17 December 2018

பூக்கள் அறிவோம் 51 - 60

தங்கள் இருப்பை, தத்தம் தனித்துவ மணங்களால் அறிவித்து
 நம் மனங்களை வசீகரிக்கும் தாவரங்களின் அழகுமலர்கள் 
இன்றைய பூக்கள் அறிவோம் தொகுப்பில்.

51. செண்பகம் (Mangnolia champaca)

பூவின் பெயரைச் சொல்லும்போதே நெஞ்சத்தில் நறுமணத்தை நிறைக்கும் தன்மை சில மலர்களுக்கு உண்டு. செண்பகமும் அவற்றுள் ஒன்று. ஜம்பகா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து உருவானதுதான் champaca என்ற ஆங்கிலப் பெயரும் செண்பகம் என்ற தமிழ்ப்பெயரும். இந்திய, சீன, நேபால் உள்ளிட்ட நாடுகளின் இமாலயப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட செண்பகம் மரவகையாகும். மக்னோலியா குடும்பத்தைச் சார்ந்த இதன் பழைய அறிவியல் பெயர் Michelia champaca. புதிய பெயர் Magnolia champaca என்பதாகும். செண்பகப்பூக்கள் வெள்ளை, மஞ்சள் என இருவண்ணத்தில் பூக்கின்றன.

இந்தியாவில் இந்துக்களின் வழிபாட்டிலும் மங்கல நிகழ்வுகளிலும் புனிதச் சடங்குகளிலும் செண்பகப்பூக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. சிவன் கோவில்கள் பலவற்றிலும் தலவிருட்சமாக செண்பக மரங்கள் உள்ளன. புத்த மதத்திலும் செண்பகப்பூக்கள் சிறப்பு பெற்றுள்ளன. திபெத்திய மக்களின் நம்பிக்கைப்படி அடுத்த யுகத்தில் புத்தர் ஞானம் பெறப்போவது செண்பக மரத்தடியில்தானாம். 

செண்பகப்பூக்கள் அழகும் நறுமணமும் மட்டுமல்லாது மருத்துவக் குணமும் கொண்டவை. பாரம்பரிய மருத்துவத்தில் செண்பக மரத்தின் இலை, பூ, விதை, வேர், பட்டை அனைத்துமே தேநீர், பொடி, கசாய வடிவில் பல்வேறு சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இலைச்சாறு வயிற்றுக்கோளாறுகளைப் போக்கி பசி தூண்ட வல்லது. தூக்கமின்மை, மன உளைச்சல் போன்றவற்றுக்கு பூக்கசாயம் நல்ல மருந்தாகும்.

செண்பகப் பூக்களிலிருந்து நறுமண எண்ணெய், கூந்தல் தைலம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. Chanel No.5 -க்கு அடுத்தபடியாக உலகளவில் விற்பனையில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ள Joy எனப்படும் வாசனைத்திரவியம் செண்பகப்பூக்களிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அதனாலேயே இம்மரத்துக்கு Joy perfume tree என்ற பெயரும் உண்டு. செண்பகப் பூக்களிலிருந்து மஞ்சள்வண்ண இயற்கை சாயமும் பெறப்படுகிறது.   

செண்பக மரத்தின் முற்றிய விதைகள் உடனடியாக விதைக்கப்படாவிடில் முளைக்கும் தன்மையை இழந்துவிடும். செடி மரமாகிப் பூக்க எட்டு முதல் பத்து வருடங்கள் ஆகலாம். செண்பக மரங்கள் உறுதியானவை என்பதால் மரச்சாமான்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. மரப்பட்டைகள் சமையலில் பயன்படுத்தப்படும் லவங்கப்பட்டையோடு கலப்படம் செய்யப்படுவதும் உண்டாம்.
52. மல்லிகை (Jasminum) 


மல்லிகை என்றதுமே அதன் நறுமணம் நினைவுக்கு வந்து மனம் துளைக்கும் அல்லவா? ஆலிவ் குடும்பத்தைச் சேர்ந்த இவற்றுள் சுமார் இருநூறு வகை உள்ளன. அத்தனையும் நறுமணத்துக்குப் பெயர்போனவை. Jasmine என்ற பெயர் பெர்ஷிய மொழியில் கடவுளின் பரிசு என்று பொருள்படும் yasameen என்பதிலிருந்துதான் வந்ததாம்.

