கதாசிரியன்
ரமாகாந்த், அவன் மனைவி வத்ஸலா, நாடக நடிகை ஸூரங்கா, அவளது கணவன் கறுப்பன், ஓவியை ஸுலோசனா, அவள் தந்தையும் ஆலை முதலாளியுமான அண்ணா, காந்தியவாதியான பெரியவர் பாப்பா, இயந்திரம் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள வித்யாதரன், பேராசை பிடித்த காசி, அறியாமையிலும் வறுமையிலும் உழலும் காமாபூர் மக்கள்…. இவர்களைச் சுற்றி நகரும் கதையில் ஊர்த்திருவிழாவில் பலிகொடுப்பதற்காக வளர்க்கப்பட்டு மதமதத்துத் திரியும் எருமைக்கடாவும் ஒரு முக்கியப் பாத்திரம்.
\\எனக்கு ஒருநாள் சர்வாதிகாரம் கிடைத்தால் கிடைத்த க்ஷணமே உலகத்தில் குரூபிகளும் விகாரமான பொருட்களும் இல்லாமல் செய்திருப்பேன்\\ என்று எண்ணுமளவுக்கு கலையின் மீதும்
அழகுணர்வின் மீதும் அடங்காத மோகமும் அழகற்றவை மீது விடாப்பிடியான வெறுப்பும் கொண்ட, உயர்குலத்தில்
பிறந்த கதாசிரியன் ரமாகாந்த்….
தந்தையின் நன்றிக்கடன் பொருட்டு ரமாகாந்துக்கு மனைவியாக்கப்பட்டு
கணவனால் உதாசீனப்படுத்தப்படுகிறாள் வத்ஸலா..
ஒரு கூலிக்காரியைப் போல இருக்கிறாய் என அவளுடைய கருப்பு
நிறத்தைப் பழிக்கிறான் ரமாகாந்த். கலையுணர்வோ.. அழகோ.. அதிகப் படிப்போ.. அந்தஸ்தோ… எதுவும் இல்லாத
வத்ஸலாவை ஜடத்தினும் கீழாய் வெறுத்து ஒதுக்குகிறான். \\கந்தைப்புடைவையை உடுத்தி உன்னைப் பத்து குடியானவர் பெண்களின் நடுவில் நிற்கவைத்தால் பிரம்மதேவன் கூட உன்னைப் பிராம்மணப்பெண் என்று சொல்லமாட்டான்.\\ என்கிறான்.
அன்பால் கணவனின் மனத்தை மாற்றிவிட முடியும் என்ற
நம்பிக்கையுடன் காதலைப் பிச்சையாகக் கேட்கும் கழிவிரக்கம் மிக்கப் பெண்ணான வத்ஸலா, ஒரு கட்டத்தில்
அவனுடைய ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும் அகங்கார சிந்தையைக் கண்டறிந்து
அவனிடமிருந்து விலகி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். கணவனின் இழிபேச்சே அவளுக்குள் வாழ்வதற்கான
உறுதியை உருவாக்குகிறது. எந்த கூலிவேலை செய்யும் பெண்களோடு ஒப்பிட்டு பேசினானோ..
அவர்களுடனேயே வாழ்கிறாள்.. அவர்களுக்காகவே வாழ்கிறாள்.. அவர்களுக்காகவே தன் வாழ்வை
அர்ப்பணிக்கிறாள்.
வெளியுலகுக்கு வத்ஸலாவை சாகடித்துவிட்டு கிருஷ்ணாவாய் மாறுகிறாள்.
தன் கதையெழுதும் திறமையை வெளிப்படுத்துகிறாள்.. ரமாகாந்தின் கதைகளுக்கு மாற்றாய்
அவள் எழுதியனுப்பும் கதைகள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அழகற்றவள் என்று
ஒதுக்கப்பட்ட வத்ஸலாவுக்கும் ஒரு காதல் மலர்கிறது. எந்திரப் பொறியாளன் வித்யாதரன்
அவளுடைய அன்பினாலும் பண்பினாலும் ஈர்க்கப்பட்டு மணஞ்செய்ய முன்வருகிறான். ஆனால்
மறுபடியும் அந்த உயர்குல வகுப்புக்குள் ஒடுங்கி தன் சுயமிழக்க அவள் தயாராயில்லை.. அறியாமையில்
உழலும் சேரி மக்களோடு மக்களாக தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வதே ஆனந்தம் என்கிறாள்.
