29 October 2015

கேல் கீரை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?



கேல் என்னும் பரட்டைக்கீரை


கேல் கீரையை ஆஸி கடைகளில் பார்த்திருக்கிறேன். ஐரோப்பாவைத் தாயகமாய்க் கொண்ட இந்த கேல் கீரை, முட்டைக்கோஸ் வகையறாவைச் சேர்ந்தது. இளம்பச்சை, அடர்பச்சை, கத்தரிப்பூ நிறங்களில் காட்சியளிக்கும் இக்கீரைகளைக் கடைகளில் பார்த்திருந்தாலும் அவற்றின் கரடுமுரடானத் தோற்றம் காரணமாக வாங்கத் துணிந்ததில்லை. கேல் கீரையின் மகிமைகளை அறிந்தபிறகு சமீபகாலமாக வாங்கி உபயோகிக்கத் துவங்கியுள்ளேன். பீட்டா காரட்டின், விட்டமின் கே, விட்டமின் சி, கால்சியம் போன்றவற்றை அதிக அளவில் கொண்டு ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள கேல் (kale) எனப்படும் இக்கீரை சூப், சாலட், ஜூஸ், சிப்ஸ் போன்ற வடிவங்களில் மேலைநாட்டினர் பலராலும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு சத்து சேர்க்கும் அதே சமயம், நம் உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கும் விசேடத்தன்மையும் வாய்ந்தது. ருசி எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் சோதனை முயற்சிகள் ஒவ்வொன்றாகத் தொடங்கின. 

சோதனை முயற்சி - 1 
கேல் கீரை, காய்கறி, கொண்டைக்கடலை சூப்



கேல் கீரை கொண்டு வழக்கமாய் தயாரிக்கப்படும் சூப்பைத்தான் முதலில் முயன்றேன். கேல் கீரை, கேரட், காப்சிகம் எனப்படும் சிவப்பு, பச்சை குடைமிளகாய்கள், செலரித்தண்டு போன்ற காய்கறிகளை சின்னச்சின்ன துண்டுகளாக நறுக்கி, குக்கரில் நிறைய நீர்விட்டு, நன்கு வேகவைத்தபின், தனியாக ஏற்கனவே வேகவைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையும் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் கலந்தால் அருமையான கலவையான சத்துநிறைந்த சூப் தயார்… தேங்காய்ப்பால் சேர்க்கவிரும்புவோர் இதில் சேர்த்துக்கொள்ளலாம். நான் வழக்கமாகத் தேங்காயை உணவில் சேர்ப்பதில்லை என்பதால் அதற்குப் பதிலாக பத்துப்பன்னிரண்டு கொண்டைக்கடலைகளை மசித்துச் சேர்த்தேன். சூப் சற்று கெட்டியாக, ஸ்பூனால்  எடுத்துண்பதற்கு வசதியாக இருந்தது. இதை முழுவேளை உணவாகவே எடுத்துக்கொள்ளலாம். வயிறு நிறைந்துவிடுகிறது. முதல் முயற்சி வெற்றி! 


சோதனை முயற்சி - 2 
கேல் கீரை சட்னி



என்னது, கீரையில் சட்னியா என்று வியக்கிறீர்களா? மணத்தக்காளிக்கீரைத் துவையல் பற்றி தோழி சண்முகவடிவும் இருவாட்சியிலைத் துவையல் பற்றி தோழி உமா மோகனும் முகநூலில் பதிவிட்டபொழுது, உங்களைப் போலத்தான் நானும் வியந்தேன். சரி, நாமும் முயன்று பார்க்கலாம் என்று துணிந்து கேல் கீரைச் சட்னி செய்தாயிற்று. முதல்முறை என்பதால் ருசி எப்படியிருக்குமோ என்றொரு தயக்கம் இருந்தது. அதனால் ஒன்றிரண்டு புதினா இலைகளையும் சேர்த்துக்கொண்டேன். வாணலியில் துளி எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலுடன், புதினா, கேல் கீரையை லேசாக வதக்கி ஆறவிட்டு கொஞ்சமாய் தேங்காய், புளி, உப்பு சேர்த்து அரைத்தெடுத்தேன். சுவை பிரமாதம்.  அடுத்தமுறை புதினா இல்லாமல் செய்துபார்க்கவேண்டும்.


