பார்த்தீனியம் |
நம்
நாட்டில் பார்த்தீனியம், சீமைக்கருவேலம் போன்ற அந்நியத் தாவரங்களின்
வளர்ச்சியால் நிலமும் சுற்றுப்புறமும் கால்நடைகளும்
பாதிக்கப்படுவதுபோல் ஆஸ்திரேலியாவிலும் சில குறிப்பிட்ட களைப்பயிர்களால்
சுற்றுப்புறம் பாதிப்படைகிறது. மிக
நீண்ட ஆயுளைக் கொண்ட தாவரங்கள்
குறிப்பாக மரங்கள் அவ்வளவு எளிதில்
ஆதிக்கம் செலுத்துவதில்லை. ஆனால் ஆண்டுத்தாவரங்கள் அதிவிரைவில்
ஆக்கிரமிப்பில் இறங்கிவிடுகின்றன. ஒரு வருட காலத்துக்குள்
முளைத்து வளர்ந்து பூத்து காய்த்து மடியும்
இத்தாவரங்கள் ஆண்டுக்காண்டு பெருகிவளர்ந்து தங்கள் வாழ்விடங்களின் பரப்பளவை
அதிகரித்துக்கொண்டே போகின்றன. இவற்றோடு
போட்டிபோட முடியாத உள்ளூர்த் தாவர
இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துகொண்டு
வருகின்றன. அவற்றைச் சார்ந்து வாழும் பறவையினங்களும் விலங்கினங்களும்
கூட அழியக்கூடிய ஆபத்திலிருக்கின்றன.
உலகநாடுகளில் பார்த்தீனியப் பரவல் |
ஆஸ்திரேலியாவில்
குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துவிட்ட அக்களைத்தாவரம் மெல்ல
மெல்ல நாட்டின் மற்றப் பகுதிகளுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. அதன் பரவலைத் தடுத்து
நிறுத்த போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனாலும் கால்நடைகளின் குளம்புகள்
வழியாகவும் ஒரு பகுதியிலிருந்து மற்றப் பகுதிகளுக்குத் உணவு தானியங்களைக் கொண்டுசெல்லும்
வாகனங்களின் மூலமாகவும் இக்களை விதை பரவல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அத்தியாவசிய
உணவுப்பயிர்களின் விளைச்சலுக்கு அதீதமான பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் சூழலில்
களைவிதைகள் மட்டும் எந்த மனித முயற்சியுமின்றி கட்டுக்கடங்காமல் பெருகிவளர்ந்து பரவுவது
விநோதம்தான்.
பார்த்தீனியம் |
நாட்டின் சொந்தத் தாவர இனங்களையும் சொந்தத்தாவரத்தை அழித்துவளரும் அயல்நாட்டுத் தாவர இனங்களையும் வேறுபடுத்தி அறியும் தெளிவின்மையும் அயல்நாட்டுத் தாவரங்கள் என்று அறிந்தும் அழகுக்காக அவற்றைப் பேணுவதில் மக்கள் காட்டும் ஆர்வமும்தான் சொந்த மண்ணின் தாவரவளத்தைக் குறைக்கும்
முக்கிய அம்சங்கள்.
ஆஸ்திரேலியாவில் பல அந்நியத் தாவர அறிமுகத்துக்கு மிக
முக்கியக்காரணம் horticulture எனப்படும் தோட்டக்கலை வேளாண்மை
என்கிறது ஒரு ஆய்வு.
