முடக்கத்தான் கொடி |
ஒருவனுக்கு மருந்து
இன்னொருவனுக்கு விஷம் என்பார்கள்.. அதுபோலத்தான் நம் நாட்டில் மருந்தாக பயன்படும் ஒரு தாவரம்
ஆஸ்திரேலியாவில் வேண்டாத விருந்தாளியாகக் கருதப்படுகிறது. முடக்குவாதம் போக்கும் மருத்துவ குணங்கள்
அடங்கிய மூலிகைக்கொடியான முடக்கத்தான் கொடி (Cardiospermum grandiflorum) தோட்டங்களை
அழகுபடுத்தும் நோக்கத்துடன்தான் முதலில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அபரிமித
வளர்ச்சி மண்ணின் மற்ற உள்ளூர்த் தாவரங்களை முடக்கிவிடும் என்பதை அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை.
காற்றூதி நிரப்பியது போன்ற காய்களைக் கொண்டிருப்பதால் பலூன் கொடி (balloon vine) எனக்
குறிப்பிடப்படும் இக்கொடிகள் மற்றத் தாவரங்களின் மேல் படர்ந்து பெருகி போர்வையாய் மூடி,
ஒளியும் வளியுமின்றி அவற்றை அழித்திடவல்லவை. நீர்நிலைகளை ஒட்டி வளரும் இக்கொடியின்
காற்றடைத்த விதைகள் காற்றிலும் நீரிலும் மிதக்கும்
தன்மை கொண்டிருப்பதால் விதைபரவல் வெகு எளிதாக நடைபெறுகிறது. இப்போது இரசாயன களைக்கொல்லிகள்
மூலம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றன.
நரிவால் புல் |
மத்திய
ஆஸ்திரேலியாவை ஆக்கிரமித்திருக்கும் களைகளில் முக்கியமானது buffel grass எனப்படும் நரிவால் புல். தமிழ்நாட்டில் இது கொலுக்கட்டை புல் என்று
குறிப்பிடப்படுவதாக அறிந்தேன். தகவல் சரிதானா என்று அறிந்தவர்கள் தெரிவிக்கலாம். ஆப்பிரிக்கா, அரேபியா, இந்தியா போன்ற நாடுகளைத் தாயகமாகக் கொண்ட
இப்புல் 19ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடர்த்தியாக
வளரும் இந்தப் புல் இனத்தால்
மற்ற உள்ளூர்த் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு காட்டுத்தீ பரவவும் முக்கியக்காரணியாக இப்புல்வெளிகள்
விளங்குகின்றன. இப்போது களைப்பயிராக அறியப்பட்டுள்ள இப்புற்களின்
வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அலிகேட்டர் களை |
Alligator weed எனப்படும் தாவரம் தென்னமெரிக்காவைச் சார்ந்த
ஒரு நீர்த்தாவரம். இதன் தாவரவியல் பெயர் Alternanthera philoxeroides. நீர்நிலைகளை
மட்டுமல்லாது மீன்பிடி பகுதிகளையும் விவசாய விளைநிலங்களையும் வெகுவாக ஆக்கிரமித்து
பொருளாதார நஷ்டம் உண்டாக்கும் இப்பயிரை ஒழிப்பதென்பது பெரும்பாடு. நாடுதோறும் இதை ஒழிக்கும்
முயற்சிகள் தலையைப் பிய்த்துக்கொண்டு நடைபெற்றுக்கொண்டிருக்க, சிலர் இதை பொன்னாங்கண்ணிக்
கீரை (Alternanthera sessilis) என்று தவறாக நினைத்து வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பது
தெரியவந்தது. மக்களுக்கு வேறுபாடு அறிவுறுத்தப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் இதன்
வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
அலிகேட்டர் களையை அழிக்க தென்னமெரிக்காவைச் சார்ந்த alligator weed flea beetle (agasicles hygrophila) எனப்படும் தத்து வண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வண்டுகள் அலிகேட்டர் தாவரத்தை மட்டுமே உண்டு உயிர்வாழ்வதால் இவற்றால் வேறு தாவரங்களுக்கு பாதகம் ஏற்படுவதில்லை என்பது ஒரு ஆறுதல். ஆனால் அலிகேட்டர் தாவரத்தை கோடையில் மட்டும்தான் இவற்றால் கட்டுப்படுத்த முடிகிறதாம். குளிர்சூழலில் கட்டுப்படுத்த இவற்றால் இயலாது. ஆனாலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் இக்களைத்தாவரத்தை உண்டு அழிக்கும் இவற்றால் ஓரளவு பலன் இருப்பதால் ஆஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் அலிகேட்டர் களையைக் கட்டுப்படுத்த அலிகேட்டர் தத்து வண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
அமேசான் கழிமுகத்தைச்
சார்ந்த ஆகாயத்தாமரையை (water hyacinth) ஆக்கிரமிப்பு சக்தி மட்டுமல்ல, அழிவு சக்தி என்றே சொல்லலாம்.