இன்னொரு
பக்கம் வத்ஸலாவைப் போலவே துளசிக்கும் மறு அவதாரம்.
குடிகாரக் கணவனால் கைவிடப்பட்டு அநாதையாகும் பட்டிக்காட்டுத் துளசியை, அவளது வறுமையை தன் இச்சைக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் முந்திரி ஆலை முதலாளி, அழகும் நல்ல குரல்வளமும் கொண்ட அவள், தவறிப்பிறந்த குழந்தைக்காக.. அதன் எதிர்காலத்துக்காக.. நாடக நடிகை ஸூரங்காவாக மாறுகிறாள்.. இந்த ஸூரங்காவின் முந்தைய வரலாறு தெரியாத வரையில் அவளோடு காதலாயிருக்கும் அழகின் உபாசகன் ரமாகாந்தின் மனம், உண்மை தெரியவந்தபின் விலகி ஸூலோசனாவிடம் தாவுகிறது. ரமாகாந்திடம் ஈர்ப்பிருந்தும் அவனது முந்தைய வரலாறு அறிந்த ஸுலோசனா அவனைத் தவிர்த்து வித்யாதரனை விரும்புகிறாள்.
நிறத்தை
விடவும் மனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வித்யாதரன் ஒரு இடத்தில் சொல்கிறான். \\ நிறத்துக்கு நான் அத்தனை மதிப்புக் கொடுப்பதில்லை. சுண்ணாம்பு நல்ல வெளுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனால் அதற்கு கஸ்தூரியின் விலை வந்துவிடுமோ?\\
முடிவு
என்னாயிற்று.. ரமாகாந்தின் வாழ்க்கையில் இறுதியாய் இணைந்தவர் யார்? வத்ஸலாவா? ஸூரங்காவா? ஸூலோசனாவா? இரு துருவங்கள் இணைந்தனவா? அல்லது வேறு வேறு திசை நோக்கி நகர்ந்தனவா? என்பதையெல்லாம் கதையை வாசிக்கும் விருப்புள்ளோர்க்காக விட்டுவைக்கிறேன்.
இக்கதையின்
மூலம் மராட்டிய மொழி என்பதால் அம்மொழியிலும் கலாச்சாரத்திலும் புழங்கும் சில பழக்க வழக்கங்களையும் ரசனையான உவமை மற்றும் சொலவடைகளையும் அறிந்துகொள்ளமுடிகிறது. உதாரணத்துக்குச் சில..
- · உதட்டுச்சாயம் போய்விடும் என்று குழந்தையை முத்தமிடாத தாய்
- · மஞ்சள் நிறமுள்ள இளம் வாழைப்பழங்களின் சீப்பு போல தோன்றிய அவளது மூடிய கை
- · சந்திரனாகிய கூஜாவிலிருந்து பூமியில் ஊற்றப்பட்ட மயக்கந்தரும் மதுவென நிலவொளி
- · பாற்கடலைக் கடைந்த காலத்தில் தேவாசுரர்கள் எவ்வளவு ஆவல் நிரம்பிய பார்வையோடு அமுதத்தைப் பார்த்திருப்பார்களோ, அதே பார்வையோடு கறுப்பன் தேநீர்க்கோப்பையைப் பார்க்கலானான்.
- · எதிரே ஆகாயமும் கடலும் எது அதிக நீலமானது என்று பார்ப்பதற்காக ஒன்றோடொன்று கன்னங்களைப் பொருத்திவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தன.
- · மத்தியான்னம் கடும்வெயிலினால் தகப்பன் போலத் தோன்றிய பகல் இப்போது தண்மையான தாத்தாவைப் போலத் தோற்றியது.
