15 April 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 9 (பூனைகள்)


காட்டுப்பூனைகளால் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் அழிந்துபோன உயிரினங்கள் அநேகம் என்கின்றன ஆய்வுத்தகவல்கள். காட்டுப்பூனைகள் என்றால் காட்டுப்பூனை இனமல்ல, காடுவாழ் பூனைகள். மனிதர்களைத் தங்களுடைய வாழ்நாளில் பார்த்தேயிராதவை அவை. 




குடியிருப்புகளிலும் பண்ணைகளிலும் பல்கிப் பெருகிவிட்டிருந்த சுண்டெலி, பெருச்சாளி, முயல் போன்றவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு 1800-களில் சில பூனைகளை ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்தனர் ஐரோப்பியர். சில வருடங்களிலேயே பூனைகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இப்போது மழைக்காடுகளையும் ஒருசில தீவுகளையும் தவிர காட்டுப்பூனைகள் இல்லாத இடங்களே இல்லை என்னுமளவு இவற்றின் எண்ணிக்கை பூதாகரமாக உள்ளது.

அரசு, ஆஸ்திரேலியப் பூனைகளை வளர்ப்புப்பூனைகள், தெருப்பூனைகள், காட்டுப்பூனைகள் என்று மூன்றுவிதமாக பிரிக்கிறது. வளர்ப்புப்பூனைகளையும் மக்களின் குடியிருப்புகளைச் சார்ந்து வாழும் தெருப்பூனைகளையும் விட்டுவிட்டு முழுக்க முழுக்க மக்களுடன் தொடர்பில்லாது புதர்க்காடுகளில் வாழும் பூனைகளை மட்டுமே இலக்காக வைத்து அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காரணம் இவைதான் ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் சொந்த உயிரினங்களை வேட்டையாடிக் கொன்று பல இனங்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளியவை… தள்ளிக்கொண்டிருப்பவை.



ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள காட்டுப்பூனைகளின் எண்ணிக்கை தோராயமாக ஒன்றரை கோடி இருக்கலாம் என்கிறது ஆய்வு. ஒரு பூனை ஒரு நாளைக்கு ஐந்து முதல் முப்பது உயிரினங்களைக் கொன்று தின்கிறது என்றும் குறைந்தபட்சம் ஐந்து என்று கணக்குவைத்தாலுமே மொத்தமாக ஒரு நாளைக்கு கொல்லப்படும் சொந்த மண்ணின் உயிரினங்களின் எண்ணிக்கை ஏழரை கோடி என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மேக்வாரி தீவில் காட்டுப்பூனைகளால் அழிந்துபோன உயிரினங்களுள் செம்மார்பு பாரகீட் பறவையினமும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் 35 வகை பறவைகள், 36 வகை விலங்குகள், 7 வகை ஊர்வன மற்றும் 3 வகை நீர்நில வாழ்வன போன்றவை காட்டுப்பூனைகளால் அழிவை எதிர்நோக்கும் விலங்குகள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளனவாம்.



காட்டுப்பூனைகள் சின்னச்சின்ன விலங்குகளையும் தரைவாழ் பறவைகளையும் மட்டுமே வேட்டையாடித்தின்னும் என்று இதுவரை எண்ணியிருந்த ஆய்வாளர்களை வியக்கவைத்திருக்கிறது சமீபத்தில் டாஸ்மேனியாவில் பதிவான காட்சிப்பதிவு ஒன்று. காட்டுத்தீ பற்றிய ஆய்வுக்காக காட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது அந்தக் காட்சி.

