1 November 2015

செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 14


ஆந்தை போல் உடலமைப்பு, பெரிய தலை, உருட்டு விழிகள்வாய் மட்டும் தவளை போல்.. இப்படியொரு இரவுப்பறவையைப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் கண்முன்னால் ஒரு மரத்தில் அது அமர்ந்திருந்தாலும் அவ்வளவு எளிதில் உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. அப்படியொரு உருமறைப்புத்திறன் உத்தி கொண்ட பறவை அது


செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை

உலகம் முழுக்க பல நாடுகளிலும் பல்வேறு தவளைவாய்ப் பறவையினம் காணப்பட்டாலும் அவற்றுள் சற்று மாறுபட்ட இனங்களான செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை (Tawny frogmouth), புள்ளித்தீற்றல் தவளைவாய்ப் பறவை (marbled frogmouth), பப்புவன் தவளைவாய்ப் பறவை  (papuan frogmouth) மூன்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. இவற்றுள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் இனம் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையினம். இப்பறவையைப் பற்றிதான் இந்தப் பதிவில் அறியப்போகிறோம்.

வெள்ளி சாம்பல் வண்ணத்தில் ஆங்காங்கே கருஞ்சாந்துத் தீற்றல்களுடன் உடலின் மேற்பாகமும் வெளிறிய அடிப்புறத்தில் பழுப்புநிறப் புள்ளிகளுடனும் காணப்படும் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைகளின் விசித்திர நிறக்கலவையால் மரங்களில் அமர்ந்திருக்கும்போது பார்வைக்கு சட்டென்று புலப்படாது.  நல்ல வெளிச்சமான பகல் பொழுதுகளில் கூட தாழ்வான மரக்கிளைகளில் அசைவற்று அமர்ந்திருக்கும் இவற்றை, இவற்றின் மரம் போன்ற சாம்பலும் பழுப்பும் கலந்த நிறத்தீற்றல்களால் தனித்து அடையாளங்காண்பது அரிது.


பறவை அமர்ந்திருப்பது பார்த்தவுடன் தெரிகிறதா? 

உருமறைப்பு உத்திக்கு உதவாத பசிய மழைக்காடுகளையும் மரங்களற்ற பாலைநிலங்களையும் தவிர்த்து, மற்ற காடுகள், குறுங்காடுகள், புதர்கள், சவான்னா புல்வெளிகள் போன்ற நிலப்பகுதிகளை வசிப்பதற்கு ஏதுவாக இந்த செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைகள் தேர்ந்தெடுக்கின்றனமனிதர்கள் புழங்கும் பூங்கா போன்ற மரங்களடர்ந்த பகுதியிலும் பயமின்றி புழங்கக் கூடியவை.
  
ஆந்தையோடு பலரும் இந்தப் பறவையைக் குழப்பிக்கொள்வதுண்டு. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால் ஆந்தைக்கும் தவளைவாய்ப் பறவைக்குமான வித்தியாசங்களை எளிதில் கண்டறிய முடியும்.


ஆந்தையும் தவளைவாய்ப் பறவையும்


• முதலாவது அலகு. ஆந்தைக்கு, தான் வேட்டையாடும் இரையைக் கிழிக்கத்தக்க வகையில் குறுகலான கூரான கீழ்நோக்கி வளைந்த அலகிருக்கும். தவளைவாய்ப் பறவைக்கோ தவளை போன்று முன்னோக்கி நீண்ட அகலமான பெரிய வாய். அதுதான் பெரிய வித்தியாசம்.

•     ஆந்தையின் இரு கண்களும் தட்டையான முகத்தில் முன்பக்கம் பார்த்தபடி இருக்கும். தவளைவாய்ப் பறவைக்கும் அப்படியிருப்பது போல் படத்தில் தோன்றினாலும் உண்மையில் மற்றப் பறவைகளைப் போல பக்கத்துக்கொன்றாய்தான் இருக்கும்.

•   ஆந்தையின் காதுகள் வெளியில் தெரியும். தவளைவாய்ப்பறவைக்கு மற்றப் பறவைகளைப் போல மறைவாக இருக்கும்.

• ஆந்தைகள் பகல் பொழுதுகளில் பொந்துகளிலும் இருட்டான இடங்களிலும்தான் அடைந்திருக்கும். ஆனால் இந்த தவளைவாய்ப் பறவைகள் தங்கள் உருமாற்றத்திறன் மீதான அதீத நம்பிக்கையினால் திறந்தவெளியில் மரக்கிளைகளில் தஞ்சமடைந்திருக்கும்.