Jasminum எனப்படும் மல்லியினத்தில் ஒற்றை, அடுக்கு, இருவாச்சி, குண்டுமல்லி, முல்லை, பிச்சி, காக்கடா எனப்படும் காட்டுமல்லி, ஜாதிமல்லி, ஊசிமல்லி, குடமல்லிகை என நமக்குத் தெரிந்தவை அல்லாமல் இன்னும் ஏராள வகைகள் உள்ளன. பெரும்பாலானவை வெள்ளை நிறம் என்றாலும் சில இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களிலும் பூக்கின்றன.

மல்லிகைப்பூ விழாக்களிலும் வைபவங்களிலும் தவறாமல் இடம்பெறும் மங்கலப்பொருட்களுள் ஒன்று. இது ஒரு மருத்துவ மூலிகையுமாகும். பெண்களுக்கு ஏற்படும் பால்கட்டு, மாதவிலக்கு போன்ற பிரச்சனைகளுக்கு மல்லிகையின் இலையும் பூக்களும் நல்ல மருந்தாகும்.

மல்லிகையின் இதழ்களைக் கொதிக்கவைத்து மல்லிகைத்தேநீர் தயாரிக்கப்படுகிறது. பூக்களிலிருந்து எண்ணெய், நறுமணத் தைலம் போன்றவை தயாரிக்கபடுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலர் என்ற சிறப்பு மல்லிகைக்கு உண்டு.  

53. மஞ்சள் மல்லிகை (Jasminum mesnyi)



மயக்கும் மஞ்சள் வண்ணத்தில் மலர்ந்து மணம் பரப்பும் மஞ்சள் மல்லிகை ஒரு கொடிவகையாகும். சுவர்களையும் கம்பிவேலிகளையும் பற்றிக்கொண்டு படரக்கூடியது. பற்றிக்கொண்டு படர எதுவும் கிடைக்காவிட்டால் நீண்டு வளர்ந்த இதன் கிளைகள் மீண்டும் தரை தொட்டுப் பார்ப்பதற்கு தாவர ஊற்று போலக் காட்சியளிக்கும்.

இந்தியில் இதன் பெயர் ஹேம மாலதி. அதற்கு தங்க மல்லிகை என்று பொருள். இதன் மருத்துவக்குணங்களால் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அதை அடிப்படையாய்க் கொண்டு சர்க்கரை நோயாளிகளுக்கான காயமாற்றும் மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இமயமலைப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இம்மல்லிகைக்கு சீன மல்லிகை, ஜப்பான் மல்லிகை, பிரிம்ரோஸ் மல்லிகை என்ற வேறு பெயர்களும் உண்டு. உலக நாடுகள் பலவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது, வீட்டுத்தோட்டங்களை அலங்கரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. 

54. புகையிலைப்பூ (Nicotiana alata)



Tobacco jasmine, sweet tobacco, winged tobacco, Persian tobacco என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தாவரம் புகையிலை வகையைச் சேர்ந்தது என்பது பெயரைக் கொண்டே அறியலாம். பூக்கள் மலரும் மாலைப் பொழுதில் நறுமணம் நாசியைத் துளைக்கும். இவ்வகையில் பூக்கள் வெள்ளை, இளம்பச்சை, பிங்க், சிவப்பு நிறங்களில் காணப்படும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளையும் தாயகமாகக் கொண்ட புகையிலை செடிகள் அவற்றின் பூக்களின் அழகுக்காகவும் நறுமணத்துக்காகவும் வீட்டுத்தோட்டங்களில் விரும்பி வளர்க்கப்படுகின்றன. விதைகள் விழுந்து தானாகவே புதிய செடிகள் உருவாகும். புகையிலை செடிகளை எளிதில் தாக்கும் பூச்சிகள் குறித்த ஆபத்து இருப்பதால் காய்கறி செடிகளின் அருகில் இதை வளரவிட வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. 