ஒரு காட்டுப்பூனை நான்கு கிலோ எடையுள்ள பேடிமெலான் எனப்படும் சிறிய வகை கங்காருவின்மேல் பாய்ந்து அதன் குரல்வளையைக் கடித்துக் கொன்று தின்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் மலைத்துப்போயிருக்கின்றனர். பொதுவாக பூனைகள் இரண்டுகிலோ எடைக்கும் குறைவான விலங்குகளையே வேட்டையாடும் என்று இதுவரை எண்ணியிருந்த தங்கள் எண்ணத்துக்கு மாறாக இப்படியொரு பலத்த வேட்டை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சொந்த மண்ணின் பெரிய உயிரினங்களும் காட்டுப்பூனைகளுக்கு பலியாவது தெரிய வந்திருப்பதால் இனி காட்டுப்பூனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிறந்த ஒரு வருடத்திலிருந்தே இனப்பெருக்கத்துக்கு தயாராகிவிடும் பூனைகள் வருடத்துக்கு இரண்டு ஈடுகள் குட்டி ஈனுகின்றன. ஒரு ஈட்டுக்கு நான்கு குட்டிகள் வீதம் வருடத்துக்கு எட்டு குட்டிகள் என்ற அளவில் இனத்தைப் பெருக்குகின்றன. டிங்கோ நாய்களுக்கும் நரிகளுக்கும் ஆப்புவால் கழுகுகளுக்கும் இரையானவை போக மீதமுள்ள காட்டுப்பூனைகளின் அட்டகாசமே இந்த அளவுக்கு இருக்கிறது.




நரிகளைக் கொல்ல பயன்படும் உத்தி இந்தக் காட்டுப்பூனைகளிடம் எடுபடவில்லை.  மண்ணில் புதைக்கப்படும் விஷ மாமிசத்தைத் தோண்டியெடுத்துத் தின்னும் பழக்கம் இவற்றிடம் இல்லை. மேலும் மனிதர்களுடன் பழகாத காரணத்தால் அவர்களைக் கண்டாலே பதுங்கி ஒளிந்துவிடுவதாலும் காட்டுப்பூனைகளைக் கொல்வதும் பொறிவைத்துப் பிடிப்பதும் மிகவும் கடினமான காரியமாக உள்ளதாம். 

இப்போதைக்கு சொந்த மண்ணின் உயிரினங்களை இவற்றிடமிருந்து பாதுகாக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பாதுகாப்பாக உலா வரும் வகையில் இயற்கை சரணாலயங்களும்  வனப்பூங்காக்களும் சுற்றிலும் பலத்த வேலிகள் போடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்த நடைமுறை ஓரளவு பலன் தருவதாக உள்ளதாம்.


திருடனைப் பிடிக்கமுடியாத நிலையில் பொருளைப் பூட்டி பத்திரமாய்ப் வைப்பதுதான் புத்திசாலித்தனம் என்றாலும் அந்தத் திருடனை ஊருக்கு வரவழைத்ததே நாம்தான் என்று எண்ணும்போது நம் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது?


(தொடரும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 8 (குதிரைகள் & கழுதைகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 10 (பன்றிகள்)

41 comments:

  1. //ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள காட்டுப்பூனைகளின் எண்ணிக்கை தோராயமாக ஒன்றரை கோடி இருக்கலாம் என்கிறது ஆய்வு. ஒரு பூனை ஒரு நாளைக்கு ஐந்து முதல் முப்பது உயிரினங்களைக் கொன்று தின்கிறது என்றும் குறைந்தபட்சம் ஐந்து என்று கணக்குவைத்தாலுமே மொத்தமாக ஒரு நாளைக்கு கொல்லப்படும் சொந்த மண்ணின் உயிரினங்களின் எண்ணிக்கை ஏழரை கோடி என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.//

    தொடர்ச்சியாக மிகவும் பிரமிக்க வைக்கும் பயங்கரமான தகவல்களாகத் தந்துகொண்டு வருகிறீர்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தங்கள் உடனடி வருகைக்கும் தொடர் பின்னூட்டங்களுக்கும் நன்றி கோபு சார். இயற்கைக்கு முரணான அனைத்துமே பயங்கரமாகத்தான் உள்ளன.