வீட்டுத்
தோட்டங்களையும் பூங்காக்களையும் அழகுபடுத்தவென்று ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 340 க்கும் அதிகமான பூச்செடிவகைகள்…
சூழலுக்குப் பெருங்கேடு விளைவிப்பவை என்று தெரிந்தே கொண்டுவரப்பட்டவையாம். அவற்றுள் 20% -த்துக்கு மட்டுமே விற்பனைத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள படத்தில் மற்றத் தாவரங்களின் மீது வெண்ணிறப்போர்வை போர்த்தினாற்போல் காணப்படும் இந்தக் கொடியின் பெயர் மதீரா (Anredera cordifolia). தென்னமெரிக்காவைச் சார்ந்த இது அழகுக்காக கொண்டுவரப்பட்டது. சரம்சரமாகப் பூத்துக் குலுங்கினாலும் நல்லவேளையாக இந்தக் கொடி விதைபரவல் மூலம் இனப்பெருக்கம் நிகழ்த்தவில்லை. தண்டுக்கிழங்குகள் மூலமாகவே புதிய செடிகள் கிளைக்கின்றன. எனவே நன்கு வளர்ந்த ஒரு கொடியின் தண்டுக்கிழங்குகளைப் பரவாமல் செய்தால் போதும்.. ஆனால் அது அவ்வளவு எளிதில்லை. மிகுந்த பொறுமையும் நேரமும் தேவைப்படும். இந்தக் களைக்கொடியைக் கட்டுப்படுத்துவதென்பது சூழலியல் பாதுகாப்பாளர்களுக்கு ஒரு பெரிய சவால்தான்.
மதீரா பூக்கள் |
மதீரா கொடி மிக வலுவானது. 40 மீ உயரம் வரையிலும் வளரக்கூடியது. பெருமரங்களில் பற்றிப்படர்ந்து வளர்ந்து மரத்தையே ஒரு போர்வை போல மூடிவிடும். இதன் அதீத எடை மற்றும் வலுவான கரங்களின் பிடிதாங்கமுடியாமல் மரத்தின் கிளைகள் ஒவ்வொன்றாக உடைந்துவிழுந்துவிடும். ஏற்கனவே சூரிய ஒளியும் நீரும் கிடைக்காமல் வலுவிழந்து போயிருக்கும் மரம் நாளடைவில் மடிந்துபோய்விடும். கொடியோடு ஒப்பிடுகையில் மரம் பெரிய பலவான்தான்.. ஆனால் எப்பேர்ப்பட்ட பலவானையும் முகத்தைப் பொத்தி அடித்தால் எப்படித் தாங்குவான்? எதிராளியை எப்படித் திருப்பித் தாக்குவான்?
ரப்பர் கொடிப்பூ |
தோட்டங்களை அழகுபடுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட தாவர வகைகளுள் ரப்பர் கொடி (rubber vine) எனப்படும் Cryptostegia grandiflora –வும் ஒன்று. இது மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்டது. தோட்டம் விட்டுத் தப்பிப்போன சில விதைகள் காரணமாக இன்று ஆஸ்திரேலியாவின் மிக மோசமான களைப்பயிர் என்னும் பட்டத்தைப் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட 3.4 கோடி ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இத்தாவரத்தால் அழிந்துபோய்க்கொண்டிருக்கும் உள்நாட்டு தாவரவகைகள் அநேகம். ஒரு வேதனையான வேடிக்கை என்னவென்றால் இப்படி களைப்பயிர் பட்டம் பெற்றபிறகும் கூட இத்தாவரத்தை காசு கொடுத்து வாங்கி தங்கள் தோட்டத்தை அலங்கரிக்க ஆஸ்திரேலியாவில் பலரும் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான்.
ரப்பர் கொடியின் ஆக்கிரமிப்பு |
இந்த ரப்பர்கொடியானது தன் அருகிலிருக்கும் செடிகளையும் மரங்களையும் பற்றிப்படர்ந்து வளர்ந்து சூரிய ஒளியை மற்றத் தாவரங்களுக்கு கிடைக்கமுடியாதபடி செய்து அழித்துவிடும். அதுமட்டுமல்லாமல் தீவிர நச்சுத்தன்மை கொண்டது இத்தாவரம். இதைத் தின்றால் கால்நடைகள் உடலுறுப்புகள்
பாதிக்கப்பட்டு இறந்துவிடும். நானூறு கிலோ எடையுள்ள குதிரையைக் கொல்ல பத்தே பத்து கிராம் இலைகள் போதும்.
