில் இது yacca, Bukkup, Baggup, Kawee, Balga என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் வாழ்வில் இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு தாவரமாகும்.


மரம் சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. பூந்தண்டுகள் சுமார் 2 முதல் 4.5 மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. ஒரு பூந்தண்டிலிருந்து சுமார் பத்தாயிரம் விதைகள் உருவாகும். பூர்வகுடி மக்கள் பூந்தண்டை தண்ணீரில் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஊறலிட்டு புளித்தபின் போதைப்பானமாக அருந்தினர். இலைக்கொழுந்து, விதைகள்,  வேர்ப்பகுதி போன்றவற்றை உணவாகப் பயன்படுத்தினர். அடிமரத்தண்டை செதுக்கி ஈட்டி போன்று ஆயுதமாகவும் மீன்களைக் குத்திப் பிடிக்கவும் பயன்படுத்தினர். 

முதலாம் உலகப்போரின்போது ஐரோப்பியக் குடியேறிகள், உணவுகளைப் பத்திரப்படுத்துமுன் தகர டின்களில் துருவேறாமல் தடுக்க இத்தாவரத்தின் பிசினைப் பயன்படுத்தினராம். மரச்சாமான்களை ஒட்டுவதற்கும் இப்பிசின் பயன்பட்டது. அக்காலத்தில் தேவாலயங்களில் சாம்பிராணி போல இதை எரித்து புகையும் மணமும் ஊட்டினர் என்றும் அறியமுடிகிறது. 

வறட்சியைத் தாங்கும் வல்லமையும், காட்டுத்தீயில் இலைகள் பொசுங்கி தண்டு மட்டும் கரிக்கட்டை போல நின்றாலும், சில நாட்களிலேயே புத்துயிர் பெற்று மீண்டும் வளரும் சாமர்த்தியம் இவற்றுக்கு உண்டு. இன்னும் சில, காட்டுத்தீயால் தூண்டப்பட்டு முன்னிலும் பன்மடங்கு பூக்களை மலர்த்தி அசத்துகின்றனவாம். இவற்றின் வேரைச் சார்ந்து வாழும் mycorrhiza என்னும் நுண்ணுயிரியே இவற்றின் வளர்ச்சிக்கு முக்கியக்காரணமாம்.  

புல்மரத்தின் விதைகளை உண்ணும் மஞ்சள்வால் கருப்பு காக்கட்டூ

புல்மரங்கள் அவற்றின் அழகுக்காகவும், பறவைகளையும் தேனீக்களையும் ஈர்ப்பதற்காகவும் வீடுகளில் விரும்பி வளர்க்கப்படுகின்றன. விதையிலிருந்து உருவான புல்மரம் பூப்பதற்கு 20 வருடங்கள் ஆகும். உடனடியாகப் பலன் வேண்டுமெனில் தாவர விற்பனையாளர்களிடம் ஏற்கனவே வளர்க்கப்பட்டுவரும் முதிர்ந்த புல்மரத்தை வாங்கி நடுவதுதான் ஒரே வழி. காடுகளில் தன்னிச்சையாக வளர்ந்திருக்கும் புல்மரங்களைப் பிடுங்கிக் கொணர்வது ஆஸ்திரேலிய வனப்பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும்.


83. குரஜாங் 
kurrajong (Brachychiton discolour)



அழகான லேஸ் வேலைப்பாடு போன்ற மரப்பட்டை கொண்ட Brachychiton வகை மரங்களுக்கு ஆஸ்திரேலிய பூர்வகுடியினர் வைத்த பொதுப்பெயர்தான் குரஜாங் (kurrajong). (அடுத்த முறை பார்க்கும்போது மரத்தையும் படம்பிடித்துப் போடுகிறேன்.) குரஜாங் என்றால் ஆஸ்திரேலிய பூர்வகுடி மொழிகளுள் ஒன்றான தாருக் மொழியில் தூண்டில் நரம்பு என்று பொருள். இந்த மரப்பட்டையிலிருந்து தூண்டில் நரம்புகள் தயாரிக்கப்பட்டதால் அப்பெயராயிற்று. மரத்தின் தண்டு புட்டி வடிவிலிருப்பதால் புட்டி மரம் (bottle tree) என்ற பெயரும் உண்டு.

குரஜாங் மரங்கள் ஆஸ்திரேலிய மழைக்காடுகளின் முக்கியமானதோர் அங்கம். புட்டி போன்ற மரத்தண்டில் நீரை சேமித்துவைக்கும் தன்மையால் வறட்சியிலும் வாழும் சாமர்த்தியம் கொண்டவை. மொத்தமுள்ள 31 வகை Brachychiton மரங்களும் ஆஸ்திரேலியக் கண்டத்தைச் சார்ந்தவையே. ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலுமாக இவற்றுக்கு சுமார் 50 மில்லியன் ஆண்டுகால வரலாறு உண்டென்பது புதைபடிமங்கள் மூலம் தெரியவந்துள்ளது.