சோதனை முயற்சி - 3 
கேல் கீரை + மாங்காய் சாம்பார்

  

கீரை + மாங்காய் சாம்பாருக்கென்று ஒரு தனித்த ருசி உண்டு. முளைக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை என்று எந்தக் கீரையும் மாங்காயோடு கூட்டு சேரும். கீரை மாங்காய்க்குழம்பு என்றாலே ஒரு பிடி சோறு கூடுதலாய் உள்ளே செல்லும். இத்தனைக் கீரைகளோடு கூட்டு சேரும் மாங்காய், கேல் கீரையோடு கூட்டு சேராதா என்ன? அடுத்த முயற்சியும் வெற்றி… வெற்றி… கேல் கீரை மற்றக் கீரைகளைப் போல எளிதில் குழைவதில்லை… அகத்தி, முருங்கை மாதிரி கொஞ்சம் விறைத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் ருசிக்குக் குறைவில்லை…


சோதனை முயற்சி 4 
கேல் கீரை கடையல்



முளைக்கீரையும் பூண்டும் வேகவைத்துக் கடைந்து உப்பு, நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் அமுதம்தான்... முளைக்கீரை கிடைக்காதபோது, கிடைக்கிற கீரையில் செய்துபார்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற… அடுத்த முயற்சி.. கேல் கீரையை ஆய்ந்து, அலசி, பூண்டுப்பற்கள், மிளகுப்பொடி, சீரகம், உப்பு சேர்த்து லேசாக ஆவிகாட்டி பச்சைநிறம் மாறாமல் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் ஒன்றிரண்டு சுற்று சுற்றி இறக்கினால் சுவையான கீரை கடையல் தயார். நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டாயிற்று… ஆஹா… வேற்றுக்கீரை என்ற வித்தியாசமே தெரியவில்லை… அபாரம்…


கேல் கீரையை இயன்றவரை நம்முடைய உணவுமுறைக்குப் பழக்கியாகிவிட்டது.. நம்மையும் அதற்குப் பழக்கியாயிற்று. பரஸ்பர புரிதல் வந்தபின் இனியென்ன பிரச்சனை? கீரைக்கூட்டு, கீரைத் துவட்டல், கீரை பஜ்ஜி, கீரை வடை என்று விதவிதமாய் வெளுத்துக்கட்ட வேண்டியதுதான்.. தாயகம் விட்டு அயல்தேசங்களில் வசிப்போர், நம் நாட்டில் கிடைக்கும் கீரை, காய்கறி, பழ வகைகள் இங்கு கிடைப்பதில்லையே என்று ஆதங்கப்படாமல் ஆங்காங்கு, அந்தந்த பருவத்தில் கிடைக்கும் கீரை, காய்கறி, பழங்களை உண்ணப் பழகிவிட்டால் ஆரோக்கியக்குறைகளைப் பெரிதும் தவிர்க்கமுடியும் அல்லவா?  

 &&&

பிற்சேர்க்கை: 

kale என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்தக் கீரைக்குத் தமிழில் 'பரட்டைக்கீரை' என்ற பெயர் என்னும் தகவலைப் பின்னூட்டத்தின் வழி தெரிவித்த (துளசிதரன் தில்லையகத்து) கீதாவுக்கும், (காகிதப்பூக்கள்) ஏஞ்சலினுக்கும் மனமார்ந்த நன்றி. 
என்னவொரு பொருத்தமான பெயர்! 

&&&&

சோதனை முயற்சி 5 
கீரை பஜ்ஜி




கேல் கீரையை ஆய்ந்து நன்கு அலசிவிட்டு நீரைப்பிழிந்தெடுத்தபின், சிறிது வெங்காயம், புதினா, மல்லித்தழைகளுடன் க.மாவு, உப்பு, மி.தூள் சேர்த்து மிதமாய் நீர்விட்டுப் பிசைந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் கீரை பஜ்ஜி தயார்.. இது நேற்றைய சோதனை... இதுவும் பிரமாத வெற்றியே.. . 

44 comments:

  1. கேல் கீரை இங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை... கிடைத்தால் முயன்று பார்க்கிறோம்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி தனபாலன். இதை பரட்டைக்கீரை என்பார்களாம். கிடைத்தால் செய்துபாருங்கள்.. மிகவும் சத்துள்ள கீரை இது.