- · அவன் காதலாகிய மதுவை கற்பனையான புட்டியில் நிரப்பி, அதிலிருந்து மாதப்பத்திரிகைகளாகிய கிண்ணங்களில் ஊற்றி வாசகர்களுக்குப் போதுமளவு கொடுத்துக் கொண்டிருந்தான்.
‘கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை’ என்ற நம் பழமொழிக்கு நிகராக ‘எல்லாம் கிடக்க
எருதுக்கு சீமந்தமாம்’ என்ற பழமொழி இடம்பெறுகிறது. தும்மினால் யாரோ நினைக்கிறார்கள் என்பது வள்ளுவர் கால வழக்கு. புரையேறினால் யாரோ நினைக்கிறார்கள் என்பது இக்காலத்திய வழக்கு. கொட்டாவி விட்டால் யாரோ நினைக்கிறார்கள் என்பது மராத்திய வழக்கு போலும்.
ஒருவருடைய கட்டுப்பாட்டில் இன்னொருவர் இருக்க நேர்ந்தால் பொதுவாக
இவர் காது அவர் பிடியில் என்று சொல்வது நம் வழக்கம். இக்கதையில் பாப்பா என்னும்
அஹிம்சாவாதியின் மூக்கு காந்திஜியின் பிடியில் என்று வருகிறது.
\\சிலர் பந்தயம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். காமாபூரைப் போன்ற இடத்தில் போலீஸாருக்குக் காபிச்செலவு கொடுத்துவிட்டால் ஜனங்கள்
நடமாடும் நாற்சந்தியின் நடுவிலேயே உட்கார்ந்துகொண்டு எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம்.\\
இன்றளவும் மாற்றமில்லாத ஒரு சமூக அவலம் இது. இப்புதினம்
எழுதப்பட்ட ஆண்டு 1934 என்பது இத்தருணத்தில் நினைவில் கொள்ளவேண்டியது.
மீன் சாம்பார், அரசிகர், பிச்சோடா போன்ற
வார்த்தைகள் ரசிக்கவைக்கின்றன. மதுராவுக்குப் போன கண்ணன்,
மதுரைக்குப் போன கண்ணனானதும், ரமாகாந்த்,
வத்ஸலா, ஸுரங்கா, ஸூலோசனா,
ஸோனு போன்ற மராத்திய பெயர்களுக்கு மத்தியில் கறுப்பன் இடம்பெற்றதும்
கொஞ்சமே கொஞ்சம் நெருடல்.
மூல ஆசிரியர் - வி.ஸ.காண்டேகர்
தமிழாக்கம் – கா.ஸ்ரீ.ஸ்ரீ.
அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு
பக்கங்கள் 400
விலை – ரூ.125/-
அவசியம் படிக்க வேண்டிய நூல் ஒன்றை அருமையாக அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்
ReplyDeleteநிச்சயம் வித்தியாசமான வாசிப்பனுவபவம் கிடைக்கும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது.
Deleteஅருமையான நூல் மதிப்புரைக்கு நன்றி. அவசியம் படிப்பேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.
Deleteஅருமையான நூல் அறிமுகம்... நன்றி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteபடிக்க தூண்டும் விமர்சனம்...வத்ஸலாவை பற்றி மேலும் படிக்கும் ஆசை வருகிறது...
ReplyDeleteநிறம் ஒரு தடை இல்லை
என்னும்
நிதர்சனத்திர்க்கான ஒரு நூல்...
நிச்சயமாக நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா.
Deleteஅருமையான நூல் விமர்சனம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி மேடம்.
Deleteஅருமையான நூல் விமர்சனம்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தம +1
வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்!
ReplyDeleteதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!
சிகரம் இணையத்தளம் : https://www.sigaram.co
தொடர்புகளுக்கு : editor@sigaram.co
தகவலுக்கு மிக்க நன்றி.
Deleteமிக சிறப்பான நூல் மதிப்புரை!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteநல்ல நூல் விமர்சனம்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி கீதா & துளசி சார்.
Deleteவாழ்த்துகள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Delete