1559-ல் புகையிலையை மருத்துவத்தின் நிமித்தம் பிரெஞ்சு அரசவைக்கு அனுப்பி வைத்த போர்ச்சுகலின் பிரெஞ்சு தூதர் ஜீன் நிகோட் (Jean Nicot) பெயரால் இச்செடி வகைக்கு Nicotiana என்று பெயரிடப்பட்டது. இதிலிருக்கும் நிகோடின் என்னும் ரசாயானம் மூளையின் செயல்பாடுகளைத் தன்கட்டுக்குள் கொணர்ந்து புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்குகிறது. புகையிலை கொண்டு தயாரிக்கப்படும் சிகரெட், பீடி, சுருட்டு, ஹூக்கா, மூக்குப்பொடி, ஜர்தா போன்ற எதுவும் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய சமாச்சாரங்கள் என்பது நாம் அறிந்ததே.

55. பாரிஜாதம் (Gardenia jasminoides)



பார்ப்பதற்கு அடுக்கு நந்தியாவட்டை போன்ற தோற்றம் காட்டும் கார்டனியா பூக்கள் தமிழில் பாரிஜாதம் என்று குறிப்பிடப்படுகின்றன. பாரிஜாதம் என்பது பவளமல்லியைக் குறிக்கும் என்பர் சிலர். தென்னாப்பிரிக்காவின் கேப் மாநிலத்தில்தான் இது கண்டறியப்பட்டதெனும் தவறான தகவலின் அடிப்படையில் இதற்கு cape jasmine என்ற பெயரிடப்பட்டுள்ளது.

பாரிஜாதப்பூவின் வாசத்துக்கு மயங்காதவர்கள் இல்லை எனலாம். ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம், பங்களாதேஷ், பர்மா ஆகிய நாடுகளில் தன்னிச்சையாக வளர்ந்துகிடக்கும் இச்செடிகள், பூவின் அழகாலும் வாசத்தாலும், பளபளக்கும் பச்சிலை அழகாலும் கவரப்பட்டு, தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் விரும்பிவளர்க்கப்படும் தோட்டச்செடிகளாக மாறிவருகின்றன.

பாரிஜாதப் பூக்கள் சீனாவின் பண்டைய ஓவியங்களிலும், காவியங்களிலும் இடம்பெற்றுள்ளன. சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில் இதன் காய்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. காய்களிலிருந்து உடைகளுக்கும் உணவுகளுக்கும் பயன்படுத்தப்படும் மஞ்சள் வண்ணம் தயாரிக்கப்பட்டதாம்.

கார்டனியா வகையுள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட Gardenia resinifera தமிழில் கும்பிலி எனப்படுகிறது. இது மரவகையாகும். இதன் பிசின் பெரும் மருத்துவக்குணம் கொண்டது. அஜீரணம், மலச்சிக்கல், பசியின்மை, வயிற்றுப்புண், வாந்தி, குடற்புழுக்கள் போன்ற பிரச்சனைகளுக்கு கைகண்ட மருந்தாக உள்ளது. சிலவகை பூச்சிக்கொல்லிகளும் இதன் பிசினிலிருந்து தயாரிக்கப்படுகின்றனவாம்.

56. நட்சத்திர மல்லி (Trachelospermum jasminoides)


பார்ப்பதற்கு நந்தியாவட்டை பூ போல இருந்தாலும் நந்தியாவட்டை அல்ல.. ஜாஸ்மின் என்ற பெயர் இருந்தாலும் மல்லிகையினமும் அல்ல இதன் மணமும் குணமும் வேறு. star jasmine, Chinese star jasmine, confederate jasmine என்றெலாம் அழைக்கப்படும் இந்தக் கொடியினம் ஜப்பான்சீனாகொரியாவியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.

