19 July 2017

பூக்கள் அறிவோம் (1-10)

அழகழகானப் பூக்களைப் படமெடுத்துப் பகிர்வதோடு வேலை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பூக்களின் பெயர் மற்றும் பிற தகவல்களோடு பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று உரிமையோடு சில நட்புகள் கேட்டுக்கொண்டதன் பேரில் பூக்களைப் பற்றிய தேடுதலைத் துவக்கினேன். அது ஒரு பெரிய கடல். கரையில் நின்றுகொண்டு என்னிரு கைகளால் அள்ளியது கொஞ்சம்.. சிந்தியது போக சேமித்தது கொஞ்சமே கொஞ்சம். படிக்கும் காலத்தில் அத்தனை ஆர்வம் காட்டாத தாவர இயலில் எப்படி இப்படி உள்நுழைந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கிடக்கிறேன் என்பது எனக்கே வியப்பாக உள்ளது. கீதமஞ்சரியில் ஏற்கனவே பகிர்ந்த படங்களும் இத்தொகுப்பில் உள்ளன. எனினும் பூக்கள் குறித்த ஆர்வமுள்ளோர்க்கு பயனுள்ளதாகவும் என் வலைப்பூ சேமிப்பாகவும் இருக்கட்டும் என்பதற்காக தகவல்களோடு மீண்டும் பதிகிறேன்.  


1. தீக்குச்சிப் பூக்கள்

matchstick flowers (Aechmea gamosepala)



பிங்க் நிறக்குச்சியின் தலைப்பக்கம் நீலவண்ண மருந்து பூசிய தீக்குச்சி மத்தாப்புகளை ஒரு கம்பியில் கோத்து அடுக்கினாற்போன்ற அழகு. அதனாலேயே இதற்கு தீக்குச்சி பூக்கள் (matchstick flowers) என்று பெயர். நுனியிலிருக்கும் நீலமொட்டுகள் விரியும்போது இன்னும் அழகு.  அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இவை ப்ரோமெலியாட் வகையைச் சேர்ந்தவை. ஒருமுறை ஊன்றிவிட்டால் போதும்.. அதன்பின் அதிக கவனிப்பு தேவைப்படாமல் வளரக்கூடியது. மேலும் இதன் ஓடுதண்டுகள் மூலம் தானே பதியன் போட்டு புதுச்செடிகளை உருவாக்கிக்கொள்ளும். பூக்கள் செடியில் மட்டுமல்லாது பூச்சாடி, பூங்கொத்து அலங்காரங்களிலும் வசீகரிக்கின்றன.

2. யூகலிப்டஸ் பூக்கள்

Red-flowering gum (Corymbia ficifolia)




சுமார் 700-க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் வகைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பான்மையானவை ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டவை. மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுமார் 15 வகை மட்டுமே இந்தோனேஷியாவையும் பப்புவா நியூகினியையும் சேர்ந்தவை. குங்குமச்சிமிழ் போன்ற யூகலிப்டஸ் பூவின் மொட்டுகள் வளர்ந்து பூக்கும் சமயம் மூடி மட்டும் தானாகத் திறந்து கீழே விழுந்துவிடும். பிறகு பூ மலரும். கிரேக்க மொழியில் eu என்றால் நன்றாக என்றும் kalypto என்றால் மூடிய என்றும் பொருளாம். நன்கு மூடி போட்ட மொட்டுகளைக் கொண்டிருப்பதால் இதற்கு eucalyptus என்று பெயரானதாம். யூகலிப்டஸ் மரத்திலிருந்து கோந்து வெளிப்படுவதால் இதற்கு கோந்து மரம் (gum tree) என்ற செல்லப்பெயரும் உண்டு. வெள்ளை, பழுப்பு வெள்ளை, மஞ்சள், பிங்க், சிவப்பு வண்ணங்களில் பூக்கள் காணப்படும்.