      Delete
  2. //பிறந்த ஒரு வருடத்திலிருந்தே இனப்பெருக்கத்துக்கு தயாராகிவிடும் பூனைகள் வருடத்துக்கு இரண்டு ஈடுகள் குட்டி ஈனுகின்றன. ஒரு ஈட்டுக்கு நான்கு குட்டிகள் வீதம் வருடத்துக்கு எட்டு குட்டிகள் என்ற அளவில் இனத்தைப் பெருக்குகின்றன. டிங்கோ நாய்களுக்கும் நரிகளுக்கும் ஆப்புவால் கழுகுகளுக்கும் இரையானவை போக மீதமுள்ள காட்டுப்பூனைகளின் அட்டகாசமே இந்த அளவுக்கு இருக்கிறது.//

    அப்பப்பா ! ஹைய்யோ !! நினைத்தாலே தலையைச் சுற்றுகிறதே !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது படத்தைப் பார்த்தாலே புரிந்திருக்குமே... நினைத்தாலே தலையைச் சுற்றவைக்கும் தகவல்தான் அது.

      Delete
  3. //இப்போதைக்கு சொந்த மண்ணின் உயிரினங்களை இவற்றிடமிருந்து பாதுகாக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பாதுகாப்பாக உலா வரும் வகையில் இயற்கை சரணாலயங்களும் வனப்பூங்காக்களும் சுற்றிலும் பலத்த வேலிகள் போடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்த நடைமுறை ஓரளவு பலன் தருவதாக உள்ளதாம்.//

    இந்தச்செய்தி சற்றே நிம்மதி தருபதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வேறு வழியே இல்லாமல்தான் இந்த வழி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சொந்த மண்ணின் விலங்குகள் சுதந்திரமாகத் திரிய முடியாமல் கட்டுக்குள். வந்த மிருகங்கள் சுதந்திரமாக வெளியில்... இதுதான் இன்றைய நிலைமை.

      Delete
  4. சூழல் ஆர்வலர்களின் கவனத்திற்குரிய மிக முக்கியமான பதிவு ...
    இயற்கை சார்ந்துதான் மனிதன் செயல்படவேண்டும் என்பதற்கு இக்கட்டுரை மிக நல்லதோர் உதா.
    த ம +

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கட்டுரையை நல்லதோர் உதாரணமாகக் குறிப்பிட்டதற்கும் மிகவும் நன்றி மது.

      Delete
  5. இதுவரை வெளியிட்டுள்ள 9 பகுதிகளில் உள்ள படங்களும், அரிய பெரிய ஆச்சர்யமான தகவல்களும் அனைத்துமே அருமையாகவும், படிக்க வியப்பாகவும், படு சுவாரஸ்யமாகவும் உள்ளன.

    தொடரட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பதிவுகளையும் தொடர்ந்து வாசித்துப் பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் தங்களுக்கு மிகவும் நன்றி கோபு சார்.

      Delete
  6. சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பயப்பட வைக்கும் விவரங்கள். இதுவரை இதனால் மனிதர்களுக்கு ஆபத்தில்லையே...?

    ReplyDelete
    Replies
    1. சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டவர்கள்தான் இப்போதும் சொந்தப்பணத்தை செலவழித்து சூனியத்தை எடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். பலன் பூஜ்யம்.

      மனிதர்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லை என்றாலும் நாட்டின் பொருளாதாரம் சீர்கெடுவது கண்கூடு. வந்திறங்கிய மிருகங்களால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் பண்ணை முதலாளிகள், விவசாயிகள் போன்றோர்.

      Delete
  7. கங்காருவைத் தாக்கும் அளவுக்குச் செல்லும் காட்டுப் பூனைகளைப் புலிகளோடுதான் ஒப்பிட வேண்டும் போலுள்ளது.

    / இயற்கை சரணாலயங்களும் வனப்பூங்காக்களும்/

    உண்மை. எல்லா நாடுகளுமே இப்போது இந்த வழியை அக்கறையுடன் பின்பற்றி வருகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்படியே போனால் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாக பூனைகள் புலிகளாகும் காலம் வெகு தொலைவில் இருக்காது என்றே நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  8. திருடனை விருந்திற்கு அழைத்துவிட்டு
    பொருள் பற்றிக் கவலைப் படுவதில் என்ன பொருள் இருக்கிறது
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் அறியாமையும் அலட்சியமும்தான் முக்கியக்காரணம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ஐயா.

      Delete
  9. அதிர்ச்சி தரும் தகவல்களுடன்... காட்டுப்பூனை புலி போல... யம்மாடி...!