அபரிமிதமாய்ப் பூத்துக்குலுங்கும் அழகுக்காகவும் நறுமணத்துக்காகவும் வீடுகளிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிறது. பூக்களிலிருந்து கிடைக்கும் எண்ணெய்நறுமணத்தைலம் மற்றும் ஊதுபத்திகள் தயாரிக்கப் பயன்படுகிறதுவியாபாரிகளுக்கு நல்ல லாபம் ஈட்டித்தந்து வாழ்க்கையை நல்ல திசையில் செலுத்துவதால் இதற்கு வியாபாரிகளின் திசைகாட்டி (trader’s compass) என்ற பெயரும் உண்டு.

இத்தாலியில் பெரும்பாலான வீடுகளின் வெளிப்புறச்சுவர்களின்மேல் இக்கொடியைப் படரவிட்டு இத்தாலியர் தத்தம் இல்லங்களை அழகுபடுத்துகின்றனராம். செங்கற்சுவர்கள், கம்பிகள், கயிறுகள் என எதையும் பற்றிக்கொண்டு எளிதில் ஏறிவிடும் தன்மையால் பத்து மீட்டர் உயரம் வரை வளரவும் பல மீட்டர் அகலத்துக்குப் பரவவும் கூடும். வீட்டினுள்ளே அலங்காரச்செடியாகவும் வளர்க்க ஏதுவானது என்பதால் பலராலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. 

57. சாமந்தி (chrysanthemum)



செவந்தி, சிவந்தி, செவ்வந்தி, சாமந்தி, ஜெவந்தி என்றெல்லாம் சொல்லப்படும் chrysanthemum பூக்கள் வடிவாலும் வாசத்தாலும் தோட்ட ஆர்வலர்களைக் கவர்ந்திழுப்பவை. Chrysanthemum என்பதற்கு பண்டைய கிரேக்க மொழியில் தங்கமலர்கள் என்று பொருளாம். பொன்மஞ்சள் வண்ண சாமந்திப் பூக்கள் பிரசித்தம் என்றாலும் வெள்ளை, ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என பல வண்ணங்களிலும் பூக்கின்றன. 

தமிழகத்தில் சாமந்தி சாகுபடி நல்லதொரு லாபம் ஈட்டும் தொழிலாக வளர்ந்துவருகிறது. பூஜைக்கும் பூமாலைகளுக்கும் என உதிரியாகவோ, தொடுத்தோ, கதம்பமாகத் தொகுத்தோ பூக்கள் விற்கப்படுகின்றன. பளீர் வண்ணங்களோடு நாசி துளைக்கும் மிகைமணத்தையும் கொண்டிருக்கும் சாமந்திப் பூச்செடிகளுக்கு தோட்டங்களை அலங்கரிப்பது அல்லாமல் இன்னுமொரு சிறப்புக் குணமும் உண்டு. வீட்டைச் சுற்றி நட்டுவைத்தால் பூச்சிபொட்டு அண்டாது என்று அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். நல்ல பூச்சிவிரட்டி என்பதால் இதிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

சாமந்தியில் அசலும் கலப்புமாக ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. சாமந்தியின் தாயகம் ஆசியாவும் வடகிழக்கு ஐரோப்பிய நாடுகளுமாகும். சீனாவில் சாமந்திப்பூக்கள் மருத்துவ மூலிகையாகப் பயிரிடப்படுகின்றன. பண்டைக்காலம் தொட்டு சீனாவின் கலைகளிலும் காவியங்களிலும் சாமந்திப் பூக்கள் தவறாமல் இடம்பெற்றுள்ளன. சீனாவில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்களுள் சாமந்தித் திருவிழாவும் ஒன்று. இது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் ஒன்பதாம் நாள் (9/9) கொண்டாடப்படுகிறது.

ஜப்பானிலும் இதற்கு பெருமதிப்பு உண்டு. சாமந்திப்பூ ஜப்பானிய அரச குடும்பத்தின் பிரத்தியேக முத்திரை அடையாளமாக பன்னெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாடுகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்திப் பூவிதழ்களைக் கொண்டு தேநீர் தயாரிக்கப்படுகிறது. இலைகள் கீரைகளைப் போல சமைத்துண்ணப்படுகின்றன. 

இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட அதிவேகமாய் வளரக்கூடிய புதிய சாமந்தி வகைக்கு மோடி என்ற பெயர் கடந்த ஜூலை 2017-ல் சூட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் வருகை தருவது அதுவே முதன்முறை என்பதால் அவ்வருகையை சிறப்பிக்கும் விதமாக அவரது பெயர் சூட்டப்பட்டதாம்.

58. கற்பூரவல்லிப் பூக்கள் (coleus aromaticus)




கற்பூரவல்லி, ஓமவல்லி என்றெல்லாம் அழைக்கப்படும் சதைப்பற்றுள்ள இத்தாவரத்தின் மருத்துவகுணங்களால் மூலிகைகளின் தாய் என்று பெருமைப்படுத்தப்படுகிறது. உணவு, மருத்துவம் இவற்றோடு அழகுக்காகவும் பல இடங்களில் வளர்க்கப்படுகிறது. மேற்கத்திய உணவுகளில் இறைச்சி, மீன் இவற்றின் கவுச்சி போக்குவதற்காக அவற்றோடு சேர்த்து சமைக்கப்படுகிறது. இதன் இலைகளைப் பிழிந்தெடுத்துக் கிடைக்கும் சாறு சளி,கோழையை அகற்றும் சக்தி கொண்டது. இலைச்சாற்றை உடலின் மேலே தடவிக்கொண்டால் இதன் வீரியம் நிறைந்த வாசத்துக்கு கொசு, பூச்சிகள் அண்டாது. சும்மா ஒரு கிளையை ஒடித்துவைத்தாலே வளரக்கூடியது.

தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம், கடல்வழி வாணிபம் வழியே அரேபியா வந்தடைந்து அங்கிருந்து இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளை வந்தடைந்ததாம். பிறகு ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவும் அறிமுகமானது. அதனால் Mexican mint, Indian mint, soup mint, thick leaf thyme, French thyme, Spanish thyme, Cuban oregano என நாட்டுக்கு நாடு செல்லப்பெயர்களால் கொண்டாடப்படுகிறது.

59. துளசிப் பூக்கள் (Ocimum tenuiflorum)




எத்தனைச் செடிகள் தோட்டத்தில் இருந்தாலும் மாடத்தில் இருத்தி நித்தமும் விளக்கேற்றி வணங்கப்படும் துளசிக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. துளசிச்செடி, இந்துமதத்தில் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி ஆகிய கடவுளர்களின் வடிவமாகப் பார்க்கப்படுகிறது. ஆன்மீகத்தோடும் ஆரோக்கியத்தோடும் தொடர்புடைய துளசிச்செடியின் தாயகம் இந்தியா. ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. துளசியில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத்துளசி (அ) பேய்துளசி என 300-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

துளசிச்செடியின் இலை, பூ, வேர், தண்டு என எல்லா பாகங்களும் மருத்துவ குணம் உடையவை. இந்நீரில் தினமும் கொப்பளித்தும், குளித்தும் வந்தால் வாய் துர்நாற்றம், உடலின் வியர்வை நாற்றம் போன்றவை நீங்கும். புத்துணர்வு கூடும். தினமும் சில இலைகளைத் தின்றுவந்தால் சீரணசக்தி அதிகமாகும். மன இறுக்கம், நரம்புக்கோளாறு, ஆஸ்துமா, இருமல், மறதி போன்றவற்றுக்கும் துளசி மாமருந்தாகும்.

பல அரிய மருத்துவக்குணங்களைக் கொண்டிருப்பதால் இதற்கு மூலிகைகளின் அரசி என்ற செல்லப்பெயரும் உண்டு. ஆன்மீக நம்பிக்கையோடு கலந்திருப்பதால் இது Holy basil என்றும் சொல்லப்படுகிறது.

தாய்லாந்து உணவுகளில் இறைச்சி, கடலுணவுகளோடு இவ்விலைகள் பயன்படுத்தப்படுகின்றன. துளசியின் வேறு பெயர்கள் பிருந்தை, துழாய், துளவம், மாலலங்கல் போன்றவையாம். 