ஆறு குளம் போன்ற நீர்நிலைகளை நிறைத்துப் படர்ந்திருக்கும் இது நீரோட்டத்தைத் தடைபடுத்துவதோடு,
நீரில் வாழும் பிற தாவரங்களுக்கும் மீன், ஆமை போன்ற உயிரினங்களுக்கும் பிராணவாயு
(oxygen) கிடைக்காமல் செய்து அவற்றை அழித்துவிடவல்லது. ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகம்
முழுவதுமே அழிக்கமுடியாத களைத்தாவரமாகப் பெருகிவிட்ட ஆகாயத்தாமரையால் ஏற்படும் பாதிப்புகள்
கணக்கிலடங்காதவை. சமீபத்தில் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் ஏரி குளங்களை ஆக்கிரமித்துள்ள
ஆகாயத்தாமரைகள் அழிக்கப்பட்டு வருவதை அறியமுடிகிறது. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு
நம்மிடம் பெருகிவருவதை அறிந்து மனம் மகிழ்கிறது.
வேரறுக்கப்பட்ட முடக்கத்தான் கொடி |
மனிதன் தன் ஆதாயத்தை
மட்டும் முன்னிறுத்தி இயற்கைக்கு முரணான சில முடிவுகளை ஆராயாமல் அவசரப்பட்டு எடுத்துவிடுகிறான்.
பின்னாளில் அந்த முடிவுகளால் அவனுக்கு பிரச்சனைகள் நேரும்போது அந்த முடிவுகளுக்கு எதிராய்
செயல்படவும் அவன் தயங்குவதில்லை. அப்படிதான் தானே கொண்டுவந்த களைப்பயிர்களை இப்போது
கையாலும் கருவிகளாலும் இரசாயன மற்றும் உயிரியல் களைக்கொல்லிகளாலும் அழிக்க மும்முரமாக
ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். களைகளின் இயல்பே தளைகளைத் தகர்த்தெறிந்து தம்போக்கில்
வளர்வதுதானே… அதைத்தான் அவை செய்துகொண்டிருக்கின்றன. தலையைப் பிய்த்துக்கொண்டு அவற்றோடு
போராடிக் கொண்டிருக்கிறோம் நாம்.
(தொடரும்)
(முடக்கத்தான் கொடி தவிர மற்ற படங்கள் உதவி: இணையம்)
முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 15 (பார்த்தீனியம், மதீரா & ரப்பர் கொடி)
(முடக்கத்தான் கொடி தவிர மற்ற படங்கள் உதவி: இணையம்)
முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 15 (பார்த்தீனியம், மதீரா & ரப்பர் கொடி)
படித்தேன். அறிந்தேன். அதிர்ந்தேன்.
ReplyDeleteஇது போன்ற விளைவுகளைப் பற்றி இந்தியாவில் அக்கறை எடுத்துச் செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறிதான். ஒரு கருவேல மரத்தையே நம்மால் ஒழிக்க முடியவில்லை!
முயன்றால் முடியாதது என்ன இருக்கிறது. பலரும் அடுத்தவன் செய்யட்டுமே என்று அலட்சியமாயிருப்பதால்தான் எதிலும் முழுமையாக ஈடுபடமுடிவதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteவணக்கம் சகோ, உண்மைதான், நாம்.தலையைப் பிய்த்துக்கொண்டு தான் அவற்றோடு போராடிக் கொண்டிருக்கிறோம் .
ReplyDeleteஇந்த ஆகாயத் தாமரை ஆறுகளில் நீர் குறைந்த காலங்களில் அப்படியே மன்டிவிடுகிறது, பின் அதனை நீக்குதல் என்பது பெரும் சிரமம்.