படத்திலிருப்பது lace kurrajong, pink kurrajong, lacebark tree, pink flame tree என்றெலாம் குறிப்பிடப்படும் பிங்க் குரஜாங் (Brachychiton discolour) மரத்தின் பூவாகும். இம்மரம் சுமார் 30 மீ. உயரம் வளரக்கூடியது. ஒரே மரத்தில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித்தனியாகப் பூக்கின்றன. மகரந்தச் சேர்க்கை முடிந்தபின் ஆண் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன. பெண்பூக்கள் காயாகின்றன. பூ.. பூஎன்று சொல்கிறேனே தவிர, அது பூவன்று. அல்லிவட்டம், புல்லிவட்டம் இரண்டும் ஒன்றான தோற்றம்தான் இந்த மணிவடிவப் பூக்கள். இதன் இலை, பூ, காய், தண்டு, கிளை அனைத்தும் மென்ரோமங்களால் சூழப்பட்டது.

பிங்க் குரஜாங் மரங்கள் வீடுகளில் பெரும்பாலும் அழகுக்காக வளர்க்கப்பட்டாலும் இதன் விதைகளை வறுத்துத் தின்பதும் உண்டு. ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் அந்நாளில் தற்காப்புக்குப் பயன்படுத்திய உறுதியான மரக்கேடயங்கள் இம்மரத்திலிருந்து உருவாக்கப்பட்டவைதாம்.

84. ஈமு புதர்ச்செடி
Emu bush (Eremophila decipiens)


Eremophila decipiens

கொளுத்தும் கோடையில் தீச்சுடர் போல சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் மலர்ந்து ஆஸ்திரேலியக் காடுகளை அலங்கரிக்கும் இப்புதர்ச்செடிக்கு ஈமு புதர்ச்செடி என்று பெயர். பூவைப்போல இரு பங்கு நீளமானதும், வளைவான கொக்கி போன்றதுமான காம்பின் முனையில் பூக்கும் இதற்கு ஒல்லி ப்யூஷியா (slender fuchsia) என்ற செல்லப்பெயர் இருந்தாலும் இது ஃப்யூஷியா வகை அன்று.

Eremophila பேரினத்துள் இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னமும் கண்டறியப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அனைத்துக்கும் ஆஸ்திரேலியாவே தாயகம். செடியின் பழங்களை ஈமு தின்னும் என்ற நம்பிக்கை காரணமாகவோ, உப்பியது போலிருக்கும் சில பூக்களின் வடிவம் காரணமாகவோ இது ஈமு புதர்ச்செடி எனப்படுகிறது. செடி சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். விதைமூலமும் கிளைகளை வெட்டி நடுவதன் மூலமும் புதிய செடிகள் உருவாகும்.  

Eremophila decipiens

இதன் அறிவியல் பெயர் Eremophila decipiens என்பதாகும். eremos என்பதற்கு பண்டைய கிரேக்க மொழியில் தனிமையானஎன்றும் philos என்றால் பிரியத்துக்குகந்தஎன்றும் பொருள்படுமாம். decipiens என்றால் லத்தீனில் ஏமாற்றுகிறஎன்று பொருள். இது முறையாக வகைப்படுத்தப்பட்டது 1921-ல் தான். முந்தைய சில இனங்களைப் போலத் தோற்றமளித்து தாவரவியல் வல்லுநர்களை ஏமாற்றியதால் இப்பெயராம்.

Eremophila maculata

ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் கலாச்சாரம் மற்றும் மருத்துவம் சார்ந்து பல வகையிலும் ஈமு புதர்ச்செடி பயன்பாட்டில் முதன்மையாக இருந்துவந்துள்ளது. சில பூக்கள் அவர்களுடைய ஈமச்சடங்குகளில் இடம்பெறுகின்றன. சரும வியாதிகளுக்கு ஈமு எண்ணெயுடன் இத்தாவரத்தின் பட்டையை தீயில் பொசுக்கிக் கிடைக்கும் சாம்பலைக் கலந்து தடவுகிறார்கள். இதன் இலைகளை வாட்டுவதால் வரும் புகையை சுவாசித்து பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காண்கிறார்கள்.

85. மேலலூக்கா
Melaleuca 

melaleuca flowers and seeds

Paperbark, honey-myrtle, tea-tree என்றெல்லாம் குறிப்பிடப்படும் melaleuca மரங்களின் பூக்கள் பார்ப்பதற்கு பாட்டில் பிரஷ் பூக்கள் எனப்படும் காலிஸ்டமான் பூக்களைப் போலவே இருந்தாலும் உற்று கவனித்தால் நிறைய வேறுபாடு புலப்படும். பூக்கள் வெள்ளை, பழுப்பு வெள்ளை, மஞ்சள், சிவப்பு, வாடாமல்லி வண்ணங்களில் காணப்படும். பூக்கள் பூத்துமுடித்த பிறகு அந்த இடத்தில் விதைக் குப்பிகள் உருவாகி வெடித்து விதைகளைப் பரப்பும். சில விதைக் குப்பிகள் மட்டும் உடையாமல் ஆண்டுக்கணக்காக மரத்திலேயே தங்கிவிடும். மரம் மடிந்துவிட்டாலோ, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டாலோ அவை உடைந்து விதைகளைப் பரப்பி புதிய வம்சம் வளர்க்கும்.