60. திருநீற்றுப் பச்சிலைப் பூக்கள் (Ocimum basilicum)


உலகம் முழுவதும் பேசில் என்ற பெயரில் கொண்டாடப்படும் சமையல் மூலிகை இதுவே. Basil என்பதன் மூல வார்த்தையான basileus என்பதற்கு கிரேக்க மொழியில் royal plant என்று பொருளாம். எனவே திருநீற்றுப் பச்சிலையை மூலிகைகளின் அரசன் என்று குறிப்பிடுவர். அரசகுடும்பத்தினர் மட்டுமே இம்மூலிகையைப் பயன்படுத்தும் உரிமை அந்நாளில் இருந்ததால் இப்பெயர் எனவும் குறிப்பிடப்படுகிறது.

ஆயிரமாண்டு காலமாக பன்னாட்டு சமையற்குறிப்புகளில் பங்கேற்றுள்ள இது, 2003-ஆம் ஆண்டு பன்னாட்டு மூலிகை மையத்தால் Herb of the year 2003 என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இது ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகள் பலவற்றையும் தாயகமாகக் கொண்டது. தமிழில் உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா, விபூதிப்பச்சிலை, பச்சபத்திரி, திருநீத்துப்பத்திரி, துன்னூத்துப்பச்சிலை என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. முற்காலத்தில் சில பகுதிகளில் திருநீற்றில் மணம் சேர்க்க இதன் சாம்பல் சேர்க்கப்பட்டதால் திருநீற்றுப்பச்சிலை என்ற பெயர் வந்ததாக அறியப்படுகிறது. 

இதன் விதைகளை ஊறவைத்து சர்பத் மற்றும் பலூடா போன்றவற்றில் கலந்து உட்கொள்வதுண்டு. விதைகளை உட்கொள்வதால் உடலுக்கு குளிர்ச்சி கிட்டுமாம். நீர்க்கடுப்பு, உடல்சூடு போன்றவை தணியுமாம். முகப்பரு, புண்கள் போன்றவற்றுக்கு மருந்தாக இதன் இலைச்சாறு பயன்படுத்தப்படுகிறது. கண்கட்டிகளுக்கும் கைகண்ட மருந்து இது. இந்த இனத்தில் இதுவரை சுமார் 160 வகைகள் உருவாக்கப்பட்டுள்ளனவாம்.

ருமேனியாவில் ஒரு ஆண், ஒரு பெண்ணிடமிருந்து பேசில் இலைக்கொத்தைப் பெற்றுக்கொண்டால், அவன் அவளை மணக்க சம்மதிக்கிறான் என்று அர்த்தமாம். ஆனால் கிரேக்கத்திலோ இது மரணம் மற்றும் வெறுப்பின் அடையாளமாம்.  

தொடரும்...

19 comments:

  1. செண்பக மலரை இப்போதுதான் பார்க்கிறேன்.

    பாரிஜாத மலரைப் பார்த்ததும் பாடலொன்று நினைவுக்கு வந்துவிட்டது. "பாரிஜாதம் பகலில் பூத்தது.." மற்ற மலர்களுக்கும் நிறைய பாடல்கள் உண்டு. இந்த மலர் பெயர் இடம்பெறும் ஒரே பாடல் இது என்று நினைக்கிறேன்!​

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. பாரிஜாதப் பூவே இது தேவ லோகத் தேனே...
      பாரிஜாதப்பூவாலே அந்த பாமா ருக்மணி போன்ற பாடல்களும் உள்ளன.

      Delete
    2. பாரிஜாதப் பூவே இது தேவ லோகத் தேனே...
      பாரிஜாதப்பூவாலே அந்த பாமா ருக்மணி போன்ற பாடல்களும் உள்ளன.

      Delete
    3. வருகைக்கும் பாடல் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீராம். பாரிஜாதப்பூவே இது தேவலோகத் தேனே என்ற பாடலைக் கேட்டிருக்கிறேன். நான் குறிப்பிட நினைத்திருந்தேன். ஷியாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள மற்றொரு பாடலைக் கேட்டதில்லை.

      Delete
  2. useful info. thanks for the same

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரம்யா.