•   ஆந்தைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது பொந்துகளில். தவளைவாய்ப் பறவைகளோ மற்றப் பறவைகளைப் போலவே மரக் கிளைகளில் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்

• ஆந்தையின் கால்கள் இரையைப் பற்றுவதற்கும் குத்திக் கிழிப்பதற்கும் ஏதுவாக வலிமையான கூரான நகங்களுடன் இருக்கும். தவளைவாய்ப் பறவைக்கு கிளையைப் பற்றிக்கொள்ள போதுமான அளவில்தான் கால்களில் வலு இருக்கும்.

• முக்கியமாக தவளைவாய்ப்பறவைகளின் உணவு பூச்சிகள், சிலந்திகள், மரவட்டைகள், குட்டித்தவளைகள், எலிகள் போன்ற சின்னஞ்சிறு உயிரிகள்தாம். ஆந்தையைப் போல் இரையை வேட்டையாடும் வழக்கம் இல்லை.


தவளைவாய்ப்பறவை சோடி பெரும்பாலும் இறக்கைகளை  உரசியபடி மரக்கிளைகளில் ஒன்றாக அமர்ந்திருக்கும். ஆண் பறவை, தன் இணையின் இறகுகளை  அலகால் அடிக்கடி கோதி அன்பை வெளிப்படுத்தும். தவளைவாய்ப் பறவைகள் ஒருமுறை இணை சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் தொடர்வதோடு வருடா வருடம் ஒரே இடத்தில் கூடு கட்டும் இயல்பையும் கொண்டவை.

செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையின் கூடு என்பது பெயருக்குதான் கூடே தவிர முற்றிலும் பலமற்றது. மேல்நோக்கி வளர்ந்திருக்கும் கவட்டையான மரக்கிளையில் கட்டப்படும் இக்கூட்டில் குச்சிகளுக்கிடையே பிணைப்புத் தன்மை வெகு குறைவு. காய்ந்த குச்சிகளை சும்மா குவித்து அதன் மேல் சருகுகளை வாயால் கவ்விக் கொண்டுவந்து தூவினால் அதுதான் கூடு. பெருமழைக்கும் காற்றுக்கும் தாக்குப்பிடிக்க இயலாது வெகு எளிதில் சிதைவுறக்கூடிய கூடு அது. கூட்டின் நடுவில் காய்ந்த புற்களை நிரப்பி அதன்மேல் மங்கிய வெள்ளை நிற முட்டைகள் இரண்டு அல்லது மூன்று இடும்.  ஆண் பெண் இரண்டுமே மாறி மாறி அடைகாக்கும். அடைகாக்கும் பறவைக்கு மற்ற பறவை இரை கொண்டுவந்து ஊட்டும். ஒரு மாதத்தில் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும். தாயும் தந்தையும் இணைந்து அவற்றுக்கு உணவு ஊட்டும்.


செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையின் கூடு

ஒரு மாதத்துக்குப் பிறகு குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் குடும்பம் மொத்தமும் வரிசையாக புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது போல் மரக்கிளைகளில் அமர்ந்து காட்சி தருவது அழகாக இருக்கும். சிறகுகளை உடலோடு ஒட்டிக்கொண்டு கழுத்தை உள்ளிழுத்து கண்களை மூடிக்கொண்டு விறைப்புடன் அமர்ந்திருக்கும்போது காய்ந்த மரக்கட்டை போலவே காட்சியளிக்கும் இவை ஆபத்து நெருங்கும் சமயத்தில் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். அதைக் கேட்டு குஞ்சுகள் மேலும் எச்சரிக்கை உணர்வுடன் துளியும் ஆடாமல் அசையாமல் தங்கள் இருப்பை வெளிக்காட்டாவண்ணம் அமர்ந்திருக்கும்.

செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைகள் விதவிதமான ஒலிகளை எழுப்பக்கூடியவை. காதல் அழைப்பு, எல்லை அறிவிப்பு, இரைக்கானது, எதிரிகளை எச்சரிப்பது போன்று அததற்கு என்று தனிப்பட்ட சங்கேத ஒலிகளை வெளிப்படுத்தும். மிகவும் தாழ்ந்த அலைவரிசையில் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் அதே சமயம், உரத்த குரலில் எழுப்பப்படும் எச்சரிக்கை ஒலிகள் பல மைல்களைக் கடந்தும் கேட்கக்கூடியவை. பகல் நேர ஓய்வுப்பொழுதுகளில் இடையூறு உண்டானால் எழுப்பும் எச்சரிக்கை ஒலி தேனீ போன்ற ரீங்காரம். அச்சுறுத்தப்பட்டாலோ பாம்பு சீறுவது போல ஸ்ஸ்ஸ்என்ற ஒலியையும் தொடர்ந்து டக் டக் டக் என்று தங்கள் மேல் கீழ் அலகுகளை மோதியும் சத்தமுண்டாக்கும். இரவுப்பொழுதுகளில் ஊம் ஊம் ஊம்.. என்று ஐந்து நொடிக்கு எட்டு என்ற வீதம் ஒலிகளை எழுப்பும். இவை தவிர இனப்பெருக்க காலத்தில் ட்ரம்ஸ் ஒலிப்பது போன்றும் ஒலியெழுப்பும்.


ஆடாமல் அசையாமல்... 

தவளைவாய்ப் பறவைகள் சுற்றுப்புற சூழலுக்கு மிகவும் உதவி செய்யும் பறவைகள் என்று குறிப்பிடுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.  குருத்து வண்டுகள், வெட்டுக்கிளிகள், தத்துக்கிளிகள், மரவண்டுகள் போன்ற பயிரழிக்கும் பூச்சிகளின்  எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் தவளைவாய்ப்பறவைகளின் பங்கு அலாதிஎலி, அந்துப்பூச்சி, வண்டு, புழுக்கள், நத்தை, சிலந்தி, குளவி, மரவட்டை, பூரான், தேள், பல்லி, தவளைகள் போன்றவையும் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையின் வாய்க்குத் தப்புவதில்லை.

பொதுவாக பகல் பொழுதுகளில் தவளைவாய்ப் பறவைகள் இரை தேடி செல்வதில்லை என்றாலும் தங்களைத் தேடி வரும் இரைகளை விடுவதுமில்லை. எப்படி தெரியுமா?  தவளை போன்ற தங்களுடைய அகலமான பெரிய வாயைத் திறந்துவைத்துக்கொண்டு மரக்கிளைகளில் சலனமற்று அமர்ந்திருக்கும் இப்பறவைகள், தங்கள் வாய்ப்பக்கம் பறந்துவரும் பூச்சிகளை படக்கென்று கவ்விக்கொள்ளும். மாலை நெருங்கும் வேளையில்தான் முறையான இரை தேடலில் இறங்கும். பூச்சி புழுக்கள் போன்ற சிறிய உயிரிகளை அப்படியே விழுங்கிவிடும். ஆனால் பல்லி, எலி போன்ற சற்று பெரிய உயிரிகளை வாயால் கவ்விக்கொண்டுவந்து மரக்கிளையில் மோதி சாகடித்து பிறகு உண்ணும்.

நடுநிசியில் அலறும் சாக்குருவிகளும் ஊளையிடும் நாய்களும் மரணத்தை அறிவிக்கும் என்ற நம்பிக்கை நம்மிடையே இருப்பது போல் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே தவளைவாய்ப் பறவைகள் மரணத்தை அறிவிக்கும் துர்க்குறிகளாகக் கருதப்படுகின்றன. அப்பறவைகளைக் கொன்று எரிப்பது அல்லது மந்திரப் புகையுண்டாக்கி அவற்றை தங்கள் வசிப்பிடங்களிலிருந்து தொலைதூரத்துக்குத் துரத்துவது போன்ற செயல்கள், நெருங்கிவரும் துர்மரணத்திலிருந்து தப்பும் வழிகளாம்

******
(படங்கள் உதவி : இணையம்)

26 comments:

 1. பறவைகளை பற்றி இத்தனை விரிவாக கூறுவதற்கு தங்களை தவிர வேறுயாராலும் முடியாது என்றே நினைக்கிறேன். அற்புத தகவல்கள். நானும் இந்த பறவையை ஆந்தை என்றே நினைத்திருந்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. இன்னும்கூட கூடுதல் தகவல்களைத் தொகுத்திருந்தேன். வாசிப்போர்க்கு சோர்வு உண்டாகுமே என்றுதான் குறைத்தேன். வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகுந்த நன்றி செந்தில்.