      Delete
  2. கேல்கீரை கேள்விப்பட்டதில்லை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கேல் என்பது ஆங்கிலப்பெயர். தமிழில் பரட்டைக்கீரை என்று சொல்வதாக தோழியர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். கிடைத்தால் வாங்கி சமைத்துப்பாருங்கள். கருத்துக்கு நன்றி சுரேஷ்.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வா.வ் சூப்பர் கீதா. இக்கீரையை நாங்க சாதாரணமா சமைப்பது போல் செய்வதுதான். நீங்க சோதனை முயற்சி என்றே இவ்வளவு வெரைட்டியா செய்திருக்கிறீங்க. பார்க்கவே சூப்பரா இருக்கு.இதில் சாம்பார் வேறு. செய்துபார்க்கிறேன். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஜெர்மனியில் நீங்க குறிப்பிட்டது போல Grünkohl என்பது சரிதான் ப்ரியா. மாங்காய் கிடைத்தால் சேர்த்து சாம்பார் வைத்துப் பாருங்க. நன்றாக இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா.

      Delete
  5. துளசி: கேல் கீரை பற்றித் தெரியாது இங்கு எங்கள் ஊரில் கிடைப்பதில்லை. ஆனால் பெரிய மால்களில் வெளிநாட்டு இறக்குமதிகளில் இதுவும் இப்போது ஒன்றாகி வருகின்றது என்று சொல்லிக் கேள்வி.

    கீதா: சாப்பிட்டதுண்டு. சாம்பார், துவையல், கீரை கடைசல் போன்று ...உங்க்ள் குறிப்புகளும் நன்று. இங்கு பரட்டைக் கீரை என்று சொல்லப்படுவதுண்டு. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு ப்ரக்கோலி போல இருக்கும். மிக மிகச் சத்துள்ள கீரை. இங்கு சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. @ துளசி - வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார். மிகவும் சத்துள்ள கீரை என்றாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும்போது நீண்டநாட்கள் குளிரறையில் இருப்பதால் சத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. ஃப்ரெஷ்ஷாகக் கிடைத்தால் வாங்கி சமைத்துண்ணலாம்.

      @ கீதா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா. இதற்கு தமிழில் பரட்டைக்கீரை என்ற பெயரைத் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி. சமையலில் முடியும்போது சேர்த்துக்கொள்ளலாம். மிகவும் சத்துள்ள கீரை இது.

      Delete
  6. இது என்ன புதிய கீரை வகையாக இருக்கே.

    ReplyDelete
    Replies
    1. இங்கே ஆஸியில் கிடைக்கிறது சசி. வேறு கீரைகள் கிடைக்காதபோது தயக்கத்துடன்தான் வாங்கினேன். பிறகுதான் தெரிகிறது இதை கீரைகளின் அரசி என்னுமளவுக்கு சத்து நிறைந்தது என்று.. இந்தக் கீரை எப்படியிருக்குமோ என்னவோ என்று வாங்கத் தயங்குவோர்க்கு பயன்படுமே என்று எழுதினேன்பா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி.

      Delete
  7. பகிர்வுக்கு. நன்றி .

    Reply

    ReplyDelete
    Replies
    1. சமையல் ராணியான தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காஞ்சனா மேடம்.

      Delete
  8. புதுமையாக இருக்கிறதே பகிர்வுக்கு நன்றி
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. வெளிநாட்டு மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது என்றே நினைக்கிறேன். கிடைத்தால் வாங்கி செய்து பாருங்க.. சுவையோடு சத்தும் கூடியது. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  9. கேல் கீரை குறிப்புகள் பிரமதம் கீதமஞ்சரி! இங்கு [ துபாய்] நான் பார்த்திருக்கிறேன். இனி செய்து பார்த்து விடவேன்டியது தான்! ஆங்கிலத்தில் அதன் பெயரை எழுத முடியுமா? என் ம‌கன் சமீபத்தில் தான் சிறிது ஓமம் வாசனை கலந்த ஒரு வகை கீரையை வாங்கி வந்தார். அதன் பெயர் தெரியாம‌ல் அதை சாலட் மட்டும் செய்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.