    ReplyDelete
    Replies
    1. அதிர்ச்சிகள் இன்னும் தொடரக்கூடும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  10. அதிர்ச்சித் தகவல்கள்!

    ReplyDelete
    Replies
    1. மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பவையாகவே உள்ளன. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  11. அறிய வேண்டிய சூழலியல் புரிதலை அருமையான நடையில் தந்துகொண்டிருக்கிறீர்கள்.
    நீங்கள் செய்யும் உதவி மிகப் பெரிது.
    தொடர்கிறேன்.

    த ம கூடுதல் 1

    ReplyDelete
    Replies
    1. நான் ரசித்த, வியந்த, என்னைப் பாதித்த, அதிர்ச்சி அளித்த பல்வேறு தகவல்களையும் இங்கு வலையுலகில் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்வும் மனநிறைவும். தங்கள் பாராட்டு தொடர்ந்தெழுதும் ஆர்வத்தைத் தருகிறது. மிக்க நன்றி விஜி சார்.

      Delete
  12. ஆஸ்திரேலியாவின் காட்டுப்பூனைகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்ட சகோதரிக்கு நன்றி.
    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவைக் கண்ணுற்று கருத்திட்டதற்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  13. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்னும் வழக்குச் சொல் ஆஸ்திரேலியாவில் பூனைக்குப் பிறந்து புலியாகும் காலம்தொலைவில் இல்லை என்று மாறும் என்றே தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. பூனைகள் வேட்டையாடும் செய்திகளை அறிந்தவுடன் எனக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டது. பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்டம் அப்படி இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  14. ஒவ்வொரு தகவலும் பிரமிக்க வைக்கிறது.. ஆஸ்திரேலியா சுற்றுப் புற சூழலோடு, இயற்கைக்கு எதிராக மனிதன் விளையாடினால் என்னவாகும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு!

    ReplyDelete
    Replies
    1. இயற்கைக்கு எதிராக மனிதர்கள் எடுத்த முயற்சிகளின் விளைவாய் எதிர்கொள்ளும் பேராபத்துகளை உணர்த்தி எச்சரிக்கும் முகமாய் இத்தொடர் பதிவுகள் இருப்பது மனத்துக்கு நிறைவு தருகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  15. சிறிய வகை கங்காருவைக்கூடக் கொன்று தின்கின்றன இந்தக் காட்டுப்பூனைகள் என்று தெரிந்து அதிர்ச்சி. விலங்குகளே இப்படியென்றால் பறவைகளைப் பற்றிச்சொல்லவே வேண்டாம். இப்பதிவில் உள்ள படங்களைப் பார்க்கவே பயமாயிருக்கின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரவில்லையென்றால், உள்ளூர் விலங்குகளின் கதி அதோகதி தான். வியப்பூட்டும் தகவல்களைத் தொடர்ந்து கொடுப்பதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மாடு, ஒட்டகம், குதிரைகளைப் போல இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவது எளிதாக இல்லை. ஆபத்தை நோக்கியிருக்கும் விலங்கு பறவைகளைக் காப்பாற்றும் அசுர முயற்சியில் இறங்கியிருக்கிறது அரசு. கடந்த சில வருடங்களில் உலகிலேயே அதிக அளவில் சொந்த மண்ணின் உயிரினங்கள் அழிந்தது ஆஸ்திரேலியாவில்தான் என்பது வருத்தமும் வேதனையும் தரும் உண்மை. இனியாவது விலங்குகள் காப்பாற்றப்படுமா? கேள்விக்குறிதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

      Delete
  16. Anonymous16/4/15 19:37

    ஒண்ட வந்த பிடாரி என்று நீங்கள் கூறுவது அந்த பூனைக்கு மட்டும் அல்ல , ஆஸ்திரலியா வில் உள்ள மனிதர்களுக்கும் பொருந்தும் - அபாராஜின் தவிர ...... மன்னிக்கவும். விளையாட்டாக சொன்னேன் ..ஹி ஹி