   Delete
 2. வணக்கம் .

  இதுபோன்ற கட்டுரைகள் தமிழில் அதிகம் வர வேண்டும் என்று பேராசைப்படுபவன்.

  உங்களின் முயற்சியும் தேர்ந்த விவரிப்பும் மிக மிக மகிழ்ச்சியூட்டுகிறது.

  மாணவர்களிடம் பகிர்கிறேன்.

  ((நரிக்குறவரின் இனவரைவியல் பற்றிய பதிவிற்கும் வந்து கருத்திட்டு வாக்கும் அளித்திருந்தேன்.

  என்ன ஆயிற்றெனத் தெரியவில்லை.))

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துகளுக்கும் மிகவும் நன்றி விஜி சார். மாணவர்களிடம் பகிர்வதாகச் சொன்னது மகிழ்வூட்டுகிறது. இயற்கையின் சிறப்பான அம்சங்களைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து வளர்வது இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கான வழிமுறையைக் கற்றுத்தரும். அந்த வகையில் தங்களுடைய முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது. மிக்க நன்றி சார்.

   நரிக்குறவர் இனவரைவியல் பதிவில் தங்களுடைய பின்னூட்டம் எப்படி தவறிப்போனது என்று எனக்கும் தெரியவில்லை. வருந்துகிறேன்.

   Delete
 3. பறவைகளைப் பற்றி நுணுகி அணுகிய விதம் அருமையாக இருந்தது. இவைபோன்ற பதிவுகளே நம் எழுத்துக்கள் அனைவரையும் சென்றடையச் செய்யும். அபார முயற்சி. பாராட்டுகள்.
  வாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா. தங்களுடைய பதிவைப் பார்வையிட்டு கருத்தும் இட்டேன்.

   Delete
 4. தவளைவாய்ப்பறவை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ளதும்மா....மிகவும் ஆச்சர்யமாக உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் நன்றி கீதா.

   Delete
 5. பறவை இயலில் தங்கள் ஆர்வமும் உன்னிப்பாய் கவனிக்கும் திறனும் தெரிகிறது ஆர்னிதாலஜிஸ்ட்?

  ReplyDelete
  Replies
  1. கண்ணில் தென்படும் இயற்கையை ரசிக்கிறேன். நான் ரசித்தவற்றை எழுத்தால் வடிக்கிறேன். அவ்வளவே... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. செந்தில் குமார் அவர்கள் சொன்னதே மிகவும் சரி...

  நன்றி சகோதரி...

  ஓர் பாடல் : http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/World-Tamil-Bloggers-Guide-Book.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். பாடலை ரசித்தேன். சொல்லவேண்டியவற்றை அழகாகப் பாடல்வழி சொல்லி மனம் தொட்டுவிட்டீர்கள். பாராட்டுகள்.

   Delete
 7. பிரமிப்பான தகவல்கள் சகோ
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 8. தங்களின் பறவைகள் பற்றிய தகவல்கள் மிக வியப்பாகவே இருக்கிறது இந்த தவளை வாய் பறவையை இப்பொழுதுதான் பார்க்கிறேன் மிக நுண்ணிய பார்வையால்தான் இது சாத்தியமாகிறது தங்களின் வர்ணிப்பும் கட்டுரைக்கு அழகு சேர்க்கிறதுஎன்றால் அது மிகையல்ல ..தொடருட்டும் பதிவுகள்-சரஸ்வதிராசேந்திரன்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்ட விரிவான கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

   Delete
 9. பறவைகள் விலங்குகள் பற்றி அருமையாக விளக்கிப் பதிவிடுவதற்கு நன்றி கீதமஞ்சரி. அறியாத பலவற்றை அறிந்துகொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 10. இதைக் கண்டுள்ளேன். ஆந்தையைக் கூட பகலில் கண்டதால், இது கூட ஒரு வகை ஆந்தையென இது வரை கருதினேன்.
  தங்கள் விரிவான பதிவு பல சந்தேகங்களை நீக்கியது.

  ReplyDelete
  Replies
  1. பார்ப்பதற்கு ஆந்தை போலத்தான் உள்ளது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே வேறுபாடு தெரிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன் ஐயா.

   Delete
 11. அறியாத பல தகவல்களைத் தெரியத் தந்திருக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 12. விசித்திரமான பறவை.... தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி வெங்கட்.

   Delete
 13. தெரியாத தகவலகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி அண்ணா.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.