    ReplyDelete
    Replies
    1. kale என்பதுதான் ஆங்கிலப்பெயர். இளம்பச்சை, அடர்பச்சை மற்றும் கத்தரிப்பூ நிறங்களிலும் கிடைக்கிறது. சமைத்துப்பார்த்து சொல்லுங்க மனோ மேடம். வருகைக்கும்கருத்துக்கும் மிக்க நன்றி. ஓமவாசனை கீரையின் பெயரையும் முடிந்தால் எழுதுங்க.. அது இங்கே கிடைத்தால் அதிலும் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளலாம். :))

      Delete
  10. mouth watering recipes!!! very nice akka!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மைதிலி. அங்கும் கிடைத்தால் சமையலில் பயன்படுத்திப் பாருங்க.. சத்துள்ள கீரைப்பா.

      Delete
  11. அருமை கீதா!..
    இங்கு சாதாரணமாகக் கிடைக்கும் கீரை இனம்தான்.
    மெல்லியதாக அரிந்து வறுவல், பருப்புக்கூட்டு செய்வேன். சாம்பார் அறிந்ததில்லை. சலாட்டுக்கும் சேர்த்ததில்லை. அதையும் செய்து பார்த்திடுவோம்!

    நல்ல பகிர்வு! மிக்க நன்றி கீதா!

    ReplyDelete
    Replies
    1. இங்கும் கடைகளில் எப்போதும் பார்ப்பதுதான். ஆனால் அது எப்படியிருக்கும் எப்படி சமைப்பது போன்ற விவரங்கள் தெரியாமலேயே வாங்காமல் இருந்தேன். சமீபத்தில்தான் அதன் மகத்துவம் பற்றி அறிந்து வாங்க ஆரம்பித்துள்ளேன். நீங்களும் செய்து பாருங்க இளமதி.. நிச்சயம் பிடித்துப்போகும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

      Delete
  12. அந்தக் கீரையில தான் சமைக்கணுமா என்ன ? எங்க ஊர்ல கிடைக்கிற கீரையிலேயும் செய்து பாத்துட வேண்டியதுதான்...( ரகசியமா ஒரு கேள்வி..நிஜமாவே நீங்க செஞ்சதைத் தான் போட்டா புடிச்சு போட்டுருக்கீகளா?)http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கிற காய்கறி பழங்கள் கீரைகள் எல்லாவற்றையும் உபயோகப்படுத்திப் பார்த்திடவேண்டியதுதான். வேறென்ன செய்வது? வேறென்ன செய்யமுடியும்? :))) உங்க ரகசியக் கேள்விக்கு பதில்... செய்ததும் நானே... சுவைத்ததும் நானே...படம் பிடித்ததும் நானேதான்.. யாரும் மண்டபத்தில் கொடுத்த படங்கள் இல்லைப்பா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவாதி.

      Delete
  13. பெரும் ஷாப்பிங் மால்களில் இந்தக் கீரையை பார்த்திருக்கிறேன். மற்றபடி வாங்கி சமைத்ததில்லை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கி சமைத்துப் பாருங்க. சுவை பழகிவிட்டால் அப்புறம் பிடித்துவிடும். வருகைக்கும்கருத்துக்கும் நன்றி செந்தில்.

      Delete
  14. கேல்கீரை சமையல் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் ரசித்ததற்கும் நன்றி நாகேந்திர பாரதி.

      Delete
  15. கேல் கீரையை பொரியலாக மட்டுமே செய்வதுதான் வழக்கம்..பாசிப்பருப்பு, பூண்டு சேர்த்து பொரியலாக செய்வேன், பருப்பு சேர்க்காமல் தனியே பொரியலாக செய்வேன். ஆனால் கொஞ்சம் வேகாத மாதிரி விறைத்துக்கொண்டே இருப்பதால் அதிகம் வாங்குவதில்லை.. :)

    நீங்க கலக்கிட்டீங்க, சட்னியும், சாம்பாரும் செய்து பார்க்கணும்,குளிர் ஆரம்பிச்சாச்சு, இனி இங்கே மாங்காய் கிடைக்காது. தனியே சாம்பார் செய்து பார்க்கிறேன். நல்ல குறிப்புகளுக்கு நன்றி கீதாக்கா!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது சரிதான் மகி.. கொஞ்சம் விறைத்துக்கொண்டுதான் இருக்கு. குழந்தைக்குக் கொடுப்பதாக இருந்தால் நான் சொல்லியிருக்கும்படி வேகவைத்து மிக்சியில் மசித்துக்கொடுக்கலாம். அப்படியே கொடுத்தால் செரிப்பது கஷ்டம். கீரையை மாங்காயோடு சேர்த்து செய்தால் மாங்காயின் புளிப்பும் கீரையின் கைப்பும் துவர்ப்பும் கலந்த ருசியும் சேர்ந்து நன்றாக இருக்கும். தனியாக சாம்பார் வைத்தால் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.. செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க. :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகி.