மேலலூக்கா மரத்தில் இளைப்பாறும் குக்கபரா பறவைகள்

மேலலூக்கா மரத்தில் கூடு கட்டி வசிக்கும்  பாம்புத்தாரா 

மேலலூக்கா இனத்துள் சுமார் 300 வகை உள்ளன. பெரும்பான்மையின் தாயகம் ஆஸ்திரேலியா. Melaleuca என்றால் கிரேக்க மொழியில் கருப்பும் வெள்ளையும் என்று பொருள். melas என்றால் கருப்பு, leuko என்றால் வெள்ளை. அடிக்கடி காட்டுத்தீக்கு ஆளாகி வெள்ளை மரத்தண்டில் கருப்புத்தீற்றல்களுடன் காட்சியளிப்பதால் இப்பெயராம்.

மேலலூக்கா மரங்கள்

ஆஸ்திரேலியப் பூர்வகுடியினர் வாழ்வோடு பெரிதும் பின்னிப் பிணைந்தது மேலலூக்கா. இம்மரக் கட்டைகளிருந்துதான் கட்டுமரம்மரக்குடில் போன்றவை தயாரிக்கப்பட்டன. காயங்களுக்கு கட்டுப்போடுவதற்கு மட்டுமல்ல, பிறந்த சிசுவை சுற்றிவைப்பதற்கும் இம்மரத்தின் மெல்லிய துணி போன்ற பட்டைகளைப் பயன்படுத்தினர். காயங்களில் இதன் இலைச்சாற்றைத் தடவி அதன்மேல் மண்ணைப் பூசி காயமாற்றினர். பட்டைகளைக் கொண்டு கூடை முடைந்தார்கள். நாம் வாழை இலையில் சாப்பாடு கட்டுவது போல அவர்கள் அந்தப் பட்டையில் உணவைப் பொட்டலம் கட்டி எடுத்துச்சென்றார்கள். 


மேலலூக்கா மலர்கள் ஏராளமான தேனைக் கொண்டிருப்பதால் தேனீக்களுக்கு நல்ல விருந்தாகும். மேலலூக்கா காடுகளில் கொடுக்கில்லாத ஒரு வகை தேனீக்கள் கட்டும் தேனடையிலிருந்து தேனும் அடையும் சேகரித்து உணவாகப் பயன்படுத்தினர். Melaleuca alternifolia மரத்திலிருந்து கிடைக்கும் tea-tree oil எனப்படும் சார எண்ணெய் நல்லதொரு பூஞ்சைக்கொல்லி என்பதால் அதற்கு இன்றளவும் உலகச்சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலலூக்கா மரங்களில் உறையும் பழந்தின்னி வௌவால்கள்

மேலலூக்கா மரங்கள் நூறு வருடங்களுக்கு மேல் வாழும். நன்கு வளர்ந்த மரத்தின் சுற்றளவு சுமார் மூன்று மீட்டர் இருக்கும். ஆஸ்திரேலியாவில் பெரிதும் கொண்டாடப்பட்டாலும்அறிமுகப்படுத்தப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது வருத்தமளிக்கும் செய்தி.


பெருவாத்துகள்

நீலத் தாழைக்கோழி

இந்தப் பறவைகள் அடி பெருத்த மேலலூக்கா மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து என்ன செய்கின்றன என்று தெரியவில்லை. மரத்தின் மெல்லிய பட்டைகளை அலகால் கிழித்தெறிந்துவிட்டு உள்ளிருக்கும் புழு பூச்சிகளைத் தின்கின்றன என்று நினைக்கிறேன். 

கண்முன்னே எத்தனை உயிர்களுக்கு உணவும் உறைவிடமும் தந்து ஆதரிக்கிறது இம்மரம்!

(தொடரும்)


10 comments:

  1. அருமை
    அருமை
    படங்கள் அழகோ அழகு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  2. Good Evening madam..Really இம்முறை அதிக எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிவிட்டது பூக்கள் சாம்ராஜ்யம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றியது quality or quantity?

      பதிவு நீளமாக இருந்ததாலும் அதிக படங்களைச் சேர்க்க வேண்டியிருந்ததாலும் (81-90) பதிவை மட்டும் இரண்டு பதிவுகளாகப் பிரித்துப் பதிவிடுகிறேன். quality எனில் வருந்துகிறேன்.

      Delete
  3. வாவ்.... அழகான பூக்கள்.... தகவல்கள் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  4. படங்கள், விளக்கங்கள் என அனைத்தும் அசத்தல்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  5. எழில் மிக்க படங்கள் , விரிவான விளக்கங்கள் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.