முடக்கத்தான் முட்டிவலிகளுக்கு மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாக பயன்படுத்துவார்கள்.
நரிவால் புல் நெல் பயிர்களில் வளரும் இதனால் நெல்லுக்கு பாதிப்பு அதிகம்.
இவையெல்லாம் என்று அழியும் என்று தெரியல,
கருவேல மரம் விதைகள் தூவப்பட்டன என்று கேள்விப்பட்டுள்ளேன், நம்மை பழிவாங்க என்று,
தங்கள் பகிர்வின் வழி அறியாதன அறிந்தேன். நன்றி.
வருகைக்கும் நீள்கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி மகி. அளவோடு இருந்தால் எதுவும் பிரச்சனையில்லை. களையாக வளர்ந்து சொந்த மண்ணின் தாவரவளத்தை அழிப்பதால்தான் இங்கு பிரச்சனை.
Deleteவிலங்குகள், பறவைகளுக்குப் பிறகு செடி கொடிகளா? மனிதனின் செயல்கள் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன? இன்றைக்குச் செய்யும் பல விசயங்கள் என்னென்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை...
ReplyDeleteஒண்ட வந்த பிடாரிகள் அனைத்துப் பதிவையும் படிக்க வேண்டும் என்று ஆசை கீதமஞ்சரி, சிலது விட்டுப் போயிருக்கிறது. எப்படியும் படித்துவிடுவேன். வசிக்கும் இடம் பற்றி பல விசயங்களை கற்றறிந்து அருமையாகப் பகிரும் உங்களுக்கு பாராட்டுகள்.
பகிர்விற்கு நன்றி.
நானும் உங்க கேஸ்தான் கிரேஸ். பலருடைய பதிவுகளும் வாசிக்கவிட்டுப்போயிருக்கிறது. அப்படியே வாசித்தாலும் கருத்திடவில்லை. இனிதான் ஒவ்வொன்றாக பார்க்கவேண்டும். வருகை தந்து பாராட்டியதற்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்.
Deleteஒவ்வொரு தகவல்களும் படிக்க மிகவும் ஆச்சர்யமாகவும் வியப்பாகவும் பயங்கரமாகவும் உள்ளன.
ReplyDelete//நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் இக்களைத்தாவரத்தை உண்டு அழிக்கும் இவற்றால் ஓரளவு பலன் இருப்பதால் ஆஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் அலிகேட்டர் களையைக் கட்டுப்படுத்த அலிகேட்டர் தத்து வண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். //
இந்த வண்டுகள் கோடிக்கணக்கில் பெருகி, பின்னொருநாள் என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடுமோ என நினைக்கத்தோன்றுகிறது. :)
ஆகாயத்தாமரை பிரச்சனை நம் நாட்டிலும் மிக அதிகமாகவே உள்ளது.
‘நரிவால் புல்’ வேடிக்கையான பெயராக உள்ளது. :)
பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்து இட்ட கருத்துக்கும் நன்றி கோபு சார். வண்டுகளின் பெருக்கம் பற்றி நானும் யோசித்தேன்.புசுபுசு என்றிருப்பதால் foxtail grass என்கிறார்கள். நான் நரிவால் புல் என்று தமிழாக்கிவிட்டேன். :)
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
ஒவ்வொரு தகவலும் அற்புதமாகதொகுத்து வழங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி ரூபன்.
Deleteஎத்தனை தகவல்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, பல ஊர்களிலும் இப்படி ஆகாயத்தாமரை படர்ந்து நீர்நிலைகளை அழித்து விடுவது பார்க்கும்போது மனதிற்குள் கலக்கம்.
ReplyDeleteவிடுபட்ட பகுதிகளை விரைவில் படித்து விடுகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteமுடக்கத்தான் இங்கு கிடைக்க தினமும் இங்கு வெவ்வேறு பாதையில் நடைப் பயிற்சி... ம்...
ReplyDeleteநடைப்பயிற்சிக்கு நடைப்பயிற்சியாகவும் ஆச்சு. முடக்கத்தான் பறித்தமாதிரியும் ஆச்சு. ஆஸி வாங்க... அள்ளிக்கொண்டு போகலாம். :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteஇங்கு மருந்தாக இருப்பது அங்கு களையாக பார்க்கப்படுவது கண்டு வியந்தேன்! விரிவான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅதன் மருத்துவகுணம் அறிந்தால் பாதுகாத்து வளர்ப்பார்கள். ஆனாலும் சொந்தநாட்டுத் தாவரங்களை அழித்தால் அது முடக்கத்தானாகவே இருந்தாலும் முடக்கத்தான் செய்வார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.
Deleteமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணம் அவர்களுக்குத் தெரிந்து பயன்படுத்தத் துவங்கினால் ஆக்கிரமிப்பு குறைந்துவிடும். மக்கட்தொகை குறைவு என்பதும் ஒரு காரணம். நாம் இவ்வளவு நாட்கள் நினைத்திருந்ததற்கு மாறாக ஆகாயத் தாமரை செடி மிகவும் பய்னுள்ள செடி என்று முப்பது ஆண்டுகளாகக் காட்டுயிர் துறையில் கள ஆய்வில் ஈடுபடும் காட்டுயிர் எழுத்தாளர் ச முகமது அலி அவர்கள் பல்லுயிரியம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். செலவின்றி நீர் நிலைகளைச் சுத்தம் செய்யும் செடி என்றும் இன்னும் பல்வேறு பயன்கள் உள்ளன என்றும் பட்டியலிட்டுள்ளார். ஆனால் அளவுக்கதிகமானால் அமிர்தமும் விஷம் என்பது போல நல்லவைகளும் அளவுக்கு மீறிப் பெருகும் போது களையாகிவிடுகின்றன. சுவையான தகவல்கள்! தொடர்கிறேன்!
ReplyDeleteநமக்கு ஆதாயம் இல்லாத செடியென்றால் அதை களை பட்டியலில் சேர்த்துவிடுகிறோம். அதைப்போலத்தான் ஆகாயத்தாமரையும் சேர்ந்திருக்கும்போலும். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளது மிகச்சரி. ஆகாயத்தாமரை மிகவும் பயனுள்ள தாவரம் என்று இப்போதுதான் அறிகிறேன். நன்றி அக்கா.
Deleteமுடிவற்ற போராட்டமாகத் தெரிகிறது. தகவல்களுக்கு நன்றி கீதா.
ReplyDeleteஉண்மைதான். இந்தத் தலைப்பில் எழுதிக்கொண்டே இருக்கலாம் போல.. அவ்வளவு தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteவலைப்பூவில் ஒரு விக்கி போல் எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதொடர்க
தம +
பயனுள்ளதாக என் பதிவுகள் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மது.
Deleteவணக்கம் சகோ.
ReplyDeleteமுடக்கத்தானை தேடி அலைந்த அலைச்சல் சிறு கதையளவு தேறும்.
ஆனால் அது இவ்வளவு மண்டிக் கிடப்பதைக் காண ஆசையாகத்தான் இருக்கிறது.
பல முடக்குவாத நோய்களுக்குக் கண்கண்ட மருந்து அது. என் அனுபவம் இது.
ஆகாயத்தாமரை குறித்து இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன.
நம் சித்த மருத்துவத்தின் ரச வாதத்தில் இத்தாவரத்தின் பங்கு மிக முக்கியமானது.
நீர் மேல் நெருப்பு என்கிறார்கள் இதை.
பயனுள்ள அறியத்தக்க பல செய்திகள்.
அருமை எளிமை இனிமை
தொடர்கிறேன்.
நன்றி.
எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால்தானே சிறப்பு.. தேவையில்லாத இடத்தில் இருப்பதால் அருமை புரியாமலேயே போய்விடுகிறது. விளக்கமானப் பின்னூட்டத்திற்கும் ஊக்கமிகு பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
Delete'நரிவால் புல்' நெல்லுடன் வளரும் களையாக இருக்கக்கூடும். ஆனால் கொழுக்கட்டைப்புல் என்பது மிகவும் புரதச்சத்துக்கொண்ட ஒரு கால்நடைத்தீவனம். கொங்கு மண்டலத்தில் மேய்சல் நிலங்களில் வளர்க்கப்படுவது
ReplyDeleteகருத்துக்கு நன்றி இமயவரம்பன். எதுவும் தேவையான இடத்தில் வளர்ந்தால் அதற்கு உரிய பலன் கிடைக்கும். தேவைப்படாத இடத்தில் களையாகத்தானே கருதப்படும்.
Delete