      Delete
  16. இதற்க்கு இன்னோர் பேர் தமிழில் பரட்டைக்கீரை :) .நிறைய சத்துக்கள் இருக்கு இதில் .நான் அடிக்கடி இப்போ சமைக்கிறேன் ..முளைக்கீரை இனிமே வின்டருக்கு கிடைக்காதே இனி கேல் ,கொல்லர்ட் கிரீன்ஸ் தான் சாப்பிடனும் ..
    நான் சட்னி செய்ததில்லை இனி செய்திட்டா போச்சி :)

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ப்பெயரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஏஞ்சலின். பதிவிலேயே பிற்சேர்க்கையாக இணைத்துவிட்டேன். செய்துபார்த்துவிட்டு சொல்லுங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சல்.

      Delete
    2. http://www.nalam.net/kale-the-queen-of-greenshealth-benefits/


      Delete
  17. எங்கள் கிராமப்புரங்களில் பலவித கீரைகள் பார்த்திருக்கிறேன் ..ஆனால் இது புதிதாக உள்ளது.. முயர்சி செய்றேன் .. புதிய தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. இது ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட கீரை என்பதால் கிராமங்களில் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்றே நினைக்கிறேன். ஆனால் நாம் வாழும் இடத்தில் கிடைக்கும் கீரைகளைத் தவறவிடாமல் நம் உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வது நல்ல விஷயம்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  18. பார்க்கும் போதே சாப்பிடவேண்டும் போல் உள்ளது மா...இன்று புதிய கீரைப்பற்றித்தெரிந்து கொண்டேன்....சமையலிலும் உங்கள மிஞ்ச முடியாது போலவே...

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் இல்லை கீதா. ஏதோ எனக்குத் தெரிந்தவற்றை செய்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

      Delete
  19. வித்தியாசமான ஒரு கீரை. தில்லியில் கிடைக்கிறதா என பார்க்க வேண்டும். கடைசியில் போட்டிருக்கும் கீரை பஜ்ஜி பார்த்தபோது சாப்பிடும் ஆசை வந்துவிட்டது! :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... கிடைத்தால் வாங்கி செய்து பாருங்கள்.. சுவையோடு சத்தும் உத்திரவாதம். நன்றி வெங்கட்.

      Delete
  20. கண்ணிற்கு நல்லது என்று இத்தாலியத் தோழி சொன்னதற்குப் பின்னர் வாங்க ஆரம்பித்தேன், பிடித்துப்போய்விட்டது. சாலடிலும் சேர்த்து சாப்பிடுவேன்

    ReplyDelete
    Replies
    1. நம்முடைய தயக்கத்தினாலேதான் பல நல்ல சத்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுகிறோம். துணிந்து செயல்பட்டால் பல நன்மைகளை அடையமுடியும். உண்மையே. நீங்களும் பயன்படுத்துவது அறிந்து மகிழ்ச்சி கிரேஸ்.

      Delete
  21. நான் வசிக்கும் ஊரில் இந்த கீரைக்கு (chou frisé) ஷூ பிரீசே என்று பெயர் நீங்கள் சொல்லித்தான் சட்னி செய்ய நல்ல கீரை வகை என்று தெரிந்து கொண்டோம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமல். சட்னி என்னுடைய முயற்சிதான். பயந்துகொண்டே செய்தேன். ஆனால் நன்றாக உள்ளது. நீங்களும் செய்துபாருங்க.

      Delete
  22. கடைகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் சாப்பிட்டதில்லை. இனிமேல் வாங்கி, நீங்கள் சொல்லியிருக்கிற ஏதாவது ஒரு முறையில் சமைத்துப் பார்த்துவிடவேண்டியதுதான் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுந்தரா. செய்துபார்த்துவிட்டு சொல்லுங்க. :))

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.