    சிவா..சென்னை

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா. நீங்கள் விளையாட்டாக சொன்னாலும் உண்மை அதுதான். இந்தத் தொடரின் ஒன்பதாவது பகுதியைத்தான் வாசித்திருக்கிறீர்கள். முதல் பகுதியிலேயே மனிதர்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். முடிந்தால் கீழுள்ள சுட்டியில் வாசித்துப்பார்க்கவும். தொடர்ந்து மற்ற பகுதிகளையும் வாசித்தால் முழுமையான பல தகவல்கள் தெரிந்துகொள்வீர்கள்.

      http://geethamanjari.blogspot.com.au/2015/02/1.html

      Delete
    2. Anonymous17/4/15 15:28

      நன்றி. முதல் பதிவினை பார்த்தேன். பூர்வ குடிகளை பற்றி இன்னும் நன்றாக தெரிந்து கொண்டேன். ஒருமுறை ச்சாட் செய்யும்போது ஒரு கனடா நாட்டு பூர்வ குடி பெண்ணிடம் பேசினேன். அப்போது எனக்கு ஐரோப்பியர் மீது ஒருவித வெறி கலந்த கோபமே வந்து விட்டது. எனினும் ஐரோப்பியர்களிடம் தேவையானதை கற்று கொண்டு தான் தனி பாதையில் செல்ல வேண்டும் என்பதை இப்போது இன்னும் நன்றாக புரிந்து கொண்டேன் .

      சிவா ..சென்னை

      Delete
    3. குறிப்பிட்ட பதிவை வாசித்தமைக்கும் தொடர்ந்து அளித்தக் கருத்துக்கும் மிக்க நன்றி சிவா.

      Delete
  17. முட்டாள்தனம் என்று சொல்ல முடியாது . பிரச்சினை தீர எடுக்கப்படும் நல் முடிவு பின்னாளில் புதுப் பிரச்சினையை ஏற்படுத்துவது சகஜம் .

    ReplyDelete
    Replies
    1. இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சில முடிவுகள் என்னென்ன மாதிரியான ஆபத்துகளை உருவாக்கும் என்பதை கண்கூடாக அறிய இம்மாதிரியான முயற்சிகள் உதவுகின்றன என்பது உண்மை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  18. ஒன்றரை கோடி இருக்கலாம் என்கிறது ஆய்வு. ஒரு பூனை ஒரு நாளைக்கு ஐந்து முதல் முப்பது உயிரினங்களைக் கொன்று தின்கிறது என்றும் குறைந்தபட்சம் ஐந்து என்று கணக்குவைத்தாலுமே ....அப்பப்பா ஆச்சரியமூட்டும் பல தகவல்களை தந்திருக்கிங்க பா. நிறைய பகிர்வுகளை காணத் தவறியிருக்கிறேன். என்பது புரிகிறது. நேரமின்மை என்று என்னை நானே சோம்பேறித்தனத்தில் ஆழ்த்தியிருக்கிறேன் என்பது புரிந்தது. மெதுவாக ஒவ்வொன்றாக படிக்க வேண்டும். வாழ்த்துக்கள் தோழி. தொடருங்கள் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிகவும் நன்றி சசிகலா. நேரமிருக்கும்போது மற்றப் பதிவுகளை வாசிக்கிறேன் என்பது மகிழ்வளிக்கிறது. மிகவும் நன்றி சசி.

      Delete
  19. திருடனை ஊருக்குள் வரவழைத்ததே நாம் தான் எனும் கடைசி வரிகள் பல எண்ணங்களை மனதில் விதைத்தது...

    மனிதனின் பல நடவடிக்கைகள் பின்னர் பல தீங்குகளை விளைவிப்பது கண்கூடு....

    ReplyDelete
    Replies
    1. இருக்குமிடத்தில் இருப்பதுதானே எதற்கும் சிறப்பு? மனிதன் செய்யும் தவறுகளுக்கு அப்பாவி ஜீவன்கள் பலியாவதுதான் வேதனை தருகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  20. ஒண்டவந்த பிடாரிகள் - 9 (பூனைகள்) - கீத மஞ்சரி = எனது பக்கத்தில் பகிர்கிறேன். அருமையான தகவல்கள். நன்றி திருமதி Geetha Mathivanan.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.