3. கற்றாழைப்பூக்கள் 

(Aloe vera flowers)



கற்றாழை (Aloe) குடும்பத்தில் சுமார் 400 வகைகள் உள்ளன. அவற்றுள் ஆலோவெரா (Aloe vera) எனப்படும் சோற்றுக்கற்றாழை அதிகளவில் மருத்துவகுணம் கொண்டது. பூச்சிக்கடி, தேமல், தோல்வறட்சி, அரிப்பு, தீக்காயம், பொடுகுத்தொல்லை, அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் புண்கள் இன்ன பிற சருமப் பிரச்சனைகளுக்கும், நீரிழிவு, மலச்சிக்கல், குடற்புண், தண்டுவடப் பிரச்சனைகள் போன்ற உடலின் உட்பிரச்சனைகளுக்கும் மருந்தாக, இன்னும் ஏராளமான நன்மைகளைக் கொண்டு சர்வரோக நிவாரணியாகப் பயன்படுகிறது. கற்றாழைகள் பூத்து நம்மில் பலரும் பார்த்ததில்லை. பொதுவாக சோற்றுக்கற்றாழைகள் நான்காம் வருடத்திலிருந்து பூக்க ஆரம்பிக்கும். நல்ல வளமான மண், காற்று, சூர்ய ஒளி இருந்தால் வருடத்துக்கு இரண்டுமுறை கூட பூக்கும். குழாய் வடிவப் பூக்களில் அலகை நுழைத்து தேனருந்தும் பறவைகள் முகம் முழுக்க மகரந்த மஞ்சள் பூசி வெளிவருவது பார்க்க வெகு அழகு.



4. கங்காரு பாத மலர்கள் 

kangaroo paw flowers (Anigozanthos flavidus)



பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பூக்கள் பார்ப்பதற்கு ரோமத்துடன் கங்காருவின் விரிந்த பாதவிரல்களைப் போன்று இருப்பதால் கங்காரு பாத மலர்கள் எனப்படுகின்றன. ஆஸ்திரேலியத் தாவரமான இவற்றின் பூக்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தாவரவியல் பெயரான Anigozanthos என்பதற்கு ஒழுங்கற்றப் பூக்கள் என்று பொருள். மொத்தம் உள்ள பதினோரு வகையில் இது yellow mist எனப்படும் மஞ்சள் பூ வகை. கொத்துக் கொத்தாய் மலர்ந்து நிற்கும். இவற்றின் தேனையருந்த போட்டிபோட்டு வரும் பறவைகள் மூலமே மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.



5. அசுர லில்லி 

(Gymea Lily)



நெருப்பு லில்லி, அசுர லில்லி, பெரிய ஈட்டிச்செடி என்றெல்லாம் குறிப்பிடப்படும் Gymea Lily - இன் தாவரவியல் பெயர் Doryanthes excelsa என்பதாம். Dory-anthes என்றால் கிரேக்கமொழியில் ஈட்டிப்பூ என்றும் excelsa என்றால் லத்தீன் மொழியில் அபூர்வமானது என்றும் பொருளாம். அண்ணாந்து பார்க்கவைக்கும் அபூர்வ செடிதான் இந்த அசுர லில்லி. 1மீ முதல் 2.5 மீ வரை நீளமுள்ள கத்தி போன்ற இலைகளுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 3 மீ. முதல் 8 மீ. உயரம் வரை வளரக்கூடிய தண்டின் உச்சியில் கொத்தாய் ரத்தச்சிவப்பில் பூப்பவை என்றால் அபூர்வமில்லையா? 70 செ.மீ. விட்டமுள்ள வட்டப்பூங்கொத்தில் சுமார் 150 பூக்கள் இருக்கலாம். அலங்காரப் பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் மலர்களிலேயே மிகப்பெரியது இந்த அசுர லில்லிதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு. பூக்கும் காலம் வருவதற்கு ஐந்து முதல் இருபது வருடங்கள் ஆகும். இதன் பூக்களிலிருந்து நறுமணத்தைலம் தயாரிக்கப்படுகிறது. பறவைகள் இப்பூவின் தேனையும் பூந்தாதையும் விரும்பியுண்கின்றன.


6. ப்ரோமெலியாட் பூக்கள் 

(Bromeliad flowers)



ப்ரோமெலியாட் இனத்தில் அறியப்பட்ட வகை சுமார் 2700-க்கு மேல் இருக்கின்றன. நமக்கு நன்கறியப்பட்ட ப்ரோமெலியாட் வகை அன்னாசி. அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்றவற்றின் வெப்பமண்டலப் பிரதேசங்களைத் தாயகமாகக் கொண்டவை ப்ரோமெலியாட் தாவரங்கள். வீட்டின் உள்ளே வெளியே எங்குவேண்டுமானாலும் வளரக்கூடிய இவை இவற்றின் அழகுக்காக அனைவராலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. ப்ரோமெலியாட் பூக்களுக்கு பூக்கும் பருவம் என்று எதுவும் கிடையாது. நல்ல வளமான சூழல் இருந்தால் வருடத்தில் எந்த சமயத்திலும் பூக்கும். பூக்களும் மாதக்கணக்கில் வாடாமல் இருக்கும். சில ப்ரோமெலியாட் செடிகள் ஒருமுறை பூத்தபின் மடிந்துவிடும். அரிதான சில ப்ரோமெலியாட் வகை பூக்கும் பருவத்தை எட்டுவதற்கே எண்பது வருடங்கள் காத்திருக்கவேண்டுமாம்.   