Euclasta Whalleyi moth |
இந்த தொய்கொடியை அழிக்க புதிதாக ஒரு அறிமுகம் நடைபெற்றது. அது Maravalia cryptostegiae எனப்படும் பூஞ்சைக்காளான். இது இத்தாவரத்தில் நோயுண்டாக்கி அழிக்கவல்லது. இதுவும் கொஞ்சநாளில் பயனற்றுப்போன பின் இன்னொரு அறிமுகம். Euclasta whalleyi எனப்படும் அந்துப்பூச்சியினம். அதுவும் கொஞ்சநாள்தான். இப்போது இயந்திரங்கள் மற்றும் இரசாயனங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. அயல்தேச அந்துப்பூச்சியின் அறிமுகம் எத்தனை உள்ளூர் பூச்சியினங்களை
அழிக்கப்போகிறதோ? அதை அழிக்க வேறென்ன அறிமுகமாகுமோ? சாமியார் பூனை வளர்த்த கதை நினைவுக்கு வருகிறதல்லவா?
(தொடரும்)
மதீராவின் அரக்கத்தன்மை! நம்மூர் யூகலிப்டஸ் கூட மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் தாவரம்தான். ஆஸ்திரேலியா போன்ற நாட்டினராலேயே கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் முயற்சியே இன்னும் தொடங்காத நம் நாட்டை என்னென்று சொல்ல?
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteஆஸ்திரேலியா பரப்பளவில் மிகவும் பெரிய நாடு என்பதாலும் கடலோரப் பகுதிகள் தவிர மத்தியப் பகுதிகளில் பெரும்பாலும் மனிதர்கள் வசிப்பதில்லை என்பதாலும் களைகளைக் கட்டுப்படுத்துவது என்பது கடினம். நம் நாட்டிலும் இப்போது ஆங்காங்கே இயற்கை பற்றிய விழிப்புணர்வு வளர்ந்துகொண்டிருப்பது சற்று ஆசுவாசத்தையும் மகிழ்வையும் தருகிறது. தொடர்ந்து எழுச்சியுடன் செயல்பட்டால் ஒருநாள் முற்றிலும் களைகளை ஒழித்துவிடமுடியும்.
பார்த்தீனியம் ஒண்டவந்த தாவரப் பிடாரியோ என்னவோ, ஆனால் இதன் மகரந்தத்தூள் காற்றில் கண்ணுக்குத் தெரியாமல் பரவி ஆஸ்த்மா, ப்ரான்கைடீஸ் போன்ற வியாதிகளுக்குக் காரணம். என்றும் பெங்களூருவில் இத்தாவர வகை அதிகமாகக் காணப்படுவதாகவும் சொல்கிறார்கள்
ReplyDeleteஉண்மைதான். பார்த்தீனியத்தால் நமக்கு உண்டாகும் பாதகங்கள் மிக அதிகம். கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொருவரும் பங்கேற்றால் நிச்சயம் ஒருநாள் கட்டுப்படுத்திவிட முடியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteசுற்றுச்சூழலுக்கு கேடு தரும் இந்த தாவரங்கள் பற்றி அறிந்து கொண்டேன்! சிறப்பான பதிவு! நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
ஒவ்வொன்றையும் பற்றி நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன்.
Deleteநேரடியாக மோத முடியாத அன்னிய சக்திகள் இப்பாடித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது...
ReplyDeleteநல்லதொரு பதிவு
இயற்கை சமன்பாட்டைக் குலைத்தாலே போதுமே.. ஒரு நாட்டின் வளர்ச்சியை... பொருளாதாரத்தைக் குலைத்துவிடமுடியுமே.. உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர்.