      Delete
  3. ஒவ்வொரு விளக்கமும் அருமை... அருமையான தொகுப்பு....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  4. அழகழகான எத்தனை விதப் பூக்கள் ! தேடி யெடுத்து தந்தமைக்குப் பாராட்டுகிறேன் .பாரிஜாதம் தேவலோகத்து மலர்களுள் ஒன்று எனப் படித்திருக்கிறேன் . பூவுலகிலும் ஒரு பாரிஜாதம் இருப்பதை இன்றுதான் அறிந்தேன் .

    ReplyDelete
    Replies
    1. பாரிஜாதம் என்று இம்மலரை சிலரும், பவளமல்லியை சிலரும் குறிப்பிடுகின்றனர். தேவலோக மலர் என்று பவளமல்லியையே குறிப்பிடுவதாகவும் அறிகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      Delete
  5. படங்கள் அழகு அழகு!! செம ஃபோட்டோக்ராஃபி!!

    அத்தனையும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன.

    பாரிஜாதத்தைப் பார்த்ததும் டக்கென்று அடுக்கு நந்தியாவட்டையாகத்தான் தெரிகிறது. அப்புறம் இங்கு பவளமல்லியை பாரிஜாதம் என்றும் சொல்லுகின்றனர்...

    தகவல்கள் அனைத்தும் அருமை அறிந்தும் கொண்டோம்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாரிஜாதம் என்ற பெயரில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. பார்ப்பதற்கு குண்டுமல்லி, அடுக்கு நந்தியாவட்டை மலர்கள் போல இருந்தாலும் தனித்துவ மணம் வேறுபடுத்திக் காட்டிவிடுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி.

      Delete
  6. gardenia வைத்தான் நாங்கள் பாரிஜாதம் என்றோம்.ஆனால் சிலர் அது தவறு.. பவளமல்லியே பாரிஜாதம் என வாதிடுகின்றனர்.
    இதற்கு குடமல்லி திக்க மல்லி என்றும் பெயர்கள் உள்ளன.பூக்கள் பெயர் வரக்காரணங்களையும் ஏனைய பெயர்களையும் குறிப்பாகத் தமிழில் குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
    Thanks A lot...

    ReplyDelete
    Replies
    1. பாரிஜாத மலருக்கு குடமல்லி, திக்க மல்லி என்ற வேறுபெயர்கள் இருப்பதை அறிந்துகொண்டேன். தங்களைப் போன்றோர் மூலம் புதிய தகவல்கள் அறிந்துகொள்வதில் மகிழ்கிறேன். தமிழகத்தில் பரிச்சயமில்லாத சில மலர்கள் பற்றிய தகவல்கள் தரும்போது ஆங்கிலப் பெயர்கள் தருவதைத் தவிர்க்க இயலவில்லை. தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி.

      Delete
  7. செவ்வந்தி சாமந்தி பூக்கள் ரெண்டும் வேறு வேறு தானே.Marigold Chryshanthemum Chamomile ?

    ReplyDelete
    Replies
    1. chrysanthemum பூக்களை செவ்வந்தி என்று சிலரும் சாமந்தி என்று சிலரும் குறிப்பிடுவதுண்டு. பதிவில் இரண்டாவது படத்தில் மஞ்சள் சாமந்திக்குப் பதிலாக, தவறுதலாக துளுக்கச்செவ்வந்தி எனப்படும் marigold படம் இடம்பெற்றுவிட்டது. படத்தை நீக்கிவிட்டேன். குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

      Delete
  8. விளக்கம் அருமை. பாரிஜாதம் , நந்தியாவட்டை,பவளமல்லி எங்கள் வீட்டில் உண்டு .

    ReplyDelete
  9. MARIGOLD X CHRYSANTHEMUM வித்தியாசம் சொல்லமுடியுமா ?

    ReplyDelete
  10. Anonymous20/7/22 14:24

    பிச்சிப்பூ பாரிஜாதம் ஒன்றென கேரள வலைதளத்தில் பார்த்து விட்டு இந்த பக்கத்திற்கு வந்தேன். Peechi என்று ஆங்கிலத்திலும் parijatham என்று மலையாளத்திலும் அந்த தளத்தில் இருந்தது.
    உங்கள் முயற்சிக்கு நன்றி!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.