7. ஐரிஸ் மலர்கள் 

(iris flowers)



ஐரிஸ் என்றால் கிரேக்க மொழியில் வானவில் தேவதை என்று பொருளாம். வானவில் போல் அழகு மலர்களால் வசீகரிக்கும் இத்தாவரத்துக்கும் ஐரிஸ் என்ற பெயர் பொருத்தம்தானே. இவை லில்லி பூக்களைப் போலவே கிழங்கிலிருந்து வளர்ந்து பூக்கின்றன. இப்பூக்களிலிருந்து நறுமணத்தைலம் மற்றும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கனடா நாட்டின் க்யூபெக் மாநிலக்கொடியில் ஐரிஸ் மலர் இடம்பெற்றுள்ளது. க்ரோஷியா நாட்டின் தேசிய மலரும் இதுவே. 25வது திருமணக் கொண்டாட்டத்தின் அடையாள மலர் என்ற சிறப்பும் உடையது. இவற்றுள் சுமார் 300 வகைகள் காணப்படுகின்றன.


8. புட்டித்தூரிகைப் பூக்கள் 

callistemon flowers



புட்டிகளைக் கழுவ உதவும் ப்ரஷ்களைப் போலிருப்பதால் இந்த callistemon பூக்களுக்கு பாட்டில்பிரஷ் பூக்கள் (bottlebrush flowers) என்ற பெயர். ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இவை பிறநாடுகளிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. சுமார் 40 வகைகள் உள்ளன. பெரும்பாலானவை சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பூக்களை உடையவை. பார்ப்பதற்கு ஒரே பூ போல இருந்தாலும் உற்றுக்கவனித்தால் தண்டைச் சுற்றி ஏராளமாக குட்டிக்குட்டிப் பூக்கள் இருப்பதைக் காணலாம். ஒரு மலர்த்தண்டு 30 செ.மீ முதல் 60 செ.மீ வரையிலும்கூட இருக்கும். காகிதப் பூக்களைப் போன்று வாசனையற்று இருந்தாலும் பளீர் வண்ணங்களால் பறவைகளை ஈர்த்து, தேனருந்த வரும் பறவைகள் மூலமாக மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகின்றன.


9. காற்று மலர்கள் 

wind flowers (anemone flowers)




நெடிய காம்புகளின் உச்சியில் மலர்ந்து காற்றாடும் இந்த அழகு மலர்களுக்கு Anemoi என்னும் கிரேக்கக் காற்றுக்கடவுளின் பெயரால் anemone எனப்பெயரிடப்பட்டுள்ளது. கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் ஒற்றையடுக்காகவோ.. இரட்டையடுக்காகவோ பல அடுக்குகளாகவோ மலர்ந்து தோட்டங்களுக்கு அழகுசேர்ப்பவை. வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் இதன் நறுமணம் முயல்களையும் மான்களையும் அருகில் நெருங்க விடுவதில்லையாம். மனிதர்களும் கூட இதனிடத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். அதிகமாய் உரசி அன்புகாட்டினால் தோலில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படக்கூடும்.


10. மந்தாரை (அ) நீலத்திருவத்தி 

(bauhinia purpurea)



மந்தார மலரே மந்தார மலரே.. நீராட்டு கழிஞ்ஞில்லே

பாடலில் காதலன் காதலியை உருவகப்படுத்தும் மந்தாரை மலர் இதுவாகத்தான் இருக்கவேண்டும் . ஆங்கிலத்தில் ஆர்கிட் மரம், தமிழில் மந்தாரை, நீலத்திருவத்தி, இந்தியில் தேவகாஞ்சன், ரக்தகாஞ்சன், தெலுங்கில் தேவகாஞ்சனமு, மலையாளத்தில் சுவனமந்தாரம்.. இப்படியான அழகழகு பெயரால் குறிப்பிடப்படும் இம்மரத்தின் பூவும் அழகுதான். சீனாவைத் தாயகமாகக் கொண்டதால் இதற்கு ஹாங்காங் ஆர்கிட் மரம் (Hong kong orchid tree) என்றும் இலைகள் ஒட்டகத்தின் குளம்பு போல பிளவுபட்டிருப்பதால் ஒட்டகத்தின் பாதம் (camel’s foot) என்றும் பூக்கள் விரிந்த சிறகுடைய பட்டாம்பூச்சி போல இருப்பதால் பட்டாம்பூச்சி மரம் (butterfly tree) என்றும் குறிப்பிடப்படுகிறது. பாஹினியா குடும்பத்தில் ஒரிஜினல், கலப்பு என்று சுமார் 500 வகைகள் உள்ளன.