Deleteவழக்கம்போலவே இந்தப்பதிவினிலும் சுவாரஸ்யமான ஏராளமான செய்திகள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். பாராட்டுகள்.
ReplyDelete//கோடிக்கணக்கில் பொருளாதார நஷ்டத்தை உண்டாக்கும் (பார்த்தீனிய விதைகள்) இக்களைப்பயிரைக் கட்டுபடுத்துவது உலக நாடுகள் முழுமைக்குமே ஒரு மாபெரும் சவால்.//
:( கேட்கவே மனதுக்குக் கஷ்டமாக உள்ளது .
//அத்தியாவசிய உணவுப்பயிர்களின் விளைச்சலுக்கு அதீதமான பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் சூழலில் களைவிதைகள் மட்டும் எந்த மனித முயற்சியுமின்றி கட்டுக்கடங்காமல் பெருகிவளர்ந்து பரவுவது விநோதம்தான்.//
!!!!! ஆச்சர்யம்தான்.
//வீட்டுத் தோட்டங்களையும் பூங்காக்களையும் அழகுபடுத்தவென்று ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 340 க்கும் அதிகமான பூச்செடிவகைகள்… சூழலுக்குப் பெருங்கேடு விளைவிப்பவை என்று தெரிந்தேகொண்டுவரப்பட்டவையாம்.//
மின்னுவதெல்லாம் பொன்னல்ல ! அழகுக்காக ஆபத்தை அல்லவா கொண்டுவந்துள்ளார்கள் !!
//கொடியோடு ஒப்பிடுகையில் மரம் பெரிய பலவான்தான்.. ஆனால் எப்பேர்ப்பட்டபலவானையும் முகத்தைப் பொத்தி அடித்தால் எப்படித் தாங்குவான்?எதிராளியை எப்படித் திருப்பித் தாக்குவான்?//
அழகான உதாரணமாக தங்களுக்கே உரித்தான் பாணியில் சொல்லியுள்ளீர்கள். :)
//நானூறு கிலோ எடையுள்ளகுதிரையைக் கொல்ல பத்தே பத்து கிராம் இலைகள் போதும்.//
ஹைய்யோ ............. :)
பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.......
பதிவில் தங்களைக் கவர்ந்த, பாதித்த வரிகளைக் குறிப்பிட்டு தங்கள் எண்ணக்கிடக்கையை வெளிப்படுத்தி விளக்கமாகக் கருத்துரைத்த தங்களுக்கு அன்பான நன்றி கோபு சார்.
Deleteபார்த்தீனியம் பற்றி நன்கறிவேன். மூன்றாண்டுகளுக்கு முன் இதன் விளைவுகள் குறித்து நிலாச்சாரலில் விரிவான கட்டுரை எழுதினேன். ஆனால் மற்ற புல்லுருவிகள் குறித்து இப்போது தான் கேள்விப்படுகிறேன். மரம் மீது போர்வையாக மூடி அதையே அழிக்க வல்லது என்பதை அறியும் போது வியப்பாய் உள்ளது. அழகாக இருந்தாலும் விஷச் செடியை அறிமுகப்டுத்தும் போதே எச்சரிக்கையாயிருந்திருக்க வேண்டும். சுவையான தகவல்கள். பாராட்டுக்கள் கீதா!
ReplyDeleteபார்த்தீனியம் குறித்த தங்கள் கட்டுரையை வாசித்துள்ளேன் அக்கா. மற்ற தாவரங்கள் பற்றி இப்போதுதான் அறிந்தேன். அழகுக்குப் பின்னாலிருக்கும் ஆபத்து பற்றிய எச்சரிக்கை உணர்வில்லாமல் அறிமுகப்படுத்தியதன் விளைவைதான் இன்று அனுபவிக்கிறோம். தங்கள் விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா.
Deleteபத்தே பத்து கிராம் இலை... என்னவொரு கொலை...!