20 comments:

  1. அழகான படங்கள். பெயர்கள், தகவல்களுடன் தொகுப்பது நல்லதோர் செயல். தொடரட்டும் படத் தொகுப்புகள்.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  2. அழகான மலர்கள், அதன் பெயர் , குணநலன்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி மேடம்.

      Delete
  3. சுவாரஸ்யமான படங்கள், தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  4. நிச்சயம் இந்த சேமிப்பு தேவைப்படுவோருக்குப் பேருதவியாக இருக்கும். பல நேரங்களில் பூக்களை படமாக்கி விட்டுப் பெயர் அறிவதற்குப் படாதபாடு பட்டிருக்கிறேன்.

    தகவல்கள் சுவாரஸ்யம். ஒவ்வொரு படமும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல அழகு.. நேர்த்தி..! பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ராமலக்ஷ்மி. தெரியாத பூக்களின் பெயர் தேடுவதற்குள் ஒருவழியாகிவிடுகிறது. ஊக்கம் தரும் கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பும் நன்றியும்.

      Delete
  5. இதில் எந்த பூக்களும் பார்த்தது இல்லை, தகவுலுடன் படமும் அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சில பூக்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பூக்கும் இயல்புடையவை. அடுத்துவரும் பதிவுகளில் தெரிந்த பூக்கள் சிலவற்றைக் காணமுடியும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  6. அறிவியல் வகுப்பறைக்குள் சென்றுவந்ததுபோலிருந்தது. அருமையான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா.. ஹா.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. படங்கள் அழகு! தகவல்களும் அருமை. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொரு பயன் உள்ளது. இப்பூமியில் தோன்றிய ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ளதுதான். நாம் தான் பல நேரங்களில் அதனை அறிவதில்லை. தாங்கள் பதியும் ஒவ்வொரு பதிவும் அத்தனை சிறப்பானது எனவே இத்தொகுப்பும் அப்படியே. தொகுப்பு மிகப் பயனுள்ள ஒன்று. தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கமிகு கருத்துரைக்கும் அன்பும் நன்றியும் துளசி சார் & தோழி கீதா.

      Delete
  8. அடடா ! கண்ணுக்கு அருமையான விருந்து ! எத்தனை நிறம் , எத்தனை வித விதமான வடிவம் ! பதிவுக்குப் பெரும் பாராட்டு .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் உளமார்ந்த பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  9. Replies
    1. அன்பும் நன்றியும் தோழி.

      Delete
  10. All are awesome but ivvaru Unknown flowers Patri kuripittalum Adikadi thenpadum முஸெண்டாஸ் அரத்தை பாதிரிப்பூ மனோரஞ்சிதம் பத்ராக்ஷி இருவாக்ஷி திருப்பாச்சி Allamanda patrium konjam pesinal koodudhal payan adaivom mam..Maloo creeper enappadum மந்தாரை & Bauhinia திரு வாத்தி rendum veru verudane..unmayil mandgaram Thiruvaathy Kaattathy Patri kooravum..Really neengal ivvaru Ovvoru pookalayum Patri thelivaaga adhuvum semmayana Mozhinadayil Eludhum vidhamum Anuradha Ramanan awargalin baaniyil kalakugindradhu...Really my Hearty wishes...thanks...

    ReplyDelete
  11. All are awesome but ivvaru Unknown flowers Patri kuripittalum Adikadi thenpadum முஸெண்டாஸ் அரத்தை பாதிரிப்பூ மனோரஞ்சிதம் பத்ராக்ஷி இருவாக்ஷி திருப்பாச்சி Allamanda patrium konjam pesinal koodudhal payan adaivom mam..Maloo creeper enappadum மந்தாரை & Bauhinia திரு வாத்தி rendum veru verudane..unmayil mandgaram Thiruvaathy Kaattathy Patri kooravum..Really neengal ivvaru Ovvoru pookalayum Patri thelivaaga adhuvum semmayana Mozhinadayil Eludhum vidhamum Anuradha Ramanan awargalin baaniyil kalakugindradhu...Really my Hearty wishes...thanks...

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.