ReplyDeleteகொடிய நச்சென்று தெரிந்தும் வீடுகளில் வளர்க்க முற்படும் விநோதம். என்ன சொல்வது?
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
அறியாதன அறிந்தேன்
ReplyDeleteவிரிவான அருமையான பயனுள்ள
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் பதிவை வாசித்துக் கருத்துரைத்ததற்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் அகமார்ந்த நன்றி ரமணி சார்.
Deletetha.ma 5
ReplyDeleteகீதா,
ReplyDeleteஒன்றை அழிக்க இன்னொன்று, அதை அழிக்க வேறொன்று ...... இப்படியே போய்க்கொண்டிருந்தால் தொல்லைதான்.
ஆமாம்.. அதற்குதான் சாமியார் பூனை வளர்த்த கதையைக் குறிப்பிட்டிருக்கிறேன். முதலுக்கே மோசம் என்பது போல் முடிவில் விளைவு ஆபத்தாக மாறிவிடுகிறது. கருத்துக்கு நன்றி சித்ரா.
Deleteபிடாரிகளின் எண்ணிக்கைக்கும் அவை உண்டாக்கும் சேதங்களுக்கும் அளவே இல்லைபோல் தெரிகிறது . விவரங்களைத் தேடிப் பிடித்து வழங்குவது சிரமம் நிறைந்த வேலை . பாராட்டுகிறேன் .
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.
Deleteஒண்டவந்த பிடாரிகள் - 15 (பார்த்தீனியம், மதீரா & ரப்பர் கொடி) - ஆஸ்திரேலியா - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கீத மஞ்சரி - திருமதி Geetha Mathivanan
ReplyDeleteதங்கள் வருகைக்கும் இப்பதிவை தங்கள் பக்கத்தில் பகிர்ந்ததற்கும் நன்றி ஐயா.
Deleteதெரியாத பல தகவல்கள் நான் தெரிந்துக்கொண்டேன், அருமையான விளக்கம், வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பான நன்றி மகேஸ்வரி.
Deleteரப்பர் கொடி போன்ற தாவரங்கள் பற்றி இன்றே தெரிந்தது தோழி. பல தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி.
Deleteவணக்கம் சகோ.
ReplyDeleteபார்த்தீனியம் காற்றை மாசுபடுத்துவது என்றும் தோல் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் படித்திருக்கிறேன்.
மதீரா, ரப்பர் கொடி பற்றிய செய்திகள் புதியன.
ரப்பர் கொடிபோன்றே பிற தாவரங்களைப் பற்றிப் படர்ந்து ஆக்கிரமிக்கும் கொடிகள் இங்கும் கண்டிருக்கிறேன்.
அவற்றின் பெயர் தெரியவில்லை.
எத்துணை செய்திகள்..
அறிவூட்டுவதற்கு நன்றி.
என்னைப் பாதித்த தகவல்களை இங்கு உங்களனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும். ஊக்கம் தரும் கருத்துரைகளுக்காக நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். மிக்க நன்றி விஜி சார்.
Deleteபார்த்தீனியம் பற்றி அறிந்திருக்கிறேன். கர்நாடகத்தில் அதிகமாகப்பரவியிருக்கின்றது. அங்கு இதன் பெயர் 'காங்கிரஸ் கசா' என்பதாகும்(என்னே பெயர்ப்பொருத்தம் ). இதன் பரவலைத்தடுக்க வேரொரு தாவரத்தை விதைத்து வளர்க்கிறார்கள். சீமக்கருவேலையும் பார்த்தீனியத்தையும்பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறகு மக்கள் துணையுடன் அழித்தோழிக்க வேண்டும்! முயன்றால் முடியாததொன்றில்லை!
ReplyDeleteநிச்சயமாக... ஊர் கூடித் தேரிழுத்தால் நகராத தேரும் நகராதோ? விழிப்புணர்வு பெருகவேண்டும். அதற்கு நம்மாலான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
Delete